Blog

  • கன்னி அவளெங்கே?

    -சரஸ்வதி ராசேந்திரன்

    மாலைமறை கதிரவனில் நிறமெடுத்துப்
    பல்லவர் சிற்பமென உருவெடுத்துப்
    பைங்கிளியின் அலகினில் இதழெடுத்துப்
    பேச்சினியிலே அமுதச்சுவை படைத்தாள்
    கண்ணை யுறுத்தும் மலை முகடெனவே
    மார்பின்வளம் கொழிக்கவே நின்றாள்
    ஒடிந்திடும் புது நாணலிலே
    வளைந்திடும் இடை  படைத்தாள்
    வந்தென்மார் பினில்முகம் புதைத்தாள்
    எழுந்தவளைத் தழுவச் சென்றேன்
    கன்னி அவளைக் காணவில்லை!
    கன்னி அவளெங்கே சென்றாள்?
    கனவினிலே நான்கண்ட கன்னியவளைக்
    கருத்தினிலே கொண்டு எழுத்தில்   வடித்திட்டேன்!

     

    Share
  • கவி கொள்ளும் தமிழ்!

    சுரேஜமீ

     

     உன்னை அறிந்தால் – வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி

    கவிஞர்களைக் காலம் தன் கரங்களால் இழுத்துச் செல்லும் என்றால், கவி கொள்ளும் தமிழ் எவ்வாறு இருக்கவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்!

    அத்தகைய வகையில், கம்பன் காவியத்தைத் தொட்ட என் எண்ணங்கள், இன்று அவன் சேய்; அன்னைத் தமிழ் தந்த தங்கக் குழந்தை; அடியேனின் தமிழுக்கு அகராதி, என்றும் நான் போற்றும், ஏழைப் பங்காளன், ஏமாற்றும் உலகில், எவரையும் மாற்றும் கவி பாடிய கண்ணதாசனின் ஒரு பாடல்,

    எப்படி முக்காலத்தையும் முத்தமிழால் இணைக்கிறது என்பதை வளரும் தலைமுறைக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்!

    முத்தையா கொடுத்த முத்தான பாடல் இது!

    கடந்த காலம்:
    தமிழகத்தை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் வீரத்தையும், தமிழனின் தீரத்தையும் ஒருசேர, இரு வரிகளில் சொல்லிவிட்டானே!

    பாடல் வரிகளைப் படியுங்கள்;

    கனக விசயரின் முடித்தலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேரமகன்;
    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
    இடைபட வாழ்ந்தான் பாண்டியனே!

    இருநூறு நாட்களுக்கு மேல், பள்ளியில் பாடமாகப் படித்து, ஒரு நாள் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தும் மாணவனுக்கு, ஒரு பாடலில், வரலாற்றைச் சொல்லும் வல்லமை, கவிஞனுக்கு மட்டுமே உண்டு என்பதை மறுக்க முடியாது!

    நிகழ்காலம்:
    ஒரு குழந்தை எப்படி வளரவேண்டும்? எதை நாம் கொடுக்கிறோமோ, அதுவாகத்தான் ஆகிறோம் என்கிறது வேத நூல்கள்! ஒவ்வொரு கருவின் பிறப்பிடமும் ஒரு தாயாக இருக்கும்பொழுது, அந்தத் தாய், தன் கருவை எப்படி வளர்க்கிறாள் என்பதையும். கருவில் உருவான உன்னத படைப்பு என்ன செய்யும் என்பதையும் விளக்குகிறான்

    அடுத்த இரு வரிகளில்……

    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை;
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை!

    என்ன ஆழமான வார்த்தைகள்! வாழ்வின் அடித்தளத்தை எவ்வளவு உறுதியாக வடிக்கின்றான் கவிஞன்? இவைகள் தந்த வாழ்க்கை என்றாவது சோர்வாகுமா? நிச்சயமாக இருக்காது! இருந்தால், அது தமிழாக இருக்க முடியாது!!

    வருங்காலம்:
    இப்படி வரலாறும்; வளரும் முறையும் இருந்தால், வருங்காலம் உன்னை வாழ்த்தி வரவேற்கும் என்பதில் ஐயமில்லை!

    இதோ அந்த வரிகள்…..

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்!

    ஆக, காலம் உங்களைத் தாங்கிச் செல்லவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

    1. உங்கள் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பெற்றோர் கூறக் கேட்டு அறியுங்கள்!

    2. உங்கள் பெற்றோர்கள், உங்களுக்காகச் செய்யும் தியாகங்களைப் போற்றுங்கள்!

    3. நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுங்கள்!

    நிச்சயம் வரலாறு தன் பக்கங்களை, உங்களால் நிரப்பக் காத்திருக்கிறது!

    கவியரசரைப் பற்றி எண்ணும்போதெல்லாம், என் எண்ணம் ஊற்றெடுக்கும்! அப்படி ஒருவேளையில் எழுதியது….

    kannadasanமுத்தையா
    எனும் கடலில்
    மூழ்கும் போதெல்லாம்
    எனக்குமூச்சு
    முட்டுவதே இல்லை!

    ஏன் தெரியுமா?

    முத்தமிழே
    முத்தமிட்டால்
    மூச்சேது?
    பேச்சேது?

     

     

     

    அன்புடன்
    சுரேஜமீ

     

     

     

     

    http://kksr-aurosun.blogspot.com/

    Share
  • அம்மம்மா … தம்பி என்று நம்பி …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    sivaji

     

    Rajapart-Rangadurai-Movie-Posterவிடை சொல்ல முடியாத வினாக்கள் … வாழ்க்கையில் நடுக்கத்தை ஏற்படுத்தும்!

    விடை இருந்தும் வராமல் இருப்பது – பாசத்தில் நடக்கும்! உறவுகள் துடிக்கும்!!

    அன்பு என்றால் என்ன விலை என்றாகிப் போய்விட்ட பூமியிலே அண்ணன் எங்கே – தம்பி எங்கே?

    பாசத்தின் பரிதவிப்பு – பாடலிலே உயிர்த்துடிப்பாய் ராஜபார்ட் ரங்கதுரையில் …

    ஒரு உச்சக்கட்டக் காட்சி!!

    கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது …
    அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது …
    அது பாசமன்றோ … இது வேஷமன்றோ …

    இசைவடிவம் தந்திருக்கும் மெல்லிசை மன்னருக்கு ராஜகிரீடம் சூட்ட வேண்டும்!

    பாவங்களையும் தான் கலந்த குரல் எடுத்து தந்திருக்கும் டி.எம்.எஸ் …

    நடிப்பின் இமயமெனில் அது நடிகர்திலகம் மட்டும்தான் என பரிணமிக்க வைத்திருக்கும் இயக்குனர்.

    பி.மாதவனின் இயக்கத்தில் … இதோ …

    அம்மம்மா …
    தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தான்
    தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
    அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
    (அம்மம்மா)

    “கையில் வைத்து காத்திருந்தால்
    காலடியில் காத்திருக்கும்
    நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
    இதில் சொந்தமின்றி பந்தமின்றி
    வந்த வழி நினைவுமின்றி
    பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு”

    ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
    நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
    அது நாடகமா … இது நாடகமா …
    அது நாடகமா … இது நாடகமா …
    இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே
    நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே
    (அம்மம்மா)

    “தங்கை என்னும் இளைய கன்று
    தாய் வீடு வந்ததென்று
    என்னுடைய நாடகத்தில் காட்சி
    அவள் கொண்டவனை பிரிந்து வந்து
    கோலம் கொண்டு நிற்பதனை
    கண்டதற்கு இன்னொருவன் சாட்சி”

    கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
    அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
    அது பாசமன்றோ … இது வேஷமன்றோ …
    அது பாசமன்றோ … இது வேஷமன்றோ …
    அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
    இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ
    (அம்மம்மா)
    ………………………………………………………………………………………………….

    திரைப்படம்: ராஜபார்ட் ரங்கதுரை (1973)
    வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
    காணொளி: https://youtu.be/LAvh6WYCdjU

    https://youtu.be/LAvh6WYCdjU

    Share
  • சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xcVwLrAavyA

    http://science.howstuffworks.com/environmental/global-warming-videos-playlist.htm

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ-urKdAsvs

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GyZDf3kMvwo

    http://video.nationalgeographic.com/video/101-videos/global-warming-101

    http://video.nationalgeographic.com/video/greenhouse-gases

    http://study.com/academy/lesson/greenhouse-gases-and-the-enhanced-greenhouse-effect.html

    http://study.com/academy/lesson/fossil-fuels-greenhouse-gases-and-global-warming.html

    http://study.com/academy/lesson/global-warming-atmospheric-causes-and-effect-on-climate.html

     Picture -10

    பூகோளம் நோயில் .. !

    நோய் பீடித்துள்ளது
    பூகோளத்தை !
    குணமாக்க
    மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் பல்வேறு !
    கரங் கோத்துக் காப்பாற்ற
    வர வேண்டும்
    பல்லறிஞர் !
    சிந்தனை யாளர் பங்கெடுப்பு,
    எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பு,
    செல்வந்தர் நிதி அளிப்பு,
    புவிமாந்தர்
    கூட்டு ழைப்பு யாவும்
    தேவை ! தேவை ! தேவை !

    ஜெஃப்ரி குளூகர், 
    டைம் வார இதழ் மூத்த எழுத்தாளர்
    [Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

    +++++++++++++

    Picture -9

    சூட்டு யுகம் வருகுது 

    சூடு காலம் வருகுது !
    புவிக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் வெப்பம்,
    நீர் மட்டம் ஏறி
    கரை நகர் மூழ்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி
    வெப்பம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின்
    கண்ணை ஒன்றாய்ப்
    பிதுக்கப் போகுது !

    +++++++++++++

    Picture -11

    2013 ஆண்டில் அமெரிக்கா வெளியாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களில் CO2  வாயுவின் கொள்ளளவு

    சமீபத்திய அறிவிப்பின்படி தொழில்துறைகள் மிகுந்த அமெரிக்க நாடு 2013 ஆண்டு வெளியேற்றிய கிரீன்ஹவுஸ் வாயுக்களில் CO2 வாயுவின் நிறை மட்டும் 6,673 மில்லியன் டன் என்று தெரிகிறது.  பெரும்பான்மை வாயுக்கள் உயிரினத் தொடர் வசிப்புக்குப் பூமியில் சூரிய வெப்பத்தை உள்ளடக்கி உதவினாலும்,  அளவு அதிகமானால், வெப்ப அடைப்பு மிகையாகி, உயிரின அழிவுக்கும் வழி வகுக்குகிறது.   அப்படி அடைபடும் வாயுக்களில் பாதகம் மிகையாகச் செய்பவை மூன்றுவித வாயுக்கள் : கார்பன்டையாக்சைடு [CO2], மீதேன் [CH4], நைட்டிரஸ் ஆக்சைடு. [N2O]. இன்றைய சூழ்வெளி வாயுக் கோளத்தில் தொழிற்துறை யுகத்துக்கு [1840] முன்பு இருந்ததை விட, தற்போது 32% மிகையாக CO2 வாயு பரவி யுள்ளது.  அரை மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இருந்ததை விட உச்ச நிலையில் உள்ளன CO2, CH4 வாயுக்கள் என்று அறியப்படுகிறது. கியோடோ ஒப்பந்த வரையறைக் [Kyoto Protocol] குறிக்கோளின்படி, ஒவ்வொரு நாடும் ஆறுவித கிரீன்ஹவுஸ் வாயுக்களின் [ CO2, CH4, N2O, Hydrofluorocarbons, Perfluorocarbons, Sulphur Hexafluoride], 2012 ஆண்டுக்குள் ஓரளவு வெளி விடுவிப்பைக் குறைக்க வேண்டும்.  அதைச் சில நாடுகள் ஏற்றன, சில நாடுகள் புறக்கணித்தன. மறுபடியும் 2015 இல் புதிய உலக வரையறைகள் மீண்டும் 2020 ஆண்டு எல்லைக்குள் விதிக்கப்படும். இவற்றில் N2O வாயு மட்டும்  CO2 விட 300 மடங்கு சூழ்வெளியைச் சூடாக்கும் வல்லமை வாய்ப்புள்ளது.

     Picture -6

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

     

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Picture -7

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Picture -12

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது.

    2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆ·பிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center]

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Picture -8

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Pollution groups

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

     Al Gore Book

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    Picture -1

    Picture -2

    Picture -3

    Picture -4

    Picture -5

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
    (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.  http://www.extension.iastate.edu/agdm/articles/others/TakMar08.html  [March 2008]

    7. http://www.epa.gov/climatechange/ghgemissions/gases.html  [2013]

    8. http://www.epa.gov/climatechange/science/index.html  [March 18 2014]

    9.  http://www.epa.gov/climatechange/science/causes.html  [March 18, 2014]

    10. http://www.epa.gov/climatechange/science/indicators/ghg/ghg-concentrations.html  [July 2, 2014]

    11. http://www.epa.gov/climatechange/wycd/  [April 13, 2015]

    12.  http://www.epa.gov/climatechange/index.html  [April 15, 2015]

    13.  http://www.davidsuzuki.org/issues/climate-change/science/climate-change-basics/greenhouse-gases/  [2014]

    14.  https://saferenvironment.wordpress.com/2008/10/31/global-warming-greenhouse-gases-and-their-harmful-effects-%E2%80%93-urgent-reduction-of-these-are-essential-to-save-our-environment/

    15. http://www.livescience.com/37821-greenhouse-gases.html  [February 10, 2015]

    16.  http://en.wikipedia.org/wiki/Kyoto_Protocol   [April 18, 2015]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  April 18, 2015

    Attachments area
    Preview YouTube video Discovery Channel – Global Warming, What You Need To Know, with Tom Brokaw

    Discovery Channel – Global Warming, What You Need To Know, with Tom Brokaw

    Preview YouTube video Why Greenhouse Gases Cause Global Warming: Carl Sagan on the Environment (1990)

    Why Greenhouse Gases Cause Global Warming: Carl Sagan on the Environment (1990)

    Preview YouTube video Global warming is caused by ozone depletion not greenhouse gases

    Global warming is caused by ozone depletion not greenhouse gases
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”ஜாம்ஜாம்னு குல்லா ஜரிகைத் தலப்பாவில்,
    பூம்பூம்மாட் டுக்காரன் பஞ்சாங்கம், -நாம்நாம்னு,
    உன்மதம்(கர்வம்) கொள்ளாய், உனக்களித்த கீதையால்,
    மன்மத ஆண்டில் மலர்’’….கிரேசி மோகன்….

    Share
  • காலம்

    மீ.விசுவநாதன்

    vallamai
    காலக் குழந்தை , கவுனும் புதுச்சட்டைக்
    கோலமுமாய் இன்பமும் கூட்டியே ஏலமாய்
    எப்போதும் வாச இயல்போடு போகிறது !
    இப்போதும் அந்த எழில் ! (1) 31.12.2014

    பிறந்த தினமழகு , பேருலக மின்பம் ,
    கறந்த பசும்பால் கனிகள் சிறப்பு ,
    துறந்து விடவே துடிப்போர்க்கும் ஞானம்
    நிறைந்து வழங்கும் நிலம். (2) 01.01.2015

    மாய உலகம் ! மனமோ மயக்கத்தில்
    தோய அலையும் ! துளிர்விடும் , காயும் !
    செடிபோல் வருவதும் செல்வதும் காலம்
    விடிவதற் கான விதி. (3) 02.01.2015

    பம்பரம் , கோலி , பசுகாளை ஓட்டியே
    வம்புட னாடிய வாலிபத் தெம்பு
    பதுங்கிய போதும் , பசுமை நினைவு
    பிதுங்கி வருவது பேறு (4) 03.01.2015

    பேரருவி , ஓடைநீர் , பீறிவரும் காட்டாறும்
    நீரழகி காட்டும் நிலத்தினது பேரழகு !
    வானருவி கொட்டும் மழைச்சொட்டு காலத்தின்
    தேனருவி என்றே தெளி. (5) 04.01.2015

    வால்மீகி , காளிதாசன் , வள்ளுவ(ன்) , ஆழ்வார்கள் ,
    நால்வருட(ன்) , ஆண்டாளும் , நக்கீரன் , மால்வியாசன்
    ஞானியாம் சங்கரர் , நம்கம்பன் , பாரதியும்
    காலக் கவிதையே காண். (6) 05.01.2015

    இருக்கும் வரையில் இதமாய்ப் பழகு !
    இருக்கும் பணமோ எதுவோ உருகும்
    பனிபோல் மறையும் ! பளிச்சென வாழ்ந்து
    பனிபோல் சிறக்கப் பணி. (7) 06.01.2015

    தேரைப்பார் என்னவோர் தெய்வீகம் ! இந்தந(ம்)
    ஊரை வலம்வந்(து) உடனங்கோர் ஓரமாய்
    நிற்கிறது ; உள்ளுக்குள் நிற்கின்ற ஆதிக்கே
    கற்பூர ஆரத்திக் காப்பு. (8) 07.01.2015

    வாழப் பழகுவதே வாழ்க்கையாம்; வாழைப்பூ
    தாழ இருப்பதுவும் , தாமரைப்பூ ஆதவனை
    ஆழநீர் மேல்பார்த்(து) அரும்பிப்பின் மூடலும்நாம்
    வாழவழி சொல்லும் வகை. . (9) 08.01.2015

    நடைவண்டி ஓட்டி நடைபயின்றேன் ; வாக்குத்
    தடையின்றிக் கொட்டத் தமிழை அடைமழைபோல்
    நாளும் விடாதுநான் நாப்பயிற்சி செய்கின்றேன் ;
    வாளுக்குக் கூர்மை வலு. (10) 09.01.2015

    Share
  • ’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களே!

    வணக்கம். நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின் கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்துவதற்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன் மற்றும் திரு சசிகுமார் அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள். நன்றி நண்பர்களே. இணைந்திருங்கள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் காண்போம்!

    போட்டிக்கான படைப்புகள் அனைத்தையும் இங்கு காணலாம்.

    mgr-comp

    முனைவர் கமலம் சங்கர்

    வல்லமை மின்னிதழ் நடத்திய ‘‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்” தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் வருமாறு:

    முதற் பரிசுகள் :
    1. சுடர்மதி மலர்வேந்தன்
    2. ஞா.கலையரசி
    3. ஜியாவுத்தீன்

    இரண்டாம் பரிசுகள்:
    1. வில்லவன் கோதை
    2. எஸ்.சசிகலா
    மூன்றாம் பரிசுகள்:
    1. ஜெயஸ்ரீ சங்கர்
    2. அதிரை இளைய சாகுல்
    3. ஷேக் சிந்தா மதார்

    சிறப்புக் குறிப்பு:
    முதலாம் பரிசுகள் வரிசையில்..

    1. சுடர்மதி மலர்வேந்தன் :
    ‘தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப்பற்றியதோர் கட்டுரை! கையின் கட்டை விரலாய்ச் சிறப்புப் பெற்றார்!

    கல்லுக்குள் உளி செலுத்திச் சிற்பத்தைப் பெறவேண்டும். ஆனால் இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது என்பன போன்ற சித்திர வரிகள் மக்கள் திலகம் பற்றிய செய்திகளாகக் கோர்க்கப்பட்ட நேர்த்தி சிறப்பானது.

    விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்.. இப்படி முதல்தரமான தலைப்புகள் பொருத்தம் நிறைந்த கருத்துச் செறிவுகளுடன் கட்டுரையை முதலிடத்தில் வைத்துள்ளார்.

    2. ஞா.கலையரசி

    காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் – துவக்கம் இப்படி!

    சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1972, 1977,1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது போன்ற ரசமான வெளிப்பாட்டுடன் தொடர்கிறது கட்டுரை!

    மிகுதியான கருத்துக்கள், பொருத்தமான ஆதாரங்கள் வரிசைக்கிரமமாக, எளிய தமிழில் உயிரோட்டத்துடன கூடிய படைப்பு.. முதலிடத்தில் ஒன்றாக!!

    3. ஜியாவுத்தீன்..

    திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது என வசீகரமான தொடங்கும் கட்டுரை,

    ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம் என ஆணித்தரமான, நயமான வரிகளுடன் தொடர்கிறது!

    எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என முடிகின்ற கட்டுரை தொடரோட்டத்தில் முதலாம் இடத்தில்!!

    இரண்டாம் பரிசுகள் வரிசையில்:

    1. வில்லவன் கோதை :

    எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!

    தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள் சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி இரண்டாம் இடத்தில்!

    2. எஸ்.சசிகலா:

    “இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!

    ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!

    ‘நாடகக் காட்சி’ போன்ற விளக்கத்துடனும் தெளிவடனும் உள்ள கட்டுரை, இரண்டாம் இடத்தில்!

    மூன்றாம் பரிசுகள்:

    1. ஜெயஸ்ரீ சங்கர் :

    மதுரையில் மக்கள் திலகத்தைக் கண்ட அனுபவம் பரவசத்துடன், ஆரம்பமாகிறது கட்டுரை.

    தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், அரசியல் சூழ்ச்சி வலையிலிருந்து வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும், நல்ல மனமும் மட்டுமே துணையாக இருந்தன. தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள் என்பன போல் உண்மைகளின் வெளிப்பாடு, அழகு ததும்ப!

    அந்தக் கீர்த்தியை ‘சத்திய உலகின் பிரதிநிதி’ என்றே சொல்ல வேண்டும் என உறுதி கூறும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

    2. அதிரை இளைய சாகுல்:

    நடமாடும் ஒரு மனிதாபிமானம். வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர்! கருணைக் கல்வெட்டு! இரக்க இதிகாசம்! தவறுகளைச் சரியாக்க இறைவன் எய்நத பிரம்மாஸ்திரம். சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு! அட்டசய பாத்திரம்!

    தென்னகத்து ராஜதந்திரி! மனிதநேய மாமன்றம்.. இப்படியான தொடக்கத்தில் அநேகமாக கட்டுரையாக்கிய சாரம்சம் அத்தனையும்!

    தனித்தன்மைகள் பல – தனிப்பட்டவர் அனுபவம் பல கோர்த்து, தமிழ் அழகு, முந்தி நிற்கும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

    3. ஷேக் சிந்தா மதார்:

    சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும். தாய்க்குலத்தின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்திரங்கள் என்பன போல பல உண்மை வாசகங்கள்!

    திரைப்படங்களின் பெயர்கள் பக்கத்தலைப்புக்களாக அமைய, மிகப் பொருந்தும் வகையில் கருத்துக்கள் என இருப்பது ரசிக்கத்தக்க வெளிப்பாட்டு முறையிலான கட்டுரை மூன்றாம் இடத்தில்!!

    கமலம் சங்கர்
    சென்னை
    12.04.2015

    பரிசு ஒன்று மட்டும் தகுதியைத் தீர்மானிப்பதல்ல.. பாராட்டி ரசிப்பதற்குரிய பல அம்சங்கள் எல்லாக் கட்டுரைகளிலும்! சுவைக்கலாமே!!

    1. சுரேஜுமீ – தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர் – அழகான வெளிப்பாடு.. சுய அனுபவமே உயிர்நாடியாக மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கின்ற உண்மை பகர்கின்ற படைப்புக்குப் பாராட்டுக்கள்!

    2. ஆகிரா – அவர் பெயரைக் கேட்டால் மயங்காத மனம் யாவும் மயங்கும். பொழுதுபோக்கு அம்சத்துடன் அறிவுரை கூறிய திரைப்படங்கள்! மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க அடிப்படை ரகசியம் எனக்கூறுவதெல்லாம் சிறப்பு! பட்டியல்களைத் தவிர்த்திருக்கலாம்! முயற்சிக்குப் பாராட்டு!

    3. சி.எஸ்.குமார் – மக்கள் தந்த விருது மக்கள் திலகம்! எம்.ஜி.ஆர் – ஒரு சகாப்தம்! சாதனையின் சிகரம்! திரை உலகின் சரித்திரம் என்பன போல் வலிமை பொருந்திய வார்த்தைகள் இருந்தாலும் 168 வார்த்தைகள் மட்டுமே.. போதாமல் போன கட்டுரை! முயற்சி தொடர்க!

    4. சக்தி சக்திதாசன் – 9, 16 வயது அனுபவங்கள் பேச – பாடல்களை வரிசைப்படுத்திய கவிதையுடன் – மாட்டுக்கார வேலனாம் மக்கள் மனங்களை உழுதாயே! என்பது போல – நம் நாடு என் இதயவீணை பாடிய உள்ளமே உன் மக்கள் எப்போதும் குடியிருந்த கோயில் என எத்தனை அழகுகள்! 587 வார்த்தைகளாகக் குறைந்திருக்க வேண்டாடம்! தொடரட்டும் முயற்சி!

    5. சித்தார் கோட்டை நூர் மணாளன் : ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சாந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது. மாநிலத்தில் மானிடராய்ப் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால் .. மறைந்த பின்னும் மக்கள் மனத்தைவிட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர் என்பன போன்ற வரிகள் பாராட்டுக்கு உரியவை! 566 வார்த்தைகள் மட்டும் ஏனோ?

    6. ஆர்.எஸ்.கலா – கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடையாக உடுத்திய கொடை வள்ளல்! இறந்தும் இறவா வரம் பெற்றவர்! நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர் முன் அதில்வரும் பலகாட்சிகளுக்கு நிஜத்தில் உயிர்கொடுத்துவிட்டார் பலர் வியக்கும் வண்ணம்! என்பன போல் பல வலிமையான வரிகள். 181 வார்த்தைகள் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

    7. வெ.சந்திரமணி – மக்கள் திலகத்தின் குடும்ப வரலாறும் அரசியல் வரலாறும் காட்டும் சுருக்கமான கட்டுரை, 355 வார்த்தைகளில்.. முயற்சி தொடர்ந்திருக்கலாம்.

    8. நர்கீஸ் ஜியா: எவரெவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்துகாட்டிய நேர்த்தி! படிப்பதைவிடப் பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து.. அதிலும்படிப்பறிவில்லாத பாமர மக்களையும் மனதில் கொண்டு.. என்பன போல்பல உறுதியான வரிகள் கட்டுரையில்.. பாராட்டுக்கள்!

    9. திருக்குவளை மீ.லதா: பூமிதனில் ஒளிரும் தீபங்களாய் இருப்பவர். ஆங்கிலப் பத்திரிக்கைக் குறிப்பு இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமான்களாக இருவரைச் சுட்டிக்காட்டியது. ஒருவர் ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பன போல உண்மை வரிகள் இடம்பெற்றுள்ள கட்டுரை. 480 வார்த்தைகள் எனச் சுருக்கியிருக்க வேண்டாமே. முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    10. எஸ்.பழனிச்சாமி – பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். பாடல் சொல்லும் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார். கதாபாத்திரங்கள் தத்தம் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது! இப்படிப் பல ஆணிவேர் வரிகள். கட்டுரையின் அளவு 877 வார்த்தைகளுக்குள் 367 மக்கள் திலகத்தின் பேட்டியாகவே அமைந்துவிட்டதே! முயற்சிக்குப் பாராட்டு!

    11. சுமதி ரவிச்சந்திரன்: மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவர், தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என மூன்றெழுத்தில் ஆரம்பமாகும் கட்டுரை. 22 பட்டங்கள்.. யார் யார் வழங்கியது என்னும் செய்திகளோடு சிறப்புப் பெறுகிறது! அரசியல் பாதையும் உண்டு! பாராட்டுக்கள்!

    12. கலைவாணன் – தாயன்பு, வில்லனையும் திருந்தவைக்கும் பண்பு.. குடித்தலும் புகைத்தலும் தவறு என அழுத்தந்திருத்தமாய் போதித்து, நிஜவாழ்விலும் முன்னுதாரணம்.. ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு வழங்கியது எனச் சொல்லும்போது மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா எனக் கேட்டுக்கேட்டு வெளிப்பாட்டுநிலையில் கட்டுரை அழகு ததும்ப படைக்கப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையையும் நன்கு விளக்கியிருக்கலாம்! முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    13. மீனாட்சி நாகப்பன்: திரையிசைப்பாடல்களும் அதற்குப் பொருந்திய மக்கள்திலகத்தின் நிலைவிளக்கமும் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சொல்லப்பட வேண்டியவை சொல்லப்படாமலேயே 487 சொற்களில் சுருக்கப்பட்ட கட்டுரை.. முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    14. ஜெயராம சர்மா: “இரக்கம் அவருள் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம் கெண்டார்” என்று காரணங்கள் தொடர்கின்றன! அவர்கள் படங்களில் சமூகத் தளைகளை மீறித் தனிமனித மேல் நிலைப்பாட்டைப் பெறமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகவே பதிய வைக்கப் பெற்றது! என்பன போல் உறுதியான கருத்துக்கள் பல! பாராட்டுக்கள்!

    15. தஞ்சை வெ.கோபாலன் – பள்ளி மாணவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் தோளைத்தொட்டுப் பேசியதும் – வளர்ந்தபின் எளிமை என்னும் அவரது உண்மை முகம் உணர்ந்ததும் எனச் சுய அனுபவங்கள் சுவையாக எளிய தமிழில்! பாராட்டுக்கள்!

    16. சரஸ்வதி ராஜேந்திரன் – பகைவனுக்குக் கூட அவர் கருணை காட்டியவர். உடலல் நிலை குறித்து .. கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும்! ‘மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே’ அதுதான் அவர்தம் வெற்றி! வெகு பொருத்தமான முத்தாய்ப்பு! 405 வார்த்தைகள் மட்டுமே எழுதாமல் இன்னும் விரித்திருக்கலாம்! நல்ல முயற்சி!

    17. முனைவர் இதயகீதம் இராமானுஜம் – மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனிதநேயத்தையும் மங்கலப் பண்புகளையும் மக்கள் மனதில் விதைத்தார். பொருந்திய கருத்துக்கள் உணர்ச்சியோட்டத்துடன் சேர்ந்திருந்தால் சிறப்பு மிகுந்திருக்கும்! பாராட்டுக்கள் முயற்சிக்கு!

    18. புவனா – மும்பை: எம்.ஜி.ஆர் என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் உயிர்கள் ஏராளம். சிந்தனையே சொல்லானது. சொல்லே செயலானது. அந்தச்செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார். இப்படிப் பல வரிகள் உள்ளம் பதிக்கத் தக்கவை. பாராட்டுக்கள்!

    19. செள.செல்வகுமார் – மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி (இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும்) அவரது படங்களைக் காண்பதிலும் பாடல்களைக் கேட்பதிலும் உள்ளது. வலிய ஓடோடிச் சென்று உதவிகள் புரிந்தது.. அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தில் தனிப்பாணி எனப் பல அனுபவ வரிகள்! பலரின் அனுபவ வரிகளாகின்றன! பாராட்டுக்கள்!

    20. கொ.அரங்கநாதன் : வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம்! எண்ணற்ற உதவிகள்..அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்யப்பட்டதே எம்.ஜி.ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு! பாராட்டத்தக்க தொடர்கள் பலப்பல!

    21. மணிமுத்து – பிராசாரத்திற்கே வராமல் முதல்வர் ஆன மாமனிதர்.. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், முடிந்த பின்னும் என் பேச்சிருக்கும்” என்று உலகிற்கு வாழும்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார் என்ற உறுதியான வரிகள் கட்டுரைக்குப் பொலிவு! ஈனதர’ 353 வார்த்தைகள் மட்டும் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

    கமலம் சங்கர்
    சென்னை
    12.04.2015

    கவிஞர் காவிரி மைந்தன்

    amgதனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!

    இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

    எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்.சி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மனிதரைப் பற்றி ..அன்பு உள்ளங்களே.. உங்கள் பதிவுகளை கட்டுரை வடிவில் வரவேற்றோம்.

    எமது வேண்டுகோளை இனிதே ஏற்று வழக்கம்போல் வல்லமை மின்னிதழ் நேர்த்தியாக கட்டுரைப் போட்டி நடத்திட ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினர்க்கு நன்றிகளும், ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை அனுப்பி வைத்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    நன்றிகளுடன்
    காவிரிமைந்தன்

    இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

    தங்களின் எழுதுகோல்களை சாய்த்து தங்களின் எழுத்துக்களையும், மக்கள் திலகத்தின் பெரும் புகழையும் மேலும் தலை நிமிர்த்தி, போட்டியில் வெற்றி கண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    நடுவர்களுக்கும், இப்போட்டியை சிறப்பாக நடத்தித் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

    இந்த போட்டியை நடத்துதற்கான அத்தனை முயற்சிகளையும், வெகு நேர்த்தியாக செய்து, சிறப்புற நிகழ்த்திய சகோதரர், திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கு, என் கைப்பற்றி மற்றுமொரு முறை MGR எனும் பேராளுமையை தரிசிக்க அழைத்து சென்றதற்கு எனது பிரத்தியேக நன்றி…

    என்றும் அன்புடன்
    உங்கள்
    ச.சசிகுமார்
    துபாய்

    Share
  • என் கதைதான் உன் கதையும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    en kathai

     

     

    கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் அமைந்த பாடல்கள்போல் அதன்பின் வந்தகாலங்கள் அமையவில்லையே ஏன் என்கிற வினா அனேகமாக எல்லோரது நெஞ்சங்களிலும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

    Mayavanathanபின்னணி இசையில் முன்னணியில் கவிதை வரிகளாய் பாடல்! ஏற்றதோர் குரல்கள் தேர்ந்தெடுத்து பாட்டுக்கு முக்கியத்துவம் தந்தமையால் அத்திரைப்படங்கள் பெட்டிக்குள் சென்றபின்னரும் இப்பாடல்களே காற்றில் என்றும் தவழும் ஜீவிதம் கொண்டவையாகத் திகழ்கின்றன!

    தேவிகா, சாவித்திரி இருவரும் இணைந்து தோன்றும் காட்சி! திரைப்படம் பந்தபாசம், இசையமைப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலாசிரியர் கவிஞர் மாயவநாதன் காட்சியமைப்பும் கதையின் ஓட்டமும் சரியான களமிது என்று பாடலுக்கு வழியமைக்க.. இருவரும் காதலில் தோல்விமுகம் கண்டதனால்.. இணையாக பல்லவியிலும் சரணங்களும் ஒருசேரப் பாடுகின்ற காட்சியும்.. அதற்கான பாடல் வரிகளும் சபாஷ் போட வைக்கின்றன!

    எளிய வார்த்தைகளால் இனிய இசையோடு இதயம்நுழையும் பாடல் பி.சுசீலா எஸ்.ஜானகி குரல்களில் கேளுங்கள்… நடிகையர் திலகம் சாவித்திரியுடன் நம் அபிமான நடிகை தேவிகா திரையில்…


    காணொளி: https://youtu.be/IaLKhADl9z8

    திரைப்படம்: பந்தபாசம்
    பாடலாசிரியர்: கவிஞர் மாயவநாதன்
    இசையமைப்பு: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்கள்: பி.சுசீலா, எஸ்.ஜானகி
    _______________________________________

    என் கதைதான் உன் கதையும்..
    உன் கதைதான் என் கதையும்..
    பாதையில்தான் சிறுமாற்றம்
    பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!

    உண்மையென்ற சொல்லிருக்கும்
    ஊருக்காக பிறந்திருக்கும்
    பெண்மையைப் புகழ்ந்திருக்கும்
    பேச்சோடு நின்றிருக்கும்
    பாதையில்தான் சிறுமாற்றம்
    பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!

    காதலென்ற சொல்லிருக்கும்
    கதையோடு முடிந்திருக்கும்
    கண்ணீரென்ற ஒன்றிருக்கும் – அது
    கன்னியர்க்கே பிறந்திருக்கும்!

    உதட்டளவில் சிரிப்பிருக்கும்
    உள்ளத்தில் நெருப்பிருக்கும்
    உருவத்திலே அழகிருக்கும் – வெறும்
    வஞ்சமங்கே குடியிருக்கும்!
    பாதையில்தான் சிறுமாற்றம்
    பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!

    தியாகமென்ற சொல்லிருக்கும்
    காதலரைப் பிரித்துவைக்கும்!
    காலமென்று ஒன்றிருக்கும்
    கதைகளையே மாற்றிவைக்கும்! (தன்)

    வாழ்க்கையிலே ஆண்களுக்கு
    காதலொரு பந்தாட்டம்
    கன்னியர்க்கு வாழ்விலது
    காலமெல்லாம் போராட்டம் (நம்)
    பாதையில்தான் சிறுமாற்றம்
    பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!

     

    Share
  • கலங்கரை விளக்கமே!

    -துஷ்யந்தி, இலங்கை

    காரிருள் நீளுகையில்
    கரைகாட்டுவதும் நீயே…
    கதியற்று நிற்போர்க்கு
    ஒரு வழிகாட்டுவதும் நீயே…!                            lighthouse

    எட்டுத்திக்கும் பார்க்கும்படி
    எழில் காட்டுவதும் நீயே….
    ஏழை மீனவனுக்கு வாழ்வில்
    ஒளியேற்றுவதும் நீயே….!

    தீவொன்று உண்டென்று
    திசை காட்டுவதும் நீயே….
    ’ஓ’வென்று அழுவோர்க்கு
    மனக்குறை நீக்குவதும் நீயே….!

    கடலன்னைக்கு நீ
    அழகிய நிலவானாய்….
    அதனால் உயர்ந்த
    கலங்கரை விளக்கானாய்….!

    வணிகனும் உன்னால்
    தேசம் வந்தபோனான்
    வளங்களை இங்கே
    வற்றாது வைத்துப்போனான்…!

    குறைவில்லா செல்வம்
    தினம் இங்கே கொழிக்க,
    இரவெல்லாம் நீ ஒளிகாட்டினாய்
    இன்னும் காட்டுவாய் ஒளிநீயே
    தேன் தமிழ் எட்டுத் திசையும்
    வான்பாடுமளவு முழங்கிடவே…!

     

    Share
  • உன்னை அறிந்தால்!

    சுரேஜமீ.

     

    உன்னை அறிந்தால்!

    சில வேளைகளில், நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்கள் எத்தகைய பண்புடையவர்கள்? என்று சிந்திப்பதற்காகத்தான், ஒவ்வொரு மொழியிலும் இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன!

    இது வரலாறு; வரும் தலை முறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

    கம்பனைப் பற்றித் தெரியாத தமிழன் இருக்க முடியாது! அத்துனை புகழ் வாய்ந்த கம்பன், தன் இராமாயணத்தின் கடைசிச் செய்யுளில், தன் இனத்தின் பெருமையைத் தூக்கி நிறுத்துகிறான் என்று சொன்னால் மிகையாகாது!
    இதோ உங்களுக்காக……

    அரியணை அனுமன் தாங்க,
             அங்கதன் உடைவாள் ஏந்த,
    பரதன் வெண்குடை கவிக்க,
             இருவரும் கவரி வீச
    விரைசெறி குழலி ஓங்க
             வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
    மரபுேளார் கொடுக்க வாங்கி
             வசிட்டனே புனைந்தான் மௌலி

    விளக்கம்:
    அரச பீடத்தை அனுமன் தாங்கிப் பிடிக்கின்றான். அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கின்றான். பரதன் அரச குடையைப் பிடித்து நிற்கின்றான். இலக்குவனும், சத்ருக்ணனும் கவரி வீச, அழகிய மணம் வீசும் கூந்தலை உடைய அன்னை சீதாப் பிராட்டி பெருமிதமாய் நிற்க,

    யார் அரச மகுடத்தை வசிட்ட முனியிடம் கொடுக்கிறார்கள்?

    அங்குதான் தமிழன் பண்பாடு தலை நிமிர்த்துகிறது; இராமன் ஒரு தெய்வப் பிறவி. அருளாளர் சடையப்பர் ஒரு மனிதப் பிறவி.

    ஆனால், இந்தக் கம்பன், அந்த இராமனைப் பற்றி எழுத அருள் செய்த, பொருள் தந்த வள்ளல் சடையப்பர். ஆகக் கம்பன் முடிவு செய்கிறான்;

    இராமனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றால், அதற்கு அவனை விடத் தகுதி வாய்ந்த ஒருவன், அந்த மகுடத்தை இராமனுக்கு அளிக்க வேண்டுமென்று!

    அந்தத் தகுதி பெற்ற சடையப்ப வள்ளலின் மரபு வந்தோர் எடுத்துக் கொடுக்க, வசிட்ட மாமுனி கிரீடத்தை இராமனுக்குச் சூட்டுகிறார் என்று புனைந்தான்.

    ஒரு அவதார புருஷனை விட உயர்ந்தது, ஒரு மானுட உள்ளம் என்பதை, ஆண்டவனுக்கே எடுத்துரைத்தான் என்று சொன்னால் …

    நண்பர்களே, உணருங்கள் உங்கள் பண்பு நெறிகளை! போற்றுங்கள் உங்கள் முன்னோர்கள் கட்டிக் காத்த உயரிய குணங்களை!!

    அன்புடன்
    சுரேஜமீ

     

     

     

     

    http://kksr-aurosun.blogspot.com/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 52

    சு. கோதண்டராமன்.

    வேதப் பொன் மொழிகள் சில

     

    இயற்கை நியதி
    இயற்கை நியதியைப் புரிந்து கொள்வது எளிதல்ல. 6.9 இல் வரும் பின் வரும் மந்திரங்களைக் கவனியுங்கள்.
    நாளின் ஒரு பகுதி கறுப்பாகவும் மற்றொரு பகுதி வெள்ளையாகவும் உள்ளது. ஆடை போல் நெய்யப்பட்ட இந்தச் சிக்கலான அமைப்பில் எனக்கு நெடுக்கு நூலும் புரியவில்லை, குறுக்கு நூலும் தெரியவில்லை. தந்தை உதவி இல்லாமல் எந்த மகனாவது இதைப் புரிந்து கொள்ள முடியுமா? அழிவில்லாத இவ்வுலகத்தின் காப்பாளன் கீழிறங்கி வந்து தானே பார்ப்பதை எவன் அறிகிறானோ அவனுக்கே இந்த ரகசியம் தெரியும்.

    விதி
    நதிகள் தலைகீழாகப் பாய்கின்றன. புல் தின்னும் மிருகம் சிங்கத்தை எதிர்க்கிறது. நரி காட்டுப் பன்றியைக் குகையிலிருந்து துரத்துகிறது. இதன் மர்மம் என்ன? 10.28.4
    பிறந்திருக்கும் அனைவரும் தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்ட வழிகளிலே சென்று முன்னோர்கள் சென்ற இடத்தை அடைகிறார்கள். 10.14.2
    குதிரை நுகத்தடியில் கட்டுப்பட்டிருப்பதைப் போல நான் கட்டுப்பட்டிருப்பதை நன்கு அறிகிறேன். எங்களுக்கு எது நன்மை செய்யுமோ அதைச் சுமக்கிறேன். நான் இதிலிருந்து விடுபட விரும்பவில்லை. திரும்பிப் போகவும் விரும்பவில்லை. எல்லாம் அறிந்த தலைவன் எனக்கு வழி காட்டுவானாக 5.46.1

    வாழ்க்கை நிலையாமை
    மனிதரில் எவனும் தன் ஆயுளை அறியான். 7.23.2
    நேற்று இருந்தவன் இன்று இல்லை. தேவனின் அறிவைப் பாருங்கள்.10.55.5

    ஒன்று பரம்பொருள்
    அக்னி ஒன்றுதான். பல வகையாக மூட்டப்படுகிறது. சூரியன் ஒன்றுதான். பலவற்றின் மீதும் ஆட்சி செலுத்துகிறது. உஷை ஒன்றுதான். அனைத்தையும் ஒளியூட்டுகிறது. இருப்பது ஒன்றுதான் அனைத்துமாகப் பரவி நிற்கிறது. 8.58.2

    பக்தி
    அசையும் பொருள், அசையாப் பொருள் எல்லாவற்றிற்கும் தலைவனே, தெய்வீக ஒளியே, கன்றுக்குப் பால் சுரந்து நிற்கும் பசுப்போல உன்னை நினைந்து கதறுகிறேன். 7.22.32

    தேவர்களின் சிறப்பு
    ஆதித்யர்கள் பல கண் உள்ளவர்கள். மனதுக்குள் இருப்பதையும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும், அறிவார்கள். 2.27.3
    தேவர்கள் எதைக் காக்கிறார்களோ அவை எல்லாம் நன்மையாகவே இருக்கும். 2.23.19
    தேவர்கள் விரும்பியது தான் நடக்கும். வேறு யாரும் அதை மாற்ற முடியாது. 8.28.4
    இந்திரன் கொடுக்க நினைப்பதை எவரும், தேவனோ, மனிதரோ, தடுக்க முடியாது. 8.14.4
    இந்திரனை முழுமையாகப் புகழ வல்லார் யார்? கால்களை மாற்றி மாற்றி வைத்து நடப்பது போல அவன் முன்னால் இருப்பவரைப் பின்னாலும் பின்னால் இருப்பவரை முன்னாலும் கொண்டு வைக்கிறான். 6.47.15
    அக்னியே, யார் உன்னிடம் பிரார்த்தனையுடன் வருகிறார்களோ, யக்ஞத்தின் தீவிரத்தையோ அல்லது துவக்கத்தையோ காட்டுகிறார்களோ அவருக்கு நீ வலிமையும் செல்வமும் தந்து காப்பாற்றுகிறாய். 6.15.11
    மாயையில் வல்லவர்களோ வலிமையில் மிக்கவர்களோ எல்லோரும் தேவர்களின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் ஆகவேண்டும். 3.56.1
    சூரிய கிரணங்கள் தலையிலிருந்து பாலைப் பொழிகின்றன. கால்களால் நீரைப் பருகுகின்றன. 1.164.7
    தேவர்கள் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை. நாம் ஒன்றும் கொடுக்காமலே கொடுக்கிறார்கள். நமது நாட்களை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறார்கள். 5.49.3

    தெய்வ வணக்கத்தின் அவசியம்
    தேவர்களின் மனத்தை மகிழ்விப்பவன் அவ்வாறு மகிழ்விக்காதவனைத் தோற்கடிக்கிறான். 8.31.15
    பலஹீனமானவனாயினும் மனதைத் தூய்மையுடன் (சூரியனுடன்) இணைத்துக் கொண்டுவிட்டால் அது பயத்தால் நடுங்காது. 5.44.9
    நேர்மையைப் போற்றுபவன் பகைவரை வெல்வான். தேவரை வழிபடுபவன், வழிபடாதவரை வெல்வான். ஊக்கமுள்ளவன் வெல்லமுடியாத பகையையும் வெல்வான். யக்ஞம் செய்பவன் யக்ஞம் செய்யாதவனின் உணவை வெல்வான். 2.26.1

    நமஸ்காரத்தின் சிறப்பு
    நமஸ்காரம் வலிமையானது. நான் அதை மேற்கொண்டுள்ளேன். மண்ணையும் விண்ணையும் தாங்குவது நமஸ்காரம். தேவர்களுக்கு நமஸ்காரம். அது அவர்களை ஆள்கிறது. செய்த பாவங்களை நமஸ்காரம் போக்குகிறது. 6.51.8

    யக்ஞத்தின் சிறப்பு
    புத்தி உள்ளவன் யக்ஞம் செய்ய விரும்புகிறான், இல்லாதவன் மூழ்குகிறான். 9.64.21
    யக்ஞம் செய்பவனும், சோமம் பிழிந்து தருபவனும், தேவர்களை வணங்குபவனும் அழிவதில்லை. 8.31.16
    யக்ஞம் இந்திரனை வலுப்படுத்துகிறது. யக்ஞம் செய்பவன், வீட்டிலுள்ள நீர் தாகத்தைத் தணிப்பது போல, விருப்பம் நிறைவேறப் பெறுகிறான். பொய்யான மனதுடன் வஞ்சகமாக வழிபடுபவன், வழி தவறியவன் போல, நோக்கம் நிறைவேறாமல் போகிறான். 1.173.11

    பிரார்த்தனை
    ப்ரஹ்ம வர்ம மமாந்தரம். – பிரார்த்தனையே எனது கவசம். 6.75.19
    அக்னியே, நாங்கள் குதிரைகளாலோ அல்லது பிரார்த்தனைகளாலோ மற்ற ஜனங்களின் மீது எங்கள் வலிமையைப் புலப்படுத்துவோமாக.2.2.10

    சில பிரார்த்தனைகள்
    அச்வின்களே, எங்கள் வழிபாடு இனிமையும் உண்மையும் கலந்ததாக இருக்கட்டும். 1.22.3
    எங்கள் அறிவால் செல்வத்தை அடைய எங்களுக்கு உதவுக, இந்திரனே.8.4.15
    வருணா, நாங்கள் ஒளியை விட்டு விலகாதிருப்போமாக. 2.28.7
    ஸவிதாவின் சிறந்த ஒளியைப் போற்றுகிறோம். அவர் எங்களது அறிவினைத் தூண்டுவாராக. 3.62.10
    தேவர்களுக்கு நலம் செய்யும் தூய கண்ணாகிய சூரியன் உதிக்கிறான். நாங்கள் அவனை நூறாண்டு காலம் பார்த்திருப்போமாக. நூறாண்டு வாழ்வோமாக. 7.66.16
    சவிதாவே, கெட்டதெல்லாம் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடத்தில் தூண்டுக. 5.82.5
    துன்பங்களைப் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடம் தோற்றுவிப்பாயாக. 5.82.5

    குடும்ப ஒற்றுமை
    கணவனும் மனைவியும் சேர்ந்து ஒற்றுமையாகத் தேவர்களைப் பூஜிப்பதால் வரும் பலன்கள்- துன்பங்களிலிருந்து விடுதலை, எதிரிகளின் அழிவு, குழந்தைச் செல்வம், உணவு, வலிமை, புகழ், முழு ஆயுள், ஆனந்தம், தர்ம வழியில் நடத்தல், தெய்வ வழிபாடில்லாதவர் மீது வெற்றி. 8.31

    தவறுக்கு வருந்தல்
    பாவத்தின் காரணங்கள்- மது, கோபம், சூது, அறியாமை, கனவு, விதி 7.86.6
    மனித பலஹீனத்தால் நாங்கள் தவறு செய்கிறோம். அதற்காக எங்களைத் தண்டிக்காதே. 7.57.4

    அமரத்வம்
    நாம் அமரத்துவம் அடையவேண்டும் என்பதற்காகத் தேவர்கள் நமக்குப் பிரார்த்தனைகளை அமைத்திருக்கிறார்கள். 7.97.5

    பேச்சு
    கேள்வி கேட்பதிலோ, மீண்டும் மீண்டும் தெய்வத்தின் பெயரைக் கூறுவதிலோ, உரையாடலிலோ எவன் மகிழ்வதில்லையோ அவன் ஆபத்தானவன். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று. 8.101.4
    பயனற்ற, அற்பத்தனமான, முடிவற்ற, குறைவான பேச்சினால் மக்கள் திருப்தி அடைவது இல்லை. 4.5.14

    உழைப்பின் சிறப்பு
    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான். 8.47.6
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். 4.33.11
    விழிப்புடன் இருப்பவனை ரிக், சாமம் புகழ்கின்றன. நான் உன் நண்பன் என்று சொல்லிக் கொண்டு சோமம் உடன் வசிக்கிறது. 5.44.14
    சுறுசுறுப்புள்ளவனே வெல்கிறான், வளம் பெறுகிறான். கருமிகளுக்கு தேவர்கள் உதவுவதில்லை. 7.32.9

    பரோபகாரத்தின் சிறப்பு
    ஒருவருக்கும் தீங்கு செய்யாமல், மக்களுக்கு நன்மை செய்பவன் தன் வலிமையினாலேயே வளர்கிறான். நல்ல பாதுகாப்பான வீட்டில் இருக்கிறான். 7.74.6

    தான மகிமை
    கடவுளை வணங்காத, தானம் செய்யாத ஆணை விட பெண் உறுதியானவள், மேலானவள். 5.61.6
    பெண் துன்பப்படுபவனையும், வறுமையாளனையும் எதையாவது விரும்புபவனையும் அறிந்து கொள்கிறாள். 5.61.7
    அக்னியே, பிறருக்குத் தானம் செய்பவர்கள் சௌகரியமாக வாழட்டும். 7.16.10
    அக்னியே, மற்றவர்களுக்கு மிகுதியாகத் தானம் செய்பவருக்கு மிகுதியாகச் செல்வத்தை அளிக்கவும். 6.10.5
    கொடையாளியான இந்திரன் பிறருக்குத் தானம் செய்பவரையே ஆசீர்வதிக்கிறார். 7.32.8
    பசியை மரணத்தின் காரணமாகத் தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாகச் சாப்பிட வசதி உள்ளவனுக்கும் மரணம் ஏற்படுகிறது. வள்ளல் மனம் கொண்டவனின் செல்வம் குறைவதில்லை. பிறருக்குக் கொடுக்காதவன் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.1
    செல்வமுள்ளவன் பசியுடன் யாசகர் வரும்போது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டுவிட்டால் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.2
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். 10.117.3
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. அவன் இருப்பிடம் வீடு அல்ல. அவனை விட்டு நீங்கி, கொடுக்கக் கூடிய அன்னியன் ஒருவனை நாடுக. 10.117.4
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். அவன் நீண்ட கால வாழ்வைச் சிந்திக்க வேண்டும். செல்வம் இன்று ஒருவனிடம் இருக்கும், நாளை இன்னொருவனிடம் இருக்கும். தேர்ச் சக்கரம் போல சுழலக் கூடியது இது. 10.117.5
    அளிக்கத் தெரியாத அறிவிலி அடைந்த உணவு அவனுக்கு அழிவு தரும். நண்பனுக்கு உணவளிக்காமல் தனித்து உண்பவன் தனித்துத் துன்பப் படுகிறான். 10.117.6
    கலப்பை தன் பாதையைக் கால்களால் கீறி உணவைத் தருகிறது. கொடையாளியான உறவினன் கொடுக்காதவனை விட மேலானவன். இந்த வேதக் கருத்தை சொல்பவன் சொல்லாதவனை விட மேலானவன். 10.117.7

    சூது
    சூதை நாடுபவனுடைய மனைவியைப் பிறர் அபகரிப்பர். அவனது பெற்றோரும், சகோதரர்களும், ‘இவனை எனக்குத் தெரியாது. கட்டி இழுத்துச் செல்லுங்கள்’ என்பர். 10.34.4
    சூதாட்டக் காய்கள் கொக்கி போல் இழுப்பவை, துன்புறுத்துபவை. ஆரம்பத்தில் சிறு லாபங்களைத் தரும். முடிவில் அழித்து விடும். அவை தேன் தடவிய கொலையாளிகள். 10.34.7
    சூதாட்டக் காய்கள் கீழே உள்ளன, ஆனால் அவை நமக்கு மேலே ஏறி விடுகின்றன. கையில்லாத அவை கையுள்ளவர்களை வெல்கின்றன. குளிர்ச்சியாக இருந்து நம்மைத் தகிக்கின்றன.10.34.9
    சூதாடுபவனுடைய மனைவி துன்புறுகிறாள். கண்டபடி அலையும் அவனுக்காகத் தாய் வருந்துகிறாள். கடனாளியாகிறான். பயப்படுகிறான். பணத்தைத் தேடி இரவில் மற்றவர் வீட்டுக்குத் திருடப் போகிறான். 10.34.10
    சூதாடுபவன் மற்றவர்களின் சீரான குடும்பத்தையும் அவர்களின் அன்பான மனைவியையும் பார்த்துப் பொருமுகிறான். காலையில் குதிரை ஏறிப் போனவன் மதியத்தில் வெய்யிலில் அலைகிறான். 10.34.11
    சூதாடாதீர்கள். வேளாண்மையில் ஈடுபடுங்கள். அதில் வரும் செல்வத்தில் மகிழ்ச்சி அடையுங்கள். மனைவி, மாடுகள் போன்ற எல்லாச் செல்வங்களும் அதில் உண்டு. சவிதா இதை எனக்குச் சொன்னார். 10.34.13

    மனம்
    மக்கள் பார்ப்பதற்காக ஒரு நிலையான ஜோதி அமைந்துள்ளது. எல்லாத் தேவர்களும் அந்த ஒரே லட்சியத்தை நோக்கிச் செல்கின்றனர். என் காதுகள் அதை நோக்கித் திரும்பி உள்ளன. என் கண்கள் அதையே பார்க்கின்றன. பறக்கும் பொருள்களிலே மனம் தான் மிக வேகமானது. என் மனம் அதை நோக்கிச் செல்கிறது. நான் அதை எப்படி அறிவேன், எப்படிச் சொல்வேன்? 6.9.5
    குதிரையை வழிநடத்துவது கடிவாளக் கயிறு. அதை வழி நடத்துவது மனது. 6.75.6

    உலகியல்
    சொந்தப் பிள்ளையே சிறந்தவன். மற்றவர் பிள்ளை பிள்ளை ஆகமாட்டான். 7.4.7
    வீடு தான் சஞ்சரிக்கும் எல்லாப் பிராணிகளின் விருப்பமாகும். 2.38.6
    ஒன்று போல இருக்கும் இரு கைகளும் செயல் திறனில் வேறுபடுகின்றன. ஒரே நேரத்தில் ஈன்ற இரு பசுக்கள் ஒரே அளவு பால் தருவதில்லை. இரட்டையர்கள் கூட திறமையில் வேறுபடுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் வள்ளல் தன்மையில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 10.117.9
    ஊருக்குப் புதியவன் தெரிந்தவனிடம் வழி கேட்கிறான். சரியான நபரால் வழி காட்டப்பட்டு அவன் தொடர்ந்து பயணிக்கிறான். உண்மையில் இது தான் கல்வியின் சிறப்பு. கற்றவன் நேராகச் செல்லும் வழியை அறிந்து கொள்கிறான். 10.32.7, 9.70.9
    ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம். நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக. 2,33.2

    பக்தர்கள் பல வகை
    வலிமையுள்ளவன் பகனிடம் பாதுகாப்பை நாடுகிறான். வலிமையற்றவன் ரத்னத்தை நாடுகிறான். 7.38.6
    ரிஷிகள் உதவிக்காக வேண்டுகின்றனர். புரோகிதர்கள் உணவுக்காக வேண்டுகின்றனர். 7.94.5
    பக்தர்கள் சோமனைப் போற்றுகிறார்கள், பேரறிஞர்கள் யக்ஞம் செய்ய விரும்புகிறார்கள், விபரீத புத்தி உள்ளவர்கள் அமிழ்ந்து போகிறார்கள். 9.64.21
    நரர்கள் போரில் வெல்லவும் புத்திர பாக்கியம் பெறவும் விரும்புகிறார்கள். விப்ரர்கள் அறிவைப் பெற விரும்புகிறார்கள். 1.8.6

     

    Share
  • தமிழாய்த் தமிழுக்காய்…

    -கலாம் சேக் அப்துல்காதர்

    தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
    அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
    விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
    மொழியாம் தமிழை மொழிந்து.

    சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
    வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
    வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
    இழியும் பழியும் இழுக்கு.

    ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
    விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
    வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
    சூழும் புகழ்ச்சிச் சுழல்.

    மொழியை அழித்தல் முழியை மழித்தல்
    விழியை இழந்து விழுவாய்க் குழியில்
    மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
    பிழையில் உழலும் பிழைப்பு.

     

    Share
  • ஆற்றுப்படுகையும் ஆற்றுப்படுத்தலும்!

    கட்டாரி

    அம்மாவின் முந்தானையோர
    ஐம்பது காசுகள்
    போதுமானதாக இருந்தது…கல்கோனாக்கள்
    தவறியிருந்த
    நேற்றைகளின் பொருமல்கள் கரைத்துவிட…

    பொரி உருண்டைகளுக்கான
    தங்கையின் ஏக்கமும்
    அப்படித்தான்…!

    அப்பாவின்
    முழங்கைச்சட்டை மடிப்பிலும், தொடர்ந்தே வரும்
    முள்மீசை முத்தத்திலும்…

    இம்முறை தனியே வந்த
    அக்காவின் கோபம் இறங்க…
    இரண்டு நாள் தள்ளிவந்திருந்த
    மாமாவையும் சேர்த்துவைக்கச்
    செத்துப் போயிருந்தது… நாட்டுக்கோழியொன்று…!!

    வேலைக்குக் காத்திருந்த
    சித்தப்பாவின் வெறுமைகளைச்
    சாயங்காலக் கிரிக்கெட்டின்
    நான்கு சிக்சர்கள் நிரப்பிவிடும்…தவறினால்
    அப்பத்தாவின் அம்மாசீர்வாதம்…!!

    பிசாசு விழுங்கியிருந்த
    பக்கத்துக்கு வீட்டு அக்காவும்…
    ஒற்றை எலுமிச்சை, கொத்து வேப்பிலைக்
    குளியலோடு
    சுகப்பட்டிருந்தாள்…

    செதுக்கிய பாதையில்
    சிதறா நினைவுகளோடு திரும்புகையில்
    தொகுப்பு வீட்டின்
    எதிர்க்கதவுக்காரன் செய்தி பகிர்ந்தான்…

    சாக்லேட் கடிச்சி வீசறான் சார்
    பையன்… இப்பத்தான்
    கவுன்சலிங் போயிட்டு வரோம்!!

     

    Share