முடிதிருத்தகமும் மனிதமும்..

2

மாதவன் இளங்கோ

பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.

 சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று – ‘முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது’. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

 ‘உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

 ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை ‘Tonsorial Artist’ என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. 😉

 இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

 சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் –

 பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் – அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

 அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் – மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “முடிதிருத்தகமும் மனிதமும்..

  1. தம்பி, தற்காலத்தில் கணினி தொழிலிலும் நிறைய சம்பாதிக்கும் கலை முடிதிருத்தும் கலை அழகு படுத்துவதும்.
    3 மாத software implementation காக சென்ற அலுவலக துணை இயக்குநர்களும் திரும்பி வந்த போது ஜடா முடிகளொடு
    வந்திறங்கினர். சாமியாரா என்று கேட்டதற்க்கு, “சத்யா, ஒரு முறை வெட்டிக்க சென்றால் எங்களின் மூன்று மடங்கு
    டியே கட். அதனால் கட் பண்ணவில்லை ” என்றார்கள்.

  2. உண்மைதான் ஐயா. பெரும்பாலான உள்ளூர்காரர்கள் அவர்களாகவே வீட்டில் முடிதிருத்தம் செய்து கொள்கிறார்கள். என் நண்பர் ஒருவரின் மனைவி அவரது குடும்பத்தின் ஆஸ்தான முடிதிருத்தும் கலைஞராகவே மாறிவிட்டார்.

    எனக்கு பிரச்சினை இல்லை. என் பாகிஸ்தானிய நண்பர் இருக்கிறார். ஆனால், இன்னும் சில வருடங்களில் அவரும் தேவைப்படமாட்டார் போல் இருக்கிறது. 🙁 என் விஷயத்தில் காலம் தன் கடமையை செவ்வனே செய்வது மட்டுமல்லால், சற்று விரைவாகவே செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.