தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 8

6

திவாகர்

நீதிபதியின் வலது புறத்தில் நகர ஷெரீஃப் அமர்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த அலங்காரமான அணி எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருந்தது. நீதிபதியின் இடதுபுறத்தில் போடப்பட்டிருந்த இரண்டு பெஞ்சுகளில் ஒருவர் பின் ஒருவராக ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த ஒன்பது பேரும் ஸ்பெஷல் ஜூரர்கள். பொதுமக்களிடமிருந்து நீதி வழங்குவதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெவ்வேறு வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டவர்களாகையால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.


இவர்களுக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நீதிபதிக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தவர் மிஸ்டர் ஸஹஸ்ரநாமம்.. அவர் பிரபலமோட்டார் கம்பெனியில் மேனேஜர். இதற்கு முன்பு இவர் ஜூரராக இருந்து கோர்ட் அனுபவமுள்ளவராகையால் இவரை ’ஃபோர்மென்’ ஆக தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக முன்புறம் வழுக்கை விழுந்திருந்தது போல தலை. முகம் மிகவும் பருத்திருந்ததால் கழுத்து இருக்கும் இடம் தேடவேண்டியிருந்தது. ’என்னடா இப்படிப் பிடித்துப் போட்டுவிட்டார்களே, மூன்று நாளோ நான்கு நாளோ தெரியவில்லையே, ஆபீஸில் உட்கார்ந்தபடி அலுங்காமல் நலுங்காமல் போவதை விட்டு இது எதற்கு? என ஆயாசப்படுபவர் போல காணப்பட்டார்.

அடுத்தபடி உட்கார்ந்தவர் ஒற்றைநாடி ரங்கநாத முதலியார் ஆவார். உள்ளூர் பேங்க் ஒன்றில் அக்கௌண்டண்ட் வேலை.. ஜட்ஜைப் பார்ப்பதும், ஷெரீஃபைப் பார்ப்பதும் மறுபடி ஜட்ஜைப் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கினார். வீட்டுக்கு மாப்பிள்ளை ஒருவார கால லீவில் வந்திருக்கும்போது அவனுடன் பேசமுடியாமல் இப்படி செய்துவிட்டார்களே என்ற  தாபம் ஒருபக்கம்; மாப்பிள்ளை எதிரில் தனக்கு இப்படி ஒரு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கௌரவமாக சொல்லிக்கொள்ளலாம் என்ற சபலம் ஒருபுறம், இதில் எது விசேஷம் என்று காணமுடியாத தத்தளிப்பு அடிக்கடி ஏற்பட்டது.

மூன்றாவது ஆசாமி கொக்கு போல நாசியுடன் அடிக்கடி கனைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். புரபசர் சிவசாம்பனை நகரக் கல்லூரியில் கணித புரபசர் என்பதாக பலர் அறிவார்கள். இந்த கேஸ் என்ன் பிரமாதம்? எக்ஸ் ப்ளஸ் ஒய் இண்ட்டு எக்ஸ் மைனஸ் ஒய் இஸிகோல்டு என்கிற மாதிரி ஊதியெறிந்துவிட வேண்டியதுதானே..என்கிற பாவத்தில் அவர் காத்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.

அவருக்கு அடுத்தாற்போல் சுமார் ஆறடி உயர நிஜார் அணிந்த ஓர் ஆசாமி உட்கார்ந்திருந்தார். அவர் கோர்ட் பூராவையுமே கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளம் வக்கீல்களை பார்ப்பதும், வாயின் இடதுபக்கத்தால் புன்னகை செய்து அவர்களைத் தாம் தெரிந்துகொண்டதாக மட்டுமே பாவனை செய்தார். இன்சூரன்ஸ் கம்பெனி செல்வரங்கத்தின் பிணைப்பில் அவர்களில் அநேகர் அகப்பட்டுக்கொண்ட பேர்., மிகுதியுள்ளவர் இனி தப்பமுடியாது என கவலை கொண்டால் ஆச்சரியமில்லை  பேச்சிலே அவ்வளவு வாசாகலகமாக இருப்பவர் ஒரு புள்ளியை குறி வைத்தார் என்றால் மடக்குவதில் தவறியது என்பது இவர் அகராதியில் இல்லை. இப்போது இவர் இந்த புதிய சூழ்நிலையை ரசித்தார், விரும்பினார், இதன் மூலம் தம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள இடம் செய்து கொண்டார் என்று முடிவு செய்வதும் தவறாகாது.

பின் பெஞ்சியில் முதலில் அமர்ந்தவர் ஒரு ஆடிட்டர். பெயர் ஜோசப் ஞானமுத்து, பிரபலமானவர்,’ ஜூரர் என்று அழைத்துவிட்டார்கள், எதிர்த்துப் பேச வாயில்லை, உட்கார்ந்து விட்டுப்போவோம்’ என்ற ஒரு விரக்தியுடன் உட்கார்ந்து விட்டார். அடுத்தாற்போல ஆறாவது பேர்வழி ஹோட்டல் முதலாளி. அவருக்கு அங்கே இருந்தாலும் இங்கே இருந்தாலும் லட்சியமில்லை. மச்சினன் பயல் பெட்டியடியில் உட்கார்ந்து கொள்வான், கவலையில்லை. அதுவும் வியாபாரம் பத்து மணிக்கு ஓய்ந்து மறுபடி ஐந்து மணிக்குதான் ஆரம்பிக்கிறது. இங்கே தமாஷாக பொழுதைப் போக்கலாம். அவருக்கு ஒரே ஒரு குறை காலடியில் ஒரு திண்டு, தலையணை போட்டிருக்கப்படாதா என்பதுதான்.

ஏழாவதாக உட்கார்ந்திருப்பவர் ராமநாத சாஸ்திரி. பி.ஏ படித்து ஊரில் நிலபுலன்களைப் பார்ப்பதோடு இங்கே ஆயில்மேன் பிஸிநஸ் வைத்திருக்கிறார். மதாசாரங்களில் ஊறி காலை மாலையில் பூஜை புனஸ்காரங்களை ஒரு காரியமாகச் செய்பவர் நெற்றியில் சந்தனமும் குங்குமமும் இவர் பக்தியின் சின்னங்கள்.  கோயிலைப் பார்த்தால் கை கூப்பாமல் போகிறவர்களை தூக்கில் கொண்டு போய் போடவேண்டும் என்பது இவர் அபிப்ராயம்.

எட்டாவதாக உட்கார்ந்திருந்த முத்தையா பிள்ளை வாழ்க்கையில் பல துறைகளில் வேலை பார்த்தவர். அவர் பேசாத விஷ்யம் இல்லை. கமிஷன் ஏஜெண்டாக வேலை பார்ப்பவர். வீடு கட்டும் காண்ட்ராக்டுகளை எடுத்துக் கொண்டு கொள்ளை கொள்ளையாகக் குவித்தவர். அரசியல் விஷயங்களைத் தெரிந்ததோடு பிரபலங்களோடு பழகியவர்.

கடைசியாக ஒரு பெஞ்ச் ஓரமாக உட்கார்ந்து கொண்டு எல்லாரையும் விழுங்கிவிடுவதாக பார்த்துக் கொண்டிருப்பவர் ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் பெயர் கௌரிசங்கர். அதைவிட அவருடைய புனைப் பெயர் ‘மண்டலி’ என்பது அதிக பிரபலம். தினம் ஒரு துப்பறியும் கதை படித்துக்கொண்டிருப்பவர். அவர் எழுத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து கொலையும் கொள்ளையும் மர்மமும்தான். அநேகப் புத்தகங்கள் படித்து இதுவரை மானசலோகத்தில் சஞ்சரித்தவர் இன்று கண்ணெதிரேயே ஒரு கேஸ் விசாரணையை பார்க்க நேர்ந்ததில் அவர் சொர்க்கப்பிராப்தியே அடைந்துவிட்டது போல ஆனந்தம் கொண்டிருந்தார். இந்த அனுபவத்தை வைத்து ஒரு இருபைத்தைந்து வாரம் போகும் ஒரு அபூர்வமான கதை எழுதிவிடுவேனே என்று மனைவியிடம் மார் தட்டி வந்திருந்தார்.

இதற்கு முன்பு கிரிமினல் கோர்ட்டின் உட்புறத்தை அவர் பார்த்ததே இல்லை. ‘எத்தனை அழகு, என்ன பந்தா, எத்தனை கருக்கு’ என்று வியந்தே போனார். நியாயப்படி, சட்டப்படி நடப்பதென்பார்களே அது இங்கேயல்லவா இருக்கின்றன. புத்திசாலிகள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சிங்கங்கள், மனதில் குரோதம் இல்லாதவர்கள் ஒன்று கூடி ஒரு ஆள் தண்டனை அடையலாமா கூடாதா என்பதைக் கண்டுபிடித்து முடிவு சொல்வது எவ்வளவு அற்புதம்! எப்பேர்ப்பட்ட தர்மம்’ என்று திறந்த வாய் மூடாமல் இருந்தார்.

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் கதை ஆரம்பம்தான் மேலே கொடுத்திருப்பது. தேவன் கதைகளிலிருந்து இது முதலில் வித்தியாசப்படுவது பெயர்த் தலைப்பிலே. ஏனென்றால் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற புதினத்தில் தலைப்பிட்ட பாத்திரம் இந்தக் கதையின் நாயகன் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.. இதனால் வேறு யார்தான் நாயகன் என்றால் இக் கதையைப் படித்தவர் எந்த ஒரு பாத்திரத்தையும் நாயகனாகவே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கதைப்படி பேருக்கு நாயகன் வரதராஜபிள்ளை என்றாலும் அந்த பாத்திரம் கூட கதை முழுக்க வரும் கதாநாயகப்பாத்திரம் இல்லைதான். அதே போல வரதராஜபிள்ளையின் மனைவி ஜெயலக்ஷ்மியைக் கூட கதாநாயகியாக அவ்வளவாகக் காண முடியாது என்றுதான் படுகிறது. என்னைக் கேட்டால் இந்தக் கதைக்கு நாயகன்-நாயகி இந்தக் கதையைப் படைத்த தேவன் மட்டுமே என்றுதான் சொல்வேன். இத்தனைக்கும் கதை என்ன?

பெரிய செல்வந்தரானவரும் மூன்று மனைவிக்காரருமான (முதல் மனைவிக்கு சந்தானம் கிடையாது என்பதால் இரண்டாவது மனைவி வர, அவள் மூன்று மக்கள் செல்வங்களைக் கொடுத்து விட்டு இறந்து போனதால் துக்கம் தாளாமல் போக மூன்றாவது மனைவி தேவைப்பட்டதாம்) தியாகராயப் பிள்ளை, நோய்வாய்ப்பட்டாலும் சீரடைந்து தன்னுடைய பெரிய பெண்ணின் கணவனான வரதராஜ பிள்ளையின் வீட்டில் அவன் மேற்பார்வையில் ஹாயாக இருந்து வரும் ஓர் இரவில் அகஸ்மாத்தாக மடிந்து போகிறார். அந்த இரவு வேளையில்  அவரை விஷம் வைத்து மாப்பிள்ளை வரதராஜபிள்ளையே தன் மாமனாரை சொத்துக்காக ஆசைப்பட்டு கொன்றுவிட்டதாக போலீஸ், அவர்களுக்குக் கிடைத்த சாட்சியங்களின் பேரில் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வரதராஜபிள்ளை தான் அந்த இரவில் அங்கு இல்லவே இல்லை என்று சாதித்தாலும், வேறு பல பலமான சாட்சியங்கள் அவனைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைத்து விடுகின்றன. அவன் மனைவி ஜயலக்ஷ்மியும், அவனுடைய வக்கீல் ஈஸ்வரன் மட்டுமே அவன் பக்கம் நிற்க, கோர்ட்டில் இந்த வழக்கு ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்கிற நீதிபதியின் முன்பும் ஒன்பது ஜூரர்களின் முன்பும் விசாரணைக்கு வருகிறது. மிகவும் பிராபல்யமான ’கிரவுன்’ பிராஸிகியூஷன் கருணாகரன் இந்த கேஸை போலீஸ் சார்பாக நடத்த, அவரை எதிர்த்து எல்லோரும் மதிக்கும் வக்கீலான ஈஸ்வரன் டிபன்ஸ் தரப்பு வக்கீலாக ஆஜராகிறார். கிரவுன் என்றால் ராஜாங்கத்து சார்பாக என்பதாக பொருள் கொள்ளவேண்டும். பிரிட்டிஷ் சட்டம் இல்லையா, எல்லாமே ராஜாவின் ஆணைப்படிதான்.

இந்தக் கதை ஆனந்த விகடனில் 1953-54 இல் தொடராக வந்தது. அந்தக் கால கட்டத்தில் நீதிபதிக்கு உதவி செய்யவும் முடிவுகள் தீர ஆராய்ந்து சரியான தீர்ப்பு சொல்லவும் ஒன்பது பேர் கொண்ட ஜூரர் ஸிஸ்டம் ஒன்று இருந்தது. இங்கு ஜூரர்களின் மெஜாரிடி முடிவின் படி நீதிபதியின் தீர்ப்பு இருக்கும். கிட்டதட்ட இப்போது இருக்கும் பெஞ்ச் அல்லது மல்டி-ஜட்ஜ் சிஸ்டத்தைப் போல என்று வைத்துக் கொள்ளலாம். இந்த ஜூரர் சிஸ்டம் இன்னமும் வெளிநாடுகளில், அதுவும் அமெரிக்க நாடுகளில் வலுவாக உள்ளது. நகர ஷெரிஃப் இப்படிப்பட்ட கிரிமினல் குற்ற கேஸ்களில் ஏறத்தாழ நடுநாயகமாக அமர்ந்திருப்பது ஒரு அலங்காரத்துக்கு மட்டுமே தவிர அவருக்கு நீதி அளிப்பதில் எந்தவித உரிமையும் கிடையாது. அவர் ஒரு அதிகாரம் இல்லாத சூபர்வைஸர் என்று கொள்ளலாமோ என்னவோ. (சென்னை மாநகருக்கு ஷெரீப் என்றொரு பதவி இருந்தது . அப்போது மாநகர மேயருக்கு அடுத்த முக்கியத்துவம் கொண்ட பதவி இது. அரசாங்கத்தால் வழங்கப்படும் நியமனப் பதவி. அரசியல் சார்பற்ற இந்தப் பதவியில் இருப்பவர்கள் நகரின் பல நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிப்பார்கள். நகருக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.  பெரிய வழக்குகளை அவர்கள் முன்னிலையில் நடத்துவது கோர்ட்டுகளில் ஒரு வழக்கம்)

ஜூரர்கள் என்பவர்களை சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவில் நல்ல அந்தஸ்து மரியாதை உள்ளவராக இருப்பவர்களாகப் பார்த்து அமர்த்துவது வழக்கம். அத்தகைய ஜூரர்களைப் பற்றிதான் தேவன் முதன் முதலில் நகைச்சுவையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இது கொலைக் குற்றம் எனப்தால், எப்போதுமே இதைப் போன்ற கதைகளில் ஒரு த்ரில் அல்லது சஸ்பென்ஸ் இருக்கும். சாதாரணமாக துப்பறியும் புதினங்கள் எழுதுபவர்கள் ஒரு கொலை எப்படி நடந்தது என்பதை போலீஸ் மூலமோ அல்லது ஒரு துப்பறியும் சிங்கம் மூலமாகவோ மிகவும் தீர ஆராய்ந்து, கஷ்டப்பட்டு, ஒவ்வொரு இடமாக நாய் போல அலைந்து திரிந்து, அடிபட்டு, உதைபட்டு, கடைசியில் இவர்தான் கொலை செய்தார் என்று முடிவு செய்து கதைக்கு ஒரு முடிவையும், வாசகருக்கு அப்பாடி என்கிற திருப்தியையும் கொடுத்து விடுவார்கள். கடைசியில் குற்றவாளி பிடிபட்டான் என்று தெரியுமே தவிர அவன் கோர்ட்டில் மிக எளிதாக பெயிலில் வெளியே வரமுடியும், வந்து பின்னர் தான் பிடிபட்ட காரணங்களை எல்லாம் தவிர்க்கப் பாடுபடமுடியும், சாட்சியங்கள் வீணாகிப்போனால் ஜாலியாக பழையபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியும் என்றெல்லாம் நமக்குக் காண்பிக்கமாட்டார்கள்.

ஆனால் ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் இப்படிப்பட்ட கதையாக இது ஆரம்பிக்கப்படவில்லை.. துப்பறியும் கதைகளின் இரண்டாம் பாகம் போல, குற்றவாளி பிடிபட்டு அவன் வழக்கில் எப்படி குற்றம் செய்திருக்கலாம் என்பதாக நிரூபிக்கிறார்கள் என்று காண்பிக்கப்படுவதால், இந்தக் கதையில் நவரசங்களும் கலந்தே இருக்கின்றன. ஒருநாள் வரதராஜபிள்ளை குற்றம் செய்துவிட்டார் என்பதை சந்தேகமுற கருணாகரன் (பிராஸிக்யூஷன் வக்கீல்) நிரூபித்து விட, அதுதான் நிஜம் என்றே ஜூரர்களும் அசைபோட ஆரம்பித்தாரென்றால் அடுத்தநாள் டிஃபென்ஸ் தரப்பு வக்கீல் ஈஸ்வரன் அரசாங்கத் தரப்பில் காண்பிக்கப்பட்ட சாட்சியங்களில் ஏகப்பட்ட ஓட்டைகளைக் காண்பிக்க, ‘ச்சே’ இந்த வரதராஜ பிள்ளையாவது, குற்றம் செய்வதாவது..” என்று ஜூரர்களோடு சேர்ந்து நாமும் பரிதாபப்படும் நிலைக்கு கொண்டுசெல்வார் தேவன்.

1954 இல் எழுதப்பட்ட இந்தக் கதையின் ஆங்கிலப் பதிப்பு 2004 இல் அதாவது ஐம்பது ஆண்டுகள் கழித்து லக்ஷ்மி வெங்கட்ரமணன் அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது (2004 ஆம் ஆண்டில் ஹிந்து நாளிதழில் வந்த அதற்கான படம் இங்கே இருக்கிறது). ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் ஏராளம்தான். ஒப்புக் கொள்ளவேண்டும்தான். அதே சமயத்தில் ஆங்கிலம் என்பதை உலகம் பரவிய, அதிகமாகப் பேசப்படுகின்ற, படிக்கப்படுகின்ற மொழியாகவே கடந்த நூறு ஆண்டுகளில் செய்துவிட்ட பிறகு ஆங்கிலத்தில் இதைப் போன்ற கதைகள் எத்தனை வந்தாலும் ரசிப்பதற்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் தமிழ் என்று வரும்போது இருக்கும் ஆறு கோடிப் பேரில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு கூட (ஒரு கோடி) கூட வாசிப்பதில் விருப்பம் காண்பிப்பது கிடையாது என்பதை தமிழ் அறிஞர்கள் சமீபத்திய செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தார்கள். படிப்பு முன்னேறிய இப்போதைய காலகட்டத்திலேயே நிலைமை இப்படி என்றால் படிப்பில் வீழ்ந்திருந்த அந்த 1950 களில் இப்படி ஒரு கதைக்களம் வைத்து எழுதி வெற்றி பெற்றால் அது படைப்பாளியின் மிகப் பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.

இதைப் படித்தவர் பலபேர் தேவன் அந்த நாட்களில் கோர்ட் நிகழ்ச்சிகளை அடிக்கடிப் பார்த்திருக்க வேண்டும் என்றே எழுதினர். மேடையில் பேசவும் செய்தனர். அத்தனை துல்லியமாக கோர்ட் நடவடிக்கைகளை எழுதியதோடு வாசகர்களுக்கு அங்கே இடையிடையே நடக்கும் ஹாஸ்யபூர்வ நிகழ்ச்சிகளை தம் பாணியில் கொடுத்திருப்பார் தேவன்.

இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சியை ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு கிரவுன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரன் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.

அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் பேசுகிறார்.

“பிடிச்சுகிச்சு”

அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.

“என்ன பிடிச்சுகிச்சு?”

மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தையா பதில் சொல்லுவார்.

“நேத்து ராத்திரி… மொட்டை மாடில படுத்தேனா?… ஒரே பனியா?… அதான் பிடிச்சுகிச்சு..” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.

சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு மனதில் தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி…

இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

கோர்ட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட ஜஸ்டிஸ் ஜகன்னாதனைப் போன்ற இன்னொரு கதைதான் ராஜத்தின் மனோரதம். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள் இல்லையா.. இந்த வீடு கட்டும் படலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதிலுள்ள கஷ்டங்களை நகைச்சுவை எள்ளளவும் குறையாமல் தேவன் எழுதிய புத்தகம்தான் ராஜத்தின் மனோரதம். கதாநாயகியான மனைவி ராஜம் எப்படியாவது ஒரு சொந்த வீடு வேண்டாமோ என நச்சரித்துக் கொண்டே இருக்க, அவள் கனவை நனவாக்குவதற்காக சொந்த வீடு கட்டினால்தான் என்ன என்று இறங்கிவிடும் நாயகன். அடித்தளம் போடுவதிலிருந்து முழு வீடு கட்டும் வரை ஏற்படும் சிரமங்கள், அதிலும் மேஸ்திரி முதற்கொண்டு ஒவ்வொரு வேலையாட்களிடமும் இந்த வீடு கட்டுபவர் படும் கஷ்டமும் இந்த சிமெண்ட் போன்ற வஸ்துக்களை வாங்குவதில் உள்ள சிரமங்களும் முக்கியமாக இன்றைய அடுக்கு மாடி குடியிருப்போர் படிக்கவேண்டும். படிக்கப் படிக்க சுவையான ஒரு புத்தகம்தான் ’ராஜத்தின் மனோரதம்’.

ஆனால் இவைகள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் தேவனின் ‘சாம்பு’ ஒரு மிகப் பெரிய புகழை தேவனுக்கு அள்ளித் தந்தது. தேவன் புத்தகங்கள் என்றால் சாம்புதானே என இன்றைய தலைமுறையினரும் வெகுவாக அறியக்கூடிய அளவுக்கு புகழ் பெற்ற அந்த துப்பறியும் சாம்புவை நாம் துப்பு துலக்குவோம்.

தொடர்ந்து வரும்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் 8

  1. ராஜத்தின் மனோரதத்தில்  வரும் ஜயம் என்பவரும், வேதாந்தத்தில் வரும் ஸ்வாமியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மனோபாவம் கொண்டவர்களாக எனக்குத் தோன்றும்.  ராஜத்தின் மனோரதத்தில் கிரில் காரர் கிரில் கம்பிகளால் ஆன ஜன்னலைக் கொண்டு வர, அது நாம கேட்ட மாதிரி இல்லையே என வீட்டுக்காரர் திகைக்க, கிரில்காரர் அதைக் கண்டுகொள்ளாமலேயே பதில் சொல்லும் அழகும், மேஸ்திரியைக் கணக்குக் கேட்ட வீட்டுக்காரரிடம், “சிமென்ட் வாங்கத் தாவல? மணல் வாங்கத் தாவல, ஜல்லி வாங்கத் தாவல?” என்று ஒவ்வொன்றாய் சென்னைத் தமிழில் மேஸ்திரி கேட்பதும்,”தேவலை அப்பா நீ” என வீட்டுக்காரர் பதில் சொல்வதும், செடிகள் வைக்க ஆசைப்பட்டு வாசலில் எவனோ ஒருத்தனிடம் வாங்கி ஏமாந்ததும், நாங்க வீடுகட்டும்போதும் அனுபவித்த ஒரு விஷயம். 

    எங்க வீட்டு ஜன்னலிலும் கிரில்லுக்கு நாங்க சொன்ன டிசைன் ஒண்ணு.  பண்ணி வந்தது வேறொன்று.  இப்படி எல்லாத்திலேயும் சொல்லலாம். 

    ஜஸ்டிஸ் ஜகந்நாதன் கதையில் சம்பவங்களே கதாநாயகன், கதாநாயகி.  வெங்கடேசனையும், நர்ஸ் வத்ஸலாவையும் மீண்டும் விசாரணை செய்ய வேண்டி ஜஸ்டிஸ் அழைப்பதும், அவர்கள் பதிலில் திருப்தி அடையாததும், எங்கே குற்றம் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.  அதுவும் அந்தக் கொய்யாமரத்தடி!  ஜூரிகள் அதைப் பார்க்க ஆசைப்படுவதும் கொய்யாமரத்தடியை ஒட்டிய நகைச்சுவையும்………. நினைத்து அனுபவிக்க வேண்டியவை.

    அடுத்து நம்ம ஆள் சாம்புவா?  வரட்டும், வரட்டும். 

  2. தேவனின் படைப்புகளிலேயே மிகவும் வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவலைப் பற்றிய விவரணை திருப்தி அளிக்கவில்லை. மற்ற கதைகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விடவும் குறைவாகவே இருந்ததாகப் பட்டது… எனக்கு!

    ஜயலக்ஷ்மியின் மனோநிலையைப் பல இடங்களில் நெகிழும்வகையில் படைத்திருப்பார் தேவன். அந்தக் கால சென்னை வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளவும் இந்தக் கதை மிகவும் உதவும்.

    ஜூரர்கள் இருந்த நிலையில் நீதிபதி என்பவர் எந்த ஒரு உரிமையும் இல்லாத அலங்காரப் பொம்மை போன்றவர் எனும் வாதம் சரியல்ல.

    எதை அனுமதிக்கலாம்; அனுமதிக்கக்கூடாது; எந்த வாதங்களை மட்டும் ஜூரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், எவற்றை ஒதுக்க வேண்டும்[ அவை எவ்வளவோ வலுவாக இருப்பினும்!] என்பது போன்ற பல விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை நீதிபதிக்கே உண்டு. அவர் குறிப்பிடும் வரையறைகளுக்குள் மட்டுமே ஜூரர்கள் செயல்பட முடியும். இதையெல்லாம் சொல்லியிருக்க வேண்டும் எனப் பட்டது.

    ஜ‌.ஜ. போன்ற ஒரு கதை அதற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ இவ்வளவு சிறப்பாக வெளிவந்ததே இல்லை என ஆணித்தரமாகச் சொல்லலாம்.

  3. தனக்குத் தெரிந்த பல நண்பர்களைத் தன் நாவல்களில் உலவவிடுவார் ‘தேவன்’. அந்த வகையில், ‘மர்ரே’ ராஜம் தான் “ராஜத்தின் மனோரதம்” தொடரில் வரும் ‘ஜயம்’ என்கிறார் ‘கடுகு’. ( அவருடைய வலைப்பதிவில் ’கடுகு’ இதைப் பற்றி எழுதி இருப்பார்.)

  4. ஜஸ்டிஸ் ஜகந்நாதன், தேவனின் கதைகள் என்ற மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட மிகச் சிறப்பான வைரக்கல் என்றால் மிகையில்லை. ஜயலக்ஷ்மி கதாபாத்திரத்தின் உணர்வுகள், மிக ஆழமாகப் பதிந்தததால், பின்னாளில் சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலுக்குச் சென்ற போது, ‘என் வடபழனி அண்ணா’ என்றே வணங்கினேன்.

    அடுத்து வரும் சாம்புவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  5. அன்புள்ள டாக்டர் சங்கர் குமார்!
    உங்கள் விமர்சனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

    ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஒரு மர்ம நாவல் கதை போல நடை கொண்டதால் வாசகர்கள் பலர் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தால் இன்றைக்கு நாம் அறியமுடியாத ஜூரர் ஸிஸ்டத்தைப் பற்றி மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.  (மேல் விவரங்கள் தந்ததற்கு நன்றி!)

    ஜயலக்ஷ்மியின் கதாபாத்திரம் மிக ஆழமானது. ஆனால் அந்தப் பாத்திரத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போனால் புத்தகம் படிக்க விரும்புவோர் ஒரு ரசனையை இழக்க இடம் கொடுக்குமோ என்கிற அச்சத்தால் ஜயலக்ஷ்மியைப் பற்றியோ வேறு எந்தப் பாத்திரத்தைப் பற்றியோ எழுதவில்லை.

  6. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா சில விஷயங்கள்;
    ̀~ 1.நான் அந்தக்காலத்து ஆசாமி. ‘படிப்பில் வீழ்ந்திருந்த அந்த 1950 களில்’…’ என்ற சொற்த்தொடர் ஆதாரமற்றது. அதை நான் எழுதி வரும் இழைகளில் நிரூபித்திருக்கிறேன்.
    ̀~ 2. கிரவுன் ப்ராஸிக்யூட்டர் கருணாகரன் எனக்கு மிகவும் தெரிந்த மனிதரின் அச்சு. அந்தக்காலங்களில் கோர்ட் போய்வருபவர்கள் யாரும் அவரின் ஜாடை அறிவார்கள்.
    ~3. ரூபாய் 1/- என்று அருமையான தமிழ் நூல்களை நமக்கு தந்த ஏலக்கடை முர்ரே ராஜத்தை நான் அறிந்திருந்தேன். ‘கடுகு’ காரம் குறைந்தால் கூட பொய்க்காது.
    ~ 4. ஆளவந்தார் கொலை வழக்கு ஜூரர்களுடன் இந்த நவரத்னங்களை ஒப்புமை செய்து பார்த்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.