மஞ்சளைப் போற்றுதும்!
இந்தியா ஆன்மிகத்தில் உலக நாடுகள் அனைத்திற்கும் முன்னோடியாய் விளங்குவதுபோல் அறிவியலிலும் விளங்கி வருகின்றது எனலாம். ஆம்..நம் முன்னோர்கள் ஆன்மிகத்தையும், அறிவியலையும் சார்ந்தே தம் நடைமுறை வாழ்வைச் செம்மையாக நடத்தி வந்துள்ளனர் என்பதற்கு எத்தனையோ சான்றுகளைச் சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் மங்கலத்தின் அடையாளமாக நம் இந்தியர்கள் போற்றுகின்ற மஞ்சள்.
மஞ்சள் இல்லையேல் ஆன்மிக நிகழ்வுகளோ, பூசைகளோ இல்லை என்னும் அளவிற்கு எல்லாவற்றிலும் அஃது நீக்கமற நிறைந்துள்ளது. காட்டாக, மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்துத்தான் பல்வேறு இறைபூசைகளையும் நாம் தொடங்குகின்றோம். கோயில்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் மஞ்சள்காப்பு சார்த்துகின்றோம். மழை தெய்வமான மாரியம்மன் கோயில்களில் அன்னைக்கே நாம் ’மங்களகரமான’ மஞ்சள் உடையைத்தான் பெரும்பாலும் அணிவித்து அழகு பார்க்கின்றோம்.
நாம் கொண்டாடும் விழாக்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் மஞ்சள் கொத்தையும், இஞ்சிக் கொத்தையும் பொங்கற் பானையைச் சுற்றிக் கட்டியபின்பே பகலவனுக்குப் பொங்கலைப் படையலிடுகின்றோம். இரு மனங்கள் இணையும் திருமண விழாவிலும் மங்கல நாணை மஞ்சள் தடவி மெருகேற்றி ’மஞ்சள்கயிறு’ என்று அதற்குப் பெயர் கொடுத்துப் பெருமை கொள்கின்றோம். இவ்வாறு விழாக்களிலும், பண்டிகைகளிலும் அரசியாகக் கோலோச்சும் மஞ்சளின் மருத்துவப் பயன்களையும் அறிந்தே நம் முன்னோர் அதனை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தியுள்ளனர் எனலாம்.
இனி, மஞ்சளின் வகைகள் குறித்தும், அவற்றின் உபயோகங்கள் குறித்தும் சற்றுக் காண்போம்.
மஞ்சளில் முட்டா மஞ்சள், குட மஞ்சள், குரங்கு மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள் எனப் பல வகைகள் இருப்பினும், பெரும்பாலும் நம் மக்கள் உபயோகிப்பது முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றையே. இவற்றில் முதலில் சொல்லப்பட்ட முட்டா மஞ்சள் உருண்டையாக இருக்கும். இது பூசுமஞ்சளாக உடலில் பூசிக் குளிப்பதற்கே பெரிதும் பயன்படுகின்றது.
இரண்டாவதாகக் கூறப்பட்ட கஸ்தூரி மஞ்சளையும் உடலிற்குப் பூசிக் குளிக்கலாம். நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. நம் தமிழகப் பெண்கள் முன்பு இவ்விரு மஞ்சள் வகைகளையும் உடலிற்குப் பூசிக் குளித்தனர். (இப்போது அவ்வழக்கம் அருகிவருவது வருந்தத்தக்கது.) இதனால் பல்வேறு வகையான தோல்நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தன. சோரியாஸிஸ் (psoriasis), படை (ezema), தடிப்புகள் (rashes) போன்ற தோல்நோய்கள் உடலில் பரவாமல் இருந்தன. இவ்வளவு ஏன்…..அம்மை நோய்களால் தோலில் ஏற்படும் வடுக்களையும் (scars), பருக்களின் தொல்லைகளையும் கூடத் தொடர்ந்து மஞ்சள் பூசிக்குளிப்பதன் வாயிலாக நீக்க முடிந்தது. முதுமையைத் தள்ளிப்போடவும் (delay aging) இளமைப் பொலிவைத் தக்கவைக்கவும் மஞ்சள் உதவுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன.
மஞ்சள் பூசிய (அன்றைய) மங்கையரின் எழில்முகம் மங்களகரமான தோற்றப் பொலிவைத் தந்து ஆடவரையும் மயக்கியது. அதனால்தான் அவர்கள் “மஞ்சள் முகமே வருக! மங்கல விளக்கே வருக!” எனப் பாட முடிந்தது. இப்போது மஞ்சள்பூசும் வழக்கம் அருகியும், அற்றும் போய் வருவதால் (இன்றைய) ஆண்கள் பெண்களைப் பார்த்து “ஃபேர் அண்ட் லவ்லியே (fair and lovely)…..குண்டு மல்லியே!” என்று மாற்றிப் பாடவேண்டியுள்ளது.
மூன்றாவதாகக் குறிக்கப்பட்ட விரலி மஞ்சளே சமையலுக்குப் பயன்படும் கறி மஞ்சளாகும். மஞ்சளில் காணப்படுகின்ற முக்கிய வேதிப்பொருளான குர்குமின் (curcumin) பல்வேறு அற்புதமான மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
நம் தமிழகத்தில் மஞ்சள் சேர்க்காத உணவுத் தயாரிப்பே இல்லை என்னும் அளவில் எல்லாவகைச் சமையலிலும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர் நம் மக்கள். அஃது மிகுந்த பாராட்டிற்குரியது. உணவின் மணத்தையும், நிறத்தையும் கூட்டும் மஞ்சள் சாம்பார், பொறியல், கூட்டு, அவியல் எனச் சைவ உணவுகளாகட்டும், மீன், இறைச்சி முதலிய அசைவ உணவுகளாகட்டும் எல்லாவற்றிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உணவில் மஞ்சளைச் சேர்ப்பதினால் அவ்வுணவுப் பொருள்களிலுள்ள உடலுக்குத் தீங்குவிளைவிக்கும் கண்ணிற்குப் புலப்படா நுண்ணுயிரிகள் (viruses and bacteria) முற்றிலும் அழிக்கப்படுகின்றன என்பதனை இன்றைய மருத்துவ அறிவியல் ஆமோதிக்கின்றது. இதனை ஈராயிரம் (2000) ஆண்டுகட்கு முன்பே அறிந்து பயன்படுத்திவரும் நம் மக்களின் பேரறிவு போற்றிப் புகழத்தக்கது.
மஞ்சளின் சர்வரோக நிவாரணத் தன்மையைக் கண்ட மேற்கத்திய நாடுகள் அதனை வியந்து பாராட்டுகின்றன. அமெரிக்காவின் மிசிசிபி பல்கலைக்கழக மருத்துவ மையம் (University of Mississippi Medical Center) 1995-ஆம் ஆண்டு மஞ்சளின் அற்புதத் தன்மையை அறிந்து மஞ்சளுக்கான பிரத்யேகக் காப்புரிமையைப் (patent) பெற்றது. (பின்பு இந்தியா தாமதமாக விழித்துக்கொண்டு ’மஞ்சள் எமதே’ என மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றது வேறு கதை.)
இனி மஞ்சளின் மருத்துவப் பயன்பாடுகள் சிலவற்றைக் காண்போம்.
மிகச் சிறந்த கிருமிநாசினியான (antibiotic) மஞ்சள் புற்றுநோய்க்கான ஆராய்ச்சியில் சமீபகாலமாக அதிக அளவில் மேலைநாட்டவரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் மஞ்சளின் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் (anti-cancer property) மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (UCLA’s Jonsson Comprehensive Cancer Center) நிகழ்ந்த ஆராய்ச்சியில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பரவும் புற்றுநோய்ச் (head and neck cancer) செல்களை அழிப்பதிலும், புற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதிலும் மஞ்சளிலுள்ள குர்குமின் முக்கியப் பங்காற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல், பெருங்குடல், மார்பகம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் மஞ்சளின் புற்றுநோய் ஒழிப்புத்திறன் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.
மஞ்சளின் மற்றொரு முக்கிய மருத்துவ குணமாகக் கருதப்படுவது உடலில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கும் குணமே (anti-inflammation property). அரிசோனா பல்கலைக்கழகத்தில் (University of Arizona) எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியைக் (rheumatoid arthritis) குறைக்கவும், மேலும் அதிகமாகாமல் தடுக்கவும் மஞ்சள் உதவுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோலவே, மனிதனின் ’தலைமைச் செயலகமான’ மூளையிலுள்ள செல்தொகுப்பில் ஏற்படுகின்ற அழற்சியாலும், ஒருவித புரதப் படிவினாலும் (hyperphosphorylated tau protein) மறதிநோயான அல்சைமர் (Alzimer disease) ஏற்படுகின்றது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மூளைச் செல்களின் அழற்சியையும், புரதப் படிவினையும் தடுப்பதிலும் மஞ்சளிலுள்ள குர்குமின் முக்கியப் பங்காற்றுகின்றது என்று புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மஞ்சளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதனால்தான் இந்தியாவிலுள்ள முதியோர்கள் அதிக அளவில் அல்சைமர் போன்ற மறதிநோய்கட்கு (மேல்நாட்டவர்போல்) ஆட்படவில்லை எனத் தோன்றுகின்றது.
மஞ்சளின் மற்றொரு குறிப்பிடத்தக்க மருத்துவப் பண்பு, உடலிற்குத் தீங்கிழைக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளைத் (free radicals) தடுத்து அவற்றிடமிருந்து உடலைக் காப்பதே (antioxidant). இப்பண்பினால் இதயநோய்களையும், நீரிழிவு (diabetes mellitus), முதுமை காரணமாகக் கண்களில் ஏற்படும் பல்வேறு நோய்கள் (macular degeneration, cataract, etc.), இரத்தம் உறைதல் (blood clot), கை, கால்களைப் பலவீனமாக்கும் மற்றும் அவற்றின் செயல்திறனைப் பாதிக்கும் பார்கின்சன் நோய் (Parkinson Disease) போன்ற பல நோய்களின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே மஞ்சள் தடுத்துவிடுகின்றது எனலாம். உடலில் கெட்ட கொழுப்பு (bad cholesterol) சேராமல் தடுப்பதிலும் மஞ்சளின் பங்கு முக்கியமானது.
மஞ்சள்பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு (1 teaspoon) சாப்பிடுவதோடு, உணவுக் கட்டுப்பாட்டையும் (diet control) மருத்துவர் கூறுவதுபோல் கடைப்பிடித்தால் உடல் எடை விரைவில் குறையும் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தொழுநோயைத் தடுக்கவும் மஞ்சள் உதவுவதாகத் தெரிகின்றது.
அதுமட்டுமா? குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற நோய்களைத் தீர்ப்பதற்கும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த பாலில் ஒரு சிட்டிகை (a pinch) மஞ்சள்பொடியைச் சேர்த்துக் கொடுத்தால் தொண்டைப் புண், இருமல் முதலியவை குணமாகும். மஞ்சளைத் தீயில் சுட்டு அதன் புகையைச் சுவாசித்தால் மூக்கடைப்பு, சளி, தலைவலி போன்றவை குணமாகும்.
மஞ்சளை நீரில் கலந்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும் என நம்பப்படுகின்றது. கை, கால்களில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்துத் தடவலாம். மஞ்சளைத் தேங்காயெண்ணெயிலோ அல்லது நல்லெண்ணையிலோ குழைத்தும் காயங்களுக்குப் போடுவதுண்டு.
பல்வலி ஏற்படும்போது வலியுள்ள பல்லில் சிறிது மஞ்சள்பொடியை வைத்து தேய்த்தால் (massage) பல்வலி தீரும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். வயிற்றுப் போக்கைத் (diarrhea) தடுக்கவும் மஞ்சள் பயன்படுகின்றது.
அடிபட்டதனால் ஏற்படும் புண், நீரில் அதிகநேரம் நிற்பதனால் ஏற்படும் சேற்றுப்புண் ஆகியவற்றிற்கு மஞ்சளை இழைத்துப் போடுவது நல்ல பலன் கொடுக்கும்.
இப்படி மஞ்சளின் பயன்களைப் பட்டியலிட்டால் அவை எண்ணிலடங்கா. நம் இந்திய மண்ணின் சொத்தான மஞ்சள், இயற்கை அன்னை நமக்கு வழங்கிய அருட்கொடையாகும். அழகு சாதனமாகவும், முதுமையை விரட்டும் காயகல்பமாகவும், அற்புதமான மருந்தாகவும் பயன்பட்டு வருகின்றது இம்மஞ்சள்.
மண்ணைத் தோண்டத் தோண்ட இயற்கை வளங்கள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல் மஞ்சளை வைத்து ஆய்வுகள் செய்யச் செய்ய அஃது எல்லா நோய்களையும் நீக்கக் கூடிய ஒப்பற்ற மாமருந்து என்பது மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது. (எனினும் சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் உடையோர் (kidney and gallbladder stones), நாட்பட்ட வயிற்றுப் புண்ணை (chronic stomach ulcer) உடையோர், மற்றும் இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துண்போர் (blood-thinning medications like Aspirin, Coumadin etc.) மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு மஞ்சளை உபயோகிப்பது சாலச் சிறந்தது.)
முத்தாய்ப்பாக நாம் சொல்ல விரும்புவது ஊனுடம்பாகிய ஆலயத்தினுள் புக எத்தனிக்கும் மூப்பு, பிணி போன்ற தீய சக்திகளைத் தடுக்கும் அரணாய் விளங்குவது மஞ்சளாகும். அயல்நாட்டவரும் போற்றும் நம் மஞ்சளின் மகிமையை நாம் உணர்ந்து பயன்படுத்துவோம். நோயின்றி வாழ்வோம்.
இறுதியாக மஞ்சளைப் ’போற்றிப் பாடி’ நாம் கட்டுரையை நிறைவு செய்வோம்.
”கொஞ்சும் எழில்திகழ் மேனியைப் பெற்றிட
அஞ்சி நோயெல்லாம் நமைவிட்டு ஓடிட
நெஞ்சம் இனிக்கும்நல் மங்கலம் தங்கிட
மஞ்சளைப் போற்றுதும் மஞ்சளைப் போற்றுதும்!”
படங்களுக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Turmeric
http://www.picsearch.com/pictures/Food%20!!%20Drink/Spices/Spices%20Tr%20-%20W/Turmeric.html
மஞ்சள் மங்கலம் தான்; அருமருந்து தான்.’நம் முன்னோர்கள் ஆன்மிகத்தையும், அறிவியலையும் சார்ந்தே தம் நடைமுறை வாழ்வைச் செம்மையாக நடத்தி வந்துள்ளனர்’ என்பதும் உண்மை தான். அந்த புகழ் சுமேரிய/மெசபடோமிய/கிரேக்க/ ரோமானிய நாகரீகங்களுக்கும் பொருந்தும். அறிவியலிலும், ஆன்மீகத்திலும் இந்தியாவும் முன்னோடிகளில் ஒன்று.
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா. மஞ்சளை இந்தியா மட்டுமல்லாமல் சீனா போன்ற பிற நாடுகளும் தங்கள் மருத்துவத்தில் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றன என்பது முற்றிலும் உண்மையே. மஞ்சளின் வரலாறு மிகவும் பழமையான ஒன்றாகும்.
–மேகலா