நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் நியுயார்க் நகரில் துணைத் தூதுவராக இருந்த தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் எல்லாக் கட்சி அரசியல் தலைவர்களும் பூமிக்கும் வானத்துக்குமாகக் குதிக்கிறார்கள். அவர் கைதுசெய்யப்பட்டது இந்தியத் தூதரக ஊழியர் என்ற முறையில் செய்த தவறுக்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தன் வீட்டில் வேலைபார்த்த பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்தின்படி சரியான சம்பளம் கொடுக்கவில்லை என்பதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு விசா வாங்குவதற்குரிய விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் கொடுத்தார் என்பதற்காகவும்தான். அமெரிக்காவின் சட்டங்களைப் பொறுத்தவரை இவை இரண்டும் மிகப் பெரிய தவறுகள். அவற்றை யார் செய்திருந்தாலும் அமெரிக்காவில் தண்டனை கிடைத்திருக்கும். வேலைக்காரப் பெண்ணுக்குக் குறைந்த சம்பளம் கொடுப்பது இந்தியாவில் வேண்டுமானால் தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அமெரிக்காவில் இது மிகப்பெரிய தவறு. விசா விண்ணப்பத்தில் பொய்த் தகவல்கள் கொடுப்பதும் பெரிய தவறு. இவை இரண்டையும் யார் செய்தாலும் இதே மாதிரிதான் நடத்தப்பட்டிருப்பார்கள். லஞ்சம் வாங்க முயன்றார் என்ற குற்றத்திற்காக இல்லினாய் மாநில முன்னாள் முதல்வர் பதினாலு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மலைமுழுங்கிகளாக இருக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியையும் அமெரிக்கா விட்டுவைப்பதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா? பதிலுக்குப் பதில் என்று என்னென்னவோ சின்னத்தனமான காரியங்களை எல்லாம் செய்துவருகிறார்கள். இம்மாதிரிச் செயல்கள் இந்தியாவின் நன்மைகளுக்குத்தான் இடையூறாக விளையும் என்று ஏன் இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை?

இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்கள் புரிந்த பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து ஒரு வழியாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களைச் சிறையில் கழித்த இவர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். தன் சொந்த வீட்டிற்குப் போகுமுன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள கோவில் ஒன்றுக்குச் செல்கிறார். (மாட்டுத் தீவன ஊழலில் 950 கோடி ரூபாயை முழுங்கிவிட்டு எப்படி இறைவனைச் சந்திக்கச் செல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை.) இவரோடு உடன் செல்ல இவருடைய ஆதரவாளர்கள். இவருடைய பாதுகாப்புக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்கள். கோவிலுக்குள் நுழையும் முன்பு லாலு தன் காலணிகளைக் கழற்றுகிறார். அதைக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வாங்கி தன் கக்கத்தில் இடுக்கிக்கொள்கிறார். டி.எஸ்.பி லெவலில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி லாலுவின் காலகளைக் கழுவிவிடுகிறார். கோவிலுக்குள் சென்று லாலு சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார். அவருடைய காலணிகளைக் கக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தவர் அவற்றை லாலுவின் கால்களில் மாட்டிவிடுகிறார்.

மிகப் பெரிய ஊழல் புரிந்து அரசுக்குச் சேர வேண்டிய மிகப் பெரிய தொகையைக் கையாண்டிருக்கிறார் லாலு. இவருக்கு மரியாதை செலுத்த இன்னும் ஆட்கள் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிய வேண்டும். இதை இந்தியாவின் பெரிய அவமானமாகக் கருத வேண்டும். சட்டம், ஒழுங்கைப் பாரபட்சமில்லாமல் கடைப்பிடிக்கும் அமெரிக்காவைப் பார்த்து இந்தியாவும் சட்டம், ஒழுங்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டுப் பாராளுமன்றத்தில் கால்வைக்க மாட்டேன், அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கமாட்டேன், என்று கூறுவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்ப்பவர்களுக்குரிய சலுகைகளை நீக்குவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்க்கும் ஓரினத் தம்பதிகளைச் சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தப் பாடுபட வேண்டுமேயொழிய சின்னத்தனமான காரியங்களில் இறங்கி இந்தியாவின் மதிப்பை இன்னும் குறைத்துக்கொள்ளக் கூடாது.

எது இந்தியாவுக்கு அவமானம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். குற்றம் செய்தவரைக் கைது செய்வதா? குற்றம் செய்தவரின் காலைக் கழுவுவதா?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எது அவமானம்?

  1. இந்திய அரசியலே வேறு! இங்கு அதிகாரமும் பண பலமும் இருந்தால் சுற்றி நூறு பேர் அடியாட்களைப் போல சுற்றிச் சுற்றி வருவார்கள். தங்கள் எஜமானனை யாராவது தவறாகப் பேசிவிட்டால் போதும் இந்த நூறு பேரும் அப்படி பேசியவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். அதே எஜமானன் பதவி போய், பவிஷு போய் செல்லாக்காசாய் இருக்கும்போது, இதே நூற்றுவர் அவனை கண்டும் காணாமல் போய்விடுவர். அவனே வலிய வந்து பேசினாலும் ஐயா யாருன்னு தெரியலையே என்பார்கள். இங்கு கிரிமினல்கள்தான் ராஜ வாழ்க்கை வாழமுடியும். காந்திஜி இப்போது இருந்திருந்தால் என்ன பாடு பட்டிருப்பாரோ? நல்ல காலம் அவர் போய்ச்சேர்ந்துவிட்டார்.

  2. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சிந்தனையே அரசியல்வாதிகளுக்கு செத்து விட்டதோ? என்று என்னும் அளவிற்கு இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் உள்ளது. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே காய்கள் நகர்த்தப்படுகின்றனே என்ற ஐயம் பாமரனின் மனதில் எழுகின்றது. இந்தியத் தாயை மானபங்கப்படுத்தியாவது வாக்கு சேகரிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று திருமதி.தேவயானியின் கைது.

    ஆனால் குறைவான சம்பளத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்வது என்பது காலம் காலமாக நடந்து வருகின்ற ஒன்று, என்று விஷயம் அறிந்தவர்கள் கூறக் கேட்கிறேன். இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டு இப்பொழுது இந்த விஷயத்தை அமெரிக்கா கையில் எடுத்திருப்பதன் காரணம் என்ன? என்ற வினாவும் நம் மனதில் எழுகின்றது. எப்பொழுதுமே தான் செய்யும் செயல்கள் எல்லாம் சட்ட ரீதியாக சரியானதே என்ற மாயத் தோற்றத்தை அமெரிக்கா ஒவ்வொரு முறையும் ஏற்படுத்துகிறது என்பது கடந்தகால நிகழ்வுகளின் உண்மை.

    இந்தியா இந்த சர்ச்சையில் எடுத்துள்ள நிலைப்பாடு அவமானமே என்றாலும், அமெரிக்காவின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உட்பட்டதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *