Author: மேகலா இராமமூர்த்தி

  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!

    -மேகலா இராமமூர்த்தி


    இயற்கையின் படைப்பில் மனித இனம் மட்டுமே சிந்திக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டதாய் விளங்குகின்றது. ஏனைய உயிரினங்களுக்கு அத்தகைய வாய்ப்பு அமையவில்லை. தமிழின் தன்னேரில்லாத இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்,

    ”ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனொடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
    ஆறறி வதுவே அவற்றொடு மனனே
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ”

    என்று ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமையப்பெற்ற உயிரினங்களை அவற்றின் புலன்கள் அடிப்படையில் (தொல்காப்பிய) பொருளதிகாரத்திலுள்ள ‘மரபியல்’ என்ற பகுதியில் அழகாக வகைப்படுத்தியுள்ளார். மெய், வாய், மூக்கு, கண், செவி என்று ஒவ்வொறு புலனுணர்வும் கூடிக்கொண்டே வந்து இறுதியில் மனத்தையும் தன்னகத்தே கொண்டதாக மனித இனம் தோன்றியது என்பதனை இந்நூற்பா தெளிவாக விளக்குகின்றது. இத்தகைய உன்னதமான மனித இனம் தோன்றப் பல மில்லியன் வருடங்கள் ஆயின என்று அறிவியல் கூறுகின்றது. இதனையே பரிணாமக் கொள்கை (The theory of evolution) என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றார்கள்.

    மனம் என்று அறியப்படுகின்ற, சிந்தனைக்கு வித்திடும் ஆறாமறிவால் மனித இனம் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாயும், தனித்தன்மை மிக்கதாயும் விளங்கிவருகின்றது. ’அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று அவ்வையாரும் மனிதப் பிறவியின் சிறப்பைப் போற்றுகின்றார். ஆயினும், மனம் என்ற ஒன்று இருக்கின்ற காரணத்தினாலேயே மனிதர்கள் எல்லாருமே உயர்ந்தோர் என்றோ, உத்தமர் என்றோ நாம் ஓர் முடிவுக்கு வந்துவிட முடிகின்றதா?….இல்லையே!

    மனத்தை மனிதன் எவ்வாறு பண்படுத்துகின்றான், பயன்படுத்துகின்றான், அதில் முகிழ்க்கின்ற சிந்தனைகளும், செயற்பாடுகளும் அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் எந்த அளவிற்கு நன்மை அல்லது தீமையைத் தருகின்றன என்பதன் அடிப்படையிலேயே நாம் மனிதனின் பண்பை, குணத்தை முடிவுசெய்ய இயலும். குறையற்ற மனிதன் என்று யாரேனும் உண்டா? என்ற வினா உடனேயே நம் உள்ளத்தில் எழும்; அதற்கு ‘இல்லை’ என்பதனைத்தான் நாம் விடையாகச் சொல்லமுடியும். அப்படியானால், ஓர் மனிதனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ எவ்வாறு முடிவெடுப்பது..? என்ற நம் ஐயத்தை உணர்ந்தவராய் அதனைத் தெளிவிக்க வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஒருவனிடமுள்ள குணம், குறை என்ற இரண்டையும் நிறுத்துப் பார்த்துத்தான் அவன் குணத்தை நாம் எடை போடமுடியும் என்று கூறும் அவர் அதனை,

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்கக் கொளல்.” என்ற குறட்பா வாயிலாக விளக்கியுள்ளார்.

    இக்குறள் சொல்வது போலவேதான் நம் சமுதாயமும் மனிதரில் அதிக நற்குணங்கள் கொண்டவரை நல்லவர் என்றும், மாறாகத் தீய குணங்களையே உடன்பிறப்புக்களாகக் கொண்டோரைத் தீயவர் என்றும் முடிவெடுக்கின்றது.

    மண்ணில் பிறக்கும்போது அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. வளர்ப்பில் இருக்கும் வேறுபாட்டாலேயே அவர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மாறுகின்றனர் என்று கருத்து நம் மக்களால் பரவலாகச் சொல்லப்பட்டு வருகின்றது.

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

    பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.” என்று ’கவிஞர் புலமைப்பித்தன்’ எழுதிய ஓர் பிரபலமான திரைப்படப் பாடல் உண்டு. (பாருங்கள்..! அதிலும் பிள்ளையை வளர்க்கும் முழுப் பொறுப்பும், அவன் நடை தவறினால் அதற்கான பழியும் அவன் தாய்க்கு மட்டும்தான்!!)

    ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தாமா? என்பது குறித்த ஐயங்கள் தற்போது எழுந்துள்ளன. ஏனெனில் சமீபத்திய மனநோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில், மனநலத்தை பாதிக்கும் நோய்களையும், குறைபாடுகளையும் தீர்மானிப்பதில் மனிதனின் மரபணுக்கள் (genes) முக்கியப் பங்காற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மனிதனின் சமூக விரோத நடவடிக்கைகளையும், வக்கிர எண்ணங்களையும் தீர்மானிப்பதிலும் அவற்றின் பங்களிப்பு இருக்கவே செய்கின்றது என்று ஒரு சாராரும்; இல்லை, இல்லை சூழ்நிலையே ஒரு மனிதனின் போக்கையும், நடத்தையையும் பெரிதும் தீர்மானிக்கிறது என்று மற்றொரு சாராரும் தங்கள் வாதப் பிரதிவாதங்களை அறிவியல் பூர்வமாகவும், அனுபவங்கள் வாயிலாகவும் எடுத்து வைக்கின்றனர். இவ்விரு வாதங்களையும் கேட்டபின் ’ஒரு மனிதனின் மரபணுக்களும், அவன் வாழும் சமூகமும் சேர்ந்தே அவனை வடிவமைக்கின்றன, அவன் குணத்தைத் தீர்மானிக்கின்றன’ என்பதனையே நாம் தீர்ப்பாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை எனத் தோன்றுகின்றது.

    மனிதன் மனது வைத்தால் நல்ல கருத்துக்களையும், நற்சிந்தனைகளையும் தொடர்ந்து தன் உள்ளத்தில் செலுத்தி உள்ளே உறைந்திருக்கும், மறைந்திருக்கும் தீய எண்ணங்களையும், சிந்தனைகளையும் (மரபணுக்கள் வாயிலாக வந்திருந்தாலும் கூட) அகற்றிவிடலாம். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, நாம் மனது வைத்தால் நிஜ வாழ்விலும் சாத்தியமாக்கலாம். நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஞானியரும், அருளாளர்களும், தலைவர்களும் அதற்குச் சான்றுகளாய்த் திகழ்கின்றனர் எனலாம்.

    நல்ல எண்ணங்கள், நற்பண்புகள் என்று பொதுப்படையாகக் கூறுவதைவிட அவற்றில் சிலவற்றைச் சற்று விளக்கிக் காட்டுவதன் மூலம் அவை குறித்த சிந்தனையை மக்கள் மனத்தில் நாம் விதைக்கலாம் அல்லவா? ஆகவே, மனித மனத்தையும், வாழ்வையும் சீர்ப்படுத்தும், செம்மைப்படுத்தும் நற்பண்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

    ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்

    வேறொன்றறியேன் பராபரமே.” என்றார் தாயுமானவர்.

    எல்லா மக்களும் குறைகள் ஏதுமின்றி இன்பமாயிருக்கவேண்டும் என்பதே தாயுமானவ சுவாமிகள் இறைவன்முன் சமர்ப்பிக்கும் வேண்டுகோளாய் உள்ளது. மனம் உயர்ந்ததாய் இருந்தால்தானே இத்தகைய உயரிய சிந்தனை முகிழ்க்கும்.

    சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரோ இன்னும் ஒருபடி மேலேபோய்,

    வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

    வாடினேன் பசியினால் இளைத்தே

    வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

    வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”

    என்று துன்பத்தைத் தாம் எவ்விடத்துக் கண்டாலும், அஃது ஓரறிவுள்ள பயிராகட்டும் அல்லது ஆறறிவுள்ள உயிராகட்டும், தம் மனம் வாடுகின்றது; பதைக்கின்றது என்கின்றார். இதுவல்லவோ உண்மையான உயிரிரக்கம் (ஜீவகாருண்யம்) என்பது! பிற உயிர்கள் படும் துன்பம் நம் மனத்தைப் பாதித்தாலே போதும் நாம் அவ்வுயிர்கட்கு ஊறு செய்ய அஞ்சுவோம். ’இரக்கம் அல்லது அருள்’ என்று கூறப்படும் உயர் பண்பும், அது பிறப்பதற்குக் காரணமாயிருக்கும் ’அன்பு’ என்ற தாய்ப்பண்பும் மனிதர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்புகளாகும்.  தூய அன்பின் பிடியில் வசப்படாதார் யார்?

    ”அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்றும், “அன்பே சிவம்” என்றும் நம் அருளாளர்கள் இறைவனையே தம்அன்பினால் கட்டிவைத்தனர் என்று திருமுறைகளும், இன்னபிறச் சமய நூல்களும் சான்றாதாரம் காட்டவில்லையா? அப்படியிருக்க மனித மனங்களை வசப்படுத்த, அவர்தம் மனத்தில் இடம்பிடிக்க அன்பைவிட உயர்ந்த சாதனம் வேறென்ன இருக்க முடியும்? அத்தகைய உயர்ந்த அன்பையும், அதன் இளவலான மனிதநேயத்தையும் சக மனிதர்கள்பால் செலுத்துவோம்.

    ”மனிதர் நோக மனிதர் பார்க்கும்

    வாழ்க்கை இனியுண்டோ?” என்ற மகாகவியின் வரிகளை உணர்ந்து கொள்வோம். கொலைவெறியும், வக்கிர எண்ணங்களும் நம்மைவிட்டு முற்றிலும் ஒழியட்டும். அன்பும், அருளும் நம் பார்வையில் நிரம்பி வழியட்டும்.

    அடுத்து நாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயர்ந்த குணம் அல்லது கொள்கை எனக் கூடச் சொல்லலாம் – அதன் பேர் எளிமை. காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல்லற்ற தன்மையும் உடைய ஓர் அரசனின் நாட்டை உலகமே புகழும் என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.

    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

    மீக்கூறும் மன்னன் நிலம்.” என்பது அவர் வாக்கு.

    மன்னனே இப்படியிருக்கவேண்டுமென்றால் அவனால் காக்கப்படும் மக்களும் அவ்வாரிருத்தல்தானே முறை. ஆகவே பகட்டும், படாடோபமும் அற்ற எளிமையை மனிதர்கள் கடைப்பிடிப்பது சிறந்தது. அத்தகு எளிமை நம்மிடம் குடிபுக ’அவா அற்ற தன்மை’ நம்மிடம் முதலில் வந்து சேரவேண்டும். ’ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர் பெருமான். துன்பத்திற்கு மட்டுமல்ல தேவையற்ற வீண் ஆடம்பரங்களுக்கும், வீண் செலவுகட்கும், போலி கௌரவத்திற்கும் கூட அளவுக்கு மீறிய ஆசைதானே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றது.

    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.”  என்று ஈசனாரிடம் கூட ஆசையோ, பற்றோ கொள்ள வேண்டாம், ஆசையினால் துன்பங்களே நேரும்; அதனை விட விட ஆனந்தம் சேரும் என்று திருமூலரும் தன் திருமந்திரத்தில் புத்தரின் கருத்தையே வலியுறுத்திச் சொல்கின்றார்.

    நம் வான்புகழ் வள்ளுவரும் ஆசையை அறுப்பதன் அவசியத்தைத் தன் ”அவா அறுத்தல்” என்ற அதிகாரத்தில் விரித்துக் கூறி விளங்க வைக்கின்றார்.

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

    யாண்டும் அஃதொப்பது இல்.” என்பது குறள்.

    செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் எது தெரியுமா? எதையும் வேண்டாத அவா அற்ற தன்மையே ஆகும். அதற்கீடான செல்வம் எங்குமே இல்லை என்கின்றார் அவர்.

    வள்ளுவரும், ஏனைய சான்றோரும் போற்றிக் கொண்டாடும் ஆசை ஒழிப்புக் கொள்கையானது சொல்லும் அளவிற்குச் சுலபமாகச் செயல்படுத்த முடியாத ஒன்றுதான் என்பதனை மறுப்பதற்கில்லை. அதுவும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் வெல்வதற்கும், நம் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் ஆசைகள் தேவையானவைதான் என்ற கருத்தும் நம்முன் வைக்கப்படுகின்றது. எனவே ஆசைகளை முற்றாக ஒழிப்பது என்ற கடுமையான கொள்கையைச் (rigid principle) சற்றே தளர்த்தி, முதலில் நம் ஆசைகளைப் பட்டியலிடுவோம். அத்தியாவசியமானது, அவசியமானது, ஆடம்பர வகையைச் சேர்ந்தது என்று அவ்வாசைகளைப் பிரித்து வைப்போம். முதல் வகையைச் சார்ந்த ஆசைகளை மட்டும் நம் கவனத்தில் கொண்டு அவற்றை அடைய முயலுவோம். வெற்றிகரமாக அவற்றை அடைந்துவிட்டால் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘அவசியமானது’ வகையைச் சேர்ந்த ஆசைகளைப் பற்றி ஆய்வு செய்வோம். அவ்வாசைகள் நிறைவேறாவிட்டாலும் நமக்கொன்றும் (பெரிய) இழப்பு இல்லை என்பது உறுதியானால் அவற்றைக் கூட நாம் விட்டுவிடலாம். மூன்றாவதான ’ஆடம்பர வகை’யைச் சேர்ந்த ஆசைகளை நாம் நம் பட்டியலிலிருந்தே நீக்கிவிடலாம். அவற்றை அடையமுயல்வது நமக்குத் தேவையற்ற துன்பத்தைத் தருவதோடல்லாமல் நம்மைக் கடனாளியாகக் கூட ஆக்கிவிடக்கூடும். ஆகவே தேவையற்ற ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு நிம்மதியாக வாழ்வோம். வீண் ஆசைகளை ஒழித்து வருமானத்திற்குள் குடும்பம் நடத்தப் பழகிக்கொள்வதுதான் வாழ்வின் வெற்றிக்கும், பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்.

    ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைப்

    போகாறு அகலாக் கடை.” என்பது எல்லாரும் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய வள்ளுவரின் அனுபவ மொழி.

    அடுத்து, மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கும் மற்றுமோர் தலையாய பண்பு குறித்துச் சிந்திப்போம். பீடிகை எதற்கு…? ‘ஒழுக்கம்’ என்ற மந்திரச் சொல்லே அது.

    ஒழுக்கத்தின் இன்றியமையாமையை அறிய வள்ளுவத்தினும் உயர்ந்த சான்றை யாங்கணுமே காண இயலாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

    ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் மதித்துப் போற்றவேண்டும் என அறிவுறுத்தும் வள்ளுவர், அப்பண்பிலிருந்து தவறுதலால் பெரும்பழிதான் ஒருவனுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

    எய்துவர் எய்தாப் பழி.” என்கின்றார்.

    சமுதாயத்தில் தற்போது அதிக அளவில் நடைபெற்றுவரும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளும், அதன் விளைவாய் ஒழுக்கம் தவறுவோர் அடைகின்ற துடைக்கவியலாப் பழியும், அவர்களால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்களும், சொல்லொணாத் துயரங்களும் ஒழுக்கத்தின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவே உள்ளன.

    வாழ்வியல் நன்னெறிகளைப் போதிக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், வீரத் துறவி விவேகானந்தரின் சிந்தனைகளையும் நம் இந்திய மாணாக்கர் அனைவரும் அறிந்து பின்பற்றும் வகையில் அகில இந்திய அளவில் அதனை மாணாக்கரின் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைப்பது அவர்தம் ஒழுக்கத்தையும், உயர் சிந்தனைகளையும் வளர்ப்பதில் பேருதவி புரியும் எனத் தோன்றுகிறது. ஒழுக்கம் என்பது ஏதோ இல்லறத்தைத் துறந்தார்க்கும், ஞானியர்க்கும் மட்டுமே வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை போலவும்; இளைஞர்களும், இல்லறத்தை மேற்கொள்வோரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் எண்ணுகின்ற மனநிலை முதலில் மாறவேண்டும். நல்லொழுக்கமும், நன்னெறிகளும், பெண்களைத் தாயாகவும், உடன்பிறப்பாகவும் எண்ணும் நற்பண்பும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வீட்டிலும், கல்விக் கூடங்களிலும் கற்பிக்கப்பட வேண்டும். சமுதாய மாற்றத்திற்கு அவை உண்மையிலேயே பேருதவி புரியும்.

    மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நற்பண்புகளில் ஏதேனும் ஒன்றிரண்டையேனும் நம் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து பின்பற்றத் தொடங்குவார்களேயானால் சமுதாயம் செம்மையுறும். தனிமனித விருப்பு, வெறுப்பு, தேவையற்ற போட்டி, பொறாமை, பேராசை ஆகியவை மறையும். நல்லெண்ணமும், மனிதநேயமும் மலர்ந்து மணம்வீசும். வீடும், நாடும் வளம் பெறும். மகாகவி கனவு கண்டதுபோல் எல்லாரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உண்மையிலேயே உலகிற்கு அளிக்கும்.

    படத்திற்கு நன்றி: http://www.tamilhindu.com/2008/07/specialfeatureanjal/

    Share
  • இணையற்ற இறைக்காதல்!


    மேகலா இராமமூர்த்தி

    சைவத் திருமுறைகளைப் பன்னிரெண்டாகப் பகுத்துள்ளனர் அருளாளர்கள். அவற்றில் பன்னிரெண்டாம் திருமுறையாக இடம்பெற்றிருப்பது சேக்கிழார் பெருமான் அருளிய ”பெரியபுராணம்” என்றுப் பரவலாக அறியப்படும் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.

    இத்திருத்தொண்டர் புராணம் மற்ற திருமுறைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. எவ்வாறெனின், மற்ற பதினோரு திருமுறைகளும் தங்கள் உள்ளங்கவர் கள்வனான சிவனைப் பற்றிய பாடல்களையும், அவனை அடைவதற்குரிய வழிகளான யோகம், இயமம், நியமம், தந்திரம் போன்றவற்றைப் பற்றியே அதிகம் குறிப்பிட்டிருக்க, சேக்கிழாரோ இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டு நேரடியாகத் தென்னாடுடைய சிவனைப் பாடாமல் அவன்பால் பக்தி கொண்டு முக்தியடைந்த அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், அவர்தம் ஈடில்லாச் சிவபக்தியையும், தொண்டையும் புகழ்ந்தேத்தியுள்ளார். நாயன்மார்கள்பால் அவர் கொண்டுள்ள எல்லையில்லா பக்தியையும், காதலையும் இஃது புலப்படுத்துகின்றது எனலாம்.

    நம்பி ஆரூரராகிய சுந்தரர் இயற்றிய நூலான ’திருத்தொண்டத் தொகை’யை அடிப்படையாக வைத்து இத்திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் இயற்றியுள்ளார் என்பது அவர் கூற்றாகவே திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் விரித்துக் கூறப்பட்டுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறும் அற்புதமானவை; அவர்தம் ஈடு இணையற்ற சிவநேசத்தையும், தன்னலமற்ற சிவத்தொண்டையும் சொல்பவை. அதில் ஒரு நாயனார் (பூசலார்) இறைவனுக்காகத் தன் மனத்திலேயே கோயில் எழுப்பினார்; மற்றொருவர் (சிறுத்தொண்டர்) இறைவன் கேட்டான் என்பதற்காகத் தன் மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்தார். இன்னொருவரோ (காரைக்காலம்மையார்) பேயுருக் கொண்டு சிவபக்தி செலுத்தி இறைவனின் இணையடிகளின் அருகிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் அருளைப் பெற்றார். இப்படி நாயன்மார்கள் அனைவரின் பெருமையையும் போற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாள்களும், தாள்களும் போதா.

    ஆகவே, இத்தகைய ஈடில்லாச் சிவநேசச் செல்வர்களில் யாரைப்பற்றி எழுதுவது என யோசிக்கும் வேளையில், அனைவர் உள்ளத்தையும் ஒருசேரக் கொள்ளை கொண்ட – ஆறே நாளில் இறைவனின் பரிபுரண அன்பிற்குப் பாத்திரமான, சிவனையன்றி வேறு யாரையும் சிந்திக்காத, எத்தகைய பூசை முறைகளையோ, நியமங்களையோ அறியாதவராயினும் தன் ஒப்புவயர்வற்ற இறைக்காதலால் காளத்தியப்பனின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றுவிட்ட, கள்ளம் கபடமற்ற ஓர் பாமரச் சிவபக்தர் நம் கண்முன் வந்து நிற்கின்றார். மனிதருள் மாணிக்கமான அச்சிவநேசரின் வரலாற்றைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். (அவர் வரலாற்றை அறிந்திராதவர் இரார். ஆயினும் சிவநேசச் செல்வர்களின் வரலாற்றையும், அவர்களைப் பற்றிய செய்திகளையும் மீண்டும் ஒருமுறை எண்ணி மகிழ்வதில் தவறில்லைதானே?)

    இனி அவர் வரலாற்றிற்குச் செல்வோம்….

     

    திருக்காளத்தி (காளஹஸ்தி என்று இன்று நாம் அழைக்கின்ற ஆந்திராவிலுள்ள பகுதி) மலையின் வடக்கே சோலைகளும், பூக்கள் நிறைந்த குளங்களும் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் ஓர் குறிஞ்சி நிலப்பகுதி, அதன் பெயர் ‘பொத்தப்பி நாடு’ என்பதாகும். அங்கே மதில்களால் சூழப்பட்ட ’உடுப்பூர்’ என்றொரு அழகிய ஊர். குன்றவர் என்றும் வேட்டுவர் என்றும் குறவர் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் குறிஞ்சி நில மக்கள் நிறைந்த பகுதி அது. அங்கு வாழ்ந்துவரும் வேட்டுவச் சிறுவர்கள் அச்சம் என்பதனையே அறியாதவராய்ப் புலிக்குட்டிகளோடும், யானைக் கன்றுகளோடும் விளையாடிக் கொண்டிருப்பர். சிறுமியரோ பெண் மான்களோடு விளையாடிக் களித்திருப்பர். இக்காட்சியைச் சேக்கிழார்,

    ”வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றினோடும்
    புன்தலைச் சிறுமகார்கள் புரிந்து உடன் ஆடல்அன்றி,
    அன்பு உறு காதல் கூர அணையும்மான் பிணைகளோடும்
    இன்பு உற மருவிஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்.”  என வியந்து கூறுகின்றார்.

    இத்தகைய வீர வேடர்குல மக்கள் நிறைந்து வாழ்ந்துவந்த அப்பகுதிக்குத் தலைவனாய் விளங்கியவன் வீரமும், ஆற்றலும் நிரம்பிய “நாகன்” என்பான். அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் பெயர் ”தத்தை”. பல வருடங்கள் கடந்த பின்பும் இல்லறத்தின் பயனாகிய மக்கட்பேறு இல்லாத காரணத்தினால் பெரிதும் வருத்தமுற்றிருந்த அவ்விருவரும் தங்கள் குலதெய்வமான செவ்வேள் முருகனுக்கு நேர்த்திக் கடன்கள் செலுத்தியும், குரவைக் கூத்தாடியும், திருவிழா எடுத்தும் மக்கட்பேறு வேண்டித் தொழுதனர்.

    பின்பு, குறிஞ்சிக் கோமானாகிய முருகனின் அருளாலே தத்தை ஓர் அழகான ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அதுகண்ட குறவர் குடியினர் தம் தலைவனுக்கு மகப்பேறு கிடைத்த மகிழ்ச்சியில் மணிகளையும், முத்துக்களையும் இரவலர்க்கு வாரி வழங்கி ஆனந்தக் கூத்தாடினர். நாகனும் அளவிலா ஆனந்தம் கொண்டு ’ஓர் கரிய மலையானது காள மேகத்தை (கரிய மேகம்) மேலே கொண்டு தாங்கியது போல’த் தன் புதல்வனை வாரி அணைத்துக் கொண்டான். அக்குழந்தை தூக்குவதற்குத் திண்ணென்று (கனமாக) இருந்தபடியால் இவனைத் ’திண்ணன்’ என்றழைப்போம் என்று நாகன் தன் மகனுக்குப் அப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். அத்தெய்வக் குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தளர்நடைப் பருவம் அடைந்தது. கங்கையினும் புனிதம் வாய்ந்த தன் திருவாய்நீர் ஒழுக மழலைமொழி பேசி அன்னையையும், தந்தையையும் மகிழ்வித்தது. இவ்வாறு அருமையாக வளர்க்கப்பட்டுவந்த திண்ணன் பன்னிரெண்டு வயது அடைந்ததும் சிலைத் தொழில் என்று அழைக்கப்படும் வேடுவர் குலத்தொழிலாகிய ‘வில்வித்தை’ கற்பதற்கு நல்ல முகூர்த்தம் குறிக்கப்பட்டது. பொதுவாக வில்வித்தைப் பயிற்சியை மாணாக்கர் முதன்முதலில் ஆரம்பிப்பதற்கு முன் அவ்வில்லிற்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து பின் அம்மாணாக்கரின் கையில் வில்லைக் கொடுத்துப் பயிற்சியை ஆரம்பிப்பது வழக்கம். அதனை ’வில்விழா’ என்று வேடுவர்கள் விமரிசையாய்க் கொண்டாடுவர். அத்தகைய வில்விழாவை நடத்தித் திண்ணனின் விற்பயிற்சிகள் அவ்வேடர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

    வில்வித்தை, மற்றும் பிற கருவிகளைக் கையாளுதல் ஆகியவற்றில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுத் தன் பதினாறு வயதிலேயே மாவீரராய் விளங்கினார் திண்ணனார்.

    அவர் வாலிபப் பருவம் எய்திய காலத்தில் அவருடைய தந்தையான நாகன் முதுமைப் பருவத்தை அடைந்தான். அவனால் முன்புபோல் கொடிய காட்டு விலங்குகளான புலி, கரடி போன்றவற்றை வேட்டையாடி அழிக்க இயலவில்லை. அவை வேட்டுவர்களின் தினைப்புனங்களையெல்லாம் அழிக்கத்தொடங்கின. அதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அம்மக்கள் தங்கள் தலைவனான நாகனிடம் இதுபற்றி முறையிடவே, அவனோ, ”நான் மூப்படைந்துவிட்டதனால் இனிமேல் என்னால் வேட்டையாட இயலாது. ஆகவே, என்னருமை மகனாகிய திண்ணனை நீங்கள் இனித் தலைவனாய்க் கொள்ளுங்கள், அவன் உங்களுக்கு உதவுவான்” எனக் கூறினான். வில்லேந்திய வேடர்களும் மகிழ்ந்து அதனை ஏற்கவே, உடனே நாகன் தன் மகனான திண்ணனை அழைத்து அவனை வேட்டைக்கு அனுப்ப முடிவு செய்தான். இஃது அவனுடைய கன்னிவேட்டையாதலால் (முதல்முறை வேட்டைக்குச் செல்வது) காடுவாழ் தெய்வங்களுக்கெல்லாம் படையலிட்டான். வேடர் குலத்துக்கே உரிய பல்வேறு அணிகலன்களும், வீரக்கழலும், பாதத்திலே செருப்பும் அணிந்து, தந்தையின் தாள்பணிந்து வேட்டைக்குக் கிளம்பினார் திண்ணனார். பெரிய வேடர் கூட்டமும் அவருடனே சென்றது.

    யானைகள், பன்றிகள், கொடிய புலிகள் போன்ற விலங்குகளைக் காட்டிடைக் கண்டு அவைமீது அம்புமழை பொழிந்து அவற்றைக் கொன்றனர் வேடர்கள். ஆயினும் அவர்கள் எல்லா விலங்குகளையும் கொல்லவில்லை. குறிப்பாக யானைக் கன்றுகளையும், மற்ற விலங்குகளின் சிறிய குட்டிகளையும், கர்ப்பம் தரித்திருக்கும் பெண் விலங்குகளையும் அக்கொலைத் தொழில் வேடர்கள் கொல்லவில்லை என்கிறார் பெரியபுராண ஆசிரியர். இஃது கொலைத்தொழிலிலும் நேர்மையையும், (மறக்)கருணையையும் அவ்வேட்டுவர்கள் கடைப்பிடித்தனர் என்பதனையே காட்டுகின்றது.

    ஆண்சிங்கத்தைப் போன்ற வீரம் பொருந்திய திண்ணனாரும், மற்ற வேடர்களும் வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று காடே அதிரும்படியான குரல் எழுப்பிக் கொண்டு ஓர் காட்டுப்பன்றி அங்கே ஓடியது. அதனைப் பிடிக்கும் ஆவலில் திண்ணனார் வெகுவிரைவாக அதனைத் தொடர்ந்து ஓடவே மற்ற வேடர்கள் அவர் எங்குச் சென்றார் என அறியமுடியாமல் திகைத்து நின்றனர். ஆயினும் விடலைப் பருவமுடைய ’நாணன், காடன்’ என்ற பெயர்களைக் கொண்ட இரு வேடர்கள் மட்டும் அவரைப் பிரியாது தொடர்ந்து சென்றனர். அந்தப் பன்றி வெகுதூரம் ஓடிக் களைத்துக் கடைசியில் திண்ணனார் கையில் சிக்க அவர் அதனை இரு துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார்.

    வெகுநேரம் வேட்டையாடியதால் மிகுந்த களைப்பும், பசியும் அவர்களை வாட்டவே கொன்ற அப்பன்றியை வதக்கி உண்டு நீரருந்திச் செல்லலாம் என முடிவு செய்தனர். நல்ல நீரானது அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சற்று அருகில் உள்ள “திருக்காளத்தி மலை” அடிவாரத்திலேயுள்ள “பொன்முகலி” ஆற்றில் கிடைக்கும் என்று நாணன் கூறவே அங்குச் சென்றனர்.

    அந்தக் குன்றைக் கண்டவுடன் திண்ணனார், ”நாம் இக்குன்றில் ஏறுவோம்” என்று கூறவே உடன் வந்திருந்த நாணன்,”ஐயனே நீ அங்கே சென்றால் நல்ல காட்சியையே காண்பாய், ஏனெனில் இக்காளத்தி மலைமீதில் ’குடுமித் தேவர்’ (கானவர்கள் காளத்தியப்பரை குடுமித்தேவர் என்றே அழைத்துள்ளனர்) இருக்கின்றார்; நாம் அவரைக் கும்பிடலாம்” என்றான்.

    இவ்வார்த்தைகளைக் கேட்டவுடனே திண்ணனார் மிகுந்த ஆர்வம் கொண்டு ”உடனே நாம் குன்றின் உச்சிக்குச் செல்லவேண்டும். இப்போதே குடுமித் தேவரைக் காண என் உள்ளம் துடிக்கின்றது” என்றார். பின்பு, காடனிடம் ”பன்றி இறைச்சியை வதக்குவதற்கு வேண்டிய தீயை நீ இங்கு மூட்டுவாய்” என்று மலையடிவாரத்திலேயே அவனை விட்டுவிட்டுத் திண்ணனாரும், நாணனும் மலையின் மேல் உள்ள இறைவனைக் காண விரைந்து சென்றனர். திங்களைத் தன் சடையில் அணிந்த இறைவனைத் திண்ணனார் காணுவதற்கு முன் குடுமித் தேவரின் கருணைநோக்குத் திண்ணனார் மீது பட்டது. அதன் பயனாய் அன்பு வடிவாகவே மாறினார் திண்ணனார் என்று மனம் நெகிழ்ந்து கூறுகின்றார் சேக்கிழார்.

    காளத்திநாதரைக் கண்டதுதான் தாமதம், விரைந்து ஓடித் தன்கையில் இருந்த வில் நழுவி விழுந்தது அறியாராய் அவரை (இறைவனை) ஆரத்தழுவி, தம் உடலிலுள்ள மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்க்க, வெகுநேரம் உச்சிமுகந்து நின்றார் திண்ணனார். ”இம்மலையில் நீவிர், ஒரு துணையும் இல்லாது தனியாக உள்ளீரே…! நான் என் செய்வேன்” என்று கண்ணீர் பெருக்குகின்றார்.

    பின்பு, நாணனைப் பார்த்து, ”இந்தக் குடுமித்தேவர் மீது பச்சிலையுடனே பூவும் பறித்து இட்டு, நீரையும் வார்த்து வைத்திருப்பவர் யார்?” எனத் திண்ணனார் வினவ, ”அது எனக்குத் தெரியும், முன்பு ஒருமுறை உன் தந்தையோடு நாங்கள் இங்கே வேட்டைக்கு வந்திருந்தபோது ஒரு பார்ப்பான் குடுமித் தேவரைக் குளிர்ந்த நீரால் ஆட்டி, பச்சிலையும், பூவும் சூட்டி, உணவு உண்பித்துச் சில மொழிகளும் (மந்திரங்களும்) சொன்னதை நான் கண்டேன். இன்றும் அவனே இதனைச் செய்திருக்க வேண்டும்” என்றான் நாணன்.

    அதுகேட்ட திண்ணனார் குடுமித்தேவரை வழிபடும் முறை இதுதான் போலும் என்று எண்ணிக் கொண்டார். பின்பு, காளத்தியப்பனைப் பார்த்து, ”தனியாக இருக்கும் உமக்கு உண்பதற்கு வேண்டிய இறைச்சியை யார் தருவார்? நீர் பசியோடு அல்லவா இருப்பீர்?” எனக் கவலையுற்றுக் குடுமித் தேவருக்கு வேண்டிய இறைச்சியைக் கொண்டுவருவதற்கு மிகுந்த விருப்பம் கொண்டவராய் அங்கிருந்து அகன்று செல்கின்றார் திண்ணனார். ஆனால் இறைவனைப் பிரியவொட்டாமல் அவர்மேல் கொண்ட அளவற்ற காதல் தடைசெய்யவே சிறுது தூரம் சென்றவர் விரைந்து வந்து இறைவனைக் கட்டிக்கொள்கிறார்; மீண்டும் சிறிது தூரம் செல்லுவார்; திரும்பவும் காதலோடு இறைவனை நோக்கி நிற்பார்; நாதனே! நீர் உண்பதற்குகந்த நல்ல இறைச்சியை நானே கொண்டுவருகின்றேன் எனச்சொல்லி ’கன்றினையீன்ற தாய்ப்பசு கன்றினை நீங்கிச் செல்வதுபோல் செல்கின்றார்’ திண்ணனார் என்று அவருடைய மனப் போராட்டத்தை அழகாய்க் காட்சிப்படுத்துகின்றார் தெய்வச் சேக்கிழார். இங்கு திண்ணனார் தன்னைத் தாயாகவும், இறைவனைத் தன் சேயாகவும் எண்ணுவதுபோல் சேக்கிழார் பாடல் அமைத்திருப்பது ரசித்து மகிழத்தக்கது.

    ”போதுவர்; மீண்டுசெல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
    காதலின் நோக்கி நிற்பர்; கன்றுஅகல் புனிற்றுஆப் போல்வர்
    நாதனே! அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே
    கோதுஅறத் தெரிந்துவேறு கொண்டுஇங்கு வருவேன் என்பார்.”

     

    திண்ணனாரும், நாணனும் மலையடிவாரத்திற்குச் சென்றனர். அங்கே இவர்களுக்காகக் காத்திருந்த காடன் “தாங்கள் சொல்லியபடி தீமூட்டி வைத்துள்ளேன், நீவிர் திரும்பிவர ஏன் இவ்வளவு காலதாமதம்?” என வினவுகின்றான். இறைக் காதலிலேயே மூழ்கியிருந்த திண்ணனார் காதில் அவன் கூறிய எதுவுமே விழவில்லை. நாணனே காடனுக்குப் பதில் சொல்கின்றான், “அங்கே குடுமித் தேவரைக் கண்டதிலிருந்து அவர்பால் மாறாத அன்பு கொண்டவனாய் ”மரப்பொந்தைவிட்டு நீங்காத உடும்பு போல” அவரை அணைத்துக்கொண்டு வரவே மறுத்துவிட்டான், இப்போது கூட அவருக்கு இறைச்சி கொண்டு போவதற்காகவே வந்துள்ளான்; நம் குலத்தின் தலைமைப் பொறுப்பையெல்லாம் விட்டுவிட்டான்” என்று கூறுகின்றான். பொதுவாகவே ஒருவர் ஒரு பொருளை இறுகப் பற்றிக்கொண்டுத் தர மறுத்தால் நாம் அதனை ‘உடும்புப் பிடி” என்று சொல்வோம். ஏனெனில் உடும்பு ஒன்றைப் பற்றிக் கொண்டால் எளிதில் விடாது. அதுபோலவே இங்குத் திண்ணனாரும் குடுமித் தேவரை உடும்பு போலப் பற்றிக் கொண்டார். அவரைவிட்டு விலக இனி இந்த வேடர்குலத் தோன்றலால் இயலாது என்பதனை இவ்வுவமை வாயிலாய் நமக்குத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றார் சேக்கிழார்.

    அங்குஇவன் மலையில் தேவர் தம்மைக்கண்  டணைத்துக்கொண்டு
    வங்கினைப் பற்றிப் போகா வல்உடும்பு என்ன நீங்கான்;” என்பது சேக்கிழார் வாக்கு.

    பின்பு, பன்றியைத் தாமே சுவைபட வதக்கி அதன் சுவையை அறிவதற்காக அதனை வாயிலிட்டுமென்று நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் பகுதிகளை இறைவனுக்காக எடுத்துவைத்து மீதமுள்ள பகுதிகளை வீசி எறிந்தார் திண்ணனார். இதனைக் கண்ட மற்ற இரு வேடர்களும் “சரிதான், இவனுக்கு இறைவன் மீது மையல் முற்றிவிட்டது, இல்லையென்றால் தன் பசியையும் மறந்து, நம் பசியையும் நினையாது, இறைவற்குத் தானே சுவைபார்த்த ஊன் தசைகளை இவ்வாறு எடுத்து வைப்பானா?” என்று தமக்குள் பேசியவாறே “இனி நாம் செய்வது ஒன்றுமில்லை; ஊருக்குச் சென்று இதுபற்றி நாகனிடம் தெரிவித்து இந்தத் தெய்வ மயக்கத்தைத் தெளிவிக்கும் தேவராட்டியையும் அழைத்துக்கொண்டு வருவோம்” என்றவாறு அங்கிருந்து அகன்றனர்.

    அவர்கள் போனதையே அறியாத திண்ணனாரோ கருமமே கண்ணாகக் கொண்டு ஓர் இலையில் சமைத்த ஊனையும், இறைவனைத் திருமஞ்சனம் (அபிடேகம்) செய்வதற்கு வேண்டிய நல்ல நதிநீரை வாயிலும் எடுத்துக்கொண்டு, அவர்மேல் சூட்டுதற்கு வேண்டிய நறுமணம் மிக்கப் புதுமலர்களைத் தம் முடியில் செருகிக் கொண்டு இறைவன் பசியோடிருப்பார் என எண்ணிக் கவலையோடு அவரைக்காண விரைந்து செல்கின்றார்.

    குடுமித் தேவரின் தலையில் சூட்டப்பட்டிருந்த பூக்களை எல்லாம் தம் செருப்பணிந்த காலினாலே தள்ளித் தம் வாயிலிருக்கும் தூய ஆற்றுநீரை ’அன்பினையே உமிழ்வதுபோல்’ இறைவன் தலைமேல் விட்டார் திண்ணனார். பின்பு, ”மிகவும் சுவைபொருந்திய கொழுப்பினையுடைய தசைகளையெல்லாம் உமக்காகத் தேர்ந்தெடுத்துச் சமைத்துக் கொண்டுவந்துள்ளேன், தேவரே! அமுது செய்து அருளுங்கள்!” என்று இறைச்சிப் படையலிட்டு இறைவனை வேண்டுகின்றார்.

    சிறிது நேரத்தில் பகலவன் மேற்கே சென்று மறைய அந்திவானை இருள் கவ்வியது. இரவு முழுவதும் தூங்காது இறைவனைக் கண்போல் காத்து நின்றார் கருங்கடல் போல் தோற்றங்கொண்ட திண்ணனார். மறுநாள் காலை புலரத்தொடங்கியது. புள்ளினங்கள் கீதமிசைத்தன. இறைவனுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவருவதற்கு விரும்பிய திண்ணனார் குடுமித் தேவரைத் தொழுது அங்கிருந்து நீங்கினார்.

    அவ்வேளையில் விடமுண்டகண்டனாகிய காளத்திநாதனுக்குத் தினமும் சிவாகம விதிப்படி பூசை செய்துவரும் ’சிவகோசரியார்’ என்னும் முனிவர் இறைவனின் திருமஞ்சனத்திற்குரிய தூயநீரையும், புதிதாகப் பறித்த மலர்களையும், மற்ற பூசைப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு அங்கு வந்தார். இறைவன் திருவடிகளில் இறைச்சியும், எலும்பும் இருப்பதனைக் கண்டு தீயை மிதித்தவர்போல் அலறி ”இந்த அநுசிதத்தைச் செய்தவர் யார்?” என்று வருந்தினார். ”இப்பக்கம் உலவும் வேடர்களே இந்தத் தகாத செயலைச் செய்திருக்கவேண்டும்” என்று எண்ணிக் கண்ணீர் விட்டார்.

    அங்கு கிடந்த அசுத்தங்களையெல்லாம் திருஅலகால் (துடைப்பம்) நீக்கிப் பின் ஆகம முறைப்படி பூசனைகள் செய்து இறைவனைத் தொழுது தம் தவச்சாலைக்குப் போனார். பின்பு திண்ணனார் அங்குவந்து வழக்கம்போல் குடுமித்தேவரை ஆரத்தழுவி, ”தேவரே! நேற்று கொணர்ந்த ஊன்கறியினும் சுவைமிக்க ஊனை இன்று தேன்கலந்து கொண்டுவந்துள்ளேன்” எனக் கூறி அவருக்குத் தன் வாய்நீரினால் அபிடேகம் செய்து, தலையில் தரித்திருந்த பூக்களைக் காளத்தியப்பனின் தலையில் அன்புடன் சூட்டிப் பின்பு இறைச்சியைப் படையலிட்டார். இரவு முழுவதும் உறங்காமல் இறைவனைக் காவல் காப்பதும், பகலில் வேட்டையாடிக் காளத்தியப்பனுக்கு சுவைமிகுந்த ஊன்உணவு கொணர்வதுமாய் இருந்தார் திண்ணனார்.

    காலையில் பூசை செய்வதற்கு வரும் சிவகோசரியார் இறைவன் திருமுன்பு இருக்கும் இறைச்சித் துண்டுகளை மிகுந்த வேதனையோடு அப்புறப்படுத்திவிட்டு வேதமுறைப்படி இறைவனை பூசித்துச் செல்வார். இதற்கிடையில் நாணனும், காடனும் திண்ணனைப் பற்றி நாகனிடம் தெரிவிக்க அவன் பெருங்கவலை கொண்டு உணுறக்கம் துறந்து குறிசொல்கின்ற தேவராட்டியையும் அழைத்துக்கொண்டு காளத்தி மலைக்கு விரைந்தான். ஆயினும் இவர்களுடைய மந்திரம், மாயம் ஒன்றினாலும் திண்ணனாரின் மனத்தை மாற்றவியலாமல் போகவே மிகுந்த மனச்சோர்வோடும், வருத்தத்தோடும் அங்கிருந்து சென்றான் நாகன்.

    திண்ணனார் தொடர்ந்து தாமறிந்த வகையிலே எம்பெருமானாரை பூசிக்க, சிவகோசரியாரோ சிவாகம விதிப்படி இறைவனை பூசித்ததோடல்லாமல், ”இத்தகைய அநுசிதச் செயல்களைப் புரிந்துவரும் தீயோரை இறைவா நீ ஒழித்தல் வேண்டும்” என்றும் விண்ணப்பித்தார். எம்பெருமானார் அன்றிரவே சிவகோசரியாரின் கனவில் தோன்றி “நீ இத்தகைய செயல் செய்பவனைக் கொடிய வேடுவன் என்றெண்ணாதே! அவனுடைய நற்செயல்களை நான் உனக்கு உரைக்கின்றேன் கேள்!” எனக் கூறி, ”அவனுடைய வடிவம் முழுவதுமே என்மீதான அன்பு வடிவமாகும். அவன் அறிவெல்லாம் என்னை அறியும் அறிவின்றி வேறில்லை. அவன் செய்வதெல்லாம் எனக்கு இன்பம் தருவதாகவே இருக்கின்றன” என்று திண்ணனுக்கு நற்சான்று வழங்குகின்றார் காளத்தியப்பர்.

    அவனுடைய  வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்பு; என்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவு; என்றும்
    அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய வாம்; என்றும்
    அவனுடைய நிலைஇவ்வாறு; அறிநீ என்றுஅருள் செய்வார்.”  என்கிறார் சேக்கிழார் பெருமான்.

    அதுமட்டுமா? அவன் வாயுமிழும் நீர் எனக்குக் கங்கைநீரினும் புனிதமானது; திருமாலும், அயனும், மற்றுள்ள தேவர்களும் எனக்குச் சூட்டுகின்ற எம்மலரும் இவ்வன்பன் தன் தலையிலிருந்து எனக்குச் சூட்டும் மலருக்கு ஒப்பாகாது; வேதியர்கள் வேள்விசெய்து எனக்குத் தரும் அவிப்பலியைவிட, நன்கு வெந்துளதா? எனச் சோதித்து இவ்வேட்டுவன் எனக்கு ஊட்டும் ஊன் உணவு மிக்க சுவையுடைத்து” என்ற காளத்திநாதன், அவன் மெய்யன்பை நாளைக்கு உனக்குக் காட்டுகின்றேன் மறைந்திருந்து பார்” எனச் சிவகோசரியாரிடம் சொல்லி மறைந்தார்.

    இதனைக் கேட்டபின்பு கனவுகலைந்து விழிப்புநிலைக்கு வந்த சிவகோசரியார் இவ்வற்புதத்தைக் காண எழுந்த பேராவலுடனும், சிறிது பயத்துடனும் எப்போது பொழுது விடியும் என்ற எதிர்பார்ப்போடு உறங்காது விழித்திருந்தார்.

    பொழுது விடிந்தவுடனே விரைந்து சென்று காளத்தியப்பனுக்குச் செய்யவேண்டிய நித்திய பூசைகளை முடித்துவிட்டு இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான அவ்வேடர்குல ஏந்தலையும், அவன் மெய்யன்பையும் காண வேண்டி இறைவன் திருமேனிக்கு அருகிலிருந்த மரங்களின் பின்னே ஒளிந்திருந்தார்.

    இறைவன் மீது கொண்ட அளவற்ற காதலால் காளத்தி மலையிலேயே தங்கிவிட்ட திண்ணனார் ஐந்து நாட்கள் கழிந்த ஆறாம்நாள் காலையில், வழக்கம்போல் தனித்து வேட்டையாடிக் குடுமித் தேவருக்கு வேண்டிய இறைச்சி உணவை எடுத்துக்கொண்டு விரைந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவர்முன் தீய சகுனங்கள் தென்படுகின்றன. அதனால் மிக்க கவலையுற்ற அவர், ”என் அத்தனுக்கு (அப்பன்) என்ன நேர்ந்ததோ அறியேனே!” என்று கவலையோடு விரையும் வேளையில் திண்ணனின் ஒப்பற்ற அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்ட எண்ணிய இறைவன் தன் கண்களில் ஒன்றில் குருதி வழியுமாறு செய்தார். இதனைத் தூரத்தில் வரும்போதே பார்த்துப் பதைபதைப்போடு அருகில் வந்த ’கருமுகில்’ போன்ற திண்ணனார், ஈசனின் கண்ணில் வழிந்த செங்குருதி கண்டு அபிடேகத்திற்காகக் கொண்டுவந்த நீர் வாயிலிருந்து கீழே வழியவும், ஊனுணவும், வில்லும் கீழே விழவும், தலையில் செருகியிருந்த பூசைக்குரிய மலர்க்கொத்து கீழே விழவும், தாமும் வீழ்ந்து அரற்றினார். ”யார் செய்தனர் இக்கொடிய செயலை?” என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே வேறு விலங்குகளோ, வேடர்களோ தென்படாதது கண்டு திகைத்தார். அண்ணலின் பாதம் பற்றிக்கொண்டுக் கதறினார். பின்பு காட்டிற்கு ஓடிச்சென்று அங்கே பல்வேறு மருந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து காளத்தியப்பரின் கண்களில் அவற்றின் சாற்றைப் பிழிந்தார். ஆயினும் குருதி நிற்காமல் முன்போலவே கொட்டிக்கொண்டிருந்தது கண்டு, இக்குருதியைத் தடுப்பது எவ்வாறு? என்று சிந்தித்த வேளையில் “ஊனுக்கு ஊனே உற்றநோய் தீர்ப்பது” என்ற பழமொழி அவர் நினைவுக்கு வந்தது.

    ”இற்றையின் நிலைமைக்குஎன்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்;
    உற்றநோய் தீர்ப்பதுஊனுக்கு ஊன்எனும் உரைமுன் கண்டார்.”  என்கிறார் சேக்கிழார்.

     

    உடனே சற்றும் யோசியாது அம்பினால் தன் வலது கண்ணை அகழ்ந்தெடுத்து காளத்தியப்பனுக்குப் பொருத்தவே, அதுவரை ஆறுபோல் பெருகிவந்த குருதி உடனே நின்றது. அதனைக் கண்ட திண்ணனார், ”என் ஐயனின் கண்ணில் வழிந்த குருதி நின்றுவிட்டது; என் மருத்துவம் பலித்துவிட்டது” என்று ஆனந்தக் கூத்தாடினார். ஆயினும், இவருடைய அளவிலாப் பேரன்பை உலகிற்குக் காட்டவிரும்பிய காளத்தியப்பன் தன்னுடைய இடது கண்ணிலிருந்து இப்போது குருதி வழிய விட்டான். என்னே ஈசனின் திருவிளையாடல்! அஞ்சவில்லை அந்த மறவர்குல மாணிக்கம். ”இதோ இன்னொரு கண் இருக்கின்றது; அதனையும் என் அத்தனுக்காகத் தந்து அவருடைய துயர் களைவேன்” என்றெண்ணினான். ஆனால், ”இந்தக் கண்ணையும் நான் இழந்தபின்பு இறைவனின் குருதி வழியும் கண்ணை என்னால் அறிய இயலாது. ஆகவே, இப்போதே ஓர் அடையாளமாய் என் இடதுகாலை அவ்விடத்தில் ஊன்றிக்கொள்கின்றேன். பின்பு என் கண்ணை அவ்விடத்தில் அப்புவதில் சிரமம் இருக்காது” என்று எண்ணித் தன் இடது காலை இறைவன் இடது கண்ணில் ஊன்றித் தன் இடது கண்ணையும் அம்பால் அகழ்வதற்காய் கண்ணில் வைத்தார். அதனைக் கண்டு நெக்குருகிப் போன ஈசனார் அம்பைப் பிடித்திருந்த திண்ணனாரின் கையைத் தடுத்து, ”கண்ணப்ப நிற்க!” என்று மூன்றுமுறை கூறினார். இவற்றையெல்லாம் கண்டு மிரண்டு போயிருந்தார் மாமுனிவராகிய சிவகோசரியார். அப்போது வானிலிருந்து தேவர்கள் பூமாரிப் பெய்தனர்.

    இந்த ஈடு, இணையற்ற சிவபக்தனின் பெருங்காதலில் உள்ளம் நெகிழ்ந்திருந்த கண்ணுதற்கடவுளார், திண்ணனின் கையைப் பற்றி, ”கண்ணப்ப! எப்போதும் நீ என் வலப்பக்கத்திலேயே இருப்பாயாக” எனப் பேரருள் புரிந்தார். தன் கண்ணென்றும் பாராது அதனை அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பனுக்கு அப்பியதால் திண்ணனார் அன்றுமுதல் ’கண்ணப்பன்’ என்ற திருநாமம் பெற்றார். அப்பெயரை ஈசனாரே அவர்க்கு அளித்தார் என்பதனால் அப்பெயரே இன்றளவும் நின்று நிலைபெற்றுவிட்டது.

    இந்நிகழ்ச்சியை “நக்கீரதேவ நாயனார்” (சங்ககால நக்கீரர் அல்ல) பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள “திருக்கண்ணப்ப தேவர் திருமறம்” என்ற பகுதியில்,

    நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
    அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்ப”

    எனக் கூறி, இறைவன் கண்ணப்பனைத் தடுத்தாட்கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்.

    தன்னேரில்லா இச்சிவபக்தனின் இறைக்காதல் இவருக்குப் பின் வந்த பிற சிவனடியார்களாலும் வியந்து பாராட்டப்படுகின்றது.

    சான்றாக, பட்டினத்து அடிகள் தன் பாடலில்,

    ”வாளால்மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாதுசொன்ன
    சூளால்இள மைதுறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்து
    நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேன்அல்லன் நான்இனிச்சென்(று)
    ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே?”

    ”என்னால் பிள்ளையை அரிந்து இறைவற்கு ஊட்ட இயலாது (சிறுத்தொண்டர்); மனைவியின் சபத்திற்காக இளமை இன்பத்தைத் துறக்க இயலாது (திருநீலகண்ட நாயனார்); இறைவன் மீது கொண்ட அளவிலாக் காதலால் ஆறே நாளில் என் கண்ணை இடந்து அப்பவும் வல்லவன் அல்லேன் (கண்ணப்ப நாயனார்); நான் எப்படிக் காளத்தியப்பனின் அருளுக்குப் பாத்திரம் ஆவேன்?” என்று மிகுந்த வருத்தத்தோடு புலம்புகின்றார்.

    கல்மனதையும் கசிந்துருகச் செய்யும் திருவாசகத்தை இயற்றிய மணிவாசகப் பெருந்தகை, அதில் இடம்பெற்றுள்ள “திருக்கோத்தும்பி” எனும் பகுதியில் வரும் பாடலில் கண்ணப்பன் செலுத்திய அன்புக்கு ஈடான ஒன்றை என்னிடத்தில் காணாத போதிலும் என்னையும் ஆட்கொண்டு எனக்குக் கருணை செய்தவன் சிவபெருமான் என்று ஈசன் தன்அடியார்பால் கொண்டுள்ள பேரன்பினைப் புலப்படுத்திச் செல்கின்றார். இதோ அப்பாடல்….

    ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
    சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.”

    சிவனடியார்களும், சாமானியர்களும், ஏன்…சித்தத்தைச் சிவன்பால் வைத்த அனைவருமே மெய்சிலிர்த்துப் போற்றும் இணையில்லாச் சிவபக்தர் கண்ணப்ப நாயனார். அவரைப்போல் ஓர் தன்னலமில்லாத் தொண்டனைக் காண்பது அரிதினும் அரிது.

    ஆகவே, நாமும் ’அன்பே சிவம்’ என்பதனை உணர்ந்து இறைவனின் திருவைந்தெழுத்தை நாளும் ஓதி அவனுடைய இணையடிகளை ஏத்திப் பணிவோம். ஈசனின் அருளுக்குப் பாத்திரமாவோம்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • நாதனைக் கண்டேனடி!

     

    மேகலா இராமமூர்த்தி

     

    இடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில்

    இன்பகீதம் இசைத்தா னடி!

    விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம்

    விந்தையென்ன சொல்வே னடி!

     

    நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்

    நங்கைஎன்பேர் மறந்தே னடி!

    கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே

    கன்னியென்னைக் காண்பா னோடி!

     

    உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே

    உறக்கத்தைத் தொலைத்திட் டேனே

    கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே

    கண்கட்டு வித்தை என்பதோ?

     

    தில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்

    உள்ளமதில் உறைந்தா னடி!

    வல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவினில்என்

    நாதனைக் கண்டே னடி!

     

    புலியாடை தரித்தவனோ புன்னகைதான் சிந்திட்டான்

    பேரின்பம் கொண்டே னடி!

    சிலசொற்கள் அவனும்தான் செந்தமிழில் செப்பிட்டான்

    செவியினிலே தேன்பாய்ந் ததே!

     

    எத்தனை பிறவிகள்நான் எடுத்தாலும் பிறையணிந்த

    மன்னனை மறவே னடி!

    நித்தமும் ஐந்தெழுத்தை ஓதியே மகிழ்ந்திடுவேன்

    சித்தம்களி கொள்ளு மடி!

    Share
  • பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!

    மேகலா இராமமூர்த்தி

    சங்க காலத்தில் மதிப்பும், மரியாதையும், கல்வியறிவும் நிரம்பப் பெற்றவர்களாய்ப் பெண்கள் விளங்கினர் என்பது சங்கப் புலவர்களாய் அவ்வையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், காமக்கண்ணியார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்ததன் வாயிலாய்த் தெள்ளிதின் புலப்படுகின்றது. ஆனால், இடைக் காலத்தில் பரவிய வைதீக நெறியானது பெண்களின் மதிப்பைக் குறைத்ததோடல்லாமல், அவர்தம் உரிமைகளையும் பறித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் ஆக்கிவிட்டது என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.

    இப்படிச் சிறிது சிறிதாய்ப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழந்து ஆடவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்; ஏன்…சிறைப்படுத்தப்பட்டனர் என்று சொல்வதில் கூடத் தவறில்லை. அடுப்பூதுவதும், அடுக்களை துடைப்பதும், பிள்ளைகளைப் பெறுவதுமே அவர்களின் தலையாயக் கடமைகள் என்றாயின.

    பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும்; அவர்களும் சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராய் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற சமதர்மச் சிந்தனைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெறத் தொடங்கின. பெண்களுக்கெதிரான ‘தேவதாசி’ முறைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழித்த பெருமை மருத்துவப் பணிசெய்த ’முத்துலட்சுமி ரெட்டியார்’ என்னும் அம்மையாரையே சாரும். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரோடு இணைந்து மூவலூர் இராமாமிர்தத்தம்மையார்’ என்ற பெண்மணி பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் மிகவும் போராடினார்.

    களப்பணியாற்றிப் பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; கவிப்பணியாற்றி பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க இருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற கவிஞர்களான மகாகவி பாரதியும், அவர்தம் சீடரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஆவர். தீப்பொறி பறக்கும் தங்கள் கவிதைகள் வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தனர் இவ்விருவரும். அதிலும் பாரதிக்குப் பின்னும் நெடுநாள் வாழக்கூடிய பேறுபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப் பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப்பாக்கள் வாயிலாகத் தீர்வு கண்டுள்ளார். அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட ஆற்றிய கவிதைப் பங்களிப்பை இக்கட்டுரை வழியாகச் சற்று ஆய்வோம்.

    இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாரதிதாசன், அதனை ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற தன் காவியத்தில் அக்காவிய நாயகியின் வாய்மொழிகளாய் அமைத்துள்ள பாங்கு நம் நெஞ்சைக் கவர்கின்றது.

    பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

    மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

    ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

    ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”

    என்று ஆண்குலத்திற்கு ஓர் பெண் மூலமாக எச்சரிக்கை விடுக்கின்றார் புரட்சிக் கவிஞர்.

    பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திச் சொல்கின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.

    ”பெண்கட்குக் கல்வி வேண்டும்

    குடித்தனம் பேணு தற்கே! 
    பெண்கட்குக் கல்வி வேண்டும்

    மக்களைப் பேணுதற்கே! 
    பெண்கட்குக் கல்வி வேண்டும்

    உலகினைப் பேணுதற்கே! 
    பெண்கட்குக் கல்வி வேண்டும்

    கல்வியைப் பேணுதற்கே! 
     
    கல்வியில் லாத பெண்கள்

    களர்நிலம்; அந் நிலத்தில் 
    புல்விளைந் திடலாம்; நல்ல

    புதல்வர்கள் விளைதல் இல்லை! 
    கல்வியை உடைய பெண்கள்

    திருந்திய கழனி; அங்கே 
    நல்லறி வுடைய மக்கள்

         விளைவது நவில வோநான்?” 

    என்று பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.

    புரட்சிச் சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர் சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர் கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.

    பெண்கள் தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின், மற்றோரின் கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக் கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே. இதோ அவ்வரிகள்……….

    ’கல்யாணம் ஆகாத பெண்ணே! – உன்

    கதிதன்னை நீநிச்ச யம்செய்க கண்ணே!

    வல்லமை பேசியுன் வீட்டில் – பெண்

    வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;

    நல்ல விலை பேசுவார் – உன்னை

    நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,

    கல்லென உன்னை மதிப்பார் – கண்ணில்

    கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;

    வல்லி உனக்கொரு நீதி – இந்த

    வஞ்சத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்

    …………………………………………………………………………………………………………..

    கற்றவளே ஒன்று சொல்வேன் – உன்

    கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’

    பெண்ணை விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

    கைம்பெண்களின் (கணவனையிழந்தோர்) நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். சான்றுகள் சில….

    ”கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு

    வேரிற் பழுத்த பலா – மிகக்

    கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்

    வடிக்கின்ற வட்ட நிலா!”

    என்று கைம்பெண்களை இச்சமூகம் ஒதுக்கிவைத்தும், அழவைத்தும் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு உள்ளம் வெதும்பிப் பாடுகின்றார்.

    இக்கைம்மைக் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம் கொண்டவராய்,

    ”ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்

    அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?

    பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்

    பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!

    வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்

    மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று சீறுகின்றார்.

    காதல் என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அஃது சரியே என்று ஒத்துக் கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால் அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல் அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை; சிந்தனையைத் தூண்டுபவை.

    ”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்

    பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”

    என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும் இச்சமூகத்தை நோக்கிக் காட்டமாக வினா எழுப்புகின்றார். இவ்வாறெல்லாம் பாவேந்தர் ஒருவரால் மட்டுமே சிந்திக்க முடியும் எனத் தோன்றுகின்றது.

    அடுத்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் பாரதிதாசன். இதோ அப்பாடல்….

    ”கண்களும் ஒளியும் போலக்

    கவின்மலர் வாசம் போலப்

    பெண்களும் ஆண்கள் தாமும்

    பெருந்தமிழ் நாடு தன்னில்

    தண்கடல் நிகர்த்த அன்பால்

    சமானத்தர் ஆனார் என்ற

    பண்வந்து காதிற் பாயப்

    பருகுநாள் எந்த நாளோ ?” 

     

     

    அதுமட்டுமன்று, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர், புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் நம் கண்முன் தோன்றுகின்றார்.

    ”—————————––காதல் 
    உடையார்தம் வாழ்வில்

    உளம்வேறு பட்டால் 
    மடவார் பிறனை

    மணக்க-விடவேண்டும் 
    ஆடவனும் வேறோர்

    அணங்கை மணக்கலாம்.” என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.

    பெண்ணுரிமைக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து குரல் எழுப்பிய பாவேந்தர் பெண் கல்வியறிவு படைத்தவளாக, தன் குடும்பத்தினைச் சீரோடும், சிறப்போடும் நிர்வகிக்கும் திறன் பெற்றவளாக இருக்கவேண்டும் என்பதனைத் தன் பாடல்களில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். அத்தகைய திறனற்றவளாகப் பெண் இருந்துவிட்டால் அவளைத் தலைவியாகக் கொண்ட குடும்பம் எவ்வாறு சீரழியும் என்பதனைத் தன் ‘இருண்ட வீடு’ என்ற காவியத்தின் வாயிலாக நகைச்சுவை ததும்பச் சொல்லியிருப்பார். படித்து மகிழவேண்டிய ஓர் இனிய காவியம் அது.

    இவற்றோடு நில்லாமல், குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப் பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும் தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார்.

    ”பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

    பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

    என்று வீரமுழக்கம் எழுப்பிய தன் கவியாசான் மகாகவி பாரதி போட்ட பாதையிலே தன் கவிதைத் தேரை அழகாகவும், அற்புதமாகவும் செலுத்திப் பெண்டிர்தம் வாழ்வில் ஒளியேற்ற உழைத்த பாரதிதாசனைத் தமிழகப் பெண்கள் என்றும் மறவாது போற்ற வேண்டும்.

    இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், அவர்தம் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் அசம்பாவிதச் செயல்களும் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனை தருவதாகவே உள்ளது. எனினும், சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரையில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த பெண்ணினம் தலைநிமிர்ந்து நடக்கவும், பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும், ஆணுக்கு நிகராகவும், அவர்களினும் மேம்பட்டும் பல சாதனைகள் படைக்கவும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த முன்னோடிகள் வரிசையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் ஓர் முக்கிய இடமுண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    Share
  • ஆதிரையின் தீர்மானம்

    மேகலா இராமமூர்த்தி

    பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஆதிரை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அது நேரம் காலை 8:30 எனக் காட்டியது. “என்ன இது? எப்போதும் 8:25-க்கே வர்ற பஸ்ஸை இன்னும் காணலையே…? காலேஜ் போக லேட்டாயிடும் போலருக்கே….ப்ரொஃபசரே லேட்டாப் போனா ஸ்டூடெண்ட்ஸ்  என்ன நினைப்பாங்க” என்று யோசித்தவாறே நின்றிருந்தாள். நல்ல வேளை! அவளுடைய பொறுமையை மேலும் சோதிக்காமல் அந்தப் பேருந்து வந்து சேர்ந்தது. அவள் விரும்பியபடி ஜன்னலோர இருக்கையே கிடைத்ததால் மகிழ்ச்சியோடு அங்கு சென்று அமர்ந்தாள். சில்லென்ற குளிர்ந்தகாற்று அவள் முகத்தைத் தாக்கி அவளுடைய சுருண்ட கூந்தலை அலைபாய வைத்தது.

    கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்முன் தன் தாய் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் திரும்பவும் ஒலித்தன. “அம்மா….ஆதிரை! இன்னிக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஒன்னப் பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..அதனால அரை நாள் லீவு சொல்லிட்டு, மதியம் ஒண்ணு, ஒண்ணரை மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடும்மா…ப்ளீஸ்..!, இன்னைக்கு ஒரு நாள் முழுசா லீவு போடுன்னு சொல்றேன் கேக்க மாட்டேங்கறே” என்றாள். மேலும் தொடர்ந்து,”ம்…ம்…! இந்த எடமாவது அமைஞ்சாத் தேவலை..எத்தன நாளைக்கு பொம்பளப் புள்ளைய வீட்டுல வெச்சுக்கறது…” என்று பேசிக் கொண்டே போனாள். தன் தாயின் பேச்சுக்கள் ஒன்றுமே ஆதிரைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தான் ஏதாவது சொன்னால் தாயின் மனம் புண்படும் எனக்கருதி அமைதி காத்தாள்.

    ”பாப்பா..! டிக்கெட் இந்தாம்மா! ஏதோ பலமான யோசனையில இருக்கற மாதிரி தெரியுது” என்றபடி பேருந்தின் நடத்துநர் அவள் கையில் டிக்கெட்டைத் திணித்தார். தினமும் இதே பேருந்தில் செல்வதனால் அதில் வேலைசெய்யும் நடத்துநர்கள் அனைவருமே ஆதிரைக்கு அறிமுகமானவர்கள் தாம். நடத்துநரின் கேள்விக்குப் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு டிக்கெட்டிற்கான பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு டிக்கெட்டைப் கைப்பையில் பத்திரப்படுத்தினாள் ஆதிரை.

    சம்பவங்களைத் தொடர்வதற்கு முன் கதாநாயகியைப் பற்றி வாசகர்களுக்கு ஓர் சிறிய அறிமுகம்.

    நம் கதையின் நாயகி, மார்கழி மாதம் நிறைந்த பௌர்ணமித் திதியில் வரும் திருவாதிரைத் திருநாளில் அவதரித்ததால்……ஸாரி..பிறந்ததினால் அவளுக்கு  ஆதிரை என்று பெயரிட்டு அன்பும், அறிவும் ஊட்டி வளர்த்து வந்தனர் அவள் பெற்றோர். அழகிய முகவெட்டும், துறுதுறுவென்ற கண்களும், நீண்ட, சுருண்ட கார்கூந்தலும், அளவான உயரமும், அதிக வெளுப்போ, கருப்போ இல்லாத மாந்தளிர் வண்ணமும் கொண்ட அவளை அழகியாக ஒப்புக்கொள்வதில் யாருக்கும் தயக்கம் இருக்காது.

    மிகச் சிறந்த தமிழறிஞராகிய அவள் தந்தை ’எழிலரசன்’ அவளுக்குச் சிறுவயதிலேயே தொல்காப்பியம், திருக்குறள், பகுத்தறிவுச் சிந்தனைகள் எனப் பலவற்றையும் ஊட்டி அவளின் அறிவை வளப்படுத்தி ’அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது’ என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கினார். இவ்வாறு ஆதிரை நாளொரு விளையாட்டும் பொழுதொரு குதூகலமுமாகத் தன் பள்ளிப் பருவத்தை இன்பமாய்க் கழித்தாள். கல்லூரிப் பருவமும் களிப்புடனேதான் சென்றது.

    கணினி அறிவியல் படித்தால் தான் எதிர்காலம் என்ற மாயை எழுந்த காரணத்தால் அவளும் கணினியிலேயே உயர்கல்வி பயின்றாள். இதோ… இப்போது ஓர் தனியார்க் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் விரிவுரையாளராய்ப் பணியாற்றுகின்றாள்.

    நடிகர் வடிவேலு சொல்வதுபோல் “எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்திச்சு” ஆதிரைக்குக் திருமணப் பருவம் வரும்வரை. இப்போதோ….வீட்டில் ஆதிரையின் தாய் எப்போது பார்த்தாலும் தன் மகளின் திருமணத்தைப் பற்றியே பேசுகின்றாள். இவள் வயதொத்த பெண்களில் யாருக்காவது திருமணம் என்று வீட்டிற்குப் பத்திரிகை வந்துவிட்டால் போதும்….தன் மகளுக்கு இன்னும் திருமணம் கூடிவரவில்லையே எனப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றாள். ஆனால், இந்தப் புலம்பலையெல்லாம் ஆதிரை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு வரமா? சாபமா? என்று திருமணமாகித் தன் அடையாளத்தைத் தொலைத்த பல பெண்களைப் பார்க்கும்போதும் ஆதிரை எண்ணமிடுவாள். தன் தாய், தந்தையரும் தன்னை அருமையாக வளர்த்ததை மறந்து இப்போது வேறோர் வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே என அவள் வருந்துவதுண்டு.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் ‘பெண்பார்க்கும் படலங்கள்’ ஆதிரையின் பொறுமைக்குப் பெரும் சோதனையாகவே இருந்துவருகின்றன. இதுவரை இரண்டு இடங்களிலிருந்து வந்து ஆதிரையைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். சென்றவர்களிடமிருந்து இன்றுவரை எந்த ஒரு தகவலும் இல்லை.

    பெண்பார்க்க வந்துசென்ற இரு பையன்களுமே மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் தாம். முதலில் வந்த பையன் தன் தாய், தந்தை, சகோதரி சகிதம் பெண் பார்க்க வந்திருந்தான். வந்தவன் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தான். எல்லாக் கேள்விகளையும் அவன் தாயும், உடன் வந்திருந்த அவன் சகோதரியுமே கேட்டுக் கொண்டிருந்தார்கள் (இதுதான் பெண்ணுரிமையோ!). அவன் தந்தையும் வாய் திறக்கவில்லை.  நல்லவேளையாகச் சாப்பிடும்போது தந்தையும், மகனும் வாய் திறந்தார்கள். வந்தவர்கள் வீட்டை நன்றாகச் சுற்றிப் பார்த்தார்கள். எத்தனை கிரவுண்டு? எப்போது கட்டியது? என்று (வீட்டைப் பற்றிப்) பல உருப்படியான கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்து கொண்டார்கள் (ஏதோ வீட்டைத்தான் பார்க்க வந்தவர்கள் போல்!). வீட்டின் எளிமையான தோற்றமும், உயர்ந்த பதவியிலிருந்தாலும் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் மட்டுமே அணிந்து கொண்டிருந்த ஆதிரையின் தந்தை எழிலரசனின் எளிமையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இந்த வீட்டில் பெண் எடுத்தால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ!… ஊருக்குச் சென்றவுடன் உறவினர்களைக் கலந்துகொண்டு முடிவு சொல்கிறோம் என்று போனவர்கள் தான். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.

    அடுத்த மாதத்திலேயே இன்னும் ஒரு குடும்பம் வந்து ஆதிரையைப் பெண் பார்த்து விட்டுச் சென்றது. இந்த முறை மாப்பிள்ளைப் பையனையும் சேர்த்து ஏழெட்டு உருப்படிகள் வந்து இறங்கினர். வந்திருப்பது பெண் பார்ப்பதற்கா.. அல்லது கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடவா? என்று ஆதிரையின் பெற்றோர் மலைத்தனர். எனினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆதிரையின் தாய் வழக்கம்போல அவர்களை நன்றாகவே உபசரித்தாள். இந்தப் பையனும் மென்பொருள் பொறியாளனாகவே பணியாற்றுவதாய் ஆதிரை அறிந்தாள். இவனும் ஆதிரையை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தலைகுனிவதுமாக இருந்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை; ஒரு முடிவுக்கும் வந்தவனாகவும் தெரியவில்லை. இந்த கேலிக்கூத்தையெல்லாம் பார்த்த ஆதிரைக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. “ஏன்டா, பொண்ணப் பிடிச்சிருக்கா…இல்லையாங்கறத இப்பவே சொல்லேன்டா…ஏன் தலயக் குனிஞ்சுகிட்டு ஒக்காந்திருக்க…..கோழை” என்று தனக்குள் திட்டித் தீர்த்தாள்.

    இப்படிச் சமீபத்தில் நடந்த (அவளுக்குப் பிடித்தமில்லாத) நிகழ்ச்சிகள் பலவற்றை அவள் மனது பேருந்தில் அமர்ந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ‘ரீப்ளே’ செய்து கொண்டிருந்தது. அப்போது யாரோ தன் தோளைத் தொடவும், ஆதிரை தன் நினைவலைகளிலிருந்து மீண்டு நனவுலகிற்கு வந்து, யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். மேடம் …நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்திடுச்சு…நீங்க எறங்கலியா?” என்று தன்னிடம் படிக்கும் மாணவி ஒருத்தி கேட்கவும் விரைவாகப் பேருந்தை விட்டு இறங்கிக் கல்லூரி நோக்கி நடந்தாள்.

    கல்லூரியில், ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து மாணவி ஒருத்தியின் வினாத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த ஆதிரை, தன் அலைபேசி சிணுங்குவதைக் கண்டு அதனை எடுத்துப் பார்த்தாள். அது தன் தாய்தான் என்பதனை அறிந்து….. பழைய புராணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறாளே என்ற சலிப்போடு, ”ஹலோ!” என்றாள். எதிர்முனையில் ஆதிரையின் தாய் பதட்டத்தோடு பேசினாள்”, அம்மாடி ஆதிரை.! இன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்காரங்க ஏற்கனவே சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே நம்ம வீட்டுக்கு வராங்களாம். அப்படிப்பாத்தா.. மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் நம்ம வீட்டுல இருப்பாங்க….இப்ப பாத்து நீ காலேஜ் பசங்களுக்கு டெஸ்ட் குடுக்கணும்னு சொல்லிட்டு அங்க போய் ஒக்காந்திருக்கியேம்மா? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு? எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. உடனே கெளம்பி வாம்மா. இப்பவே மணி 11:30 ஆகுது. ஒங்க அப்பாவுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கேன். ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குது, இருந்தாலும், அத கான்சல் பண்ணிட்டு ஒண்ணரை மணிக்கே வீட்டுக்கு வந்துடறேன்னு சொல்லிட்டார்…..” என்று பட படவெனப் பொரிந்து கொட்டினாள்.

    அம்மாவை நினைக்கையில் ஆதிரைக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தப் ”பெண்பார்க்கும் படலங்களும்” அதனால் பெண் வீட்டார்க்கு ஏற்படும் மன உளைச்சலும், செலவுகளும் கொஞ்சமா…நஞ்சமா? இதனை ஏன் ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் உணர்வதில்லை?

    என்னதான் சமதர்மம், சமநீதி என்று ’மைக்’ பிடித்துக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாலும் நடைமுறையில் அவை சாத்தியம் இல்லாமலே போவதேன்? ஒரே செயலுக்கான அணுகுமுறையும், அளவுகோலும் ஆணுக்கொன்றாகவும், பெண்ணுக்கொன்றாகவும்தானே இன்றுவரை இருந்துவருகின்றது….என்று சிந்தனைவலை மீண்டும் மனத்தில் கூடுகட்ட ஆரம்பிக்க…அந்தச் சிந்தனையைக் கலைத்து, ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று முடிவெடுத்து எழுந்தாள் ஆதிரை.

    அரை நாள் விடுப்புக் கடிதம் (leave letter) ஒன்றை எழுதிமுடித்து, பிரின்சிபால் இருக்கும் அறைக்குச் சென்று அவரிடம் நீட்டினாள். நல்ல வேளையாக அவரும் தேவையற்ற கேள்விகள் எதனையும் கேட்காமல் ஆதிரையைப் போக அனுமதித்தார். நல்ல சூடிகையான பெண் என்று அவளிடம் அவருக்குப் எப்போதும் பிரியம் உண்டு.

    மீண்டும் வீடு நோக்கிய தன் பேருந்துப் பயணத்தைத் தொடங்கிய ஆதிரை ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவளாக பேருந்தை விட்டு இறங்கினாள். மாப்பிளை வீட்டாருக்கு இனியும் தன் தாய் ”சொஜ்ஜி, பஜ்ஜி உபசரணைகள்” செய்துகொண்டிருக்க வேண்டாம் என்று எண்ணமிட்டபடி வீடு நோக்கி நடந்தாள். ஆதிரை வாசல் கேட்டைத் திறக்கவும், அவள் தாய் அவளை நோக்கி விரைவாக வந்து, ”வாம்மா…! சீக்கிரம் சாப்பிட்டுட்டு ரெடியாயிடு, அவங்கல்லாம் வந்துடுவாங்க…லேட் பண்ணாதே” என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.

    தன் தாயின் முகம் வியர்த்திருப்பதைப் பார்த்த ஆதிரை, அம்மா வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய டிபன் உபசாரங்களுக்காகத்தான் இப்படி வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையறிந்து, ”சரிம்மா, இதோ சாப்பிடறேன்” என்று சொல்லி உடனே போய்ச் சாப்பிட உட்கார்ந்தாள். ”இந்தா…இந்த கேசரி எப்படியிருக்குன்னு கொஞ்சம் டேஸ்ட் பாத்துச்சொல்லு!” என்ற தாயின் வேண்டுகோளை நிராகரித்து…..”எல்லாம் நல்லாத்தான் செஞ்சிருப்பீங்கம்மா…உங்க சமையல் திறமையப் பத்தி இனிமேதான் நான் புதுசாத் தெரிஞ்சுக்கணுமா என்ன?” என்று கேட்டுவிட்டு, “நம்ம வீட்டுக் கேசரி ருசிக்காக யாரும் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்ல… அவங்களோட எதிர்பார்ப்பு என்னங்கறது அவங்களுக்குத் தானே தெரியும்” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டு உணவினை உண்டு முடித்தாள்.

    வழக்கம்போல் தன்னை மிகவும் எளிமையாகவே அலங்கரித்துக் கொண்ட ஆதிரை கண்ணாடிமுன் போய் நின்றாள். அப்போது அவள் மனதிற்குள்ளிருந்து ஒரு குரல்.. ”ஆதிரை! இப்படிப் ’பெண்பார்க்கும் படலத்திற்காக’ நீ அரிதாரம் பூசிக்கொள்வதும், அன்ன நடை நடப்பதும் இதுவே கடைசி முறையாயிருக்கட்டும்” என்று ஒலித்து மறைந்தது.

    பிற்பகல் மணி 2:30. மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வரவில்லையே என்று ஆதிரையின் தந்தை வாசலுக்குச் செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தார். வீட்டில் எல்லாருடைய இதயங்களும் ஏதோ ஓர் பரபரப்பினாலும், சிறிது பயத்தினாலும் வழக்கத்தை விடச் சற்று வேகமாகவே துடித்தன. நல்லவேளை….அதற்கு மேலும் தாமதம் செய்யாமல் 2:45 மணி வாக்கில் மாப்பிள்ளை வீட்டார் வீட்டினுள் நுழைந்தனர்.

    தன் தாயும் தந்தையும் அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பதும், தங்கள் தாமதத்திற்குத் தாங்கள் வந்த பேருந்துதான் காரணம் என்று வந்தவர்கள் கூறிக்கொண்டிருந்ததும் தனியறையில் அமர்ந்திருந்த ஆதிரையின் காதிலும் விழவே செய்தது.

    சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்தபின் ஆதிரையின் தாய் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து ஆதிரையை பார்த்து “வாம்மா! அவங்கல்லாம் உன்னப் பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள். இப்போது ஆதிரைக்கும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்து மாப்பிள்ளை வீட்டாரை நிமிர்ந்து பார்த்து ஓர் செயற்கைப் புன்னகை உதிர்த்தாள்.

    மாப்பிள்ளைப் பையனின் அம்மா ஆதிரையை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து, ”வாம்மா…வந்து என் பக்கத்துல ஒக்காரு” என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். விலையுயர்ந்த பட்டுப் புடைவையும், முழங்கை வரையில் குலுங்கிய தங்க வளையல்களும், கழுத்தில் ஜொலித்த கல் நெக்லஸுமாகத் தன்னை ஓர் மணமகள்போல் அலங்கரித்துக் கொண்டுவந்திருந்தாள் பையனின் அம்மா. அரக்கு நிற க்ரேப் சில்க் புடைவையும், கழுத்தில் ஒரே ஒரு சங்கிலியும் அணிந்திருந்த ஆதிரையைக் கண்டதும் அவள் முகத்தில் அவ்வளவாக மலர்ச்சியில்லாததை ஆதிரை கவனிக்கத் தவறவில்லை.

    அந்த அம்மாள் பின்பு மெதுவாக ஆதிரையைப் பார்த்து “எங்கம்மா வேல செய்யற? என்ன சம்பளம்?” என்று கேள்விகளை ஒவ்வொன்றாக வீசினாள். ஆதிரையும் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். பின்பு தன்னுடைய தாய்”, பையன் எந்தக் கம்பனியில (company) வேலை செய்யறார்?” என்று கேட்ட கேள்விக்குப் பையனின் தாயே பதில் சொல்லத் தொடங்கினாள். இன்று பெண்பார்க்க வந்திருக்கும் பையனும் ஒன்றுமே பேசவில்லை. சொல்லிவைத்தாற்போல் இதுவரைத் தன்னைப் பெண்பார்க்க வந்த பையன்களில் ஒருவர் கூடப் பேசாததும், அவர்களின் தாய்மார்களே பேசிக் கொண்டிருந்ததும் ஆதிரைக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்தன.

    “இப்படியே போய்க்கொண்டிருந்தால் பெண்ணும், பையனும் ஒருவர் மனதை மற்றொருவர் அறிவதுதான் எப்படி?” என்று ஆதிரை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், “சரி! அப்ப நாங்க கெளம்பறோம்….சீக்கிரத்தில ஃபோன்ல தகவல் சொல்றோம்”….என்று பையன் வீட்டார் எழவும்….ஆதிரையும் எழுந்தாள். ”கொஞ்சம் இருங்க…..நீங்க என்னைப் பிடிச்சிருக்கா…இல்லையான்னு ஒரு முடிவும் சொல்லாமலே கெளம்பறீங்களே…?” எனக் கேட்டாள். பையன் வீட்டார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்தனர். ஆதிரையின் தாய் உடனே கோபமாக ஆதிரையைப் பார்த்து, ”ஏய்..ஆதிரை என்ன இது அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி…அவங்கதான் ஊருக்குப் போனப்பறம் சொல்றோங்கறாங்கல்ல…பேசாம இரு” என்று அதட்டவும், ஆதிரை சற்று ஆவேசமானாள். ”ஊருக்குப் போய் முடிவு சொல்றதுக்கு இதுல என்னம்மா இருக்கு? பெண்ணை இவங்களும் இவங்க பையனும் பாத்தாச்சு…. பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறத இப்பவே சொல்ல என்னத் தயக்கம்?” என்று கேட்டுவிட்டுப் பையனைப் பார்த்தாள். அவன் பேந்தப் பேந்த விழித்தபடி ஆதிரையைப் பார்க்க, ஆதிரை நேரடியாகவே அவனைக் கேட்டாள். ”உங்க அம்மா, அப்பா இங்கேயே சொல்ல யோசிக்கிறாங்க போலிருக்கு. நாம இந்தத் தலைமுறை….எல்லா விஷயத்திலேயும் நம்மள மாத்திகிட்டு வர்றோம்….அப்புறம் பெண் பார்க்கும் விஷயத்தில் மட்டும் ஏன் பழைய பஞ்சாங்கமா இருக்கணும்..? உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா….பிடிக்கலையா…? எதுவானாலும் சரி…..உங்க முடிவை இப்பவே சொல்லிடுங்க… வீணா நாளக் கடத்துவானேன்?” என்று அதிரடியாய்க் கேட்க அவன் இவற்றையெல்லாம் எதிர்பார்க்காதவனாய் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தன் தாயின் முகத்தையும், தந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்களும் இப்படி ஓர் சூழ்நிலையை இதுவரை சந்திக்காத காரணத்தால் சிலையாய் நின்றனர்.

    ஆதிரை தொடர்ந்தாள்….”பெண் பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறதக் கூடத் தானா சொல்லத் தெரியாம…அதுக்குக்கூட அம்மாவையும், அப்பாவையும் கேக்கற உங்க பையன், எந்த விஷயத்திலும் சொந்தமா முடிவெடுக்கற சக்தியோ, திறமையோ இல்லாதவராத்தான் இருக்கணும். பெண் பாக்க வந்தா சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும், தங்கள் முடிவைச் சுதந்திரமாச் சொல்லவும் அனுமதிங்க. இனிமேலாவது… பெண் பாக்கப் போற இடத்தில உங்க விருப்பத்தையும், முடிவையும் உடனே சொல்லிப் பெண் வீட்டுக்காரங்களுக்கு ஏற்படற வீணான மன உளைச்சலைத் தவிர்க்கப் பாருங்க…” என்று பேசி முடித்தாள். அவர்கள் பதில் பேசாமல் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வெளியேறினர்.

    ஆதிரையை எரிப்பது போல் பார்த்தாள் அவள் தாய். ”உனக்கு என்னாச்சு இன்னிக்கு? ஏன் இவ்வளவு அநாகரிகமா நடந்துகிட்டே?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள். ”எதும்மா அநாகரிகம்…? நாகரிகம் எதுன்னு சுட்டிக்காட்டுறதுக்குப் பேரா அநாகரிகம்?” என்று கேட்ட ஆதிரைக்கு இப்போது அவளுடைய அப்பா ஆதரவுக்கரம் நீட்டினார். “ஆதிரை நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லம்மா. அறிமுகம் இல்லாதவங்க முன்னால ஒரு அலங்கார பொம்மை மாதிரி வந்து நிக்கறதுன்னா.. அது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சங்கடமான விஷயங்கறது எனக்கு நல்லாப் புரியுதும்மா. அதுலயும் மாட்டோட பல்லப் புடிச்சுப் பாக்கற மாதிரிப் பாத்துட்டு, ஒரு முடிவும் சொல்லாமப் போறதுங்கறது நாகரிகம் இல்லாத நடைமுறையாத்தான் இருந்துட்டு வருது” என்றார்.

    புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போலச் சிறிது நேரத்திற்குப் பின் ஆதிரையின் வீட்டில் இயல்புநிலை மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது.

    தன் அறைக்குச் சென்று தான் வழக்கமாகச் செய்யும் கணினி சம்பந்தமான வேலைகளில் மூழ்கிய ஆதிரை, திடீரென்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். ”அம்மா..அப்பா ரெண்டு பேரும் இங்க உடனே வாங்க” என்று உற்சாகக் குரல் கொடுத்த அவளைக் காணும் ஆவலில் அவளின் தாயும், தந்தையும் அவள் அறைக்கு விரைந்து வந்தனர். ஆதிரை அவர்களைக் கண்டதும்…..”அம்மா..!, நான் போன வாரம், சென்னையில இருக்கற ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த இண்டர்வியூக்குப் போயிட்டு வந்தேன் இல்லையா? அடுத்த வாரமே வேலையில சேரச் சொல்லி அவங்ககிட்டேயிருந்து எனக்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் (appointment letter) வந்திருக்கு” என்றாள். அவள் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. சமீபத்தில் அவ்வளவு உற்சாகத்தோடு தன் மகளைக் கண்டிராத ஆதிரையின் தாய் அவள் முகத்தையே மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, ”அம்மா! எனக்குக் கொஞ்சம் கேசரி கொண்டுவாங்க.. உடனே சாப்பிடணும்போல இருக்கு” என்றாள் ஆதிரை.

     

     

     

     

     

    Share
  • மஞ்சளைப் போற்றுதும்!

    மேகலா இராமமூர்த்தி

    இந்தியா ஆன்மிகத்தில் உலக நாடுகள் அனைத்திற்கும் முன்னோடியாய் விளங்குவதுபோல் அறிவியலிலும் விளங்கி வருகின்றது எனலாம். ஆம்..நம் முன்னோர்கள் ஆன்மிகத்தையும், அறிவியலையும் சார்ந்தே தம் நடைமுறை வாழ்வைச் செம்மையாக நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு எத்தனையோ சான்றுகளைச் சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் மங்கலத்தின் அடையாளமாக நம் இந்தியர்கள் போற்றுகின்ற மஞ்சள்.

    மஞ்சள் இல்லையேல் ஆன்மிக நிகழ்வுகளோ, பூசைகளோ இல்லை என்னும் அளவிற்கு எல்லாவற்றிலும் அஃது நீக்கமற நிறைந்துள்ளது. காட்டாக, மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்துத்தான் பல்வேறு இறைபூசைகளையும் நாம் தொடங்குகின்றோம். கோயில்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் மஞ்சள்காப்பு சார்த்துகின்றோம். மழை தெய்வமான மாரியம்மன் கோயில்களில் அன்னைக்கே நாம் ’மங்களகரமான’ மஞ்சள் உடையைத்தான் பெரும்பாலும் அணிவித்து அழகு பார்க்கின்றோம்.

    நாம் கொண்டாடும் விழாக்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் மஞ்சள் கொத்தையும், இஞ்சிக் கொத்தையும் பொங்கற் பானையைச் சுற்றிக் கட்டியபின்பே பகலவனுக்குப் பொங்கலைப் படையலிடுகின்றோம். இரு மனங்கள் இணையும் திருமண விழாவிலும் மங்கல நாணை மஞ்சள் தடவி மெருகேற்றி ’மஞ்சள்கயிறு’ என்று அதற்குப் பெயர் கொடுத்துப் பெருமை கொள்கின்றோம். இவ்வாறு விழாக்களிலும், பண்டிகைகளிலும் அரசியாகக் கோலோச்சும் மஞ்சளின் மருத்துவப் பயன்களையும் அறிந்தே நம் முன்னோர் அதனை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தியுள்ளனர் எனலாம்.

    இனி, மஞ்சளின் வகைகள் குறித்தும், அவற்றின் உபயோகங்கள் குறித்தும் சற்றுக் காண்போம்.

    மஞ்சளில் முட்டா மஞ்சள், குட மஞ்சள், குரங்கு மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள் எனப் பல வகைகள் இருப்பினும், பெரும்பாலும் நம் மக்கள் உபயோகிப்பது முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றையே. இவற்றில் முதலில் சொல்லப்பட்ட முட்டா மஞ்சள் உருண்டையாக இருக்கும். இது பூசுமஞ்சளாக உடலில் பூசிக் குளிப்பதற்கே பெரிதும் பயன்படுகின்றது.

    இரண்டாவதாகக் கூறப்பட்ட கஸ்தூரி மஞ்சளையும் உடலிற்குப் பூசிக் குளிக்கலாம். நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. நம் தமிழகப் பெண்கள் முன்பு இவ்விரு மஞ்சள் வகைகளையும் உடலிற்குப் பூசிக் குளித்தனர். (இப்போது அவ்வழக்கம் அருகிவருவது வருந்தத்தக்கது.) இதனால் பல்வேறு வகையான தோல்நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தன. சோரியாஸிஸ் (psoriasis), படை (ezema), தடிப்புகள் (rashes) போன்ற தோல்நோய்கள் உடலில் பரவாமல் இருந்தன. இவ்வளவு ஏன்…..அம்மை நோய்களால் தோலில் ஏற்படும் வடுக்களையும் (scars), பருக்களின் தொல்லைகளையும் கூடத் தொடர்ந்து மஞ்சள் பூசிக்குளிப்பதன் வாயிலாக நீக்க முடிந்தது. முதுமையைத் தள்ளிப்போடவும் (delay aging) இளமைப் பொலிவைத் தக்கவைக்கவும் மஞ்சள் உதவுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன.

    மஞ்சள் பூசிய (அன்றைய) மங்கையரின் எழில்முகம் மங்களகரமான தோற்றப் பொலிவைத் தந்து ஆடவரையும் மயக்கியது. அதனால்தான் அவர்கள் “மஞ்சள் முகமே வருக! மங்கல விளக்கே வருக!” எனப் பாட முடிந்தது. இப்போது மஞ்சள்பூசும் வழக்கம் அருகியும், அற்றும் போய் வருவதால் (இன்றைய) ஆண்கள் பெண்களைப் பார்த்து “ஃபேர் அண்ட் லவ்லியே (fair and lovely)…..குண்டு மல்லியே!” என்று மாற்றிப் பாடவேண்டியுள்ளது.

    மூன்றாவதாகக் குறிக்கப்பட்ட விரலி மஞ்சளே சமையலுக்குப் பயன்படும் கறி மஞ்சளாகும். மஞ்சளில் காணப்படுகின்ற முக்கிய வேதிப்பொருளான குர்குமின் (curcumin) பல்வேறு அற்புதமான மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

    நம் தமிழகத்தில் மஞ்சள் சேர்க்காத உணவுத் தயாரிப்பே இல்லை என்னும் அளவில் எல்லாவகைச் சமையலிலும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர் நம் மக்கள். அஃது மிகுந்த பாராட்டிற்குரியது. உணவின் மணத்தையும், நிறத்தையும் கூட்டும் மஞ்சள் சாம்பார், பொறியல், கூட்டு, அவியல் எனச் சைவ உணவுகளாகட்டும், மீன், இறைச்சி முதலிய அசைவ உணவுகளாகட்டும் எல்லாவற்றிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உணவில் மஞ்சளைச் சேர்ப்பதினால் அவ்வுணவுப் பொருள்களிலுள்ள உடலுக்குத் தீங்குவிளைவிக்கும் கண்ணிற்குப் புலப்படா நுண்ணுயிரிகள் (viruses and bacteria) முற்றிலும் அழிக்கப்படுகின்றன என்பதனை இன்றைய மருத்துவ அறிவியல் ஆமோதிக்கின்றது. இதனை ஈராயிரம் (2000) ஆண்டுகட்கு முன்பே அறிந்து பயன்படுத்திவரும் நம் மக்களின் பேரறிவு போற்றிப் புகழத்தக்கது.

    மஞ்சளின் சர்வரோக நிவாரணத் தன்மையைக் கண்ட மேற்கத்திய நாடுகள் அதனை வியந்து பாராட்டுகின்றன. அமெரிக்காவின் மிசிசிபி பல்கலைக்கழக மருத்துவ மையம் (University of Mississippi Medical Center) 1995-ஆம் ஆண்டு மஞ்சளின் அற்புதத் தன்மையை அறிந்து மஞ்சளுக்கான பிரத்யேகக் காப்புரிமையைப் (patent) பெற்றது. (பின்பு இந்தியா தாமதமாக விழித்துக்கொண்டு ’மஞ்சள் எமதே’ என மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றது வேறு கதை.)

    இனி மஞ்சளின் மருத்துவப் பயன்பாடுகள் சிலவற்றைக் காண்போம்.

    மிகச் சிறந்த கிருமிநாசினியான (antibiotic) மஞ்சள் புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் சமீபகாலமாக அதிக அளவில் மேலைநாட்டவரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் மஞ்சளின் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் (anti-cancer property) மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது.

    அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (UCLA’s Jonsson Comprehensive Cancer Center) நிகழ்ந்த ஆராய்ச்சியில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பரவும் புற்றுநோய்ச் (head and neck cancer) செல்களை அழிப்பதிலும், புற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதிலும் மஞ்சளிலுள்ள குர்குமின் முக்கியப் பங்காற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல், பெருங்குடல், மார்பகம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் மஞ்சளின் புற்றுநோய் ஒழிப்புத்திறன் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

    மஞ்சளின் மற்றொரு முக்கிய மருத்துவ குணமாகக் கருதப்படுவது உடலில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கும் குணமே (anti-inflammation property). அரிசோனா பல்கலைக்கழகத்தில் (University of Arizona) எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியைக் (rheumatoid arthritis) குறைக்கவும், மேலும் அதிகமாகாமல் தடுக்கவும் மஞ்சள் உதவுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அதுபோலவே, மனிதனின் ’தலைமைச் செயலகமான’ மூளையிலுள்ள செல்தொகுப்பில் ஏற்படுகின்ற அழற்சியாலும், ஒருவித புரதப் படிவினாலும் (hyperphosphorylated tau protein) மறதிநோயான அல்சைமர் (Alzimer disease) ஏற்படுகின்றது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மூளைச் செல்களின் அழற்சியையும், புரதப் படிவினையும் தடுப்பதிலும் மஞ்சளிலுள்ள குர்குமின் முக்கியப் பங்காற்றுகின்றது என்று புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மஞ்சளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதனால்தான் இந்தியாவிலுள்ள முதியோர்கள் அதிக அளவில் அல்சைமர் போன்ற மறதிநோய்கட்கு (மேல்நாட்டவர்போல்) ஆட்படவில்லை எனத் தோன்றுகின்றது.

    மஞ்சளின் மற்றொரு குறிப்பிடத்தக்க மருத்துவப் பண்பு, உடலிற்குத் தீங்கிழைக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளைத் (free radicals) தடுத்து அவற்றிடமிருந்து உடலைக் காப்பதே (antioxidant). இப்பண்பினால் இதயநோய்களையும், நீரிழிவு (diabetes mellitus), முதுமை காரணமாகக் கண்களில் ஏற்படும் பல்வேறு நோய்கள் (macular degeneration, cataract, etc.), இரத்தம் உறைதல் (blood clot), கை, கால்களைப் பலவீனமாக்கும் மற்றும் அவற்றின் செயல்திறனைப் பாதிக்கும் பார்கின்சன் நோய் (Parkinson Disease) போன்ற பல நோய்களின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே மஞ்சள் தடுத்துவிடுகின்றது எனலாம். உடலில் கெட்ட கொழுப்பு (bad cholesterol) சேராமல் தடுப்பதிலும் மஞ்சளின் பங்கு முக்கியமானது.

    மஞ்சள்பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு (1 teaspoon) சாப்பிடுவதோடு, உணவுக் கட்டுப்பாட்டையும் (diet control) மருத்துவர் கூறுவதுபோல் கடைப்பிடித்தால் உடல் எடை விரைவில் குறையும் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தொழுநோயைத் தடுக்கவும் மஞ்சள் உதவுவதாகத் தெரிகின்றது.

    அதுமட்டுமா? குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற நோய்களைத் தீர்ப்பதற்கும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த பாலில் ஒரு சிட்டிகை (a pinch) மஞ்சள்பொடியைச் சேர்த்துக் கொடுத்தால் தொண்டைப் புண், இருமல் முதலியவை குணமாகும். மஞ்சளைத் தீயில் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் மூக்கடைப்பு, சளி, தலைவலி போன்றவை குணமாகும்.

    மஞ்சளை நீரில் கலந்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும் என நம்பப்படுகின்றது. கை, கால்களில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்துத் தடவலாம். மஞ்சளைத் தேங்காயெண்ணெயிலோ அல்லது நல்லெண்ணையிலோ குழைத்தும் காயங்களுக்குப் போடுவதுண்டு.

    பல்வலி ஏற்படும்போது வலியுள்ள பல்லில் சிறிது மஞ்சள்பொடியை வைத்து தேய்த்தால் (massage) பல்வலி தீரும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். வயிற்றுப் போக்கைத் (diarrhea) தடுக்கவும் மஞ்சள் பயன்படுகின்றது.

    அடிபட்டதனால் ஏற்படும் புண், நீரில் அதிகநேரம் நிற்பதனால் ஏற்படும் சேற்றுப்புண் ஆகியவற்றிற்கு மஞ்சளை இழைத்துப் போடுவது நல்ல பலன் கொடுக்கும்.

    இப்படி மஞ்சளின் பயன்களைப் பட்டியலிட்டால் அவை எண்ணிலடங்கா. நம் இந்திய மண்ணின் சொத்தான மஞ்சள், இயற்கை அன்னை நமக்கு வழங்கிய அருட்கொடையாகும். அழகு சாதனமாகவும், முதுமையை விரட்டும் காயகல்பமாகவும், அற்புதமான மருந்தாகவும் பயன்பட்டு வருகின்றது இம்மஞ்சள்.

    மண்ணைத் தோண்டத் தோண்ட இயற்கை வளங்கள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல் மஞ்சளை வைத்து ஆய்வுகள் செய்யச் செய்ய அஃது எல்லா நோய்களையும் நீக்கக் கூடிய ஒப்பற்ற மாமருந்து என்பது மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது. (எனினும் சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் உடையோர் (kidney and gallbladder stones), நாட்பட்ட வயிற்றுப் புண்ணை (chronic stomach ulcer) உடையோர், மற்றும் இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துண்போர் (blood-thinning medications like Aspirin, Coumadin etc.) மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு மஞ்சளை உபயோகிப்பது சாலச் சிறந்தது.)

    முத்தாய்ப்பாக நாம் சொல்ல விரும்புவது ஊனுடம்பாகிய ஆலயத்தினுள் புக எத்தனிக்கும் மூப்பு, பிணி போன்ற தீய சக்திகளைத் தடுக்கும் அரணாய் விளங்குவது மஞ்சளாகும். அயல்நாட்டவரும் போற்றும் நம் மஞ்சளின் மகிமையை நாம் உணர்ந்து பயன்படுத்துவோம். நோயின்றி வாழ்வோம்.

    இறுதியாக மஞ்சளைப் ’போற்றிப் பாடி’ நாம் கட்டுரையை நிறைவு செய்வோம்.

    ”கொஞ்சும் எழில்திகழ் மேனியைப் பெற்றிட

    அஞ்சி நோயெல்லாம் நமைவிட்டு ஓடிட

    நெஞ்சம் இனிக்கும்நல் மங்கலம் தங்கிட

    மஞ்சளைப் போற்றுதும் மஞ்சளைப் போற்றுதும்!”

    படங்களுக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Turmeric

    http://www.picsearch.com/pictures/Food%20!!%20Drink/Spices/Spices%20Tr%20-%20W/Turmeric.html

    Share
  • எது கவிதை?

    மேகலா இராமமூர்த்தி

    சிந்தனை விதையைச் சிந்தையில் விதைத்தால்
    எண்ண மென்றொரு எழுச்சியின் விளைவாய்
    வந்து விழுந்திடும் வார்த்தைகள் அன்றோ
    சந்தக் கவிதையாய் மலர்ந்திடு கின்றது!
    சொந்தக் கருத்தைச் சுதந்திர மாக
    வழங்க வாய்த்திட்ட வடிவமே கவிதை!
    நொந்த மனங்களின் காயம் ஆற்றிடும்
    மாயம் செய்ய வல்லது கவிதை!
    கருத்து மலர்களைக் கொத்தாய்ச் சுமந்து
    படிப்போர் உளத்தில் நல்மணம் பரப்பியே
    விருப்பத் துடனே படிக்கச் செய்திடும்
    ஆற்றல் கொண்டது அன்றோ கவிதை?
    வரிகளை மடித்து எழுதிடு வதனால்
    வருவன வெல்லாம் கவிதைகள் ஆமோ?
    புரட்சிச் சிந்தனைப் புகுத்திடும் நல்ல
    புதுக் கவிதைகள் புனைவதே சிறப்பு!
    விருத்தம் எழுதிட இயல வில்லையா?
    வஞ்சிப் பாவும் அஞ்சிடச் செய்குதா?
    வருத்தம் வேண்டாம்! வாடுதல் வேண்டாம்!
    சிரமம் தன்னில் சிக்கவும் வேண்டாம்!
    சொல்லும் கருத்தில் தெளிவு இருந்திட்டால்
    சோர்வைக் போக்கும் மருந்தாய் அமைந்திட்டால்
    வெல்லும் மக்கள் உளந்தனை என்றும்
    வீற்றி ருக்குமே என்றும் நிலையாய்!
    நல்ல கவிதையை நாளும் படைத்திடும்
    ”வல்லமை” உண்டு வாருங்கள் செய்வோம்!!

    படத்துக்கு நன்றி

    http://www.bnbforum.com/music-albums-f15/bharathiyar-audio-songs-by-unnikrishnan-t110.html

    Share
  • வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!….

    மேகலா இராமமூர்த்தி

    தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

    அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

     அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

    இனிப் பாடல்களுக்குச் செல்வோம்…

    தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே

    “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

    தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

    இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?

    இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றன ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன?

     ”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

    என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.

    வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

    இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஓர் தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்து ”உன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்…வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றது” என்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். சுவையான அத்திருக்குறள் இதோ….

    ”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

    மறுவுண்டோ மாதர் முகத்து.”

    அத்தோடு விட்டானா? நிலவே…! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

    ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

    பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.

    இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.

    தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் “காதற் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்….

    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

    மடந்தையொடு எம்மிடை நட்பு.”

    மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

    அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்” என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? இதோ அக்குறட்பா…

    ”நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”

    இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. அவ்வரிகள் இதோ..

    “ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்….”.

    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் பேராசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.

    அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்று “நான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதே” என வருந்துகின்றாள்.

     ”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

    திங்களைப் பாம்புகொண் டற்று.”

    மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.

    “மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

    காலை அறிந்தது இலேன்.”

    அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.

    “நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்

    காதலர் நீங்கலர் மன்” என்கின்றது வள்ளுவம்.

    தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசிய நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,

    ”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

    நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.

    பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்” என வினவிக்கொள்கின்றாள்.

    ”துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

    இன்னும் இழத்தும் கவின்.”

    சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, வாழ்க! என வாழ்த்துகின்றாள். உடனேயே, யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?

    இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.

    “வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

    யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.

    தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது.) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.

    ”தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

    எம்மை மறைத்திரோ என்று.”  என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவப் பெருந்தகை.

    இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.

    படங்களுக்கு நன்றி: http://www.chennaimuseum.org/draft/gallery/03/03/modp2.htm#.

    http://www.indiapicks.com/Indianart/Main/Ravi_Varma_Gallery.htm

     

     

     

     

     

    Share
  • இதயக்கோயிலைக் காப்போம்!

    மேகலா இராமமூர்த்தி

    ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவையார். இத்துணை சிறப்பு வாய்ந்த இம்மானிடப் பிறவியிலே மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் தனித்தன்மை வாய்ந்தது; எந்த உறுப்பின் பணியையும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாதெனினும் அனைத்திலும் மேலாக நாம் எண்ணுவது நம் மூளையையும், இதயத்தையுமே அல்லவா? அதிலும் ’இதயம்’ என்ற சொல்லைத்தானே நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடிப் பயன்படுத்துகின்றோம்.

    இரக்கமில்லாதவனை “இதயமில்லாதவன்” என்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தவர்களை “இதய தெய்வம்” என்கின்றோம். ஆனால் நாம் இங்கே பேசப்போவது இதயத்திற்குப் பிடித்தமானவர்களைப் பற்றியோ அல்லது இதயமில்லாத நபர்களைப் பற்றியோ அல்ல, இதயத்தைப் பற்றியே.

    சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (World Health Organization) வெளியிட்ட அறிக்கையில், வரும் 2020-இல் இந்தியாவில் அதிகப்படியான மரணங்கள் இதயநோய்களினாலேயே (cardiovascular diseases) ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆகவே இதயத்தைப் பற்றியும், அதனைப் பீடிக்கின்ற பல்வேறு நோய்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்ப்பதற்கு செய்யவேண்டுவன பற்றியும் நாமிங்கே சிந்திக்க இருக்கின்றோம்.

    முதலில் இதயத்தின் அமைப்பையும், அது செய்கின்ற பணிகள் குறித்தும் சுருங்கப் பார்ப்போம்.

    ஓர் பேரிக்காய் வடிவில் (pear-shaped) நம் கையளவினும் சற்றே பெரிய அளவுள்ள நம் இதயம் கிட்டத்தட்ட ஒரு பவுண்டு கனமுடையது. நம் உடல் முழுவதற்கும் தேவையான இரத்தவோட்டத்தைத் தருவதே (blood circulation) இதயத்தின் தலையாய பணி எனலாம். சாதாரணமாக ஒரு நோயற்ற மனித இதயம் நிமிடத்திற்குத் தோராயமாக 72 முறைகள் துடிக்கின்றது (heartbeat) எனலாம்.

    இதயம் நான்கு அறைகளைக் (four chambers) கொண்டுள்ளது. மேலுள்ள இரண்டு அறைகள் ஏட்ரியா (atria) அல்லது ஆரிக்கிள்கள் (auricles) எனவும், கீழுள்ள இரண்டு அறைகள் வென்ட்ரிகிள்கள் (ventricles) எனவும் அழைக்கப்படுகின்றன. அசுத்த இரத்தமானது (deoxygenated blood) உடலின் பிற பகுதிகளிலிருந்து சிரைகள் வாயிலாக (superior vena cava, inferior vena cava) இதயத்திலுள்ள வலது ஆரிக்கிளை வந்தடைகின்றது. பின்பு வலது வென்ட்ரிக்கிளை அடைந்து அங்கிருந்து நுரையீரலுக்குச் சென்று உயிர்க்காற்றைப் (oxygen) பெற்றுச் சுத்த இரத்தமாக மாறிப் பிறகு இடது ஆரிக்கிளை அடைகின்றது. அங்கிருந்து இடது வென்ட்ரிகிளுக்குச் செல்கின்றது. பின்பு உயிர்க்காற்று நிறைந்த சுத்த இரத்தத்தை மகாதமனியின் (aorta) வழியாக உடலின் பிற பாகங்களுக்குச் செலுத்தி உடலுக்குத் தேவையான சத்துக்களை (nutrients) வழங்கிக் கழிவுப் பொருள்களை வெளியேற்ற உதவுகின்றது.

    செப்டம் (septum) என்று சொல்லப்படுகின்ற சுவர் இதயத்தின் வலது பக்கத்தையும், இடது பக்கத்தையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதயத்தின் சுவர் மூன்றடுக்குகளால் ஆனது. அவை முறையே வெளியடுக்கு (epicardium), மையஅடுக்கு (myocardium) மற்றும் உள்ளடுக்கு (endocardium) ஆகியன.

    இனி, இதயத்தைத் தாக்குகின்ற பல்வேறு நோய்களைப் பற்றிப் பார்ப்போம். இதயநோய் என்றாலே பொதுவாக நம் நினைவுக்கு வருவது மாரடைப்பு (heart attack) மட்டுமே ஆகும். ஆனால் அதைத் தவிரவும் பல நோய்கள் இதயத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

    முதலாவது, இதயத் தசைகளுக்குச் சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் (coronary arteries) ஏற்படுகின்ற அடைப்புக்களினால் வரும் இதயநோய் (coronary artery disease). உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு (bad cholesterol) இத்தமனிகளில் படியும்போது  அவை அடைப்பை (plaque) ஏற்படுத்தி இந்த இரத்தக் குழாய்களின் அளவைக் குறுக்கி விடுகின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது. இதயத்தின் இயல்பான வேலைத்திறன் தடைப்படுகின்றது. இரத்தவோட்டம் தடைப்படுவதினால் இதயத்தில் வலி (angina), மூச்சுத் திணறல் (shortness of breath) ஆகியவை ஏற்படுகின்றன. இரத்தவோட்டம் முற்றிலும் தடைப்படும்போது மாரடைப்பு (heart attack) ஏற்படுகின்றது.

    மாரடைப்பிற்கான 5 முக்கிய அறிகுறிகள்:

    1. தாடை, கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் ஏற்படுகின்ற வலி (jaw, neck and back pain), அசௌகரியம் (discomfort) முதலியன.
    2. தலைசுற்றல் (lightheadedness), மயக்கம் (dizziness) மற்றும் உடல் பலவீனம் (fatigue).
    3. நெஞ்சுவலி (angina) அல்லது நெஞ்சில் ஏற்படும் அசௌகரியம்.
    4. கைகளிலோ, தோளிலோ ஏற்படும் வலி (arms and shoulder pain) அல்லது அசௌகரியம்.
    5. மூச்சுத்திணறல் (shortness of breath), வியர்த்துக் கொட்டுதல் (sweating) முதலியன.

    இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

    இரண்டாவது, இதயத் தசைகளின் மாறுபாட்டால் ஏற்படுகின்ற நோய் (cardiomyopathy). இந்நோய் இதயத் தசைகளை பலவீனப்படுத்தவோ (muscle weakness) அல்லது பெரிதாக்கவோ (muscle enlargement) செய்கின்றது. இந்நோயினால் இதயம் சுருங்கி விரிவதிலும், உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. இது பரம்பரை நோயாகவோ, ஏற்கனவே ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவோ வரலாம். கிருமித்தொற்றுக்களினால் (infection) கூட இந்நோய் ஏற்படக்கூடும். இந்நோயின் விளைவாக இதயம் முற்றிலும் செயலிழந்து போகும் அபாய நிலை ஏற்படும். அது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் ஐயமில்லை.

    இதன் அறிகுறிகள்:

    1. வேலை செய்யும்போது மூர்ச்சையடைதல் (breathlessness); சில சமயங்களில் ஓய்வாக இருக்கும்போது கூட மூர்ச்சையடைய வாய்ப்புண்டு.
    2. கால்கள், கணுக்கால்கள், பாதங்கள் ஆகியவற்றில் வீக்கம் (swelling).
    3. நீர்கோர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் வயிற்று உப்புசம் (bloating of the abdomen).
    4. விரைவான, தாறுமாறான இதயத்துடிப்பு (rapid, pounding and fluttering heartbeat).
    5. அயர்ச்சி, தலைசுற்றல், மயக்கமடைதல் (fatigue, lightheadedness, fainting).

    இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனே நாடுதல் நலம்.

    அடுத்ததாகக் கருத்தில் கொள்ளவேண்டிய இதயநோய் இயல்புக்கு மாறான ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (arrhythmia). இந்நோயினால் இதயத்தின் துடிப்பு இயல்பைவிட அதிகமாகவோ (tachycardia) அல்லது குறைவாகவோ (bradycardia) இருக்கக் கூடும். மேலும் இந்நோயினால் இதயவலி, மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நோய் உடனடியான ஆபத்து எதனையும் பொதுவாக விளைவிப்பது இல்லை. எனினும், இது போன்ற மிக விரைவான அல்லது மிக மெதுவான இதயத் துடிப்பு திடீரென்றோ அல்லது அடிக்கடியோ ஏற்பட்டால் உடனடியாய் மருத்துவ ஆலோசனை பெறுவது இன்றியமையாதது.

    மற்றொன்று, இதயத்தைச் சுற்றியிருக்கின்ற உறையில் ஏற்படுகின்ற அழற்சி (pericarditis). இது பொதுவாக கிருமித் தொற்றுக்களினாலோ (cardiac infection), இதய அறுவை சிகிச்சைகளுக்கு பிறகோ, அல்லது புற்றுநோய் போன்றவற்றினாலோ இதயத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

    இவை தவிர, பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயக் கோளாறுகள் (congenital heart defects) இன்னொரு பக்கம். இந்நோய்கள் பிறந்த குழந்தைகளையும், வளரிளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் கூடத் தாக்கக் கூடியது.

    மரபணுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அவற்றின் இயல்புக்கு மாறான தன்மை (genetic changes, chromosomal abnormalities) ஆகியவையே இத்தகைய நோய்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். இதன் அறிகுறிகளாக தோல் நீலநிறத்தில் இருத்தல் (cyanosis), விளையாட்டிலோ அல்லது உடற்பயிற்சியிலோ ஈடுபடும்போது எளிதில் களைத்துப் போதல், மூச்சுத்திணறல் ஏற்படல், இதயத்தைச் சுற்றியும், நுரையீரலிலும் நீர்கோர்த்துக் கொள்ளுதல், கை, கால்கள் வீங்கிப்போதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

    இப்படிப் பலதரப்பட்ட இதயநோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயநோய்களான (congenital heart defects) தவிர மற்றவகை இதயநோய்களை மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் பெருமளவில் தவிர்க்கலாம், தடுக்கலாம்.

    “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

    அதிர வருவதோர் நோய்.” என்கிறார் திருவள்ளுவர். ஆகவே நோய்களை வருமுன்னர்க் காத்தலே சாலச் சிறந்தது.

    பொதுவாகவே நம்முடைய உணவுப்பழக்கம் நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்றால் மிகையாகாது. மனிதனின் உடலுக்கு ஊறு விளைவிக்காத உணவை அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வைப் பெறலாம்.

    ”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

    ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்பது பொய்யாமொழி.

    ஆகவே உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகிய இரண்டையுமே கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்வது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமாக இதயத்தைக் காக்க இதய மருத்துவர்கள் (cardiologists) கூறும் அறிவுரைகள் சில. இவற்றைப் பத்து கட்டளைகளாகவும் (Ten Commandments) எடுத்துக் கொள்ளலாம்.

    1. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), ஓட்ஸ், சோயாபீன்ஸ், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (fiber-rich food) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    2. கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்வது நலம். குறிப்பாக உறை கொழுப்பு (saturated fat) என்று சொல்லப்படுகின்ற மிருகக் கொழுப்பு, முட்டை, மற்றும் எண்ணெய் வகைகளான தேங்காயெண்ணெய், பனையெண்ணெய் (palm oil) ஆகியவற்றை முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது நல்லது. மேற்குறிப்பிட்ட எண்ணெய்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணெயை (olive oil) உபயோகிக்கலாம்.

    Trans fat என்று சொல்லப்படுகின்ற கொழுப்பும் இதயத்திற்குத் தீங்கானதே. வறுத்த, பொரித்த (deep-fried food) உணவு வகைகள், ரொட்டிகள் (biscuits), கேக்குகள் (cakes) ஆகியவற்றில் இந்தக் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. எனவே இத்தகைய உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்த்திட வேண்டும்.

    1. நல்ல கொழுப்பாகக் கருதப்படும் omega-3 fatty acids நிறைந்த காய்கறிகளான கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை வகைகள், பரங்கி விதைகள், பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி வகைகள், மற்றும் மீன், மீன்எண்ணெய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். கொட்டை (nuts) வகைகளான  பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் (walnuts), வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு கைப்பிடியளவு தினமும் உண்ணலாம்.
    2. உணவில் உப்பின் (sodium) அளவைக் குறைத்து உண்பது நன்மை பயக்கும்.
    3. உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம். அதற்கு வாரத்தில் 5 நாட்களேனும், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.
    4. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களையும் (sugary drinks), சர்க்கரை நிறைந்த உணவுப் பண்டங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
    5. சுய சுகாதாரத்தில் (personal hygiene) அதிகக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகப் பற்களையும், ஈறுகளையும் சரியாகப் பேணவும், பராமரிக்கவும் வேண்டும். இதன்மூலம் இதயத்தில் ஏற்படுகின்ற பல்வேறு தொற்றுநோய்களைத் தவிர்க்க இயலும் என இதயநோய் மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.
    6. மன அழுத்ததைக் குறைக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற மூச்சுப் பயிற்சிகளையும், தியானம் போன்றவற்றையும் பழகுதல் நலம்.
    7. இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவற்றைக் கட்டாயம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
    8. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இருப்பின் அவை ’இதயத்தின் எதிரிகள்’ என்பதனை உணர்ந்து அவற்றிற்குப் ’பிரியாவிடை’ கொடுத்துவிட வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளைத் தவறாது கடைப்பிடித்தாலே இதயநோய்களையும், உடலைத் தாக்கும் வேறுபல நோய்களையும் தவிர்க்கலாம். ஆன்றோர்களும், மருத்துவ அறிஞர்களும் கூறுகின்ற வழி நடப்போம். நம் இதயமென்ற கோயிலை நோய்களின் பிடியிலிருந்து காத்து நலமாய் வாழ்வோம்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.cdc.gov/heartdisease/coronary_ad.htm                  http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

    தகவல்களுக்கு நன்றி:

    http://en.wikipedia.org/wiki/Human_heart

    http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

    http://www.emunix.emich.edu/~armstron/spmd201/anat06-08.pdf

    http://www.cdc.gov/heartdisease/other_conditions.htm

    http://health.nytimes.com/health/guides/disease/congenital-heart-disease/overview.html

    http://articles.timesofindia.indiatimes.com/2012-10-17/health/34523974_1_heart-diseases-diseases-study-chest-pain

    http://www.webmd.com/heart-disease/ss/slideshow-visual-guide-to-heart-disease

    Share
  • மகளிர் உடல்நலனும், கடமைகளும்!!

    மேகலா இராமமூர்த்தி

    “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய மங்கையர் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியன. பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்” பெற்ற இன்றைய பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். வீட்டைப் பராமரிப்பது முதல் விண்வெளிக்குச் செல்வது வரை அவர்கள் செய்து வரும் பணிகள் அளப்பரியன. ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடல்நலத்தில் போதுமான அக்கறை செலுத்துகின்றார்களா? என்றால், இல்லை என்றுதான் வருத்ததோடு சொல்லவேண்டியுள்ளது.

    திருமணத்திற்கு முன்பு வரை தாயும், தந்தையும் தங்கள் மகளின் உடல்நலனைக் கண்போல் காக்கின்றனர் (பெரும்பாலான குடும்பங்களில்). ஆனால் திருமணத்திற்குப் பிந்தைய காலகட்டம் தான் ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகத் திகழ்கின்றது என்பதில் இருவேறு கருத்துகட்கு இடமில்லை. ஏனெனில், பல்வேறு குடும்பப் பொறுப்புகள், குழந்தைப் பேறு, அலுவலகப் பணி, கணவனையும், வீட்டிலுள்ள பெரியோர்களையும் பேணுதல் போன்ற பல கடமைகளை அவள் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய முக்கியமான தருணத்தில் பெண்கள் தம் குடும்ப நலத்தோடு தங்கள் உடல் நலனிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

    ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது அனுபவ மொழி. அத்தகைய நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு முறையான, சரியான உணவு முறை அவசியம் என்பதனை எவரே மறுப்பர்? “உணவே மருந்து” என்பது ஆன்றோர் வாக்கு. தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,

    ”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்கின்றார். உண்ணும் உணவானது நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றது. அத்தகைய உணவின் தன்மை, உண்ணும் அளவு, காலம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு உண்ணுதல் நலம் பயக்கும்.

    உணவில் மாவுச்சத்து (carbohydrates), புரதச்சத்து (protein), மற்றும் கொழுப்புச்சத்து (fat) ஆகையவைப் போதுமான அளவில் இருக்கின்றதா என்பதை பெண்கள் (ஏன் அனைவருமே) கவனித்தில் கொள்ள வேண்டும். இதனைத் தான் ”சமச்சீர் உணவு” (balanced diet) என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குழந்தை பெறுகின்ற வயதில் (child-bearing age) இருக்கும் மகளிர்க்கு இச்சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல்நலத்தோடும், மன வளத்தோடும், குறைபாடுகள் இன்றியும் பிறக்க வாய்ப்பு ஏற்படும். அதுபோலவே, 50 வயதைக் கடந்த பெண்களுக்கு (குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு) அதிகப் படியான கால்சியப் பற்றாக்குறை காரணமாக எலும்புத் தேய்மான நோய் (osteoporosis) ஏற்படுகின்றது. இதனால் தவறி அவர்கள் எங்கேனும் கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு (bone fracture) ஏற்பட்டு விடுகின்றது. இதனைத் தவிர்க்கப் பெண்கள் கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், கீரை வகைகள், சோயா பீன்ஸ், ஆரஞ்சு, முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

    உடல் நலனைச் சீர்குலைக்கும் பிற நோய்கள் என்று பார்த்தால் பரம்பரை நோய்களுக்கு முக்கியப் பங்குண்டு எனலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவை பொதுவான பரம்பரை நோய்களாக அறியப்படுபவை. 30 வயதிற்கு மேல்தான் இந்நோய்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். ஆகவே, தாய், தந்தையர்க்கு இத்தகைய நோய்கள் இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கும் அவை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனை உணர்ந்து மருத்துவ ஆலோசனையை நாடுவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையினைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.

    இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், புரட்சிகளையும் கண்டு வருகின்றது என்றால் மிகையாகாது. சான்றாக, நுண் துளை அறுவை சிகிச்சை (laparoscopic surgery) ஓர் வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாகச் செய்யமுடிகின்றது. வெகு விரைவிலேயே இயல்பு வாழ்க்கைத் திரும்பவும் இயலுகின்றது.

    நவீன மருத்துவ வசதிகளை, முன்னேற்றங்களைப் பெண்கள் தங்கள் உடல் நலத்தை காக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்கள் வருவதற்கு முன்னமேயே தற்காப்பு மருத்துவப் பரிசோதனைகளைச் அவ்வப்போது செய்துகொள்வது நல்லது. குறிப்பாக 30 வயதினைக் கடந்த பெண்கள் 3 ஆண்டுகட்கு ஒரு முறை மார்பகப் பரிசோதனை (Mammogram) மற்றும் கருப்பைப் பரிசோதனை (Pap smear) போன்றவற்றைச் செய்துகொள்வது அவசியமானது. இதனால் மார்பகப் புற்றுநோய் (breast cancer), கருப்பைசார் புற்றுநோய்கள் (cervical cancer, endometrial cancer and ovarian cancer) ஆகியவை வராமலே தடுக்கவோ அல்லது ஏற்கனவே வந்திருந்தால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தவோ இயலும். அதைவிடுத்து, வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகப் பெண்கள் தங்கள் உடல்நலனில் போதிய அக்கறை செலுத்தத் தவறினால் பல்வேறு நோய்கட்கு அவர்கள் ஆட்பட நேரும். அது அவர்களின் இனிய இல்லறத்தைப் பாதிக்கக்கூடும். ஏன்..அலுவலகப் பணிகளையும் செம்மையாகச் செய்ய இயலாது.

    அடுத்தபடியாக, பெண்கள் தங்கள் உடலைப் பேணுவதற்கு, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை பெரிதும் உதவுகின்றன. எனவே, எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அதற்கு இடையில் தினமும் (காலையோ அல்லது மாலையோ) 15 அல்லது 20 நிமிடங்களேனும் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியம். யோகா, தியானம் போன்றவற்றை முறையாகப் பயின்று பின்பு பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. இத்தகைய பயிற்சிகளினால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். வேலைகளைத் திறம்பட நிர்வகிக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் இவை அளிக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.

    அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு, நேர மேலாண்மையிலும் (time management) ஆற்றலும் பெற்றவர்களாக இருந்தால் இன்றைய விஞ்ஞான உலகில் அவர்களால் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பாய்ச் செய்ய முடியும். நேர நிர்வாகம் என்பதனை அவர்கள் முதலில் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். வீட்டு வேலைகளை அவரவர் வயதிற்கும், அனுபவத்திற்கும் தக்கபடி வீட்டிலுள்ள அனைவர்க்கும் பகிர்ந்தளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வது பெண்களின் வேலை பளுவையும், உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கும். இம்முறையை (வாய்ப்பிருப்பின்) அலுவலகத்திலும் பின்பற்றலாம். இதைத்தான் ”delegation of duties” என்று குறிப்பிடுகின்றனர்.

    குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொன்று, தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. வேலைகளுக்கு நடுவில் கிடைக்கின்ற சிறிதளவு ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவழிக்கப் பெண்கள் பழக வேண்டும். தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளோடு செலவிடுதல் வேண்டும். நல்ல கருத்துள்ள நீதிக் கதைகள், திருக்குறள் போன்றவற்றை அவர்களுக்குக் கற்பிக்கலாம். அவர்களின் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகள் பற்றியும் கேட்டறியலாம். அவர்களோடு சிறிது நேரம் விளையாடலாம். இது போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியை நிச்சயம் கொடுக்கும். அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வாழ வழிகோலும்.

    எனவே, உடல் நலத்தையும், மன வளத்தையும் காக்கத் தேவையான உணவினையும், உடற்பயிற்சிகளையும், முறையான மருத்துவப் பரிசோதனைகளையும், சரியான திட்டமிடலையும் மேற்கொண்டால் இன்றைய பெண்கள் மேலும் பல சாதனைகளைப் புரியலாம், சரித்திரம் படைக்கலாம். வீடு, அலுவலகம், இரண்டையும் திறம்பட நிர்வகிக்கலாம்.

    Share
  • பொன் வண்டு கதைக்கு மேகலா இராமமூர்த்தியின் முடிவுரை

    பொன் வண்டு – முதற்பகுதி

    பொன் வண்டு (இறுதிப் பகுதி)

                                        மேகலா இராமமூர்த்தி

    …… நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார்.

    அவசர சிகிச்சை டாக்டர் (emergency physician) விரைந்து முதலுதவி செய்ய ஆரம்பித்தார். முதலில் மூக்கிலிருந்து கொட்டுகின்ற இரத்ததை நிறுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார். மாலாவின் துணையுடன் ஒயிலாவை நிமிர்த்தி உட்காரவைத்து, அவள் மூக்கின் மேல்பகுதியில் ஐஸ்பேக் (icepack) வைத்து இரத்தத்தை நிறுத்தினார். சிறிது நேரத்தில் ஒயிலாவிற்கு நினைவு திரும்பியது. மெல்ல மெல்ல கண்களைச் சிரமப்பட்டு திறந்தவளுக்குத் தன்னைச் சுற்றித் தெரிவதெல்லாம் ஏதோ கனவுபோலவே தோன்றியது.

    ஏதோ கேட்பதற்கு அவள் வாயைத் திறக்கும்முன், பயங்கரமான அழுகுரல் அவள் காதில் விழுந்தது. ஒயிலாவின் அம்மா அழுது அரற்றிக்கொண்டு அவளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தாள். அவளின் பின் ஒயிலாவின் தந்தையும் அப்பத்தாவும் கலங்கிய கண்களோடு வந்துகொண்டிருந்தனர். மஞ்சு பள்ளிக்குச் சென்றிருந்தபடியால் அவளுக்கு விவரம் ஏதும் தெரியாது. ஒயிலாவின் அருகில் வந்ததும் அவர்கள் இன்னும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தனர்.

    அங்கு நின்றுகொண்டிருந்த டாக்டர் அவர்களை நோக்கி “ஏன் இப்படிக் கூச்சல் போடறீங்க?” கொஞ்சம் அமைதியா இருங்க, ப்ளீஸ்” என்றார். அங்கு சற்று அமைதி நிலவியது. ”யாரு கண்ணு பட்டுச்சோ எம்புள்ள மேலே, இப்படி ஆஸ்பத்திரியிலே கெடக்காளே? என்று சன்னமான குரலில் புலம்பினாள் ஒயிலாவின் தாய்.

    அப்போது, டாக்டர், ஒயிலரசியின் தந்தையைப் பார்த்து “கொஞ்சம் என் ரூமுக்கு வாங்கன்னு” சொல்லிவிட்டு நகர்ந்தார். ஒருவிதப் பதற்றத்தோடு அவரைப் பின் தொடர்ந்தார் ஒயிலாவின் தந்தை. ரூமுக்குள் வந்தவுடன் டாக்டர் தன் குரலைச் சற்று தாழ்த்திக்கொண்டு “இதுபோல முன்னமே மூக்குல இரத்தம் வந்திருக்கா அல்லது இதுதான் முதல் தடவையா?” என்று கேட்டார்.

    ”இல்ல டாக்டர்” அவ வீட்டுல  இருக்கும்போது இதுமாதிரி  நடந்ததில்ல. காலேஜுலேயும் நடந்திருக்க வாய்ப்பில்லேன்னுதான் நெனைக்கிறேன். அப்படி ஏதாச்சும் நடந்திருந்தா எம்மக எங்கிட்ட சொல்லியிருப்பா. ஏன் டாக்டர் கேக்கறீங்க? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே? என்று கலவரத்தோடு கேட்டார்.

    டாக்டர் சிறிது யோசித்தார். பயப்படற மாதிரி ஏதும் இருக்காதுன்னு தான் நானும் நெனைக்கிறேன். சில சமயங்கள்ல தலைல அடிபட்டாக்கூட மூக்கிலேர்ந்து அதிகப்படியா இரத்தம் வர வாய்ப்பிருக்கு. அதனால நாம எதுக்கும் மூளைய ஸ்கேன் செஞ்சு பாத்திடறது நல்லதுன்னு நெனைக்கிறேன். நம்ம மருத்துவமனைல அதுக்கான வசதியில்லை. அதனால சென்னையிலெ இருக்குற ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு சிபாரிசுக் கடிதம் தரேன். அங்க போய்ப்பாத்திடறது நல்லது என்றார்.

    ஒயிலாவிற்கு பூரண ஓய்வு  தேவைன்னு டாக்டர் சொல்லி அவளை டிஸ்சார்ஜ் செஞ்சிருந்ததாலே  அவளைப் படுக்கையைவிட்டு  எழ அனுமதிக்கவில்லை அவளின் தாயும், தந்தையும். ஒயிலாவிற்குப் பொழுது போவது மிகக் கடினமாகத்தான் இருந்தது. தோப்புப் பக்கம் போகமுடியலையேன்னு அவள் வருத்தப்பட்டுக் கொண்டே படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

    அப்போது பக்கத்து அறையில்  அவள் தாயும், தந்தையும் மெதுவாகப்  பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. அவள் தந்தை, டாக்டர் தன்னிடம் கூறிய விஷயங்களை ஒன்றுவிடாமல் அவள் தாயிடம் கூறிக்கொண்டிருந்தார். தலையில் அடிபட்டாலும் மூக்கிலிருந்து இரத்தம் வடியுமுன்னு டாக்டர் சொன்னதைக் குறிப்பிட்டு, ஒயிலா எங்கயாச்சும் கீழே விழுந்தாளா? உனக்கு ஏதாச்சும் தெரியுமான்னு அவள் தாயிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி ஏதும் நடக்கலியே, நடந்திருந்தா ஒயிலா எங்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாளே என்று தன் தாய் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தை ஒயிலா கேட்டாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

    அன்று சனிக்கிழமை. கல்லூரி விடுமுறை. வழக்கத்தைவிட வேகமாகக் காலை டிபனை முடித்துவிட்டு மான் போலத் துள்ளிக்கொண்டு தோப்புக்குச் சென்றாள் ஒயிலா. முதல் நாள் தமிழ்ப் பேராசிரியை நடத்திய “காணி நிலம் வேண்டும்” என்ற பாரதியின் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு, உற்சாகத்தில் உள்ளம் துள்ளத் தோப்பையும், சிட்டுக்குருவிகளையும் காண ஆவல் கொண்டு வேகமாக ஓடினாள். திடீரென்று கால் இடறிக் கீழே விழுந்தாள். பலமாக எதன் மீதோ தலை மோதியது; உலகம் சுழன்றது. உடனே நினைவிழந்தாள்.

    சிறுது நேரம் கழித்துக்  கண் விழித்துப் பார்க்கையில் தான் ஒரு பள்ளத்தில் கிடப்பதை அறிந்தாள் ஒயிலா. தலை விண், விண் என்று வலிப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். தன் தலை அந்தப் பள்ளத்திலிருந்த பெரிய கருங்கல் ஒன்றில் மோதியிருப்பதை அறிந்து அதிர்ந்தாள். மூக்கிலிருந்து ஏதோ கசிவதை அறிந்து கையால் வழித்தாள். ஆ! ரத்தம் என்று கத்தினாள். இங்கு நடந்ததை அம்மா, அப்பாவிடம் தெரிவிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள், வேண்டாம்! அவர்களிடம் சொன்னால் பயந்து போவார்கள். வீணாக அவர்களைச் சங்கடப் படுத்த வேண்டாம், என்று முடிவெடுத்து, தோப்பில் அதற்குப் பிறகு இருக்க மனமின்றி வீடு நோக்கி நடந்தாள்.

    “நாளைக்கு விடிகாலையிலேயே ஒயிலாவோட கெளம்பிப் பட்டணம் போகணும், ஸ்கேன் எடுக்கணும்” என்று தந்தை, தன் தாயிடம் கூறிய வார்த்தைகள் ஒயிலாவின் பழைய நினைவுகளைக் கலைத்து அவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தன.

    பொழுது விடிந்தது. ஒயிலரசியும், அவள் தந்தையும் சென்னைக்குப் புறப்பட்டனர். அப்பத்தா ஓடிவந்து ஒயிலாவிற்குத் திருநீறிட்டாள். ஒனக்கு ஒரு கொறவும் வராது தாயி! என்று கண்ணீரோடு திருஷ்டி கழித்தாள். ஒயிலாவின் அன்னையும், மஞ்சுவும் சோகம் கப்பிய முகத்தோடு அருகில் நின்றனர்.

    நீண்ட பயணம் ஒயிலாவை மிகவும்  களைப்படையச் செய்தது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள். இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு இருவரும் ஓர் விடுதியில் தங்கினர். மறுநாள் காலை சீக்கிரமேயெழுந்து மருத்துவமனை செல்ல ஆயத்தமாயினர். அவசர சிகிச்சை டாக்டர் தந்த சிபாரிசுக் கடித்ததைக் காட்டியதில் மருத்துவமனையில் சிறிது விரைவாகவே ஸ்கேன் எடுக்க முடிந்தது. ஸ்கேன் ரிசல்டை மறுநாள் தெரிந்துகொள்ளலாம் என அறிந்தார்கள்.

    ஒயிலாவும், தந்தையும் தாம் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர். பொழுதைப் போக்குவது சிரமமாக இருந்தது இருவருக்கும். ”அப்பா! நாம சும்மா இங்கையே ஒக்காந்திருக்காம மெரினா பீச்சுக்குப் போயிட்டு வருவோமே” என்று ஒயிலா சொன்ன யோசனையை அவள் தந்தை ஏற்றுக்கொண்டார். அன்று மாலை மெரினா பீச்சுக்குச் சென்றார்கள். ஒயிலா கடல் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவள் தந்தை, ”கடவுளே எம்மவளுக்கு ஒரு நோயும் இருக்கப்படாது. நாளைக்கி ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சனையுமில்லன்னு வரணும்” என்று கண்ணீரோடு கண்ணைமூடிப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்.

    அப்பா! என்ற தீனமான குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்தார் அவர். தன் மகள் நினைவு தப்பி மயக்கமாகியிருப்பதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் கண்டு, ”ஐயோ! யாராவது உதவிக்கு வாங்களேன்!” என்று அலறினார். சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஒருவர் விரைந்து வந்தார். என்ன சார்! என்ன ஆச்சு? என்று கேட்டபடியே ஒயிலாவைப் பார்த்தார். பேச இயலாமல் ஒயிலாவின் தந்தை தவித்ததைக் கண்டு, ”பாப்பாவுக்கு என்ன ஆச்சு சார்! என்று மறுபடியும் கேட்டார். ஒயிலா திடீரென்று மூர்ச்சையானதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் ஒயிலாவின் தந்தைக் கண்ணீரோடு கூறிமுடிக்க, அவர் ”கவலைப்படாதீங்க சார்! நான் ஆட்டோ டிரைவர் தான், பாப்பாவை உடனே ஆஸ்பத்திரியிலே சேத்து ட்ரீட்மெண்ட் குடுத்துடலாம்” என்றார்.

    ஒயிலாவின் தந்தை கண்ணீர்  மல்க அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார். காலையில் ஸ்கேன் எடுத்த மருத்துவமனையின் பேரைச் சொல்லி அங்கேயே சேத்துடலாம் என்று தெரிவித்தார். ஆட்டோ விரைந்தது.

    மறுபடி ஒயிலா கண்விழித்தபோது மீண்டும் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து தனக்குத் தானே வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டாள். அருகில் தன் தந்தை அமர்ந்து தன்னையே கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்பதை அறிந்து சிரிக்க முயன்றாள். அன்று இரவு வந்த ”ட்யூட்டி டாக்டர்” ஒயிலாவின் ஸ்கேன் ரிப்போர்ட் ரெடியாகிவிட்டது என்று கூறி ஒயிலாவின் தந்தையைத் தன் அறைக்கு அழைத்தார். ”இதோ வந்துடறேம்மா” என்று ஒயிலாவிடம் சொல்லிவிட்டு அவள் தந்தை அறையை விட்டு அகன்றார்.

    தன் எதிரில் நின்ற ஒயிலாவின்  தந்தையை வருத்தத்தோடு பார்த்த  டாக்டர், ”சார் மனசத் தேத்திக்குங்க, உங்க மகளோட சிறுமூளையிலே பலமான அடிபட்டு இரத்தம் கட்டியிருக்கு. ஆபரேசன் செஞ்சு குணப்படுத்தமுடியாத அளவு சேதம் பலமாயிருக்கு. எந்த நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். கடவுள வேண்டிக்குங்க. மனுசங்களாலெ முடியாததைக் கடவுள் பொறுப்புலதான் விடவேண்டியிருக்கு” என்று கூறி அமைதியானார். அதைக் கேட்டு ஒயிலாவின் தந்தை சுக்கு நூறாகச் சிதறிப்போனார். ஸ்கேன் ரீப்போர்ட்டை கை நடுங்க வாங்கித் தன் பையில் மறைத்துக் கொண்டு தன் மகளிருந்த அறையை நோக்கித் தள்ளாடியபடியே சென்றார்.

    ஒயிலா பட்டணத்திலிருந்து வீடு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று. அவள் கல்லூரி செல்ல அனுமதிக்கப் படவில்லை. எல்லோரும் தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பதும், அடிக்கடி வீட்டில் அழுகுரல்கள் கேட்பதும் வாடிக்கையாயிற்று. ”பயப்படும்படி ஏதும் ஸ்கேன் ரிபோர்ட்டில் இல்லை” என்று தன் தந்தை தன்னிடம் கூறினாலும், மற்றவர்கள் நடவடிக்கையால் தன் உயிருக்கு ஏதோ ஆபத்து காத்திருக்கின்றது என்பதை அந்த சுட்டிப் பெண்ணால் நன்றாக உணரமுடிந்தது.

    மறுநாள் அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்த ஒயிலரசி அப்பத்தாவையும் எழுப்பி தனக்கு மிகவும் பிடித்த பால் பணியாரம் செய்து தரவேண்டும் என்று கேட்டாள். பேத்தியின் மீது உயிரையே வைத்திருந்த அப்பத்தாவும், ”அதுக்கென்ன ராசாத்தி இதோ செஞ்சுதாரேன்” என்று அடுக்களைக்கு விரைந்தாள். ”பல் தேய்ச்சுட்டு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன்னு” சொல்லிட்டு கொல்லைப் பக்கம் ஓடினாள் ஒயிலரசி.

    அரைமணி நேரமாகியும் ஒயிலரசி  அடுப்பங்கரைப் பக்கம் வரலியே, சுட்டு வச்ச பணியாரம் ஆறிப்போயிடுமே என்று எண்ணிக்கொண்டே, ”ஒயிலா… ஒயிலாக்குட்டி!” என்று கூப்பிட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் வந்த அப்பத்தா, ஒயிலரசி தரையில் விழுந்துகிடப்பதைக் கண்டு பதறியபடியே அவளருகே ஓடினாள். எந்தாயீ, ஒயிலா…ஒயிலா! என் தங்கமே எழுந்திரும்மா என்று அலறினாள். அப்பத்தாவின் அலறல் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் பீதியோடு ஓடிவந்தனர். ஒயிலாவிடம் எந்த அசைவுமில்லை.

    ஒயிலாவை மடியில் போட்டுக்கொண்டு உலுக்கினாள் அப்பத்தா. அம்மா… எங்கண்ணு…எழுந்திரு தாயீ! என்று மீண்டும் அரற்றினாள்.. ஒரு பதிலுமில்லை. முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். மூக்கிலிருந்து வழிந்த இரத்தம் சிறிது காய்ந்திருந்தது.

    பின்பு நடந்ததெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகிப் போயின! ”பொன் வண்டு” போல அவ்வீட்டில் வளைய வந்த ஒயிலாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஈடுசெய்யமுடியா இழப்பையும் அக்குடும்பத்திற்குத் தந்தது.

    உடலைவிட்டு ஒயிலரசியின்  உயிர் பிரிந்திருந்தாலும் அவள் ஆன்மா என்றும் அழிவின்றி அவ்வீட்டையும், அவள் மிகவும் நேசித்த தோட்டதையுமே சுற்றிச் சுற்றி வரும் என்பதில் சந்தேகமில்லை…

    Share
  • வள்ளுவர் வழியில் இளங்கோ!!

    மேகலா இராமமூர்த்தி

    ”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

     வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

     பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என வாயூறிப் பேசுகின்றான் மகாகவி பாரதி. இந்த வரிசையிலே காலத்தால் மூத்தவர் வள்ளுவப் பேராசான். அவரை அடுத்து வருபவர் சேரமன்னனின் இளவலான இளங்கோ. இவ்விருவரின் அறக்கருத்துக்களில் சிலவற்றை ஒப்பு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    “சான்றோர் சான்றோர் பாலராவர்”(great minds think alike) என்பது பெரியோர் வாக்கு. இக்கருத்தை மெய்ப்பிப்பது போலவே குறளின் கருத்துக்களைப் பலவிடங்களில் எடுத்தியம்புகின்றார் சிலப்பதிகார ஆசிரியர். உதாரணங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.

    சிலம்பின், மதுரைக் காண்டம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாப் பகுதியாகும். அதில் வருகின்ற அடைக்கலக் காதையில் சமணத் துறவியான, கவுந்தியடிகள் பத்தினிப் பெண்டிரின் சிறப்பைப் பற்றி இடைக்குல முதுமகள், மாதரியிடம் கூறும்போது,

    ”வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது

    நீணீல வேந்தர் கொற்றம் சிதையாது

    பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்

    அத்தகு நல்லுரை அறியாயோ நீ?” என வினவுகின்றார், இஃது,

    ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

    பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்: 55) என்னும் திருக்குறளை நினைவுக்குக் கொண்டுவருகின்றதல்லவா?

    அதுபோலவே, சிலம்பில் மற்றுமோர் காட்சி, வழக்குரை காதையில்….

    ஆவேசத்தோடு தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே சொல்லிக்கொண்டிருந்த கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன் புன்சிரிப்பைச் சிந்திவிட்டு, பெண்ணே…!

    “கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று!

    வெள்வேற் கொற்றம்- காண்!” என்றல்லவா கூறுகின்றான். இவ்வரிகள்,

    ”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

    வடுவன்று வேந்தன் தொழில்”(குறள்: 549)  என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

    அடுத்து, சிலப்பதிகாரத்தின், ’வஞ்சின மாலை’யில் மாபத்தினி கண்ணகி, பாண்டியன் தேவியைப் பார்த்துக் கூறும் வரிகள் இவை:

    “முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

    பிற்பகல் காண்குறூம் பெற்றியகாண்!”

    என்ன விந்தை!! தெய்வப் புலவரின் தமிழ்மறையும் இதேகருத்தை “இன்னா செய்யாமை” என்னும் அதிகாரத்தில் பறைசாற்றியுள்ளது. இதோ அக்குறள் வரிகள்..

    “பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

    பிற்பகல் தாமே வரும்.” (குறள்: 319)

    சிலம்பின் ”வஞ்சிக் காண்டம்” சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை எடுத்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. அதில், மாடல மறையோன் ’யாக்கை நிலையாமையைப் பற்றியும், ’அறக்கள வேள்வி’ செய்யவேண்டியதன் அவசியத்தையும் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கும்போது…..

    “நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே

    கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று செப்புகின்றான்.

    இதே பொருளில் பல குறட்பாக்களை நாம் “நிலையாமை” எனும் அதிகாரத்தில் காண்கிறோமே…

    அவற்றுள் ஒன்று, நம் பார்வைக்கு…..

    “நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

    மேற்சென்று செய்யப் படும்.” (குறள்: 335)

    இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான ”வரந்தரு காதை”. குறளும், சிலம்பும் கைகோர்த்துக்கொண்டு ஒத்த அறக்கருத்துக்களை ஓங்கி ஒலிக்கின்ற அழகை என்னவென்பது..? தமிழன்பர்கள் அனைவரும் படித்து மகிழவேண்டிய பகுதியிது!

     “தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்!

    ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

    தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;

    செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;

    ———————————————————————————

    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

    வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா இவை வரந்தரு காதையின் வைர வரிகள்…!

    இவ்வரிகளுக்கு இணையான குறட் கருத்துக்களை இனிக் காண்போம்.

    வள்ளுவத்தின், “கடவுள் வாழ்த்து” தெய்வம் தெளிவதற்கு நமக்குப் பேருதவி செய்கின்றது. “நீத்தார் பெருமை” என்ற அதிகாரம், பற்றற்ற உயர்ந்தோரின்-தெளிந்தோரின் சிறப்பை வகைப்படுத்துகின்றது.

    அதுபோன்று,

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

    எல்லா வுயிரும் தொழும்” (குறள்: 260) என ஊனூண் துறப்பதின் அவசியத்தை குறள் கூறுகின்றது. உயிர்க்கொலை அதைவிடக் கொடியது என்பதனை,

    ”அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

    பிறவினை எல்லாம் தரும்” (குறள்: 321) என்ற குறளமுதம் “உயிர்க் கொலை நீங்குமின்” என்பதன் விளக்கம் தானே?

    தானம் செய்வதின் சிறப்பை “ஈகை”யும், தவத்தின் பெருமையை “தவம்” என்ற அதிகாரமும் தெளிவாய்ச் சொல்லவில்லையா?

    ”செய்ந்நன்றி அறிதலை”யும், ”தீநட்பின்” தன்மையையும் அறிதற்குத் திருக்குறளினும் விஞ்சிய

    வழிகாட்டி உண்டோ?

    ”உண்ணற்க கள்ளை” எனவும், ”கள்ளாமை காக்க” எனவும் வள்ளுவப் பேராசான் நமக்கு அறிவுறுத்த வில்லையா?

    “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

    நாமம் கெடக்கெடும் நோய்” (குறள்: 360) என்பதும்,

    “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற

    செய்யாமை செய்யாமை நன்று” (குறள்: 297) என்பதும் வள்ளுவரின் வாய்மொழிகளே!

    ”பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

    மக்கட் பதடி யெனல்”(குறள்: 196) என்று பயனில சொல்லும் “வெள்ளைக்கோட்டி”யைக் கடுமையாய்ச் சாடுகின்றார் வள்ளுவர்.

    அதுபோல்,

    ”நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்

    பெருமை யுடைத்திவ் வுலகு” (குறள்: 336) என்று ”நிலையாமை” குறித்த உண்மைகளையும் நெகிழ்ச்சியாய் வெளியிடுகின்றார்.

    இவ்வொப்பீடுகள் வாயிலாய் நாம் அறிவது என்ன? சிலம்பில் எங்கு நோக்கினும் குறட் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பது தானே!

    இவ்வுயரிய கருத்துக்கள் படிப்போருள்ளங்களைப் பரவசப்படுத்துவதோடல்லாமல், வள்ளுவரின் வழித்தோன்றலாகவே இளங்கோவடிகளை எண்ணி மகிழச்செய்கின்றது!!

    சான்றோரின் சிந்தனைகள் ஒத்திருப்பது உண்மையே அல்லவா!

     படங்களுக்கு நன்றி:

     http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg

    Share