சுரேஜமீ

 

 உன்னை அறிந்தால் – வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி

கவிஞர்களைக் காலம் தன் கரங்களால் இழுத்துச் செல்லும் என்றால், கவி கொள்ளும் தமிழ் எவ்வாறு இருக்கவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்!

அத்தகைய வகையில், கம்பன் காவியத்தைத் தொட்ட என் எண்ணங்கள், இன்று அவன் சேய்; அன்னைத் தமிழ் தந்த தங்கக் குழந்தை; அடியேனின் தமிழுக்கு அகராதி, என்றும் நான் போற்றும், ஏழைப் பங்காளன், ஏமாற்றும் உலகில், எவரையும் மாற்றும் கவி பாடிய கண்ணதாசனின் ஒரு பாடல்,

எப்படி முக்காலத்தையும் முத்தமிழால் இணைக்கிறது என்பதை வளரும் தலைமுறைக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்!

முத்தையா கொடுத்த முத்தான பாடல் இது!

கடந்த காலம்:
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் வீரத்தையும், தமிழனின் தீரத்தையும் ஒருசேர, இரு வரிகளில் சொல்லிவிட்டானே!

பாடல் வரிகளைப் படியுங்கள்;

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்;
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே!

இருநூறு நாட்களுக்கு மேல், பள்ளியில் பாடமாகப் படித்து, ஒரு நாள் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தும் மாணவனுக்கு, ஒரு பாடலில், வரலாற்றைச் சொல்லும் வல்லமை, கவிஞனுக்கு மட்டுமே உண்டு என்பதை மறுக்க முடியாது!

நிகழ்காலம்:
ஒரு குழந்தை எப்படி வளரவேண்டும்? எதை நாம் கொடுக்கிறோமோ, அதுவாகத்தான் ஆகிறோம் என்கிறது வேத நூல்கள்! ஒவ்வொரு கருவின் பிறப்பிடமும் ஒரு தாயாக இருக்கும்பொழுது, அந்தத் தாய், தன் கருவை எப்படி வளர்க்கிறாள் என்பதையும். கருவில் உருவான உன்னத படைப்பு என்ன செய்யும் என்பதையும் விளக்குகிறான்

அடுத்த இரு வரிகளில்……

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை;
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை!

என்ன ஆழமான வார்த்தைகள்! வாழ்வின் அடித்தளத்தை எவ்வளவு உறுதியாக வடிக்கின்றான் கவிஞன்? இவைகள் தந்த வாழ்க்கை என்றாவது சோர்வாகுமா? நிச்சயமாக இருக்காது! இருந்தால், அது தமிழாக இருக்க முடியாது!!

வருங்காலம்:
இப்படி வரலாறும்; வளரும் முறையும் இருந்தால், வருங்காலம் உன்னை வாழ்த்தி வரவேற்கும் என்பதில் ஐயமில்லை!

இதோ அந்த வரிகள்…..

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!

ஆக, காலம் உங்களைத் தாங்கிச் செல்லவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

1. உங்கள் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பெற்றோர் கூறக் கேட்டு அறியுங்கள்!

2. உங்கள் பெற்றோர்கள், உங்களுக்காகச் செய்யும் தியாகங்களைப் போற்றுங்கள்!

3. நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுங்கள்!

நிச்சயம் வரலாறு தன் பக்கங்களை, உங்களால் நிரப்பக் காத்திருக்கிறது!

கவியரசரைப் பற்றி எண்ணும்போதெல்லாம், என் எண்ணம் ஊற்றெடுக்கும்! அப்படி ஒருவேளையில் எழுதியது….

kannadasanமுத்தையா
எனும் கடலில்
மூழ்கும் போதெல்லாம்
எனக்குமூச்சு
முட்டுவதே இல்லை!

ஏன் தெரியுமா?

முத்தமிழே
முத்தமிட்டால்
மூச்சேது?
பேச்சேது?

 

 

 

அன்புடன்
சுரேஜமீ

 

 

 

 

http://kksr-aurosun.blogspot.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.