மேகலா இராமமூர்த்தி

சிந்தனை விதையைச் சிந்தையில் விதைத்தால்
எண்ண மென்றொரு எழுச்சியின் விளைவாய்
வந்து விழுந்திடும் வார்த்தைகள் அன்றோ
சந்தக் கவிதையாய் மலர்ந்திடு கின்றது!
சொந்தக் கருத்தைச் சுதந்திர மாக
வழங்க வாய்த்திட்ட வடிவமே கவிதை!
நொந்த மனங்களின் காயம் ஆற்றிடும்
மாயம் செய்ய வல்லது கவிதை!
கருத்து மலர்களைக் கொத்தாய்ச் சுமந்து
படிப்போர் உளத்தில் நல்மணம் பரப்பியே
விருப்பத் துடனே படிக்கச் செய்திடும்
ஆற்றல் கொண்டது அன்றோ கவிதை?
வரிகளை மடித்து எழுதிடு வதனால்
வருவன வெல்லாம் கவிதைகள் ஆமோ?
புரட்சிச் சிந்தனைப் புகுத்திடும் நல்ல
புதுக் கவிதைகள் புனைவதே சிறப்பு!
விருத்தம் எழுதிட இயல வில்லையா?
வஞ்சிப் பாவும் அஞ்சிடச் செய்குதா?
வருத்தம் வேண்டாம்! வாடுதல் வேண்டாம்!
சிரமம் தன்னில் சிக்கவும் வேண்டாம்!
சொல்லும் கருத்தில் தெளிவு இருந்திட்டால்
சோர்வைக் போக்கும் மருந்தாய் அமைந்திட்டால்
வெல்லும் மக்கள் உளந்தனை என்றும்
வீற்றி ருக்குமே என்றும் நிலையாய்!
நல்ல கவிதையை நாளும் படைத்திடும்
”வல்லமை” உண்டு வாருங்கள் செய்வோம்!!

படத்துக்கு நன்றி

http://www.bnbforum.com/music-albums-f15/bharathiyar-audio-songs-by-unnikrishnan-t110.html

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “எது கவிதை?

  1. அருமை. நான் எழுதுவதும் கவிதை தானா என்று யோசித்திருந்த வேளயில் நல்ல ஊக்க மருந்தாய் வந்தது. விசாகை மனோகரன்

  2. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

    -மேகலா

  3. வரிகளை மடித்து எழுதிடு வதனால்
    வருவன வெல்லாம் கவிதைகள் ஆமோ?
    புரட்சிச் சிந்தனைப் புகுத்திடும் நல்ல
    புதுக் கவிதைகள் புனைவதே சிறப்பு!

    நல்ல வரிகள், மேகலா.
    உங்கள் கவிதை வரிகள் உற்சாக மூட்டுகிறது.

    ….. தேமொழி

  4. தங்கள் பாராட்டுக்கு நன்றி தேமொழி.

    –மேகலா

  5. எது கவிதை என்று தெரியாமலே எழுதுவோர்க்கு ஒரு பாடமாக இருந்தது உங்கள் கவிதை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *