குறளின் கதிர்களாய்…(362)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(362)
இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட் டதில்.
– திருக்குறள் – 1063 (இரவச்சம்)
புதுக் கவிதையில்...
இல்லாமையால் வரும்
வறுமைத் துன்பத்தை
ஓட்டிட
உழைக்கும் முயற்சியைக்
கைவிட்டுப் பிறரிடம்
கைநீட்டி இரக்கலாம்
என்று எண்ணும்
கொடுமையிலும் கொடுமை
வேறில்லை…!
குறும்பாவில்...
வறுமைத் துன்பம் போக்கிட
உழைக்காமல் இரந்து பிழைக்கலாமென
எண்ணுதல் கொடுமையிலும் கொடுமை…!
மரபுக் கவிதையில்...
இல்லை யென்னும் வறுமையினை
இல்லா தாக்கும் வழியதுவாய்
நல்ல பணியாம் முயற்சியினை
நாடா திருந்தே சோம்பலாலே
பொல்லா வழியாம் இரந்திடவே
போக யெண்ணும் நிலையதுதான்
எல்லா வகையாம் கொடுமையிலும்
ஏற்க வியலாக் கொடுமையாமே…!
லிமரைக்கூ...
வறுமை போக்க வழியே
உழைப்ப தென்பதை மறந்தே இரந்திட
எண்ணுதல் கொடுமையாம் பழியே…!
கிராமிய பாணியில்...
பயமிருக்கணும் பயமிருக்கணும்
எரந்து வாழப் பயமிருக்கணும்,
வறுமயப் போக்கிற வழியா
எரந்து வாழப் பயமிருக்கணும்..
வாழ்க்கயில வரும்
வறுமத் துன்பத்தப் போக்க
ஒழச்சிவாழப் பாக்காம
அடுத்தவங்கிட்ட
எரந்து வாழும் எண்ணம்வந்தா
அது
கொடுமயிலயெல்லாம் பெரிய
கொடுமதானே..
அதால
பயமிருக்கணும் பயமிருக்கணும்
எரந்து வாழப் பயமிருக்கணும்,
வறுமயப் போக்கிற வழியா
எரந்து வாழப் பயமிருக்கணும்…!
