அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.

 லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.

 ‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

 “ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.

 “இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.

 “எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.

 சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.

 “இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.

 அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.

 அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.

 “மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.

 பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.

 “அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.

 “எனக்கு பாவெல்!” என்றார்.

 தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.

 “என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.

 மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!

 “மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *