பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!

0

மேகலா இராமமூர்த்தி

சங்க காலத்தில் மதிப்பும், மரியாதையும், கல்வியறிவும் நிரம்பப் பெற்றவர்களாய்ப் பெண்கள் விளங்கினர் என்பது சங்கப் புலவர்களாய் அவ்வையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், காமக்கண்ணியார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்ததன் வாயிலாய்த் தெள்ளிதின் புலப்படுகின்றது. ஆனால், இடைக் காலத்தில் பரவிய வைதீக நெறியானது பெண்களின் மதிப்பைக் குறைத்ததோடல்லாமல், அவர்தம் உரிமைகளையும் பறித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் ஆக்கிவிட்டது என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.

இப்படிச் சிறிது சிறிதாய்ப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழந்து ஆடவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்; ஏன்…சிறைப்படுத்தப்பட்டனர் என்று சொல்வதில் கூடத் தவறில்லை. அடுப்பூதுவதும், அடுக்களை துடைப்பதும், பிள்ளைகளைப் பெறுவதுமே அவர்களின் தலையாயக் கடமைகள் என்றாயின.

பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும்; அவர்களும் சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராய் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற சமதர்மச் சிந்தனைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெறத் தொடங்கின. பெண்களுக்கெதிரான ‘தேவதாசி’ முறைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழித்த பெருமை மருத்துவப் பணிசெய்த ’முத்துலட்சுமி ரெட்டியார்’ என்னும் அம்மையாரையே சாரும். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரோடு இணைந்து மூவலூர் இராமாமிர்தத்தம்மையார்’ என்ற பெண்மணி பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் மிகவும் போராடினார்.

களப்பணியாற்றிப் பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; கவிப்பணியாற்றி பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க இருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற கவிஞர்களான மகாகவி பாரதியும், அவர்தம் சீடரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஆவர். தீப்பொறி பறக்கும் தங்கள் கவிதைகள் வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தனர் இவ்விருவரும். அதிலும் பாரதிக்குப் பின்னும் நெடுநாள் வாழக்கூடிய பேறுபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப் பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப்பாக்கள் வாயிலாகத் தீர்வு கண்டுள்ளார். அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட ஆற்றிய கவிதைப் பங்களிப்பை இக்கட்டுரை வழியாகச் சற்று ஆய்வோம்.

இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாரதிதாசன், அதனை ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற தன் காவியத்தில் அக்காவிய நாயகியின் வாய்மொழிகளாய் அமைத்துள்ள பாங்கு நம் நெஞ்சைக் கவர்கின்றது.

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”

என்று ஆண்குலத்திற்கு ஓர் பெண் மூலமாக எச்சரிக்கை விடுக்கின்றார் புரட்சிக் கவிஞர்.

பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திச் சொல்கின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.

”பெண்கட்குக் கல்வி வேண்டும்

குடித்தனம் பேணு தற்கே! 
பெண்கட்குக் கல்வி வேண்டும்

மக்களைப் பேணுதற்கே! 
பெண்கட்குக் கல்வி வேண்டும்

உலகினைப் பேணுதற்கே! 
பெண்கட்குக் கல்வி வேண்டும்

கல்வியைப் பேணுதற்கே! 
 
கல்வியில் லாத பெண்கள்

களர்நிலம்; அந் நிலத்தில் 
புல்விளைந் திடலாம்; நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை! 
கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி; அங்கே 
நல்லறி வுடைய மக்கள்

     விளைவது நவில வோநான்?” 

என்று பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.

புரட்சிச் சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர் சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர் கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.

பெண்கள் தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின், மற்றோரின் கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக் கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே. இதோ அவ்வரிகள்……….

’கல்யாணம் ஆகாத பெண்ணே! – உன்

கதிதன்னை நீநிச்ச யம்செய்க கண்ணே!

வல்லமை பேசியுன் வீட்டில் – பெண்

வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;

நல்ல விலை பேசுவார் – உன்னை

நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,

கல்லென உன்னை மதிப்பார் – கண்ணில்

கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;

வல்லி உனக்கொரு நீதி – இந்த

வஞ்சத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்

…………………………………………………………………………………………………………..

கற்றவளே ஒன்று சொல்வேன் – உன்

கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’

பெண்ணை விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

கைம்பெண்களின் (கணவனையிழந்தோர்) நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். சான்றுகள் சில….

”கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு

வேரிற் பழுத்த பலா – மிகக்

கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்

வடிக்கின்ற வட்ட நிலா!”

என்று கைம்பெண்களை இச்சமூகம் ஒதுக்கிவைத்தும், அழவைத்தும் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு உள்ளம் வெதும்பிப் பாடுகின்றார்.

இக்கைம்மைக் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம் கொண்டவராய்,

”ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்

அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?

பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்

பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்

மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று சீறுகின்றார்.

காதல் என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அஃது சரியே என்று ஒத்துக் கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால் அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல் அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை; சிந்தனையைத் தூண்டுபவை.

”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்

பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”

என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும் இச்சமூகத்தை நோக்கிக் காட்டமாக வினா எழுப்புகின்றார். இவ்வாறெல்லாம் பாவேந்தர் ஒருவரால் மட்டுமே சிந்திக்க முடியும் எனத் தோன்றுகின்றது.

அடுத்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் பாரதிதாசன். இதோ அப்பாடல்….

”கண்களும் ஒளியும் போலக்

கவின்மலர் வாசம் போலப்

பெண்களும் ஆண்கள் தாமும்

பெருந்தமிழ் நாடு தன்னில்

தண்கடல் நிகர்த்த அன்பால்

சமானத்தர் ஆனார் என்ற

பண்வந்து காதிற் பாயப்

பருகுநாள் எந்த நாளோ ?” 

 

 

அதுமட்டுமன்று, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர், புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் நம் கண்முன் தோன்றுகின்றார்.

”—————————––காதல் 
உடையார்தம் வாழ்வில்

உளம்வேறு பட்டால் 
மடவார் பிறனை

மணக்க-விடவேண்டும் 
ஆடவனும் வேறோர்

அணங்கை மணக்கலாம்.” என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.

பெண்ணுரிமைக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து குரல் எழுப்பிய பாவேந்தர் பெண் கல்வியறிவு படைத்தவளாக, தன் குடும்பத்தினைச் சீரோடும், சிறப்போடும் நிர்வகிக்கும் திறன் பெற்றவளாக இருக்கவேண்டும் என்பதனைத் தன் பாடல்களில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். அத்தகைய திறனற்றவளாகப் பெண் இருந்துவிட்டால் அவளைத் தலைவியாகக் கொண்ட குடும்பம் எவ்வாறு சீரழியும் என்பதனைத் தன் ‘இருண்ட வீடு’ என்ற காவியத்தின் வாயிலாக நகைச்சுவை ததும்பச் சொல்லியிருப்பார். படித்து மகிழவேண்டிய ஓர் இனிய காவியம் அது.

இவற்றோடு நில்லாமல், குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப் பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும் தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார்.

”பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

என்று வீரமுழக்கம் எழுப்பிய தன் கவியாசான் மகாகவி பாரதி போட்ட பாதையிலே தன் கவிதைத் தேரை அழகாகவும், அற்புதமாகவும் செலுத்திப் பெண்டிர்தம் வாழ்வில் ஒளியேற்ற உழைத்த பாரதிதாசனைத் தமிழகப் பெண்கள் என்றும் மறவாது போற்ற வேண்டும்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், அவர்தம் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் அசம்பாவிதச் செயல்களும் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனை தருவதாகவே உள்ளது. எனினும், சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரையில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த பெண்ணினம் தலைநிமிர்ந்து நடக்கவும், பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும், ஆணுக்கு நிகராகவும், அவர்களினும் மேம்பட்டும் பல சாதனைகள் படைக்கவும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த முன்னோடிகள் வரிசையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் ஓர் முக்கிய இடமுண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *