கைக்கடிகாரம்

பாஸ்கர் சேஷாத்ரி

அந்தப் பள்ளி நாட்களில் எனக்குக் கைக்கடிகாரம் மீது ஒரு மோகம். அதனைக் கையில் கட்டிக்கொண்டு நடப்பது போல எப்போதும் ஓர் அதீதக் கற்பனை. கையில் அணிந்துகொண்டால் ஒருவர் ஒசத்தி என்ற எண்ணம், அப்போதே மனதில் இருந்து இருக்கிறது. அப்போது வெளிநாட்டுக் கைக்கடிகாரம் மிகப் பிரசத்தி. பேவர் லூபா என்று ஒரு வகை இதில் மிக உயர்வு எனச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். வட்ட வடிவில், சதுரத்தில் எனப் பல வகை.

இது தாழ்வு மனப்பான்மையால் எழுந்த ஒரு வகையான எண்ணம். அலங்காரமான தோற்றம் தான் சமூகத்தில் மதிப்புக் கொடுக்கும் ஒரு உபகரணம் என்பது அப்போதைய கணிப்பு . இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குணம். பெருமை தேடும் புத்தி. அங்கீகாரம் தேடும் சிந்தனை என்ற விஷயம். என்னைப்  பார்த்து, தம்பி, மணி என்ன என ஒருவர் கேட்க வேண்டும் என்றும் அதற்கு நான்  அலட்டலாகப் பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் தான் அப்போது  மேலோங்கி நின்றது.  அதுவும் கொஞ்ச நாள், அதற்கு பிரவுன் பட்டை, கொஞ்ச நாள் கருப்பு என நிறம் மாற்றி அணிய வேண்டும் என்று ஆசை வேறு.

பறத்தல் மனசு. தரையில் தங்காது.  கைக்கடிகாரம் கட்டின நாள் முதல் விஷயம் இருக்கிறதோ  இல்லையா கையை உயர்த்தி மணி பார்ப்பது ஒரு சுகம். ஒரு புத்தகம் தராத புத்துணர்ச்சி. இது தேற்றிக்கொள்ளும் சிந்திப்பு  அது எப்படி ஊடுருவி இருக்கிறது என்பது இப்போது தான் புரிகிறது. வாழ்க்கை, அலட்டலில் இல்லை. அமைதியில் இருக்கிறது. அங்கீகாரத்தில் இல்லை. உள்ளத்தின் உள்ளே செல்வதில் என்பது தான் எவ்வளவு பெரிய உண்மை?

உண்மைகள் புரிவது ஒரு பெரிய விஷயம் இல்லை. அது அந்தந்த நேரத்தில் புரிய வேண்டும். தாமதமாய்ப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாமால் இருப்பதும் ஒன்றே. எந்த இயல்புக்கு ஒட்டாத செய்கையும், நாள் தாங்காது . அவசரத்திற்கு மணி பார்க்க, பின்னர் சுவர்க் கடிகாரம் தான் சரி என்ற நிலைக்கு மனம் தள்ளப்பட்டது. பிறகு ஒரு கனமான கைக்கடிகாரம் மேல் ஆசை வந்தது. கொஞ்ச நாளில் அதுவும் விட்டுப் போய், அலங்காரமான பொருள் வந்தும் வாட்ச் மீது இருந்த ஆசை சுத்தமாக இன்று இல்லை. ஒரு பொருளை அடைந்து பின்னர் தெளிவு பெற்று, அதனை விட்டு அகல்வது என்பது ஒரு முதிர்ச்சி. அதன் பக்கம் போகாமலே அண்டாமலே நகர்வது இன்னொரு வகை. ஒவ்வொரு தெளிவுக்கும் ஓர் அனுபவம் வேண்டும் என நினைப்பதே பெரும் ஏமாற்று.

வாழ்வை உப்புக் காகிதம் வைத்துத் தேய்ப்பது போல உரசி உரசிப் பார்த்தால் தேய்க்கப்பட்ட பொருளும் தேய்த்த காகிதமும் காணாமல் போய் நினைவு மட்டும் அசை போட்டுக்கொண்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.