இந்த வார வல்லமையாளர் (282)

இந்த வார வல்லமையாளராக ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சங்க காலத்தில் பேச்சுமொழியில் இருந்து எழுத்து மொழியாக மாறுவதற்குப் பிராமி எழுத்து அடைந்த மாறுதல்களையும், அதற்கான படிநிலை வளர்ச்சிகளையும் கண்டு பெருநூலாகப் படைத்தவர். சிந்து சமவெளி ஆய்வு தொல்திராவிட மொழி பேசுபவர்களால் ஆளுமை செய்யப்பட்ட நாகரீகம் என்பதனைப் பற்றி பல ஆழமான கட்டுரைகளை அரை நூற்றாண்டு காலமாக வெளியிடும் திரு. ஐராவதம் மகாதேவம் அக்டோபர் 2-ம் தேதி அன்று 88 வயது பூர்த்தி ஆகி, 89-ஆம் ஆண்டில் புகுகிறார். அன்னார் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வல்லமை வாழ்த்தையும், வணக்கத்தையும் தெரிவிக்கிறது

.

அக்டோபர் 2, 1930-இல் மண்ணச்சநல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோஸப் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இவரது முதல் புத்தகம் 1977-ல் வெளியானது. ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற நூல் சிந்து சமவெளி எழுத்தாய்வுகளுக்கு முக்கியமான தூண்டுகோல் ஆயிற்று. பின்னர், தமிழ் பிராமி கல்வெட்டுகளை முழுமையாக ஆராயும் நூலை 2003-ல் எழுதினார். கல்வெட்டியலைப் போன்றே ‘தினமணி’ இதழின் ஆசிரியராக (1987-1991) பணியாற்றிய காலகட்டத்தில் இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

இந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:
(1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.
(2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.
(3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.

திராவிட மொழிக்குடும்பம் என்ற மொழியியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர் F. W. எல்லிஸ். சென்னையில் கலெக்டராக இருந்தவர். அவர் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பைச் சொல்லின் செல்வர் ரா, பி. சேதுப்பிள்ளை மறுபதிப்புச் செய்தார். எல்லிஸ் 300 நூல்களில் இருந்து (இப்போது அழிந்துபோன வளையாபதிக் காப்பியம் உட்பட!) மேற்கோள் காட்டியுள்ளார். அவர் 200 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் சமணர் என்று ஆய்ந்து, சென்னை அரசாங்கத்தால் சமணர்கள் திருவள்ளுவரை வழிபட்ட உருவத்தைத் தங்க நாணயமாக வெளியிட்டார். அதனைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் உலகறியச் செய்தார். திருவள்ளுவரின் திருமேனி தங்கிய தங்கக் காசு:
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

தமிழ் பிராமி எழுத்து வட இந்தியாவில் இருந்து கர்நாடகம் வழியாக சமணர்களால் தமிழகம் வந்த வரலாற்றையும், தமிழுக்கு ஏற்ப மாறும் படிநிலைகளையும் நன்கு ஆராய்ந்து சங்க காலக் கல்வெட்டுகளை யாரும் படித்து அறியும் துறையைச் செய்தவர் ஐராவதம். சம காலக் காசுகளில் உள்ள பிராமிக்கும், தமிழில் புள்ளி ஏற்படும் கல்வெட்டுக் காலத்தைக் கணித்து, பல நூற்றாண்டுகள் [பார்க்க: கமில் சுவெலெபில் கூறும் தொல்காப்பியக் காலக்கோடு [1] ] வளர்ந்த தொல்காப்பியத்தின் முக்கியக் காலகட்டம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என அறிவியல் ரீதியாகத் தெளிவித்தவர் ஐராவதம் ஆவார். புள்ளிக் கோட்பாடு தமிழ் பிராமியில் ஏற்பட்டதால் தான் தொல்காப்பியர் அதுபற்றிப் பேசுகிறார். புள்ளிக் கோட்பாட்டால் தான் ஏனைய இலிபிகள் போலன்றி, தமிழில் கூட்டெழுத்துகள் இல்லாமல் எளிதான எழுத்தாகத் தமிழ் விளங்குகிறது, அதனால்தான், முதலில், தமிழுக்கு மற்ற இந்திய மொழிகளுக்கு முன்னரே தட்டச்சு, கணினியில் எழுதுரு ஏற்பட்டன. தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தார். உ, ஊகார உயிர்மெய் எழுத்துகளும், மலையாளத்தார் செய்வது போல, பெரியார் பரிந்துரை ஏற்கப்பட்டு, பிரித்து எழுதப்படலாம் என்ற கொள்கையுடையவர் ஐராவதம்.

https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Tamils-were-never-lsquoAryanisedrsquo/article16885688.ece

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

Notes:

[1]  K. Zvelebil wrote on the question of the date of Tolkappiyam in pp. 138-147, Smile of Murugan, 1973.

(a) “The earliest, original version of the Tolkappiyam belongs to the ‘pre-Cankam’ period; the oldest layer of the grammar is somewhat earlier in time than the majority of extant classical Tamil poems.”
(b) Approximately the 5th century AD is fixed by him “as the earliest possible date of Porulatikaram, and as the date of the final redaction of the Tolkappiyam.”
(c) “Thus, the nuclear portions of Tolkappiyam were probably born sometime in the 2nd or 1st century BC., but hardly before 150 BC… The final redaction probably take place before the 5th century AD., so that the ultimate shape of the suutras as we have them before us is probably not earlier than the middle of the first millennium of our era.”

 

Share

About the Author

முனைவர் நா.கணேசன்

has written 20 stories on this site.

முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

3 Comments on “இந்த வார வல்லமையாளர் (282)”

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 8 October, 2018, 12:15

  வல்லமையாளர், அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அவரது பணிகள் சிறக்கவும் நீடு வாழவும் நிறைவாழ்வு காணவும் வாழ்த்தி மகிழ்கிறோம்.

 • கல்பனா சேக்கிழார்
  kalpana sekkizhar wrote on 8 October, 2018, 20:06

  ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீடுதோறும் உடல்நலத்துடன், மனநலத்துடன் வாழ வாழ்த்துகள். வணக்கம்.

 • முனைவா் ம. இராமச்சந்திரன் wrote on 9 October, 2018, 6:52

  கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு போன்றவற்றிலும், தமிழின் தொன்மையை அறிவதில் காத்திரமான பங்களிப்பை செய்த ஐயா அவா்கள் இதற்கு பொறுத்தமானவா். வல்லமைக்கு நன்றி.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.