திருடனுக்கு கிடைக்காத பணம்

0

விசாலம்

ஒரு வியாபாரி அதிக பணத்துடன் ரயிலில் ஏறினான். அவன் மாதா மாதம் தில்லிக்குச் சென்று வியாபாரம் செய்த பின் சென்னை திரும்புவான். ஒரு தடவை இவனிடம் நிறைய பணம் இருப்பதைக் கண்டுகொண்டு ஒரு திருடன் அவனது எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டான். எப்படியாவது பணத்தை வியாபாரிக்குத் தெரியாமல் எடுத்துகொண்டு விட வேண்டும் என்றும் எண்ணினான்.

இரவில் தூங்கும் நேரம் வந்தது. வியாபாரி அந்த நேரம் தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தான்.

அடிக்கடி எதிரே அமர்ந்த திருடனையும் கண்காணித்தான். இதனால் திருடன் தான் பாத்ரூமுக்கு போவது போல் எழுந்துச் சென்றான். அவன் திரும்பி வந்தவுடன் வியாபாரி நன்கு  தூங்குவதைக் கண்டு தன்  வேலையை ஆரம்பித்தான். அவனது பைகளையும் பெட்டியையும் குடைந்தான்.

திருடனுக்குப் பூட்டுத் திறக்க சொல்லியா கொடுக்கவேண்டும்!

ஆனால் இவ்வளவு தேடியும் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; ஏமாற்றம் தான் மிகுந்தது.

இரண்டாவது நாளும் இதேபோல் சந்தர்ப்பம் கிடைக்க பணத்தைத் தேடினான். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை.

மறுநாள் இருவரும் இறங்கும் தருணம் வந்தது. அப்போது திருடன் வியாபாரியிடம் கேட்டான்.

“நீங்கள் பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். ஆனால் அதை எங்கு வைத்திருந்தீர்கள்?”

“நீங்கள் எதற்கு இதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?”

“நான் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? நான் ஒரு திருடன். உங்கள் பணத்தை அபகரிக்கவே உங்கள் முன் அமர்ந்திருந்தேன். பணமும் தேடித் தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலிதான் . பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்?”

“எனக்கு உன்னைப் பார்த்தவுடனேயே நீ பணத்தைத் திருட வந்தாய் என என் உள் மனம் எனக்குச் சொல்லி விட அதை  பத்திரமாக எங்கு வைப்பது என யோசித்தேன். ஆகையால் உன் தலையணையின் அடியே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினேன். உன் பொருளை நீ சோதிக்க மாட்டாயே…”

திருடன் பிரமித்து போனான்.

நாமும் நமக்குள் இருக்கும் கடவுளைத் தெரியாமல் என்னெவெல்லாமோ செய்துக்கொண்டிருக்கிறோம் இந்தத் திருடன் போல் ……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *