Blog

  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (3)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மனநிறைவோடு அயோத்தி திரும்பினான் தசரத மன்னன். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் தசரதன் நன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ‘வானில் கிரஹங்களின் நிலை தற்போது சரியில்லை. ஒருவேளை என் இறுதி காலம் நெருங்குகிறதோ என்னவோ? அதற்குள் என் தவப்புதல்வனை ராஜாராமனாகப் பார்க்கவேண்டும். அதற்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க வேண்டும். என் நிர்ணயத்தை யாரும் எதிர்க்கமாட்டார்கள். ஒருவேளை என் மாமன் கேகய நாட்டு மன்னன் நான் கைகேயியை மணக்கும்போது அவனுக்குக் கொடுத்த வாக்கினால் சற்று எதிர்க்கலாம். அவளுக்குப் பிறக்கும் புத்திரனே ஆட்சி செய்வான் என்று நான் அப்போது சொன்னதை நினைவூட்டலாம். அப்போதைய நிலை வேறு. புத்திர பாக்கியம் இல்லாத சமயத்தில் நான் ஏதேதோ கூறியிருக்கலாம். ஆனால் இப்போதைய நிலை வேறு. பட்டத்து அரசியான கெளசலையின் புதல்வன் தான் அரியணை ஏறவேண்டும். இதுவே இக்ஷ்வாகு குலத்தில் வாழையடி வாழையாக நடக்கும் நியதி. ஆகவே உடனே பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். பரதன் இல்லாதபோது ராமனுக்கு முடிசூட்டிவிட்டால் கேகயன் ஒன்றும் செய்ய முடியாது. கைகேயி பற்றி கவலை இல்லை. அவள் கெளசலையைவிட ராமன்மீது உயிரையே வைத்திருக்கிறாள்….’  என்றெல்லாம் எண்ணியவாறு அயோத்தி மன்னன் தன் இளைய மனைவியுடன் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்தான். ‘அவளுக்குப் பிடித்தது போர்க்காலத்திலும் வேட்டைக்குச் செல்லும் போதும் எனக்குத் தேர் ஓட்டுவதல்லவா? இப்போதே அவளுடன் அடவிக்குச் செல்வோம். வேட்டை முடிந்ததும் ஏகாந்தத்தில் அவள் ஒப்புதலைப் பெற்றுவிடலாம்’  என நினைந்து அவளுடன் வனத்திற்குப் புறப்பட்டான்.

    வேட்டை நன்றாக நடந்தேறியது. ஆனால் வயோதிகனான தசரதன் களைப்புற்று ஒரு மரத்தின் கீழ் அவள் மடிமீது தலை வைத்து உறங்கி விட்டான். கைகேயி தசரதனின் உறங்கும் அழகை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அச்சமயம் அம்மரக்கிளையில் வீற்றிருந்த ஒரு ஜோடிப் பறவைகள் பேசிக் கொண்டிருந்தன. கைகேயிக்கு அப்பட்சிகளின் மொழி தெரியும். பொழுது போக்காக அப்பறவைகள் பேசுவதைக் கேட்டாள்.

    ஆண் பறவை தன் பெட்டையிடம், “என்னுயிரே, கீழே மனைவியின் மடியில் படுத்துக் கொண்டிருப்பது யார் தெரியுமா? அவன் அயோத்தி மன்னன் தசரதன். அவள் அவனது இளைய மனைவி கைகேயி. இம்மன்னன் தன் பிரியமான மூத்த மகனுக்கு அவசர அவசரமாக முடிசூட்ட உள்ளான். பாபம்! இவனுக்கு வரப்போவது தெரிய வாய்ப்பு இல்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு பதினான்கு ஆண்டுகளுக்கு அயோத்தி சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அவர் மரணிப்பது உறுதி. இந்நிலையில் அவன் மகன் அரியணை ஏறினால் என்ன ஆகும்?”

    பெண் பறவை, “ஆருயிரே! சாதாரண பட்சியான உமக்கு இதெல்லாம் எப்படி தெரிகிறது?”  என்றது.

    “அண்மையில் இவ்வரண்யத்தில் வேடன் ஒருவன் தன் அம்பை ஒரு பருந்தின்மீது எய்தான். அது குறிதவறி ஒரு முனிவர் மீது பாயவிருந்தது. அப்போது நான் அவர்முன் பறந்து அந்த அம்பினை என்மீது வாங்கிக்கொண்டு அவரைக் காப்பாற்றினேன். அவர் மனம் மகிழ்ந்து காயப்பட்ட என்னைத் தூக்கி பரிவோடு தடவிக் கொடுத்தார். உடனே என் காயம் ஆறிவிட்டது. மேலும் தன் தவ மகிமையால் எனக்கு வரப்போகும் நிகழ்வுகளை அறியும் சக்தியைக் கொடுத்தார்” என்றது ஆண் பட்சி.

    இதற்குமேல் கைகேயிக்கு அப்பறவைகளின் உரையாடலில் பிடிப்பில்லாமல் போயிற்று. ஒரு கணம் தன் இதயத்துடிப்பு நின்றுவிட்டதுபோல் உணர்ந்தாள். ‘என் இனிய ராமன் உயிருக்கு ஆபத்தா? அதனை என்னால் தாங்க முடியாது. எப்பாடுபட்டாகிலும் ராமன் தற்சமயம் ஆட்சிப் பட்டம் பெறுவதைத் தடுத்தே ஆக வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தாள். ’அயோத்தி அரியணையே, இன்னும் பதினான்கு ஆண்டுகள் கடந்து, ராமன் வரும் வரை காத்திரு‘ என மானசீகமாக அதற்கு ஆணையிட்டாள்.

    ’ஆனால் மன்னர் இதற்கு ஒப்புவாரா? பறவையின் கூற்றினை நம்புவாரா?’ என்னும் ஐயம் அவளுக்கு ஏற்பட்டது. ‘அதனாலென்ன? என்னுயிர்ச் சேடி மந்திரை இதற்கு ஒரு நல்ல யோசனை சொல்வாள். அது வரை இதனை யாருக்கும் சொல்லவேண்டாம்’ என சமாதானம் செய்து கொண்டாள்.

    உறக்கம் நீங்கி கண் விழித்த தசரதன் “கைகேயி உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசவேண்டும்” என்றான். “நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். மாலை வந்துவிட்ட்து. இப்போது நாம் ராஜதானி திரும்புவோம். இன்னொரு நாள் விவரமாக பேசுவோம்” என்று சொல்லி தசரதனை ரதத்தில் ஏற்றிக்கொண்டு அயோத்திக்கு விரைந்தாள்.

    அடுத்தநாள் காலை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ”நாளை ராமனுக்கு முடிசூட்ட வேண்டும். அதற்கான ஆயத்தங்களை தாங்கள் செய்ய வேண்டும்” என்றான். “அரசனின் ஆணைப்படியே” என்றார் முக்காலமும் அறிந்த அம்முனிவர் சுருக்கமாக. அதன்பின் புயல் வேகத்தில் செயற்பாடுகள் தொடர்ந்தன.

    ராமனை தன் மாளிகைக்கு அழைத்து, “குழந்தாய், நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். நீ மைதிலியை (மிதிலையில் கண்டெடுக்கப்பட்ட ஸீதை) அழைத்துக்கொண்டு குலகுரு வசிஷ்டரிடம் சென்று அதற்கான நோன்பினை அனுஷ்டிக்க வேண்டும்” என்றான் தசரதன். ராமபட்டாபிஷேகம் எனும் செய்தி காட்டுத்தீபோல் பரவி அயோத்தி மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

    மாநகரின் கோலாகலம் கண்டு மந்திரை கோபத்தோடு கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தாள். “அசட்டுப் பெண்ணே, குடி முழுகிவிட்டதடி. இனி உன் சகஇல்லத்தி கெளசலைக்கு நீ கொத்தடிமை செய்யவேண்டும்”  என்று அரற்றினாள் மந்திரை.

    “என்ன சொல்கிறாய் மந்திரா” என்று வினவிய கைகேயியை நோக்கி, “ராமனுக்கு நாளை முடிசூட்டப் போகிறானடி உன் மன்னன். உன் மகன் பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிய போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உன் கணவன் ஒரு பெரிய சதிகாரன். இனி நீ ஒரு பொருட்டல்ல அயோத்தி மன்னனுக்கு” என்றாள் அவள் சேடி.

    ‘இப்போது மந்திரை என்ன உபாயம் சொல்லப்போகிறாள் என்று பார்ப்போம்’ என நினைத்த கைகேயி சொன்னாள்: “அதெல்லாம் போகட்டும். இப்போது முடிசூட்டலை எவ்வாறு நிறுத்துவது என்று சொல்.”

    “உனக்கு உன் மணாளன் பண்டொருநாள் சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தின் போது உன் தேரோட்டும் திறனைப் பாராட்டி இரண்டு வரங்களை அளித்தான் அல்லவா? அது நினைவிருக்கிறதா?”

    “உம்….”

    “இப்போது அந்த வரங்களைப் பயன்படுத்தி பரதனுக்குப் முடிசூட்டவேண்டும் என்றும் ராமன் நீண்டகாலம் வனவாசம் செய்யவேண்டும் என்றும் அரசனிடம் கேள்.”

    கைகேயியின் உள்ளம் உவகை கொண்டது. ‘இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! என்ன இருந்தாலும் மந்திரை மந்திரைதான். ராமனைக் காப்பாற்ற எவ்வளவு எளிதான உபாயம். ஆனால் பரதனுயிருக்கு ஆபத்தாயிற்றே’ என நினைத்து,  பிறகு ‘பரதன் ஒரு நாளும் முடிசூட்டிக்கொள்ள ஒப்புதல் அளிக்கமாட்டான்’ என்று ஆறுதல் கொண்டாள்.

    பின்னர் மாளிகைக்கு வந்த தசரதனிடம் இவ்விரு வரங்களைக் கேட்டு அவனை மூர்ச்சை அடையச் செய்தாள். மூர்ச்சை தெளிந்தபின் தசரதன் பலவாறாக அவளிடம் கெஞ்சிப்பார்த்தான். எவ்வாறு பலன் இருக்கும்? கைகேயிக்கு ராமனை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் வெறி கொழுந்துவிட்டு எரியும்போது அவள் பணிந்து போவாளா? மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ராமன் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ”இல்லையேல் உயிர் விடுவேன்”  என்றாள். மீண்டும் மூர்ச்சை அடைந்தான் மன்னன்.

    உடனே ராமனைத் தருவித்து தான் பெற்ற வரங்கள் பற்றியும், அதன்படி ராமன் காட்டுக்குச் செல்லவேண்டிய அவசியத்தையும் விளக்கினாள். ’முதல் நாள் அரியணை அடுத்த நாள் அரண்யம்’ என்ற நிலை ராமனை எவ்வாறு பாதித்தது என்பதனை கம்பர் கவிதையில் கேட்போம்:

    இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே ஆகும்

    செப்ப அருங்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

    ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

    அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

    [வர்ணிக்கும் வல்லமை பெற்ற எவராலும் எடுத்துச்சொல்ல முடியாத அரும் பெருங்குணங்களைப் பெற்றுள்ள இராமனது திருமுகத்தின் பேரழகுச் சிறப்பை இப்போது பார்த்தால், அது எம்மைப் போன்றவர்களால் சொல்வதற்குரிய எளிமை பெற்றதோ? ஏனெனில் இதற்கு முன்பு அத்திருமுகம் செந்தாமரை மலரை ஒத்திருந்தது. கைகேயி கூறிய சொற்களை அவற்றின் பொருள் உணரக்கேட்ட பின்பு, அப்போதுதான் அலர்ந்துள்ள புத்தம் புதிய செந்தாமரை மலரை அத்திருமுகம் வென்றுவிட்ட்து]

    சிறிதளவு மாற்றமும் வதனத்தில் இல்லாமல், ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனப்பகர்ந்து சிறிய தாயாரை வணங்கி ராமன் புறப்பட்டான்.

    கோபாவேசம் கொண்ட இளவல் லக்ஷ்மணனை சீற்றமில்லாதானும் ஸீதைமணாளனுமான ராமன் இவ்வாறு சமாதானப்படுத்தினான்:

    “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே

     பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

     மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த!

     விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டது”

    [இளையவனே! நல்ல நீர் இல்லாமல் வற்றிப்போதல்  அந்நதியின் தவறு அன்று. அதைப்போலவே எனக்கு இப்போது நேர்ந்துள்ள நிலைக்குக் காரணம் தந்தையின் தவறு அன்று. நம்மைப் பெற்றவள் போலப் பேணி வளர்த்த அன்னை கைகேயி பெற்றுள்ள அறிவின் தவறும் அன்று. அவளுடைய மகனான பரதனின் தவறும் அன்று. பின்பு யாருடைய தவறு எனக்கேட்பின், இது ஊழ்வினை செய்த தவறாகும். இதற்காக நீ கோபம் கொண்டது ஏன்?]

    பின்னர் அவனையும் தன் கூட வருமாறு பணித்தான். ஸீதையிடம் விடைபெற விழைந்தபோது, அவள் கணவனுடன் காட்டுக்குச் செல்வதே தன் தருமம் என்று பிடிவாதம் செய்து ராமனை தன் வழிக்குக் கொணர்ந்தாள். மூவரும் அன்னைமார் கெளசலை சுமித்திரை இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அமைச்சர் சுமந்திரன் தேரோட்ட வனத்திற்கு ஏகினர். திடீர் திருப்பத்தால் திடுக்கிட்ட அயோத்திவாழ் மக்கள் ஒரு படைபோல் திரண்டு அவர்களைத் தொடர்ந்தனர்.

    ’கங்கையிரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான்’ எனப்புகழ் பெற்ற படகோட்டி அரசனான குஹன் உதவியோடு தொடரும் மக்கள் யாரும் அறியாமல் மூவரும் இரவோடு இரவாக நதியினைக் கடந்து சித்திரகூடம் சேர்ந்தனர்.

    இதற்கிடையில், புத்திரனின் பிரிவை தாங்கமுடியாமல் தசரதன் வானுலகம் எய்தினான். பரதனுக்கும் சத்ருக்கினனுக்கும் செய்தி அனுப்பி வரவழைத்தனர். நடந்தவற்றை அறிந்த பரதன் கடுஞ்சினமுற்று இத்தகைய களங்கத்தைத் தனக்கு ஏற்படுத்திய அன்னையை பல்வகையாலும் சாடினான். கைகேயி பொறுமையாக அவற்றைத் தாங்கி, தன் மகனின் உன்னதமான உள்ளத்தை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொண்டாள்.

    அயோத்தி அரசனின் ஈமச்சடங்குகள் நடந்தேறியபின் வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்டினார். அவன் அதனை மறுத்து காட்டிற்குச் சென்று அண்ணனை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கப்போவதாக பறை சாற்றினான். அனைவரும் புடைசூழ பரதன் காடு நோக்கிச் சென்றான். குஹன் உதவியோடு அனைவரும் சித்திரகூடம் சேர்ந்தனர்.

    அயோத்தி நிகழ்வுகளை அறிந்த ராமன் தன்பொருட்டு தந்தை இயற்கை எய்த  நேர்ந்ததை எண்ணி வருந்தினான். பரதன் அண்ணனை நாடு திரும்பி ஆட்சி பொறுப்பினை ஏற்குமாறு வேண்ட, ராமன் தந்தையின் ஆணையை மீறுதல் தகாது என்று சொல்லி பரதனையே ஆளுமாறு பணித்தான்.

    குலகுரு வசிஷ்டர்முன் சகோதரர்களின் வாக்குவாதங்கள் தீவிரமாக நடந்தன. அவர் பெருமிதத்தோடு பரதனை நோக்கி, “உன் போற்றத்தக்க நடப்பினால் ரகுகுலத்திற்கே திலகமெனத் திகழ்கிறாய். ராமன் தன் தருமத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான். நீதான் சற்று தழைந்து போகவேண்டும்”  என்றார்.

    இறுதியில் பரதன் அண்ணனின் ஆணைப்படி நாடு திரும்புவதாகக் கூறி, பதினான்கு ஆண்டுகளுக்கு ராமனின் பிரதிநிதியாகவே செயல்படுவதாக உறுதி அளித்து, அவன் பாதுகைகளைப் பவ்யமாகப் பெற்று தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டான். ”அண்ணலே! நீங்கள் அன்புடன் ஈந்த உமது புனித அடிநிலையே இனி இந்நாட்டை ஆளப்போகிறது. சரியாக பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் நீங்கள் அயோத்தி அரியணை ஏறவேண்டும். அதுவரை நகர்ப்புறமான நந்திகிராமத்தில்தான் நான் ஒரு துறவிபோல் வசிப்பேன். குறிப்பிட்ட கெடு கடந்து தாங்கள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன்” என்று கண்ணீர் மல்கக் கூறிய பரதனை ராமன் அணைத்துக் கொண்டு ”உன்போன்ற தம்பியைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ” என்று சொல்லி விடைகொடுத்தான்.

    ‘அப்பாடா, என் மகனும் உயிர் பிழைத்தான். எங்கே ராமன் சொல்படி பரதன் அரியணை ஏறிவிடுவானோ என பயந்து கொண்டிருந்தேன்’ என்று கைகேயி பெருமூச்சு விட்டாள். ‘ஆருயிர்க் கணவனை இழந்ததோடு எவ்வளவு மகத்தான நிந்தனைக்கு ஆளாகிவிட்டோம். அதனாலென்ன, என் மனத்துக்கினிய ராமனுக்காக இந்த அபவாதத்தைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதற்குப் பரிசாக என் மைந்தன் ”படியிற் குணத்து பரத நம்பி” ஆகிவிட்டான்’  என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்தாள் அந்த அன்னை.

    பாதுகா பட்டாபிஷேகம் நடந்தபின், நந்திகிராமத்தில் வசித்த பரதனும் சத்ருக்கினனும் தவக்கோலம் பூண்டு தங்கள் கடமைகளை, வசிஷ்ட மாமுனியின் அறிவுரைப்படி நிறைவேற்றி வந்தனர்.

    Share
  • பாவம் ஏன் பரிதாபப்படவில்லை?

    ​தேவா

     
    பெண்ணே!!

     

    உன் உடம்பு மட்டுமே

    உல்லாச ஊஞ்சலாகிவிட்டது,

    ஜாதி பேதமின்றி,

    வயது வரம்பின்றி, அனைவரும் ஆடிமகிழ்கின்றனர்,

     

    உன் ஆபரணத்தைத்தான் அபகரிக்கிறார்கள் என்றால்,

    உன் அழகு பெட்டகத்தில், கற்பு கூட சூறையாடப்படுகிறது,

    அமிலத்தில் அபிஷேகம் உனக்கு மட்டுமே செய்யப்படுகிறது,

    வெறி நாய்களின்  இச்சைக்கு உன் சதைகள் சிதைக்கப்படுகிறது,

     

    பாவம் கூட உனக்காக பரிதாபப்படவில்லையே!

     

    பிரம்மன் உன் படைப்பில் வஞ்சனை செய்து விட்டானடி,

    அழகைத் தந்தவன் ஆபத்தையும் தந்துவிட்டான்,

    என் செய்வது,

     

    ஆண்களின் பசிக்கு பெண்கள் இ​ரையாவது,

    என்றோ ஆரம்பமாகிவிட்டது,

    அடுத்தவன் பெஞ்சாதியை,

    ஆண் ஜாதிதானே துகில் உரித்தது,

    அன்று கண்ணன் சேலை தந்தான்,

    இன்று உன் சடலத்திற்கு மட்டுமே போர்த்தப்படுகிறது,

     

    ஆனாலும் ஆச்சரியம்!

    எத்தனை நடந்தாலும் உன் பொறுமையின் பெருமைதான்

    ஆச்சரியம், அதிசயம், நீ மட்டுமே அற்புதம்,

    மற்றவை அப்புறம்,

     

    போதுமம்மா போதும்,

    பட்டது போதும், உன்னை தொட்டது போதும்,

    நீ ​கெட்டது போதும்,

     

    கவலைப்படாதே!

    இனியொரு உலகு படைப்போம்,

    உனக்கொரு விதி செய்வோம்…

    அங்கு உன் சுதந்திரக்கொடியை மட்டுமே பறக்கவிடுவோம்…

     

    Share
  • பெற்​றோருக்கு மரியா​தை

    பர்வத வர்தினி

    அந்த நாள் அவளுக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.

    சங்கீதாவின் தந்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனத்தில் சந்தேகம் எனும்​ பேய் புகுந்துவிட்டிருந்தது. ஒரு​வே​ளை நம் மக​ளே நம்மிடம் பொய் சொல்கிறாளோ? இத்தனை நாளும் சுதந்திரம் கொடுத்து வளர்த்ததே நம் தவறுதானோ! தன் உறவினர்கள், நண்பர்க​ளை​யெல்லாம் விட மகளுக்கு அதிகமாகவே சலு​கைகள் வழங்கியவர். சிறு வயதிலிருந்தே மிகுந்த அக்கறையுடன் அவளுக்கு அ​னைத்​தையும் கற்றுத் தந்தவர். ஒழுக்கமுள்ள​ பெண்ணாக வளர்த்திருக்கி​றோம் என்று தனக்குத்தானே இறுமாந்திருந்தவர். இன்​றோ அவர் மனம் படாதபாடுபட்டுக் ​கொண்டிருந்தது. கோ எட் பள்ளியில் தன் மகளை படிக்க ​வைத்திருந்தார். அப்போதெல்லாம் எந்த தொந்தரவும் அவருக்கில்லை. சந்தேகம் தோன்றியதில்லை. கம்ப்யூட்டர் கிளாசும் ஒரு வருடம் ​சென்று வந்தாளே, அப்போதும் ஏதும் தோன்றியதில்லை. எத்தனையோ நண்பர்கள் அவளுக்கு. ஆனால் அனைவரைப் பற்றியும் வீட்டில் சொல்லியிருக்கிறாள். தினம் தினம் எங்கு​செல்கிறாள் என்ன ​செய்கிறாள் என்று ம​றைத்ததேயில்லை. தன் மகளைப் பற்றி எத்தனை கர்வம் அவருக்கு! படிப்பிலும் சுட்டி, ஒழுக்கத்திலும்​ கெட்டி! இப்படி நினைத்திருந்த அவர் மனத்தில் ஒரு மாயத்தி​ரை விழுந்திருந்தது. ஒருவேளை நமக்குப் போக்குக்காட்டி கொண்டிருக்கிறாளா என்ன?!

    சங்கீதாவின் ஆண் நண்பர்களை கூட வீட்டிற்கு அழைத்திருந்தாளே! அப்போதுகூட நாம் ஏதும் தடை சொல்லவில்லையே! எல்லாரிடமும் சகஜமாக இருந்ததாகத் தான் தோன்றியது. ஆனால் இப்​போ​​தெல்லாம் தொலை​​பேசியில் உ​ரையாடுவது அதிகரித்திருக்கிறது. அதுவும் நானோ, அவளது அம்மாவோ அந்த அறையில் இருந்தால் குரல் மிகவும் குறைவாக ரகசியம் ​​பேசுவது ​போல் ​பேசுகிறா​ளே! யாரிடம் அப்படி ​பேசுகிறாள்? ​கேட்டால் தன் ​தோழிகளில் யார் பெய​ரையாவது குறிப்பிடுகிறாள். ​தோழியுடன்​பேசுவதற்கு குரல் சன்னமாக ​வேண்டிய அவசியம் என்ன?

    தற்சமயம் அவள் படித்த கம்ப்யூட்டர் ​சென்டரில் மா​லை​ நேரத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறாள். இவளது ​வே​லை என்ன​மோ 4 மணி முதல் 8 மணி வரைதான். அதன் பின் கம்ப்யூட்டர் ​சென்டரை மூடி விடுவார்கள். இங்கிருந்து 3 கிமீ ​தொ​லைவிலிருக்கும் இடத்திற்கு செல்வதற்கும் திரும்ப வருவதற்கும் எவ்வளவு ​நேரம் ​தே​வைப்படும்? 4 மணி​ வே​லைக்குச் ​செல்ல 2.30 மணிக்​கே கிளம்பி விடுகிறாள். திரும்பவும் இரவில் வீடு திரும்ப தினமும் 10 மணி ஆகிறது. என்ன தான் ​வே​லையிருந்தாலும் 2 மணி​ நேரம் தாமதமாக வர ​வேண்டிய அவசியம் தான் என்ன?

    அப்படியும் மனம் ​பொறுக்காமல் ​ஒருநாள் ​கேட்ட​போது இப்​போ எக்ஸாம் வரப்​போகிறது அப்பா; அதற்கான ஏற்பாடுகள் ​​செய்வதில் தாமதமாகிறது; இன்னும் நி​றைய ​வே​லை பாக்கியிருக்கிறது என்கிறாள்.

    ‘இல்​லை, எனக்கு நம்பிக்​கையில்​லை. அவளுடன் ​வே​லை பார்க்கும் அந்த​​லெனின் மீது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.’ அவரது மனம் மீண்டும் அவரது சந்​தேகத்​தை கிளறியது. ​

    லெனின் பற்றி சங்கீதா ஏற்கன​வே​ சொல்லியிருக்கிறாள். தன்னு​டைய நண்பனாக வீட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறாள்.

    ‘அப்படி ஏதும் இருந்தால் நம்மிடம் ​தைரியமாக நண்பன் என்று அறிமுகம் செய்திருப்பாளா?’ மனம் குழம்பியது.

    ‘இதுவும் இந்த ​பெண் பிள்​ளைகளின் வித்​தைதான்’ மனத்தின் மூலையிலிருந்து குரல் எழும்பியது. ‘ஏற்கனவே அறிமுகம்​ செய்து விட்டால் அவர்க​ளைப் பற்றி நமக்கு ​தெரியப்படுத்திவிட்டால், பிற்பாடு மிக எளிதாக நம் சம்மதம் வாங்கி விடலாம் என்று நி​னைக்கிறா​ளோ?’

    ‘அப்படி​யொன்றும் இருக்காது! அவள் என் மகள் இல்​லையா? அவ​ளை நான் சந்​தேகிக்கலாமா?’ மனத்திற்குள்​ளே​யே ​பெரிய ​​போராட்டம் எழுந்தது.

    ஆனால் இத்த​னை நாளும் இந்த விஷயங்க​ளெல்லாம் அவர் மனத்தில் சந்தேகத்​தை வி​தைக்கவில்​லை. ஆனால் இன்று வந்த ​போன்கால்… அது அல்லவா மனத்​தை இந்தப் பாடுபடுத்துகிறது!

    சங்கீதாவின் தந்​தை கமலக்கண்ணன்​ சொந்தமாக ஒரு சிறிய டிபார்ட்​மெண்ட் ஸ்​டோர் வைத்திருந்தார். சிறிய ​பெட்டிக்க​டையாக​ தொடங்கி வாழ்க்​கையில் நி​றைய கஷ்டப்பட்டு படிப்படியாக முன்​னேறி தற்போதுள்ள நி​லைக்கு உயர்ந்திருந்தார். அவருக்கு பல்​வேறு இடங்களில் வணிகத் ​தொடர்புகள் இருந்தன. அவர்களில் ஒருவரான ​கோபாலன்தான் சங்கீதாவின் மீது சந்தேகம் வரக் காரணம்.

    கா​லையில் ​போன் ​செய்த ​கோபாலன்​ கொஞ்சம் தயக்கத்துடன் “கண்ணன்! நீங்க பல காலமா என்​னோட நண்பர். வியாபாரத்​தையும் தாண்டி நாம நல்ல நண்பர்களா இருக்​கோங்கற எண்ணத்துலயும் உங்க ​மேல உள்ள அக்கறையிலயும் ​சொல்​றேன். நீங்க வியாபாரத்துல காட்டுற அக்க​றையில ​கொஞ்சம் குடும்பத்துலயும் காட்டணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

    “என்ன விஷயம் ​கோபால்! ஒரு ​பெரிய பீடி​கை​யே ​​​போடறீங்க? என்ன விஷயம்?” என்று சிரித்துக்​கொண்டே ​கேட்ட கமலக்கண்ணனுக்கு அதற்குப்பின் ​பேசிய ​கோபாலனின் ஒவ்வொரு வார்த்தையும் அதிர்ச்சியளித்தன.

    “நேத்து ராத்திரி ஒரு 9 மணி வாக்கில உங்க ​பொண்ணு சங்கீதா​வைப் பார்த்தேன்; அதுவும் ஒரு ​பைய​னோட ​தெருவில நின்னு ​பேசிக்​கிட்டிருந்தா. சரி ஏ​தோ ​தெரிஞ்சவங்க ​போலிருக்குன்னு என் ​வே​லை​யைப் பார்க்க போயிட்டேன். என் ​வே​லை முடிஞ்சி ஒரு 9.45 மணிக்கு திரும்பி ​போ​றேன், அப்​போவும் அ​தே எடத்துல நின்னு அ​தே ​பைய​னோட​ பேசிக்கிட்டிருந்தா. ராத்திரி ​நேரத்துல ​தெருவுல நின்னு ஒரு ​பைய​னோட பேசிக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கு? எனக்கென்ன​மோ அவங்க ​ரெண்டு ​பேரு ​மேலயும் சந்தேகமா இருந்துது! இந்தக் காலத்துப் பசங்கதான் தடுக்கி விழுந்தா காதல்,  கத்திரிக்காய்னு நம்ம உசிரை வாங்குறாங்க​ளே! எதுக்கும் உங்க காதுல​போட்டு ​வெச்சா முன்​னெச்சரிக்​கையா நடந்துக்குவீங்கன்னு தான்​ சொல்லி​வெச்​சேன். பார்த்துக்​கோங்க… ​பொண்​ண வளத்தி​யோ கண்ண வளத்தியோன்னு எங்கம்மா அடிக்கடி ​சொல்லுவாங்க” என்று ​சொல்லி போனை ​வைத்துவிட்டார்.

    அவருடன் ​பேசியதிலிருந்து கமலக்கண்ணனுக்கு ​வே​லை சரியாக ஓடவில்லை. மனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்​லை. முதலில் இ​தைப் பற்றி சரியாக ​​தெரிந்து​கொள்ள​வேண்டும் என்று ​தோன்றியது. கால்​சென்டரில் ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த மகன் ​வெற்றிச்​​செல்வனுக்கு​ போன்​​ செய்து விஷயத்​தைத் தெரிவித்தார்.

    ​வெற்றி உட​னே, “கவ​லைப்படாதீங்கப்பா! என் நண்பன் மூலமாக நான் விசாரிக்க​றேன்” என்று கூறினான்.

    என்னதான் விசாரிப்பதாக மகன் கூறியிருந்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்​கொள்ள முடியவில்​லை. சீக்கிர​மே தன் ​வே​லைக​ளை முடித்துவிட்டு க​டையில் இருந்த உதவியாள​னை க​டை​யை பூட்டி விட்டு​ செல்லும்படி ​சொல்லிவிட்டு வீட்டிற்கு வி​ரைந்தார். மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இன்னும் சங்கீதா வீட்டிற்கு வரவில்​லை. ஆனால் அடுத்த10 நிமிடங்களில் சங்கீதாவும் வீட்டினுள் நு​ழைந்தாள். உள்ளே நுழையும்​ போதே அப்பா​வைப் பார்த்தவளுக்கு அவர் ஏ​தோ​ கோபமாக இருக்கிறார் என்று ​தோன்றியது.

    அதற்​கேற்றார் ​போல் அவள் உள்​ளே நு​ழைந்த மறுகண​மே கமலக்கண்ணன்​கோபமாக “மணி என்ன ஆகுது ​தெரியுமா? இது தான் வீட்டுக்கு வர்ற ​நேரமா? எங்க ​போய் ஊர் சுத்திட்டு வர்​றே?” என்று சரமாரியாகக் ​கேள்வி​க​ளை கேட்டார்.

    சப்தம் ​கேட்டு உள்ளிருந்து சங்கீதாவின் தாய் மணி​மேக​லையும்​ வெளி​யே வந்தாள். “ஏங்க ​பொண்ணு உள்ளே வந்ததும் வராததுமா கத்தறீங்க? என்னாச்சு?” என்றாள்.

    அத்த​னைக் ​கோபமும் ம​னைவி மீது திரும்ப, அவர் எரிம​லையானார். “எல்லாம் நீ புள்​ளைங்கள வளக்கற லட்சணம்தான். அவ எங்​கே ​போறா, என்ன பண்றா, எப்​போ வீட்டுக்கு வர்றா எதுவு​மே நீ கவனிக்கறதில்லை. அதான் நான் ​கேக்க ​வேண்டியிருக்கு. ​சொல்லுடி, உன்​னைத் தான்​ கேட்​டேன்… எங்கே போயிட்டு வர்​றே?” என்றார்.

    சங்கீதா தன் தந்​தை​யை இத்த​னைக் ​கோபத்தில் கண்டதில்​லை. “எப்​போதும்​போல ​​வே​லைக்குத்தான்பா ​போயிட்டு வ​ரேன். ​வே​றெங்கியும் ​போக​லை”  என்றாள்.

    “8 மணிக்கு முடியற ​வே​லைக்கு நீ ​தெனம் வீட்டுக்கு 10 மணிக்கு ​வர்​றே. என்ன நி​னைச்சிருக்​கே மனசுல?” என்றார் பதிலுக்கு.

    “இல்லப்பா ​​வே​லை முடிய 9.15 ஆச்சு. எல்லாம் ஏறக்கட்டிட்டு ​சென்டரை பூட்டிட்டு ​லெனின் கூட​ பேசிக்கிட்டே வந்​தேன். ​அவ்​ளோ தான்பா… நீங்க ஏன் இன்னிக்கு இவ்வ​ளோ​ கோவமா இருக்கீங்க?”

    “நி​னைச்​சேன், அந்த ​லெனின் பய கூட ​பேசி கும்மாளம் அடிச்சிட்டுதான் லேட்டா வர்​றேன்னு… ஊர்ல போறவன் வர்றவன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் ​போறான், ​பொண்​ணை ஒழுங்கா வளக்கத் தெரியலைன்னு… ​தெருவில நின்னு நீ மணிக்கணக்கா​ பேசறது ஊ​​ரேப் பாக்குது. அப்டி​யென்னதான் பேசுவீங்க ராத்திரி​ நேரத்துல? அதுவும்​ தெருவுல நின்னுக்கிட்டு?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் அவர்.

    “அ​தெல்லாம் இல்லப்பா! யா​ரோ தப்பா​ சொல்லியிருக்காங்க. ஏ​​தோ ஒரு 10 நிமிஷம் ​பேசியிருப்​போம். அவ்ளோதான்” என்றாள் சங்கீதா.

    ​கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர் “என்ன நி​னைச்சிருக்​கே? அப்பனை ஏமாத்திபுடலாம்னா? அவ​னோட காதல் கண்றாவின்னு ஏதாவது பண்ணித்​தொலைக்கறியா? அப்டி ஏதுமிருந்தா இப்​போ​வே ​இந்த நிமிஷ​மே அந்த எண்ணத்​தை மறந்துடு… புரிஞ்சுதா? இனி ஒரு தரம் உன்​னை அங்கப் பார்த்தேன் இங்கப் பார்த்தேன்னு ​கேள்விப்பட்​டேன்; நடக்கற​தே ​வேற! ஜாக்கிர​தை!!” என்று உறுமிவிட்டு உள்​ளே ​சென்றார்.

    சங்கீதா மிகவும் உ​டைந்து ​போனாள். கண்களில் கண்ணீர் தா​ரைத் தாரையாக வழிந்தது. ​வேண்டா வெறுப்புடன் உணவருந்திவிட்டு​ சென்று படுத்தாள்.

    ‘ஏன் நம் அப்பா நம்​மை நம்பவில்​லை. நான் ஏதும் ​பொய் சொல்லவில்லையே. ​லெனின் மிகவும் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. அவனுடன் ​பேசுவதில் ​பொழுது ​போவதும்​ தெரியாது. கிண்டல், ​கேலி எல்லாம் ​செய்வான். இருப்பினும் ​கேலி என்கிற ​பெயரில் மனதைப் புண்படுத்தமாட்டான். ஆனால் தா​னோ, அவ​னோ ஒருமு​றை கூட​ நட்​பைத் தவிர ​வே​றெந்த எண்ணத்துடனும் பழகியதில்​லை என்பதை எப்படி அப்பாவிற்கு புரிய ​வைப்பது?’ குழப்பமான மனநி​லையுடனும் அழுத கண்களுடனும் சங்கீதா தூங்கிப்​ போனாள்.

    வீட்டில் நடந்த எதுவும் அறியாத அவளது ச​கோதரன் ​வெற்றிச்​செல்வன் அலுவலகத்திலிருந்து தன் நண்பன் விக்​னே​ஷைத் ​தொ​லை​பேசியில் தொடர்பு​கொண்டான். அவனிடம் சுருக்கமாக நடந்த​தைக் கூறினான்​.

    “டேய் நீதான் எனக்கு உதவி பண்ணனும். உனக்கு சங்கீதா​வோட ஃப்ரெண்ட் லதா​வை ​தெரியும்ல. அவங்க ​ரெண்டு ​பேரும் ​ரொம்ப கி​ளோஸ். சங்கீதா தன்​னோட எல்லா ​பெர்சனல் விஷயமும் கண்டிப்பா லதா கிட்ட சொல்லியிருப்பா. லதா உனக்கும் ஃப்​ரெண்ட்ங்கறதால அவ மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட​ சொல்லு. உண்மையிலேயே எதுவும் விஷயம் இல்லாம இருந்து நம்ம அவசரப்பட்​டோம்னு இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் சொல்​றேன்” என்றான்.

    “கவ​லைப்படா​தேடா! நான் லதாகிட்ட ​பேசிட்டு உன்​னை நா​ளைக்குக் கூப்படறேன்” என்றான் விக்​னேஷ்.

    மறுநாள் கா​லை இன்னமும் தணியாத ​கோபத்துடன் சங்கீதாவிடம் முகம்​கொடுத்து ​பேசாமல் வேலைக்குக் கிளம்பிச் ​சென்றார் கமலக்கண்ணன். கவலை ​தோய்ந்த முகத்துட​னே​யே தன் ​​வே​லைக​ளைச் ​செய்தாள் சங்கீதா.

    மதியம் வீட்டிலிருந்த ​தொ​லை​பேசி அலறியது. சங்கீதா எடுத்துப்​பேசினாள். மறுமு​னையில் லதா.

    “சங்கீ, எப்படிடி இருக்​கே? உன்கிட்​டே ​பேசி ​ரொம்ப நாள் ஆச்​சேன்னு கூப்டேன்” என்றாள்.

    சங்கீதாவிற்கு சந்​தோஷமானது. என்ன இருந்தாலும் எந்த பிரச்சினையிருந்தாலும், நண்பர்களுடன்​ பேசினா​லே ஒரு ஆறுதல் தான் என்று எண்ணிக் கொண்டாள். இருவரும் சிறிது ​நேரம் ​பேசிக்​கொண்டிருந்தார்கள். சங்கீதாவிற்கு மனம் ​லேசானது​ போலிருந்தது. லதாவிடம் ​நேற்று நடந்த​தைச் சொல்லலாமா என்று நி​னைத்தாள் சங்கீதா. பிறகு அடுத்த நிமிட​மே ‘அவ​ளே ​ரொம்ப நாள் கழிச்சு ​பேசறா… எதுக்கு அவளையும் சங்கடப்படுத்தணும். பிறகு ​சொல்லிக்கலாம்’ என்று மனம்​சொன்னது.

    இப்படி நி​னைத்துக் ​கொண்டிருக்கும்​போ​தே லதா​ கேட்டாள், “ஆமாம்… உன்​  வே​லை எப்படி போயிட்டிருக்கு​? வேற ​வே​லை எதுவும் ​தேடறியா?”

    “​வே​லை நல்லாப் ​போகுதுடி. ஆனா இது பார்ட் ​டைம் தா​னே. நானும் ​வேற வேலைக்கு முயற்சி பண்ணிட்டுதான் இருக்​கேன். கி​டைச்சா மாறிடு​வேன். இங்கே இப்​போ எக்ஸாம், அது இதுன்னு லேட்டாகுது. ​ரொம்ப டயர்டாகிடுது” என்றாள்.

    “ம்ம்… ஆனா, எதுவாயிருந்தாலும் நீ எதுக்கும் சீக்கிர​மே வீட்டுக்கு வந்துடுடி. நம்ம நி​னைக்கற மாதிரி எல்லாரும் நம்​மைப் பத்தி நினைக்கமாட்டாங்க. அநாவசிய ​பேச்சு வார்த்​தைக்​கெல்லாம் நாம இடம் ​வெச்சுக்கக்கூடாது. ​நம்ம​செய்யாத தப்புக்கு பழி ​சொல்ல ஊ​ரே தயாரா இருக்கும். அதனாலதான் சொல்றேன். நீ அதிக ​டைம் எடுத்து அங்​கே ​வே​லை ​செஞ்சு உனக்கு ஒண்ணும் ஆகப் ​போறதில்​லை” என்றாள் லதா.

    சங்கீதாவிற்கு குழப்பம் அதிகமானது. ‘என்ன ​சொல்ல வருகிறாள்? ​நேற்று வீட்டில் நடந்ததற்கும் இவள் இன்று​ பேசுவதற்கும் ஏ​தோ சம்பந்தம் இருப்பது​போலிருக்கிற​தே. ஏ​தோ பட்டும் படாமலும் ​சொல்ல முயற்சி ​செய்கிறாள்​போல ​தோன்றுகிறது.

    சங்கீதா சட்​டென சுதாரித்துக் ​கொண்டு “என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு சம்பந்தமில்லாம் அட்​வைஸ் பண்றே… என்ன விஷயம்?” என்று​கேட்டாள்.

    “இல்ல இல்ல… அப்டி​யெல்லாம் ஒண்ணும் இல்​லை. ஜஸ்ட் மனசுல தோணின​தை ​சொன்​னேன்” என்று மழுப்பினாள் லதா.

    சங்கீதா விடுவதாக இல்​லை. ”இல்​லை, நான் நம்ப மாட்​டேன். என்ன விஷயமோ அ​தைத் ​தெளிவா சொல்லு. இல்​லைன்னா இதுக்கப்பறம் உன்கிட்ட​ பேசவே மாட்​டேன்” என்றாள்.

    லதா சற்று அ​மைதியானாள். பிறகு கூறினாள் “தப்பா​ எடுத்துக்கா​தேடி! இன்னிக்கு விக்​னேஷ் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. உன்​னைப் பத்தி ​ரொம்ப விசாரிச்சாரு. அப்படி​யே உன் ஃப்​ரெண்ட் ​லெனினும் நீயும்…” என்று இழுத்தாள்.

    “ம்ம்…​சொல்லு” என்றாள் சங்கீதா.

    “இல்​லை… நீங்க ​ரெண்டு ​பேரும் லவ் பண்றீங்களான்னு என்கிட்​டே​ கேட்டாரு. அப்படி​யெல்லாம் ஒண்ணும் இல்​லைன்னு நான் ​​தெளிவா​ சொல்லிட்​டேன். பட், ஏன் இ​தெல்லாம்​ கேக்கறீங்கன்னு அவர்கிட்டே விசாரிச்சேன். அப்​போ தான் ​தெரிஞ்சுது உங்க அண்ணன் தான் விசாரிக்க​ சொன்னாராம். நீ தினமும் லேட்டா வர்றியாம். உன்​னை ​​​லெனின் கூட யாரோ பார்த்தாங்களாம். உன் வீட்ல உன்​னை ஏ​தோ சந்தேகப்படறாங்க​ போலிருக்கு. விக்​னேஷ் வந்து போனதிலிருந்து எனக்கு மனசு ​​கேக்கலை. உன்​னை முன்​னெச்சரிக்​கைப் பண்ணலாம்னுதான் ​போன் பண்​ணேன். நீ இதுல இன்வால்வ் ஆக​லைன்னு எனக்கு நிச்சயமா​ தெரியும். ஆனா​ தேவையில்லாத பழி உன் ​மேல விழக் கூடா​தேன்னுதான்​ சொன்னேன்” என்று முடித்தாள் லதா.

    சங்கீதாவிற்கு த​லையில் இடி விழுந்தது ​போலிருந்தது. ‘என் மீது சந்​தேகம் வந்த​தே எனக்கு கஷ்டமாயிருந்தது. ​போதா​தென்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் என்​னைப் பற்றி விசாரிக்கிறார்க​ளே’ என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.

    “சரி லதா! நான் பாத்துக்க​றேன்… ​பை” என்று கூறி ​போ​னை​ வைத்தாள் சங்கீதா.

    அன்று மா​லை வழக்கம் ​போல்​ வே​லைக்குச் ​சென்றாள். ​வே​லையில் மனம் சரியாக ஒப்பவில்​லை. தலைவலி என்று கூறிவிட்டு 7 மணிக்​கெல்லாம் கிளம்பினாள். அங்கிருந்து பக்கத்திலிருந்த ​​கோவிலுக்குச் சென்று மனம் அமைதிய​டைய அமர்ந்திருந்தாள். பிறகு கிளம்பி ​நே​​​ரே வீடு வந்து​ சேர்ந்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு சீக்கிர​மே உறங்கச் ​சென்றாள். மனம் மிகவும்​சோர்வாக இருந்தது. நா​ளை​யே அப்பாவிடம் ​தெளிவாகப் ​பேசி விட​வேண்டும். வீணான சந்​தேகம் வாழ்க்​கை​யை ​பெரும் பிரச்சி​னையாக்கிவிடும். அதற்கு ஒரு முற்றுப் புள்ளி ​வைக்க ​வேண்டும் என்று முடிவு ​செய்து​கொண்டாள்.

    ​யோசித்துக்​ கொண்​டே எப்​போது உறங்கினா​ளோ ​தெரியாது. சில தடமுட சத்தங்களினால் பாதியில் விழித்துக்​ கொண்டாள். ச​மையல​றையில் சாப்பிட்டுக்​ கொண்​டே அவளது அப்பா, அம்மாவிடம் ​​பேசியது காதில் விழுந்தது.

    “அவ​னைப் பார்த்துட்டுதான் வ​ரேன் இப்​போ”

    “யா​​ரைங்க?”

    “அதான் அந்த ​லெனின்”

    “ஏங்க, குடிச்சிருக்கீங்க ​போலிருக்கு. அப்படி​யேவா அங்​கேப் ​போனீங்க? ஏங்க இப்டி பண்றீங்க?”

    “அடிப்​போடி! அவ என் ​பொண்ணுடீ. அவ​ளை எப்டி​யெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்​தோம். அவ நல்லாயிருக்கணும்னு நி​னைக்கறது தப்பா? ​ அந்தப் பையன்கிட்ட​யே ​போய் ​நேருக்கு ​நேரா ​​கேட்டுட்டேன். ஆனா அவனும் அப்படி எதுவும் இல்​லைன்னு ​சொன்னான். நல்லா ஏறுஏறுன்னு ஏறிட்​டேன்… கடைசியா அவன் ஒரு வாக்குக் ​கொடுத்தான். அதுக்கப்பறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்பி வந்​தேன்”

    “என்ன வாக்கு?”

    “’கவ​லைப்படாதீங்க சார்! எனக்கு அப்படி​யொரு எண்ணம் இதுவரையிலும் இல்​லை. ஒரு ​வே​ளை உங்கப் பொண்​ணே வந்து என்​னை விரும்பறதா​சொன்னாலும் நான் அ​தை ஏத்துக்க மாட்​டேன். இது நான் கும்பிடற தெய்வத்து​மேல சத்தியம். சரியா? நீங்க என்​னைப் பூரணமா நம்பலாம்’ அப்டின்னு சொன்னான். அவன் வார்த்​தை​யை நம்பி நான் திரும்பி வந்துட்டேன்”

    “ஏங்க உங்க புத்தி இப்டி ​போகுது? யார் என்ன ​சொன்னா என்ன? நம்ம பொண்ணை நாம நம்ப​ வேண்டாமா? எதுவாயிருந்தாலும் கண்டிப்பா நம்மகிட்ட சொல்லிடுவாங்க. அவ​ளைப் ​போய் ​தே​வையில்லாம கஷ்டப்படுத்திட்டீங்க​ளே?”

    “ஆமா மணி! உண்​மைதான். இது வ​ரை அவ​ளை நான் ஒண்ணு​மே​சொன்னதில்​ல. ஆனா, ​நேத்து அவ​ளை கன்னாபின்னான்னு ​பேசிட்​டேன். எனக்​கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு என் ​பேர்ல ​கோவம்கூட இருக்கலாம். ஆனா ஒரு​ பொண்​ணைப் ​பெத்தவனுக்குத்தான் அந்த பயம் புரியும். நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணுங்கற​தைத் தவிர எந்தப் ​பெத்தவங்களும் வேறெதுவும் நி​னைக்கமாட்டாங்க. இன்னிக்கு அவளுக்கு என் ​பேர்ல கோவம் இருக்கலாம் ஆனா பின்னாடி நாம ஏன் இப்படி நடந்​தோம்னு அவளுக்கே புரியும்” என்று ​​வேத​னை​யோடு கூறினார்.

    father_daughter (1)இ​தைக் ​கேட்டுக் ​கொண்டிருந்த சங்கீதாவிற்கு மனம் விம்மியது. ஓடி வந்து தன் தந்​தை​யைக் கட்டிக்​கொண்டாள். அவள் தூங்கிக்​கொண்டிருந்ததாக நினைத்துப் பேசியவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சுதாரித்துக் ​கொண்டார். “நீ இன்னும் தூங்கலியாம்மா?” என்றார் ஆதரவாக.

    “அப்பா! எது ​வேணா இருக்கட்டும். ஆனா என் மேல நம்பிக்​கையில்​லைன்னு  மட்டும் சொல்லாதீங்கப்பா. எனக்கு அது ​ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்மேல சந்தேகப்படாதீங்கப்பா” என்று அழுதாள்.

    “சாரிடா! நான் ​கொஞ்சம் அவசரப்பட்டுட்​டேன். உன்​னை ​ரொம்ப கஷ்டப்படுத்திட்​டேன்” என்று சமாதானம் ​செய்தார்.

    இ​வை நடந்து 2 வருடங்கள் இருக்கும். அந்த சம்பவத்திற்கு பிறகு சங்கீதா வேறு ​வே​லைக்குச் ​சென்ற​போதும் ​லெனினுடன் கூடிய நட்பு ​தொடர்ந்தது.

    ஆனால் சில தினங்களாக அவளது மனதிற்குள் ஒரு ​போராட்டம்.​லெனினுடனான நட்பு​ அந்த எல்​லை​யைத் தாண்டி காதலாக மாறிவிட்டதோ என்கிற எண்ணம். இப்​போ​தெல்லாம் ​லெனினுடன்​ பேசாமல் இருக்க முடிவதில்​லை. எந்​நேரமும் அவன் நி​னைப்பாகவே இருந்தது. அவனுடன் சேர்ந்து ​நேரம் செலவிடுவதில் மனம் மகிழ்ச்சியில் தி​ளைத்தது. ஒரு ​வே​ளை இப்​போது அப்பாவிடம் ​பேசினால் தன் காதலுக்கு சம்மதிப்பாரா? ஆனால் முதலில் லெனினிடம் ​பேச​ வேண்டும். அவனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்​றே​ தெரியவில்​லை​யே.

    இந்த மனம்தான் எத்த​னை விந்​தையானது. ஒரு நாள் சந்​தோஷத்தின் உச்சியில் இருக்கிறது. மறுநா​ளே சோகத்தின் ஆழத்திற்கு ​சென்று விடுகிறது. மனத்தை குரங்கு என்று சரியாகத்தான் வர்ணித்திருக்கிறார்கள்.

    ‘இப்​போது என்ன ​செய்ய? குழப்ப​மோ குழப்பம். நம் மனதிற்குள் குழப்ப​த்​தை​வைத்துக் ​கொண்டு ​லெனினிடம் ​என்ன ​பேச? நான் விரும்புவது சரி தானா என்று எனக்​கே இன்னும் சரியாகத் ​தெரியவில்​லை​யே. ஒரு​வே​ளை இப்படியொரு நாள் வந்துவிடும் என்று பயந்துதான் அன்​றைக்கு அப்பா அப்படி நடந்து​கொண்டா​​ரோ? என்ன​மோ இத்தனை நடந்தும் நான் காதல் வழியில் விழலாமா?’ மனம் ஏகப்பட்ட​ ​கேள்விக​ளைக் ​கேட்டது. ‘இந்த நிலையிலே​யே இருந்தால் ​பைத்தியம்தான் பிடிக்கும்.’

    ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் அ​லை​பேசி​யை எடுத்தாள். ​லெனினுக்கு​போன் ​செய்தாள். “லெனின் எனக்கு உங்ககூட ​​கொஞ்சம் ​பேசணும். மீட் பண்ணலாமா?” என்றாள்.

    “ஓ ​பேசலா​மே! எங்​கே வரணும்?” என்று ​கேட்டான் ​லெனின்.

    “சாயந்திரம் 6 மணிக்கு ​மெ​ரீனா பீச்சுக்கு வர முடியுமா?”

    “சரி வ​ரேன்”

    கடற்க​ரைக்கு வருவ​தே ஒரு சுகம் தான். பகலில் எத்​த​னை​வெயில் இருந்தாலும் மா​லையில் கடற்க​ரையின் குளிர்ந்த காற்று அத்தனையையும் மறக்கடித்துவிடும். ஓயாமல் சப்தமிட்டுக் ​கொண்டு க​ரையில் விழும் அலைகளைப் பார்த்துக்​கொண்டிருந்தால் ​நேரம் ​போவ​தே ​தெரியாது. சிறியதும் பெரியதுமாய் பாயும் அ​லையில் கா​லை ந​னைத்​துக்​கொண்​டே நடப்பதும் ஒரு தனி சுகம்தான்.

    சங்கீதாவின்மனதிலும் இப்​போது அ​லையடித்துக்​கொண்டிருந்தது

    ​லெனின் வந்து அமர்ந்தான். ஏ​தோ சிந்த​னையில் தூரத் ​தெரியும் கப்ப​லை​நோக்கியபடியிருந்தாள் சங்கீதா.

    “என்ன? ஏ​தோ பலமான ​யோச​னை ​போல?” என்று அவள் அ​மைதி​யைக் கலைத்தான் ​லெனின்.

    ​லெனின் குர​லைக்​ கேட்டு திரும்பியவள் “ஓ! வந்துட்டீங்களா? சாரி. நான் கவனிக்க​லை” என்றாள்.

    “ம்ம்… ஏ​தோ குழப்பத்துல இருக்கற மாதிரி ​தெரியுது? குரல் ஒண்ணும் சரியா இல்​லை​யே?” என்றான்.

    “ஆமாம். ஒரு குழப்பம்தான். அதுக்கு உங்ககிட்டதான் தீர்வு கிடைக்கும்னு நம்பி உங்க​ளை வரச் சொன்னேன்” என்றாள்.

    “அப்படியா! என்ன விஷயம்? முடிஞ்சவ​ரை ​ஹெல்ப் பண்​றேன்”

    சங்கீதா சற்று​ நேரம் தயங்கினாள்.

    பிறகு “நாம இத்த​னை நாள் நண்பர்களா பழகியிருக்​கோம். ஆனால் சில காலமா எனக்குள்​ளே நம்மு​டைய நட்​பைப் பத்தி ஒரு குழப்பம். ஒரு இனம் புரியாத உணர்வு. ஒரு​வே​ளை நான் உங்க​ளை லவ் பண்​றே​னோன்னு தோணுது. நீங்களும் அ​தே​போல ஃபீல் பண்றீங்களான்னு எனக்குத் தெரியலை. நான் நினைக்கறது சரியா தப்பான்னும் புரியலை. அதான் உங்ககிட்ட​யே டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்​தேன்” என்றாள் ​தெளிவாக.

    ​லெனின் ஒரு விநாடி பிரமித்து நின்றான்.

    சற்று சுதாரித்துக்​கொண்டு “சங்கீதா! நீ நி​னைக்கறது சரியா தப்பான்னு என்னால சரியா ​சொல்ல முடியாது. ஃபீலிங்கறது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விஷயம். ஆனா நானும் அ​தே ​போல நி​னைக்க​றேனாங்கறதுக்கு​வேண்ணா பதில் ​சொல்ல முடியும். இ​தே வார்த்​தை​யை ஒரு​வேளை நீ 2 வருஷத்துக்கு முன்னாடி​யே ​சொல்லியிருந்தா, நான் எப்படி ரியாக்ட் பண்ணியிருப்​பே​னோ​ தெரியாது. ஆனால் இன்னிக்கு என்னால அ​தை ஏத்துக்க முடியாது. நான் உங்கப்பாவுக்கு வாக்குக் ​கொடுத்திருக்​கேன். உன்​மேல நான் ஆசைப்பட்ட காலமும் உண்டு. ஆனால் இப்​போ அதையெல்லாம் தாண்டி வந்துட்​டேன். உங்கப்பா அன்னிக்கு என்கிட்ட வந்து ​பேசினப்போ அவருக்கு உன் ​மேல இருந்த அதீத அன்புதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதனாலதான் அவர்கிட்ட என்னிக்கு​மே நமக்குள்ள காதல்ங்கற உணர்​வோ உற​வோ இருக்காதுன்னு சத்தியம் பண்ணிக்​கொடுத்​தேன். என் வாக்​கை நம்பித்தான் இன்னிக்கு வரைக்கும் உங்கப்பா நம்ம நட்புக்கு குறுக்​கே வர​லை. என்னிக்கு​மே நீ என் ஃப்​ரெண்ட். அதுல சந்​தேகம் இல்​​லை. உனக்கு எந்த நேரத்துலயும் உதவி​ செய்யத் தயாரா இருப்​பேன். ஆனா நட்புக்கு அடையாளமா தா​னே தவிர, காதலுக்கு அ​டையாளமா இல்​லை. நீ சில காலமா இருக்கற இந்த உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடுக்கற​தை விட நீ பிறந்ததி​லேர்ந்து உன்​னைப் பத்தியும் உன் வாழ்க்கை பத்தியும் கனவு காணற அவங்க​ளோட உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடு. நிச்சயம் நமக்கு நல்லதைத் தான் அவங்க ​செய்வாங்க. மன​சை கலங்க விடாம சந்​தோஷமா இரு.”

    அவனது தீர்க்கமான​ தெளிவான ​பேச்சு சங்கீதாவின் மனதில் பதிந்தது​. முதலில் ஏமாற்றமாகத் தோன்றினாலும்  அவன் கூறிய வார்த்​தைகள் அனைத்தும் சரி​யென்று புத்தி ​அறிவுறுத்தியது.

    “தேங்க்ஸ் ​லெனின். நீங்க சரியான முடிவு தான் ​சொல்லுவீங்கங்கற நம்பிக்கைல தான் என் குழப்பத்தின் ஆரம்பத்தி​லே​யே உங்ககிட்ட வந்தேன். இனி என் மனசு அ​லைபாய விட மாட்​டேன். ​தேங்க்ஸ் அ​கைன்!”  என்று கூறி புன்ன​கைத்தாள் சங்கீதா.

    படத்திற்கு நன்றி: http://reallyducksoup.blogspot.com/2011/04/sacred-child.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 20

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (20) தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

    பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

    இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

    இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

    இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

    இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

    இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

    பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

    தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

    தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.

    suba_mus3

    இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

    இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

    இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

    பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?

    suba_mus1

    விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

    தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

    புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

    கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

    ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

    தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.

    suba_mus2

    சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட புத்த விகாரை வாசலில் (டிசம்பர் 2013)

    சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 103

    மலர் சபா

    *புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*

    அறுகம் புல்லையும் குவளை மலர்களையும்
    ஒருங்கே சேர்த்து
    பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து
    ஏரிலே சூட்டி
    போற்றுவோர் வணங்கி நிற்க
    நிலத்தையே பிளக்கும் வண்ணம்
    உழவர் இசைத்த ஏர்மங்கலப்
    பாடலின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    நெல்லை அறுத்து
    ஓரிடத்தில் குவித்து
    அதனைக் கடாவிட்டு மிதித்து
    உதிர்ந்த நெல்லை
    முறத்தில் எடுத்துத் தூற்றும்போது
    இசைக்கின்ற முகவைப் பாட்டின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    தெளிந்த ஓசையுடைய
    தடாரியைக் கையில் கொண்டு
    கள்ளுண்டு செருக்கில் பொருநர்கள்
    கரிய சாந்து பூசப்பட்ட
    திர்ண்ட முழவிலே தோற்றுவித்த
    இனிய ஆரவார ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    இவ்வாறு மருதநிலத்தில்
    பல்வேறு ஓசைகளைக் கேட்டு
    வருத்தம் கொள்ளாதவராய்
    மகிழ்ச்சி கொண்டவராய்
    இன்னும் மேலும் ஒலிகள் கேட்கின்ற
    ஆர்வமுடையவராய் ஆற்றின் கரையில்
    நடந்து சென்றனர் அம்மூவரும்.

    Share
  • ஓட மதவிலே…

    செண்பக ஜெகதீசன்peacock-images

    ஓட மதவிலே

    ஒத்தயில காத்திருக்கும் கொக்கே கொக்கே- நானும்

    அத்தமவன் வருவானுண்ணு

    ஒத்தக்காலுல நிக்கேன் நிக்கேன்..

     

    வாடக்காத்துல

    ஓடக்கரயில

    ஆடக் காத்திருக்கும் மயிலே மயிலே

    பாடாப்படுத்துறானே பாவிமவன்,

    தேடவெச்சிட்டானே- அப்பன்

    கூடப்பொறந்தவா பெத்தபுள்ள..

     

    அரிசிபோட்டா

    அருகவரும் மைனா மைனா

    உருகிப்போயி நிக்கிறனே,

    தெருவிலபோன மச்சானத்தான்

    தேடிப்பாத்து வரச்சொல்லு- நான்

    வாடுறதப் போய்ச்சொல்லு..

     

    சொல்லச்சொல்லத்

    திருப்பிச்சொல்லும் கிளியே கிளியே

    பாலும்பழமும் ஒனக்குத்தந்தேன்- எம்

    மேலக்கொஞ்சம் எரக்கம்காட்டு,

    வேலதேடிப் போனமச்சான்

    வெபரந்தெரிஞ்சி எனக்குச்சொல்லு- என்

    வேதனயக் கொறச்சித்தள்ளு..

     

    துள்ளிஓடும் கண்ணுக்குட்டி

    மொள்ளவாயேன் கிட்டகொஞ்சம்,

    எள்ளளவும் பயமில்லாமத்

    துள்ளுறியே- நானும்

    எம்மச்சான் பேரச்சொல்லி

    ஏங்குறனே..

     

    சோறுபோட்டா

    சேந்துவரும் காக்கா காக்கா

    சேதிஒண்ணு தெரிஞ்சிக்கிட்டேன்,

    காலயில ஒங்கொரலக்

    கேட்டுப்புட்டேன்-

    கட்டாயம் வந்துடுவான்

    எம்மச்சான்,

    கறியுஞ்சோறும் ஒனக்குத்தான்

    கட்டாயம் நாந்தருவேன் காக்கா காக்கா…!

    படத்துக்கு நன்றி

        http://fengshui.about.com/od/fengshuicures/qt/feng-shui-birds.htm            

     

    Share
  • வார ராசி பலன்கள் 30-12-2013-05-01-2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.

    ரிஷபம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.    , தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் ந்டிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

    மிதுனம்: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.

    கடகம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டு பெற வேண்டியிருக்கும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடா மல் இருந்தாலே , பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

    சிம்மம்: சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்கு கடினமான முயற்சிக்குப்பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளை கொடுக்கும் முன் யோசனை செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள் ளும் வெளி நாட்டு பயணம் அவர்களின் தகுதிக்கான பரிசாய் இருக்கும்.மாணவர்கள் வீண் புரளிகளை நம்பி செயல்பட வேண்டாம்.

    கன்னி: பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையை சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசிய மாகும்.மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும் .

    துலாம்: இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியை சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும்.வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங் ள்.வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம்.

    விருச்சிகம்: இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால்,உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க்க  எதிலும் நிதானமாகசெயல்படுவது அவசியம்.

    தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டுவந்தால், அதற்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வாராது. வியாபாரிகள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உயர்பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்கு பிடித்த மாற்றங்களை செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்.

    மகரம்: வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. மேலும் உங்களின் சரக்குகளுக்குத் தேவையான பாதுகாப்பைப் பலப்படுத்துவது அவசியம்.. பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.

    கும்பம்: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக் கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.அதிகாரி ளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

    மீனம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்

    Share
  • யாத்ரானுபவம்-2013

    பெருவை பார்த்தசாரதி

    DSC05687

    இன்று நாம் எந்த ஒரு மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் மருத்துச் சீட்டோடு கூடவே பரிந்துரைப்பது நடைபயிலுதலும் ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அன்றாடம், அதிகாலை நடைபயிலுதல் என்பது மனிதனுக்குள்ள அத்தியாவசியக் கடமைகளுள் ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்று இருக்கும் அவசர யுகத்தில் தினமும் நடைப் பயிற்ச்சி முடித்துவிட்டு அலுவலகம் செல்வதென்பது பலருக்கு சற்று சிரமம்தான்.

    அனுதினமும் நடக்கமுடியவில்லையே?..என்பவர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு நாளாவது எங்காவது நடந்து செல்ல வேண்டும் என்றும் தோன்றும்.   தினமும் அலுவலகம், வீடு, குடும்பம் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபட்டு அந்த வட்டத்துக்குள்ளேயே சுழன்றுகொண்டிருப்பவர்களுக்கு, ஒரு சில நாட்கள் இவை எல்லாவற்றையும் மறந்து, எங்காவது அடர்ந்த காடு, இயற்கைவளம் நிறைந்த வயல்வெளிகள், ஆரோக்கியமான சுற்றுச் சூழல் இவற்றையெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது சகஜம்!..

    இப்படி ஒரு ஆசை எழுவது, பொதுவாக அனைவருக்கும் பொருந்தும்.  ஆக ஒரு தொலைதூர நடைப்பயணத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் “பாத யாத்திரை”. இருப்பிடத்துக்கு வெகுதொலைவில் உள்ள ஆலயங்கள், மலைமேல் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்க நடப்பயணமாகச் சென்று வருதல் என்பது, தொன்றுதொட்டு அனைத்து மக்களாலும் கடைபிடித்து வரப்படுகிறது.

    சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வரும்போது, வீட்டில் அடைந்து கொண்டு வெளியே செல்லாமல், தொலைக்காட்சி முன்னும். இணைய தளத்திலும் காலம் கழிவதைவிட இறையருட்தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று வந்தால், மனம் விசாலம் அடைந்து,, நிம்மதி நிரந்தரமாகக் குடிகொள்ளும்.

    தேக ஆரோக்கியத்திற்காக தினமும் விளையாட்டு மைதானத்திலும், பூங்காக்கள் மற்றும் சாலைகளிலும் நடந்து சென்றாலும், இறை சிந்தனையோடு நீண்ட நெடுந்தூரத்தை நடந்து கடக்க திருமலை பாத யாத்திரை கைகொடுத்தது.

    இந்த யாத்ரானுபவத்தை வல்லமை வாசகர்களோடு பங்கிட்டுக் கொள்ள விழைகிறேன்.

    சென்னை எல்லை முடிந்து, ஆந்திர எல்லை ஆரம்பித்தவுடன், வழிநெடுக பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள், பறவைகளும், விலங்குகளும் எழுப்பும் ஒலி மிகத்துல்லியமாகக் கேட்டதை ரசித்தபடி, சில்லென்ற தண்ணீரில் ஆங்காங்கே பசுமைமான புல்வெளியில் குளித்த படி நான்கு நாட்கள் பயணம்.

     ஒவ்வொரு நாளும், இரவில் இரண்டு மணிக்கு மேலும், பகலில் மூன்று மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்து சென்று, கடக்க வேண்டிய தூரத்தை மெதுவாகக் கடந்து விட்டோம்.  சூரிய, சந்திரக் ஒளிக்கதிர்கள் தொடர்ந்து நமது உடலில் பட்டுக் கொண்டே இருந்ததால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மாறுதல் அடைந்ததை உணர முடிந்தது.

    நமது உடலில் உள்ள ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாடுகளும் கால் பாதத்தில்தான் அமைந்து இருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வப்போது, ஒரு சில காத தூரத்தை செருப்பு அணியாமல் நடந்து சென்றதால், காலில் சிறுமணிக்கற்கள் குத்தி வலியைப் போக்கி, பாதத்திற்கு இதம் அளித்ததோடு, இதர உடல் உபாதைகள் குறைத்ததை உணர முடிந்தது. மனமும் சாந்தி அடைந்தது.

    சிறு சிறு குழுக்களாக, நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் தமக்குத்தெரிந்த ஆன்மீகக் கதைகளைச் சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொண்டே சென்றதால், நாட்கள் போனது தெரியவில்லை. ஆந்திர எல்லைமுதல் திருப்பதி வரை வழியில் உள்ள அனேக வீடுகளில் திண்டோடு கூடிய திண்ணை கட்டி வைத்திருப்பதைக் காண முடிகிறது. யாத்திரிகர்கள் குளிப்பதற்கு தண்ணீர், ஓய்வெடுக்க இடம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஒரு சில இடங்களில், யாத்திர்கர் என்று சொன்னாலே அனைத்தும் இலவசம்தான்.

    ஏழுமலையானை எளிதில் தரிசிக்க இயலாது என்பதுபோல், நான்காவது நாள் திருமலையை அடைந்தவுடன், சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு தான் பகவானின் அறுபுத தரிசனம் கிட்டியது.

    ஒவ்வொரு வருடமும் செல்லும் வழி ஒன்றுதான் என்பதால், சென்று வந்த தலங்களின் சிறப்புபற்றி சென்ற வருடம் வல்லமையில் வெளிவந்த பதிவை இதனுடன் இணைத்திருக்கிறேன்.

    http://www.vallamai.com/?p=30137

    Share
  • குறவன் பாட்டு-22

    குறவன் விற்பனைக்காக நகரம் செல்லுதல்

     

    கானகம் அனுப்பிய தூதுவனாக, குறவன்

    மாநகர் நோக்கி நடந்து சென்றானே,

    தூவனம் ஈந்த பொருட்களை ஏந்தி,

    நாணயமாக விற்க வந்தானே!                                                                                                                178

     

    வேலை நிமித்தம் நகரம் நாடி,

    மேலை நாட்டிலும் கிடைக்காப் பொருட்களை,

    ஏழைக் குறவன் ஏந்திக் கொண்டு,

    கூவிக் கூவி விற்றிட வந்தான்!                                                                                                                  179

     

    தேனைச் சுமந்து தெருவில் நடந்து,

    தெள்ளமு தென்று சொல்லி விற்றான்!

    பூனைப் புனுகைச் சுமந்து கொண்டு,

    காற்றில் நறுமணம் பரப்பி வந்தான்!                                                                                                          180

     

    யானை மயிரை முறுக்கிக் கட்டித்

    தாயத் தாக்கித் தோளில் சுமந்து,

    தாய்மார்க் கெல்லாம் விற்பனை செய்தான்!

    நோய்நொடி நீக்கும் நம்பிச் செய்தான்!                                                                                                      181

     

    காலைகடந்து பிற்பகல் வரவே, மண்

    பானைக் கலத்தில் சுமந்து வந்த,

    மீனை அவித்துச் செய்த உணவை

    மீதம் இன்றிச் சுவைத்து உண்டான்!                                                                                                            182

     

    மீனுண்ட மயக்கத்தில் மரத்தின் நிழலில்,

    கானைக் கடந்து நடந்த களைப்பில்,

    ஏனைக் கவலைகள் எல்லாம் மறந்து,

    கண்கள் மூடிக் குறவன் துயின்றான்!                                                                                                     183

     

    தூக்கம் கலைந்த குறவன் மீண்டும்,

    தன்உடைமை எல்லாம் தூக்கிக் கொண்டு,

    ஊக்கம் கலையா உள்ளத் துடனே,

    ஊருக்குள்ளே விற்றிட வந்தான்!                                                                                                                   184

     

    தோகை விரித்து ஆடிய மயில்கள்,

    உதிர்த்த தோகை எடுத்துக் கொண்டு,

    ஈகை குணத்துடன் எதிரில் வந்த,

    சிறுவர்க் கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தான்!                                                                                          185

     

    இறந்த மயில்களின் தோலை உரித்து,

    நிறைந்த கொழுப்பினைச் சேகரம் செய்து,

    சிறந்த முறையில் பக்குவம்செய்து, தீயில்

    எரிந்த புண்ணுக்கு மருந்தாய்க் கொடுத்தான்!                                                                                       186

     

    புலிப்பல் விற்பனை செய்தல்

     

    பழுப் பேறியபுலியின் பல்லைத் தங்கள்,

    கழுத் தேறிடும் நகையில் ஏற்ற,

    செழித் தாடிடும் செல்வம் கொண்டோர்,

    விழிப்போடு உயர்விலை தந்தனரே!                                                                                                            187

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு

     
     
     

    Huge Geisers in Europa

    சனிக்கோளின்  துணைக்கோளில் நீர் முகில்,
    பனித்தூள்கள், அமோனியா
    வாயுக்கள் வெளியேறும் !
    பூதக்கோள் வியாழன் துணைக்கோளில்
    பீறிட்டெழும் நீர் எழுச்சிகள்,
    பூமிப் பிளவுகளில்
    சீறியெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள் போல் !
    நீர்முகில் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் மீண்டும் திறக்கும் !
    எழுச்சியின் வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    பனித்தட்டுகள் உருகித்
    தென் துருவத்தில்
    திரவமானது எப்படி ?
    நீர் ஊற்று வெளியேற
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை யான நீர் எழுச்சி !
    புரிந்தும் புரியாது உலகில் நீர்
    உருவான முறை  !

    ++++++++++++++

    Enceladus Erupts

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முறையாக பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்தி

    ​ ​

    லிருந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயு முகில் பேரளவில் நீராவியாகப் பீறிட்டு எழுந்ததைக் கண்டு பிடித்துள்ளது.  கணனி மாடல் மூலம் கணித்ததில் நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கிராம். என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இது  மாபெரும் கண்டுபிடிப்பு.  இவ்வித ஆவிநீர் முகில் எழுச்சி காணப் பட்டால் , அங்கே திரவ நீர் பேரளவில் தள மட்டத்துக்குக் கீழே சிறிது ஆழத்தில் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்.. 

    ஸிந்தியா ஃபிலிப்ஸ் [SETI Institute in Mountain View, California] [December 12, 2013]

    முதன்முதல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா நீர் ஆவி முகிலைப் பீறிட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    2013 டிசம்பர் 12 ஆம் தேதி நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்

    ​ ​

    முதலாகப் பூதக்கோள் வியாழனின் பனிக்கோளான துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து பேரளவு நீர் ஆவி முகில் எழுச்சி வெளியேறியதைக் கண்டுபிடித்தது. இது மாபெரும் ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு பனிக்கோள் ஈரோப்பாவின் மேல்தட்டுக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது வலுவாகிறது.   அதன் நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவா என்னும் வினாவுக்குப் போதிய விடை கிடைக்கலாம். 

    Jupiter and Europa

    1995 முதல் 2003 வரை பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி உளவிய காலிலியோ விண்கப்பல் ஈரோப்பாவின் தளத்தில் பிளவுகள் இருப்பதைக் கண்டிருக்கிறது.  ஆனால் அதிலிருந்து பீறிடும் நீர் எழுச்சிகளைக் கண்டதில்லை.   இப்போது  நீர் எழுச்சி கண்டு பிடிப்பு, தரை மேற்தட்டு மெலிந்த தென்றும், மென்மை ஆனதென்றும் தெரிவித்துள்ளது.  மேலும் தரைக்கடியில் பெரியதோர் நீர்க்கடல் இருப்பதையும் ஊகிக்க வழி வகுத்தது.   இதுபோல் சனிக்கோளின் பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸிலும் [Enceladus] நீர் எழுச்சிகள் எழுவதை 2005 இல் காஸ்ஸினி விண்ணுளவி காட்டியுள்ளது.   கணனி மாடல் மூலக் கணித்ததில் ஈரோப்பா நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கி. என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    முந்தைய காலிலியோ விண்ணுளவி முயற்சிகளில் இவ்வித நீர் எழுச்சிகளைக் காணாது போயிருக்கலாம் என்று லாரென்ஸ் ரோத் கூறுகிறார்.  அவர் டெக்ஸஸில் உள்ள ஸான் அன்டானியோ தென் மேற்கு ஆய்வகத்தைச் சேர்ந்தவர்.  பூதக்கோளின் வலுத்த ஈர்ப்பு விசைக்கு எதிர்ப்புறம் வரும் போது ஈரோப்பா துணைக் கோளிலிருந்து நீர் பீறிடுகிறது என்று கூறுகிறார் லாரென்ஸ்.   தற்போது ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நீர் எழுச்சிக் காட்சி  7 மணிநேரம்  நீடித்து இருந்து கண்டுபிடிப்பை உறுதிப் படுத்துள்ளது.

    ஈரோப்பா துணைக்கோள் நீர்க்கடலில் உயிரின வளர்ச்சி இருந்திருப்பதை ஒருவேளை விஞ்ஞானிகள் காணலாம்.   தற்போது பூதக்கோள் வியாழனை நோக்கிப் போகும் ஈசாவின் ஜீயிஸ் [JUICE] விண்ணுளவித் திட்டமும், நாசாவின் ஜூனோ [JUNO]  திட்டமும் நீர் எழுச்சிக் காட்சியை நெருங்கிக் கூர்ந்து நோக்கும்.   தரைக்கடியில் நீர் இருந்தால், அடியில் தோண்டா மலே நீர் எழுச்சியில் உயிரின வளர்ச்சித் தடங்களைக் விஞ்ஞானிகள் காண முடியும்.

    fig-1c-europa-internal-structure

    சனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன.   அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு இருந்தது.   இதுவரை [2013 செப்டம்பர்]  இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் சனிக்கோள் சூழ்வெளியில் இருப்பதை வெளியிட்டதில்லை.

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    “சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில் மூட்டத் துகள்கள் எரிமலை போல், [200 கி.மீ.] ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறியப்பட்டு,  சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டி

    ​ ​

    யுள்ளது.   நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்தி

    ​ ​

    லிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் 

     ​ ​

    [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும்.  ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. ” 

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

    2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது.   இது விஞ்ஞானி

    ​ ​

    களுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது.   அத்துடன் சனிக்கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது.   இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக் கோளின் வட புறத்துக் குமிழில்  நேர்கிறது.   2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது.   இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது. முக்கிய கண்டுபிடிப்பு என்ன வென்றால்,  பூதப்புயலில் தெரிந்தமுகில் மூட்டத் துகள்கள், மூன்று பண்டங்களின் கலவையாக அறியப்பட்டன:  நீர்ப்பனித் துகள்கள், அம்மோனியா பனித் தூள்கள், அடுத்து ஒருவேளை அம்மோனிய ஸல்ஃபைடாக இருக்கலாம்.   மேலும் அவ்வித பூதப் புயல்கள் வெளித் தெரியும் முகில் மட்டத்திலிருந்து சுமார் 200 கி.மீ. ஆழத்திலிருந்து கிளம்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  பூதப்புயலின் வேகம் சுமார் மணிக்கு 300 மைல் தூரத்துக்கும் மேற்பட்டது. 

    Encyladus

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்ப

    ​ ​

    ளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.” 

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    fig-2-hot-giant-geysers-in-enceladus-south-pole

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்கு

    ​ ​

    களின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!” 

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] ”

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] ”

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Cassini Space Probe -1

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றி வரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக் கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்

    ​ ​

    தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவு

     ​ ​

    களிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார். 

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

     

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படு கிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்

    ​ ​

    புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 

    Cassini Image of Water

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்

    ​ ​

    தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ? 

    fig-3-greenland-ice-cold-land

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்

    ​ ​

    கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத் துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.   காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென் துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித் தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது. 

    fig-1c-how-the-geyser-does-function

     
    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

     

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக் கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக் கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித் தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித் தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக் கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.
    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித் தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறு களும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒரு வேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

     

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்

    ​ ​

    கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம்,

    ​டை​

    டான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது! 

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன் முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டு பிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக் கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

     fig-4-earth-titan-atmosphere

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?

    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)

    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32  http://www.wired.co.uk/news/archive/2013-09/04/saturn-hurricane-water-ice [September 4, 2013]

    33  http://www.universetoday.com/104488/massive-storm-reveals-water-deep-within-saturns-atmosphere/ [September 3, 2013]

    34.http://www.saturndaily.com/reports/Massive_storm_pulls_water_and_ammonia_ices_from_Saturns_depths_999.html[September 13, 2013]

    35. http://www.lpi.usra.edu/education/explore/ice/background/iceSolarSystem/  [October 9, 2009]

    36. http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/spectacular-water-plumes-reaching-heights-of-200-kilometers-discovered-on-europa-.html  [December 13, 2013]

    37.  http://www.newscientist.com/article/dn24743-first-water-plume-seen-firing-from-jupiter-moon-europa.html?full=true&print=true#.Ur9Kr6i_gsU  [December 12, 2013]

    38.  http://en.wikipedia.org/wiki/Galileo_(spacecraft)  [December 28, 2013]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [December 28, 2013]

    Share
  • ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    சினிமாப் பாடல்களில் என்ன இருக்கு? அதற்கெதற்கு இத்தனை முக்கியத்துவம்? சினிமாங்கிறதே வெறும் பொழுது போக்கிற்காகத்தான்! அதைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிற முணுமுணுப்புகள் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும்! ஆனா.. நடைமுறையில் சினிமாவும் சரி.. சினிமாப்பாடல்களும் சரி.. மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.. அதுவும் நாம் சுட்டிக்காட்டும் பொற்காலப் பாடல்களில் இடம்பெற்ற பல்வேறு பாடல்கள்.. பகுத்தறிவை ஊட்டுவனவாக, தன்னம்பிக்கை தருவதாக, ஆறுதலை அளிப்பதாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! மேலும் அவை வெறும் பாடல்வரிகளாக மட்டும் பவனிவராமல் இசையோடு இணைந்து வருகின்றபோது பாடல்கள் பதியாத இதயங்கள் ஏது? இதோ ஒரு எடுத்துக்காட்டு!

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

    வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

    கோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

    இப்ப சொல்லுங்க.. திரைப்படப் பாடல்கள்தானேன்னு விட்டுவிட முடியுமா? நல்லது எங்கே இருந்தாலும் அது நமக்குத்தானே!!

    திரைப்படம்: அன்புக் கரங்கள்

    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: ஆர். சுதர்சனம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1965

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக் கூட்டத்தப் பாருங்க
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
    வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
    உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
    உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை – இதைப்
    புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
    கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
    கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
    கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
    நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
    நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் – நாம்
    நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    1965ல் வெளிவந்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றி ஆர். சுதர்சனம் இசையமைத்து டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல். எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டு.. பிறகு சிவாஜிக்கு பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள் போல் தோன்றுகிற பாடல். மனதை தொடுகிற வரி..

    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
    ஒரு பெரிய தத்துவத்தை இதைவிட எளிமையாய் எப்படி சொல்ல முடியும்?

    சில சமயங்களில் வாலி .. கண்ணதாசனைவிட எதார்த்தமாக தெரிகிறார் என்கிறார் திரைப்பாடல் ஆர்வலர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள்.

    வாலி அவர்கள் மறைந்தபோது .. தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை..

    “எனக்கு வசதியான குடும்பம் இருந்தும் சினிமாவிலே ஜெயிக்கணும்னு ‘இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்’ ‘வெய்யில்லே சுத்தினா தலை வலி வரும்.. மழயிலே நனைஞ்சா ஜலதோஷம் வரும்.. இதுதான் கர்மா.. ” – வாலி ..

    “கர்மா என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லமுடியாது தி ஹிந்து நாளிதழில் மாலதி ரெங்கராஜன் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
    http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

    http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

    Share
  • சீதாயணம் நாடகப் பின்னுரை

    சீதாயணம் படக்கதை -13

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    unnamed (1)

    unnamed (2)

    unnamed (3)

    jay

    சீதாயணம் – ஓரங்க நாடகத்தின் பின்னுரை

    பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், மாநிலச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் காயப் படுத்திப் போவது வருந்தத்

    ​ ​தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைப் போருக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் இந்து கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதாரத் தேவன் அல்லன் என்று பலமுறை பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டங்கள் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!
    இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை! புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, கல் வெட்டில் பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரிய வில்லை. கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

    உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

    சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்ன வுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங் களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் விதிகளையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

    வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறு மில்லை! தெய்வம் தொழாள் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

    இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

    மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.

    இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் ஈடுபாடு கொண்டு எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

    [தொடரும்]

    **********

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7. http://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]​

    8. ​http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தமிழ் வளர்க்க ஒரு யோசனை – நீதிபதி மூ.புகழேந்தி குரல் பதிவு

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    Justice_Mu_Pugazenthiஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி அவர்களைக் கவிஞர் புதுகை மா.உதயகுமாரும் நானும் 27.12.2013 அன்று, தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். மூ.புகழேந்தி அவர்கள், 14 நூல்களை இயற்றியுள்ளார். கவிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல் எழுதியுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

    இவருடன் உரையாடியபோது, தமிழை வளர்க்க, ஒரு யோசனை கூறினார். பள்ளி நிலையில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளது போல், கல்லூரி அளவிலும், அதிலும் கலை – அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர கல்லூரிகளிலும் இளங்கலை மட்டுமல்லாது முதுகலை மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தமிழ் தானாக வளரும் என்றார்.

    அவரது கருத்துகளை இங்கே கேளுங்கள் –

    http://www.4shared.com/mp3/mnYZEaci/Pugazenthi_judge_final.html

    நேர அளவு: 03.55 நிமிடங்கள்

    மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

    Share
  • வாழ்க்கை நலம் – 41

    குன்றக்குடி அடிகள்

    41. கூட்டுறவு

     

    ‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்பட்டதால் நேர்ந்தவைகளாகும்’ என்றார் – எஸ். கே. டே. “கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை” என்றார் மாமேதை லெனின்.

    கூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது. கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ – மேற்பார்வையா, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகுமுறைகள் கூட்டுறவை பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் பயிற்ருவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

    எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் – தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.

    ஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை – கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.

    மக்களும் கூட்டுறவைத் தங்களுடையதாகவும் பொதுநலத்திற்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.

    “ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.”

    (திருக்குறள் – 214)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share
  • எது அவமானம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் நியுயார்க் நகரில் துணைத் தூதுவராக இருந்த தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் எல்லாக் கட்சி அரசியல் தலைவர்களும் பூமிக்கும் வானத்துக்குமாகக் குதிக்கிறார்கள். அவர் கைதுசெய்யப்பட்டது இந்தியத் தூதரக ஊழியர் என்ற முறையில் செய்த தவறுக்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தன் வீட்டில் வேலைபார்த்த பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்தின்படி சரியான சம்பளம் கொடுக்கவில்லை என்பதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு விசா வாங்குவதற்குரிய விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் கொடுத்தார் என்பதற்காகவும்தான். அமெரிக்காவின் சட்டங்களைப் பொறுத்தவரை இவை இரண்டும் மிகப் பெரிய தவறுகள். அவற்றை யார் செய்திருந்தாலும் அமெரிக்காவில் தண்டனை கிடைத்திருக்கும். வேலைக்காரப் பெண்ணுக்குக் குறைந்த சம்பளம் கொடுப்பது இந்தியாவில் வேண்டுமானால் தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அமெரிக்காவில் இது மிகப்பெரிய தவறு. விசா விண்ணப்பத்தில் பொய்த் தகவல்கள் கொடுப்பதும் பெரிய தவறு. இவை இரண்டையும் யார் செய்தாலும் இதே மாதிரிதான் நடத்தப்பட்டிருப்பார்கள். லஞ்சம் வாங்க முயன்றார் என்ற குற்றத்திற்காக இல்லினாய் மாநில முன்னாள் முதல்வர் பதினாலு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மலைமுழுங்கிகளாக இருக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியையும் அமெரிக்கா விட்டுவைப்பதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா? பதிலுக்குப் பதில் என்று என்னென்னவோ சின்னத்தனமான காரியங்களை எல்லாம் செய்துவருகிறார்கள். இம்மாதிரிச் செயல்கள் இந்தியாவின் நன்மைகளுக்குத்தான் இடையூறாக விளையும் என்று ஏன் இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை?

    இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்கள் புரிந்த பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து ஒரு வழியாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களைச் சிறையில் கழித்த இவர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். தன் சொந்த வீட்டிற்குப் போகுமுன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள கோவில் ஒன்றுக்குச் செல்கிறார். (மாட்டுத் தீவன ஊழலில் 950 கோடி ரூபாயை முழுங்கிவிட்டு எப்படி இறைவனைச் சந்திக்கச் செல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை.) இவரோடு உடன் செல்ல இவருடைய ஆதரவாளர்கள். இவருடைய பாதுகாப்புக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்கள். கோவிலுக்குள் நுழையும் முன்பு லாலு தன் காலணிகளைக் கழற்றுகிறார். அதைக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வாங்கி தன் கக்கத்தில் இடுக்கிக்கொள்கிறார். டி.எஸ்.பி லெவலில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி லாலுவின் காலகளைக் கழுவிவிடுகிறார். கோவிலுக்குள் சென்று லாலு சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார். அவருடைய காலணிகளைக் கக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தவர் அவற்றை லாலுவின் கால்களில் மாட்டிவிடுகிறார்.

    மிகப் பெரிய ஊழல் புரிந்து அரசுக்குச் சேர வேண்டிய மிகப் பெரிய தொகையைக் கையாண்டிருக்கிறார் லாலு. இவருக்கு மரியாதை செலுத்த இன்னும் ஆட்கள் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிய வேண்டும். இதை இந்தியாவின் பெரிய அவமானமாகக் கருத வேண்டும். சட்டம், ஒழுங்கைப் பாரபட்சமில்லாமல் கடைப்பிடிக்கும் அமெரிக்காவைப் பார்த்து இந்தியாவும் சட்டம், ஒழுங்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டுப் பாராளுமன்றத்தில் கால்வைக்க மாட்டேன், அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கமாட்டேன், என்று கூறுவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்ப்பவர்களுக்குரிய சலுகைகளை நீக்குவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்க்கும் ஓரினத் தம்பதிகளைச் சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தப் பாடுபட வேண்டுமேயொழிய சின்னத்தனமான காரியங்களில் இறங்கி இந்தியாவின் மதிப்பை இன்னும் குறைத்துக்கொள்ளக் கூடாது.

    எது இந்தியாவுக்கு அவமானம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். குற்றம் செய்தவரைக் கைது செய்வதா? குற்றம் செய்தவரின் காலைக் கழுவுவதா?

    Share