Blog

  • பாரதி கண்ட கண்ணம்மா இன்று அவள் யார்?

    பாரதி கண்ட கண்ணம்மா இன்று அவள் யார்?

    பாரதியின் கவிதைகளை ஒவ்வொரு காலமும் புதிதாக வாசித்துக்கொண்டே இருக்கிறது. தேசிய விடுதலை, சமூகச் சமத்துவம், பெண்ணுரிமை என்று பல்வேறு கோணங்களில் பாரதி நம்மிடம் அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் அவரது கவிதைகளில் தொடர்ந்து தோன்றும் கண்ணம்மா போன்ற பெண் உருவங்களை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி இன்னும் சுவாரசியமானது. பாரதியின் கண்ணம்மா ஒரு பெயராக மட்டும் நிற்கவில்லை; காதல், கலை, அழகு, தெய்வீகம், பெண்மை எனப் பல்வேறு உணர்வுகளின் சந்திப்பாக அவள் கவிதைகளில் உருவெடுக்கிறாள்.

    ஒரு படைப்பாளியின் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் அப்படியே படைப்புகளுக்குள் நுழைவதில்லை. நினைவு, கற்பனை, பண்பாட்டு மரபு, தனிப்பட்ட உணர்வு ஆகியவை ஒன்றோடு ஒன்று கலந்தபின் அவர்கள் புதிய இலக்கிய உருவங்களாக மாறுகிறார்கள். பாரதியின் கண்ணம்மாவையும் இத்தகைய கற்பனை மாற்றத்தின் வழியாகத்தான் அணுக வேண்டும். அவள் ஒரு குறிப்பிட்ட பெண்ணின் நேரடி உருவமா என்பதைவிட, பாரதியின் கவிதை உலகில் பெண் எவ்வாறு கற்பனை செய்யப்பட்டிருக்கிறாள் என்பதே முக்கியமான கேள்வியாகிறது.

    கண்ணம்மா என்ற பெயருக்குள்ளேயே ஒரு பண்பாட்டு நினைவு இருக்கிறது. கண்ணன் என்ற பெயரின் பெண்பால் வடிவமாக ஒலிக்கும் கண்ணம்மா, பக்தி மரபின் நினைவையும் காதலின் நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் தாங்குகிறது. அதனால் பாரதி கண்ணம்மாவை அழைக்கும் இடங்களில் காதலும் பக்தியும் தனித்தனி அறைகளில் இருப்பதில்லை. மனிதக் காதலின் நெருக்கமும் தெய்வீக உணர்வும் ஒரே மொழியில் கலந்துவிடுகின்றன.

    கண்ணன் பாட்டுத் தொகுப்பில் கண்ணம்மாவை நேரடியாகக் காதலியாக அழைக்கும் பாடல்கள் இதற்குச் சான்றாக உள்ளன. இங்கு கண்ணம்மா ஒரு தெய்வத்தின் தொலைவான உருவமாக மட்டும் இல்லை; கவிஞனுக்கு மிக அருகில் நிற்கும் காதலியாகவும் தோன்றுகிறாள். காதல் என்பது இங்கு வழிபாட்டிலிருந்து வேறுபட்டதாக இல்லை; வழிபாடே காதலின் மொழியை ஏற்றுக்கொள்கிறது.

    இதனோடு வள்ளி என்ற உருவத்தையும் இணைத்துப் பார்க்கலாம். தமிழ் மரபில் வள்ளி என்பது வெறும் புராணப் பாத்திரமல்ல. இயற்கையோடு நெருக்கமானவள்; தன் விருப்பத்தையும் காதலையும் வெளிப்படுத்தும் பெண்; வழக்கமான அரண்மனைப் பெண் உருவத்திலிருந்து மாறுபட்டவள். எனவே வள்ளி என்ற பெயர் பாரதியின் கவிதைக்குள் வரும்போது, அது காதல், இயற்கை, விருப்பம் ஆகியவற்றின் பண்பாட்டு நினைவையும் உடன் கொண்டு வருகிறது.

    இதனை இன்னும் தெளிவாகச் சொல்லும் வகையில் பாரதி பாடுகிறார்:

    “வேடத்திசிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா
    பீடத்தில் ஏறிக்கொண்டாள் — மனப்
    பீடத்தில் ஏறிக்கொண்டாள்.”

    இந்த வரிகளில் வள்ளியும் கண்ணம்மாவும் ஒரே உணர்வுப் பரப்புக்குள் வந்து நிற்கின்றனர். வெளிப்புற உலகில் அவள் யார் என்பது முக்கியமல்ல; கவிஞனின் மனத்தில் அவள் எங்கே அமர்ந்திருக்கிறாள் என்பதே முக்கியமாகிறது. “மனப் பீடம்” என்பது இங்கு வெறும் காதல் உணர்வின் இடமல்ல. ஒருவரை நம் உள்ளத்தின் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் நினைவின் அடையாளம்.

    வள்ளி என்ற புராணப் பெயரும் கண்ணம்மா என்ற காதல் அழைப்பும் ஒன்றாக இணைவது இதனால் பொருள் பெறுகிறது. ஒரு புறம் மரபின் வள்ளி; இன்னொரு புறம் கவிஞனின் மனத்தில் வாழும் கண்ணம்மா. இருவரும் சேரும்போது, பாரதியின் கற்பனையில் பெண் ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்கும் உருவமாக மாறுகிறாள்.

    இன்றைய காலத்தில் இந்த “மனப் பீடம்” என்ற உருவகத்தை நாம் வேறு விதமாகவும் வாசிக்கலாம். ஒருவரை நேசிப்பது என்பது அவரை நமது விருப்பத்தின் வடிவமாக்குவது அல்ல; அவருடைய தனித்தன்மையை ஏற்றுக்கொள்வது. ஒருவரை மனதில் உயர்த்திப் போற்றுவது அழகானது. ஆனால் அந்தப் பீடம் அவருடைய குரலை அடக்கக்கூடாது. அவர் நம் கற்பனையில் மட்டுமே வாழ வேண்டியதில்லை; தன் வாழ்க்கையிலும் தன் குரலோடு வாழ வேண்டும்.

    இதுதான் பாரதியின் கண்ணம்மாவை நவீன பெண்ணியப் பார்வையோடு இணைக்கும் முக்கியமான இடம்.

    பாரதியின் கவிதைகளில் பெண் உயர்த்திப் பேசப்படுகிறாள். அவள் காதலியாகவும், தெய்வமாகவும், சக்தியாகவும், அழகின் வடிவமாகவும் தோன்றுகிறாள். ஆனால் இன்றைய வாசிப்பை அங்கேயே நிறுத்திவிட முடியாது. பெண்ணை உயர்த்திப் போற்றுவதும், பெண்ணை ஒரு முழுமையான மனிதராக ஏற்றுக்கொள்வதும் ஒன்றல்ல. அவளுக்கு விருப்பம் இருக்கலாம்; மறுப்பு இருக்கலாம்; தனிப்பட்ட முடிவு இருக்கலாம்; தன் வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருக்கலாம்.

    பெண்ணைத் தெய்வமாக்குவதற்கு அப்பால், அவளை மனிதராக மதிப்பதே நவீன காலத்தின் அடுத்த படி.

    பாரதியின் மற்றொரு பாடல் இந்தக் காதல் உணர்வின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது:

    “பிள்ளைப் பிராயத்திலே — அவள்
    பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேனங்கு;
    பள்ளிப் படிப்பினிலே மதி —
    பற்றிடவில்லை.”

    இங்கு காதல் என்பது வெறும் வெளிப்புற அழகைக் காண்பதல்ல. ஒரு பெண்ணின் பெண்மையைக் கண்டு மனம் மயங்கும் தருணம், கல்வி உட்பட மற்ற உலகங்களின் மீதான கவனத்தையே திசைதிருப்பும் அளவுக்கு ஆழமான உணர்வாகக் கவிஞனால் பதிவு செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் தன்னை ஆட்கொண்ட உணர்வை, காலம் கடந்தபின் கவிஞன் திரும்பிப் பார்க்கிறான். அந்தப் பார்வையே அதை கவிதையாக்குகிறது.

    இந்த வரிகளை இன்று வாசிக்கும்போது, அவற்றை வெறும் காதல் வெளிப்பாடாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஓர் உணர்வு மனித மனத்தை எவ்வளவு வலிமையாக ஆட்கொள்ள முடியும் என்பதன் கவித்துவமான பதிவு இது. அதே நேரத்தில், அந்தக் காலத்தின் உணர்வுகளை இன்றைய குழந்தைப் பருவத்திற்கான வாழ்க்கை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. காலம் மாறும்போது ஓர் உணர்வை அணுகும் சமூகப் பார்வையும் மாறுகிறது.

    இதில்தான் இலக்கியத்தின் நவீன வாசிப்பு தொடங்குகிறது. பாரதி தன் காலத்தில் ஓர் உணர்வைக் கவிதையாக்கினார். நாம் நமது காலத்தில் அந்த உணர்வை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்கிறோம். பழைய கவிதைக்குப் புதிய பொருள் கொடுப்பது கவிஞனை மறுப்பதல்ல; அந்தக் கவிதையுடன் தொடர்ந்து உரையாடுவதாகும்.

    பாரதியின் பெண் உருவங்களில் கலைக்கும் முக்கியமான இடம் உண்டு. குயில் பாட்டு போன்ற படைப்புகளில் இசை, பெண்மை, காதல், அழகு ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைகின்றன. அழகை ரசிப்பதற்கும் அதை வெறும் உடலாகப் பார்ப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் நுண்ணுணர்வு அங்கு உள்ளது. கலை உணர்வு இல்லாத பார்வை ஒரு பெண்ணின் திறமையைக்கூட அவளுடைய உடலுக்குள் சுருக்கிவிடக்கூடும்.

    இந்தக் கருத்து இன்றைய சமூக ஊடக உலகில் மிகவும் பொருத்தமானதாகிறது.

    ஒரு பெண் பாடுகிறாள் என்றால் அவளுடைய குரலைக் கேட்பதற்குப் பதிலாக அவளுடைய தோற்றத்தைப் பற்றிப் பேசும் பார்வை இன்னும் இருக்கிறது. அவள் நடனமாடினால் அவளுடைய கலைத்திறனை ரசிப்பதற்குப் பதிலாக அவளுடைய உடலை மதிப்பிடும் பார்வை இருக்கிறது. அவள் ஒரு கருத்தை முன்வைத்தால் அந்தக் கருத்தோடு உரையாடுவதற்குப் பதிலாக அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயும் பழக்கமும் உள்ளது.

    ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கலைக்கும் பெண்மைக்கும் பண்பட்ட ரசனை தேவை என்பதை உணர்த்திய பாரதியின் சிந்தனை, இன்று டிஜிட்டல் உலகில் புதிய கேள்வியாக நம்முன் நிற்கிறது.

    நாம் பெண்ணைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறியிருக்கிறதா? அல்லது திரை மட்டும் மாறியிருக்கிறதா?

    இந்தக் கேள்வி பாரதியின் பெண் உருவங்களை நவீனமாக வாசிக்க உதவுகிறது.

    பாரதி பெண்களின் கல்வி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றைப் பற்றி தன் காலத்தைக் கடந்து சிந்தித்தவர். அந்தச் சிந்தனையை இன்று இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. பெண் கல்வி கற்றுவிட்டாள் என்பதாலோ, தொழிலில் முன்னேறிவிட்டாள் என்பதாலோ அவளுடைய விடுதலை முழுமை பெற்றுவிட்டது என்று சொல்ல முடியாது. இணையத் தொல்லை, உடலை மையப்படுத்தும் பார்வை, தனிப்பட்ட வாழ்க்கையின் மீதான சமூகக் கண்காணிப்பு போன்ற புதிய சிக்கல்கள் அவளுடைய சுதந்திரத்திற்கு புதிய சவால்களாக மாறியிருக்கின்றன.

    எனவே பெண் விடுதலை என்பது முடிந்துபோன ஒரு போராட்டமல்ல. ஒவ்வொரு காலத்திலும் அது புதிய வடிவம் பெறுகிறது.

    பாரதியின் காலத்தில் பெண் கவிதையின் பொருளாக இருந்தாள். இன்று பெண்ணே கவிதையை எழுதுகிறாள். ஒரு காலத்தில் கவிஞன் அவளுக்கு பெயர் சூட்டினான். இன்று அவள் தன் பெயரையும் தன் அடையாளத்தையும் தானே உருவாக்குகிறாள். இந்த மாற்றம்தான் பாரதியின் கண்ணம்மாவை நவீன காலத்தில் மீண்டும் வாசிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

    கண்ணம்மா பாரதியின் கவிதையில் ஒரு பெயராக இருக்கலாம். ஆனால் இன்று அவள் ஒரு கேள்வியாகவும் இருக்கிறாள்.

    ஒரு பெண்ணை நாம் எப்படிப் பார்க்கிறோம்?அவளைப் பற்றி பேசுகிறோமா? அல்லது அவள் பேசுவதையும் கேட்கிறோமா?
    அவளுடைய அழகைக் காண்கிறோமா? அல்லது அவளுடைய அறிவையும் திறமையையும் கேட்கிறோமா?
    அவளை நம் கற்பனையின் பீடத்தில் வைக்கிறோமா? அல்லது அவள் தன் வாழ்க்கையின் பீடத்தில் தானே நிற்க இடமளிக்கிறோமா? இந்தக் கேள்விகளுக்குள் தான் பாரதியின் கண்ணம்மா இன்றும் உயிருடன் இருக்கிறாள். அவள் கவிஞனின் மனப் பீடத்தில் ஏறிக்கொண்ட கண்ணம்மாவாகத் தொடங்கியிருக்கலாம். ஆனால் காலம் அவளுக்குப் புதிய இடத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த இடம் இப்போது ஒரு கவிஞனின் மனம் மட்டும் அல்ல; அவளுடைய சொந்த வாழ்க்கை. இதுதான் பாரதியின் பெண் உருவங்களை நவீனமாக வாசிப்பதன் மிக முக்கியமான பொருள். கண்ணம்மாவுக்கு இனி பெயர் சூட்ட வேண்டியதில்லை. அவளுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை. அவள் தன் குரலில் பேசட்டும். அவள் தன் பெயரில் எழுதட்டும். அவள் தன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கட்டும். அவள் தன் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தானே உருவாக்கட்டும்.

    கவிதையில் பிறந்த கண்ணம்மா, காலத்தில் தன் குரலைக் கேட்கட்டும்!

    ஆசிரியர் பற்றிய  அறிமுகம்.

    சொற்களால் சமூகத்தைத் தொட்டுச் செல்லும் படைப்பாளி.

    தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், கல்விப் பணியின் மீது அர்ப்பணிப்பும் கொண்டவர் முனைவர் நா. சியாமளா. 

    ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நூலாசிரியர் எனப் பல்வேறு முகங்களுடன் தமிழ் உலகில் தனித்த அடையாளம் பதித்திருக்கும் ஆளுமை.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்ற இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் மகுடேசுவரன் கவிதைகள் குறித்த ஆய்வின் மூலம் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

    இவரது ஆய்வேடு பல்கலைக்கழக வல்லுநர்களால் “மீயுயர்தகுதி” பெற்ற சிறப்பைப் பெற்றது.

    இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக கல்வித் துறையில் பணியாற்றி வரும் இவர், தற்போது கோயம்புத்தூரிலுள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

    வகுப்பறையில் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியராக மட்டுமல்லாமல், அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

    இலக்கிய உலகில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 

    வாசல்தோறும் வெற்றி, வெண்பா வனம், 

    சிறகு முளைத்த கவிதைகள், 

    சொற்கள் மீட்டிய மெல்லிசை 

    உள்ளிட்ட நூல்கள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

    கவிதை, ஆய்வு, சுயமுன்னேற்றம், மொழிபெயர்ப்பு, ஆன்மிகம் எனப் பல துறைகளில் இவரது எழுத்துப் பயணம் விரிகிறது. 

    இதழ்கள், ஆய்விதழ்கள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், இலக்கிய மேடைகள் என எங்கும் இவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ் மொழியின் இனிமையையும், மரபுக் கவிதையின் செழுமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இவரது பெரும் கனவு. 

    கவிதை எழுதுதல், இலக்கிய ஆய்வு, ஆன்மிகச் சொற்பொழிவுகள், மேடைப் பேச்சு, மாணவர்களைப் படைப்புலகிற்கு வழிநடத்துதல் ஆகியவை இவரது முக்கிய ஆர்வங்களாகும்.

    “நம்பிக்கை நாயகி விருது”, 

    “மகாகவி பாரதி விருது”, “குறிஞ்சித் தமிழ் நல்லாசிரியர் விருது”, “பைந்தமிழ்ச் செல்வர் விருது” 

    உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது இலக்கிய மற்றும் கல்விப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரங்களாகும்.

    சொற்களை வெறும் வரிகளாக அல்லாமல், மனித மனங்களைத் தொடும் மெல்லிசையாக மாற்றும் திறன் கொண்டவர் முனைவர் நா. சியாமளா. 

    வகுப்பறையிலும், கவியரங்கத்திலும், ஆய்வரங்கத்திலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் இவர், தமிழ் மொழியின் அழகையும், வாழ்வின் நம்பிக்கையையும் தலைமுறைகளுக்கு விதைத்து வரும் படைப்பாளி

    Share
  • குறுந்தொகையில் ஆற்றாமை புலப்படுத்தும் அகவுணர்வு நிலைப்பாடுகள்

    குறுந்தொகையில் ஆற்றாமை புலப்படுத்தும் அகவுணர்வு நிலைப்பாடுகள்


    உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உணர்வுகளால் பீடிக்கப்பட்டவை. மனதில் தோன்றும் எண்ணவோட்டங்கள் பல நேரங்களில் மற்றவருக்குப்  புலப்படுத்த முடியாததாகவோ அல்லது வெளியே கூறக்கூடாததாகவோ அமைந்து விடுதல் உண்டு. உணர்வுகளைக் கூடுமானவரை கட்டுப்படுத்தும் ஆற்றல் சிலருக்கு உண்டு. எனினும் தடை செய்ய முடியாது. காதல் சார்ந்த செயல்பாடுகளுள் மனதின் ஓட்டம் கரைபுரண்டு ஓடும் ஆற்றாமையாய் வெளிப்பட்டு விடுவதை இலக்கியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பலவும் பிரதிபலித்துள்ளன. ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அனைவரும் வாழ்வினில் ஆற்றாமையை அனுபவித்தல் கண் கூடு. அவ்வகையில் ஆற்றாமை புலப்படுத்தும் அகவுணர்வுகளை சங்க இலக்கிய நூலான குறுந்தொகையின் வழிநின்று ஆராய்வதாகக் கட்டுரை அமைகின்றது.

    கையில் ஊமன் கண்ணில் காத்தல்
    தலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான். தலைவியைச் சந்திக்க இயலாத சூழலில் பலவாறு புலம்புகிறான். கடமைகளிலிருந்து தலைவனின் கவனம் சிதறுகிறது. உறவு, நட்பெனப் பலரும் தலைவனின் நிலையைக் கண்டு கடிந்துரைத்தனர். தன்னுடைய ஆற்றாமை எப்படிப்பட்டது என்பதை உவமை காட்டி உணர்த்த முற்படுகிறான்.

    “இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
    நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
    கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.”
                                         – (குறுந். 58)

    தலைவியுடன் இருக்க வாய்ப்பில்லை. கடமையையையும் செய்ய முடியவில்லை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் தலைவனின் மனம் தடுமாறுகிறது. ஆற்றாமை கால்கோளிட்டது. ஆற்றாமைக்கான காரணிகளுள் பிரிவு முக்கியமான ஒன்றாகின்றது. கடமையைச் செய்வதற்கான செயல்பாடுகளை செய்யவொட்டாமல் செய்கிறது. பகலவனின் ஆற்றல் உச்சமடையும் வெயில்  நேரத்தில் வெம்மையான பாறையிடத்தில் இருக்கும் வெண்ணையைப் பாதுகாக்க, கைகளைக் கொண்டு பாதுகாக்கலாமென்றால் கைகளில்லை. ஊமையாய் இருப்பதால் யாரிடமாவது தெரிவித்து காக்கச் செய்யவும் வழிவகை இல்லை. உருகுவதைப் பார்த்துத் துயரப்பட கண்கள் மட்டும் உண்டு வெண்ணெய் உருகுவதுபோல் மாளாத காதல் தீ பற்றி உருக்குகிறது. அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது. இதுவே ஆற்றாமையாய் புலப்படுகின்றது. ஒருவரின் துன்பம் அதனை அனுபவிப்பவரைத் தவிர மற்றவர்களால் உய்த்துணர முடியாது. சில நேரங்களில் கைகளிலிருந்தும் பேசுவதற்கான ஆற்றல் இருந்தும் செயல்பட முடியாத நிலையைப் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. இப்பாடல் தலைவனாகிய ஆண் மனநிலையில் வெள்ளிவீதியார் என்ற பெண்புலவரால் படைக்கப்பட்டது. பெண்ணாக இருந்து வெளிப்படுத்த முடியாத உணர்வைப் புலவர் ஆணைக் கருத்தாவாகக் கொண்டு உணர்த்தியுள்ளார் எனக் கொள்ளவும் இடமுண்டு.

    உயவுநோய் அறியாத ஊர்
    பிரிவு நிகழும் போது மகிழ்ச்சியைத் தரக்கூடியவையும் துன்பத்தைத் கொடுக்கும் என்பதைத் தலைவி ஒருத்தி தெரிவிக்கும் பாடலொன்றில் இடம் பெற்றுள்ளது. ஆற்றாமையின் வெளிப்பாடு உச்சத்தை அடைந்திருக்கிறது. இரவு நேரத்தூக்கமும் காற்றின் மகிழ்ச்சியும் மனிதனுக்கு மிகவும் பிடித்தமானவை. தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவிக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எந்த நிகழ்வும் நடக்கவில்லை. மாறாகத் துன்பத்தை வலுப்படுத்தும் சூழல்கள் மிகுகின்றன. சொல்லொணாத் துயரத்தை அனுபவிக்கும் தலைவியானவள் ஆற்றாமை அலைக்கழிக்க வாய்விட்டுப் புலம்பி அரற்றுகிறாள்.

    “முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
    ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
    ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
    அலமரல் அசைவளி அலைப்பவென்
    உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.”
                                            – (குறுந். 28)

    இரவுப்பொழுதில் இதமாகக் காற்று வீசுகின்றது .ஊரில் உள்ளோர் ஆழ்ந்து துயில் கொண்டுள்ளனர். தலைவனின் மீது கொண்ட அன்புப்(காமம்) பெருக்கம்  தலைவியின் உறக்கத்தைப் பாழ்படுத்தியது. துயர் பொறுக்க முடியாதவள் அரற்றுகிறாள். எல்லோருக்கும் கிடைத்த ஒன்று தனக்கு மட்டும் கிடைக்கவில்லையே என்ற காழ்ப்பு தலைவியின் சினத்தீயைப் பரவச் செய்கிறது. எனக்கு மிகுதியான துயரம் தரும்  என்னுடைய நோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து  நான் முட்டிக் கொள்வேனா? அவர்களை ஏதாவது ஒன்று செய்து  தாக்குவேனா? ஒரு போலிக் காரணத்தை முன்வைத்து, வாய்விட்டு ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா?  என்ன செய்வது என்பதை அறியேன் என்ற கையற்ற நிலையைத் தெரிவிக்கிறாள். மனதால் முட்டுதல்,  மெய்யினால் தாக்குதல், வாயினால் அரற்றுதல் என்ற மூன்றையும் (மனம், மெய், வாக்கு) செய்ய எத்தனிக்கிறாள். இச்செயலால் ஊரார் அலர் தூற்றியோ வேறு ஏதாவது செய்தோ தன்னையும் தலைவனையும் சேர்த்து வைத்துவிடுவார்கள் என்ற உள்ளுதலின் வெளிப்பாடாக தலைவியின் இக்கூற்று ஒளவையாரால் காட்சிப் படுத்தப்பட்;டுள்ளது. தாங்கமுடியாமை, இயலாமை, மனத்துயரம் இவை மூன்றும் கலந்து ஆற்றாமை அமைந்துள்ளது.

    “இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
    எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
    பசி அட நிற்றல் பசலை பாய்தல்
    உண்டியின் குறைதல் உடம்பு நனி சுருங்கல்
    கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
    பொய்யாக் கோடல்…
                            –  (தொல். மெய்ப். நூ.எ.22)

    தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவியிடத்து நிகழ்வனவாகக் குறிப்பிடும் மெய்ப்பாடுகளுள் பல ஆற்றாமைப் புலப்பாடுகளாக விளங்குவது இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

    ஆற்றாமையில் பாகுபாடு
    தலைவியால் தன் காதல் ஏற்கப்படாத நிலையில் தலைவன் மடலேறுவான் என இலக்கியங்கள் பகர்கின்றன. தன்குறை தீரப் பெறாத தலைவன் பனங்கருக்கால் குதிரைபோல் ஒன்றைச் செய்வான். தன் உடல் முழுவதும் சாம்பலோ, திருநீறோ பூசிக்கொண்டு எலும்பு, எருக்கம்பூ உள்ளிட்டவற்றை மாலையாகக் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டு தனக்குப் பிடித்த தலைவியின் உருவத்தை பலரும் பார்க்கும்படியாக ஒரு துணியில் ஓவியமாகத் தீட்டி எடுத்துக் கொண்டு பனங்கருக்குக்குக் குதிரையை தன் உடலில் கட்டி இழுத்த வண்ணம் முச்சந்தி,நாற்சந்தி எனப் பல இடங்களுக்கும் செல்வான். பனங்கருக்கால் தலைவனின் உடல் கீறப்பட்டு, இரத்தம் வெளியாகி இறப்பினைக் கொடுக்கும் எல்லை வரை  செல்வான். இதுவே மடலேறுதல் எனப்படுகிறது. தலைவியை அடையமுடியாத ஆற்றாமையில் தலைவன் உயிர்விடத் துணியும் நிலை இதுவாகும். தலைவிக்கும் இதனால் பழி நேரும். தலைவி மடலேறுவதுபோல் சங்ககாலப்பாடல்கள் பதிவு செய்யவில்லை. பிற்கால பக்தி இலக்கியங்களுள் கடவுளைக் காதலனாகக் கொண்ட பெண் மடலேறுவதாகக் கூறும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பெண் மடலேறக் கூடாது என்பது சங்ககாலத்தில் சட்டம் போல் இருந்ததாக எண்ணமுடிகிறது. குறுந்தொகையில் மடலேறுதல் பற்றிய செய்திகள் உண்டு. தலைவன் மடலேறுவேன் எனக் கூறிப் பாடுவதாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தலைவன் மடலேறினான் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.

    “மாவென மடலும் ஊர்ப பூவெனக்
    குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
    மறுகி னார்க்கவும் படுப
    பிறிது மாகுப காமங்காழ் கொளினே.”
                        (குறுந். 17)

    தலைவி தன் காதலை ஏற்காவிட்டால் மடலேறுவேன் எனத் தலைவியின் தோழியிடம் தலைவன் தெரிவிப்பதாக மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என வாதிட்டாலும் பெண் மேற்கொள்ளக் கூடாது என்ற சில சட்டங்களில் ஒன்றாக மடலேறுதல் இருப்பதனை,

    “கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்கது இல்”
                                – (குறள். 1137)

    “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற்
    பொற்புடை நெறிமை இன்மையான”
                                  – (தொல்.அகத். நூ.எ.28)

    திருக்குறளும் தொல்காப்பியமும் குறிப்பிட்டுள்ளன. ஆற்றாமையிலும் பாகுபாடு இருந்ததனை இதன்கண் அறிய முடிகிறது.

    மயிலின் முட்டை மந்தியின் குட்டி
    தலைவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள் தலைவி. தலைவனின் மீது மிகுதியான காதல் கொண்டு துடித்தாள். வருவேன் எனக் கூறிச் சென்றவன் வரவில்லை. துயரத்தில் ஆழ்ந்தாள் தோழி சமதானம் செய்ய முற்பட்டாள். முயற்சி பலனளிக்கவில்லை . ஆற்றாமை வெற்றி கொண்டது.

    “கான மஞ்ஞை யறையீன் முட்டை
    வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
    குன்ற நாடன் கேண்மை என்றும்
    நன்றுமன் வாழி தோழி உண்கண்
    நீரொ டொராங்குத் தணப்ப
    உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.”
                                                   –   (குறுந். 38)

    மந்தியாகிய குட்டிகள் மயிலின் முட்டையை ஓர் உயிராகக் கருதாமல் உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல், தலைவனுடைய பிரிவால் தலைவியின்  உயிராகிய காதல்  அழியலாம் என்று உள்ளுறை உவமமாகத் தலைவி குறிப்பிடுகின்றாள். மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டிகள் உருட்டி விளையாடுவதைப் போல் தலைவனின் பிரிவினால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதல் ஊராரால் அலர் தூற்றப்பட்டு சிரிப்புக்குக் காரணமாகிவிடும் நிலையைப் பாடல் எடுத்துரைக்கிறது. குரங்குக் குட்டி மயிலின் முட்டையைப் பாவம் எனக் கருதாதது போல் தலைவனும் தன்னைப் பற்றி நினையாது துயரப்படுத்துகிறார் என்பதைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். ஆற்றாமை துயர் மிக்கது என்பதைத் தலைவி உணர்த்திவிடுகின்றாள்.
    கொல்லன் உலைத் துருத்தி
    இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருளினைப் பெற தலைவனின் உள்ளம் விழைகிறது. தலைவியைப் பிரிந்து செல்லுதல் துயர் தரினும் பொருள் ஈட்டுதல் இன்றியமையாததது என்பதைப் புரிந்து தலைவன் பிரிந்து சென்றான். தலைவியால் பிரிவுத் துயரைத் தாள முடியவில்லை. பிரிவுத் துயரினும் மிகுதியாக  பொருள் தேடச் சென்ற இடத்தில் அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ  என்ற எண்ணமும் அவளைப் பதைபதைக்கச் செய்துவிடுகிறது. பிரிவுத் துயரால் தவிக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள். தலைவி தன் துயரத்தின் மிகுதியை வெளிப்படுத்துகிறாள்.

    தாஅ அம் சிறை நொப்பறை வாவல்
    பழுமரம் படரும் பையுள் மாலை
    எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
    தமியர் ஆக இனியர் கொல்லோ?
    ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலை வாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.
                      –   (குறுந். 172)

    வலிமையினையுடைய  அழகான சிறகினையும், பறக்கும் இயல்பையும் உடையன வெளவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும் வெளவால்களும் மாலையில் தனக்குரிய இருப்பிடத்தை அடைந்துவிடும். துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நாம் தனியாக இருக்கும்படியாயிற்று,  இங்கு எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, வரையறுக்க முடியாத துன்பத்தை அடைந்து என் நெஞ்சம் துடிக்கிறது என்கிறாள் தலைவி.

    ஓர் ஊரில் இருப்பவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்வதே கடினமான செயல். அவ்வாறிருக்க ஏழு ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு உலையில் உள்ள துருத்தி இடைவிடாமல் வேலை செய்வதுபோல், என் நெஞ்சு இடைவிடாமல் தலைவனை நினைத்து வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள். கொல்லன் உலைக்களம் வெப்பத்தால் தகிப்பதைப் போலவும் ஏழு ஊரில் இருப்பவர்களுக்கு தனியொராளாக இருந்து உலைக்களத்தில் இருந்து பணியாற்றுவது மிகவும் கடினம் என்பதும் பெறப்பட்டுள்ளது. தனது ஆற்றாமையின் தீவிரத்தைக்  கொல்லன் உலைத் துருத்தியோடு உவமிக்கிறாள் தலைவி.

    நிறைவுரை

    வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்பவை. இன்பத்தின் இனிமையைச் சுவைத்தவர்களை விடவும் துன்பத்தின் துவர்ப்பை சுவைத்தவர்களே அதிகம் என்று என்னும்படியாகப் பலரின் வாழ்வியல் அமைந்துள்ளது. எதையும் செயல்படுத்த முடியாத சூழலில் ஆற்றாமை அங்கு ஆசனம் போட்டு அமர்ந்து விடுகிறது. ஆண் பெண் பேதமின்றி அனைவரிடமும்  ஆற்றாமை நிலைத்திருக்கிறது. இருப்பினும் பெண்ணின் ஆற்றாமை மிகுதியாக இருக்கின்றது. அதன் வெளிப்பாடாக அரற்றலும் புலம்பலும் அழகையும் புலனாகிவிடுகிறது என்பதைக் குறுந்தொகைப் பாடல்கள் சுட்டியுள்ளன. தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்வதும் எதையும் ஏற்று அதன் வழியில் நடப்பதும் ஆற்றாமையின் பிடியிலிருந்து விலகி ஆற்றலுடன் செயல்பட வழிவகுக்கும்.

    துணை நின்ற நூல்கள்

    1. குறுந்தொகை – உ.வே. சாமிநாதையர் உரை
    2. தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை
    3. திருக்குறள் – மு.வ. உரை

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 ( பகுதி 4)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 ( பகுதி 4)

    அன்பினியோரே

    மடலின் நான்காவது பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    பகுதி – 4

    கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி – லிபரல் டெமகிரட்ஸின் தேடல் – பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை

    பிரிட்டனின் அரசியல் வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் ஒரு உண்மையை நன்கு அறிவார்கள்.

    அரசியல் கட்சிகள் தோற்கலாம். ஆனால், அரசியல் சிந்தனைகள் எளிதில் தோற்றுவிடுவதில்லை.

    கன்சர்வேடிவ் கட்சி அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

    மூன்று நூற்றாண்டுகளுக்கு அண்மையில் வரலாற்றைக் கொண்ட இந்தக் கட்சி, உலகப் போர்கள், பொருளாதார நெருக்கடிகள், பேரரசின் வீழ்ச்சி, தொழில்துறை மாற்றம், ஐரோப்பிய ஒன்றிய விவாதம் என எண்ணற்ற புயல்களைக் கடந்துள்ளது. பலமுறை தோல்வியடைந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய முகத்துடனும் புதிய கொள்கைகளுடனும் மீண்டும் எழுந்திருக்கிறது.

    அதனால்தான், இன்று அதன் அரசியல் பலம் குறைந்திருந்தாலும், “கன்சர்வேடிவ் கட்சி முடிந்துவிட்டது” என்று கூறுவது அரசியல் வரலாற்றை அறியாதவர்களின் அவசர முடிவாகவே நான் கருதுகிறேன்.

    இன்றைய கன்சர்வேடிவ் கட்சியின் நெருக்கடி

    எனது பார்வையில், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப்பெரிய எதிரி லேபர் அல்ல.

    அவர்களின் மிகப்பெரிய எதிரி அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள அடையாளக் குழப்பம்.

    ஒருபுறம், மிதவாத மரபைத் தொடர வேண்டும் என்ற அணியினர்.

    மறுபுறம், குடியேற்றம், தேசிய இறையாண்மை, குறைந்த அரசு தலையீடு போன்ற விஷயங்களில் இன்னும் உறுதியான வலதுசாரி நிலைப்பாட்டை விரும்பும் அணியினர்.

    இந்த இரு சிந்தனைகளுக்கு இடையில் சமநிலை காண முடியாத நிலைதான், கட்சியின் வாக்காளர் அடித்தளத்தைச் சிதைத்துள்ளது.

    அதன் பலனை ரீபோர்ம் கட்சி அறுவடை செய்து வருகிறது.

    ரீபோர்ம் – கன்சர்வேடிவ் உறவு

    ஒரு அரசியல் ஆய்வாளராக நான் கவனிப்பது என்னவென்றால், ரீபோர்ம் கட்சி இன்று லேபரின் வாக்குகளை அதிகமாகப் பறிப்பதில்லை.

    அவர்கள் பெரும்பாலும் கன்சர்வேடிவ் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்களையே ஈர்க்கிறார்கள்.

    இதனால் வலதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிகின்றன.

    பிரிட்டனின் First Past the Post தேர்தல் முறையில் இது மிகப்பெரிய அரசியல் விளைவுகளை உருவாக்குகிறது.

    ஒரு தொகுதியில் லேபர் வேட்பாளர் 38% வாக்குகள் பெற்றாலும், கன்சர்வேடிவ் 32% மற்றும் ரீபோர்ம் 20% பெற்றால், வெற்றி லேபருக்கே.

    அதாவது, வாக்குகள் பிரிவதே சில நேரங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றுகிறது.

    இதுவே இன்றைய பிரிட்டிஷ் அரசியலின் முக்கியமான கணிதம்.

    லிபரல் டெமகிரட்ஸ் – அமைதியான அரசியல் சக்தி

    பிரிட்டிஷ் அரசியலில் மிகவும் சுவாரசியமான கட்சி லிபரல் டெமகிரட்ஸ்.

    அவர்கள் பெரும்பாலும் தீவிர அரசியலை விரும்புவதில்லை.

    சமரச அரசியலை விரும்புகிறார்கள்.

    ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவு…

    குடிமக்களின் உரிமைகள்…

    உள்ளாட்சி அதிகாரப் பகிர்வு…

    கல்வி மற்றும் சமூக நலன்…

    இவற்றில் அவர்கள் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    ஆனால் பிரச்சினை என்னவென்றால், மக்கள் அரசியலில் கோபமாக இருக்கும் காலங்களில், மிதமான குரல்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.

    உணர்ச்சிவசப்பட்ட அரசியல், சமநிலையான அரசியலை மறைத்துவிடுகிறது.

    இதுவே லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் நீண்டகால சவாலாக உள்ளது.

    51 ஆண்டுகளில் நான் கண்ட மாற்றம்

    நான் முதன்முதலில் பிரிட்டனில் தேர்தலைப் பார்த்தபோது, குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே கட்சிக்கே வாக்களிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    “எங்கள் குடும்பம் எப்போதும் லேபருக்குத்தான்.”

    “நாங்கள் தலைமுறையாக கன்சர்வேடிவ்.”

    இப்படிப்பட்ட உரையாடல்கள் சாதாரணமாகக் கேட்கப்பட்டன.

    இன்று நிலைமை மாறிவிட்டது.

    இளைஞர்கள் கட்சியை விட கொள்கையைப் பார்க்கிறார்கள்.

    முதியவர்கள் நிலைத்தன்மையைத் தேடுகிறார்கள்.

    நடுத்தர வர்க்கம் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்துகிறது.

    குடியேற்றக் குடும்பங்கள் வாய்ப்புகளையும் சமூக ஒற்றுமையையும் மதிக்கின்றன.

    இந்தப் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு ஒரே பதிலை எந்தக் கட்சியும் வழங்க முடியாத நிலையே இன்றைய அரசியலின் உண்மை.

    எனது அரசியல் மதிப்பீடு

    ஒரு அனுபவமிக்க அரசியல் பார்வையாளராக நான் சொல்ல விரும்புவது இதுதான்.

    லேபர் கட்சி ஆட்சியில் உள்ளது; ஆனால் அதன் வெற்றியை மக்கள் தினமும் சோதிப்பார்கள்.

    ரீபோர்ம் கட்சி வேகமாக வளர்கிறது; ஆனால் எதிர்ப்புக் குரலிலிருந்து ஆட்சிக்குரிய நம்பிக்கையாக மாற வேண்டிய சவால் இன்னும் உள்ளது.

    கன்சர்வேடிவ் கட்சி தோற்றுள்ளது; ஆனால் வரலாறு சொல்லுவது, இந்தக் கட்சியை அரசியலில் இருந்து யாரும் எளிதாக நீக்க முடியாது.

    லிபரல் டெமகிரட்ஸ் அமைதியாக வளர்கிறது; ஆனால் தேசிய அளவிலான மாற்று ஆட்சிக் கட்சியாக மாற இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது.

    முடிவுரை

    பிரிட்டனின் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அழகு என்னவென்றால், இங்கு அரசியல் பகை நிரந்தரமல்ல.

    எதிர்க்கட்சி நாளை ஆட்சியாகலாம்.

    ஆளும் கட்சி நாளை எதிர்க்கட்சியாகலாம்.

    ஆனால் ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

    அந்த நம்பிக்கையே இந்த நாட்டின் உண்மையான பலம்.

    (தொடரும் – இறுதிப் பகுதி: “பிரிட்டனின் நாளைய அரசியல் – ஒரு புலம்பெயர் தமிழனின் நம்பிக்கையும் எச்சரிக்கையும்.” இதில் முழுக் கட்டுரையின் சாரம், எதிர்கால அரசியல் கணிப்புகள் மற்றும் நிறைவுரை இடம்பெறும்.)

    Share
  • ஜி.டி.என். திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஜி.டி.என். படம் பார்த்த பிறகு ஜி.டி. நாயுடுவை மக்கள் எப்படி நினைவுகூர்வார்கள்? ஒரு தந்திரசாலியாகவா? போராளியாகவா? அறவழியில் நின்றவராகவா? தொழிலதிபராகவா? பென்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியாகவா?

    ஜி.டி.நாயுடுவை ஒரு கண்டுபிடிப்பாளராக, அறிவியல் பார்வை கொண்டவராக, அதன் வழியே சிக்கலைத் தீர்த்தவராக, புத்தாக்கங்களின் நாயகராக, குறைந்த செலவில் தரமான பொருள்களை உருவாக்கியவராக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால், இது சாதாரண அரசியல் படமாக மாறிவிட்டது.

    வணிகரீதியில் வெற்றி பெற வேண்டும் என்றால், கதாநாயகன் மட்டுமில்லை, வில்லனும் வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். அதனால், சிலரை வில்லனாகக் காட்டுவதற்காகத் தேவையில்லாமல் நிறையக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதனால், ஜி.டி.நாயுடுவின் புத்தாக்கம் என்ற மையக் கருவிலிருந்து படம் விலகிச் சென்றுவிட்டது. இந்த அடிப்படைச் சறுக்கல், படத்தின் தரத்தைக் குறைத்துவிட்டது. இதன் திரைக்கதையைப் படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமாரும் ஆர்.மாதவனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

    விவரணப் படமாக (டாக்குமென்டரி) ஆகிவிடக் கூடாது என்ற நினைப்பில், வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் உலகப் பயணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இன்று நாம் ஜி.டி.நாயுடுவைக் கொண்டாடுவதற்குக் காரணம், அவர் ஜெர்மனிக்குச் சென்றதோ, பென்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியாகவோ இருந்தது இல்லை. அவரது அறிவியல் கண்ணோட்டத்தை, தொலைநோக்கை, கருவிகளை, ஆலைகளை, புதிய கண்டுபிடிப்புகளை வைத்தே அவரை மதிக்கிறோம். ஒருவரது வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எவை முக்கியமான நிகழ்வுகள், அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்த தலைமுறை எடுத்துக்கொள்ள வேண்டியது என்ன என்ற தெளிவோடு படத்தை எடுக்க வேண்டும்.

    படத்தின் சுவரொட்டிகளில், எடிசன் ஆப் இந்தியா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால், படம் அவரது கண்டுபிடிப்புகளில் மையம் கொள்ளவில்லை. எடிசன், ஆயிரத்துக்கும் மேலான பொருள்களுக்குக் காப்புரிமை பெற்றுள்ளார். ஜி.டி.நாயுடுவோ வெகு சில பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றுள்ளார். இதற்கான காரணங்கள் குறித்துப் படத்தில் எதுவும் இல்லை. காப்புரிமை ஏன் மிகவும் முக்கியம் என்ற விழிப்புணர்வைப் படம் ஊட்டவில்லை.

    ஜி.டி.நாயுடுவை எடிசனுடன் ஒப்பிட வேண்டிய தேவையும் இல்லை. எப்போதும் நம்மை மேற்குலகச் சாதனையாளர்களுடன் அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏதுமில்லை. நமது தனித்த அடையாளங்களை நாம் பேண வேண்டும். நமது பாரம்பரிய அறிவு, அனுபவம், கண்டுபிடிப்புகள் குறித்த பெருமை நமக்குத் தேவை. இன்னொருவரது புகழின் நிழலில் நாம் வளர வேண்டாம்.

    1970ஆம் ஆண்டு ஜி.டி.நாயுடு வாழும்போதே அவருக்கு பத்ம பூஷன் விருதினை அளித்து, இந்திய அரசு கெளரவித்துள்ளது. ஆனால், படத்தில் அவர் தனது கண்டுபிடிப்புகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தி, ஓட்டாண்டியாக ஆனது போல் காட்டியுள்ளனர்.

    ஜி.டி.நாயுடுவின் முதல் மனைவி, அவரை இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்வதற்கு வலுவான காரணத்தைப் படத்தில் காட்டவில்லை. இரண்டாம் திருமணம் ஆன பிறகு, முதல் மனைவி என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. முதல் மனைவி செல்லம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், படத்தில் அதைப் பற்றிய குறிப்பும் இல்லை. இது வாழ்க்கை வரலாறு என்ற
    வகையிலும் முழுமையாக இல்லை.

    ஜி.டி.நாயுடு படத்தைப் பார்த்த பிறகு விஞ்ஞானிகள் உருவாவதற்குப் பதிலாக, வரி பாக்கி ஜப்திக்காக அரசு அதிகாரிகள் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று பலரும் கற்றுக்கொள்ளக் கூடும். அந்த அளவிற்கு வரி விதிப்பு அதிகாரிகள், இதில் காட்டப்படுகிறார்கள்.

    ஜி.டி.நாயுடுவைப் பற்றி இன்னொரு சிறப்பான படம் எடுக்கும் தேவையை இந்தப் படம் உருவாக்கிவிட்டது.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 46

    63 நாயன்மார்கள் வரலாறு – 40 நரசிங்கமுனையரைய நாயனார்

    “மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் திருத்தொகையில் புகழாரம் சூட்டுகிறார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றைப் பெற்றவர் இவர். குறுநில மன்னராக நடுநாட்டை ஆண்டவர் நரசிங்கமுனையரைய நாயனார். பழங்காலத்தில் திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என்று பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. திருமுனைப்பாடி நாட்டை முனையரையர் என்னும் வீரம் செறிந்த மன்னர்கள் ஆண்டனர். அதனால் முனைப்பாடி என்னும் பெயர் வந்தது. அந்த முனையரையர் என்னும் மரபிலே திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்கமுனையரைய நாயனார்.

    நம்பிஆருரரை அன்பினால் மகன்மைக் கொண்டவரான இந்நாயனார் சிவபெருமான் மீது பெரும் பக்தியும், சிவனடியார்கள் மீது மதிப்பும், அன்பும் கொண்டிருந்தவர். தம் நாட்டின் அனைத்து சிவாலயங்களிலும் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார். கோயில் செல்வங்களைப் பெருக்கி, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார்.

    வீரத்திலும் சிறப்பாக இருந்த இவர் நாட்டையும் பகைவரிடமிருந்து பேணிக்காத்து வந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு புரிவதையும் பெரும் பேறாகக் கருதி வந்தார். திருவாதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்வதோடு, நூறு பொன் நிதி தருகின்ற நியதியையும் கொண்டொழுகினார்.
    ஒரு திருவாதிரைத் திருநாளன்று நரசிங்கமுனையரைய நாயனார் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிக் கொண்டிருந்தபோது நெற்றியில் திருநீறு அணிந்த சிவனடியார்கள் பலர், நரசிங்கமுனையரைய நாயனாரிடம் பரிசு பெற வேண்டி பூசையில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். அப்படி வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் தீராத நோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்ட ஒருவரும் இருந்தார். அவர் திருநீறு அணிந்திருந்தாலும் அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றதால் அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார்.
    அந்த சிவனடியாரைக் கண்ட நரசிங்கமுனையரைய நாயனார், திருநீறு அணிந்த அந்த அடியாரின் புறத்தோற்றத்தைக் குறித்து எந்த விதமான கவலைகளும் கொள்ளாமல், அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவர் அணிந்திருந்த திருநீற்றுக்கு உரிய மரியாதையை வழங்கியவர், அவருக்கு நூறு பொன் காசுக்குப் பதிலாக அந்த அடியாருக்கு இருநூறு பொன் காசுகள் கொடுத்து, அவரை வணங்கி, இன்சொற்களால் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

    சீலம் இலரே எனினும்

      திருநீறு சேர்ந்தாரை

    ஞாலம் இகழ்ந்து அருநரகம்

      நண்ணாமல் எண்ணுவார்

    பாலணைந்தார் தமக்கு அளித்தபடி

      இரட்டிப் பொன் கொடுத்து

    மேலவரைத் தொழுது இனிய மொழி

      விளம்பி விடை கொடுத்தார்

    திருநீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவனடியார்களுக்கு பணிசெய்தும், சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் பேறு பெற்றமையாலே, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து, மீளா நிலை பெற்றார்.

    நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    நம்பிஆருரரை அன்பினால் மகன்மைக் கொண்டவர் நரசிங்கமுனையரைய நாயனார். ஒரு சமயம் நரசிங்கமுனையரைய நாயனார் திருநாவலூர் பெருமானைத் தரிசித்து விட்டு வீதிவலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சிறு தேர் உருட்டி விளையாடும் குழந்தையாக சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டார். சுந்தரமூர்த்தி நாயனாரின் அழகில் தன் உளம் பறிகொடுத்தவர், அந்த தெய்வக் குழந்தையை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற பேராவல் அவர் மனதில் உதித்தது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பெற்றோர்களான சடையநாயனாரும், இசைஞானியாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி, அதை திருநாவலூர் பெருமானின் விருப்பம் என்று வியந்து அவருடன் தங்கள் மகனை முழு மனதோடு தத்துக் கொடுத்து, அனுப்பி வைத்தார்கள். நரசிங்க முனையரைய நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணப் பருவம் அடையும்வரை சீறும் சிறப்புமாக வளர்த்து வந்தார்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 45

    63 நாயன்மார்கள் வரலாறு – 39 புகழ்ச் சோழ நாயனார்

    பொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்

        போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே

    யழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே

        லடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த

    தழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன்

        சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்

    கழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த

        கனன்மூழ்கி யிறைவனடி கைக்கொண்டாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில், “பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்” என்று புகழ்கிறார்.

     இமயமலையின் நெற்றியின் செங்குத்துப் பாறைகளில் தங்கள் புலிக் கொடியைப் பறக்கவிட்டு தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியவர்கள் சாகசப் பிரியர்களான சோழர்கள். சோழ மன்னர்களின் பல தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய திருச்சிக்கு அருகிலுள்ள உறையூர், உறந்தை, கோழியூர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.

    தலைநகரமாக இருந்த உறையூரில், நான்கு படைகளைக் கொண்ட அரசப் படையின் தொடர்ச்சியான நடமாட்டம் இருந்தது. அந்த நகரம் அழகிய உயரமான வீடுகளின் வரிசைகளையும், வணிகத் தெருக்களையும், யானைகள் பல உடைய சாலைகளையும், உயர்ந்த மதில்கள், கூட கோபுரங்கள், தேவர்கள் உலா வரும் சாலைகள் போன்ற சிறப்புகளைக் கொண்டிருந்தது. இந்த நகரத்தின் மையத்தில், ஒரு கிரீடத்தைப் போல, பிறை அலங்கரிக்கப்பட்ட கடவுளான பஞ்சவர்ணேசுவரர் கோயில் இருந்தது. அவர் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சியளித்தார். இது இப்போது திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு திருப்பணிகள் பல செய்து வந்தார்.

    தில்லையம்பதியில் எண்ணிலாத் திருப்பணிகள் செய்து புகழ் பெற்றவரான, அனபாயச் சோழனுடைய திருக்குலத்திற்கு மூதாதையாக விளங்கியவர் புகழ்ச் சோழர் என்ற மாமன்னர். புகழ்ச் சோழ நாயனார் சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுப்பித்து, அன்றாட வழிபாடுகள் சிறக்கவும் ஏற்பாடு செய்து வந்தார். தொண்டர்களின் உதவியால் திருத்தொண்டுகள் பலவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட இத்திருத்தலம் ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றது. இவர் கொங்கு நாட்டிலும், மேல் திசையில் உள்ள ஏனைச் சிற்றரசர்களும் கப்பங்களைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதனால் சோழர்களின் உரிமைத் தலைநகரங்களின் ஒன்றான கருவூரைத் தன் சுற்றத்துடன் அடைந்தார். கரூரில் பசுபதீசுவரரை பல காலம் வழிபட்டார். அதன் பின்னர் அரண்மனை சென்று அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளினார். சிற்றரசர்கள் கொண்டு வந்த யானைகள், குதிரைகள், பொன்மணிகள் முதலிய திறைப் பொருட்களையெல்லாம் கண்டார். நிறைகொண்டு வந்த மன்னர்களின் நிலைக்கு ஏற்ப செயல் உரிமைகளைத் தந்தார். அந்த சிற்றரசர்களைப் பார்த்து, தமது ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருக்கின்ற அரசர்கள் இருந்தால், அவர்கள் யார் என்ற விவரம் அளிக்குமாறு கேட்டார். அதற்கு அவ்வரசர்கள், முறையாகத் திறை செலுத்தாத மன்னன் அதிகன் என்பவன் என்றனர். பெரிய மதில்கள் சூழ்ந்த நகரில் இருந்துகொண்டும் திறை செலுத்தவில்லை என்றனர். அவன் தனது நான்கு மடங்கு படையை எதிரியின் கோட்டையை ஆக்கிரமிக்கக் கட்டளையிட்டான். புகழ்ச் சோழனின் வலிமையும் வீரமும் நிறைந்த படை, கோட்டையையும் எதிரியையும் எளிதாகக் கைப்பற்றியது. அதிகன் காட்டில் ஓடி ஒளிந்தான்.

     அவர்கள் தங்கள் வீரத்தை மன்னனுக்குக் காட்டுவதற்காகக் குவியல் குவியலாகத் தலைகளைக் கொண்டு வந்தனர். அந்தத் தலைகளின் நடுவே ஒரு தலையில்  சிவ பக்தனின் அடையாளமான சடைமுடியும், திருநீறும் கண்டார்.

    கண்ட பொழுதே நடுங்கி

      மனம் கலங்கிக் கைதொழுது

    கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து

      எதிர் சென்று அது கொணர்ந்த

    திண்டிறலோன் கைத் தலையில்

      சடை தெரியப் பார்த்தருளிப்

    புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து

      இழியப் புரவலனார்.

    செங்கோலின்வழி நிற்பச் சிவநெறி தழைக்க அரசு புரிந்தவர், சடைமுடியைக் கண்ட மாமன்னர் மனம் நடுங்கினார். அருவியென கண்களில் நீர் பொழிந்தது. சடாமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்ட புகழ்ச் சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகு இதுவல்லவே என்று தம்மையே இகழ்ந்து கொண்டார். தாம் அரசாட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகப் புலம்பியவர், அமைச்சர்களை நோக்கி, “இந்நாட்டை ஆளுமாறும், சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என்னுடைய மகனுக்கு முடிசூட்டுங்கள்” என்றார். தாம் செய்த இந்த பழிக்குத் தீர்வு தாமே காரணமாகி அக்கினியை வளர்ப்பித்தார். தம் உடல் முழுதும் திருநீறு பூசிக்கொண்டு, திருச்சடையையுடைய தலையை பொற்தட்டில் கிடத்தி தலைமேல் அத்தட்டைச் சுமந்து கொண்டு திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டு அக்கினியை வலம் வந்து மகிழ்ச்சியுடன் அக்னி பிழம்பினுள் இறங்கினார். இறையருளால் அப்போது வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச் சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்து முக்தி அடைந்தார். சைவ நெறி தழைக்கத் தம் உயிரையே தியாகம் செய்த இந்த மகான் நாயனார் என்று போற்றப்படுகிறார்!

    புகழ்ச் சோழ நாயனார் புராணம் சொல்லும் கருத்து!

    ஒரு நாள் சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூக்குடலையைப் பட்டத்து யானை சிதறிய குற்றத்திற்காக அந்த யானையையும், பாகரையும் கொன்று நின்ற எறிபத்த நாயனாரை அடைந்து தம்முடைய உடைவாளைத் தந்து “யானை செய்த குற்றம் என்னையே சேரும். ஆகவே என்னையும் கொல்லும்” என்று எறிபத்த நாயனாரிடம் உறைவாளை வழங்கினார். அப்போது இறைவன் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். யானையும் பாகரும் உயர் பெற்றெழும்படி புகழ்ச் சோழ நாயனார் பக்தியில் சிறந்து விளங்கினார்.

    அக்கால மன்னர்கள் போரிட்டு தங்கள் இராச்சியங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவது வழமையான செயல் என்றாலும், சடைமுடியுடன் ஒரு அடியாரின் தலையைப் பார்த்த பிறகும், தன் புகழ் களங்கப்பட்ட நிலையில் தான் எப்படி அதன் பிறகும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று புகழச் சோழன் குற்றவுணர்வில் மூழ்கினார். மிகுந்த துயரத்துடன், தன் மகனான புதிய மன்னனுக்கு முடிசூட்டி, அவனை இறைவனின் நெடுவழியில் வழிநடத்துமாறு கட்டளையிட்டார். அமைச்சர்களும், குடிமக்களும் பெரும் துயரத்துடன் இருக்கும் வேளையில் தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் தீர்மானித்தார். பெயருக்கு ஏற்றவாறு தன் புகழ் உச்சத்தை அடைந்த நிலையில் இறைவனின் திருவடிகளை அடைந்தார்.

    அரசனாக இருப்பினும், இறைமை என்பது தன்பரிசனம், பகைவர், கள்வர், தீவிலங்குகள் போன்றவற்றால் குடிமக்களுக்குத் தீங்கு நேராமல் காப்பதே சிறந்த அறமாகும். அது,

    “மாநிலங்கா வலனாவான் மன்னுயிர் காக்குங்காலைத்

    தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால்

    ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மா லானபய

    மைந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ”

    என வரும் மநுநீதி கண்டபுராணச் செய்யுளால் விளங்குகிறது.

    சிவன் பண்பே தம் பண்பாகக் கொண்டு உலாவும் நடமாடும் சிவங்களாகிய சிவனடியார்களுமே தம் வாழ்வின் பெருந்தவம் என்று எண்ணுபவர்கள்,  இவற்றுக்கு நேரும் நிந்தை முதலிய தீங்குகள் நேரடியாகவே அரசன் கேட்டிற்குக் காரணமெனப்படுதலினாலும் அது வலுவுறும். அவ்வாறாதல் திருமந்திரத்தில்,

    “முன்னவனார்கோயிற் பூசைகள் முட்டிடின்

    மன்னற்குத் தீங்குள வாரி வளங்குன்றும்

    கன்னங்களவு மிகுத்திடுங் காசினி

    என்னரு நந்தி எடுத்துரைத்தானே”

    என்று உரைக்கப்படுகிறது.

    திருவாதவூரடிகள் புராணத்தில், வையைப் பெருக்கினால் தளர்வுற்ற பாண்டிய மன்னனைப் பற்றி சொல்லும்போது,

     “ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை

    பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ

    நீதியாந் தவத்தின் மிக்கார் நெஞ்சம் புழுங்க மண்மேல்

    நீதியாஞ் செய்ததுண்டோ செப்புமினமைச்சரென்றான்”

    என்று வருவதால் அறியப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று புகழ்ச் சோழ நாயனாரின் குருபூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 44

    63 நாயன்மார்கள் வரலாறு – 38 பொய்யடிமை இல்லாத புலவர்

     சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகை ஏழாம் திருமுறைப் பதிகத்தில் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற புகழ்பெற்ற வரியை அருள்கின்றார். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பதின்மரைப் பற்றி பாடியுள்ளார். ‘பொய்யடிமையில்லாத புலவர் புராணம்’ என்பது அவற்றில் ஒன்று.

    செய்யுள் நிகழ் சொல் தெளிவும்

      செவ்விய நூல் பல நோக்கும்

    மெய் உணர்வின் பயன் இதுவே

      எனத் துணிந்து விளங்கி ஒளிர்

    மை அணியும் கண்டத்தார்

      மலர் அடிக்கே ஆளானார்

    பொய் அடிமை இல்லாத புலவர்

      எனப் புகழ் மிக்கார். 

    பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்பவர்கள் அடியார்களும் சிவனருட் செல்வர்களுமாவர். பொய்யடிமை இல்லாத புலவர்கள் நுண்ணிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்தும், செவ்விய நூல்கள் பலவற்றைக் கற்றும் மெய்யுணர்வின் பயன் இதுவே என்று உணர்ந்தவர்கள். மிகுந்த அர்ப்பணிப்புடன் சித்தத்தை சிவன் பால் வைத்து வாழும் பெருமை மிக்கவர்கள். திருக்கயிலைப் பெருமானுக்கே ஆளானவர்களான இவர்கள் பாடல்களின் சொற்களுக்கு மிகத் தெளிவாகப் பொருள் உரைப்பவர்கள். அறிவார்ந்த அடியார்களான இப்புலவர்கள் கற்றவர்களுக்கு மட்டுமே வரம்பாக நிற்பவர்கள். நூல் பல கற்று நுண்மதி படைத்தோர் மெய்யுணர்வு கொண்டோரான இவ்வடியார்கள் சிவபெருமானை அன்றி வேறு எப்பேர்ப்பட்ட பொருளாயினும் பெரிதாக எண்ணாதவர்கள். மெய்யன்புடன் எம்பெருமானுக்கு அடிமை பூண்டவர்கள். பக்தி நூல்களை ஓதி உணர்ந்து உருகி, ஒருமைப்பட்டு நிற்பவர்கள். மெய்யன்புடன் சிவனடிக்கேத் தொண்டு பூண்ட அவர்கள் திருவருள் நெறி நின்று பெற்ற பெருமை அளவிடற்கரியது. அதுமட்டுமின்றி தவறாது வேத முறைப்படியிலான வேள்விகளைச் செய்து சிவனை வழிபட்டு வருபவர்கள். சிவபெருமானை அன்றி, வேறு எவரையும் புகழ்ந்து பாடாத சொற்திறம் மிக்க பெருமைக்குரியவர்கள்.

    பொற்பு அமைந்த அரவாரும்

      புரிசடையார் தமை அல்லால்

    சொற்பதங்கள் வாய் திறவாத்

      தொண்டு நெறித் தலைநின்ற

    பெற்றியினில் மெய் அடிமை

      உடையாராம் பெரும் புலவர்

    மற்றவர் தம் பெருமையார்

      அறிந்து உரைக்க வல்லார்கள்.  

    ஆங்கு அவர் தம் அடி இணைகள்

      தலை மேல் கொண்டு அவனி எலாம்

    தாங்கிய வெண்குடை வளவர் குலம்

      செய்த தவம் அனையார்

    ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை

      உணர் செயல் புரிந்த

    பூங் கழலார் புகழ்ச்

      சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம். 

    திருச்சிற்றம்பலம்

    பொய்யடிமை இல்லாத புலவர்கள் புராணம் சொல்லும் கருத்து

    ஏழாம் பாடலில், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!’ என்று சுந்தரர் கூறியுள்ளது தனியடியார்களையா? தொகையடியார்களையா? என்கிற ஆய்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.1,300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ வரிக்கு உரியவர் யார் என்ற தேடல் இன்றும் தொடர்கிறது.

    ‘வேண்டுவோர்க்கு வீடுபேறளிக்கும் அற்புதத் திருத்தலமான திருப்புகலூர் ஆலயத்தில் செங்கற்கள் பொன்கட்டிகளாக மாறிய திருவருள் அதிசயம் நடந்தது. அதையே சான்றாகக் கொண்டு, பூவுலகில் மண்ணாளும் வேந்தர்களைப் புகழ்ந்துபாடி வீணாய் பொழுதைக் கழிக்காமல் புகலூரில் உறைந்துள்ள இறைவனைப் பாடுங்கள், எண்ணியதைப் பெறலாம்’ என்ற வேறொரு பாடலில் சுந்தரர் பெருமானின்  விளக்கமே விடையாகிறது.

    இது குறித்து பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம், அவர்களின் விளக்கத்தையும் அறிவோம்:

    முதற் செய்யுளின் பொருள்: பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் யார் என்றால், தாம் அருளிய செய்யுளில் தோன்றும் ஒவ்வொரு சொல்லும் (நிகழ் சொல்) பொருள் தெளிவுடன் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து) உரைப்பவரும், செவ்விய நூற்கள் பலவும் உணர்த்த முயலும் பயன் சிவபெருமான் திருவடிப்பேறே என்று விளங்கி உணர்ந்து, அம் மைஅணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானவர் அவர் ஆவார்.

    இரண்டாம் செய்யுளின் பொருள்: ‘அப்பொய்யடிமை இல்லாத புலவர், பொற்பமைந்த புரிசடை வள்ளல்‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ வாழ்வோரில் முதன்மையானவராம் பேறு பெற்றதால், மெய் அடிமை உடைய பெரும் புலவர் ஆவார்; அன்னாரின் பெருமையை அறிந்து உரைக்க யாரால் இயலும்?’ என வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

    சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற திருவாக்குக்கு, ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்’ என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் பாடலை ஏற்றுக் கொள்ளாத சேக்கிழார் பெருமான், அவர்தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபட, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்” என்று தம் சொற்பதங்களால் பரமனைப் பாடுவதற்கல்லால் வாய்திறவா தொண்டுநெறி வாழ்வோரில் முதன்மையானவர் அம் மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று உறுதிபடக் கூறியதால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ தனியடியாரே என்று திண்ணமாகக் கூறிவிட்டார் சேக்கிழார் பெருமான்.

    இயற்பெயரைக் குறிக்காது,  ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ என்ற சிறப்புப் பெயரால் சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருத்தொண்டர் தொகை’யில்  சிறப்பித்துப் பாடியது ஒரு தனியடியாரையே என நிறுவிய சேக்கிழார் பெருமான், அப்பொய்யடிமையில்லாப் புலவரின் சிறப்புத் தகுதிகளை விரித்தும் விளக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் தம் ‘திருத்தொண்டர் தொகை’யில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் வேறு தனியடியார்களை இயற்பெயர் குறிக்காது சிறப்புப் பெயரால் குறித்துள்ளாரா என்ற இயல்பான கேள்விக்கான விடைகளே சேக்கிழாரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் செய்திகளாம். நாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘திருத்தொண்டர் தொகை’யிலேயே இக்கேள்விக்கான விடையைத் தேடலாம்.

    ‘திருத்தொண்டர் தொகை’யை உற்று நோக்கினால், இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப்போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று அந்நாயன்மார்களின் அரும்பெரும் செயல்கள், இயல்புகளால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறித்துள்ளதைக் காணக் கிடைக்கின்றன. இங்ஙனம் தனியடியார்கள் பலரையும் இயற்பெயரால் குறிக்காமல் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார் என்பது முக்கியமான செய்தியாகும்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • மங்கலம் ஆக விளங்குகிறாள் வரலக்ஷ்மி!

    மங்கலம் ஆக விளங்குகிறாள் வரலக்ஷ்மி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மங்கலம் என்பது எங்கும் தங்கிட
    வரமருள் என்றுமே வேண்டுவார் யாவரும்
    தந்திடும் தாயாய் இருப்பாள் வரலக்ஷ்மி
    வரலக்ஷ்மித் தாயைப் போற்றுவோம் வாரீர்

    காத்திடு தாயே என்றுமே வேண்டிக்
    காப்புக் கட்டி வேண்டுவார் பெண்கள்
    மங்கலம் நிறைந்திட மங்கல மாதர்
    வரமருள் என்றுமே வேண்டுவார் உருகி

    குடும்பம் சிறக்க கொண்டவர் சிறக்க
    வைத்திடு என்றுமே வேண்டுவார் மாதர்
    மாங்கல்யம் நிலைக்க வரமருள் என்று
    வேண்டுவார் யாவரும் வரலக்ஷ்மித் தாயை

    அஷ்ட செல்வங்களும் அருள்வாள் வரலக்ஷ்மி
    அவளின் பாதத்தை அனைவரும் பற்றுவோம்
    பற்றுவார் வாழ்வில் மங்கலம் நிறையும்
    மங்கலம் ஆக விளங்குகிறாள் வரலக்ஷ்மி !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார்

     

     

     

    குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

        கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

    பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

        பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த

    மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி

        மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்

    சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து

        திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

     

    கூற்றுவ நாயனார் களந்தை என்னும் ஊரில் வாழ்ந்த சிவனடியார். ஒரு சிற்றரசராக இருந்த இவர் தன் தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் பகைவர்களை வென்ற மாவீரராகவும் இருந்தார். பல்லவ மன்னரான இவர் பல்வேறு மன்னர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார். தும்பைப் பூ மாலை சூடியவர், சோழ மன்னர்களையும் வென்று சோழ நாட்டையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். யானைப் படைகள், விரைந்து செல்லும் குதிரைகள், வலிமையான தேர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் என மிகவும் சக்திவாய்ந்த படைகளுக்குத் தலைவராக விளங்கினார். என்றாலும் இவர் முடி சூடிக்கொண்ட அரசராக இல்லை. அந்நாட்களில் மன்னர்களுக்கு மணிமகுடம் சூட்டுவது ஒரு பெரிய விழா. பண்டைய நாட்களில் சோழர்களின் மணிமுடி தில்லையின் கருவூலத்தில் இருந்தது. உரிய காலத்தில் இதனை சோழ மன்னர்களுக்குச் சூட்ட வேண்டும் என்று தில்லை வாழ் அந்தணரை வேண்டினார்.

     

    • ஆனால் அவர்கள் சோழர் குலத்தில் தோன்றாத மன்னர் எவருக்கும் முடி சூட்டமாட்டோம் என்று கூறிவிட்டனர். தீட்சிதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மணிமகுடத்தை ஒப்படைத்துவிட்டு சேர நாடு சென்றுவிட்டனர். ஆனால் கூற்றுவ நாயனார் அவர்களிடம் வாதிட்டு முடி சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.
    • கூத்தப் பெருமானிடத்தில் கூற்றுவனார், தில்லைவாழ் அந்தணர்கள் தனக்கு முடிசூட்ட ஒப்புதல் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை ஐயனின் திருவடியையே மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும் என வேண்டினார். தன் அடிகளை முடியாகத் தரவேண்டும் என்று சிவனை வேண்டியதால், சிவபெருமானும் அவர் கனவில் தோன்றி அவரது சென்னியின் மீது தம் திருவடிகளைச் சூட்டி அருள் புரிந்தார். கண் விழித்த நாயனார் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். பேரானந்தம் கொண்ட அந்நாயனார் இறைவனுடைய திருவடியே மணிமுடியாகக் கொண்டு நாடாண்டார். அரசு செல்வத்தைப் பெருமான் அருளால் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணிக்கும், அடியவர் பணிக்கும் அரசு செல்வத்தைப் பயன்படுத்தி இறைவன் திருவடி நிழல் சார்ந்தார்.
    •  கூற்றுவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

     

    பகைவர்களுக்கு எமன் போன்று விளங்கியதால் கூற்றுவர் என்ற பெயர் பெற்றார் இந்நாயனார். கூற்றுவர் என்பதற்குக் கூறுபடுத்துபவர் என்று பொருள். உடம்பையும், உயிரையும் கூறுபடுத்துவதால் எமனுக்குக் கூற்றுவன் என்று பெயர். வெற்றிகளால் இவர் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். அருளிலும் பொருளிலும் சிறந்து விளங்கிய இந்நாயனார் பகைவர் அஞ்சும் நாற்படை கொண்டு பெருமிதத்துடன் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.

     

    தம் பூர்வ புண்ணியப் பேறாகக் கூற்றுவ நாயனார் சிவபெருமான் எனும் மெய்யுணர்வும், சிவநாமமும் எம்பெருமான் வழிபாடும் தவறாது புரிந்து சிறந்த சிவனடியாராக விளங்கியுள்ளார். சேக்கிழார் பெருமான் வாக்கில்,

    “துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று

    சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில்

    நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார்

    பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி

    முன்னா கியநல் திருத்தொண்டின்

    முயன்றார் களந்தை முதல்வனார்”

    என்று போற்றுகின்றார்.

     

    தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லைவாழ் அந்தணரை வலிந்து உடன்படுத்தவோ அல்லது மாற்று வழி கண்டு முடிசூட்டு விழாவைக் கொள்ளவோ போதிய ஆற்றல் உள்ளவராக இருந்தும் கூற்றுவ நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே வேண்டியவர், அத்திருவடியே தமக்கு மணிமுடியாகப் பெற்று நாடாண்டார். நாடாளும் பணியுடன், இறைப்பணியும், அடியவர் பணியும், சிறக்க வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சேர்ந்தார்.

     

    திருச்சிற்றம்பலம்.

     

     

     

     

    Share
  • மார்த்தா (சிறுகதை)

    மார்த்தா (சிறுகதை)

    ஜெயா
    சின்ன காஞ்சிபுரம் 

    மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன.

    அறையின் ஒரு ஓரத்தில், பழைய மர முக்காலியில் அமர்ந்து பித்தளைத் தம்பாளத்தில் கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி. அருவாமனையின் ‘கீச் கீச்’ சத்தமும், நறுக்கிய காய்கள் தண்ணீரில் விழும் ‘சொப் சொப்’ சத்தமும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன.

    திடீரென வாசல் கதவு படாடீரெனத் திறந்தது. முதுகில் கனமான பள்ளிப் பையைத் தொங்கவிட்டபடி, முகம் முழுக்கக் கடுப்புடன் உள்ளே நுழைந்தான் 16 வயது மார்த்தாண்டம் (எ) மார்த்தா. சாக்ஸை உருவி வீசிவிட்டு, ஒரு பெருமூச்சோடு பாட்டியின் அருகில் பொத்தெனத் தரையில் உட்கார்ந்தான்.

    “ஹப்பா… இந்த வீட்ல யாருக்குமே என் கஷ்டம் புரியல பாட்டி! உங்க பையன் ஏன் எனக்கு எப்போதுமே ‘ஃபேவரா’வே இருக்க மாட்டேங்குறாரு?” என்று ஆத்திரத்துடன் புலம்பினான்.

    பாட்டி அருவாமனையிலிருந்து பார்வையை எடுக்காமல், மெல்லச் சிரித்தபடி, “என்னாச்சுடா மகராசா? காலையிலேயே சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடி கோபம் உச்சிக்கு போயிருச்சு?” என்றார்.

    “பின்ன என்ன பாட்டி? ஸ்கூல்ல இருந்து அடுத்த வாரம் கடலூர், பாண்டிச்சேரின்னு ‘சோஷியல் சர்வீஸ்’ டூர் கூட்டிட்டு போறாங்க. புயல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பண்றது, விழிப்புணர்வு முகாம் நடத்துறதுன்னு எவ்வளவு பெரிய விஷயம்! டூர் ஃபீஸ் கட்டணும்னு சொல்லி ஒரு வாரமாச்சு. ‘நாளைக்கு தர்றேன், நாளை மறுநாள் தர்றேன்’னு சொல்லி உங்க அருமைப் பையன் என்னை அலைய விடுறாரு. இன்னைக்கு ஈவினிங் தான் கடைசி நாள். கிளாஸ்ல ரக்ஷன் என்னை எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்றான். ‘நோ மணி, ஒன்லி டிப்ரஷன்!’ உண்மையிலேயே அப்பா வேஸ்ட் பாட்டி!”

    ‘வேஸ்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் பாட்டி கையில் இருந்த அருவாமணையை அப்படியே தள்ளிவைத்தார். சேலைத் தலைப்பால் கைகளைத் துடைத்துக்கொண்டு, கண்ணாடியைச் சரிசெய்து மார்த்தாவை நிமிர்ந்து பார்த்தார்.

    “ஏய்… வாய மூடுடா! அப்பாவை பத்தி வார்த்தையை அளந்து பேசு. ‘வேஸ்ட்’கீஸ்ட்னு சொன்னே… அப்புறம் எனக்குக் கோபம் வந்துரும். உனக்கு உன் கஷ்டம் பெருசுடா கண்ணா… ஆனா, குடும்பத்தை நடத்துறவனுக்குத்தானே தெரியும் அவனோட கஷ்டம் என்னன்னு? உன் கஷ்டம் உனக்கு, அவன் கஷ்டம் அவனுக்கு! ஒரு குடும்பத் தலைவனா மாசம் பொறந்தா வீட்டு வாடகை, பால் பில்லு, கரண்ட் பில்லு, உன்னோட ஸ்கூல் ஃபீஸ்னு எல்லாத்தையும் தலையில சுமந்துகிட்டு ஓடுறான்ல… அவன் உனக்குத் தர மாட்டேன்னு சொல்லலையேடா… சூழ்நிலை அப்படி இருக்கு.”

    மார்த்தா சற்றே அமைதியானான். ஆனால், அவனது அவசரம் இன்னும் தீரவில்லை.

    “சரிடா, இப்ப எதுக்கு மூஞ்சியை பூசணிக்காய் மாதிரி வச்சுக்கிட்டு இருக்க? உங்க அப்பா ‘மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ்’ ஷோரூமுக்கு வேலைக்கு போயிருக்காரு. நீ இப்படியே ஸ்கூலுக்குக் கிளம்பு… வழியில இருக்குற அந்த ஷோரூமுக்கு போ. அப்பா கிட்ட போய் நிதானமா, ‘ப்பா, இன்னைக்குதான் டூர் ஃபீஸுக்கு கடைசி நாள்’னு நியாபகப்படுத்து. அவர் கண்டிப்பா வழி பண்ணுவாரு,” என்று யோசனை கூறினார் பாட்டி.

    மார்த்தா தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, “சரி பாட்டி, நீங்க சொல்றீங்கனு போறேன்!” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினான்.

    நெரிசல் மிகுந்த மதுரை மேல மாசி வீதியில், ‘கலக் கலக்’ என்ற சத்தத்துடன் மார்த்தாவின் பழைய சைக்கிள் அசைந்து அசைந்து விரைந்தது. மாலை நேரத்து வெயில், வைகை ஆற்றின் ஈரக்காற்றோடு கலந்து மதுரை நகரின் மீது பொன்னிறமாய் படிந்திருந்தது.

    மார்த்தாவின் கால்கள் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தாலும், அவனது மனம் முழுவதும் வகுப்பறையிலேயே லயித்திருந்தது.

    “ஏய் மார்த்தா! உங்க அப்பன் கடையில சுருட்டுற நாலணா காசை வச்சா கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் டூர் போகப்போற? ஒழுங்கா வீட்ல உக்காந்து பழைய சோத்தை தின்னுட்டு போப்பா!” என்ற ரக்ஷனின் ஏளனச் சிரிப்பு அவனது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

    “டேய் ரக்ஷன்… உனக்கு இருக்குடா ஆப்பு! என் அப்பா கண்டிப்பா காசு தருவாரு. டூர் போயி போட்டோ எடுத்து உன் மூஞ்சில அடிக்கல… என் பேரு மார்த்தாண்டம் இல்லடா!” என்று மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

    சைக்கிள் ‘மீனாட்சி பட்டு விழுதுகள்’ என்ற பெரிய ஜவுளிக்கடையின் முன் வந்து நின்றது. பலகட்ட கண்ணாடி கதவுகளும், உள்ளே வீசும் ஏசி காற்றும், ‘வாங்க அம்மா… வாங்க ஐயா…’ என்று கூவி அழைக்கும் விற்பனையாளர்களின் சத்தமும் அந்த வீதியைச் சூழ்ந்திருந்தன.

    கடையின் பிரம்மாண்டம் அவனைச் சற்று தயங்க வைத்தாலும், ரக்ஷனின் முகம் நினைவுக்கு வர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    தரைத் தளத்தில் இருந்து தளம் தளமாகத் தேடி, மூன்றாம் தளத்தின் ‘காஞ்சிபுரம் பட்டு’ பிரிவை அடைந்தான். அங்கே அவனது தந்தை வேம்பு (மாணிக்கம்) நின்றுகொண்டிருந்தார். 50 வயதைக் கடந்த அவரது முகம் வேர்வையிலும் சோர்விலும் குழைந்துபோயிருந்தது.

    மார்த்தா மெதுவாக அவர் அருகில் சென்று, “அப்பா…” என்று அழைத்தான்.

    வேம்பு திடுக்கிட்டுத் திரும்பி, “மார்த்தா! நீ எதுக்குடா இந்த நேரத்துல இங்க வந்த? வீட்ல எதுவும் பிரச்சனையாடா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

    “இல்லப்பா… நீங்க கடலூர், பாண்டிச்சேரி டூருக்குப் பணம் தரேன்னு சொல்லி ஒரு வாரம் ஆயிடுச்சுப்பா… அதான் உங்களைப் பாத்து பணம் வாங்கிக்கிட்டு போகலாம்னு…” என்று தயங்கியபடியே சொல்லி முடிப்பதற்குள்…

    “ஏய் வேம்பு! இங்க என்னடா மேய்ச்சல்? அங்கே நாலாவது கவுண்டர்ல கஸ்டமர் வந்து பத்து நிமிஷம் ஆச்சு! வந்து சேலையை எடுத்துப் பிரிச்சுக் காட்டுடா சோம்பேறி!” என்று இடிமுழக்கமாய் ஒரு குரல் கேட்டது.

    அது சூப்பர்வைசர் சுந்தரத்தின் குரல். வேம்பு பதறிப்போய், “இதோ வர்றேன் சார்…” என்று சொல்லிவிட்டு, மகனிடம் “இரண்டு நிமிஷம் நில்லுடா” எனக் கூறிவிட்டு ஓடினார்.

    மார்த்தா ஒரு தூணின் மறைவில் நின்று கவனித்தான்.

    அங்கே ஒரு பணக்காரக் குடும்பம் அமர்ந்திருந்தது. “ஏப்பா! நல்ல பட்டுப் புடவையா எடுத்துப் போடு. என்ன பிராண்ட் வச்சிருக்கீங்க? எதைக் காட்டுனாலும் பழசா இருக்கு!” என்று அலட்சியமாக வீசியடித்தார் அந்தப் பெண்மணி.

    வேம்பு மிகத் தாழ்மையுடன் தன் தளர்ந்த உடலை வளைத்து சேலையைப் பிரித்துக் காட்டினார். “சீ! இந்த கலர் எனக்குப் பிடிக்கல! அஞ்சாவது ஃப்ளோர்ல இருந்து அந்த மெரூன் சேலையைக் கொண்டு வா!” என்று அவர் விரட்ட, வேம்பு படிகளில் ஐந்தாம் தளத்திற்கு ஓடினார். மீண்டும் இறங்கிவந்து காட்ட, “இதுவும் நல்லா இல்லை, மூணாவது ஃப்ளோர்ல இருக்குற பிங்க் சேலையைக் கொண்டு வா!” என்று மீண்டும் அலையவிட்டனர்.

    வேம்புவின் நெற்றி வேர்வை சேலையில் விழுந்துவிடக் கூடாது என்று துண்டால் துடைத்தபடியே ஓடினார். முழங்கால் வலி தாங்க முடியாமல் தூணைப் பிடித்து மூச்சு வாங்கியபோது, சூப்பர்வைசர் சுந்தரம் பாய்ந்துவந்து கத்தினார்.

    “ஏய் பரதேசி நாயே! உனக்கு வயசான காலத்துல எதுக்குடா இந்த வேலை? ஒழுங்கா ஓடிப்போய் புடவையை எடுத்துட்டு வரத் தெரியாதா? கடைக்கு வர்ற கஸ்டமரை காக்க வச்சுக்கிட்டு என்னடா பண்ற? உனக்கெல்லாம் சம்பளம் ஒரு கேடா? நாயே… கழுதைப் பயலே… ஒழுங்கா ஓடுடா!”

    வாடிக்கையாளர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிரித்தனர். வேம்புவோ, “மன்னிச்சுடுங்க சார்…” என்று தன் சுயமரியாதையை அடகுவைத்துவிட்டு மீண்டும் ஓடினார்.

    தூணின் பின்னால் நின்ற மார்த்தாண்டத்தின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

    தன் பள்ளிச் சுற்றுலாவுக்காகவும், ரக்ஷனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற சின்னத்தனமான ஆசைக்காகவும் தன் தந்தை தினமும் இப்படிப்பட்ட நரகத்தில் அல்லல்படுகிறாரா?

    சுற்றுலா, கடலூர், பாண்டிச்சேரி, ரக்ஷனின் ஏளனச் சிரிப்பு… இவை அனைத்துமே அவனது கண்ணெதிரே அற்பமாக மாறின. தந்தையின் மானத்தையும் வேர்வையையும் விட இந்த உலகில் எதுவுமே பெரிதில்லை என்று அவன் உணர்ந்தான்.

    கண்களில் கண்ணீர் வழிந்தோட, கடையை விட்டு வெளியே ஓடி வந்தான். சைக்கிளை எடுத்துக்கொண்டு, “இனிமேல் நான் அப்பாக்கிட்ட ஒரு பைசா கூட கேட்க மாட்டேன்! என் அப்பாவோட இந்த அவமானத்துக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்!” என்று கதறியபடி வீட்டை நோக்கி மிதித்தான்.

    இரவு 9:00 மணி. வீட்டின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் மார்த்தா. சமையலறையில் காமாட்சி தோசை சுட்டுக்கொண்டிருக்க, லட்சுமி பாட்டி திண்ணையில் அமர்ந்திருந்தார்.

    “என்னடா மார்த்தா… கடையில அப்பாவைப் பாத்தியா? டூருக்குப் பணம் தர்றேன்னு சொன்னாரா?” என்று பாட்டி ஆசையோடு கேட்டார்.

    மார்த்தா குரல் தழுதழுக்க, “பாட்டி… இனிமே இந்த டூரைப் பத்தியோ, பணத்தைப் பத்தியோ என்கிட்ட பேசாதீங்க. எனக்கு டூரும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்,” என்றான்.

    “என்னடா சொல்ற? சாயந்தரம் வரைக்கும் ஒத்தக்காலுல நின்ன?”

    “ஆமா பாட்டி… அந்தப் பணத்துக்காக அப்பா படுற கஷ்டத்தையும், கடையில் அவரை நடத்துற விதத்தையும் பாத்த அப்புறம் எனக்கு அந்த டூர் தேவையில்லை. என் சின்னத்தனமான ஆசைக்காக, யாரோ ஒருத்தன் அவரை ‘நாயே பேயே’னு திட்டுறதை என்னால சகிச்சுக்க முடியாது. என் டூருக்காக என் அப்பா தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது!”

    அப்போது வீட்டின் கதவு மெதுவாகத் திறந்தது. உடம்பெல்லாம் வேர்வையோடு மாணிக்கம் உள்ளே நுழைந்தார். மகனைக் கண்டதும் ஒருவிதக் குற்ற உணர்ச்சியுடன், “மார்த்தா… கடையில அந்தச் சூப்பர்வைசர் கத்துனதுல உன்னைக் கவனிக்க முடியலடா. மன்னிச்சுருடா… உனக்கு டூருக்கு உண்டான பணத்தை நாளைக்கு எப்படியாவது வாங்கித் தர்றேன்டா…” என்றார்.

    தந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மார்த்தாவால் தாங்க முடியவில்லை. ஓடிச்சென்று தந்தையைக் கட்டியணைத்துக்கொண்டான்.

    “வேண்டாம்ப்பா! எனக்கு ஒரு ரூபா கூட வேண்டாம்ப்பா! நான் கடையில எல்லாத்தையும் பாத்துட்டேன். அந்த ஆளு உங்களை அசிங்கமா திட்டுனதை என் கண்ணால பாத்தேன். என் டூருக்காக நீங்க யார்கிட்டயும் கையேந்த வேண்டாம்ப்பா!”

    மாணிக்கம் திகைத்துப்போய் தன் மகனைப் பார்த்தார்.

    மார்த்தா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உறுதியான குரலில் சொன்னான்: “அப்பா! நான் நல்லா படிப்பேன். உங்களை இந்த மாதிரி வேலைக்கு அனுப்பாம, ஒரு நல்ல நிலமையில வச்சு காப்பாத்துவேன். அந்த ரக்ஷன் முன்னாடி நான் பணத்தால ஜெயிக்கலைனாலும், என் படிப்பாலயும் சுயமரியாதையாலயும் ஜெயிச்சுக் காட்டுவேன்ப்பா!”

    அந்தச் சிறிய ஓட்டு வீட்டிற்குள், வறுமையின் இருளை விட மார்த்தாண்டத்தின் புதிய லட்சிய ஒளி பிரகாசமாக வீசியது.

    எழுத்தாளர் குறிப்பு
    • எழுத்தாளர் புனைபெயர்: ஜெயா
    • இயற்பெயர்: வீரபத்திரன், ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் ஆவணப்படத் தயாரிப்புத் துறையில் தடம் பதித்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பணியாற்றி வரும் வீரபத்திரன், ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆவணப்படங்களை உருவாக்கி, சமூகப் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள கலாச்சாரம், மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைத் தன் லென்ஸ் வழியாகக் காட்சிப்படுத்தி வருகிறார்.

    கதைச் சுருக்கம்: பதின்ம பருவத்து உணர்ச்சிவேகத்தில் தன் விருப்பமே பெரிதென நினைக்கும் ஒரு சராசரி பள்ளி மாணவன், தந்தையின் உழைப்பையும் அவமானத்தையும் நேரில் காணும்போது அடையும் முதிர்ச்சியையும், சுயமரியாதையை உணரும் தருணத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இச்சிறுகதை.

    Share
  • உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

    உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சமநிலை சரிந்தால் சகலதும் சரியும்
    சமநிலை வாழ்வின் ஆணிவேர் ஆகும்
    சமநிலை அற்றார் துணிவினை இழப்பார்
    சமநிலை பேணுவோம் சகலதும் சிறக்கும்

    சமயங்கள் அனைத்தும் சமநிலை பேசுது
    சமநிலை என்பதே தத்துவம் ஆகும்
    சமநிலை என்பதே இறையது நிலையே
    இறையது உருவே இயற்கையாய் இருக்கு

    இயற்கை என்பதில் சமநிலை முக்கியம்
    இயற்கை குலைந்தால் எல்லாம் குலையும்
    இயற்கையைக் குலைய வைத்திடும் பாங்கில்
    நடப்பது அனைத்தையும் தடுத்திடல் வேண்டும்

    விஞ்ஞானம் என்பது விந்தைகள் வரவே
    விந்தைகள் பெருகிடச் சமநிலை தளரும்
    மெஞ்ஞானம் என்பது மேலான விந்தையே
    உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும் !

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    நைஜல் ஃபராஜ் மற்றும் Reform UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.

    பிரிட்டிஷ் அரசியலைப் பற்றி எழுதும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் ஒருவராக நைஜல் ஃபராஜை குறிப்பிடாமல் முன்னேற முடியாது.

    ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஆட்சியில் இருந்தால்தான் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டியதில்லை. சிலர் எதிர்க்கட்சியில் இருந்தபடியே நாட்டின் அரசியல் திசையையே மாற்றிவிடுவார்கள். நைஜல் ஃபராஜ் அப்படிப்பட்டவர்.

    அவர் பிரிட்டிஷ் அரசியலின் மையக் கேள்விகளாக மாற்றியவை குடியேற்றம், தேசிய இறையாண்மை மற்றும் பிரிட்டிஷ் அடையாளம்.

    பல ஆண்டுகளாக இந்தக் கருத்துக்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்டாலும், அவற்றை பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாற்றியவர்களில் ஃபராஜுக்கு முக்கியமான இடமுண்டு.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பலர் அரசியல் கனவாகவே கருதினர்.

    ஆனால் அந்தக் கனவு மக்களின் வாக்காக மாறியது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் பின்னணியில் ஃபராஜ் வகித்த பங்கு, பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயமாகவே இருக்கும்.

    பிரெக்சிட்டிற்குப் பிறகு அவரது அரசியல் முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தனர்.

    ஆனால் அரசியலில் வெற்றிடங்கள் நீண்ட காலம் காலியாக இருப்பதில்லை.

    மக்களின் புதிய அதிருப்திகளை உணர்ந்த ஃபராஜ், ரீபோர்ம் யூகே என்ற கட்சியை தேசிய அரசியலின் முக்கிய சக்தியாக மாற்றத் தொடங்கினார்.

    ரீபோர்ம் யூகேவின் பலம் என்ன ?

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு.

    மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவதில்லை.

    ஆனால் அவர்கள் தாங்கள் கேட்கப்படவில்லை என்று உணரும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியைத் தேடுகிறார்கள்.

    இன்று ரீபோர்ம்ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது இதுவே.

    வாழ்க்கைச் செலவு உயர்வு…

    வரி சுமைகள்…

    குடியேற்றம் தொடர்பான கவலைகள்…

    தேசிய சுகாதார சேவையின் நீண்ட காத்திருப்பு…

    அரசியல்வாதிகளின் மீது குறைந்து வரும் நம்பிக்கை…

    பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பகுதி மக்களிடையே உருவாகிவரும் அச்சம்…

    இந்த அனைத்தையும் ஒரே அரசியல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது Reform UK.

    அவர்கள் பேசும் மொழி மிகவும் நேரடியானது.

    அரசியல் அலங்காரச் சொற்கள் குறைவு.

    அதனால்தான் பாரம்பரிய அரசியலில் விரக்தியடைந்த சில வாக்காளர்களை அவர்கள் ஈர்க்க முடிகிறது.

    2024 பொதுத்தேர்தலில் Clacton தொகுதியில் ஃபராஜ் 21,225 வாக்குகளைப் பெற்று, 46.2% வாக்கு பங்குடன் வெற்றி பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜைல்ஸ் வாட்லிங்ஸ் 12,820 வாக்குகளைப் பெற்றார்.

    அது ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல.

    “ரீபோர்ம் யூகேஐ இனி புறக்கணிக்க முடியாது” என்ற அரசியல் செய்தியாகவும் அது அமைந்தது.

    ரீபோர்ம் யூகேவின் பலவீனம் என்ன ?

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் மற்றொரு உண்மையையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

    மக்களின் கோபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு விஷயம்.

    ஒரு நாட்டை நிர்வகிப்பது வேறு விஷயம்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொள்கைகளை விமர்சிப்பது எளிது.

    ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முடிவும் பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பாதிக்கும்.

    அங்கேயே எந்த புதிய அரசியல் இயக்கமும் தனது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டும்.

    ரீபோர்ம் யூகே இன்னும் அந்தச் சோதனையை முழுமையாக எதிர்கொண்டதாக நான் கருதவில்லை.

    ஒரு அரசியல் கட்சியின் உண்மையான வலிமை, அது எவ்வளவு சத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்பதில் மட்டும் இல்லை.

    அதிகாரம் கிடைத்தால் அந்த எதிர்ப்பை நடைமுறை அரசாக மாற்றும் திறன் அதற்கு இருக்கிறதா? என்பதில்தான் உள்ளது.

    £5 மில்லியன் விவகாரம்  ஃபராஜின் அரசியலைச் சூழ்ந்த புதிய கேள்வி

    இங்கேதான் நைஜல் ஃபராஜின் சமீபத்திய அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

    2024ஆம் ஆண்டு, ரீபோர்ம் யூகேக்கு நிதியுதவி செய்த கிரிப்டோ முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹாபோர்ன் என்பவரிடமிருந்து ஃபராஜ் £5 மில்லியன் பெறுமதியான தனிப்பட்ட பரிசைப் பெற்றார்.

    இது சாதாரண அரசியல் நன்கொடை விவகாரம் அல்ல.

    ஏனெனில், அந்தத் தொகை தொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஃபராஜ் ஆரம்பத்தில், இந்தப் பணம் தனது வாழ்நாள் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்காக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

    பின்னர் அவர் அதனை Brexit-க்காக மேற்கொண்ட தனது அரசியல் முயற்சிகளுக்கான ஒரு வகையான “பரிசு” எனவும் விளக்கியுள்ளார்.

    இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    விசாரணை நடைபெறுவது என்பது ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டார் என்பதல்ல.

    ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வழங்கப்பட்டது, அது ஏன் உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை, நாடாளுமன்ற விதிகளுக்கு அது உட்பட்டதா என்பவை நிச்சயமாக பொதுமக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளாகும்.

    மேலும், இந்த விவகாரம் வெறும் அரசியல் வதந்தியாக இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளை கண்காணிக்கும் அமைப்பின் விசாரணைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக ஃபராஜின் அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது:

    “அதிகார வர்க்கத்தைஎதிர்த்து பேசும் ஒருவர், தன்னுடைய அரசியல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறார்?”

    அதுதான் இன்றைய பிரச்சினையின் அரசியல் மையம்.

    பதவி விலகலும் கிளாக்டன் இடைத்தேர்தலும்

    இந்த நிதி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை 7 அன்று ஃபராஜ் கிளாக்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை.

    மாறாக, தனது பதவி விலகலின் மூலம் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை உருவாக்கி, அதில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அவர் இதனை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான தேர்தல்” என்ற அரசியல் சவாலாக முன்வைத்தார்.

    அதாவது,

    “என்னைப் பற்றிய தீர்ப்பை நாடாளுமன்ற விசாரணைகள் வழங்க வேண்டாம்; கிளாக்டன் (Clacton) மக்கள் வழங்கட்டும்” என்பதே அவரது அரசியல் நிலைப்பாட்டின் சாரமாக இருந்தது.

    இது ஃபராஜின் அரசியல் பாணியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    ஒரு பிரச்சினையை அவர் சட்டரீதியான அல்லது நாடாளுமன்ற நடைமுறை விவகாரமாக மட்டும் பார்க்கவில்லை.

    அதை உடனடியாக “மக்கள் எதிர் அதிகார வர்க்கம்” என்ற அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்.

    இதுதான் அவரது பலமும்.

    அதே நேரத்தில் இதுவே அவரது அரசியல் பலவீனமாகவும் மாறக்கூடும்.

    ஏனெனில், ஒவ்வொரு நிர்வாக அல்லது ஒழுங்குமுறை விசாரணையையும் “அதிகார வர்க்கத்தின் சதி” என்று மாற்றிவிட்டால், உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான அபாயம் உள்ளது.

    ஆனால் நடந்தது என்ன?

    ஃபராஜ் எதிர்பார்த்திருந்தது ஒரு மிகப்பெரிய அரசியல் மோதல்.

    ரீபோர்ம் யூகே  ஒருபுறம்.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் போன்ற பாரம்பரிய அரசியல் சக்திகள் மறுபுறம்.

    ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.

    முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தன.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ரீஸ்டோர் பிரிட்டன் கட்சியும் போட்டியிடவில்லை.

    இதன் அரசியல் காரணம் தெளிவானது.

    அந்தக் கட்சிகளின் பார்வையில், ஃபராஜ் தனது சொந்த நிதி மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தலை உருவாக்கியிருந்தார்.

    கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடனொக் இதனை “போலி இடைத்தேர்தல்” என்றும் “தன்முனைப்பு போட்டி” என்றும் விமர்சித்தார்.

    லேபர் இதனை ஒரு “சர்க்கஸ்” எனக் கருதி போட்டியிடவில்லை.

    லிபரல் டெமகிரட்ஸ் தலைவர் எட் டேவி, இதனை ஃபராஜின் “அகங்கார அரசியல்” என்று விமர்சித்ததுடன், அதற்கு அரசியல் ஆக்சிஜன் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

    கிறீன்ஸ் கட்சியும் இறுதியில் போட்டியிடாமல் விலகியது.

    இதில் ஒரு சுவாரசியமான அரசியல் முரண்பாடு உள்ளது.

    ஃபராஜ் விரும்பியது:

    “அரசியல் வர்க்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம்”

    முக்கியக் கட்சிகள் உருவாக்கியது:

    “ஃப்ராஜுக்கெதிரான ஃப்ராஜின் போராட்டம்”

    அதாவது, அவர் எதிர்பார்த்த பெரிய அரசியல் போராட்ட மேடை உருவாகவில்லை.

    34 வேட்பாளர்கள்  ஆனால் உண்மையான போட்டியாளர் யார்?

    முக்கியக் கட்சிகள் விலகியதால் கிளாக்டன் தேர்தல் வெறுமையாகிவிடவில்லை.

    மாறாக, வரலாற்றில் மிகவும் விசித்திரமான தேர்தல்களில் ஒன்றாக மாறியது.

    மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இது ஒரு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மிகப்பெரிய வேட்பாளர் எண்ணிக்கையாக அமைந்தது.

    அவர்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நகைச்சுவை அரசியல்வாதியான கவுண்ட் பின்வேஸ்(Count Binface).

    இது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், பிரிட்டிஷ் அரசியலின் மீதான மக்களின் விரக்தி, நகைச்சுவை, எதிர்ப்பு மற்றும் அரசியல் நாடகத்தின் கலவையாக மாறியது.

    ஆனால் இதன் அடிப்படை உண்மை ஒன்றுதான்:

    பெரிய கட்சிகள் இல்லாத தேர்தல், உண்மையான தேசிய அரசியல் ஆதரவை அளக்கும் வழக்கமான அளவுகோலாக இருக்க முடியாது.

    ஃபராஜ் மீண்டும் வென்றார் – ஆனால் அதன் அர்த்தம் என்ன?

    2026 ஆகஸ்ட் 13 அன்று நடந்த கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 22,239 வாக்குகளையும், சுமார் 62.8% வாக்குகளையும் பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக இருந்த கவுண்ட் பின்வேஸ் (Count Binface) சுமார் 9,455 வாக்குகளைப் பெற்று 26.7% பெற்றார். வெற்றி மிகப் பெரியது.

    ஆனால் இங்கே ஒரு அரசியல் நுணுக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

    2024 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் வாக்குகள் சேர்ந்து அந்தத் தொகுதியில் மிகப் பெரிய வாக்குத் தளத்தை வலதுசாரிக் கட்சிகளுக்கு உருவாக்கியிருந்தன.

    2026 இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவே இல்லை.

    எனவே, இந்த வெற்றியை “பிரிட்டன் முழுவதும் ஃபராஜுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு” என்று எடுத்துக்கொள்வது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தலாகிவிடும்.

    இது முதன்மையாக கிளாக்டன் தொகுதியில் ஃபராஜின் தனிப்பட்ட அரசியல் ஆதரவையும் ரீபோர்ம் யூகேயின் உள்ளூர் வலிமையையும் காட்டுகிறது.

    ஆனால் அது அவருக்கு ஒரு முக்கியமான அரசியல் மூலதனத்தை மீண்டும் வழங்கியுள்ளது:

    நாடாளுமன்ற இருக்கை.

    ஆனால் £5 மில்லியன் கேள்வி முடிந்துவிட்டதா?

    இல்லை.

    இதுதான் இந்த இடைத்தேர்தலின் மிக முக்கியமான அரசியல் உண்மை.

    ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய விசாரணை முடிவடைந்துவிடவில்லை.

    மாறாக, அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால் அந்த விவகாரம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் போன்ற சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

    இதனால் Clacton மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

    “நாங்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.”

    ஆனால் அது மற்றொரு விஷயத்தைச் சொல்லவில்லை:

    “நாடாளுமன்ற விதிமுறைகள் தொடர்பான விசாரணை தேவையில்லை.”

    இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.

    ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு ஒரு அரசியல் ஆணையை வழங்குகிறது.

    ஆனால் சட்டமும் நாடாளுமன்ற விதிகளும் தங்களுடைய நடைமுறையில் தொடர்கின்றன.

    புலம்பெயர் தமிழனாக என் பார்வை

    இந்த இடத்தில் நான் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, குடியேற்றம் குறித்து பேசப்பட்டது.

    இன்று குடியேற்றமே தேர்தல்களின் மையக் கேள்விகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    அப்போது விவாதம் வேலை வாய்ப்பைப் பற்றியது.

    இன்று விவாதம் தேசிய அடையாளத்தையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் பற்றியது.

    அப்போது,

    “எத்தனை பேர் வருகிறார்கள்?”

    என்ற கேள்வி இருந்தது.

    இன்று,

    “பிரிட்டன் எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது.

    இந்த மாற்றத்தை நான் ஐம்பத்தொரு ஆண்டுகளாக நேரில் பார்த்திருக்கிறேன்.

    ஒரு குடியேறிய தமிழனாக, இந்த நாட்டின் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், வாய்ப்புகளையும் மதிக்கிறேன்.

    அதே நேரத்தில், இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களின் உணர்வுகளையும் நான் புரிந்துகொள்கிறேன்.

    ஒரு நாட்டிற்கு மனிதநேயமும் தேவை.

    அதே நாட்டிற்கு ஒழுங்கும் தேவை.

    ஒரு நாட்டிற்கு அகதிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இதயமும் தேவை.

    அதே நேரத்தில், அதன் குடியேற்றக் கொள்கைக்கு தெளிவான விதிகளும் தேவை.

    இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது எந்த அரசுக்கும் மிகவும் கடினமான அரசியல் பணியாகும்.

    ஆனால் அதைவிட முக்கியமானது இன்னொன்று.

    குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது குடியேறியவர்களைப் பற்றிய வெறுப்பையும், குடியேற்றம் குறித்து கவலைப்படுபவர்களைப் பற்றிய அவமதிப்பையும் ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

    அரசியல் விவாதம் மனிதர்களை எதிரிகளாக மாற்றாமல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடும் வழியாக இருக்க வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை

    எனது பார்வையில் ரீபோர்ம் யூகேயின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் பெற்றிருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல.

    கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் மொழியையே மாற்றியிருப்பதுதான்.

    ஒரு காலத்தில் வலதுசாரி வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி, இன்று தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ரீபோர்ம் யாகூ நோக்கி இழந்துள்ளது.

    இது சாதாரண வாக்கு மாற்றமல்ல.

    இது அரசியல் நம்பிக்கையின் இடமாற்றம்.

    கிளாக்டன் இதற்கு ஒரு குறியீடு.

    ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு இங்கே இன்னொரு கேள்வியும் உள்ளது:

    ரீபோர்ம் யூகேவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா?

    அல்லது ரீபோர்ம் யூகே எடுத்துக்காட்டும் மக்களின் உண்மையான கவலைகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?**

    இரண்டாவது வழியே நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சோதனை

    ரீபோர்ம் யூகேவின் வளர்ச்சியை கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சவால்.

    ஏனெனில் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, என்.எச்.எஸ், வீடமைப்பு, வேலைவாய்ப்பு, பொது சேவைகள் போன்ற கேள்விகள் வலதுசாரிகளின் சொந்த பிரச்சினைகள் அல்ல.

    அவை சாதாரண மக்களின் வாழ்க்கைக் கேள்விகள்.

    Labour அவற்றுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், அந்த இடத்தை ரீபோர்ம் போன்ற இயக்கங்கள் நிரப்பும்.

    அதேவேளை,ரீபோர்மை எதிர்ப்பதற்காக அதன் கடுமையான மொழியை அப்படியே ஏற்றுக்கொள்வதும் லேபருக்கு தீர்வாக இருக்காது.

    மக்களின் அச்சத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த அச்சம் ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வதே அரசியலின் முதிர்ச்சி.

    லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் புதிய அரசியல் இடைவெளி

    Liberal Democrats-க்கு இங்கு வேறொரு வாய்ப்பு உள்ளது.

    கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் இடையிலான வலதுசாரி போட்டி தீவிரமடையும் போது, மிதவாத மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் இடம் உருவாகிறது.

    ஆனால் அந்த இடத்தை லிபரல் டெமகிரட்ஸ் எவ்வளவு திறமையாக நிரப்புகின்றனர் என்பதுதான் கேள்வி.

    கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டைத் தந்திருக்கலாம்.

    ஆனால் எதிர்காலத்தில் ரீபோர்ம் யூகே வளர்ந்துகொண்டே சென்றால், அதன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தளத்தை யார் உருவாக்கப் போகிறார்கள்?

    இதுவும் ஒரு முக்கியமான கேள்வி.

    ஃபராஜ் – ஒரு தலைவர் மட்டுமா? அல்லது ஒரு அரசியல் அறிகுறியா?

    நைஜல் ஃபராஜை ஒருவர் விரும்பலாம்.

    வெறுக்கலாம்.

    அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

    மறுக்கலாம்.

    ஆனால் அவரை அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரிட்டனின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

    அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.

    அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் ஒரு பகுதியின் மனநிலையை வெளிப்படுத்தும் அரசியல் நிகழ்வு.

    அந்த மனநிலை ஏன் உருவானது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

    அதை வெறுமனே “வலதுசாரி கோபம்” என்று நிராகரித்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

    அதே நேரத்தில், அந்தக் கோபத்தை அரசியல் அதிகாரமாக மாற்றும் ஒவ்வொரு முயற்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

    அதுதான் ஜனநாயகத்தின் சமநிலை.

    கிளாக்டன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

    இந்த இடைத்தேர்தல் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவூட்டுகிறது.

    மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒவ்வொரு செயலும் சரி என்று தீர்ப்பு வழங்குவதாக அர்த்தமல்ல.

    அதேபோல்,

    ஒரு அரசியல்வாதி மீது விசாரணை நடைபெறுவது, அவர் அரசியல் ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார் என்பதையும் அர்த்தப்படுத்தாது.

    கிளாக்டன் மக்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இப்போது அவரது பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

    அவர் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகச் சொன்னால், அதனை விமர்சிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மை ஆகியவற்றிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.

    ஏனெனில் அதிகாரத்தை விமர்சிப்பது எளிது.

    அதிகாரத்தின் முன் நின்று தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் கடினம்.

    முடிவாக…

    நைஜல் ஃபராஜின் அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

    மாறாக, அது இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

    பிரெக்ஸிட் அவரை வரலாற்றில் பதித்தது.

    ரீபோர்ம் யூகே அவரை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

    கிளாக்டன் அவருக்கு நாடாளுமன்ற இருக்கையைத் தந்தது.

    ஆனால் £5 மில்லியன் விவகாரம் அவருக்கு ஒரு புதிய சோதனையை உருவாக்கியுள்ளது.

    அந்தச் சோதனை வெறும் ஃபராஜுக்கானது அல்ல.

    அது பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான சோதனையும் கூட.

    ஒரு அரசியல்வாதியின் மக்கள் ஆதரவும், அவரது அரசியல் பொறுப்பும் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா?

    மக்களின் கோபத்தை அரசியல் மாற்றமாக மாற்ற முடியும்; ஆனால் அந்த மாற்றத்தை நல்லாட்சியாக மாற்ற முடியுமா?

    ரீபோர்ம் யூகே எதிர்ப்பின் சக்தியாக மட்டுமே தொடருமா, அல்லது ஒருநாள் ஆட்சிக்குத் தயாரான மாற்று அரசாக உருவெடுக்குமா?

    கன்சர்வேடிவ் கட்சி தனது பாரம்பரிய வாக்குத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புமா?

    லேபர் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அச்சங்களுக்கு நம்பகமான பதிலை வழங்குமா?

    லிபரல் டெமகிரட்ஸ் இந்த புதிய அரசியல் இடைவெளியை நிரப்புவார்களா?

    இவைதான் இனி பிரிட்டிஷ் அரசியலின் முக்கியக் கேள்விகள்.

    நான் இந்த நாட்டில் ஐம்பத்தொரு ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழனாக இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தோன்றுவது ஒன்றுதான்:

    பிரிட்டன் மாறிக்கொண்டிருக்கிறது.

    ஆனால் மாற்றத்தின் திசையை இன்னும் யாரும் முழுமையாகத் தீர்மானித்துவிடவில்லை.

    அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம்.

    தலைவர்கள் வரலாம்.

    போகலாம்.

    வாக்காளர்கள் கட்சிகளை மாற்றலாம்.

    ஆனால் இறுதியில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அதன் மக்களின் மனநிலையும் அவர்கள் செலுத்தும் வாக்கும்தான்.

    அந்த மனநிலை எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே, பிரிட்டிஷ் அரசியலின் நாளைய முகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

    நைஜல் ஃபராஜ் அந்த மாற்றத்தின் காரணமா?

    அல்லது ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சமூகத்தின் வெளிப்பாடா?

    இதற்கான பதில் இன்னும் வரலாற்றின் கைகளில்தான் உள்ளது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (தொடரும் – பகுதி 4: கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலம், மற்றும் பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை.)

    Share
  • இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்!

    இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பள்ளிக்குச் சென்றார் படிப்பிலே நாட்டமில்லை
    துள்ளி விளையாடினார் சோலைகளை நாடினார்
    பாடினார் ஆடினார் பரவசத்தில் மூழ்கினார்
    பக்குவத்தை நோக்கியே பயணத்தைத் தொடங்கினார்

    வித்தியாச விளையாட்டு வித்தியாசச் சிந்தனை
    ஓவியத்தில் நாட்டம் உணர்வெல்லாம் இறையே
    கழிமண்ணை எடுப்பார் கடவுளுரு ஆக்குவார்
    கண்களை மூடுவார் காசினியை மறந்திடுவார்

    அந்தணராய் பிறந்தார் ஆசையின்றி இருந்தார்
    அர்ச்சகராய் அம்பாளை அனுதினமும் சேவித்தார்
    காமமும் அறியார் கசடவர் மனமில்லை
    காளியம்மா நினைப்புடனே ஆலயத்தில் இருந்தார்

    தனைமறந்து தியானத்தில் சலனமின்றி இருப்பார்
    வீடுதனை நாடாமல் காளிகோவில் இருப்பார்
    தேடிவரும் உறவுகள் திகைத்துமே நிற்பார்
    தினந் தினமும் இப்படியே நடந்தபடியிருக்கும்

    தாயார் பயந்தார் தமயனும் பயந்தார்
    மணமுடித்தால் நிலமாறும் எனவவரும் நினைத்தார்
    சரியான தேர்வாகச் சாரதா அமைந்தார்
    சாமியார் மகனுக்குத் தாரமாய் ஆக்கினார்

    கட்டிய மனைவியை காளிமாதாவாய் கண்டார்
    காதலோ காமமோ அவரகம் இல்லை
    எல்லா இடமும் காளியே தெரிந்தாள்
    இறுகப் பற்றினார் காளியின் திருவடி

    பாசம் பந்தம் அனைத்தும் காளியே
    பகலும் இரவும் தியானத்தில் இருந்தார்
    ஞானம் காளியால் அவருளே நிறைந்தது
    ஞானியாய் மலர்ந்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர்

    அவருடைய வாக்கில் அருள்நிறைந் திருக்கும்
    அவருடைய நோக்கில் அஞ்ஞானம் அகலும்
    அவர்தொட்டு விட்டால் ஆணவமே அகலும்
    அவரருகில் இருப்பார் ஆசியினைப் பெறுவார்

    வந்தாரே ஒருவர் தொட்டாரே அவரை
    வந்தவர் மனத்தில் உருவேறி நின்றது
    உருவேற்றம் பெற்றவர் உண்மையை உணர்ந்தார்
    உத்தம சீடராய் உலகவலம் வந்தார்

    வீரத் துறவியாய் வெளிப்பட்டார் அவரும்
    வேதத்தின் சாரத்தை விளக்கினார் எங்கும்
    குருவினது பெயராலே தொடக்கினார் இயக்கம்
    ராமகிருஷ்ண மிஷனாக விரிந்ததே எங்கும்

    மதங்கள் அனைத்தும் வழியெனச் சொன்னார்
    மதங்களின் நோக்கம் இறையினைக் காண்பதே
    பெண்களை மதிப்பது பெருங்கடன் என்றார்
    அனைத்துப் பெண்களும் அன்னையர் என்றார்

    யாவரும் விளங்கிட போதனை புகன்றார்
    உபதேசம் அனைத்துமே உன்னதம் ஆகும்
    பற்றே இல்லா வாழ்ந்தார் உலகிலே
    பக்குவம் பக்தியைத் தத்துவம் ஆக்கினார்

    சாராதா அம்மையார் சரித்திரம் ஆவார்
    இந்திய தேசத்து இணையிலாப் பெண்ணவர்
    கட்டிய கணவனைத் தெய்வமாய் கண்டவர்
    கற்புத் தெய்வமாய் ஒளிர்கிறார் அம்மையார்

    இணையிலா ஞானியே இராம கிருஷ்ணராவார்
    கலியுகத்தில் ஞானியாய் கால்பதித்து நின்றார்
    அவருடைய வாழ்க்கை அவருடைய சிந்தனை
    அருமருந்தா யனைவருக்கும் அமைந்துமே இருக்கு !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 42

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 36 கணநாத நாயனார்

     

    கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்

        கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு                                  

    நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து

        நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி

    வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி

        வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்

    புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்

        பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே

     

    “கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழும் கணநாத நாயனார் சீர்காழியில் ஒரு மறையவர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் மீது மாறாத அன்பு கொண்டு சட்டைநாதர் கோயிலுக்குத் தவறாமல் சென்று, தோணியப்பர் வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அனுதினமும் கோயிலில் பூசைகளை நடத்தி, எம்பெருமானுக்கு நைவேத்தியம் படைத்தார். தனது வீட்டிலும் சிவனடியார்களுக்கும் உணவு அளித்து சேவை புரிந்து வந்தார்.

    அடியார்களைக் கவரும் வண்ணம் சைவம் குறித்த அவருடைய சொற்பொழிவுகள், மக்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது. வேதங்களையும் சிவ மந்திரங்களையும் மிகத் தேர்ச்சியுடன் உச்சரிப்பதோடு நெஞ்சுறுதியோடு திருத்தொண்டுகள் பலவும் இடையறாது செய்து கொண்டிருந்தார். சைவ சமயம் தழைத்தோங்கும் வண்ணம் தொண்டர்களுக்கு உரிய பயிற்சிக் கூடம் அமைத்தார். நல்ல தொண்டர்களை உருவாக்கினார்.

    நந்தவனம் அமைப்பது, மலர் கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது, காலையும், மாலையும் கோயிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கெல்லாம் தொண்டர்களை உருவாக்கினார்.

    நல்ல நந்தவனப் பணி செய்பவர்

      நறுந்துணர் மலர் கொய்வோர்

    பல் மலர்த் தொடை புனைபவர் கொணர்

      திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்

    அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத்

      திரு மெழுக்கு அமைப்போர்கள்

    எல்லையில் விளக்கு எரிப்பவர்

      திரு முறை எழுதுவோர் வாசிப்போர்

    வறுமையில் உழன்ற அடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர், அவர்களின் பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை அளித்தார்.

    ஞானசம்பந்தப் பெருமானைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றிய கணநாத நாயனார் அவரிடமிருந்து சைவத் தத்துவங்களைக் கற்றுக்கொண்டார்.

    சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த உண்மையான பக்தியினாலும், அடியார்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அவர் ஆற்றிய பெரும் சேவையினாலும், சிவபெருமானின் திருவடிகளே காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சார்ந்தார். ஆண்டுதோறும் கணநாத நாயனார் முக்தி அடைந்த நாளான, பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவரது குருபூசைநாள் சீர்காழியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

     

    கணநாத நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில்

      உறுதி மெய் உணர்வு எய்தி

    அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர்

      திறம் அவனியின் மிசை ஆக்கும்

    மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும்

      கண நாதனார் கழல் வாழ்த்திக்

    குலவு நீற்று வண் கூற்றுவனார்

      திறம் கொள்கையின் மொழிகின்றாம்.

    சாதிப் பாகுபாடின்றி அனைவரிடமும் சமமான அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டவரை மக்கள் மனதார நேசித்தனர். அவருடைய கனிவான நடத்தையால், ஏராளமான மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு, சிவபெருமானைப் பற்றிய அவருடைய தெய்வீக சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் செவிமடுத்தவர்கள் தங்கள் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை மட்டுமே நிரப்பினார். தன் வாழ்நாளில், கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதன் மூலம் அவர் பல நல்ல கர்ம வினைகளைச் செய்திருந்தார். சிவபெருமான், ஊழிக்காலத்தில் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில் அழியாது நின்ற இத்தலத்தில் தங்கியதாக தலபுராணம் கூறும், சீர்காழி திருத்தோணியப்பரை சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்திய கணநாதர், சிவனடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல், தாமும் அதன் வழி நடந்தார். தொண்டர்கள் விரும்பும் சிவாலயப் பணிகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்யும் பணியை இறைமனதோடு தூய்மையாகச் செய்யவும் பயிற்றுவித்தார். திருத்தொண்டின் வழி நிற்பதே சிவபெருமானின் திருவடியை அடையும் வழி என்பதை உணர்ந்தவர் அனைவரையும் அரவணைத்து, தானும் பங்கெடுத்து ஆலயப்பணியைக் குறைவின்றி செய்தார்.

     திருச்சிற்றம்பலம்

     

    Share