நம் மாடித் தோட்டத்தில் உள்ள மயில் மாணிக்கம் கொடியின் விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நம் மாடித் தோட்டத்தில் உள்ள மயில் மாணிக்கம் கொடியின் விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இங்கிலாந்தின் போனமாத் கடற்கரையில் ஜிப் வயர் என்ற சேவை உண்டு. அந்தரத்தில் ஒரு கொக்கியில் தொங்கியபடி, விரிந்த கடலைப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். வர்றீங்களா, ஒரு நடை பறந்துட்டு வரலாம்?
படப்பதிவு – நவ்யா
The PierZip is the world’s first pier to shore zip wire, boasting a 250 meter dual zip wire. The dual zip line means you can ride with family & friends and challenge them to race to the shore! Launching from the Zip Tower platform 25 meters above the sea, thrill-seekers race out and “zip surf” 250 meters over the top of the waves to land on the beach. A truly unique and unforgettable experience and a wonderful way to experience the amazing, panoramic view of Bournemouth and its stunning coast line!
Video by Navya
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Dr.Annakannan
Today I made a transaction through Google Pay. It asked to provide the Location access for security reasons. Yes, it is a good step. I agreed; the transaction was successful and I left the shop.
After several hours, I found out that the GPS is still ON. If the Location access is for the money transaction means, after the transaction, it should go automatically OFF right? Why is this keeping on tracking & wasting the battery?
At least there should be an alert to continue the location access or not, for further transactions.
Immediate response from Google Pay

பாஸ்கர் சேஷாத்ரி
அந்தப் பள்ளி நாட்களில் எனக்குக் கைக்கடிகாரம் மீது ஒரு மோகம். அதனைக் கையில் கட்டிக்கொண்டு நடப்பது போல எப்போதும் ஓர் அதீதக் கற்பனை. கையில் அணிந்துகொண்டால் ஒருவர் ஒசத்தி என்ற எண்ணம், அப்போதே மனதில் இருந்து இருக்கிறது. அப்போது வெளிநாட்டுக் கைக்கடிகாரம் மிகப் பிரசத்தி. பேவர் லூபா என்று ஒரு வகை இதில் மிக உயர்வு எனச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். வட்ட வடிவில், சதுரத்தில் எனப் பல வகை.
இது தாழ்வு மனப்பான்மையால் எழுந்த ஒரு வகையான எண்ணம். அலங்காரமான தோற்றம் தான் சமூகத்தில் மதிப்புக் கொடுக்கும் ஒரு உபகரணம் என்பது அப்போதைய கணிப்பு . இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குணம். பெருமை தேடும் புத்தி. அங்கீகாரம் தேடும் சிந்தனை என்ற விஷயம். என்னைப் பார்த்து, தம்பி, மணி என்ன என ஒருவர் கேட்க வேண்டும் என்றும் அதற்கு நான் அலட்டலாகப் பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் தான் அப்போது மேலோங்கி நின்றது. அதுவும் கொஞ்ச நாள், அதற்கு பிரவுன் பட்டை, கொஞ்ச நாள் கருப்பு என நிறம் மாற்றி அணிய வேண்டும் என்று ஆசை வேறு.
பறத்தல் மனசு. தரையில் தங்காது. கைக்கடிகாரம் கட்டின நாள் முதல் விஷயம் இருக்கிறதோ இல்லையா கையை உயர்த்தி மணி பார்ப்பது ஒரு சுகம். ஒரு புத்தகம் தராத புத்துணர்ச்சி. இது தேற்றிக்கொள்ளும் சிந்திப்பு அது எப்படி ஊடுருவி இருக்கிறது என்பது இப்போது தான் புரிகிறது. வாழ்க்கை, அலட்டலில் இல்லை. அமைதியில் இருக்கிறது. அங்கீகாரத்தில் இல்லை. உள்ளத்தின் உள்ளே செல்வதில் என்பது தான் எவ்வளவு பெரிய உண்மை?
உண்மைகள் புரிவது ஒரு பெரிய விஷயம் இல்லை. அது அந்தந்த நேரத்தில் புரிய வேண்டும். தாமதமாய்ப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாமால் இருப்பதும் ஒன்றே. எந்த இயல்புக்கு ஒட்டாத செய்கையும், நாள் தாங்காது . அவசரத்திற்கு மணி பார்க்க, பின்னர் சுவர்க் கடிகாரம் தான் சரி என்ற நிலைக்கு மனம் தள்ளப்பட்டது. பிறகு ஒரு கனமான கைக்கடிகாரம் மேல் ஆசை வந்தது. கொஞ்ச நாளில் அதுவும் விட்டுப் போய், அலங்காரமான பொருள் வந்தும் வாட்ச் மீது இருந்த ஆசை சுத்தமாக இன்று இல்லை. ஒரு பொருளை அடைந்து பின்னர் தெளிவு பெற்று, அதனை விட்டு அகல்வது என்பது ஒரு முதிர்ச்சி. அதன் பக்கம் போகாமலே அண்டாமலே நகர்வது இன்னொரு வகை. ஒவ்வொரு தெளிவுக்கும் ஓர் அனுபவம் வேண்டும் என நினைப்பதே பெரும் ஏமாற்று.
வாழ்வை உப்புக் காகிதம் வைத்துத் தேய்ப்பது போல உரசி உரசிப் பார்த்தால் தேய்க்கப்பட்ட பொருளும் தேய்த்த காகிதமும் காணாமல் போய் நினைவு மட்டும் அசை போட்டுக்கொண்டு இருக்கிறது.

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
முன்னுரை
புலவர், கவிஞர் என்னும் சொற்கள் கவிதைப் படைப்பாளருக்குப் பொதுவாகப் புழங்கி வந்தாலும் ‘புலவர்’ என்பதில் உள்ள ‘புலமை’ என்பதன் பொருள் சற்று ஆழமானது, பார்வையில் நுட்பமும் சிந்தனையில் ஆழமும் அறிவில் தெளிவும் வெளிப்பாட்டில் நுட்பமும் எளிமையும் புலவர் தரும் படைப்புக்களை அணிசெய்யும். சங்கச் சான்றோர் அத்தகையவர்கள். அவர்கள் இயற்கையை நேசித்தவர்கள். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்களின் பரிமாணங்கள் பலவற்றையும் பட்டறிந்தவர்கள். முன்னோர் நூல்களைக் கற்றறிந்தவர்கள். உயர்திணை மற்றும் அஃறிணைகளின் அத்தனை அசைவுகளையும் மனத்திலே படம்பிடித்துக் கொண்ட வியத்தகு ஒளிப்பதிவாளர்கள். பகட்டு வாழ்க்கையை அறியாத அந்தப் பண்பாளர்கள் பருத்தி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பண்பாட்டின் புரவலர்கள். தேடிய திறன்களையெல்லாம் அவர்கள் தாங்கள் படைத்த கவிதைகளில் உவமங்களாய்க் காட்டி இன்றைக்கும் பேசாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பானைச் சோற்றுக்குப் பதச்சோறுகளாய்ச் சில.
‘ஆடிப்பாவை’ ஆன தலைவன்
உலகியலில் மனைவிதான் தன் கணவனோடு தொடர்புடைய மற்றொருத்தியைப் பகையாக எண்ணி ஏசுவாள். பேசுவாள். ‘கச்சிருக்கும் நாளையில் கரும்பானேன் கைக்குழந்தை வச்சிருக்கும் நாளையில் நான் வேம்பானேன்’ என்று மனைவிதான் புலம்புவாள். சங்க இலக்கியத்தில் இதற்கு வேறுபட்ட காட்சி ஒன்று சித்திரிக்கப்பட்டுள்ளது. பரத்தையை நாடி வந்தான் மருதநிலத் தலைவன் ஒருவன். அவன் மீது மாறா அன்பு கொண்டவள் அந்தப் பரத்தை. தன்னிடம் வந்து போனவன் மீளவும் வாராமல் காலந்தாழ்த்திய பொழுதில் தலைவனை ஏசுவதாக ஒரு பாடல். ஆலங்குடி வங்கனார் எழுதிய இந்தப் பாடலுக்கு மரபுபற்றி உரையெழுதிய ஆசிரியர்கள் தலைவி பரத்தையை ஏசியதாகச் சொல்லி, அதனை அறிந்த பரத்தை தனக்கெதிரான தலைவியையும் அவள் கணவனையும் ஏசியதாகத் துறை வகுத்திருக்கிறார்கள். அப்படி ஏசுகிறபோது பரத்தை இரண்டு கருத்துக்களைப் பதிவிடுகிறாள். அவ்விரண்டும் தலைவனின் இயல்பு பற்றியனவே. ஒன்று தன்னிடம் இருக்கும் போது ‘பெருமொழி’ (புகழ்ச்சிமொழி – சிறுசொல் இகழ்ச்சியாதலின் பெருமொழி புகழ்ச்சியாயிற்று) கூறித் தன்னை மயக்கினான் என்பது. பிறிதொன்று. தலைவியிடம் சென்றபின் அவள் காலால் இட்ட பணிகளைத் தலையாலே தாங்குகிறான் என்பது. இதற்குத்தான் அவள் ஓர் உவமம் கூறுகிறாள்.
“ஊரன்
எம்மில் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யும் தம் புதல்வன் தாய்க்கே! ” (குறுந் 8)
திருவள்ளுவர், ‘அடுத்தது காட்டும் பளிங்கு’ என்னும் உவமத்தால் எதிரொளியை மட்டும் உவமமாக்கினார். ஆலங்குடி வங்கனாரோ உறுப்புக்களின் செயல்பாட்டின் விரைவு நோக்கி உவமமாக்கினார். உவமத்தின் நுட்பம் என்னவென்றால் தலைவி ‘இன்னதைச் செய்’ என்று சொல்லிய பிறகு தலைவன் செய்யவில்லையாம். அவள் சொல்லுகிறபோதே செய்துவிடுகிறானாம். எதனைப் போல? ஆடிப்பாவை போல! ஆடியின் முன்னிற்கும் மனிதர்களின் செயல்களுக்கும் ஆடியில் தோன்றுகிற பிம்பத்தின் செயல்களுக்கும் கால இடைவெளி என்பதே இல்லை. தலைவியின் ஆணையும் தலைவனின் செயலும் ஒரு நேரத்தில்! எப்போது சொல்லுவாள் என்று தலைவன் காத்திருக்கிறானாம்! இந்த நுண்ணியத்தைத்தான் புலவர், தலைவன் செயலுக்கு உவமிக்கிறார். தூக்கிய பிறகு அல்ல தூக்கும் போதே!
தேய்கின்ற மஞ்சள் நிலா!
தலைவனால் விரும்பப்படாத தலைவியின் உடல் உணர்வுகளும் இளம் விதவைகளின் உணர்வுகளும் ஒன்றே என்பதை அறிந்தார் அறிவர். இங்கே இளம் விதவை என்பது திருமணமாகிச் சில காலம் வாழ்ந்து இல்லற இன்பத்தை இழந்தவர்களைக் குறிப்பதோடு திருமணம் ஆன அன்றே விதவையான பெண்களையும் குறிப்பதாகும். இது சடங்கு பற்றியதன்று சஞ்சலம் பற்றியது. இத்தகையதொரு பாத்திரத்தைத் ‘தெய்வத்தின் தெய்வம்’ என்னும் திரைப்படத்தில் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்களும் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்னும் திரைப்படத்தில் இயக்குநர் திரு. சுந்தரராசனும் உருவாக்கிக் காட்டியிருந்தார்கள். மணமுடித்த அன்றே தேனிலவு பயணம் புறப்பட்ட தம்பதியின் கார் விபத்தில் சிக்க மணமகன் உயிரிழக்கிறான். மணமகள் விதவையாகிறாள். அந்த விதவை தன் விரகதாபத்தைப் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இது தெய்வத்தின் தெய்வத்தில்!
“பள்ளியறை காணலியே
பாலெடுத்துக் கொடுக்கலியே
துள்ளி வந்து பார்க்கலையே!
தொட்டு விளையாடலையே!”
என்பது கண்ணதாசன் பாடல். மணமுடித்தபின் மறுமனைச் சடங்கிற்குப் பரிசலில் செல்லும் மணமகன் பரிசல் விபத்தில் உயிரிழக்க அவள் தன் உடல் வேதனையைப் பாடுவதாக வாலி எழுதியிருக்கிறார்.
“விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை!
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை!
………………………………………………………………………………………
ஊதாத புல்லாங்குழல்! எனதழகு சூடாத பூவின்மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா! ஒரு துணையைத்
தேடாத வெள்ளைப் புறா!”
என்பன கவிஞர் வாலியின் வரிகள். வாசகர்கள் இந்த உணர்வுகளைப் புதுமையான வெளிப்பாடு என்று மயங்க வேண்டியதில்லை. ஆனால் உண்மையான வெளிப்பாடு. உணரவேண்டிய வெளிப்பாடு. இவ்விரு வெளிப்பாடுகளுக்கும் மூலமாக அமைந்ததுதான் வெள்ளிவீதியாரின் வெளிப்பாடு. அதனாலேயே கவிஞர்கள் இருவரும் வெள்ளிவீதியாரை நகலெடுத்தார்கள் என்று கருதிவிடக்கூடாது. வெள்ளிவீதியாரின் வேதனை வெளிப்பாடு இப்படி அமைகிறது.
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாஅது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு” (குறு 27)
நுகர்வாரின்றித் தன்னழகு மாய்வதாகவே தவித்துப் புலம்புகிறார் வெள்ளிவீதியார். அதற்கு அவர் கண்டிருக்கும் உவமம் ‘நல்ல ஆன் தீம்பால் நிலத்தில் கொட்டிச் சீரிழிதல்’ என்பது. ஆனுக்கு வந்த அடை வெள்ளியாருக்கும் பாலுக்கு வந்த அடை அவருடைய அழகிற்கும் பொருந்தும். வெள்ளி வீதியாரை நோக்க கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இது மரபு. தொல்காப்பியத்தை நோக்க இந்த மூன்று பாடல்களுமே மரபு மாற்றம். ‘தன்னுறு வேட்கை கிழவற் முற்கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை’ யெனவே, பிறர் முன் என்பது சொல்ல வேண்டாவாயிற்று. இங்கே இந்த மூன்று பாடல்களிலும் ஒரு பெண் தன் உணர்ச்சிக்கு வடிகாலைத் தேடிப்புலம்புவதை வெளிப்படுத்துதற்கு அரிய அவரவர் பக்குவதிற்கு ஏற்ற உவமங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.
ஓர் ஏர் உழவன்
தமிழ்க்கவிதை உவமக் கோட்பாடுகளில் ஒன்றைக் கவனிக்கலாம். அதாவது புறத்திணைப் பாடுகிறபோது அகத்திணைப் பொருண்மையையோ அது தொடர்பான நிகழ்வுகளையோ உவமமாக்குவதில்லை. ஆனால் அகத்திணைப் பதிவுகளில் புறத்திணைச் சிந்தனைகள் பதிவாகியிருக்கின்றன. அகத்திணை மாந்தர்களின் கூற்றுப் பகுதிகளில் புறத்திணைச் சிந்தனைகள் உவமமாக வந்துள்ளன. பாலையை வண்ணனை செய்கிறபோது ‘வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்’ என்னும் சிந்தனை மேலோங்கியிருந்திருக்கிறது. வினைமீளும் தலைவன் தலைவியை நாடி விரையும் அகத்திணை நிகழ்வில் ஏழை உழவனை உவமமாகப் பாடியிருக்கிறார்கள்.
ஆடமை புரையும் பனப்பிற் பணைத்தோள்
பேரமர்க்கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆயிடை அதுவே! நெஞ்சே
““ஈரம்பட்ட செவ்வி பைம்புனத்து
ஓரேர் உழவன் போல
பெரு விதுப்பு உற்று அற்றால் நோகோ யானே” (குறுந் 131)
என்கிறான் தலைவன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதுபோல, ஈரம் இருக்கிறபோதே உழுது விதைக்க வேண்டும். ஆனால் அகன்ற பழனம் மழைபெய்து ஈரமாயிருக்கிறது. கையில் இருப்பதோ ஒரே ஓர் ஏர். அதனைக் கொண்டு அத்தனைப் பெரிய பழனத்தை உழுவதற்குள் ஈரம் போய்விடுமே எனக் கவலை கொள்ளும் உழவனாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். தலைவனுக்கும் தலைவிக்கும் ஊருக்குமாக இடைநின்ற தொலைவிற்கும் ‘ஆடமை புரையும் பனப்பிற் பணைத்தோள் பேரமர்க்கண்ணி”யின் நலத்தை நுகர்வதற்குமான இடைவெளியின் விளைவுகளுக்கு இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைவியின் பேரழகு தான் செல்வதற்குள் மாறிவிடுமோ என்னும் தலைவனின் ஏக்கமாகிய உரிப்பொருளை ஒற்றை ஏர் உழவனின் இரங்கத்தக்க நிலை விளக்குகிறது.
‘உகிர் நுனி புரட்டும் ஓசை போல’
மாந்தர்களின் அசைவுகளை மட்டுமல்ல. அனைத்துயிர்களின் அசைவுகளையும் செயல்களையும் நுட்பமாக நோக்கி அவற்றை உவமமாக்கியிருக்கும் திறன் சங்கச் சான்றோருடையது. தன் பருவ உணர்வுக்கு ஏற்பத் தலைவன் வருகையை எதிர்நோக்கும் தலைவியின் உணர்வறிந்துப் பேசும் தோழியின் திறத்தை இந்தப் பாட்டில் காணலாம்.
“உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்தம்
பொன்புனைப் பகழி செப்பம் கொள்மார்
உகிர் நுனி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளி காடி றந்தோரே!” குறு 16
என்பது தலைவிக்கான தோழியின் ஆறுதல். தன்னை எண்ணவே மாட்டானா தலைவன்?” என ஏங்கும் தலைவியை நோக்கி “எண்ணாமல் இருப்பாரா? அவன் சென்ற கள்ளி பரந்த பாலையில் சிவந்த கால்களையுடைய ஆண்பல்லி தன் துணையை அழைக்கும் ஒலி அவன் காதில் விழும். அவ்வோசை அவனை நெகிழச் செய்யுமாதலின் அவன் வருவது ஒருதலை” என்கிறாள் தோழி! தோழியின் கூற்றில் வரும் ஆண்பல்லியின் அழைப்பொலிக்குப் புலவர் காட்டும் உவமம்தான் புல்லரிக்க வைக்கிறது. ‘அடுகணை’ என்பது பொன்பகழி. பொன்னால் மகுடம் சூட்டப் பட்ட பகழி. ‘பொன்’ என்பது இரும்பு. எனவே அம்பின் நுனியில் தாக்குதற்கான இரும்புக்குழாயினைச் செருகி அதனைக் கூராக்குதற் பொருட்டு நெருப்பில் நன்கு காய்ச்சுவார்கள். காய்ச்சிய பிறகு பின்னும் கூர் செய்வதற்கு விரல் வலிமை உடைய வீரர்கள் தங்கள் நகத்தால் தடவிப் (சுரண்டி) பார்த்துச் செப்பம் செய்வார்கள். இன்றைக்கும் அரிவாள் முதலிய கருவிகளை விரலாலும் நகத்தாலும் தடவிப் பார்க்கும் வழக்கம் உண்டு. கூர்மையான நகம் அம்பின் நுனியில் உரசிப் பதம் பார்க்கும் அந்த ஒலியைத்தான் ஆண்பல்லி தன் துணையை அழைக்கும் ஒலிக்கு உவமமாக்கியிருக்கிறார் பெருங்கடுங்கோ! சேவல் கூவுதற்கும் கெக்கரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கனைகுரற் பல்லியினும் இந்தப் பல்லி வேறானது. பாலை சுடுகிறது., கடுங்கோ பாடிய பாடல் குளிர்கிறது உவமத்தால்!
“உலைக்கல் அன்ன பாறையேறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்”
என ஓதலாந்தையார் (குறு12) கூறுவதும் காண்க.
உவமங்களான மாற்றுத் திறனாளிகள்
உடல் ஊனமுற்றவர் மாற்றுத் திறனாளிகள் ஆன காலம் இது. இன்றைய மாற்றுத் திறனாளிகளின் மனத்துன்பத்தைச் சங்கத்துச் சான்றோர்கள் உணர்ந்திருந்தனர். உணர்ந்ததோடு அல்லாமல் தாம் எழுதிய பாடல்களில் உவமங்களாய்ப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். கையும் இல்லாத வாயும் இல்லாத ஒருவன். இத்தகைய ஒருவனைத் தலைமகன் தனது கூற்றில் உவமமாக்கியிருக்கிறான். தலைவியைக் காணாது தவிக்கிற தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனை நோக்கி, அவனுடைய தேறுதல் மொழி பயனற்றது’ என்பதாகக் கூறுகிறான் தலைவன்.
“ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்! நோன்று கொளற் கரிதே!” குறு. 5
‘‘உன்னுடைய ஆறுதல் நலிந்து போகும் என் உடல்நிலையைத் தேற்றினால் பயன் உண்டாம். ஆனால் என் தலைவியைக் காணாது என் மேனியெங்கும் பரந்து நிற்கும் இந்தக் காதல்நோய் என்னால் தாங்குதற்கு அரியதாக இருக்கிறது. கொதிக்கும் வெயிலில் பாறையின் ஓரிடத்தில் வைக்கப்பட்ட வெண்ணெய் உணங்கலை உருகாதவாறு, கையில்லாத மூங்கையும் வாயில்லாத ஊமையுமாகிய ஒருவன் தன் கண்ணாலேயே காக்க வேண்டும் என்றால் அது இயலுமா? சென்று எடுப்பதற்குக் கையும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைத்துச் சொல்வதற்கு வாயுமில்லை. கண்ணால் உருகாதே என்றால் வெண்ணெய் உருகாமலா இருக்கும்? அவ்வாறு உருகி நிற்கும் என் மேனிக்கு நின் ஆறுதல் பயனற்றது என்கிறான் தலைவன். பாட்டில் உருகும் மேனிக்குப் பாறையில் உருகும் வெண்ணெய் உணங்கலே உவமமாயினும் நோயைக் கட்டுப்படுத்த இயலாத தலைவனுக்குக் ‘கண்ணில்லாத கையில் ஊமன்’ உவமமாக அமைந்திருக்கும் நுட்பம் அறிக.
அகத்திணைத் தலைவன் தன் காதல் நோயின் ஆற்றாமைக்கு மாற்றுத் திறனாளியின் இயலாமையையும் துன்பத்தையும் உவமமாக்கிக் கூறியிருப்பதைப்போல அகத்திணைத் தலைவியும் தனது துன்பத்து வெளிப்பாட்டுக்காக மற்றொரு மாற்றுத் திறனாளியை உவமமாக்கியிருக்கிறார். அவன் ‘கையில் ஊமன்’. இவன் இருக்கை முடவன். ‘இருக்கை’ தொழிற்பெயர். அதாவது இருத்தலாகிய தொழிலைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதவன். உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருப்பவன். அப்படியே அமர்ந்திருக்கும் அவன் பார்வையில் ஒரு காட்சி. கூதளிக் கொடி மண்டிய உயரமான மலைப்பகுதி. அங்கே கட்டப்பட்டிருந்த கூட்டில் தேன் வழிகிறது. இவனால் அதனை அருந்த முடியவில்லை. ஆனால் என்ன செய்கிறான் தெரியுமா? தனது கையைக் குடையைப் போல் குழிசெய்து வைத்துக் கொண்டு அந்தத்தேன் அதில் விழுவதாகக் கற்பனை செய்து அதனை நக்குவதாக எண்ணி மகிழ்கிறான். உண்மையில் அவன் காட்சியில்தான் தேன் விழுகிறது. காட்சியின்பத்தைப் புலன்வழி நுகர்ந்த இன்பமாகக் கற்பனை செய்து கொள்கிறான். இதனைத்தான் தலைவி உவமமாக்குகிறாள்.
“குறுந்தாள் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலி கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக்காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் காண்டல் உள்ளத்துக்கு இனிதே!” (குறு 60)
என்பது தலைவியின் வேதனை வெளிப்பாடு. ‘காட்சி, வேட்கை, ஒருதலை உள்ளுதல்’ என்பார் தொல்காப்பியர். அவன் அமர்ந்திருக்கிறான். நான் இற்செறிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். அவன் எழுந்து நின்று தேனைச் சுவைக்க முடியாது. கண்டுதான் சுவைப்பதாக எண்ணிக் கொள்ளலாம். அது போல என் தலைவன் என் கண்ணில் பட்டாலே என் உள்ளத்துக்கு இனிமை தருமே!’ என்று தலைவி ஏங்குகிறாள்.
கவை மகவு நஞ்சுண்டது போல
சங்க இலக்கியத்தில் தலைவி தோழியானால், தோழி தலைவியாவாள். தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். அதனால்தான் ஒருவர் இயற்பெயர் சுட்டுவதில்லை. தலைவியும் தோழியும் இணையானவர்களே என்பது இதனால் பெறப்படும். கற்பனை மாந்தர்களான அவர்களைப் பண்பாட்டுப் பெருமக்களாகச் சித்தரித்துக் காட்டுவதில் சங்கச் சொன்றோர் தனிச்சிறப்புக்குரியவர் ஆவர். தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். எத்தகைய இடர் கடந்து வருகிறான் தெரியுமா? “கொல்லுந் தொழில் வல்லமையுடைய ஆண்முதலையானது வழியெல்லாம் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்குமாறு குறுக்கே கிடக்கும் அழகிய கடல் துறையின்கண் இனமீன்கள் நிறைந்துள்ள உப்பங்கழியை நீந்தி” வருகிறானாம்.
“கொடுங்கால் கொல்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி”
என்கிறார் புலவர். இவன் படும் இத்துன்பத்தால் தன் தலைவனுக்கு ஏதம் வருமோ என்று தலைவி நடுங்கித் துன்புறுகிறாளாம்.
‘இவள் மடன் உடைமையின் உயங்கும்’
என்கிற தோழி இருவருடைய துன்பத்தையும் நோக்கி வேதனைப்படுகிறாளாம். யாரைப்போல? தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளும் நஞ்சருந்திய காலத்து அப்பிள்ளைகளின் தாய் உணரும் அச்சத்தை இந்தத் தோழி உணர்ந்தாளாம்!. “நயன் உடைமையின் நீ வருகிறாய். மடன் உடைமையின் இவள் உயங்குகிறாள். நானோ நஞ்சருந்திய இரட்டைப் பிள்ளையின் தாயைப் போல அலமறுகிறேன்’ என்கிறாள் தோழி!
“நீ நின் நயனுடைமையின் வருதி! இவள் தன்
மடன் உடைமையின் மயங்கும், யான் அது
கவை மகவு நஞ்சுண்டாங்கு
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!” (குறு 324)
உலகியலை நோக்கிய உவமங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாகின்றன. இலக்கிய நோக்கில் தலைவிக்குத் தோழியாகப் பார்க்கப்பட்டுவரும் ஒருத்தி தலைமக்களுக்குத் தாயாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதற்கு இவ்வுவமத்தின் பயன்பாடு பெரிதாம்.
நிறைவுரை
ஆடியின் அசைவை உவமமாக்கியிருக்கிறார்கள். அம்பு தீட்டும் ஒலியை உவமமாக்கியிருக்கிறார்கள். உழுவதற்கு ஒற்றை ஏர் மட்டும் உடையவனை உவமமாக்கியிருக்கிறார்கள். மாற்றுத் திளனாளிகளை உவமமாக்கியிருக்கிறார்கள். நல் ஆவின் பாலை உவமமாக்கியிருக்கிறார்கள். நஞ்சுண்ட இரட்டைப் பிள்ளைகளை உவமமாக்கியிருக்கிறார்கள். உவமம் ஒரு கவிதையைச் சிறப்பிக்கும் தொழில்நுட்பக் கருவியாகப் பயன்படாமல் புலவர் பெருமக்களின் சமுதாயப் பார்வையைப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கிறது. இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்வு முறைகளைக் காட்டுகிறது. அஃறிணை, உயர்திணை என்னும் அனைத்தின் அசைவுகளையும் நிழல்களையும் கூடப் பதிவு செய்யும் அவர்தம் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஒரு கவிதையின் பெருஞ்சிறப்புக்கு உவமம் ஒரு தலையாய காரணம் என்பதை இவை உறுதி செய்கின்றன!.
(தொடரும்…)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(362)
இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட் டதில்.
– திருக்குறள் – 1063 (இரவச்சம்)
புதுக் கவிதையில்...
இல்லாமையால் வரும்
வறுமைத் துன்பத்தை
ஓட்டிட
உழைக்கும் முயற்சியைக்
கைவிட்டுப் பிறரிடம்
கைநீட்டி இரக்கலாம்
என்று எண்ணும்
கொடுமையிலும் கொடுமை
வேறில்லை…!
குறும்பாவில்...
வறுமைத் துன்பம் போக்கிட
உழைக்காமல் இரந்து பிழைக்கலாமென
எண்ணுதல் கொடுமையிலும் கொடுமை…!
மரபுக் கவிதையில்...
இல்லை யென்னும் வறுமையினை
இல்லா தாக்கும் வழியதுவாய்
நல்ல பணியாம் முயற்சியினை
நாடா திருந்தே சோம்பலாலே
பொல்லா வழியாம் இரந்திடவே
போக யெண்ணும் நிலையதுதான்
எல்லா வகையாம் கொடுமையிலும்
ஏற்க வியலாக் கொடுமையாமே…!
லிமரைக்கூ...
வறுமை போக்க வழியே
உழைப்ப தென்பதை மறந்தே இரந்திட
எண்ணுதல் கொடுமையாம் பழியே…!
கிராமிய பாணியில்...
பயமிருக்கணும் பயமிருக்கணும்
எரந்து வாழப் பயமிருக்கணும்,
வறுமயப் போக்கிற வழியா
எரந்து வாழப் பயமிருக்கணும்..
வாழ்க்கயில வரும்
வறுமத் துன்பத்தப் போக்க
ஒழச்சிவாழப் பாக்காம
அடுத்தவங்கிட்ட
எரந்து வாழும் எண்ணம்வந்தா
அது
கொடுமயிலயெல்லாம் பெரிய
கொடுமதானே..
அதால
பயமிருக்கணும் பயமிருக்கணும்
எரந்து வாழப் பயமிருக்கணும்,
வறுமயப் போக்கிற வழியா
எரந்து வாழப் பயமிருக்கணும்…!

இந்த ஆடி அமாவாசையில் அங்காளம்மன் ஊஞ்சல் பாட்டைக் கேளுங்கள். உலகாளும் தாய் உறங்கும் அழகைப் பாருங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஏழாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!
பாடல் – வைரங்கள் மின்னும்
பாடலாசிரியர் – வாரணா
இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடியவர் – சுபத்ரா
தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்
தயாரிப்பு நிறுவனம் – ஆர்.எம்.கிரியேஷன்ஸ்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சந்திப்பு: அண்ணாகண்ணன்
நம் யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியைத் தொடங்கியுள்ளோம். இல்லறத்தில் இன்பம் சூழ, செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து, எழுத்தாளர் நிர்மலா ராகவன் ஆலோசனை வழங்குகிறார். குடும்பத்தில் எப்படியெல்லாம் சிக்கல்கள் உருவாகின்றன, அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்று கனிவுடன் எடுத்துரைக்கிறார். உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை யூடியூபில் இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நம் மாடித் தோட்டத்தில் உள்ள நட்சத்திர வெண்டை விதைகளைச் சேகரித்து வைத்தோம். இந்த விதைகள், உங்களுக்கு வேண்டுமா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இந்த ஆடி வெள்ளியில் அம்மனைத் தொழுவோம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை ஆராதிக்கும் ‘செம்பரிதி ஜோதியிலே’ என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஆறாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!
பாடல் – செம்பரிதி ஜோதியிலே
பாடலாசிரியர் – வாரணா
இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடியவர் – ரமேஷ் வெங்கட்ரமணன்
தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்
தயாரிப்பு நிறுவனம் – ஆர்.எம்.கிரியேஷன்ஸ்
படங்களுக்கு நன்றி – www.wikimedia.org, https://www.facebook.com/adhiparasakthi
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

‘சிரிப்பு யோகா’ தொடரில் பத்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்த ஒரு சென்டி சிரிப்புப் பயிற்சியைச் செய்தால், உங்கள் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். அனாவசியக் கொழுப்புகள் கரையும். விநாடிகளில் உங்கள் நாடி செம்மையடையும். நாடி வாருங்கள், நலம் பெறுங்கள். வேடிக்கையாக வெடித்துச் சிரியுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Engg Nuclear, Canada
பாரத தேசத்தின் முதல் வானலை ஆராய்ச்சி விஞ்ஞானி
பதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து நூறாண்டுகள் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்! 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின! விஞ்ஞான வல்லுநர்கள் பலர் அத்துறையில் மூழ்கி 1895 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றி பெற்று முதலில் சிறிதளவு தூரத்துக்கு ரேடியோ வானலையை அனுப்பிக் காட்டினர்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள்! மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்! அமெரிக்காவின் மின்துறை மின்னியல் பேரவை IEEE [The Institute of Electrical & Electronics Engineers] J.C. போஸ் ரேடியோ சாதனத்தைக் கண்டு பிடித்த முன்னோடிகளில் [Pioneers of Radio] ஒருவர் என்று மட்டுமே சமீபத்தில் சான்றிதழ் கொடுத்துள்ளது!
மார்கோனி
ரேடியோ ஆய்வு செய்த இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி
இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப்போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணுணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

போபாவ் & மார்கோனி
ஜகதிஷ் சந்திர போஸின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு
1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் [Mymensigh, Bengal] என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இந்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். ஓராண்டுக்குள் போஸ் இயற்கைவியல் விஞ்ஞானத்திற்கு [Natural Science] உபகாரச் சம்பளம் பெற்றுக் கிறித்துவக் கல்லூரியில் படிக்கக் கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்திற்குத் தாவினார். அங்குள்ள அவரது ஆசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர், பேராசிரியர் ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)]. அவரிடம் கற்ற கல்விப் பயிற்சி போஸின் பிற்கால விஞ்ஞானப் படைப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருந்தது. போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் B.A. பட்டத்தையும், லண்டன் பல்கலை கழகத்தில் B.Sc. பட்டத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு மீண்டார். கல்கத்தாவில் பிரசிடென்ஸிக் கல்லூரியில் பெளதிகத்தில் நுழைவுப் பேராசிரியர் பதவியை 1885 இல் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தார். அப்பணியில் இருந்த போது, அவரது முன்னாள் பிரிட்டிஷ் பேராசிரியர் ஜான் ராலேயின் சீரிய கல்வி முறைகளைக் கையாண்டு, விஞ்ஞானக் காட்சிச் சாதனங்களை மாணவர்களுக்கு இயக்கிக் காட்டி, கைதேர்ந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் மாணவராகப் படித்தவர்களில் பலர் பின்னால் பெரும் பெளதிக மேதையாக பெயர் பெற்றனர்.

ஸர் ஆலிவர் லாட்ஜ் [Sir Oliver Lodge] எழுதிய ஹையன்ரிச் ஹெர்ட்ஸ் & பின்வந்தவர்கள் [Heinrich Hertz & His Successors] என்னும் நூலை ஆழ்ந்து படித்து, மின்காந்தக் கதிர்வீச்சின் [Electromagnetic Radiation] தன்மைகளைப் படித்து, ஹெர்ட்சியன் அலைகளைப் [Hertzian Waves] பற்றி விபரமாக அறிந்து கொண்டார். அதன் பிறகு 1894 இல் கல்லூரியில் ஒர் ஒதுக்குப் புறத்தை அறையாக மாற்றிக் கதிரலை ஆய்வுச் சோதனைகள் [Refraction, diffraction, & Polarization] பலவற்றைத் தனியாகச் செய்ய ஆரம்பித்தார். ரேடியோ சிற்றலைச் சோதனைகளுக்கு அலையீர்ப்பியை [Receiver] உண்டாக்க காலினாப் படிகத்தை [Galena Crystal] விருத்தி செய்து முதன் முதலில் பயன்படுத்தினார். கல்கத்தாவில் 1898 இல் ஜெ.சி. போஸ் தான் முதலில் மில்லி மீட்டர் நீளலைகளை [Millimeter Wavelengths] உண்டாக்கிப் புரிந்த ஆராய்ச்சியை லண்டன் ராஜீய விஞ்ஞானக் கூடத்திற்கு [Royal Institution, London] எழுதி அனுப்பினார். 1904 ஆம் ஆண்டு அவரது, முதல் ‘மின்காந்தக் கதிரலை உளவிப் [Detection of Electromagnetic Radiation] படைப்புக்குக் காப்புரிமை [Patent Rights] வழங்கப் பட்டது!
கல்லூரியில் 1915 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்து விலகி, 1917 இல் கல்கத்தாவில் போஸ் ஆய்வுக் கூடத்தை ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை [1937] அதன் ஆணையாளராக இருந்தார். 1920 இல் இங்கிலாந்து ஸர் பட்டத்தையும், F.R.S. [Fellow of Royal Society] கெளரவ அங்கீகாரத்தையும் J.C. போஸூக்கு அளித்தது.

ஜகதிஷ் சந்திர போஸ் புரிந்த விஞ்ஞானச் சாதனைகள்
(1894-1899) உலகின் பல்வழித் தொடர்பு [Multimedia Communication] முறையைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஜகதிஷ் சந்திர போஸ். முதலில் இந்தியாவில் ஹெர்ட்ஸியன் அலைகளைப் [Hertzion Waves] பற்றிய சோதனை ஆராய்ச்சிகளை ஆரம்பித்து, மிகச் சிறிய 5 மில்லி மீட்டர் ரேடியோ அலைகளை [Radio Waves] உண்டாக்கிக் காட்டியவர், போஸ். தொடர்புக் கம்பமுடன் தூக்கிச் செல்லும் சாதனத்தைச் [Portable Apparatus with Antenna] செய்து, 5 mm அலைகளின் ஒளிக்காட்சித் [Optical Properties] தன்மைகளைக் கண்டு ஆராய்ந்தவர். தற்கால நுண்ணலைப் பொறியல் துறைக்கு [Microwave Engineering] அது அடிகோலியது. முதல் கம்பியில்லாத் தொலைத் தொடர்பைப் போஸ் 1895 ஜனவரியில் கல்கத்தாவில் செய்து காட்டினார். மின்காந்த அலைகளைப் பயன்படுத்தித் தூரத்திலிருந்து தூண்டி, கம்பி யில்லாமல் ஒரு மின்சார மணியை அடிக்கச் செய்தார்! அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார்! 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத் தொடர்பு செய்துள்ளார்! இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை! ‘ என்று பறை சாற்றியது! அரைக்கடத்தியைப் [Semiconductor] பயன்படுத்தி முதலில் அமைக்கப் பட்ட அவரது காலினா உளவியும் [Galena Detector] ஒளி மின்னழுத்தச் சிமிழும் [Photovoltaic Cell] 1904 இல் அமெரிக்கக் காப்புரிமை [U.S. Patent No.755840] பெற்றன.

(1899-1907) கோஹெரர் உளவி [Coherer Detector] பற்றி முதற்படி ஆய்வு செய்து விலங்கினம், தாவர இனம், தாதுக் கலப்புத் திரவங்கள் [Inorganic Compounds] ஆகிய வற்றில் எழும் எல்லா விதத் தூண்டலையும் நுகர்ந்து அவை மின்சாரப் பதிவு [Electric Response to Stimulation] செய்வதைக் கண்டு பிடித்தார். உயிரினப் பெளதிக [Biophysical Phenomena] நிகழ்ச்சிகளின் தாது மாதிரிகளைத் [Inorganic Models] தயாரித்துத், தாவர இனம், விலங்கினத்தின் சதைகள் [Tissues] அனுப்பும் தூண்டலை மின்சார, யந்திரவியல் முறைகளில் பதிவு செய்தார். அம்முறையில் மனிதரின் கண்ணொளி, மூளையின் நினைவுச் சரங்கள் [Vision & Memory Units of Brain] ஆகியவற்றில் எழும் அதிர்வு அலைகளையும் ஆராய்ந்தார்.
(1907-1933) தாவர இனங்களின் உணர்ச்சி முறைகளை ஆராய்ந்து, தாதுப் பண்டம், விலங்கினம் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளுக்கும் அவை இடைப்பட்டது என்று கண்டு பிடித்தார். போஸ் தனது ஆராய்ச்சிகளைச் செய்ய பலவிதக் கருவிகளை ஆக்கினார். மிக நுணுக்கமான நகர்ச்சிகளைப் பதிவு செய்யும் சுய இயக்கக் கருவிகள் காயம் பட்டத் தாவரப் பயிர்கள் உண்டாக்கும் மென்மையான உணர்ச்சியை வரைந்து காட்டின. J.C. போஸ் 1917 நவம்பர் 30 ஆம் தேதியில் தனது போஸ் ஆய்வுக் கூடத்தை [Bose Institute] ஆரம்பித்து வைத்தார். அன்று ‘உயிரினத்தின் கூக்குரல் ‘ [The Voice of Life] என்னும் சொற்பொழிவை நிகழ்த்தி, போஸ் ஆய்வுக் கூடத்தை பாரத நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்.

நூறாண்டுகளுக்கு முன்பே கல்கத்தாவில் J.C. போஸ் மில்லி மீட்டர் மின்னலையை உண்டாக்கி, அவற்றை உளவிக் காணும் [Generation & Detection of Millimeter Waves] ஆய்வுகளைச் செய்து, அவ்வலை களின் மூலம் பொருள்களின் குணாதிசயங் களையும் குறிப்பிட்டு எழுதினார். இக்காலத்தில் பயன்படும் நமக்குப் பழக்கமான நுண்ணலைச் சிறு கலன்கள் [Microwave Components], அலை வழிகாட்டி [Waveguide], கொம்பு மின்கம்பம் [Horn Antenna], போலரைஸர் [Polarizers], மின்தடுக்கி லென்ஸ் [Dielectric Lenses], முப்பட்டை [Prisms], மின்காந்த அலைவீச்சை உளவும் அரை மின்கடத்திகள் [Semconductor Detectors of Electromagnetic Radiation] ஆகிய யாவற்றையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் போஸ் தன் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தி யிருக்கிறார். அவை யாவும் இப்போது அவர் அமைத்த போஸ் ஆய்வுக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

போஸ் அமைத்த ரேடியோ சாதனங்களின் கண்காட்சி மாளிகை
போஸ் தான் அமைத்த கருவிகளைக் கல்கத்தாவின் காட்சி மாளிகையில் [Bose Museum] பலர் காண வைத்துள்ளார். 1986 இல் காட்சி மாளிகை புதிய இடத்திற்கு மாறியது. அங்கே அடிக்கடி நுண்ணலைப் பொறியியல் [Microwave Technology] பற்றிப் பேரவைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அரசின் மின்னியல் துறையின் [Dept of Electronics] ஆதரவில் இயங்கும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் மின்னியல் பொறியியல் கூடத்தின் வானலைப் பெளதிக மாணவர்கள் செய்முறைப் பயிற்சிக்காக போஸ் காட்சி மாளிகைக்குப் போய் வருகிறார்கள்.
போஸ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: உயிருள்ள, உயிரில்லாப் பிறவிகளின் உணர்வெழுச்சி [Response in the Living & Non-Living (1902)], தாவரங்களின் நரம்பு இயக்க முறைகள் [The Nervous Mechanism of Plants (1926)].

அவரிடம் மாணவராக இருந்தவர்களில் சிலர் பின்னால் பெரும் பெளதிக மேதைகளாக உலகப் புகழ் அடைந்தனர். சிறப்பாக போஸான் [Boson] என்னும் அடிப்படைத் துகளைக் கண்டு பிடித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடன் இணைந்து புகழ் பெற்ற ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] கோட்பாடை உண்டாக்கிய சத்யேந்திர நாத் போஸ் [Satyendra Nath Bose (1894-1974)] அவரிடம் கற்ற விஞ்ஞானி. போஸான் போஸ் [Boson Bose] என்றும் உலகில் அழைக்கப்படும் எஸ். என். போஸ், பேராசிரியர் ஜகதிஷ் சந்திர போஸின் ஒப்பற்ற மாணவர்!
குடத்து விளக்காய் ஒளி வீசிய தீபம் அணைந்தது!
1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜகதிஷ் சந்திர போஸ் தனது 79 ஆவது வயதில் பீஹாரில் கிரிடி [Giridih, Bihar] என்னும் ஊரில் காலமானார். அவர்தான் ரேடியோ அலைகளைத் தேட முதன் முதலில் மின்னியல் அரைக்கடத்தி இணைப்பைப் [Electronic Semiconductor Junction] பயன் படுத்தியவர். 1977 இல் திடப் படிக மின்னியல் [Solid-state Electronics] துறைக்கு நோபெல் பரிசு பெற்ற ஸர் நெவில் மாட் [Sir Neville Mott], ‘ஜகதிஷ் சந்திர போஸ் P-type, N-type அரை மின்கடத்திகள் [P-type, N-type Semiconductors] தோன்றப் போவதை எதிர்நோக்கி, அவரது காலத்திற்கும் முன்பாக அறுபது ஆண்டுகள் முன்னேறி இருந்தார் ‘ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.
நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் J.C. போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!
Information
!. Jagadish Chandra Bose – Wikipedia
2. Jagadish Chandra Bose – Biography, Facts and Pictures (famousscientists.org)

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276
“உழைப்பும் வறுமையும் ஒன்றிணையும் பொழுது அன்பும் கருணையும் அழையா விருந்தாளியாக நெஞ்சம் புகுந்து உள்ளம் உணர்த்தி வினை புரிகின்றன”
தொடக்கக்கால தமிழ்ச் சிறுகதை முயற்சிகளை உற்றுநோக்கும் போது சங்கர ராமின் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தனது ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர். இவரின் சிறுகதைப் பங்களிப்பும் முயற்சிகளும் எண்ணத்தக்கவையே. இதனைக் க.நா.சு. இவ்வாறு பதிவு செய்கிறார். “நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கர ராம், பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமர்சன ரீதியாக எனக்குத் தோன்றுவது, அவர் சிறுகதையில் சாதித்த அளவுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பதுதான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகுதூரம் போக வேண்டியதில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல்கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவை தான். பத்திரிக்கை தேவையையும் பணத்தேவையையும் காரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே உள்ள உந்துதலால் எழுதப்பட்டவை. அவர் முதல் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத் தான்” என்ற அடிப்படையிலும் சங்கர ராமின் சிறுகதைகளை இங்கே எண்ணிப் பார்க்கத் தேவை எழுந்துள்ளது.
ஆனந்த விகடன் 1964ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த இவரின் கதை ‘தனிப்பிறவி’. நேரடிக் கதை மொழியில் எழுதப்பட்ட இக்கதை பலவிதங்களில் சிறப்புகளைக் கொண்டது. காந்தியச் சிந்தனையும் சுதந்திரப் போராட்ட உணர்வும் தனிமனித ஒழுக்கமும் மேலோங்கிய காலக்கட்டத்தின் மனப்போக்கைக் கொண்டவர் இவர். கிராம வாழ்க்கையும் நகர வாழ்க்கையும் சந்திக்கும் வாழ்வாதாரப் புள்ளியில் இக்கதை நகர்ந்து செல்கிறது.
மரம் ஏறும் தொழில் செய்து வந்த ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் போராட்டமே இக்கதை. கிராமங்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை, நகரங்களைச் சார்ந்து மாற்றப்படும் போக்கை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான ஒரு குடும்பம் வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் ஒருவித சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது. நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் இருப்பதும் அதனை ஒழுங்குபடுத்த ஏற்படும் தேவையும் இவனுக்கு ஒரு வாழ்வியல் இருப்பைத் தருகிறது. இதைச் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.
அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனின் வாழ்க்கைநெறி, இங்கே சிந்திக்கத்தக்கது. உழைத்து வாழ வேண்டும், தன்மானத்துடன் இருக்க வேண்டும், உதவியைக் கேட்டுப் பெறக் கூடாது என்ற ஏழ்மையின் இலட்சியவாதச் சிறப்புகள் இவனிடம் காணப்படுகின்றன.
ஒருநாள் உழைப்பின் கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கிறது. இதனை எடுத்துக்கொண்டு களைப்புடன் மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ‘இன்று ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது. ரேஷன் கடையில் புழுங்கலரிசி போடுகிறார்கள். வாங்கி வந்துவிடு’ என்று கூறுகிறான். இதனைக் கேட்ட மனைவி உடனே, கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வேகமாகக் கிளம்புகிறாள். நடந்து சென்றால் நேரமாகும் என்பதால் பேருந்தில் சென்று ரேஷன் கடையை அடைகிறார்.
கடையில் நின்று அரிசி வாங்கும் போது அவள் வைத்திருந்த ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது தெரிகிறது. கண்களில் கண்ணீருடன் அருகில் இருப்பவர்களிடம் இதனைக் கூறுகிறார். இவளின் பரிதாபத்தைக் கண்டு அனைவரும் ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இவளது மனம் வீட்டில் கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணுகிறது. ‘கடின உழைப்பில் பெற்ற கூலியை இப்படி கவனமில்லாமல் தொலைத்துவிட்டோமே’ என்று எண்ணும்போது, அவளது மனம் வேதனை அடைகிறது. வருகின்ற காலங்களில் வயிறு நிறைய சாப்பிடலாம் என்று எண்ணிய எண்ணத்தில் இடி விழுந்தது போல ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது. அரிசி இல்லாமல் வீட்டிற்குச் செல்வதை நினைத்துத் தயங்கி நிற்கிறார். இவளின் துன்பத்தைக் கண்ட பெண்கள் அனைவரும் தங்கள் அரிசியில் இருந்து ஒரு பகுதியை இவளுக்குத் தந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் இதனைக் கணவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதால் அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிடுகிறாள்.
இதனைக் கேட்டு மற்ற பெண்கள் வியந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ரேஷன் கடையில் பொருள் வாங்கக் காத்திருக்கும் நண்பர்கள் இருவர், இதனைக் கண்டு அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நேரடியாகக் கொடுத்தால் கண்டிப்பாக இவள் வாங்க மாட்டாள் ஆகையால் ஏதேனும் வேறு வகையில் உதவ எண்ணினார்கள். இதன்மூலம் அவளிடம் பேச்சுக் கொடுத்து நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். பின்னர் நண்பர்களில் ஒருவன் அவளிடம் கூறுகிறான், ‘உன்னிடம் ஐந்து ரூபாய் திருடிவிட்டுப் போனவனை எனக்கு நன்றாகத் தெரியும், அவனிடம் நான் அந்த ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். இதோ என்னிடம் உள்ள வாரக் கூலியிலிருந்து ஐந்து ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான்.
அவளுக்கு மனது சமாதானம் அடைந்தாலும் அவனிடம் அவள் ‘உங்கள் பணத்தைத் தராமல் போய்விட்டால் என்ன ஆகும்’ என்று கேட்கிறாள். அவளின் மன ஓட்டத்தைக் கணித்துவிட்டு, ‘அவன் பாவம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டான், அவனை மன்னித்து விடவேண்டும் அவன் தராமல் இருக்கமாட்டான், இல்லை என்றால் அவர் ஜெயிலுக்குப் போக வேண்டும் எனவே கண்டிப்பாகத் தந்து விடுவான்’ என்று கூறி, அவளிடம் ஐந்து ரூபாயைத் தந்து அரிசி வாங்க சொல்கிறான். அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு அரிசியை வாங்கி நன்றியுடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.
நண்பனின் செயலைக் கண்டு வியந்து பாராட்டுகிறான். ‘எப்படி நீ இவ்வாறு சிந்தனை செய்தாய்’ என்று கேட்கிறார். அதற்கு ‘மற்றவர்கள் அரிசி தருவதாகக் கூறியும் மறுத்துவிட்டவள் பணம் தருவதாகச் சொன்னால் கேட்க மாட்டாள். அதனால் இப்படி ஒரு கதையைச் சொல்லி அவளுக்கு உதவி செய்தேன்’ என்றான். உடனே அவனது நண்பன் நீ மற்றவர்களைவிட ‘தனிப்பிறவி’டா என்று பாராட்டுகிறான். இவ்வாறு கதை முடிகிறது.
வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கதை முழுவதும் வந்து போகிறது. மக்கள் உழைக்கத் தயாராக இருந்த போதிலும் அவர்களின் உழைப்பு இங்கே நிலையற்றதாகப் போய்விடுகிறது. மனிதச் சாரம் மக்கள் மனத்திலிருந்து நீங்கி, பணத்தின் முக்கியத்துவமும் பணமதிப்புமே மனித மதிப்பு என்ற புதிய வாழ்வியல் கொள்கை மக்களை எவ்வாறு திக்குமுக்காட செய்கிறது என்பதை நேரடிக் கதைகூறல் மூலமாகக் கூறிச் செல்கிறார். தொடக்கக் காலத்தில் கதையின் மையப் பாத்திரங்கள் பெயரையோ, குணநலன்களையோ கொண்டு கதையின் தலைப்பு அமையும். ஆனால் இக்கதையில் இடையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளைக் கொண்டு கதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார் இவர்.
அதேபோல கதைக் கட்டமைப்பிலும் கதை தொடக்கத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைத் தாண்டி, பிறகு வரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமும் கதையின் மையத் தன்மையும் கொடுக்கப்பட்டுக் கதை நிறைவடைவது புதிய அணுகுமுறையாகும். எளிமையான சொற்கள், நேர்த்தியான கதைப்போக்கு, வாழ்க்கையின் இருபெரும் கூறுகளை முன்வைத்தல், சரிக்கும் தவறுக்குமான மென்மையான பகை, இயலாமையின் உச்ச கழிவிரக்கம், கருணையின் அவசியம், கண்ணியத்தின் இயல்பு என்று கதை நகர்ந்து செல்கிறது.
நீண்ட நிலவுடைமைச் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் இல்லாமல் போவதும் தனக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு நகரச் சமூகம் தன்னைப் பொருட்படுத்தாமல் நகர்ந்து தன்னை நிர்க்கதியாக நிறுத்துவதும் பணமே வாழ்வியல் தத்துவம் என்ற உள்ளுணர்வும் அதனை நோக்கிய வாழ்க்கைப்போக்கும் இவர் கதைகளில் மையமாக விளங்குகின்றன. தனிப்பிறவியும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றே. இன்றைக்கும் இவரின் கதைகளைத் தேடினாலும் கிடைக்காத அவலமே தொடர்கிறது. பேராசிரியர் பெருமாள் முருகனை நெறியாளராகக் கொண்டு ராஜசேகர் என்ற ஆய்வாளர் இவரின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை உணர உதவக்கூடும்.

நிர்மலா ராகவன்
எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசம். ஒருசிலருக்குத்தான் அவற்றிலிருந்து கற்கும் துணிச்சல் உண்டு.
பிறரோ, தவறு செய்வது தம் தோல்வியைக் குறிக்கும் என்று நாணுவார்கள். அதனாலேயே வெற்றி அவர்களைவிட்டு விலகிப் போய்விடும்.
கதை
ஆங்கிலத்தில் சிறுகதைப்போட்டி ஒன்று நடந்தது.
“நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டாள் என் சக ஆசிரியை. (அதற்குமுன், அதேபோன்ற வேறொரு போட்டியில் நான் பரிசு வாங்கி, எல்லா மொழி பத்திரிகைகளிலும் என் பெயர் வெளியானது என் அந்தஸ்தை உயர்த்தியிருந்தது).
என் பதில் அலட்சியமாக வந்தது: “கலந்துகொண்டேன். பரிசு கிடைக்கவில்லை”.
பக்கத்தில் அமர்ந்திருந்தவள் விழிகள் விரிய, சற்று அதிர்ச்சி அடைந்தாற்போல் இருந்தது, `இதையெல்லாம் ஒப்புக்கொள்வார்களா!’ என்பதுபோல்.
வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் அமைதி நிலைக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும்.
தவறு செய்யலாமா?
பள்ளியில் படிக்கையில், தவறான விடைக்கு, `பிழைதிருத்தம்’ என்று மூன்று முறை சரியான பதிலை எழுத வைப்பார்கள்.
அதிலும் தவறா?
ஐந்து முறை!
செய்த தப்பையே திரும்பத் திரும்பச் செய்வது அறிவீனம் என்று மறைமுகமாக உணர்த்தும் வழி இது.
தவறே செய்யாமல் இருக்கத்தான் யாரால் முடியும்? தவறு செய்ய அஞ்சுவதுதான் தவறு.
நமக்கு எல்லாமே தெரிந்திருந்தால், அதன்பின், கற்க என்ன இருக்கிறது!
கதை
நான்கு வயதுச் சிறுவனான குகனுக்குத் தாய் பாடம் சொல்லிக்கொடுக்க, அவன் பென்சிலால் எழுத ஆரம்பித்தான்.
“இது இப்படி இருக்கவேண்டும். ரப்பரால் அழித்துவிட்டுத் திரும்பவும் எழுது!” என்று அம்மா சொல்ல, அழ ஆரம்பித்தான்.
தான் ஒரு தப்பு செய்வதா!
`புத்திசாலி!’ என்று குடும்பத்தில் எல்லாரும் புகழ்ந்ததைக் கேட்டு வளர்ந்த பிள்ளை ஆயிற்றே!
அறியாமையால் பிழை செய்ய நேர்ந்தால், அதற்காக வருத்தமோ, வெட்கமோ அநாவசியம் என்று புரிந்தவள் அத்தாய்.
ஆகவே, மகன் ஏற்கும் விதத்தில் கூறினாள்: “பென்சிலையும் ரப்பரையும் காசு கொடுத்து, கடையில்தானே வாங்குகிறோம்? அந்தக் கடைக்காரர் அப்பாமாதிரி ஆபீஸ் போகமாட்டார். நாம்ப வாங்கினாதான் அவருக்குக் காசு கிடைக்கும். அவருடைய குழந்தைகள் சாப்பிட முடியும்”.
அவனைப்போன்ற குழந்தைகளின் நலனுக்காக என்று அவள் ஒப்பிட்டது குகனுக்குப் புரிந்தது.
அதன்பின்னரும் தப்புத் தப்பாக எழுதி, அழிக்க நேர்ந்தது. அதற்காக அவன் வருந்தவில்லை. கவனமாக இருக்கப் பழகிக்கொண்டான்.
வளர்ந்தபின்னர், நல்ல காரியங்களில் சிறக்க இக்குணம் உதவியது.
எப்போதாவது தவறு செய்தாலும், அளவுக்கு அதிகமாக அவன் வருந்தவோ, வெட்கவோ இல்லை. உடனுக்குடன் திருத்திக்கொண்டான்.
இக்குணத்தால் வாழ்க்கையில் உபயோகமானவற்றை அவனிடமிருந்து பிறர் கற்க முடிந்தது.
தவறு செய்வது மனிதனின் இயற்கை!
இந்தத் தாரக மந்திரத்தை சிலர் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.
ஒவ்வொரு முறையும் கணக்குப் பரீட்சையில் நிறைய பிழைகள் செய்துவிட்டு, “அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!” என்று, மிதப்புடன் தோள்களைக் குலுக்கிக்கொள்வார்கள் என் மாணவிகளில் சிலர்.
ஒவ்வொரு முறையும் செய்த தப்பையே செய்துகொண்டிருந்தால், அது கவனக்குறைவு, அலட்சியம்.
இப்படிச் செய்தால் என்ன?
செய்வது `தவறு’ என்று தெரிந்தே செய்பவர்கள் பலர். `கலிகாலம்!’ என்றோ, அவர்களால் நமக்கும் ஏதோ ஆதாயம் கிடைக்கிறதே என்றோ, பிறர் ஏற்றாலும், விளைவு வினையாகத்தான் முடியும்.
கதை (அண்மையில் படித்தது)
லண்டனில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்த இளைஞன் அவன்.
சிங்கப்பூரில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் காமெரா வைத்து, இளம்பெண்களைப் படமெடுத்தான். ஓரிரு முறை அப்படிச் செய்தும், மாட்டிக்கொள்ளாது போனதில் துணிச்சல் அதிகரித்தது.
ஏழாவது முறை பிடிபட, குற்றத்தை ஒத்துக்கொண்டான். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம்.
சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வது அறிவீனம் – அது எவ்வளவுதான் கிளர்ச்சி ஊட்டுவதாக அமைந்தாலும். அறிவாளியான அவன் இதை ஏனோ உணராமல் போனான்!
புத்தி தீய வழியில் போனதால், அவனுடைய கல்வி, எதிர்காலம் இரண்டுமே பாழ்.
பழிக்குப் பழி!
வீம்புடன், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தமது வாழ்க்கையுடன், பிறருடையதையும் வீணாக்கிவிடுவார்கள்.
கதை
இளம் மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை மாதுவால்.
தன்னைப்போலவே அவளும் நோகவேண்டும், அதுதான் அவளுக்குப் பாடம் கற்பிக்கும் வழி என்று கருதி, அவளுக்குத் தெரிந்தே பிற பெண்களுடன் உறவுபூண்டான்.
எத்தனை வயதாகியும், அவனுடைய ஆத்திரம் அடங்கவில்லை. மனைவிபோல் இல்லாத, உலகம் தெரியாத பெண்களை மயக்குவதைக் கலையாகக் கற்றான்.
அந்த நடத்தையால் சமூகத்தில் அவனுக்கு இருந்த மதிப்பு அறவே குலைந்தது. உறவினர்கள் அவனைத் தவிர்த்தார்கள்.
தன் தீய நடத்தைக்கு ஒரு காரணம் கற்பித்தான்: `எனக்கு மனைவி சரியில்லை!’
ஒரு பிழையை இன்னொன்றால் சரிசெய்ய முடியுமா?
தெரியாமல் பிழை
தெரியாமல் செய்த தவற்றுக்காக, தன்னையே வருத்திக்கொள்வதால் என்ன பயன்?
கதை
அந்த வீட்டுக்கூரைமேல் இருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது ஒரு குருவிக்குஞ்சு.
அதை மிதித்துவிட்ட சிறுமி லதா, தன் அஜாக்கிரதையால் ஓர் உயிர் போய்விட்டதே என்று அழ ஆரம்பித்தாள்.
`நடந்தது உன் தப்பு இல்லை,’ என்று தாய் எத்தனைதான் சமாதானப்படுத்தியும், அவள் மனம் அடங்கவில்லை.
அதன்பின், இறந்த எந்த பிராணியைக் கண்டாலும், தான் செய்த `குற்றம்’ நினைவில் எழ, பயம், அழுகை.
பெரியவளாகி, நன்கு படித்து, வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தபோதும், `தாய்க்குருவி என்னைச் சபித்துவிட்டது!’ என்பாள். என்றோ எழுந்த சோகமும், குற்ற உணர்வும் மறையவேயில்லை. அவற்றைப் போக்க என்னென்னவோ மருந்துகள்!
தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றுக்காக நம்மையே தண்டித்துக்கொள்ளாது, மன்னிக்க வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி பறிபோய்விடும்.
ஆண்-பெண் உறவில் வெற்றி, தோல்வி
கதை
ஏழையாக இருந்தாலும், சந்திரன் அறிவாளி. பணக்காரர் ஒருவர் தன் மகளை அவனுக்கு மணமுடித்து, மேற்படிப்புக்கும் உதவினார்.
கணவனை விலைக்கு வாங்கிவிட்ட பெருமிதம் அவன் மனைவி தாராவிற்கு. பலர் முன்னிலையில் அவனை அவமதிப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள்.
`மாறுவாள்,’ என்ற நம்பிக்கையுடன், முதலில் பொறுத்துப்போன சந்திரன் சில வருடங்கள் கழிந்ததும் அவளை விவாகரத்து செய்தான்.
அழகிலும், பொருளாதாரத்திலும் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருந்த பெண்ணை மணந்தது தான் செய்த தவறு என்று தோன்றிப்போக, தாராவைப்போல் இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தான்.
“குண்டாக இருக்கிறாளே!” என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டு, முகத்தைச் சுளித்தார்கள்.
சந்திரன் சிரித்துக்கொண்டான்.
தான் தேடி, மணந்த பெண் குண்டுதான். ஆனால், அன்பானவள். எல்லாவிதத்திலும் அவனுக்குப் பக்கபலமாக இருந்தாள்.
பெண்கள் காதல் தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை.
கதை
முப்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் இருந்தாள் என் சக ஆசிரியை வித்யா.
`இவ்வளவு அழகான பெண்ணை ஆண்கள் எப்படி விட்டுவைத்திருக்கிறார்கள்!’ என்ற ஆச்சரியம் எனக்குள் எழ, அவளிடமே கேட்டேன்.
“ஆண்களை நம்பவே பயமாக இருக்கிறது,” என்றாள் வித்யா. ஒருவனைக் காதலித்து, அவன் ஏமாற்றிவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தாள், தான்தான் குற்றம் புரிந்ததுபோல்.
“அவனைப்போல் பகட்டாகவோ, கலகலப்பாக இல்லாது, அமைதியாக, ஆழமாக இருக்கும் ஒருவர் உனக்கு வாய்ப்பார். அந்த வாழ்க்கையிலேயே நிறைவு கிடைத்துவிடும், பார்!” என்றேன், ஆறுதலாக.
தவறு செய்தால் என்ன?
அதையே திரும்பத் திரும்பச் செய்யாமல் இருப்பதுதானே புத்திசாலித்தனம்!

சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் மாணவரும் ஆய்வாளரும் மற்றும் விருந்துநிலை விரிவுரையாளருமாய்ப் பணியாற்றியவர் முனைவர் சி. நல்லதம்பி. இவர் பின்னர் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றினார். சமீபத்தில் மறைந்த அவரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து நல்லாசிரியர் சி. நல்லதம்பி அறக்கட்டளையை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நிறுவியுள்ளனர். இதன் முதல் உரையை பேரா இ. முத்தையா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
பேரா. இ. முத்தையா பற்றி
பேராசிரியர். இ. முத்தையா மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் மேனாள் பேராசிரியரியராக பணியாற்றினார். தமிழ் இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், மானுடவியல், வெகுஜனப் பண்பாடு, நிகழ்த்துக்கலைகள், நவீன திரைப்பட அவதானிப்புகள் முதலான பல்வேறு விதமான கோட்பாட்டுத்துவ பின்புலத்தி்ல் இருந்து பணி செய்து வருபவர்.
இவர் எழுதிய சில நூல்கள்
உரையை பற்றி
நிகழ்த்துதல் என்பது மனிதரின் மொழிசார் நடத்தை முறை. நிகழ்த்துநர், பங்கேற்பாளர், வாய்மொழி அல்லது பேச்சு மொழி, உடல்மொழி, மெய்ப்பாடு, இடம், காலம், பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றின் சேர்க்கையான நிகழ்த்துதற் சூழல் என அனைத்தின் கலவையே நிகழ்த்துதல். இத்தகைய நிகழ்த்துதலின் மெய்யியலைத் தொல்காப்பியர் கட்டமைத்துள்ள முறையை விவாதிப்பதே உரையின் நோக்கம்.
மொழியியல் ஆய்வுப் போக்குகள் சமூகப் பண்பாட்டுச் சூழல், அரசியல் நிலைமைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறி வந்திருக்கின்றன. புளூம்பீல்டு (Leonard Bloomfield) என்பாரின் அமைப்பியல் மொழியியலிலிருந்து தொடங்கி மொழியின் மெய்யியல் ஆய்வு வரை பல்வேறு பரிமாணங்களில் மொழியியல் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மெய்யியல் திருப்பம் (Philosophic Turn) என்பது மானிடவியல் ஆய்வாளர் மாலினோஸ்கியின் சூழல்சார் பொருண்மையியல் (Pragmatics) ஆய்வு முறையால் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மொழியியல் ஆய்வு மெய்யியல் சாலையில் பயணத்தைத் தொடங்கியது. ஜெ.எல்.ஆஸ்டினின் “பேச்சுச் செயல் கோட்பாடு”( Speech Act Theory / Performative Analysis), ஹைச்.பி.கிரைஸின் “உரையாடல் உள்ளுறைக் கோட்பாடு” (Conversational Implicature Theory), பிரிஜ் (Frege), ரஸ்ஸல் (Russel), கார்னாப் (Carnap) போன்றோரின் “அளவையியல் மொழியியல்” (Logical Linguistics) என மொழியியல் ஆய்வு மெய்யியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க மெய்யியல் ஆய்வாளர்கள் பலர் மொழியியலை நோக்கி வந்தனர். இவர்களுள் விட்ஜென்ஸ்டின், ஹேபர்மாஸ் (Communicative Action Theory) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விட்ஜென்ஸ்டின் ஆய்வினை மெய்யியல் ஆய்வாளர்கள் மொழியியல் திருப்பம் (Linguistic Turn) எனக் குறிப்பிடுவர்.
மேற்குறிப்பிட்ட மொழியியல் மெய்யியலார், மெய்யியல் மொழியியலார் ஆகியோரைத் தொல்காப்பியரோடு ஒப்பிடும்போது அனைவரின் கருத்துக்களிலிருந்து தொல்காப்பியர் வேறுபடுவதை அறியலாம். அவர் நிகழ்த்துதல் மெய்யியலைக் கட்டமைத்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தகைய மெய்யியலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே உரையின் நோக்கம்.