பொன் ராம்

அன்று நான் தூங்காமல் ஏனோ விழித்திருந்தேன். உறக்கம் வராமல் என் அருகில் படுத்திருந்த ஜிம்மியும், ஏனோ என்னை அதன் பச்சைக்கலர் டார்ச் லைட் கண்களால் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களுக்கு சுமி தெரிந்தாளோ? என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பாளோ? என ஜிம்மி என்ன செய்கிறது என உற்றுப் பார்த்தேன். அது நான் பார்ப்பதறிந்து ஃபோட்டோவிலிருந்த சகுந்தலாவைப் பார்த்தது. அதன் கண்ணில் ஏனோ இரண்டொரு துளி நீரை என்னால் உணர முடிந்தது. இரட்டை சடையும்,டென்னிஸ் பேட்டுமாய் அவள் சிரிக்கின்ற கன்னங்குழி அழகை இறைவன் தான் பார்க்க ஆசைப்பட்டு எடுத்தானோ?
ஏங்க! சகுந்தலாவுக்குப் பட்டுப்பாவாடை பச்சைக்கலரில் வாங்கலாமா?ஒரு ஃபோட்டோகூட எடுத்துடலாங்க! அவ வந்த பிறகு தான் இந்த வீட்டுல இத்தனை வசதி! சுமி!வேண்டாம்மா! நம்ம குடும்பத்துக்கு ஃபோட்டோ ஆகாது. நிலைக்காதுன்னு ஆச்சி சொன்னாங்க!

ஒண்ணே ஒண்ணு தான்! அதுக்கப்புறம் உங்களைக் கேக்கவே மாட்டேன்! சொன்னது முரளிதரனின் காதுக்குள் இன்னமும் கேட்டுக்கொண்டே இருப்பது போல் ஒரு பிரமை!

இருவருமே சொல்லாமலே சென்று விட்டீர்களே! என தொண்டைக்குள் ஏதோ மாட்டிய உணர்வு  தெரிந்தது. ஆட்டோவில் எவனோ வைத்த பாமிற்கு இவர்கள் தானா கிடைத்தார்கள்! பச்சைக்கலர் பட்டு கூட மிஞ்சவில்லையே அம்மா! என மனம் கூக்குரலிட்டு அழுதது. தவமாய் தவமிருந்து வாரிக் கொடுத்துவிட்டு நிற்கிறேனே! ஜிம்மி மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்திருப்பேன்!

இருட்டி வெகு நேரம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் வெளிச்சமிட ஏனோ மறந்த இறைவனை நினைத்தபடி இருந்தேன். ஜிம்மி நடக்க முடியாமல் எழுந்து சகுந்தலா இருந்த ஒவ்வொரு அறையாய் சென்று சிறிது நேரம் அப்படியே அமர்ந்து அவள் வைத்திருந்த ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்தது. அவளும், ஜிம்மியும் விளையாடிய பந்தை உருட்டித் தடுமாறி விழப்போனது. ஜிம்மி! என அழைத்த நான் கண்கலங்கியதைப் பார்த்து ஓடி வந்து எனது மடியில் படுத்தது. அழைத்து அழைத்துப் பார்த்தேன்!. அது எழுந்திருக்கவே இல்லை. வாழ்க்கையில் பல மரணத்தைப் பார்த்த என் கண்ணில் ஏனோ அன்று நீர் வரவேயில்லை. எனது அப்பா வாங்கிக் கொடுத்த ஈசிசேரில் படுத்தபடி ஜிம்மியைத் தடவியபடி இருந்தேன். உயிர் ஏனோ தன் வரவை யாருக்கும் சொல்லாமலே வருவது போல் சென்று விடுகிறது.

காலைப்பனியில் மப்ளர் போட்ட செக்யூரிட்டி அய்யா! பால் என ஒருக்களித்த கதவை ஆச்சரியத்துடன் திறந்தான்! உள்ளே மடியில் ஜிம்மியுடன் ஃபோட்டோவைப்பார்த்த நிலையில் உயிர்பிரிந்த சாம்பசிவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் வெளியே தகவல் சொல்ல ஓடினான்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உறவுகள்

  1. ஜிம்மியும் பிரிவுத் துயர் தாளாது வருந்துவதைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள். கதையினைச் சொல்லிய விதம் அந்த நிகழ்ச்சியை மனதில் பதித்து விட்டது, நன்றி.

    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.