மேகலா இராமமூர்த்தி

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஆதிரை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அது நேரம் காலை 8:30 எனக் காட்டியது. “என்ன இது? எப்போதும் 8:25-க்கே வர்ற பஸ்ஸை இன்னும் காணலையே…? காலேஜ் போக லேட்டாயிடும் போலருக்கே….ப்ரொஃபசரே லேட்டாப் போனா ஸ்டூடெண்ட்ஸ்  என்ன நினைப்பாங்க” என்று யோசித்தவாறே நின்றிருந்தாள். நல்ல வேளை! அவளுடைய பொறுமையை மேலும் சோதிக்காமல் அந்தப் பேருந்து வந்து சேர்ந்தது. அவள் விரும்பியபடி ஜன்னலோர இருக்கையே கிடைத்ததால் மகிழ்ச்சியோடு அங்கு சென்று அமர்ந்தாள். சில்லென்ற குளிர்ந்தகாற்று அவள் முகத்தைத் தாக்கி அவளுடைய சுருண்ட கூந்தலை அலைபாய வைத்தது.

கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்முன் தன் தாய் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் திரும்பவும் ஒலித்தன. “அம்மா….ஆதிரை! இன்னிக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஒன்னப் பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..அதனால அரை நாள் லீவு சொல்லிட்டு, மதியம் ஒண்ணு, ஒண்ணரை மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடும்மா…ப்ளீஸ்..!, இன்னைக்கு ஒரு நாள் முழுசா லீவு போடுன்னு சொல்றேன் கேக்க மாட்டேங்கறே” என்றாள். மேலும் தொடர்ந்து,”ம்…ம்…! இந்த எடமாவது அமைஞ்சாத் தேவலை..எத்தன நாளைக்கு பொம்பளப் புள்ளைய வீட்டுல வெச்சுக்கறது…” என்று பேசிக் கொண்டே போனாள். தன் தாயின் பேச்சுக்கள் ஒன்றுமே ஆதிரைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் தான் ஏதாவது சொன்னால் தாயின் மனம் புண்படும் எனக்கருதி அமைதி காத்தாள்.

”பாப்பா..! டிக்கெட் இந்தாம்மா! ஏதோ பலமான யோசனையில இருக்கற மாதிரி தெரியுது” என்றபடி பேருந்தின் நடத்துநர் அவள் கையில் டிக்கெட்டைத் திணித்தார். தினமும் இதே பேருந்தில் செல்வதனால் அதில் வேலைசெய்யும் நடத்துநர்கள் அனைவருமே ஆதிரைக்கு அறிமுகமானவர்கள் தாம். நடத்துநரின் கேள்விக்குப் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு டிக்கெட்டிற்கான பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு டிக்கெட்டைப் கைப்பையில் பத்திரப்படுத்தினாள் ஆதிரை.

சம்பவங்களைத் தொடர்வதற்கு முன் கதாநாயகியைப் பற்றி வாசகர்களுக்கு ஓர் சிறிய அறிமுகம்.

நம் கதையின் நாயகி, மார்கழி மாதம் நிறைந்த பௌர்ணமித் திதியில் வரும் திருவாதிரைத் திருநாளில் அவதரித்ததால்……ஸாரி..பிறந்ததினால் அவளுக்கு  ஆதிரை என்று பெயரிட்டு அன்பும், அறிவும் ஊட்டி வளர்த்து வந்தனர் அவள் பெற்றோர். அழகிய முகவெட்டும், துறுதுறுவென்ற கண்களும், நீண்ட, சுருண்ட கார்கூந்தலும், அளவான உயரமும், அதிக வெளுப்போ, கருப்போ இல்லாத மாந்தளிர் வண்ணமும் கொண்ட அவளை அழகியாக ஒப்புக்கொள்வதில் யாருக்கும் தயக்கம் இருக்காது.

மிகச் சிறந்த தமிழறிஞராகிய அவள் தந்தை ’எழிலரசன்’ அவளுக்குச் சிறுவயதிலேயே தொல்காப்பியம், திருக்குறள், பகுத்தறிவுச் சிந்தனைகள் எனப் பலவற்றையும் ஊட்டி அவளின் அறிவை வளப்படுத்தி ’அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது’ என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கினார். இவ்வாறு ஆதிரை நாளொரு விளையாட்டும் பொழுதொரு குதூகலமுமாகத் தன் பள்ளிப் பருவத்தை இன்பமாய்க் கழித்தாள். கல்லூரிப் பருவமும் களிப்புடனேதான் சென்றது.

கணினி அறிவியல் படித்தால் தான் எதிர்காலம் என்ற மாயை எழுந்த காரணத்தால் அவளும் கணினியிலேயே உயர்கல்வி பயின்றாள். இதோ… இப்போது ஓர் தனியார்க் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் விரிவுரையாளராய்ப் பணியாற்றுகின்றாள்.

நடிகர் வடிவேலு சொல்வதுபோல் “எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்திச்சு” ஆதிரைக்குக் திருமணப் பருவம் வரும்வரை. இப்போதோ….வீட்டில் ஆதிரையின் தாய் எப்போது பார்த்தாலும் தன் மகளின் திருமணத்தைப் பற்றியே பேசுகின்றாள். இவள் வயதொத்த பெண்களில் யாருக்காவது திருமணம் என்று வீட்டிற்குப் பத்திரிகை வந்துவிட்டால் போதும்….தன் மகளுக்கு இன்னும் திருமணம் கூடிவரவில்லையே எனப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றாள். ஆனால், இந்தப் புலம்பலையெல்லாம் ஆதிரை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு வரமா? சாபமா? என்று திருமணமாகித் தன் அடையாளத்தைத் தொலைத்த பல பெண்களைப் பார்க்கும்போதும் ஆதிரை எண்ணமிடுவாள். தன் தாய், தந்தையரும் தன்னை அருமையாக வளர்த்ததை மறந்து இப்போது வேறோர் வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே என அவள் வருந்துவதுண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் ‘பெண்பார்க்கும் படலங்கள்’ ஆதிரையின் பொறுமைக்குப் பெரும் சோதனையாகவே இருந்துவருகின்றன. இதுவரை இரண்டு இடங்களிலிருந்து வந்து ஆதிரையைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். சென்றவர்களிடமிருந்து இன்றுவரை எந்த ஒரு தகவலும் இல்லை.

பெண்பார்க்க வந்துசென்ற இரு பையன்களுமே மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் தாம். முதலில் வந்த பையன் தன் தாய், தந்தை, சகோதரி சகிதம் பெண் பார்க்க வந்திருந்தான். வந்தவன் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தான். எல்லாக் கேள்விகளையும் அவன் தாயும், உடன் வந்திருந்த அவன் சகோதரியுமே கேட்டுக் கொண்டிருந்தார்கள் (இதுதான் பெண்ணுரிமையோ!). அவன் தந்தையும் வாய் திறக்கவில்லை.  நல்லவேளையாகச் சாப்பிடும்போது தந்தையும், மகனும் வாய் திறந்தார்கள். வந்தவர்கள் வீட்டை நன்றாகச் சுற்றிப் பார்த்தார்கள். எத்தனை கிரவுண்டு? எப்போது கட்டியது? என்று (வீட்டைப் பற்றிப்) பல உருப்படியான கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்து கொண்டார்கள் (ஏதோ வீட்டைத்தான் பார்க்க வந்தவர்கள் போல்!). வீட்டின் எளிமையான தோற்றமும், உயர்ந்த பதவியிலிருந்தாலும் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் மட்டுமே அணிந்து கொண்டிருந்த ஆதிரையின் தந்தை எழிலரசனின் எளிமையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இந்த வீட்டில் பெண் எடுத்தால் பெரிதாக ஒன்றும் கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ!… ஊருக்குச் சென்றவுடன் உறவினர்களைக் கலந்துகொண்டு முடிவு சொல்கிறோம் என்று போனவர்கள் தான். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.

அடுத்த மாதத்திலேயே இன்னும் ஒரு குடும்பம் வந்து ஆதிரையைப் பெண் பார்த்து விட்டுச் சென்றது. இந்த முறை மாப்பிள்ளைப் பையனையும் சேர்த்து ஏழெட்டு உருப்படிகள் வந்து இறங்கினர். வந்திருப்பது பெண் பார்ப்பதற்கா.. அல்லது கல்யாண வீட்டில் விருந்து சாப்பிடவா? என்று ஆதிரையின் பெற்றோர் மலைத்தனர். எனினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆதிரையின் தாய் வழக்கம்போல அவர்களை நன்றாகவே உபசரித்தாள். இந்தப் பையனும் மென்பொருள் பொறியாளனாகவே பணியாற்றுவதாய் ஆதிரை அறிந்தாள். இவனும் ஆதிரையை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தலைகுனிவதுமாக இருந்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை; ஒரு முடிவுக்கும் வந்தவனாகவும் தெரியவில்லை. இந்த கேலிக்கூத்தையெல்லாம் பார்த்த ஆதிரைக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. “ஏன்டா, பொண்ணப் பிடிச்சிருக்கா…இல்லையாங்கறத இப்பவே சொல்லேன்டா…ஏன் தலயக் குனிஞ்சுகிட்டு ஒக்காந்திருக்க…..கோழை” என்று தனக்குள் திட்டித் தீர்த்தாள்.

இப்படிச் சமீபத்தில் நடந்த (அவளுக்குப் பிடித்தமில்லாத) நிகழ்ச்சிகள் பலவற்றை அவள் மனது பேருந்தில் அமர்ந்து கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ‘ரீப்ளே’ செய்து கொண்டிருந்தது. அப்போது யாரோ தன் தோளைத் தொடவும், ஆதிரை தன் நினைவலைகளிலிருந்து மீண்டு நனவுலகிற்கு வந்து, யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். மேடம் …நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்திடுச்சு…நீங்க எறங்கலியா?” என்று தன்னிடம் படிக்கும் மாணவி ஒருத்தி கேட்கவும் விரைவாகப் பேருந்தை விட்டு இறங்கிக் கல்லூரி நோக்கி நடந்தாள்.

கல்லூரியில், ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து மாணவி ஒருத்தியின் வினாத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த ஆதிரை, தன் அலைபேசி சிணுங்குவதைக் கண்டு அதனை எடுத்துப் பார்த்தாள். அது தன் தாய்தான் என்பதனை அறிந்து….. பழைய புராணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறாளே என்ற சலிப்போடு, ”ஹலோ!” என்றாள். எதிர்முனையில் ஆதிரையின் தாய் பதட்டத்தோடு பேசினாள்”, அம்மாடி ஆதிரை.! இன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்காரங்க ஏற்கனவே சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே நம்ம வீட்டுக்கு வராங்களாம். அப்படிப்பாத்தா.. மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் நம்ம வீட்டுல இருப்பாங்க….இப்ப பாத்து நீ காலேஜ் பசங்களுக்கு டெஸ்ட் குடுக்கணும்னு சொல்லிட்டு அங்க போய் ஒக்காந்திருக்கியேம்மா? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு? எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. உடனே கெளம்பி வாம்மா. இப்பவே மணி 11:30 ஆகுது. ஒங்க அப்பாவுக்கும் ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கேன். ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குது, இருந்தாலும், அத கான்சல் பண்ணிட்டு ஒண்ணரை மணிக்கே வீட்டுக்கு வந்துடறேன்னு சொல்லிட்டார்…..” என்று பட படவெனப் பொரிந்து கொட்டினாள்.

அம்மாவை நினைக்கையில் ஆதிரைக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தப் ”பெண்பார்க்கும் படலங்களும்” அதனால் பெண் வீட்டார்க்கு ஏற்படும் மன உளைச்சலும், செலவுகளும் கொஞ்சமா…நஞ்சமா? இதனை ஏன் ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் உணர்வதில்லை?

என்னதான் சமதர்மம், சமநீதி என்று ’மைக்’ பிடித்துக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாலும் நடைமுறையில் அவை சாத்தியம் இல்லாமலே போவதேன்? ஒரே செயலுக்கான அணுகுமுறையும், அளவுகோலும் ஆணுக்கொன்றாகவும், பெண்ணுக்கொன்றாகவும்தானே இன்றுவரை இருந்துவருகின்றது….என்று சிந்தனைவலை மீண்டும் மனத்தில் கூடுகட்ட ஆரம்பிக்க…அந்தச் சிந்தனையைக் கலைத்து, ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்று முடிவெடுத்து எழுந்தாள் ஆதிரை.

அரை நாள் விடுப்புக் கடிதம் (leave letter) ஒன்றை எழுதிமுடித்து, பிரின்சிபால் இருக்கும் அறைக்குச் சென்று அவரிடம் நீட்டினாள். நல்ல வேளையாக அவரும் தேவையற்ற கேள்விகள் எதனையும் கேட்காமல் ஆதிரையைப் போக அனுமதித்தார். நல்ல சூடிகையான பெண் என்று அவளிடம் அவருக்குப் எப்போதும் பிரியம் உண்டு.

மீண்டும் வீடு நோக்கிய தன் பேருந்துப் பயணத்தைத் தொடங்கிய ஆதிரை ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவளாக பேருந்தை விட்டு இறங்கினாள். மாப்பிளை வீட்டாருக்கு இனியும் தன் தாய் ”சொஜ்ஜி, பஜ்ஜி உபசரணைகள்” செய்துகொண்டிருக்க வேண்டாம் என்று எண்ணமிட்டபடி வீடு நோக்கி நடந்தாள். ஆதிரை வாசல் கேட்டைத் திறக்கவும், அவள் தாய் அவளை நோக்கி விரைவாக வந்து, ”வாம்மா…! சீக்கிரம் சாப்பிட்டுட்டு ரெடியாயிடு, அவங்கல்லாம் வந்துடுவாங்க…லேட் பண்ணாதே” என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.

தன் தாயின் முகம் வியர்த்திருப்பதைப் பார்த்த ஆதிரை, அம்மா வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய டிபன் உபசாரங்களுக்காகத்தான் இப்படி வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையறிந்து, ”சரிம்மா, இதோ சாப்பிடறேன்” என்று சொல்லி உடனே போய்ச் சாப்பிட உட்கார்ந்தாள். ”இந்தா…இந்த கேசரி எப்படியிருக்குன்னு கொஞ்சம் டேஸ்ட் பாத்துச்சொல்லு!” என்ற தாயின் வேண்டுகோளை நிராகரித்து…..”எல்லாம் நல்லாத்தான் செஞ்சிருப்பீங்கம்மா…உங்க சமையல் திறமையப் பத்தி இனிமேதான் நான் புதுசாத் தெரிஞ்சுக்கணுமா என்ன?” என்று கேட்டுவிட்டு, “நம்ம வீட்டுக் கேசரி ருசிக்காக யாரும் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்ல… அவங்களோட எதிர்பார்ப்பு என்னங்கறது அவங்களுக்குத் தானே தெரியும்” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டு உணவினை உண்டு முடித்தாள்.

வழக்கம்போல் தன்னை மிகவும் எளிமையாகவே அலங்கரித்துக் கொண்ட ஆதிரை கண்ணாடிமுன் போய் நின்றாள். அப்போது அவள் மனதிற்குள்ளிருந்து ஒரு குரல்.. ”ஆதிரை! இப்படிப் ’பெண்பார்க்கும் படலத்திற்காக’ நீ அரிதாரம் பூசிக்கொள்வதும், அன்ன நடை நடப்பதும் இதுவே கடைசி முறையாயிருக்கட்டும்” என்று ஒலித்து மறைந்தது.

பிற்பகல் மணி 2:30. மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வரவில்லையே என்று ஆதிரையின் தந்தை வாசலுக்குச் செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தார். வீட்டில் எல்லாருடைய இதயங்களும் ஏதோ ஓர் பரபரப்பினாலும், சிறிது பயத்தினாலும் வழக்கத்தை விடச் சற்று வேகமாகவே துடித்தன. நல்லவேளை….அதற்கு மேலும் தாமதம் செய்யாமல் 2:45 மணி வாக்கில் மாப்பிள்ளை வீட்டார் வீட்டினுள் நுழைந்தனர்.

தன் தாயும் தந்தையும் அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பதும், தங்கள் தாமதத்திற்குத் தாங்கள் வந்த பேருந்துதான் காரணம் என்று வந்தவர்கள் கூறிக்கொண்டிருந்ததும் தனியறையில் அமர்ந்திருந்த ஆதிரையின் காதிலும் விழவே செய்தது.

சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்தபின் ஆதிரையின் தாய் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து ஆதிரையை பார்த்து “வாம்மா! அவங்கல்லாம் உன்னப் பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள். இப்போது ஆதிரைக்கும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்து மாப்பிள்ளை வீட்டாரை நிமிர்ந்து பார்த்து ஓர் செயற்கைப் புன்னகை உதிர்த்தாள்.

மாப்பிள்ளைப் பையனின் அம்மா ஆதிரையை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து, ”வாம்மா…வந்து என் பக்கத்துல ஒக்காரு” என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். விலையுயர்ந்த பட்டுப் புடைவையும், முழங்கை வரையில் குலுங்கிய தங்க வளையல்களும், கழுத்தில் ஜொலித்த கல் நெக்லஸுமாகத் தன்னை ஓர் மணமகள்போல் அலங்கரித்துக் கொண்டுவந்திருந்தாள் பையனின் அம்மா. அரக்கு நிற க்ரேப் சில்க் புடைவையும், கழுத்தில் ஒரே ஒரு சங்கிலியும் அணிந்திருந்த ஆதிரையைக் கண்டதும் அவள் முகத்தில் அவ்வளவாக மலர்ச்சியில்லாததை ஆதிரை கவனிக்கத் தவறவில்லை.

அந்த அம்மாள் பின்பு மெதுவாக ஆதிரையைப் பார்த்து “எங்கம்மா வேல செய்யற? என்ன சம்பளம்?” என்று கேள்விகளை ஒவ்வொன்றாக வீசினாள். ஆதிரையும் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். பின்பு தன்னுடைய தாய்”, பையன் எந்தக் கம்பனியில (company) வேலை செய்யறார்?” என்று கேட்ட கேள்விக்குப் பையனின் தாயே பதில் சொல்லத் தொடங்கினாள். இன்று பெண்பார்க்க வந்திருக்கும் பையனும் ஒன்றுமே பேசவில்லை. சொல்லிவைத்தாற்போல் இதுவரைத் தன்னைப் பெண்பார்க்க வந்த பையன்களில் ஒருவர் கூடப் பேசாததும், அவர்களின் தாய்மார்களே பேசிக் கொண்டிருந்ததும் ஆதிரைக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்தன.

“இப்படியே போய்க்கொண்டிருந்தால் பெண்ணும், பையனும் ஒருவர் மனதை மற்றொருவர் அறிவதுதான் எப்படி?” என்று ஆதிரை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், “சரி! அப்ப நாங்க கெளம்பறோம்….சீக்கிரத்தில ஃபோன்ல தகவல் சொல்றோம்”….என்று பையன் வீட்டார் எழவும்….ஆதிரையும் எழுந்தாள். ”கொஞ்சம் இருங்க…..நீங்க என்னைப் பிடிச்சிருக்கா…இல்லையான்னு ஒரு முடிவும் சொல்லாமலே கெளம்பறீங்களே…?” எனக் கேட்டாள். பையன் வீட்டார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்தனர். ஆதிரையின் தாய் உடனே கோபமாக ஆதிரையைப் பார்த்து, ”ஏய்..ஆதிரை என்ன இது அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி…அவங்கதான் ஊருக்குப் போனப்பறம் சொல்றோங்கறாங்கல்ல…பேசாம இரு” என்று அதட்டவும், ஆதிரை சற்று ஆவேசமானாள். ”ஊருக்குப் போய் முடிவு சொல்றதுக்கு இதுல என்னம்மா இருக்கு? பெண்ணை இவங்களும் இவங்க பையனும் பாத்தாச்சு…. பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறத இப்பவே சொல்ல என்னத் தயக்கம்?” என்று கேட்டுவிட்டுப் பையனைப் பார்த்தாள். அவன் பேந்தப் பேந்த விழித்தபடி ஆதிரையைப் பார்க்க, ஆதிரை நேரடியாகவே அவனைக் கேட்டாள். ”உங்க அம்மா, அப்பா இங்கேயே சொல்ல யோசிக்கிறாங்க போலிருக்கு. நாம இந்தத் தலைமுறை….எல்லா விஷயத்திலேயும் நம்மள மாத்திகிட்டு வர்றோம்….அப்புறம் பெண் பார்க்கும் விஷயத்தில் மட்டும் ஏன் பழைய பஞ்சாங்கமா இருக்கணும்..? உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா….பிடிக்கலையா…? எதுவானாலும் சரி…..உங்க முடிவை இப்பவே சொல்லிடுங்க… வீணா நாளக் கடத்துவானேன்?” என்று அதிரடியாய்க் கேட்க அவன் இவற்றையெல்லாம் எதிர்பார்க்காதவனாய் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தன் தாயின் முகத்தையும், தந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவர்களும் இப்படி ஓர் சூழ்நிலையை இதுவரை சந்திக்காத காரணத்தால் சிலையாய் நின்றனர்.

ஆதிரை தொடர்ந்தாள்….”பெண் பிடிச்சிருக்கா.. இல்லையாங்கறதக் கூடத் தானா சொல்லத் தெரியாம…அதுக்குக்கூட அம்மாவையும், அப்பாவையும் கேக்கற உங்க பையன், எந்த விஷயத்திலும் சொந்தமா முடிவெடுக்கற சக்தியோ, திறமையோ இல்லாதவராத்தான் இருக்கணும். பெண் பாக்க வந்தா சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும், தங்கள் முடிவைச் சுதந்திரமாச் சொல்லவும் அனுமதிங்க. இனிமேலாவது… பெண் பாக்கப் போற இடத்தில உங்க விருப்பத்தையும், முடிவையும் உடனே சொல்லிப் பெண் வீட்டுக்காரங்களுக்கு ஏற்படற வீணான மன உளைச்சலைத் தவிர்க்கப் பாருங்க…” என்று பேசி முடித்தாள். அவர்கள் பதில் பேசாமல் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வெளியேறினர்.

ஆதிரையை எரிப்பது போல் பார்த்தாள் அவள் தாய். ”உனக்கு என்னாச்சு இன்னிக்கு? ஏன் இவ்வளவு அநாகரிகமா நடந்துகிட்டே?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள். ”எதும்மா அநாகரிகம்…? நாகரிகம் எதுன்னு சுட்டிக்காட்டுறதுக்குப் பேரா அநாகரிகம்?” என்று கேட்ட ஆதிரைக்கு இப்போது அவளுடைய அப்பா ஆதரவுக்கரம் நீட்டினார். “ஆதிரை நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லம்மா. அறிமுகம் இல்லாதவங்க முன்னால ஒரு அலங்கார பொம்மை மாதிரி வந்து நிக்கறதுன்னா.. அது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சங்கடமான விஷயங்கறது எனக்கு நல்லாப் புரியுதும்மா. அதுலயும் மாட்டோட பல்லப் புடிச்சுப் பாக்கற மாதிரிப் பாத்துட்டு, ஒரு முடிவும் சொல்லாமப் போறதுங்கறது நாகரிகம் இல்லாத நடைமுறையாத்தான் இருந்துட்டு வருது” என்றார்.

புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போலச் சிறிது நேரத்திற்குப் பின் ஆதிரையின் வீட்டில் இயல்புநிலை மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது.

தன் அறைக்குச் சென்று தான் வழக்கமாகச் செய்யும் கணினி சம்பந்தமான வேலைகளில் மூழ்கிய ஆதிரை, திடீரென்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். ”அம்மா..அப்பா ரெண்டு பேரும் இங்க உடனே வாங்க” என்று உற்சாகக் குரல் கொடுத்த அவளைக் காணும் ஆவலில் அவளின் தாயும், தந்தையும் அவள் அறைக்கு விரைந்து வந்தனர். ஆதிரை அவர்களைக் கண்டதும்…..”அம்மா..!, நான் போன வாரம், சென்னையில இருக்கற ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த இண்டர்வியூக்குப் போயிட்டு வந்தேன் இல்லையா? அடுத்த வாரமே வேலையில சேரச் சொல்லி அவங்ககிட்டேயிருந்து எனக்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் (appointment letter) வந்திருக்கு” என்றாள். அவள் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது. சமீபத்தில் அவ்வளவு உற்சாகத்தோடு தன் மகளைக் கண்டிராத ஆதிரையின் தாய் அவள் முகத்தையே மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, ”அம்மா! எனக்குக் கொஞ்சம் கேசரி கொண்டுவாங்க.. உடனே சாப்பிடணும்போல இருக்கு” என்றாள் ஆதிரை.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “ஆதிரையின் தீர்மானம்

 1. அருமை!!, அருமை…. எழுந்து நின்று கைதட்டத் தோன்றுகிறது. பெண் மனதை துல்லியமாகப் படம்பிடித்து கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள். கதை முடிவில், நாயகியின்  சந்தோஷம், நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நல்ல முடிவு. மிக்க நன்றி.

 2. நன்று. தொடர்ந்து படைப்புகள் பெருகவும் வாழ்த்துகள்!!

 3. திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு வரமா? சாபமா? ஹ..ஹ..ஹா..
  இதில் சந்தேகம் வேறா நாயகி ஆதிரைக்கு (நல்ல பெயர்).
  எப்பொழுதும் இந்த ஒப்பந்தத்தில் இழப்புக் கணக்கினை எதிர்கொள்பவர்கள் யார் என்றுதான் தெரியுமே.
  தேவையான, தங்களுக்கு ஆதாயமான நேரத்தில் மட்டும் பெண்ணுரிமை தாராளமாக வழங்கப் படும் என்பதையும் தெள்ளத் தெளிவாகப் பெண் பார்க்கும் படலம் விவரிக்கிறது.
  பெற்றோர்களின் மனதை நோகடிக்கப் பயந்து ஆண்களும் பெண்களும் திருமண காலத்தில் வாய் திறக்காமல் இருப்பது அவர்கள் மதிப்பையும் குறைத்து, மன உளைச்சலையும் தரும். அடுத்த தலைமுறையில் இது நிகழாது என்று எதிர் பார்ப்போம்.
  புது வேலை கிடைத்த மகிழ்ச்சி ஆதிரைக்கு மட்டுமல்ல. பெண்கள் பிறந்ததே குடும்ப வாழ்க்கைக்கு மட்டும் என்ற எண்ணத்தை மாற்ற விரும்பும் பலருக்கும் இது மகிழ்ச்சியைத் தரும்.
  உங்களிடம் இருந்து மேலும் இது போன்று நிகழ்ச்சியின் வேறு வேறு கோணங்களைக் காட்டும் கதைகளை எதிர்பார்க்கிறேன் மேகலா.
  உங்கள் எழுத்து நடை மிக மிக இயல்பாக இருக்கிறது.
  நன்றி. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  ….. தேமொழி

 4. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த திருமதி. பார்வதி இராமச்சந்திரன், திரு. பழமைபேசி, திருமதி. தேமொழி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  -மேகலா

 5. அந்தக்காலத்திலிருந்தே பெண்பார்ப்பது என்பது தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது. அதனால் தான் “படலம்” என்ற அடைமொழியும் அதனோடு ஒட்டிக்கொண்டது போலும். தற்போது அபரிமிதமான விஞ்ஞான முன்னேற்றத்தினால், பெண்பார்க்கும் படலம் முன்பைவிட குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். பெண் பிடித்திருக்கிறதா?..இல்லையா?..என்பதைக்கூட பையன் அம்மா, அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்கின்ற விஷயத்தைக் கடுமையாகச் சாடுகின்ற கதாநாயகி ‘ஆதிரை’ போல் இன்றும் பல பெண்களின் நிலைமை கல்யாணத்துக்குப் பிறகும் கூட நீடிக்கிறது என்பதே உண்மை நிலை. கல்யாணம் ஆனபிறகுகூட, பாங்க் அக்கெளண்ட், சம்பளம், போனஸ், அரியர்ஸ் இப்படி எல்லாவற்றையும் அம்மா, அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு, கட்டிய மனைவிக்கு ஒரு புடவை வாங்குவது என்றால் கூட பெற்றோர்களின் உத்தரவுக்காக ஏங்குகின்ற உத்தம மாப்பிள்ளைகள் இன்றும் இருக்கிறார்கள். கதையின் ஆரம்பமும், முடிவும் நன்று. பாராட்டுக்கள்.

 6. கதையைப் படித்துத் தன் கருத்துரையையும், பாராட்டுக்களையும் வழங்கிய தோழர் திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  -மேகலா

 7. அருமை! உண்மை! எங்கும் எதிலும் வியாபாரம்! 

  மணம்புரி என்றால் தட்சிணை கேட்கிறார்கள், முடியாது என்றால் ஆசிட் வீசுகிறார்கள். என்னதான் செய்வாள் பெண்? 

  வாழ்த்துகள் மேகலா இராமமூர்த்தி!!! 

 8. ‘ஆதிரை’ கதை நாயகியின் இந்த பெயர் என்னை மிகவும் கவர்ந்தது.

  கதையின் முடிவில் ஆதிரை கேட்கும் கேசரி கதை நெடுக உள்ளது. அருமை.
  .

 9. வாழ்த்துக்களைத் தெரிவித்த திரு. மாதவன் இளங்கோ, திரு. தனுசு இருவருக்கும் என் நன்றிகள்.
  கேசரி இல்லாத பெண்பார்ப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் இல்லை எனலாம். அதனால்தான் அதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையிலும் கேசரி மணம் அதிகமாக வீசுகின்றது திரு. தனுசு.

  -மேகலா

 10. பெண்ணிற்குப் பணி ஒரு காப்பு தான்.பெண் பார்க்கும் படலம் குறித்த இக்கதை பெண்ணினத்தின் ஒரு சிறு தாழ்நிலையைக்காட்டி உயர்த்தியுள்ளது.வாழ்த்துகள்.
  முனைவர்.லட்சுமி

 11. வாழ்த்துக்களைத் தெரிவித்த முனைவர். லட்சுமி அவர்களுக்கு என் நன்றி.

  -மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *