கவிஞர் காவிரி மைந்தன்

சினிமாப் பாடல்களில் என்ன இருக்கு? அதற்கெதற்கு இத்தனை முக்கியத்துவம்? சினிமாங்கிறதே வெறும் பொழுது போக்கிற்காகத்தான்! அதைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிற முணுமுணுப்புகள் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும்! ஆனா.. நடைமுறையில் சினிமாவும் சரி.. சினிமாப்பாடல்களும் சரி.. மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.. அதுவும் நாம் சுட்டிக்காட்டும் பொற்காலப் பாடல்களில் இடம்பெற்ற பல்வேறு பாடல்கள்.. பகுத்தறிவை ஊட்டுவனவாக, தன்னம்பிக்கை தருவதாக, ஆறுதலை அளிப்பதாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! மேலும் அவை வெறும் பாடல்வரிகளாக மட்டும் பவனிவராமல் இசையோடு இணைந்து வருகின்றபோது பாடல்கள் பதியாத இதயங்கள் ஏது? இதோ ஒரு எடுத்துக்காட்டு!

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

கோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

இப்ப சொல்லுங்க.. திரைப்படப் பாடல்கள்தானேன்னு விட்டுவிட முடியுமா? நல்லது எங்கே இருந்தாலும் அது நமக்குத்தானே!!

திரைப்படம்: அன்புக் கரங்கள்

இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை – இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் – நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

1965ல் வெளிவந்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றி ஆர். சுதர்சனம் இசையமைத்து டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல். எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டு.. பிறகு சிவாஜிக்கு பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள் போல் தோன்றுகிற பாடல். மனதை தொடுகிற வரி..

உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
ஒரு பெரிய தத்துவத்தை இதைவிட எளிமையாய் எப்படி சொல்ல முடியும்?

சில சமயங்களில் வாலி .. கண்ணதாசனைவிட எதார்த்தமாக தெரிகிறார் என்கிறார் திரைப்பாடல் ஆர்வலர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள்.

வாலி அவர்கள் மறைந்தபோது .. தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை..

“எனக்கு வசதியான குடும்பம் இருந்தும் சினிமாவிலே ஜெயிக்கணும்னு ‘இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்’ ‘வெய்யில்லே சுத்தினா தலை வலி வரும்.. மழயிலே நனைஞ்சா ஜலதோஷம் வரும்.. இதுதான் கர்மா.. ” – வாலி ..

“கர்மா என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லமுடியாது தி ஹிந்து நாளிதழில் மாலதி ரெங்கராஜன் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..

  1. ஒற்றுமையை வலியுறுத்தும் உன்னதப் பாடல். தமிழால் இணைவோம். தமிழை வாழ்த்துவோம். உலகமெலாம் தமிழோசை பரவச் செய்வோம். தமிழிசையைக் கேட்டு மகிழ்கோம். காவிரி மைந்தனும் ராகப்பிரவாகம் சுந்தரும் போன்ற தமிழ் ஆர்வலர்கள் யாவரும் ஒன்று கூட வேண்டும். தமிழிசையின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க ஒரு மாபெரும் உலகத் தமிழ் இசை ஆர்வலர்கள் சங்கம் அமைக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *