கதையும் மொழிதலும் – 7: சங்கர ராமின் ‘தனிப்பிறவி’
முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276
“உழைப்பும் வறுமையும் ஒன்றிணையும் பொழுது அன்பும் கருணையும் அழையா விருந்தாளியாக நெஞ்சம் புகுந்து உள்ளம் உணர்த்தி வினை புரிகின்றன”
தொடக்கக்கால தமிழ்ச் சிறுகதை முயற்சிகளை உற்றுநோக்கும் போது சங்கர ராமின் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தனது ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர். இவரின் சிறுகதைப் பங்களிப்பும் முயற்சிகளும் எண்ணத்தக்கவையே. இதனைக் க.நா.சு. இவ்வாறு பதிவு செய்கிறார். “நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கர ராம், பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமர்சன ரீதியாக எனக்குத் தோன்றுவது, அவர் சிறுகதையில் சாதித்த அளவுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பதுதான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகுதூரம் போக வேண்டியதில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல்கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவை தான். பத்திரிக்கை தேவையையும் பணத்தேவையையும் காரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே உள்ள உந்துதலால் எழுதப்பட்டவை. அவர் முதல் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத் தான்” என்ற அடிப்படையிலும் சங்கர ராமின் சிறுகதைகளை இங்கே எண்ணிப் பார்க்கத் தேவை எழுந்துள்ளது.
ஆனந்த விகடன் 1964ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த இவரின் கதை ‘தனிப்பிறவி’. நேரடிக் கதை மொழியில் எழுதப்பட்ட இக்கதை பலவிதங்களில் சிறப்புகளைக் கொண்டது. காந்தியச் சிந்தனையும் சுதந்திரப் போராட்ட உணர்வும் தனிமனித ஒழுக்கமும் மேலோங்கிய காலக்கட்டத்தின் மனப்போக்கைக் கொண்டவர் இவர். கிராம வாழ்க்கையும் நகர வாழ்க்கையும் சந்திக்கும் வாழ்வாதாரப் புள்ளியில் இக்கதை நகர்ந்து செல்கிறது.
மரம் ஏறும் தொழில் செய்து வந்த ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் போராட்டமே இக்கதை. கிராமங்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை, நகரங்களைச் சார்ந்து மாற்றப்படும் போக்கை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான ஒரு குடும்பம் வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் ஒருவித சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது. நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் இருப்பதும் அதனை ஒழுங்குபடுத்த ஏற்படும் தேவையும் இவனுக்கு ஒரு வாழ்வியல் இருப்பைத் தருகிறது. இதைச் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.
அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனின் வாழ்க்கைநெறி, இங்கே சிந்திக்கத்தக்கது. உழைத்து வாழ வேண்டும், தன்மானத்துடன் இருக்க வேண்டும், உதவியைக் கேட்டுப் பெறக் கூடாது என்ற ஏழ்மையின் இலட்சியவாதச் சிறப்புகள் இவனிடம் காணப்படுகின்றன.
ஒருநாள் உழைப்பின் கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கிறது. இதனை எடுத்துக்கொண்டு களைப்புடன் மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ‘இன்று ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது. ரேஷன் கடையில் புழுங்கலரிசி போடுகிறார்கள். வாங்கி வந்துவிடு’ என்று கூறுகிறான். இதனைக் கேட்ட மனைவி உடனே, கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வேகமாகக் கிளம்புகிறாள். நடந்து சென்றால் நேரமாகும் என்பதால் பேருந்தில் சென்று ரேஷன் கடையை அடைகிறார்.
கடையில் நின்று அரிசி வாங்கும் போது அவள் வைத்திருந்த ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது தெரிகிறது. கண்களில் கண்ணீருடன் அருகில் இருப்பவர்களிடம் இதனைக் கூறுகிறார். இவளின் பரிதாபத்தைக் கண்டு அனைவரும் ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இவளது மனம் வீட்டில் கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணுகிறது. ‘கடின உழைப்பில் பெற்ற கூலியை இப்படி கவனமில்லாமல் தொலைத்துவிட்டோமே’ என்று எண்ணும்போது, அவளது மனம் வேதனை அடைகிறது. வருகின்ற காலங்களில் வயிறு நிறைய சாப்பிடலாம் என்று எண்ணிய எண்ணத்தில் இடி விழுந்தது போல ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது. அரிசி இல்லாமல் வீட்டிற்குச் செல்வதை நினைத்துத் தயங்கி நிற்கிறார். இவளின் துன்பத்தைக் கண்ட பெண்கள் அனைவரும் தங்கள் அரிசியில் இருந்து ஒரு பகுதியை இவளுக்குத் தந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் இதனைக் கணவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதால் அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிடுகிறாள்.
இதனைக் கேட்டு மற்ற பெண்கள் வியந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ரேஷன் கடையில் பொருள் வாங்கக் காத்திருக்கும் நண்பர்கள் இருவர், இதனைக் கண்டு அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நேரடியாகக் கொடுத்தால் கண்டிப்பாக இவள் வாங்க மாட்டாள் ஆகையால் ஏதேனும் வேறு வகையில் உதவ எண்ணினார்கள். இதன்மூலம் அவளிடம் பேச்சுக் கொடுத்து நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். பின்னர் நண்பர்களில் ஒருவன் அவளிடம் கூறுகிறான், ‘உன்னிடம் ஐந்து ரூபாய் திருடிவிட்டுப் போனவனை எனக்கு நன்றாகத் தெரியும், அவனிடம் நான் அந்த ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். இதோ என்னிடம் உள்ள வாரக் கூலியிலிருந்து ஐந்து ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான்.
அவளுக்கு மனது சமாதானம் அடைந்தாலும் அவனிடம் அவள் ‘உங்கள் பணத்தைத் தராமல் போய்விட்டால் என்ன ஆகும்’ என்று கேட்கிறாள். அவளின் மன ஓட்டத்தைக் கணித்துவிட்டு, ‘அவன் பாவம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டான், அவனை மன்னித்து விடவேண்டும் அவன் தராமல் இருக்கமாட்டான், இல்லை என்றால் அவர் ஜெயிலுக்குப் போக வேண்டும் எனவே கண்டிப்பாகத் தந்து விடுவான்’ என்று கூறி, அவளிடம் ஐந்து ரூபாயைத் தந்து அரிசி வாங்க சொல்கிறான். அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு அரிசியை வாங்கி நன்றியுடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.
நண்பனின் செயலைக் கண்டு வியந்து பாராட்டுகிறான். ‘எப்படி நீ இவ்வாறு சிந்தனை செய்தாய்’ என்று கேட்கிறார். அதற்கு ‘மற்றவர்கள் அரிசி தருவதாகக் கூறியும் மறுத்துவிட்டவள் பணம் தருவதாகச் சொன்னால் கேட்க மாட்டாள். அதனால் இப்படி ஒரு கதையைச் சொல்லி அவளுக்கு உதவி செய்தேன்’ என்றான். உடனே அவனது நண்பன் நீ மற்றவர்களைவிட ‘தனிப்பிறவி’டா என்று பாராட்டுகிறான். இவ்வாறு கதை முடிகிறது.
வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கதை முழுவதும் வந்து போகிறது. மக்கள் உழைக்கத் தயாராக இருந்த போதிலும் அவர்களின் உழைப்பு இங்கே நிலையற்றதாகப் போய்விடுகிறது. மனிதச் சாரம் மக்கள் மனத்திலிருந்து நீங்கி, பணத்தின் முக்கியத்துவமும் பணமதிப்புமே மனித மதிப்பு என்ற புதிய வாழ்வியல் கொள்கை மக்களை எவ்வாறு திக்குமுக்காட செய்கிறது என்பதை நேரடிக் கதைகூறல் மூலமாகக் கூறிச் செல்கிறார். தொடக்கக் காலத்தில் கதையின் மையப் பாத்திரங்கள் பெயரையோ, குணநலன்களையோ கொண்டு கதையின் தலைப்பு அமையும். ஆனால் இக்கதையில் இடையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளைக் கொண்டு கதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார் இவர்.
அதேபோல கதைக் கட்டமைப்பிலும் கதை தொடக்கத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைத் தாண்டி, பிறகு வரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமும் கதையின் மையத் தன்மையும் கொடுக்கப்பட்டுக் கதை நிறைவடைவது புதிய அணுகுமுறையாகும். எளிமையான சொற்கள், நேர்த்தியான கதைப்போக்கு, வாழ்க்கையின் இருபெரும் கூறுகளை முன்வைத்தல், சரிக்கும் தவறுக்குமான மென்மையான பகை, இயலாமையின் உச்ச கழிவிரக்கம், கருணையின் அவசியம், கண்ணியத்தின் இயல்பு என்று கதை நகர்ந்து செல்கிறது.
நீண்ட நிலவுடைமைச் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் இல்லாமல் போவதும் தனக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு நகரச் சமூகம் தன்னைப் பொருட்படுத்தாமல் நகர்ந்து தன்னை நிர்க்கதியாக நிறுத்துவதும் பணமே வாழ்வியல் தத்துவம் என்ற உள்ளுணர்வும் அதனை நோக்கிய வாழ்க்கைப்போக்கும் இவர் கதைகளில் மையமாக விளங்குகின்றன. தனிப்பிறவியும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றே. இன்றைக்கும் இவரின் கதைகளைத் தேடினாலும் கிடைக்காத அவலமே தொடர்கிறது. பேராசிரியர் பெருமாள் முருகனை நெறியாளராகக் கொண்டு ராஜசேகர் என்ற ஆய்வாளர் இவரின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை உணர உதவக்கூடும்.
