மேகலா இராமமூர்த்தி

”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவையார். இத்துணை சிறப்பு வாய்ந்த இம்மானிடப் பிறவியிலே மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் தனித்தன்மை வாய்ந்தது; எந்த உறுப்பின் பணியையும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாதெனினும் அனைத்திலும் மேலாக நாம் எண்ணுவது நம் மூளையையும், இதயத்தையுமே அல்லவா? அதிலும் ’இதயம்’ என்ற சொல்லைத்தானே நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடிப் பயன்படுத்துகின்றோம்.

இரக்கமில்லாதவனை “இதயமில்லாதவன்” என்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தவர்களை “இதய தெய்வம்” என்கின்றோம். ஆனால் நாம் இங்கே பேசப்போவது இதயத்திற்குப் பிடித்தமானவர்களைப் பற்றியோ அல்லது இதயமில்லாத நபர்களைப் பற்றியோ அல்ல, இதயத்தைப் பற்றியே.

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (World Health Organization) வெளியிட்ட அறிக்கையில், வரும் 2020-இல் இந்தியாவில் அதிகப்படியான மரணங்கள் இதயநோய்களினாலேயே (cardiovascular diseases) ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆகவே இதயத்தைப் பற்றியும், அதனைப் பீடிக்கின்ற பல்வேறு நோய்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்ப்பதற்கு செய்யவேண்டுவன பற்றியும் நாமிங்கே சிந்திக்க இருக்கின்றோம்.

முதலில் இதயத்தின் அமைப்பையும், அது செய்கின்ற பணிகள் குறித்தும் சுருங்கப் பார்ப்போம்.

ஓர் பேரிக்காய் வடிவில் (pear-shaped) நம் கையளவினும் சற்றே பெரிய அளவுள்ள நம் இதயம் கிட்டத்தட்ட ஒரு பவுண்டு கனமுடையது. நம் உடல் முழுவதற்கும் தேவையான இரத்தவோட்டத்தைத் தருவதே (blood circulation) இதயத்தின் தலையாய பணி எனலாம். சாதாரணமாக ஒரு நோயற்ற மனித இதயம் நிமிடத்திற்குத் தோராயமாக 72 முறைகள் துடிக்கின்றது (heartbeat) எனலாம்.

இதயம் நான்கு அறைகளைக் (four chambers) கொண்டுள்ளது. மேலுள்ள இரண்டு அறைகள் ஏட்ரியா (atria) அல்லது ஆரிக்கிள்கள் (auricles) எனவும், கீழுள்ள இரண்டு அறைகள் வென்ட்ரிகிள்கள் (ventricles) எனவும் அழைக்கப்படுகின்றன. அசுத்த இரத்தமானது (deoxygenated blood) உடலின் பிற பகுதிகளிலிருந்து சிரைகள் வாயிலாக (superior vena cava, inferior vena cava) இதயத்திலுள்ள வலது ஆரிக்கிளை வந்தடைகின்றது. பின்பு வலது வென்ட்ரிக்கிளை அடைந்து அங்கிருந்து நுரையீரலுக்குச் சென்று உயிர்க்காற்றைப் (oxygen) பெற்றுச் சுத்த இரத்தமாக மாறிப் பிறகு இடது ஆரிக்கிளை அடைகின்றது. அங்கிருந்து இடது வென்ட்ரிகிளுக்குச் செல்கின்றது. பின்பு உயிர்க்காற்று நிறைந்த சுத்த இரத்தத்தை மகாதமனியின் (aorta) வழியாக உடலின் பிற பாகங்களுக்குச் செலுத்தி உடலுக்குத் தேவையான சத்துக்களை (nutrients) வழங்கிக் கழிவுப் பொருள்களை வெளியேற்ற உதவுகின்றது.

செப்டம் (septum) என்று சொல்லப்படுகின்ற சுவர் இதயத்தின் வலது பக்கத்தையும், இடது பக்கத்தையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதயத்தின் சுவர் மூன்றடுக்குகளால் ஆனது. அவை முறையே வெளியடுக்கு (epicardium), மையஅடுக்கு (myocardium) மற்றும் உள்ளடுக்கு (endocardium) ஆகியன.

இனி, இதயத்தைத் தாக்குகின்ற பல்வேறு நோய்களைப் பற்றிப் பார்ப்போம். இதயநோய் என்றாலே பொதுவாக நம் நினைவுக்கு வருவது மாரடைப்பு (heart attack) மட்டுமே ஆகும். ஆனால் அதைத் தவிரவும் பல நோய்கள் இதயத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

முதலாவது, இதயத் தசைகளுக்குச் சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் (coronary arteries) ஏற்படுகின்ற அடைப்புக்களினால் வரும் இதயநோய் (coronary artery disease). உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு (bad cholesterol) இத்தமனிகளில் படியும்போது  அவை அடைப்பை (plaque) ஏற்படுத்தி இந்த இரத்தக் குழாய்களின் அளவைக் குறுக்கி விடுகின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது. இதயத்தின் இயல்பான வேலைத்திறன் தடைப்படுகின்றது. இரத்தவோட்டம் தடைப்படுவதினால் இதயத்தில் வலி (angina), மூச்சுத் திணறல் (shortness of breath) ஆகியவை ஏற்படுகின்றன. இரத்தவோட்டம் முற்றிலும் தடைப்படும்போது மாரடைப்பு (heart attack) ஏற்படுகின்றது.

மாரடைப்பிற்கான 5 முக்கிய அறிகுறிகள்:

 1. தாடை, கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் ஏற்படுகின்ற வலி (jaw, neck and back pain), அசௌகரியம் (discomfort) முதலியன.
 2. தலைசுற்றல் (lightheadedness), மயக்கம் (dizziness) மற்றும் உடல் பலவீனம் (fatigue).
 3. நெஞ்சுவலி (angina) அல்லது நெஞ்சில் ஏற்படும் அசௌகரியம்.
 4. கைகளிலோ, தோளிலோ ஏற்படும் வலி (arms and shoulder pain) அல்லது அசௌகரியம்.
 5. மூச்சுத்திணறல் (shortness of breath), வியர்த்துக் கொட்டுதல் (sweating) முதலியன.

இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

இரண்டாவது, இதயத் தசைகளின் மாறுபாட்டால் ஏற்படுகின்ற நோய் (cardiomyopathy). இந்நோய் இதயத் தசைகளை பலவீனப்படுத்தவோ (muscle weakness) அல்லது பெரிதாக்கவோ (muscle enlargement) செய்கின்றது. இந்நோயினால் இதயம் சுருங்கி விரிவதிலும், உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. இது பரம்பரை நோயாகவோ, ஏற்கனவே ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவோ வரலாம். கிருமித்தொற்றுக்களினால் (infection) கூட இந்நோய் ஏற்படக்கூடும். இந்நோயின் விளைவாக இதயம் முற்றிலும் செயலிழந்து போகும் அபாய நிலை ஏற்படும். அது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் ஐயமில்லை.

இதன் அறிகுறிகள்:

 1. வேலை செய்யும்போது மூர்ச்சையடைதல் (breathlessness); சில சமயங்களில் ஓய்வாக இருக்கும்போது கூட மூர்ச்சையடைய வாய்ப்புண்டு.
 2. கால்கள், கணுக்கால்கள், பாதங்கள் ஆகியவற்றில் வீக்கம் (swelling).
 3. நீர்கோர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் வயிற்று உப்புசம் (bloating of the abdomen).
 4. விரைவான, தாறுமாறான இதயத்துடிப்பு (rapid, pounding and fluttering heartbeat).
 5. அயர்ச்சி, தலைசுற்றல், மயக்கமடைதல் (fatigue, lightheadedness, fainting).

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனே நாடுதல் நலம்.

அடுத்ததாகக் கருத்தில் கொள்ளவேண்டிய இதயநோய் இயல்புக்கு மாறான ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (arrhythmia). இந்நோயினால் இதயத்தின் துடிப்பு இயல்பைவிட அதிகமாகவோ (tachycardia) அல்லது குறைவாகவோ (bradycardia) இருக்கக் கூடும். மேலும் இந்நோயினால் இதயவலி, மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நோய் உடனடியான ஆபத்து எதனையும் பொதுவாக விளைவிப்பது இல்லை. எனினும், இது போன்ற மிக விரைவான அல்லது மிக மெதுவான இதயத் துடிப்பு திடீரென்றோ அல்லது அடிக்கடியோ ஏற்பட்டால் உடனடியாய் மருத்துவ ஆலோசனை பெறுவது இன்றியமையாதது.

மற்றொன்று, இதயத்தைச் சுற்றியிருக்கின்ற உறையில் ஏற்படுகின்ற அழற்சி (pericarditis). இது பொதுவாக கிருமித் தொற்றுக்களினாலோ (cardiac infection), இதய அறுவை சிகிச்சைகளுக்கு பிறகோ, அல்லது புற்றுநோய் போன்றவற்றினாலோ இதயத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

இவை தவிர, பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயக் கோளாறுகள் (congenital heart defects) இன்னொரு பக்கம். இந்நோய்கள் பிறந்த குழந்தைகளையும், வளரிளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் கூடத் தாக்கக் கூடியது.

மரபணுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அவற்றின் இயல்புக்கு மாறான தன்மை (genetic changes, chromosomal abnormalities) ஆகியவையே இத்தகைய நோய்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். இதன் அறிகுறிகளாக தோல் நீலநிறத்தில் இருத்தல் (cyanosis), விளையாட்டிலோ அல்லது உடற்பயிற்சியிலோ ஈடுபடும்போது எளிதில் களைத்துப் போதல், மூச்சுத்திணறல் ஏற்படல், இதயத்தைச் சுற்றியும், நுரையீரலிலும் நீர்கோர்த்துக் கொள்ளுதல், கை, கால்கள் வீங்கிப்போதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

இப்படிப் பலதரப்பட்ட இதயநோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயநோய்களான (congenital heart defects) தவிர மற்றவகை இதயநோய்களை மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் பெருமளவில் தவிர்க்கலாம், தடுக்கலாம்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.” என்கிறார் திருவள்ளுவர். ஆகவே நோய்களை வருமுன்னர்க் காத்தலே சாலச் சிறந்தது.

பொதுவாகவே நம்முடைய உணவுப்பழக்கம் நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்றால் மிகையாகாது. மனிதனின் உடலுக்கு ஊறு விளைவிக்காத உணவை அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வைப் பெறலாம்.

”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்பது பொய்யாமொழி.

ஆகவே உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகிய இரண்டையுமே கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்வது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமாக இதயத்தைக் காக்க இதய மருத்துவர்கள் (cardiologists) கூறும் அறிவுரைகள் சில. இவற்றைப் பத்து கட்டளைகளாகவும் (Ten Commandments) எடுத்துக் கொள்ளலாம்.

 1. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), ஓட்ஸ், சோயாபீன்ஸ், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (fiber-rich food) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 2. கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்வது நலம். குறிப்பாக உறை கொழுப்பு (saturated fat) என்று சொல்லப்படுகின்ற மிருகக் கொழுப்பு, முட்டை, மற்றும் எண்ணெய் வகைகளான தேங்காயெண்ணெய், பனையெண்ணெய் (palm oil) ஆகியவற்றை முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது நல்லது. மேற்குறிப்பிட்ட எண்ணெய்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணெயை (olive oil) உபயோகிக்கலாம்.

Trans fat என்று சொல்லப்படுகின்ற கொழுப்பும் இதயத்திற்குத் தீங்கானதே. வறுத்த, பொரித்த (deep-fried food) உணவு வகைகள், ரொட்டிகள் (biscuits), கேக்குகள் (cakes) ஆகியவற்றில் இந்தக் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. எனவே இத்தகைய உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்த்திட வேண்டும்.

 1. நல்ல கொழுப்பாகக் கருதப்படும் omega-3 fatty acids நிறைந்த காய்கறிகளான கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை வகைகள், பரங்கி விதைகள், பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி வகைகள், மற்றும் மீன், மீன்எண்ணெய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். கொட்டை (nuts) வகைகளான  பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் (walnuts), வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு கைப்பிடியளவு தினமும் உண்ணலாம்.
 2. உணவில் உப்பின் (sodium) அளவைக் குறைத்து உண்பது நன்மை பயக்கும்.
 3. உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம். அதற்கு வாரத்தில் 5 நாட்களேனும், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.
 4. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களையும் (sugary drinks), சர்க்கரை நிறைந்த உணவுப் பண்டங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 5. சுய சுகாதாரத்தில் (personal hygiene) அதிகக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகப் பற்களையும், ஈறுகளையும் சரியாகப் பேணவும், பராமரிக்கவும் வேண்டும். இதன்மூலம் இதயத்தில் ஏற்படுகின்ற பல்வேறு தொற்றுநோய்களைத் தவிர்க்க இயலும் என இதயநோய் மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.
 6. மன அழுத்ததைக் குறைக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற மூச்சுப் பயிற்சிகளையும், தியானம் போன்றவற்றையும் பழகுதல் நலம்.
 7. இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவற்றைக் கட்டாயம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
 8. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இருப்பின் அவை ’இதயத்தின் எதிரிகள்’ என்பதனை உணர்ந்து அவற்றிற்குப் ’பிரியாவிடை’ கொடுத்துவிட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளைத் தவறாது கடைப்பிடித்தாலே இதயநோய்களையும், உடலைத் தாக்கும் வேறுபல நோய்களையும் தவிர்க்கலாம். ஆன்றோர்களும், மருத்துவ அறிஞர்களும் கூறுகின்ற வழி நடப்போம். நம் இதயமென்ற கோயிலை நோய்களின் பிடியிலிருந்து காத்து நலமாய் வாழ்வோம்.

படங்களுக்கு நன்றி:

http://www.cdc.gov/heartdisease/coronary_ad.htm                  http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

தகவல்களுக்கு நன்றி:

http://en.wikipedia.org/wiki/Human_heart

http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

http://www.emunix.emich.edu/~armstron/spmd201/anat06-08.pdf

http://www.cdc.gov/heartdisease/other_conditions.htm

http://health.nytimes.com/health/guides/disease/congenital-heart-disease/overview.html

http://articles.timesofindia.indiatimes.com/2012-10-17/health/34523974_1_heart-diseases-diseases-study-chest-pain

http://www.webmd.com/heart-disease/ss/slideshow-visual-guide-to-heart-disease

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இதயக்கோயிலைக் காப்போம்!

 1. ஆரோக்கிய வாழ்விற்குத் தேவையான, இதய நலம் பேண உதவும் கருத்துக்களை எளிமையாகத் தொகுத்து வழங்கிய விதம் அருமையாக இருக்கிறது மேகலா.

  ….. தேமொழி

 2. தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி தேமொழி.

  -மேகலா

Leave a Reply

Your email address will not be published.