Author: editor

  • கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    themozhi1

    இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் திருமதி தேமொழி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்.

    6013173dc1e51011d1a99625f6b92946

    பதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளார். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.

    போட்டிக்கான விதிமுறைகள்:

    ஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் கடிதங்கள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மணிமொழியை சகோதரி, மகள், மருமகள், பேத்தி, தோழி, காதலி என எந்த ஒரு கற்பனைப் பாத்திரமாகவும் வரித்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களைப் படைக்கலாம். இலக்கியப் பாத்திரங்கள் முதல் இல்லாத கற்பனைப் பாத்திரங்கள் வரை மணிமொழியை விளித்து தனது எண்ணத்தில் தோன்றுவதை எந்தவொரு வரையறையும் இன்றி வேண்டுகோள், அறிவுரை, தனது அன்பை சொல்லுதல், நாட்டு நடப்பை அலசுதல் என எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

    கடிதங்களுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    போட்டிக்கான இறுதி நாளான மார்ச் 31ம் தேதி வரை வருகின்ற ஆக்கங்களிலிருந்து சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    படைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    படைப்புகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    போட்டிக்கான இறுதி நாள் மார்ச் (2014) 31ம் நாள்.

    முதல் பரிசு ரூ. 1000
    இரண்டாம் பரிசு ரூ. 750
    மூன்றாம் பரிசு ரூ. 500

    பிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து வருகிற படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

    வல்லமை ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும் கடிதம் எழுதலாம்;  அதை வல்லமையில் வெளியிடத் தடையில்லை. ஆனால் அதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதர போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி ஆக்கங்களாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • மதிய உணவின் முன்னோடி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    singaravelar 01‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலனாரின் பிறந்த நாள் இன்று. பொதுவுடமைவாதியும், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான இவர், வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களுக்கென்று ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நல்ல சிந்தையை முன்னெடுத்தவர். அத்தோடு கர்மவீரர் காமராசர் வெற்றிகரமாக செயல்படுத்தி இலட்சக் கணக்கான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியமைத்துக் கொடுத்த மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியாக இருந்தவரும் திரு சிங்காரவேலனார் அவர்களே. நூற்றுக்கணக்கான இவருடைய நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில், 8ம் வகுப்பு பயிலும் 74 சதவிகித மாணவர்களுக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும், 40 சதவிகித சிறார்களுக்கு வகுத்தல் என்பதும் புரியவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அளிக்கின்றனர். அப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரோ அல்லது கழிவறை வசதிகளோ கூட இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. 2011இல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கென்று தனி கழிவறை இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டும், சென்ற வாரம் ஆசர் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, 54 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கான தனி கழிவறை இருப்பதாகத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் காண முடிகிறது. கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆயினும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை என்பதும் வேதனைக்குரிய விசயம்.

    பாராளுமன்றத் தேர்தல் திருவிழா வருகிறது. செலவழிக்க பணமூட்டைகள் தயார். எந்தப் பெயரில் கொடுத்தாலும் வாங்குவதற்குத் தயாராகவும் ஒரு கூட்டம். தொலைக்காட்சிப் பெட்டியா, மாவரைக்கும் இயந்திரமா, குளுகுளு மின்விசிறியா, மடிக் கணினியா, இல்லை காந்திப்படம் போட்ட நோட்டா.. எதைக் கொடுத்தாலும் வாங்கத் தயார். வாக்களிக்க சத்தியங்களும் அள்ளி வழங்கப்படும்!

    இந்திய ஜனநாயகமும், வாக்குச் சுதந்திரமும் படும்பாடுதான் இது. மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை . இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்துவிட்டு நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியல் போட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் செய்து மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிலையிலேயே இன்றைய ஆட்சியாளர்கள் இருப்பது கண்கூடு. ஒன்றுபட்ட இந்தியாவிற்குரிய இரும்பு மனிதர் என்று பேசப்பட்ட வல்லபபாய் பட்டேலுக்கு இரண்டு கட்சியினரும் போட்டியிடும் கேலிக்கூத்தும் அரங்கேறுகிறது. அவர் செய்த செயல்கள் மற்றும் அவருடைய கொள்கைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூற ஏதேனும் உதாரணம் காட்டியோ அல்லது நல்ல செயல்களைச் செய்து அதன் மூலம் அவருடைய பெயரை நிலைநாட்ட முனைந்தாலோ அவர்களுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம். தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போல டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, உழைப்பவர்களின் வருமானங்களை உறிஞ்சிய பிறகு அவர்களின் இல்லங்களுக்கு எதற்கு இலவசங்கள். அப்பனிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு பிள்ளைகளுக்கு விலையில்லா மடிக்கணினி எதற்கு? ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருக்குமே இந்தத் தேர்தல் திருவிழாவின்போது மட்டும்தான் மக்களைச் சந்திக்க முடிகிறது. மாறி வரும் இளைய சமுதாயம் இதையெல்லாம் கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் விதமாக வல்லபபாய் பட்டேலாகவும், லோக மானிய திலகராகவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனாகவும் மாறி வழி நடத்தினால் பின்வருபவருக்குத் தயக்கம் ஏது என்பதையும் உணர எவரும் முனைவதாகவும் இல்லை.

    டாஸ்மாக் கடைகளையும், மணல் குத்தகையையும் அரசு எடுத்துக் கொண்டு வருமானம் பார்ப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளையும் தேசியமயமாக்கி, குழந்தைகளுக்கு விலையில்லா கல்வியைக் கொடுக்கும்பட்சத்தில்! விலையில்லா இலவசங்களை விடுத்து விலையில்லாத கல்வியை மட்டும் கொடுத்து இளைய சமுதாயத்தை வளரவிட்டால் போதும். பாடத்திட்டம் எதுவாக இருப்பினும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுங்கள் விலையில்லாக் கல்வியை!

    Share
  • தங்கமும் தங்கமாக மின்னும் விளம்பரங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு நகைக்கடை தங்களுடைய விளம்பரம் மூலமாக மக்களைப் பெரிதும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கிராமுக்கு 2014 ரூபாய் கட்டினால் ஐந்தாண்டு கழித்து எத்தனை கிராமுக்கு நாம் பணம் கட்டியிருக்கிறோமோ அத்தனை கிராம் தங்கத்தை அவர்கள் கொடுத்து விடுவார்களாம். 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2810. அந்த விளம்பரத்தில் நடிக்கக்கூடிய பெண்மணி நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்த வைப்பத் திட்டம் முடிவடையப் போகிறது. அதனால் விரைந்து சென்று பணத்தைக் கட்டுங்கள் என்று கூறுகிறார். இன்றைக்கு தங்கத்தின் விலை இருப்பது போன்று ஐந்தாண்டுகள் கழித்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்பொழுது நம்முடைய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையாமல் அப்படியே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சந்தை விலைக்கு இவர்களால் தர முடியுமா என்பது சந்தேகம்தான். இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. தங்கத்தின் விலை ஏறினாலும், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அதிகமானாலும் நட்டத்தின் மடங்கு அதிகமாகவே அல்லவா ஆகும். இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான அரசாணையும் தேதியும் அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இதற்காக அரசாங்கத்தின் கருவூலத்தில் வைப்புநிதியாக எத்தனை கோடி வைத்திருக்கிறார்கள் என்பதையும் வெளியிட்டிருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை. இதனால் நாளை மக்களுக்கு இழப்பு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

    சென்ற வருடம் இதுபோல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களையெல்லாம் விளம்பரம் செய்து மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி வசூல் செய்ததால் மக்கள் அவதிப்பட்டதோடு அந்த கோழிகளும் இன்றுவரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தேக்கு மரத் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து மிக அருமையாக விளம்பரம் செய்து அதன் மூலம் மக்கள் பல ஆயிரம் கோடிகளை இழந்ததும் நினைவிருக்கலாம். இப்படி ஒரு தனி நிறுவனம் வெட்ட வெளிச்சமாக விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் போல இதிலும் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும்! கடின உழைப்பால் சம்பாதித்த நம் செல்வத்தை இது போன்ற விளம்பரங்களை நம்பி மோசம் போகாமல் நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

    Share
  • புத்தக மதிப்புரைப் போட்டி முடிவுகள்!

    அன்பு நண்பர்களே,

    நாம் பல நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘புத்தக மதிப்புரைப்’ போட்டிக்கான முடிவுகளை இதோ நம் உயர்திரு. வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்கள், தம் தேர்ந்த ஞானமும், நிறைந்த அனுபவமும் கொண்டு மிக ஆழ்ந்த பார்வையுடன், பாரபட்சமற்ற முறையில் மிகத் தெளிவாக அளித்துள்ளார்கள். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. போட்டியில் மிக ஆர்வமாகக் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெ.சா. ஐயா கூறியது போன்று அத்துனை இடுகைகளும் தரம் வாய்ந்தவைகள். போட்டி என்பதால் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் வெற்றி வாய்ப்பு சிலருக்கு மட்டும் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை. இதோ வெற்றியாளர்கள் குறித்த அவருடைய மதிப்பீடுகள் :

    வெங்கட் சாமிநாதன்

    என் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறேன்.

    எந்த எழுத்தையும் முதலாவது, இரண்டாவது என்று தேர்வு செய்வது மிகவும் கஷ்டமானது. அது மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில் எழுத்தே, சிறுகதையோ, நாவலோ, கவிதையோ சிருஷ்டிப்பூர்வமானது. அது எழுதுபவனின் தனி உலகம். அதை இன்னொருவன் எதிர்கொள்வது அவனின் தனி உலகம். அது அப்படித்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரை டால்ஸ்டாய் ஒப்புக்கொண்டவரில்லை. இரண்டு பேரும் இரண்டு சிகரங்கள். ஐம்பது அறுபதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு எழுத்தாளர், மாயாவி, கலைமகளில் அக்காலத்தில் நிறைய எழுதியவர், பம்பாய் வாசி, தில்லி வாசியானார். “எங்கே வேணாலும் எந்த கோவில்லேவேணாலும் சத்தியம் செய்யத் தயார். க.நா.சு. எழுதறதெல்லாம் எழுத்தே இல்லை. அவருக்கு இலக்கியமே என்னன்னு தெரியாது” என்று அவர் சொன்னபோது அவர் முகம் சிவந்து கிடந்தது. ”க.நா.சு எழுதுவது அத்தனையும் உடன் கட்டை” என்று கோ.வி.மணிசேகரன் பல பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர் எழுதினார். தி.ஜானகி ராமன் எழுதுவதையோ, லா.ச.ராமாமிர்தம் எழுதுவதையோ ஒப்புக்கொண்டவர் இல்லை மௌனி. புதுமைப்பித்தனிடம் தான் ஏதோ இருக்கற மாதிரி படறது” என்பார் அவர். பாரதி அதி முட்டாள் என்று அவர் காலத்திய புலவர்கள் சொன்னதுண்டு. திராவிடக் கழக மேடைகளில் பாரதி பாப்பான் என்று வசை பாடப்பட்ட போது, “ஐயரை ஒன்னும் சொல்லாதீங்கடா, அவரை விட்டுவிடுங்கப்பா” என்று தான் பாரதி தாசன் சொல்ல முடிந்தது. கோபால கிருஷ்ண பாரதிக்கு ஒழுங்கா தமிழ் எழுதவே தெரியலை” என்று அக்காலத்திய கம்பன் எனப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னார். இதெல்லாம் அவரவருக்கு ஈடுபாடு இருந்த, தெரிந்த துறையில் இன்னொருவர் எழுத்தைப் பற்றி விமர்சித்தது. இந்த விமர்சனங்கள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இன்னும் இது போன்று தொடர்பவை எல்லாம் நிராகரிக்கப்பட்டு விடும். இப்போதைய விஷயத்துக்கு வரலாம்.

    எனக்கு முன்னர் போன வருடம் தரப்பட்டது ஒரு வருஷ காலத்துக்கு பலர் எழுதிய சிறுகதைகள். எல்லாம் சிறுகதைகள். அந்த சிறுகதைகளோடு நான் தந்திருந்த தேர்வும் எல்லோருக்கும் முன் பார்வையில் வைக்கப்பட்டவை.

    இம்முறை என் முன் வைக்கப்பட்டவை 20 மதிப்புரைகள். பலரால் வித விதமான வேறுபட்ட ரசனை கொண்டவர்களால் தரப்பட்ட மதிப்புரைகள். மதிப்புரைகளும் ஒரே வகைப்பட்ட எழுத்துக்கள் பற்றி அல்ல. பல கவிதைகள் பற்றியவை. கவிதைகள் அல்ல. அவை பற்றிய மதிப்புரைகள். நாவல்கள் சிலவற்றைப் பற்றிய மதிப்புரைகள். சில நடந்த, பலர் அறியாத நடந்த வரலாறு சார்ந்த புனைவுகள். சில இலக்கியம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு பற்றிய மதிப்புரை இப்படி பல ரகங்கள். எல்லாமே யாரோ எழுதியதற்கு இன்னொருவர் எழுதிய மதிப்புரைகள். அந்த மதிப்புரைகளை மதிப்பிடுவது எப்படி?

    நமக்குத் தெரியாத ஏதேதோ நாட்டு, மக்களின் உணவு பற்றி, வேறு யார் யாரோ நாட்டவர் எழுதும் ரசனையை மாத்திரம் வைத்துக் கொண்டு யார் ரசனை எழுத்து சிறந்தது என்று எப்படிச் சொல்வது? ஏதும் ஒரு வகைப்பட்டதாக இருக்கவேண்டுமே.

    இது மிக சிக்கலான விஷயம். மலையாளத்து எரி சேரியைச் சாப்பிட்டு ஒரு இங்கிலீஷ்காரன் எப்படி இருந்தது என்று சொல்வான். ரஷ்யன் வோட்காவை ஒரு பர்மாக்காரன் சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்வான். பாங்காக் தெருக்களில் கரப்பான் பூச்சியை வறுத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டு ஒரு சைனாக்காரன் அவன் ரசனையைச் சொல்வான். இப்படி 20 பேர் எழுத்தைப் பற்றி இன்னொரு இருபது பேர் எழுதுவதை எப்படி ஒரு சீராக மதிப்பிடுவது? எது முதல் பரிசுக்கு ஏற்றது, எது இரண்டாவது பரிசுக்கு என்று சொல்வது?

    ஆக, இந்தக் காரியத்துக்கு ஏதாவது ஜகஜ்ஜாலம் செய்து தான் ஆகவேண்டும். ரொம்பவும் subjective ஆன நாவல், கவிதை, சிறுகதை இவற்றை நான் ஒதுக்கி விட்டேன். ஒதுக்கியதற்கு இன்னொரு காரணம், அந்த subjective ஆன எழுத்துக்கு இன்னொரு வேறுபட்ட ரசனையும் பார்வையும் கொண்ட இன்னொரு subjective அபிப்ராயத்தைப் பற்றி நான் என்ன சொல்லமுடியும்? ஒன்று மிகப் பரவச உணர்வோடு எழுதப்பட்டதும், இது என்னால் ஆகாது, மேரு மலையைப் பற்றி நான் ஒரு சிறு கரடு, நான் என்ன சொல்ல, என்ற தன்னடக்கம் கொண்டதுமாக இருந்தால். அதை மாத்திரம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய. இதையெல்லாம் ஒதுக்கி விட்டேன். பிட்ஸாவையும் நெத்திலி வறுவலையும் ஒப்பிடும் காரியம் என்னால் ஆகாது.

    ஆனால் இன்றைய தமிழுக்கு, அது தெரியாத, அது அறியாத வளங்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்துக்கள், எனக்கு மிக முக்கியமானவையாகப்பட்டன. இந்த மாதிரி எழுத்துக்கள் தமிழில் வருவது இல்லையென்றும் சொல்லலாம். அல்லது, மிக மிகக் குறைவு என்றும் சொல்லலாம். அப்படிப்ப்ட்ட எழுத்துக்களின் மீது நம் கவனம் செல்ல வேண்டிய அவசியம் உண்டு. இவை முக்கியமாக, வரலாறு ஆனதால் subjective அல்ல. புற நோக்கில் மதிக்கத் தக்கவை. எனக்கு இவை எழுதப்பட்டுள்ளதும், அவை பற்றி நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதும். எனக்கு மிக சந்தோஷம் தந்தவை. எந்த தரத்தில் எழுதப்பட்டவை என்று தீர்மானிக்கமுடியாத நாவல், கவிதை, சிறு கதை பற்றிய, பக்தி பாவத்தில் புகழ்ந்து எழுதப்பட்டவையும் அல்லது இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கில்லை என்று எழுதப்பட்டவையும் ஒதுக்கி விட்டால், ஒதுக்கத் தான் வேண்டும். மிஞ்சுவது இன்றைய தமிழ் வரவேற்க வேண்டிய சேர்க்கைகள், வளம் ஊட்டுபவை என்று கருதி அவற்றின் மீது நம் கவனத்தை ஈர்க்க எழுதப்பட்ட மதிப்புரைகள் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

    இது நான் – என் பார்வை.

    VGopalanஇந்தப் பார்வையில் எனக்கு நம்மவர் எல்லாம் மிகவும் ஏதோ பேர் சொல்லி ஒதுக்கி விடும் நாகரத்தினம் அம்மாளை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி ஒரு புத்தகமே வெங்கட கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுத, அதை தமிழுக்கு மொழிபெயர்த்த பத்மா நாராயணன், பின் இதைத் தன் மதிப்புரைக்கு எடுத்துக்கொண்டு இந்த அரிய ஜீவனைப் பற்றிய அரிய புத்தகத்தை நம் கவனத்திற்குக் கொண்டு வந்த தஞ்சை வெ.கோபாலன் எல்லோரும் நம் மரியாதைக்குரியவர்கள். முதல் பரிசுக்கு என் தேர்வு தஞ்சை வெ.கோபாலனின் மதிப்புரைதான். இன்றைய தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விஷயம். அது பெற்ற மகத்தான வரப் பிரசாதங்களைப் பற்றித் தெரியாது. பாமரத்தனமான பிரபலங்களைப் போற்றும், சிலை எழுப்பி வணங்கும் குணம் கொண்டது அது.

    அடுத்து இரண்டாவதாக வரும் எனது தேர்வு மா.ராசமாணிக்கனாரின் தமிழ் வரலாற்று, இலக்கிய ஆய்வுகளைப் பற்றி இன்றைய தமிழ் பண்டித உலகம், இலக்கிய உலகம் அறியுமா அறியாதா தெரியாது. அவரது வரலாற்று ஆய்வுகளை அவரது மகனார், இரா. கலைக்கோவனே எழுதிய வரலாற்றின் வரலாறு என்னும் இன்னொரு அரிய புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்கும் தேமொழியின் மதிப்புரை. வரலாறும், இலக்கிய ஆய்வும் இன்றைய தமிழ்ச் சூழலில் படும் பாடு நமக்குத் தெரியும். கலைக்கோவனும் அந்தப் புத்தகத்தை நம் பார்வைக்குக் கொண்டு வந்துள்ள தேமொழியும் நம் மரியாதைக்குரியவர்கள். இரண்டாம் பரிசு தேமொழிக்குரியது என் நோக்கில்.

    மூன்றாவதாக, எத்தனை கோடி டாலர் சம்பாதிக்கிறது இந்தத் திருப்பூர் நகரம் என்று நம்மிடம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிகார வர்க்கமும், முதலாளி வர்க்கமும் ஒரு நகரத்தையும் அதன் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் என்ன நாசம் செய்து வைத்திருக்கின்றனர் என்று நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்த்துள்ள ரஞ்சனி நம் மரியாதைக்குரியவர். அவரது மதிப்புரை ரஞ்சனியை மூன்றாம் பரிசுக்கு உரியவராக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.

    இவை போக இன்னும் மூன்று சிறப்புப் பரிசுகளும் உண்டு என்று வல்லமை ஆசிரியர் குழு அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த மன சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இல்லையெனில் இன்னும் பாராட்டத் தகுந்த மதிப்புரைகள் அநியாயமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கீழ்க்கண்ட மூன்று மதிப்புரைகள் தான் அத்தகைய சிறப்பு கவனம் பெறுபவை:

    எத்தனை பேர் Bridge on the River kwai என்னும் ஒரு மகத்தான திரைப்படத்தை இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களோ, பார்த்து அதன் முக்கியத்துவத்தை அறிவார்களோ தெரியாது. அந்த நினைவுதான் எனக்கு வந்தது ஷண்முகம் எழுதிய சயாம் மரண ரயில் என்னும் வரலாறு சார்ந்த புனைவு. அது பற்றி நமக்குத் தெரியத் தரும் ரிஷான் ஷெரீஃபின் மதிப்புரை.

    இரண்டாவது சிங்கப்பூர் மலேசியத் தந்தை தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் பற்றி ஜே.எம்.சாலி எழுதிய புத்தகத்தின் மதிப்புரை தந்துள்ள பாண்டியன். ஜி. இதெல்லாம் நமக்குப் புதிய விஷயங்கள். தெரியாத விஷயங்கள். நாம் அறிய வேண்டியவை.

    மூன்றாவது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலில் பிறந்து ஃப்ரெஞ்ச் கற்று அதன் இலக்கிய வரலாற்றை ஃப்ரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகள் அறிந்த சொ.ஞான சம்பந்தன் எழுத, அவர் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதி நம் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்த கலையரசி அவர்களின் மதிப்புரைக்கு மூன்றாவது சிறப்புப்பரிசு தரவேண்டும்.

    முன் சொன்னவாறு இவை எனதேயான பார்வையில் பட்டவை. ஏதும் objective ஆன நிலுவை, அளவைக் கருவிகள் என்னிடம் இல்லை. என் ரசனை மாத்திரமே என்னிடம் இருப்பது.

    வெங்கட் சாமிநாதன்/2.2.2014

    ஆகச் சிறந்த நூலத் தேர்ந்தெடுத்து, தெளிந்த நீரோடை போன்ற தம்முடைய எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்ததோடு, ‘அடடா, நூல் உடனே கிடைத்தால் தேவலாம் போல் உள்ளதே’ என்று ஏக்கம் கொள்ளச் செய்து கொக்கி போட்டு இழுக்குமளவிற்கு தம் வல்லமையை வெளிப்படுத்தி, முதல் பரிசை தட்டிச் சென்றுள்ள திரு தஞ்சை கோபாலன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!

    வலிந்துத் திணிக்காமல் தெளிந்துச் செம்மையாக, தம் எளிமையான நடையில், சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் வல்லமையுடன், அருமையானதொரு வரலாற்று நூலை அறிமுகப்படுத்தி, இரண்டாம் பரிசை வென்றுள்ள திருமதி. தேமொழி அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

    சீரான நடையில் தித்திக்கும் மொழியில் மூச்சு விடாமல் படிக்கச் செய்ததோடு, திரு ஜோதிஜி அவர்களின் இந்த ஆகச் சிறந்த நூல் எங்கு கிடைக்கும் என்று சிந்திக்கவும் வைத்து, மூன்றாம் பரிசை தட்டிச் சென்றுள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

    நச்சென்ற வார்த்தைகளால் சுருக்கென்று நம் உள்ளம் தைக்கும் அளவிற்கு பளிச்சென்று தம் கருத்துக்களை முன் வைக்கும் வல்லமையாளர் திரு ரிஷான் ஷெரீப் அவர்கள் சிறப்புப் பரிசு பெற்றமைக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

    மிகச் சரளமான நடையில், பிரெஞ்சிலக்கிய வரலாறு என்னும் நூலை படித்தே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவிற்கு தம் எழுத்துக்களால் நம்மைக் கவர்ந்துள்ள திருமதி.கலையரசி  சிறப்புப்     பரிசை வென்றுள்ளமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

    ‘சாரங்கபாணி’ என்பார் யார், இவரைப் பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அறிய வேண்டுமே, அதுவும் இப்பொழுதே’, என்று நம்மை, அந்த நூல் கிடைக்குமிடம் தேடித் திரிய வைக்கும் ஆற்றலுடன், தம் கருத்துக்களை மிகச் சுவையுடன் அனைவரையும் கவரும் வகையிலான அற்புதமான நடையுடன், போட்டிக்கு முதன் முதலாகத் தம் மதிப்புரையை வழங்கி, சிறப்புப் பரிசை வென்றுள்ள திரு பாண்டியன். ஜீ அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே. தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

    புத்தக மதிப்புரை போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் விவரம் ;

    1.சயாம் மரண ரயில் 

    2.டாலர் நகரம் 

    3.தேவதாசியும் மகானும்

    
    

    4.வரலாற்றின் வரலாறு 

    
    

    5.மணிக்கொடி 

    
    

    6.கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்

    
    

    7.மழைவில் மனிதர்கள் – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

    9.சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ

    .சாரங்கபாணி

    10 பிரெஞ்சிலக்கிய வரலாறு’ 

    12. கொய்த நன்மலர்கள் 

     

    13. தன்னாட்சி 

    14. சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் 

    ​15. ​இந்தியப் பெண்மணிகள்

     

    ​16. ​சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன்

    17. ‘டார்வின் படிக்காத குருவி’ 

    ​18. ​மாதொரு பாகன் – பெருமாள் முருகன் 

    ​19. ​இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

     

    20. பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

     

    போட்டி நடத்துவதற்கான மூல காரணமாக இருக்கும் திருமதி மதுமிதா அவர்களின் பதிவை இதோ இங்கே காணலாம். மனமார்ந்த பாராட்டுகள் அன்புத்தோழி மதுமிதா.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • உலக புற்று நோய் தினம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” – ஜான் டைமண்ட்

    இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

    உலக அளவில் முதல் இடத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்று நோயாக இருப்பது மார்பகப் புற்றுநோய். அடுத்து புகையிலைப் பொருட்களால் ஏற்பட்க்கூடிய புற்று நோய் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற காரணங்களால் 10ல் நான்கு பேருக்கு வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் 42 சதவிகித ஆண்களும், பெண்களும் உயிரிழக்க நேரிடுகிறது. மனித வாழ்விற்கு பெரும் சவாலாக இருந்துவரும் நோய்களில் புற்று நோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஏழு இலட்சம் பேருக்கும் மேலாக புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.முறையான சிகிச்சையும், சரியான விழிப்புணர்வும் இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 3,50,000 பேருக்கு மேல் இறப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாகவும் தெரிகிறது. இன்று பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம். புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய நாள். இந்த நோய்க்கான காரணங்களை அறிந்து அதனைக் கட்டுப்படுத்தும் வகைகளை அறிந்து கொண்டு நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

    புற்று நோயாளிகளிடம் அவர்களுடைய வியாதி பற்றி நேரடியாகக் கூறாமல் மறைத்து வைப்பதைக் காட்டிலும், அவரிடம், இருக்கும் நிலையை விளக்கி பிரச்சனையை அவர்கள் தைரியமாக எதிர்கொள்ள நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதே முக்கியம். இல்லாவிட்டால் தாம் சீக்கிரமே சாகப் போகிறோம், அதனால்தான் தம்மிடம் எதுவும் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதிலும் சிரமப்படுவார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  முதல் சிகிச்சை நோயாளிகளுக்கு மனஉறுதி அளிப்பது தான். புற்றுநோய் சிகிச்சைகளை, ஏற்றுக்கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்டவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் வகையில் மிக இயல்பாக இருத்தல் அவசியம்.

    ஆன்கோ பிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான, மருத்துவர் திருமதி செல்வி ராதாகிருஷ்ணா, FRCS., அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “இன்றைய மருத்துவக் கல்வித்துறையில் பட்டப்படிப்பிலும், டிப்ளமோவிலும் மேமோகிராமிற்கான கதிர்வீச்சுப் பயிற்சிகள் போதிய அளவிற்கு இல்லை எனவே பெரும்பாலான பரிசோதனை மையங்களில் செய்ய்ப்படும் பரிசோதனைகளின் தரம் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த விஷயத்தை ஒரு அர்ப்பண உணர்வுடன் கவனிக்க வேண்டியது மிக அவசியம். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் குறைந்த செலவில், தரமான சிகிச்சைகள்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியது பெரிதும் சிந்திக்கச் செய்கிறது. வெறும் இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கவர நினைக்கும் அரசாங்கம், இது போன்ற நற்காரியங்களுக்காகவது கொஞ்சம் பணத்தை செலவு செய்தால் புண்ணியமாவது கிட்டும் அல்லவா?

    Share
  • குடியரசு தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    republic
    நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்நந்நாளில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தத்தோடு சில வற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் நாடு பொருளாதாரத்தில் வளமிக்க நாடாக உயர்ந்துள்ளது. அங்கு தனி மனித வருமானமும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயில் அதிகமாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரால் முற்றிலும் சிதைந்துபோன ஜப்பான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் நம் நாட்டின் நிலையை எண்ணும்போது அந்த மகிழ்ச்சிக்கான முகாந்திரமே இல்லை. பாரதி கூறிய, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற நிலை வேண்டுமானால் மாறியுள்ளதே தவிர, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இன்னும் நம்மால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு காலம்தான் வளரும் நாடுகள் பட்டியலிலேயே நாம் இருந்து கொண்டிருப்போம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் இந்த குடியரசு ஆட்சி, மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கும், எதிலும் ஊழல். என்ற இன்றைய நிலையைத் தவிர்த்தாலே நம் நாடு வெகு விரைவில் வல்லரசு ஆவது உறுதி. நமது நாட்டில் அறிவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கும்கூட பஞ்சமில்லை என்பது சந்திரனுக்கு அடுத்ததாக செவ்வாய்க் கிரகத்திற்கும் ஆய்வுக்காக விண்கலத்தை அனுப்பியதன் மூலமாக நிரூபித்துவிட்டோம். பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்கள் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். உலகிலேயே, பொருளாதார அடிப்படையில் வலிமை மிக்க நாடான அமெரிக்காவின் வளர்ச்சியில் நம்முடைய இந்தியர்களின் பங்கு மிக அதிகம். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை இனம் கண்டு பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றாலும், ஆட்சியில் இருப்பவர்கள் பொது மக்களுக்காக அன்றி தனிப்பட்ட முறையில் வெகு சிலருக்காகவே சேவை செய்கிறார்கள். இந்த நிலை மாறி மக்கள் இவர்களைத் தட்டிக்கேட்கும் உரிமையைப் பெற வேண்டுமானால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்காக, பணமாகவோ அல்லது , பொருளாகவோ எந்த வகையிலும் இலவசங்களைப் பெறாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப் பெற்றால் அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். இதனால் நாம் நம் கண் முன்னால் நடக்கும் தவறைத் தட்டிக்கேட்டும் உரிமையை இழந்துவிடுகிறோம். இந்த குடியரசு தினத்தில், மக்களுக்காக யார் தங்கள் தன்னலமற்ற சேவையை வழங்குகிறார்களோ, அவர்களைத்தான் வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைப்போம். மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், முழுமையான அமைதி ஆகியவைகள் தொடர்ந்து நிலவிட, தேசபக்தி உணர்வோடு இந்த குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம் .

    வாழ்க குடியரசு! வெல்க ஜனநாயகம்! ஜெய்ஹிந்த்!

    Share
  • கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா!

    பவள சங்கரி 

    DSC09929

    ஜனவரி 20, 2014 திங்கட்கிழமை மாலை தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக கோவை மெடிகல் சென்டர், மருத்துவ மையத்தில் ’தாயகம் கடந்த தமிழ் ’ என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 19ம் நாள், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான, மருத்துவர். நல்ல பழனிசாமி அவர்களின் முயற்சியால், ”தமிழின் வளம் தமிழர் நலம்” என்னும் இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் பண்பாட்டு மையம். ‘எங்கெங்கு காணினும் தமிழனடா’ என்று சொல்லும் அளவிற்கு, உலகம் முழுவதும் பரவி வாழும் நம் தமிழர்களின் ஆழ்ந்த மொழிப்பற்று, எத்தகையச் சூழலிலும், எதுவிதமான நெருக்கடியிலும் உயிர்ப்போடு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உயிர்த் துடிப்பில் உருவானதுதான் இம்மையம். நம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வளமை குறித்து அளவற்ற பெருமிதம் கொள்ளும் அளவிற்கு, நாம் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கு ஒரு செல்வமாக இதனை அளித்துவிட்டுப் போகும் பொறுப்பு எனும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற கருத்தின் ஆணி வேருக்கு உரம் இடும் வகையில், தமிழ் மக்களிடம், தமிழ் ஓர் உலகளாவிய மொழி உலகின் பல பகுதிகளிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும் . அப்படிச் செய்வதால் இயல்பாக தமிழர் மனதில் எழும் பெருமித உணர்வு, தமிழ் மொழியைத் தொடர்ந்து மேன்மைப்படுத்தி காப்பாற்றி வரக்கூடும் என்ற சீரிய ஆக்கப்பூர்வமான, உளவியல் அணுகுமுறையிலான சிந்தனையுடன் 12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்க்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்திச் சிறப்பித்தார்கள்.  முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

    கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு மாலன் தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது. “புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது.

    “சிறுகதை ஒரு படைப்பாளியின் திறனை எடை போடுவதற்கு உகந்த வடிவம்” என்னும் திரு மாலன், மேலும், சிறுகதைகள் என்பது நீதிக்கதைகள் அல்ல, நீளம் சார்ந்தும் தீர்மானிக்கப்படுவதல்ல, ஒரு கவிதைக்குரிய நேர்த்தியும், வார்த்தை சிக்கனமும், சொற்தேர்வும், நீர்ப்பரவல் போன்ற எடுத்துரைப்பும் அதற்கு இலக்கணங்கள். அவற்றுடன் தொடக்கத்தில் போடும் முடிச்சை கதைசொல்லி எப்படி அவிழ்க்கிறார், எதற்காக, ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் அடிப்படையில் சிறுகதைகள் அமைய வேண்டும்” என்ற இவருடைய கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டது. அதே போன்று “மொழிபெயர்ப்பிற்கு மூல மொழியை வாங்கிக்கொள்ளும் திறனும், சொந்த மொழியில் அதை வெளிப்படுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியரின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருத்தல் வேண்டும் இக்குறைகளைப் போக்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர இயலும்” என்ற சிந்தனையும் கருத்தில் கொள்ளத்தக்கவை.

    DSC09939

    தமிழறிஞர் பேராசிரியர் தொ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் மாணவர் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம், காமன்வெல்த் நாடுகளின் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 23 நூல்கள் எழுதியுள்ள சிறந்த பேச்சாளர், ’மொழியாக்கம் ஒரு முடிவற்ற பயணம்’ என்று கூறும் முனைவர் . கா. செல்லப்பன், “ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு மொழிபெயர்ப்பாளனே, ஏனென்றால் அவன் தன் உள்ளொளியை, உலகொளியாக்கும்போது, அக மொழியிலிருந்து புறமொழியில் ஆக்கம் செய்கிறான்” என்ற சுவையான, சிந்திக்கத்தகுந்த கருத்தை முன் வைக்கிறார்.

    குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.இலெ. தங்கப்பா அவர்கள், “மொழிபெயர்ப்பையும் இலக்கியப் படைப்பாகவே கருதி மேற்கொண்டு வந்துள்ளேன். எந்த ஒரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நான் என் மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டதும் இல்லை. ஒரு பாவலன் என்ற முறையில் என்னுள் இருக்கும் அழகுணர்வே என் மொழிபெயர்ப்புகட்கு அடிப்படையாக இருந்திருக்கின்றது “ என்கிற சிந்தனைக்குரிய கருத்தையும் முன்வைக்கிறார்.

    மொழிபெயர்ப்பிற்காகவும், கவிதைத் தொகுதிக்காகவும் இரு சாகித்ய அகாதெமி பரிசுகள் பெற்றவர், தமிழில் முதல் மொழியாக்க நூல் ‘விவிலியம்’ என்று கூறும், கவிஞர் புவியரசு அவர்கள். மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்களை மிகச் சுவைப்படவே விளக்கியுள்ளார். ”மிகவும் அன்னியமான பழக்க வழக்கங்கள், நமக்குப் பொருந்தாத பழமொழிகள், நாம் கண்டிராத மரம் செடிகொடிகள், ஒரு விசயத்தை அவர்கள் வெளிப்படுத்தும் முறை, அசைச் சொற்கள் போன்றவை தமிழ் மரபில் பொருந்தாமற்போவதால், தமிழில் இறக்கி வைக்க முடியாமல் போகிறது. இதற்காக நட்சத்திரக் குறிபோட்டு பக்கத்தின் கீழே அடிக்குறிப்பு எழுதுவதும் வாசகரைக் காலிடறச் செய்துவிடும்; எரிச்சலை உண்டாக்கிவிடும். இதை வெல்லும் வழி, உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர், குந்தர் கிராஸ் முன் வைத்துள்ளது போல ‘மறுபடைப்பாக்கம்’ ஒன்றுதான் சாத்தியக்கூறான தீர்வு என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழ் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்ட, தமிழில் இல்லாத ஓசையை உச்சரிக்க உருவாக்கப்பட்ட, ஜ, ஷ, ஸ, ஹ, ஷீ (அவை வடமொழி எழுத்துக்கள் இல்லை) போன்ற எழுத்துகளை தேவைப்பட்ட இடத்தில், தவிர்க்க முடியாத இடங்களில் பயன்படுத்துவதில் தவறே இல்லை என்கிறார். குந்தர் கிராஸ் சொன்ன, “எந்த மொழியும் புனிதமானது அன்று; மாறாதது அன்று; மாற்றக்கூடாதது அன்று. உலக நாகரீகங்களின் தாக்கம் ஏற்படும்போது எந்த மொழியும் விரிவடையவே செய்யும். புதியன புகுதலுக்கு வழியடைத்து, மொழியை சின்னச் சிமிழுக்குள் அடக்க முற்பட்டால், அந்த மொழி மெல்லச் சாகும்’ என்று சொன்னது மொழியாக்கத்திற்கு மட்டுமல்லாமல், மொழியின் விரிவாக்கத்திற்கும் உதவும் கருத்து இது என்கிறார்.

    கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றவருமான, திரு இந்திரன் அவர்கள், “மரபணுக்களின் சோதனை எப்படி உடம்பின் பரம்பரை குறித்த செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறதோ, அதே போன்றுதான் ஒரு மொழியின் சொற்கள் பற்றிய சோதனை பாரம்பரியமான அந்த பண்பாடு பற்றிய செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது. பண்பாட்டு விழுமியங்களின் ஒரு ஞாபகக் கிடங்காகச் செயல்படுகிற மொழி, நம்மைச் சுற்றியுள்ளவை குறித்த மதிப்பீடுகளை காலத்துக்குக் காலம் கட்டமைக்கிற கருவியாகவும் செயல்படுகிறது. தனக்கென்றிருக்கிற ஒரு மொழியை இழந்துவிட்ட பண்பாடும், தனக்கென்று இருக்கிற ஒரு பண்பாட்டை இழந்துவிட்ட மொழியும் பலகீனமாகி நாளடைவில் இல்லாது போகின்றன.” என்ற கருத்தை உறுதிபட முன் வைக்கிறார்.

    இறுதி நாள் நிகழ்வுகளை மிக அழகாகத் தொகுத்து வழங்கிய முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின் மிக யதார்த்தமான பேச்சு நல்ல வரவேற்பைப் பெற்றது. எந்தவிதமான வெளிப்பூச்சும் இல்லாமல் இருக்கும் உண்மை நிலையை அவர் எடுத்துரைத்த விதம், ‘ஆமாங்க ஐயா, எல்லார் வீட்டிலும் இந்த நிலைதானுங்க’ என்று சொல்லும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னைப் பொறுத்தவரை தம் மனைவியும் தமிழ் பேசுபவராக இருப்பதால், குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், 1970 ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரான பேரக் குழந்தைகளின் நிலை பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை என்றது சத்தியமான வார்த்தைகளாகத்தான் பட்டது. குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில் ஆரம்பிக்கும் பிரச்சனை பேசும் மொழி, எழுத்து மொழி என அனைத்திலும் பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணங்களாக அவர் சொன்னது கலப்புத் திருமணம். பெற்றோர் இருவரும் வெவ்வேறு மொழி பேசுபவராக இருந்தால் குழந்தை எந்த மொழியை பின்பற்றப் போகிறதோ அல்லது பொது மொழியான ஆங்கிலமே நிலைத்துவிடுமோ என்ற அவருடைய கவலை நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கான தீர்வு என்று அவரால் ஏதும் சொல்ல முடியாத நிலையே நிதர்சனம்.

    அடுத்து பேசிய ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, நம் தமிழ் நாட்டின் மதுரை மாநகரத்து மருமகளான, பேராசிரியர் உல்ரிக்கே நிகோலஸ் அவர்கள் மிக அழகாகத் தமிழ் பேசி சபையோரை வெகு எளிதாகக் கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, தென்கிழக்காசிய ஆய்வுத் துறையின் தலைவரும், இந்தியவியல் துறைப் பேராசிரியருமான இவர், முத்தொள்ளாயிரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணி இலக்கணம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்ந்தவர். தொல்காப்பியத்தின் உவமையியலை, வடமொழி நூலான தண்டியின் அலங்கார சாத்திரத்துடன் ஒப்பாய்வு செய்தவர். மத்திய அரசின் கல்வித் தொகை பெற்ற ஆய்வாளராக, தமிழ்ப் பல்கலைக் கழகங்களிலும், புதுவை தூரக்கிழக்கு பிரஞ்சுப் பள்ளியிலும் பணியாற்ற பெற்ற வாய்ப்பால் தமிழகத்தில் சில காலம் வசித்தவர். ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலில் அறியப்பட்ட இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி மட்டுமே என்கிறார். இவருடைய ஆதங்கமும் மேற்படிப்பு தமிழ் படிப்பதில் குழந்தைகளுக்கு உள்ள சிக்கல். இவர் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று புரிந்தது.

    தாயகத்திற்கப்பால் தமிழ்மொழிக் கல்வி கற்பித்தல்; நோக்கம், முயற்சிகள், அனுபவங்கள் குறித்த கட்டுரையை வழங்கியுள்ள திருமதி வெற்றிச்செல்வி கலிபோர்னியா தமிழ் கழகம் என்று இவர் நிறுவிய அமைப்பின் வழி அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புலம் பெயர்ந்து வசிக்கும் 4000 குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வகுத்து இந்த அமைப்பு தமிழ் கற்பிக்கிறது . இதன் காரணமாக ஒரு தலைமுறைக் குழந்தைகளுடன் தமிழ் மரபு பேணப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாடுகள் மற்றும் 5000 பேர் பங்கு கொண்ட உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழ்க் கல்வி மாநாட்டை 2012ல் நடத்தியவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து “கலைஞர் களஞ்சியம்” என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார். இவர் தங்கள் பள்ளியின் விரைவான வளர்ச்சி பற்றி மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டாலும், அதை மேலும் செம்மையாக நடத்த அவருக்கு உள்ள குறைபாடுகளையும் வெகு நேர்த்தியாக பகிர்ந்துகொண்டார். தங்களுடைய சர்வதேச தமிழ் கல்வி நிலையம், இன்றைய தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறுவது:

    தமிழ் உரைநடை நூல்கள் , சிறுகதை நூல்கள் மற்றும் மின்னூல்கள்.

    புலம்பெயர் மாணவர்களுக்கு உகந்த வகையில் பாடங்களையும், கதைகளையும், படைக்க தமிழ் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

    மாணவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி படிக்கும் வகையில் பாடங்களும், கதைகளும் அமைய வேண்டியது அவசியம்.

    புலம்பெயர் மாணவர்கள் வாழும் சூழல் குறித்து எழுத்தாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    எழுத்தாளர்கள் தமிழ் நாட்டுக் கல்வி முறை மற்றும் தமிழ் வகுப்புகள் மற்றும் புலம்பெயர் மாணவர்களின் கல்வி முறை மற்றும் மொழி வகுப்புகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்.

    மாணவர்கள் தங்களுடைய வழமையான பாடத்திட்டங்களுடன், அதிகப்படியான திணிப்புகளும் இருப்பதாக நினைப்பதால் அவர்களுக்குரிய புத்தகங்கள், கண்ணைக் கவரும் வகையில் வண்ணமயமாகவும், சுவையான உள்ளீடுகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

    சொல்லகராதிகள் எளிமையாக இருக்க வேண்டும் போன்ற பல எதிர்பார்ப்புகளை முன்வைத்தார். இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எழுத்தாளர்களின் கடமை என்பதும் நிதர்சனம்.

    சிங்கப்பூரில் தமிழ் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் முனைவர் அ.வீரமணி அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தற்சமயம் ஜப்பானின் இரிட்சுமேய்க்கான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழி ஆர்வமும், கல்வியும் பெற மாணவர்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திய அமைப்பு முக்கிய காரணியாக அமைந்தது. தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். தமிழுக்காக பல ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி பல தொகுப்பு நூல்களையும், பிற எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் தமிழ்க் கல்வி குறித்து, “பன்னாட்டு அறிஞர்கள் கூடும் சிங்கப்பூரில் தமிழ்க் கூட்டங்களில் அறிஞர்களைக் காண்பது அரிது, உலகளாவிய அறிஞர்கள் சிங்கப்பூரில் இருப்பது கூட சில குறிப்பிட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலமாக மட்டுமே அறிய முடிகிறது. இதனால், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி என்பதெல்லாம், எல்லாக் காலங்களிலும் அரசாங்க அரவணைப்பினால்தான் நடந்துள்ளது என்ற எண்ணம் எங்கும் நிலவுவதை உணரலாம். இந்த எண்ணம் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தொடர்பிலான ஆராய்ச்சியை மேற்கொள்வோர் மத்தியிலும் வாழ்கிறது. இந்த மனப்போக்கு ஆங்கில மொழியை அதிகம் கற்றதனால் ஏற்படுகிறதா அல்லது காலனித்துவ ஆட்சியின் தாக்கத்தால் தொடர்ந்து இருக்கிறதா என்று பகுத்தறிய முடியவில்லை. இன்றைய சிங்கப்பூர் அரசின் ஏகாதிபத்திய ஆதிக்கமும் இந்த மன நிலைக்குக் காரணமாகலாம்” என்ற கருத்தின் அடிப்படையில் இருந்தது சிந்திக்கத்தக்கது. மேலும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் ஒன்று , அரசியல் பொருளாதார செல்வாக்கில்லாமல் தனது மொழியைத் தொடர்ந்து வளர்க்க முடியுமா என்ற ஐயம் தொடர்ந்து நிலவவேச் செய்வதாகக் கூறுகிறார். பல குடும்பங்களில் தமிழ் வெறும் பள்ளி மொழியாக மட்டுமே கருதப்படுவதாகவும் கூறுகிறார்.

    ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி வளர்ச்சி, வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய திரு அன்பு ஜெயா அவர்கள் மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற்வர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று, இருபது ஆண்டுகளாகச் சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளின் ஹோல்ஸ்வொர்தி கிளைக்கு முதல்வராகவும், தற்போது அப்பள்ளியின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் 15 ஆண்டுகளாக பங்குபற்றி தமிழ்ப்பாடப் புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் பல நடத்தி வருவதுடன் 2012 ஆம் ஆண்டு கலிபோர்னியா தமிழ்க் கல்விக் கழக மாநாட்டில் ஆசிரியர்களுக்கு ஒரு பயிலரங்கும் நடத்தியுள்ளார். தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் பல பயிற்சிகளைத் தன்னுடைய இணையதளத்தில் (www.anbujaya.com) வெளியிட்டு வருகிறார். மதுரைத் திட்டத்தில் பங்கெடுத்து 2000 பக்கங்களுக்கு மேல் தட்டச்சு செய்தும் பிழை திருத்தியும் பணி செய்திருக்கிறார்.

    தமிழ்க்கல்விக்கு உள்ள சவால்களாக இவர் குறிப்பிடுவது, “முற்றிலும் வேற்றுமொழிச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தல் என்பது எளிதான செயல் இல்லை. அதற்காகப் பல விதமான சவால்களையும் தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சில சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிகிறது. சில சவால்களுக்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை”

    தமிழ்மொழி தமிழர்களின் அடையாளம் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த முயலாத, சில சமயங்களில் தாங்களே உணராத பெற்றோர்கள்.

    தமிழைப் படிப்பதால் என்ன பயன் என்று பொருளாதார நோக்கில் எழும் கேள்வி.

    வீட்டில் பிள்ளைகளுடன் எப்போதும் தமிழில் பேசவேண்டியதின் அவசியத்தை உணராது இருத்தல்.

    வார இறுதி நாட்களில் பாட்டு, நடனம், விளையாட்டு, நீச்சல் போன்ற பிள்ளைகளின் மற்ற வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

    என் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரிந்தால் மட்டும் போதும் என்று கூறும் பெற்றோர்களின் மனப்பாங்கு.

    வாரத்தில் இரண்டு மணி நேரம் தமிழ் படித்தாலே பிள்ளைகளுக்குத் தமிழில் முழு திறமையும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

    பல்கலைக்கழகத்தில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்க தற்போது வாய்ப்பு இல்லாத சூழ்நிலை.

    இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, பெற்றோர்கள் தமிழ் மொழியின் இன்றியமையாமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். வீட்டில் தங்கள் பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசவேண்டும். அவர்களை தமிழ்ப் பள்ளிகளுக்குத் தவறாது அழைத்துவர வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் தங்களால் முடிந்த பங்களிப்பைத் தவறாது செய்தார்களானால் அயல்நாடுகளில் தமிழ்மொழி தலைமுறை தலைமுறைகளாகச் செழித்தோங்கும் என்பது உறுதி, என்கிறார் திரு அன்பு ஜெயா.

    DSC09983

    சீன வானொலியின் தமிழ்ப்பணி என்னும் தலைப்பில் தம் கருத்துகளை நிறுவியுள்ள சீனப்பெண் செல்வி. சாவோ ஜியாங் சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப்பிரிவின் தலைவர். தமிழ்மீது கொண்ட பற்று காரணமாகத் தன் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டவர். இவர் எழுதியுள்ள ‘சீனாவில் இன்ப உலா’ என்னும் புத்தகம், ஒரு சீனர் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் மொழி புத்தகம் ஆகும். 2013ஆம் ஆண்டு சீனாவின் புகழ் பெற்ற சி.பி. பதிப்பகத்திற்காக, “சீனம் தமிழ் கலைச்சொல் அகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இந்த அகராதியில் சுமார் 27,000 சொற்கள் உள்ளன . தமிழர்கள் சீன மொழியைப் படிப்பதற்கு இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கலைமகளின் தலைமையில் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் சேவையில் பெரும் முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இப்பொழுது சிற்றலை ஒலிபரப்பு, பண்பலை ஒலிபரப்பு மட்டுமல்லாமல், தமிழ் இணையதளம், கைப்பேசி இணையம், தமிழொலி என்னும் இதழ் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.

    “தமிழ் மொழி அருமையான மொழி என்பது என் கருத்து. தமிழுக்கு அமுது என்று பெயர் என்பது உண்மைதான்” என்கிறார் கலைமகள். எதிர்காலத்தில் தமிழ் மொழி போல் சீனத் தமிழ் ஒலிபரப்பும் நீண்டு நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்குவது எமது கடமையாகும். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுவதற்கு சீனத் தமிழ் ஒலிபரப்பு பங்காற்றுகிறது என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார் கலைச்செல்வி, முத்தாய்ப்பாக.

    தம்முடைய நன்றியுரையில், திரு மாலன் அவர்கள் குறிப்பிட்டது போல, தாயகம் கடந்த தமிழ் என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு, வெற்றுப் பெருமைகள் மட்டுமே பேசாமல், நம் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள், அதன் தீர்வுகள் போன்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்தார்கள் என்பதே சத்தியம். கலந்து கொண்ட அனைவரும் மன நெகிழ்வுடன் விடைபெற்றது கருத்தரங்கக் குழுவினரின் அக்கறையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. இறுதியில் தமிழ் படிக்கும் ஒரு மாணவி படித்து முடித்தவுடன் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பியது அரங்கில் சிறு சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை.

    Share
  • வள்ளி தனக்கே குறவர் மலையாட்சி!

    பவள சங்கரி

    2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு. விஜயா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

    மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது அன்பில் உறைந்திருந்த போழ்தில் பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ள பாடல்:

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக்
    குறவனெங்கள் வீட்டிற் கொண்ட
    வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி
    சீதனமா வழங்கி னாராற்
    பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு
    துணியிலையென் பிறகே வந்த
    கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு
    மெனக்குமிலை கங்சி தானே.
    20

    800px-PettaiNarikoravas

    நாகரீகம் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்திலும், சில இன மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளையும், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு, அவர்களின் பின் தங்கிய பொருளாதார நிலையும், போதிய கல்வியறிவும் இல்லாததே முக்கிய காரணமாகிறது. ‘நரிக்குறவர்கள்’ என்று அழைக்கப் பெறும், குறிப்பிட்ட ஒரு நிலையான தங்குமிடம் இல்லாத நாடோடிகளைப் போல வாழ்பவர்களான இவர்கள் அதனால் இழக்கக்கூடிய பல நன்மைகளில் மிக முக்கியமானது அவர்தம் குழந்தைகளின் கல்வி. பெற்றோர்களின் பின்னால் ஊர் ஊராக அலைந்துகொண்டு, அந்த வயதில் கிடைக்கக்கூடிய அத்துனை இன்பங்களையும் இழக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையின் உச்சம். ஆனால் இவர்களிடமும் ஆச்சரியப்படும் வகையில் பல திறமைகள் உள்ளது. குறிப்பாக குறவர்கள் காலம் காலமாகத் தாங்களே தயாரித்து உட்கொள்ளும் நாட்டு மருந்துகள், அதனால் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற்றிருப்பது. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைக் கொடுக்கும் இவர்களுடைய மருத்துவக் கலையை, இடாய்ச்சு நாட்டு அறிஞர் ஒருவர் ஆய்வு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நரிக்குறவப் பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கை தேர்ந்தவர்கள். இந்த இனத்து ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ’கவண்வில்’ என்று சொல்கிற, சிறு பறவைகள், விலங்குகள், மரத்தில் இருக்கும் பழங்கள் போன்றவற்றை குறி பார்த்து அடிக்க உதவும் உண்டிவில்லை நன்கு கையாளும் திறமை மிக்கவர்கள். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி மணிகள் போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்து பிழைப்பவர்கள். இந்த நரிக்குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் , நாடி பார்த்து நோய்க்குறி சொல்வது ஆகியவற்றில் தனித்திறமை வாய்ந்தவர்கள். குறத்தி குறி சோசியம் சொல்லும் வாக்கு சுத்தமானது என்று இலக்கிய காலத்திலிருந்து போற்றப்பட்டு வருவது நாம் அறிந்ததே. குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மராட்டிய வீரர் சிவாஜியின் படைவீரர்களாக இருந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். சிவாஜியின் ஆட்சிக்காலம் நிறைவுற்றபோது அவருடைய படை வீரர்களான இவர்கள் காட்டில் சென்று மறைந்து வாழ வேண்டி வந்ததாம். அப்பொழுது அங்கிருந்த இலை, தளைகளை உடுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கிருக்கும் துப்பாக்கி சுடும் திறமை மற்றும் வேட்டையாடும் திறமையைக் கண்டறிந்து துப்பாக்கி வழங்கி பிழைக்க வழி செய்திருக்கிறார்கள். அதன்பின் மெல்ல, ஊருக்குள் வந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு ‘வாகிரி’ என்ற பேச்சு மொழி மட்டும் உண்டு. ஆனால் இதற்கு எழுத்து வடிவம் இல்லை. குருவிக்காரர் என்றும் அழைக்கப்படுகிற இவர்கள் தமிழ்நாடு அரசால் மலைவாழ் மக்கள் (S.T) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

    வறுமையின் பிடியில் சிக்கி, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச அடிப்படைக் கல்வியாவது கிடைத்து, அவர்களுடைய வாழ்விலும் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவரான சேலம் மாவட்ட ஆட்சியாளர் உயர்திரு ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்தம் துணைவியார் திருமதி. கிருத்திகா ஆகியோர் இந்த நரிக்குறவ இனக் குழந்தைகளின் மீது கொண்ட பரிவு மற்றும் அதீத அக்கறையின் காரணமாக அவர்களின் வாழ்விலும் ஒரு விடிவு பிறந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன் அவர்களின் மகள் வயிற்றுப் பெயரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நம் தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக நரிக்குறவர் குழந்தைகளுக்காக பள்ளி ஆரம்பித்திருக்கிறார்.

    vijaya

    2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதான, நல்லாசிரியர் விருது பெற்ற செல்வி.விஜயா அவர்கள் இந்தச் சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்து இவர் ஆற்றிய அரும் பணிக்காக இவ்விருதைப் பெற்றிருக்கிறார் . ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக மகுடம் சூட்டிக்கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது ஆதீத ஈடுபாடும் மதிப்பும் கொண்ட விஜயா அவர்கள், கல்விப் பணிக்காகவே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். தனக்கென்று ஒரு குடும்பமும், குழந்தைகளும் தேவையில்லை என்று ஆசிரியப் பணிக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். அந்த அர்ப்பணிப்பிற்கு ஆதாரமாக 2009 – 2010ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவருடைய சேவை பற்றியும், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக திருமிகு. விஜயா அவர்களை சேலத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். உற்சாகத்துடன் அவர் உரையாடியபோது அவர் வார்தைகளில் இருந்த உண்மையை அது உணர்த்தியது!

    செவ்வி : ஆசிரியத் தொழிலில் சவாலான இந்தப் பணியை எப்போது, எங்கு, ஏன் மேற்கொண்டீர்கள்?

    விஜயா : 2003 ஆம் ஆண்டு, சேலம் அருகில் மின்னாம்பள்ளி என்னும் கிராமத்தில், ஒரு கூடாரம் அமைத்து அதில் 9 குழந்தைகளுடன், முதன் முதலில் நரிக்குறவர் குழந்தைகளுக்காக ஆரம்பித்தோம். மின்னாம்பள்ளியில் அப்போது 51 நரிக்குறவர் குடும்பங்கள் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த உயர்திரு ராதாகிருஷ்ணன், மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகியோரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக இப்பள்ளி உருவானது என்றே சொல்ல வேண்டும். மதிப்பிற்குரிய ஆட்சியாளர் அவர்கள், சேலம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக வசித்து வந்த நரிக்குறவர் குழந்தைகளின், ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளைக் கண்டு மனம் வருந்தி இவர்களுடைய வாழ்க்கை முறை மேம்பட ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே இப்பள்ளி உருவானதன் வரலாறு. அவருடைய துணைவியார் திருமதி கிருத்திகா அவர்கள் இதற்கு பெரிதும் ஈடுபாடு காட்டி, முழுமையாகத் தன் சேவைக் கரங்களை நீட்டினார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அவர் பலரை இந்தத் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியும், அதை மறுத்துவிட்டனர். தாய்மை உணர்வுடன் கூடிய ஒரு பெண் ஆசிரியை மட்டுமே இப்பணியை முழுமையாகத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்த எனக்கு இப்பதவியைக் கொடுத்தார். நானும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக என்னால் இயன்ற அளவிற்கு என் பணியை செவ்வனே செய்திருக்கிறேன் என்றே நினைக்க முடிகிறது.

    செவ்வி : குறிப்பிட்ட இப்பணியை ஆசிரியத் தொழிலின் சவாலான பணி என்று நான் குறிப்பிட்டதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    விஜயா: ஆம். உண்மைதான். சமுதாயத்தில் ஓரளவிற்கேனும் நல்ல நிலையில் இருக்கும் சிறார்களுக்கு பாடம் எடுப்பதைக் காட்டிலும், அடிப்படை ஆரோக்கியம், நாகரீகம் போன்றவற்றில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாக இருந்தது. ஆரம்பத்தில் பள்ளியின் உட்காரும் மர இருக்கைகளையெல்லாம் கூட வெளியே வீசிவிடுவார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தவும் முடியாது.

    செவ்வி: அந்தச் சிறார்களை வழிக்குக் கொண்டுவர என்னென்ன முயற்சிகள் செய்தீர்கள் என்று சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?

    vijaya 1விஜயா : முதல் நிலையில் அவர்கள் பெற்றோரிடம் சென்று பேசினோம். எனக்கு அப்போது குணராணி என்ற ஒரு உதவியாளர் இருந்தார். அவர் மிகுந்த சேவையுள்ளம் கொண்ட கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். அவருடைய ஒத்துழைப்பு குறிப்பிடும்படியாக இருந்ததும், என் பணியை என்னால் ஓரளவிற்கேனும் சரியாகச் செய்ய முடிந்ததற்கான காரணமாக இருந்தது. மற்ற குழந்தைகளின் சாதாரண பள்ளி போல இதனை நடத்த வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டோம். முதலில் அவர்களுக்குப் பிடித்த காரியங்களைச் செய்து எங்களிடம் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். முதல் காரியமாக ஒரு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து, தினமும் காலையில் குறிப்பிட்ட அந்த 9 மணிக்கு, ஒலிபெருக்கியில் அவர்களுக்கு மிகவும் விருப்பமான எம்.ஜி.ஆர். பாடல்களைப் போடுவோம். இந்தப் பாடல்கள் ஒலிபரப்பாக ஆரம்பித்தவுடனே குழந்தைகள் ஆடிக்கொண்டே, ஓடி வந்துவிடுவார்கள். சில தாய்மார்களும்கூட உடன் வருவார்கள். அவர்கள் ஆட ஆரம்பிக்கும் போது, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம். மெல்ல மெல்ல, அவர்களுடன் கலந்து பழக இதுவே எங்களுக்கு அடிப்படையாக இருந்தது. பின் மெல்ல எங்கள் பேச்சைக் கேட்கும் நிலைக்கு வந்தார்கள். நாங்கள் பள்ளிக்கு வரும் போதே, வெல்லம், பொறி கடலை போன்ற தின்பண்டங்களை அன்றாடம் வாங்கி வந்துக்கொடுப்போம். அடுத்து சோப்பு, பல்பொடி என வாங்கி வந்து அவர்களுக்கு அன்றாடம் பல் தேய்த்து குளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினோம். நல்ல துணிமணிகளை, வெளியில் பொது மக்களிடம் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்தோம். பெரும்பாலானக் குழந்தைகள் வெறும் கோவணம் மட்டுமே கட்டியிருந்தார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளின் நடை, உடை, பாவனைகளின் மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடன், மற்ற குழந்தைகளுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அங்கு அப்போது 51 கூடாரங்களில் வசித்துக் கொண்டிருந்த மக்களின் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வர ஆரம்பித்தனர். சின்னச் சின்ன வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம். ஜெ.ஜெ. பள்ளி என்ற அந்தப் பள்ளி பிரபலமாக ஆரம்பித்தது. அந்தப் பள்ளியைக் கடந்து செல்பவர்கள் கூட சிறிது நேரம் நின்று ஆச்சரியமாகப் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள்

    செவ்வி : நரிக்குறவர்கள் பேசும் மொழி ‘வாகிரி’ என்ற ஒரு எழுத்து வடிவமற்ற மொழி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மொழி உங்களுக்குத் தெரியுமா? அவர்களிடம் பேச்சுத் தொடர்பு எப்படி ஏற்படுத்திக் கொண்டீர்கள்?

    விஜயா : ஆம். வாகிரி என்பதுதான் அவர்கள் பேசும் மொழி. எனக்கு ஹிந்தி மொழி நன்கு தெரியும். வாகிரி மொழி Photo0210கிட்டத்தட்ட அதனை ஒத்து இருக்கும். நரிக்குறவர் சங்கத் தலைவர் சங்கர் என்பவர் அங்கு இருந்தார். அவரிடம் சில நாட்கள் சென்று நானும், குணராணியும், ஓரளவிற்கு முக்கியமான வார்த்தைகளைக் கற்றுக்கொண்டோம். ஹிந்தியும், ஆங்கிலமும் ஓரளவிற்கு படித்துக் கொள்ள முடிந்த அவர்களால், தமிழ் படிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. முதலில் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், நடை, உடையையும் மாற்றும் வேலையையே அதிகமாகச் செய்தோம். பின் மெல்ல, மெல்ல கல்வி கற்பிக்க ஆரம்பித்தோம். அப்போது பணியில் இருந்த முதன்மை கல்வி அலுவலர் திரு கார்மேகம் அவர்களின் முழு ஒத்துழைப்பும் எங்களுக்குக் கிடைத்தது.

    செவ்வி: முன்பின் பள்ளி பற்றி அறியாத அவர்களுக்கென்று ஏதும் தனிப்பட்ட முறை பாடத்திட்டங்களை உருவாக்கினீர்களா? அது பற்றி சொல்லுங்களேன்.

    விஜயா : ஆம். மற்ற குழந்தைகளுக்கு உள்ளது போல சாதாரண பாடத் திட்டம் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. விரைவிலேயே 52 குழந்தைகளை சேர்த்துவிட்டோம். வயது அடிப்படையில் அல்லாமல் அவர்களின் புரிந்து கொள்ளும் திறனின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டோம். பொதுவான ஆரோக்கியம் சார்ந்த கல்வி, அறிவியல், தமிழ், கணக்கு என்று சொல்லிக் கொடுத்தோம். ஆரோக்கியம் சார்ந்த கல்வி என்றால், அன்றாடம் குளிக்கும் வழக்கம், நல்ல உடை உடுத்துவது, சமுதாயத்தில் மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை என்று இப்படி பலவற்றையும், கற்றுக் கொடுத்தோம். அருகில் இருந்த திருமண மண்டபத்தில் மீந்த சாப்பாடு இருக்கிறது என்று கூப்பிட்டால் போய் வாங்கிச் சாப்பிடக் கூடாது. முன்னாலேயே அழைத்தால் மட்டுமே செல்ல வேண்டும். அதுவும் ஒழுங்காக உட்கார்ந்து இலையில் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். அவர்களும் யார் சாப்பாடு கொடுத்தாலும் வந்து எங்களிடம் கேட்பார்கள் வாங்கி சாப்பிடலாமா என்று. அடுத்து அறிவியல் வகுப்பு என்றால் அருகில் இருந்த தோட்டம், வயல்வெளி, வனம் என அழைத்துச் சென்று இயற்கை சார்ந்த அறிவியல் வகுப்புகள் எடுத்தோம். கணக்குப் பாடம் எடுப்பது மிக எளிதான காரியம். ஒரு 6 வயது சிறுவன் கூட மிகச் சரியாகக் கணக்குப் போடுவான். அதே போல் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் கூட எளிதாகப் பழகினார்கள். எழுத்துப் பயிற்சி கொடுப்பது சற்று சிரமமாக இருந்தது. ஒரு எழுத்து சரியாக எழுதினால், பரிசாக வெல்லம் கொடுப்போம். அது அவர்களுக்கு உற்சாகம் அளிக்க, மேற்கொண்டு படிக்க வைக்க முடிந்தது. சிறுவர்கள் எலியையோ அல்லது பூனையையோ கண்டுவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதைப் பிடித்து அங்கு அருகில் இருந்த வெட்ட வெளியில் நெருப்பு மூட்டி அதைச் சுட்டுத் தின்றுவிடுவார்கள். பார்க்கவே அச்சப்படும் எங்களையும் உபசரிப்பார்கள். இவர்கள் பறவைகளை விசில் அடித்து வரவழக்கும் கலையை நன்கு கற்று வைத்திருந்தார்கள். அப்படி வரவழைக்கும் பறவைகளை ஒரு நாளும் சாப்பிட மாட்டார்கள். கொக்கு வேட்டைதான் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கும், பிடித்த உணவும் கூட.

    மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அவர் மனைவியும் வாரம் ஒரு முறை தவறாமல் நேரில் வருவார்கள். வரும்பொழுது அந்தச் சிறார்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, சிலேட், பல்பம், என அனைத்தும் வாங்கி வருவார்கள். இப்படி 75 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்தது. பின் வகுப்புகள் அதிகமாக விரிவுபடுத்தப்பட்டதால் கட்டிடங்களும் கட்டப்பட்டது. இறுதியில் எட்டாம் வகுப்பு வரை கொண்டு வந்தார்கள்.

    செவ்வி : அதற்கு மேற்கொண்டு மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்தார்களா?

    விஜயா : ஆம், பலர் மற்ற பள்ளிகளில் சென்று தங்கள் கல்வியைத் தொடரும் அளவிற்கு தன்னம்பிக்கை கொண்டுவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தி. ஏழெட்டு மாணவர்கள் சேலம் வைஸ்யா கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பும் படித்தார்கள் என்று அறிந்தேன். இந்தப் பள்ளி மிக நல்ல முறையில் நடைபெறுவது அறிந்து, ஆந்திர மாநிலத்தின் மண்டீஸ் என்ற ஒரு வகை பழங்குடியினரின் குழந்தைகளுக்கு இது போன்ற பள்ளி ஆரம்பிக்க வேண்டுமென்று, எங்கள் பள்ளியையும், கற்பிக்கும் முறையையும் பற்றி அறிந்துகொள்ள வந்தனர். டிஸ்கவரி தொலைக்காட்சி நிலையத்திலிருந்தும் வந்து அனைத்தையும் பதிவேற்றிச் சென்றார்கள்.

    செவ்வி : குழந்தைகளுக்குத் தவிர நரிக்குறவர் சமுதாயத்திற்கு என்று குறிப்பிடும்படியான பணிகள் ஏதாவது செய்திருக்கிறீர்களா?

    விஜயா : திருமதி. கிருத்திகா அவர்களின் பேரார்வம் மூலமாக நரிக்குறவர் சமூக மகளிருக்காக, மகளிர் மகாநாடு நடத்தினோம். கருத்தடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பால்ய விவாகம் செய்வதைத் தவிர்க்க வேண்டியதன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். அதனால் பெருமளவில் பால்ய விவாகத்தைத் தவிர்க்கவும் வைத்தோம். எந்த ஊரில் அந்தக் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு அவர்கள் வைப்பது வழக்கம். அதை மாற்றி வேறு பெயர்களும் வைக்கப் பழக்கினோம். அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஆவண செய்தோம்.

    செவ்வி : நரிக்குறவர் இனத்தில் திருமணம் எப்படி செய்கிறார்கள்? அவர்கள் குழுவிற்குள்ளேயே பெண் எடுப்பார்களா?

    விஜயா : குறவர் இனத்தில் பலவகைப் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் ஒரே குழுமத்தில் உள்ள பெண்ணை மணக்கமாட்டார்கள். வேறு ஒரு குழுமத்திலிருந்துதான் பெண் எடுப்பார்கள். நாங்கள் இருந்த அந்த காலகட்டத்தில், மின்னாம்பள்ளியில், லஷ்மணன் குரூப் மற்றும் சங்கர் குரூப் என இருவகைக் குழுக்கள் இருந்தார்கள். அவர்களிடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் வரும். லஷ்மணன் குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று நாகரீகமாக இருப்பார்கள். பெண்கள் புடவை உடுத்தியிருப்பார்கள். ஆனால் சங்கர் குழுவில் இருப்பவர்கள் நாகரீகம் குறைந்தவர்களாக இருப்பார்கள். பெண்கள் பாவாடை, தாவணி அணிந்திருப்பார்கள். அப்பொழுது இருவரும் தங்கள் குழந்தைகளை ஒன்றாகச் சேர்ந்து படிக்கவும் விரும்பாமல் தனித்தனி வகுப்புகள் வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார்கள். நாங்கள் அவர்களை உட்கார வைத்துப்பேசி சமரசம் செய்துதான் ஒன்றாகப் பள்ளியில் படிக்க வைத்தோம்.

    பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வரும் சமூகங்களில் நரிக்குறவர் சமூகம் முதன்மையானது. கடும் கட்டுப்பாடுகள், ஒழுக்கமான வாழ்க்கை முறைமையைக் கொண்ட இவர்களின் திருமண முறையும் சுவையானது. இவர்கள் சமூகத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை தர வேண்டும். அது மட்டுமல்லாமல் பெண் வீட்டுக்காரரின் உறவுமுறைகள் அனைவருக்கும் உடுத்த உடை வாங்கித்தர வேண்டும். திருமணச் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சாமிச்சொத்து என்று சொல்லக்கூடிய, மூதாதைகள் கொடுத்துவிட்டுப் போன வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள் போன்ற சாமிப்பொருட்கள். நிறைய வைத்திருப்பவர்களுக்கே மதிப்பு அதிகம். இவர்களில், எருமை வெட்டுகிறவர்கள், ஆடு வெட்டுகிறவர்கள் என்று இரண்டு பிரிவு உண்டு. எருமை வெட்டுகிறவர்கள் ஆடு வெட்டுகிறவர்கள் வீட்டில் மட்டும்தான் பெண் எடுக்க வேண்டும். அதற்கு மாறாக பெண் எடுத்தால் அண்ணன் தங்கை முறையாகிவிடும் என்பார்கள். பெண்களுக்கு 13 முதல் 14 வயதிலேயும், ஆணுக்கு அதிகபட்சம் 18 வயதிலும் திருமணம் செய்து விடுவார்கள். ஒரு சில காதல் திருமணங்களைத் தவிர, பெரும்பாலும் பெரியவர்கள் பாத்துதான் திருமணம் செய்கிறார்கள். இரவு நேரங்களில் திருமணம் செய்வார்கள். பெரும்பாலும் குழந்தைகள் பிறக்கும்போதே திருமணத்தை நிச்சயித்துவிடும் வழக்கம் நரிக்குறவர்களிடையே இருந்தது. உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக பெண் குழந்தைக்கு மூன்று வயதான உடனே, திருமணத்தை முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடும் வழக்கம் இருந்தது. தற்போது அது குறைந்து விட்டது.

    தெளிவாக உருவான இவர்களின் குடும்ப அமைப்பு முறை, சகோதர, சகோதரி பாசம், புரிந்துணர்வு, பொருளாதாரப் பின்னடைவுகளைத் தாண்டியும் இவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நிம்மதியான, நிறைவான வாழ்க்கை முறைகள் பாராட்டிற்குரியது. இவர்களின் கூடி வாழும் வழமையும் போற்றுதலுக்குரியது. நாற்பது, ஐம்பது கூடாரங்களில் வாழும் குழந்தைகள் அனைவரும், பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும், எந்த வீட்டில் வேண்டுமானாலும் சென்று உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். கல்வியறிவு இல்லாத போதும் அவர்களுடைய கணக்குத் திறமை அபாரமானது. இளமையிலேயே நன்கு கணக்குப்போடும் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதே போல இயற்கை மூலிகைகளில் சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு முறை எனக்கு தலை வலி வந்தபோது ஒரு சிறுவன் காட்டுப் பூண்டு என்று ஒரு வகை தாவர மூலிகையைக் கொடுத்து முகரச் செய்தான். மயக்கம் வரும் அளவிற்கு ஒரு காரம் இருந்தது. பின் தலை வலியும் உடனே குணம் ஆனது. பிரசவம் கூட மிக எளிமையாக அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் மருத்துவமனை செல்வதில்லை. இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தன்மைகள் பலவும் இருக்கின்றது.

    உலகின் உன்னதமான பணிகளில் ஆசிரியப் பணியும் ஒன்று. ஏற்றி விடும் ஏணி என்பதைவிட, வாழ்க்கையில் பல பாடங்களையும் கற்றுத் தரும் பணி என்றே சொல்லலாம். அந்த வகையில், காரைக்கால் அம்மையார் மீண்டும் பிறவி இருந்தால் உன்னை மறாவாமல் இருக்கும் வரம் வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டியது போல, அடுத்தொரு பிறவியிலும் என்னை ஆசிரியப் பணியிலேயே இருக்கும் வரம் அருள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன். தாய் மட்டுமே ஒரு குழந்தையின் முதல் ஆசிரியையாக இருக்க முடியும். ஒரு குழந்தையை நல்ல குடிமகனாக உருவாக்குவது ஒரு அன்னையின் கைகளில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    தற்போது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, தனியார் பள்ளியான செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வராக இருக்கும் திருமிகு. விஜயா அவர்கள் இன்றும் குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளை பல பள்ளிகளிலும் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நம் வல்லமையின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.

    நரிக்குறவர் படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

    Share
  • பொங்கலோ பொங்கல்! (2014)

     

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பர்களே! எங்கும் மங்கலம் பொங்கட்டும்!! நன்மைகள் பெருகட்டும்!!

     

    pongreet11-1024x604

    மகத்துவம் மிக்க மகரசங்கராந்தி – பொங்கல் திருவிழா..!

     

    ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

     

    ஆனந்தப் பொங்கல்

    பொங்கலோ பொங்கல் - Copy

     

    மனதைத் திருப்பிக் கொடு மாயவா..

     

    திரை கடலோடி…..

     

    பொங்கட்டும் பானைகள்

     

    பொங்கல் பள்ளு

    pongal-899

     

    தமிழ் இலக்கணம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்

     

    மஞ்சு விரட்டு

     

    பொங்கலும் பொங்கும் போல்புராஃபும்!…

     

    தைப் பொங்கல் வைப்போம்

    பொங்கலோ பொங்கல்-2

    முந்தானை முட்டாள்!

     

    ‘கனுப்பொங்கல்’, ‘கா’….’கா’….’கா’

     

    பொங்கலோ…. பொங்கல்! பெண்களோ….பெண்கள்!

     

    பொங்கலோ பொங்கல்

     

    பழமை மாறாத ‘பொங்கல்’!…

     

    தைப் பொங்கல் வைப்போம்

     

    படைப்போம் பொங்கல்!

     

    தை மகளே வா வா (மருமகளே மெட்டில்)

     

    pongal-happy-pong-1294646905

     

    Share
  • சிதையா நெஞ்சு கொள்!

    பவள சங்கரி

    சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.

    bharathy 1

    பெற்றோர்களின் தூரக் கனவை நனவாக்க உதவும் நூல் – பாதை
    மாணாக்கர்களின் தடைகளைத் தாண்டி வர வழிகாட்டும் நூல் – பயணம்
    ஆசிரியர்கள் வெற்றியில் தேங்கிவிடாமல் செயலாற்ற ஊக்குவிக்கும் நூல் – சுவடு

    பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி விழாவிற்கு தலைமையேற்க, பள்ளி முதல்வர் திருமதி ஞானம் ஆண்டறிக்கை சமர்பிக்க, துணை முதல்வர் கண்ணகி வரவேற்புரை ஆற்றினார்.

    bharathy3

    சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர், கவிஞர் அ. வெண்ணிலா அவர்களும், தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. கிருஷ்ண. வரதராஜன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டு நலப் பணித் திட்டங்களுக்குப் பெருமளவில் ஈடுபாடு காட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் இப்பள்ளியின் தனிப்பட்ட சிறப்பம்சமாக, சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லப்படும் மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, கவனம் சிதறல், நினைவாற்றல் குறைபாடு, ஹைபர் ஆக்டிவ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலரை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயிலும் வகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நிலையில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் இக்குழந்தைகளின் முன்னேற்றம் குறிப்பிடும்படி இருப்பது சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. மற்ற பள்ளிகளும் இது போன்ற பரிட்சார்த்த முறையை தொடர்வதால் கேள்விக்குறியாக இருக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையலாம்.

    bharathy4

    குழந்தைகள் தங்களுடைய அருமையான நிகழ்ச்சிகள் மூலம் அழகாக அலங்கரித்த மேடையில் தாம் அதிகம் பேசி அவர்களின் மகிழ்ச்சியான நேரத்தைக் களவாட விரும்பவில்லை என்று கவிஞர் வெண்ணிலா ஆரம்பித்தாலும், மிக எளிதாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்! தாம் குழந்தைகளின் நிகழ்ச்சிகளைக் கண்டு, குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் நிகழ்ச்சி மூலம் உள்ளம் நெக்குருகி நிற்பதாக உணர்வு பொங்கக் கூறினார். அதற்காகப் பயிற்சியளித்த ஆசிரியை மற்றும் தாளாளர் ஜெயபாரதி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். பாரம்பரியம் மாறா நடவடிக்கைகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் சவாலாக ஏற்றுச் சாதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார்.

    ”பெற்றோர்களே உங்கள் கனவை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். அவன் டாகடர் ஆவதும், என்ஜீனீயர் ஆவதும் அவன் கைகளில் விட்டுவிடுங்கள். குழந்தைகளை நம் எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் என்று எண்ணும் வழக்கத்தை மாற்றுங்கள். அவர்கள் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றார் போல அவர்கள் வாழ வழிகாட்டுங்கள்” என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொடும் ஆசிரியர்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் அது குறித்த பாடங்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் பற்றிய ஆக்கப்பூர்வமான தன்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    ”குழந்தைகளே ஆம், இல்லை, வேண்டும், வேண்டாம் என்பதை தெளிவாகச் சொல்லிப் பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. யாருக்காகவும் உங்களுடைய இலக்கில் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. பாதையில் தெளிவு இருந்தால் பயணத்தில் குழப்பம் இல்லாமல் முன்னேறலாம்” என்ற பொருள்படும்படியாக மிக உற்சாகமாக உரையாடினார்.

    bharathy 2

    “ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்வில் நிகழப்போகிறது மேஜிக்” என்று ‘மாயப் புத்தகம்’
    ஒன்றை அனு ராஜன் என்பவருடன் இணைந்து எழுதி சிறுவர் உலகை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கும் , தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளருமான திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் மிகச் சுவையாக, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், கல்வியில் ஆர்வமும் ஏற்படும் வகையில் மிகச் சிறப்பாகவும் சொற்பொழிவாற்றினார்.

    ’மாயப் புத்தகத்தில்’ , ’இரண்டு ஓநாய்கள்’ என்ற குட்டிக் கதை.

    ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்

    “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய், அன்பு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்ல குணங்களை கொண்டிருக்கிறது. மற்றொன்று கோபம், அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற தீய குணங்களைக் கொண்டிருக்கிறது.

    மனிதனுக்குள் உள்ள இந்த இரண்டு ஓநாய்களும் எப்பொழுதும் சண்டையிட்டபடியே இருக்கின்றன” என்றவர் மாணவர்கள் ஆர்வமாகக் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, “உங்களுக்குள்ளும் இந்த இரண்டு ஓநாய்களும் இருக்கின்றன?” என்றார்.

    சட்டென்று ஒரு மாணவன் கேட்டான், “சார் இரண்டில் எந்த ஓநாய் ஜெயிக்கும்?”

    ஆசிரியர் புன்னகையுடன் சொன்னார், “எந்த ஓநாய்க்கு அதிகம் உணவு கொடுக்கிறாயோ அந்த ஓநாய்தான் ஜெயிக்கும்”

    pavala 2

    இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போன்று, நூல்களின் உருவாக்கத்தின் என்னுடைய  உதவிக்காக எனக்கும் பரிசு கொடுத்து கௌரவித்த சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெ.ஜெயபாரதி அவர்களுக்கு நன்றி. இந்த மூன்று நூல்களும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பலனளிக்க வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    bharat

    bharath 12

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அண்ணா கண்ணன்

    சித்திரம் பேசுதடி என்றன் சிந்தை மயங்குதடி என்ற வரிகளுக்கு இணங்க, ஓவியமும் நிழற்படங்களும் நம் உள்ளத்தை என்றும் கொள்ளை கொள்ளக் கூடியவை. புதிய திறமைகளை ஊக்குவிப்பதில் வல்லமை எப்போதும் முன் நிற்கிறது. அவ்வகையில் சிறந்த நிழற்படக் கலைஞர்களைக் கவுரவிக்க உள்ளோம்.

    திவாகர் அவர்கள் பயணத்தில் இருப்பதால், இந்த வார வல்லமையாளரை வல்லமை பிளிக்கர் படக் குழும நிர்வாகி சாந்தி மாரியப்பன் (அமைதிச் சாரல்) தேர்ந்தெடுக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களும் சாந்தியே தேர்ந்தெடுக்க உள்ளார்.

    இனி, சாந்தியின் மடல் –

    முதல் தேர்வு: வனிலா பாலாஜி.

    இயற்கையான ஒளியை மிகச் சிறப்பாகக் கையாள்வது இவரது தனித் தன்மை. வீட்டினுள் எடுத்தவையாக இருந்தாலும் கூட அவரது படங்களில் காணப்படும் அழகு சொல்லி முடியாது.

    71516183@N03_r

    இந்தப் படத்தில் மரப்பாச்சிப் பொம்மைகளின் மேல் படிந்திருக்கும் மெல்லிய ஒளி ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. அருமையான காட்சியமைப்பு, முரண்பாடான வண்ணங்கள், nice arrangement, மிக மிகத் துல்லியமான படப்பிடிப்பு என்று எல்லாமும் இந்தப் படத்திலிருந்து கண்களை எடுக்க விடாமல் கட்டிப் போடுகின்றன.

    vanila balaji
    http://www.flickr.com/photos/vanilabalaji/11099741773/in/pool-1922937@N20

    மேலும் படங்களை இவரது ஃப்ளிக்கர் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.
    http://www.flickr.com/photos/vanilabalaji/with/11338932554

    சாந்தியின் தேர்வினை வழிமொழிந்து, வனிதா பாலாஜி அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவரது திறனும் புகழும் மேன்மேலும் உயர வாழ்த்துகள். உரியவரைத் தேர்ந்தெடுத்த சாந்திக்குப் பாராட்டுகள்.

    கடைசி பத்தியில் விசாலம் அம்மா –

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்.

    Share
  • பாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    5-color bharathiமகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி!! சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது!

    மாகாளி பராசக்தி உருசியநாட்
    டினிற்கடைக்கண் வைத்தாள். அங்கே
    ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
    கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;
    வாகான தோள்புடைத்தார் வானமரர்;
    பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்
    போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
    வையகத்தீர், புதுமை காணீர்!

     

    உருசிய நாட்டில் கடைக்கண் பார்வை வைத்த மாகாளி நம் நாட்டிலும் வைக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாகும் காலம், மக்கள் நல்லாட்சி பெறும் காலம். இன்று ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடந்து முடிந்து வெற்றி தோல்விகளைப் பற்றி அறிவித்து யார் பதவிக்கு வரப்போகிறார்கள் என்பதை அறியும் சூழலில் இருக்கிறோம். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது, எங்கெல்லாம் நல்ல ஆட்சி நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் தங்கள் வாக்குகள் என்னும் புரட்சிகள் மூலம் அவர்களுக்கு மீண்டும் பதவியைக் கொடுத்து புரட்சி ஏற்படுத்தியுள்ளார்கள். ஐந்து மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் மிஜோரம் மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா ஐந்தாவது முறையாக அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றிக்கான காரணமாக அவர் குறிப்பிடுவது கடந்த 5 ஆண்டுகளாக தாம் வழங்கிய ஊழலற்ற ஆட்சி என்பதுதான். அது போலவே டெல்லி சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலிலும் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிர்ப்பாக பிரச்சாரம் செய்த கட்சியான, ஆம் ஆத்மி என்ற கட்சி அறிமுக நிலையிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 27 இடங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது! ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை ஆண்ட ஆளும் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நல்ல ஆட்சியை வழங்கியதாலேயே அவரை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விழிப்புணர்வு பெறும் காலமாகவே உள்ளது இது.

    பாரதி கண்ட மற்றொரு கனவு பெண் விடுதலை!

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

    இன்று நிமிர்ந்த நன்னடையால் அமில வீச்சும், பாலியல் வன்கொடுமைகளும் பரிசாகக் கிடைக்குமோ என்று அஞ்சி, அஞ்சி முக்காடிட்டு குனிந்த தளர்நடை நடக்க வேண்டிய சூழலுக்குப் பல பெண்கள் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை அந்த பாரதி ஒருவேளை கண்டிருந்தால் இன்னும் என்னவெல்லாம் பாடிவைத்திருப்பானோ?

    “காலனி ஆதிக்கத்திலிருந்து புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டுமென்றால் அந்த நாடு மின்சாரத்திலேயும், இரும்புக் கனி வளத்திலேயும், பெட்ரோலியத்திலும் தன்னிறைவுப் பெற்றிருந்தால்தான் ஒரு நாடு வேற்று நாடுகளுக்கு அடிமையாகாமல் தம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்று லெனின் சொன்ன இந்த வார்த்தைகள் இன்று இந்தியாவிற்கு எப்படிப் பொருந்துகிறது என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றிற்காக அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய மோசமான சூழலில் நாடு இருப்பது வேதனையான விசயம்.

    பெண் அடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த கவிஞன் பாரதி, தமிழுக்கும் தமிழினத்திற்கும் செய்த தொண்டு பாராட்டிற்குரியது. புலவர்கள் மத்தியில் முடங்கிக் கிடந்த தமிழை பாரதி தன் எளிய நடை மூலம் அதனைக் கையைப் பிடித்துப் பொதுமக்களிடம் கூட்டி வந்து சேர்த்துள்ளான் என்றால் அது மிகையல்ல. தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக உணர விரும்புபவர்களுக்கு இன்றும் அவன் பாடல்களுக்கே முதல் வாய்ப்பு . வெளிநாடுகளில் அடியுதைபட்ட தமிழச் சாதிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்தவன் பாரதி.

    சாத்திரங்கள் பல தேடினேன் – அங்கு
    சங்கையில்லாதன சங்கையாம் – பழங்
    கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மைக்
    கூடையில் உண்மை கிடைக்குமோ?

    என்று பாடிய மனிதாபிமானி!

    புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
    தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
    வசையென்னாற் கழிந்த தன்றே!

    என்ற பாரதியின் வரிகள் சத்தியமானவைகள். வெறும் புகழ்ச்சி இல்லை. பாரதியின் கவிதை வீச்சை வெல்லத்தக்க கவிஞர் வேறு எவரும் இன்னும் பிறக்கவில்லை என்பதே உண்மை.பாரதிதாசன் பாரதியை உச்சி மீது வைத்து மெச்சுவதொன்றே போதும் அவன் புகழுக்கு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய’ இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட, அறியாமை இருள் நீங்கிட ,சமுதாயம் சீர் பெற்றிட, வறுமையை வெளியேற்ற ‘எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை’ ஆகவேண்டும் என்று கனவு கண்ட பாரதியின் கவிதையில் ஷெல்லியின் கற்பனை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, வோர்ட்ஸ்வொர்த்தின் கடவுள் கொள்கை, , டென்னிசனின் கவிதையின் எளிமை போன்றவற்றைக் காணலாம். மகாகவிஞன் பாரதி, புதிய சுதந்திரப் போர்ப் படையைப் படைத்திட்ட கவித்தளபதி என்றால் அது மிகையாகாது. பெரும் கவிப்பரம்பரையையே படைத்திட்ட படைப்பாளி என்பதே உண்மை. உன்னதமான சிந்தனையாளன். பாரதியின் பாடல்களால் விழிப்புணர்வு பெறுவோர் எண்ணிக்கை இன்றும் குறைந்தபாடில்லை என்பதே நிதர்சனம்! வாழ்க பாரதி புகழ்!

    Share
  • வீழ்ச்சியை மாற்றி எழுச்சியுறும் திறனாளிகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளையோ, அல்லது இடையில் விபத்தினால் ஏற்படும் குறைபாடுகளையோ எண்ணிக்கொண்டு காலம் முழுவதும் முடங்கிக் கிடப்பவரின் எண்ணிக்கை இன்று கனிசமாகக் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பத்தில் ஒரு குழந்தையோ அல்லது மொத்த குழந்தைகள் மக்கள் தொகையில் 3% குழந்தைகளோ மாற்றுத் திறனாளிகளாக இருக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாகவும், வேலையில் இருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக குறிப்பிட்ட அளவு வேலை வாய்ப்புகள் ஒதுக்கீடு இருப்பது போல தனியார் நிறுவனங்களும் அதை கட்டாயமாகக் கடைபிடித்தால் இந்தப் பிரச்சனை பெருமளவில் தீர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படும். மாற்றுத் திறனாளிகளின் நிலை மாறி வர வேண்டும் என்பதற்காக நம் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். வேலை வாய்ப்புகள், பேருந்து, தொடர் வண்டிகளில் அவர்களுக்காக தனிப்பட்ட இட ஒதுக்கீடும், முன்னுரிமையும் அளிப்பது பாராட்டிற்குரியது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மாதாந்திர நிதியுதவியை ரூ. 500-லிருந்து ரூ.1,000-ம் ஆக உயர்த்தவும். மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் தனி பல்கலைக்கழகம் நிறுவுவது, தொழில் வரி, சொத்து வரியில் விதிவிலக்கு அளிப்பது போன்ற சில முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, இவர்களுடைய போராட்டங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளதும் வேதனைக்குரிய விசயம். இன்று பொது கழிப்பிடங்கள், பொது அரசு கட்டிடங்கள், மற்றும் சில தனியார் நிறுவனங்கள் போன்றவைகள் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட கட்டிட அமைப்பை மாற்றி வருவதும் வரவேற்பிற்குரிய செயலாகும். நம் சக மனிதர்களை ஏதோ ஒரு சில குறைபாடுகளுக்காக அவர்கள் மீது தேவையற்ற பரிதாபத்தையோ அல்லது புறக்கணிப்பையோ செய்து அவர்களை ஒதுக்குவதைவிட, அவர்களும் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்து, அவர்கள் முன்னேற அவரவர்களால் முடிந்த உதவியை மனமுவந்து செய்வதே மனிதாபிமானமாகும். பெரும்பாலும் கிராமப் புறங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான எந்த ஒரு தனிப்பட்ட வசதி வாய்ப்பும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே நம் இந்தியாவின் இன்றைய நிலை.

    மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு தனித்திறன் மறைந்திருப்பது கண்கூடு. கண் பார்வையற்ற பலர் மிக இனிமையான குரல் வளம் உடையவர்களாக இருக்கக் காண்கிறோம். பெத்தோவன் (Ludwig Van Beethoven) தன் 32 வயதில் அரைகுறை காது கேட்காதவராக இருந்த இவர், தன்னுடைய 46ஆவது வயதில் முழுவதுமாக காது கேட்காத நிலையை அடைந்தும், சங்கீதத்தில் அவர் படைத்த இசைக் காவியங்கள் அனைத்தும், தம் 46ஆவது வயதிற்குப் பிறகு இவர் படைத்தவையே. உலகம் போற்றும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், வின்செண்ட் வேன்கோவ், சர்.ஐசக் நியூட்டன், நெப்போலியன், அகதா கிரிஸ்டி, ஸ்டீபன் ஹாகிங், அலெக்ஸாண்டர், சார்லஸ் டிக்கன்ஸ், ஜூலியஸ் சீசர், அரிஸ்டாட்டில் போன்ற பல மேதைகள் ஏதோ ஒரு பாதிப்புடன் போராடிக்கொண்டுதான் சாதனை படைத்துள்ளார்கள் என்பது நம் வரலாறு சொல்லும் உண்மை. இப்படி ஊனத்தை வென்று சாதனைப் படைத்தவர் பட்டியல் மிக, மிக  நீளம்.

    இன்றும், குண்டு எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும், போலியோவினால் பாதிக்கப்பட்ட காலுடன் இருக்கும் விருதுநகர் ஜெயக்கொடியும், ஒரு விபத்தில் வலது கால் துண்டானபோதும், சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியுடன், இமயமலையின், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை புரிந்துள்ள, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்கா, தர்மபுரியைச் சேர்ந்த இரு கைகளையும் இழந்தும், தம் தன்னம்பிக்கையை இழக்காமல், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களையும், இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை புரிந்துள்ள வெங்கடேசன் என்று இவர்களைப் போன்ற பலர் முன்னுதாரணங்களாக வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஊக்கமும், உற்சாகமும், மற்றும் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து செயல்படுவதும்தான் சரியான செயலாக இருக்குமேயன்றி, இவர்கள் மீது தேவையில்லாமல் காட்டப்படும் பரிதாப உணர்ச்சியும், இரக்கமும் அல்ல. ஊனம் ஒரு பலவீனம் இல்லை. அதையும் தாண்டி மனிதன் வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் பல இருக்கிறது என்பதை உணராதவர்கள் இல்லை. ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு ஒரு மாற்றுத் திறன் இருப்பதாலேயே இவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறோம்.

    –

    Share
  • ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்குக் கரிகாலன் விருது

    ’கரிகாலன் விருது’ பெற்றுள்ள சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    jeyanthi

    தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது.

    2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார்.

    அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

    விருதுகளை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைகளை முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சு. கௌசல்யா, திருவாட்டி வீர. விஜயபாரதி ஆகியோர் படைப்பார்கள். கருத்தரங்கிலும் விருது வழங்கு விழாவிலும் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.

    நா. ஆண்டியப்பன்
    தலைவர்
    சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

    தேர்வுக்குழு அறிக்கை

    மக்களை உயர்திணை என்று சுட்டியும் இலக்கிய வாழ்வியலை அக, புறத் திணைகளாகப் பகுத்தும் திணை மரபு கண்ட தமிழினம் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் உயர்திணை, அஃறிணை கடந்து உணர்ச்சிகளோடு போராடும் எந்திர மயமாகி முதல், கரு, உரிப்பொருள்களும் விரவிக் கலந்து மயங்குமாறு புலம்பெயர்ந்து அகத்தும், புறத்தும் அலைவுறுதலை இரு தமிழ்ப்பெண்களின் ஊடாக ஜெயந்தி சங்கர் தம் புதினத்தில் நுட்பமாகச் சித்திரித்துள்ளார் இப்புதினத்திற்குத் “திரிந்தலையும் திணைகள்” என்று பெயரிட்டிருப்பது ஒன்றே ஆசிரியரின் வாழ்வியல் நோக்கத்திற்கு மொழித்திற நுட்பத்திற்கும் போதிய சான்றாகும். 21-ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் தோன்றிய இப்புதினம் ஒரு கால கட்டத் தமிழர் வாழ்வின் உயிர்ப்புள்ள பதிவாக காலத்தை விஞ்சி இலக்கிய வரலாற்றில் நிலை பெறும். எனவே இவர் “கரிகாலன் விருதுக்கு” மிகவும் ஏற்றவர் எனத் தேர்வுக்குழு பரிந்துரைக்கிறது.

    Share
  • வல்லமைச் சிறுகதைகள் – நூல் வெளியீடு

    Manavaalan.pmd

    ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த போட்டியில் பங்கு பெற்ற கதைகளிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள திரு வெங்கட் சாமிநாதன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றியும். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ரூ.100 விலையுள்ள இந்த நூல், கிடைக்குமிடம்:

    தாரிணி பதிப்பகம்,
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்,
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை,
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com

    என்னுரை

     ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்திருக்கும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.  2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டி இனிதாக முடிந்திருக்கிறது. . நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிக அவசியமாகிறது. தமிழ் சிறுகதை இலக்கியங்களின் வளர்ச்சிப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஐக்கியா டிரஸ்ட் நிறுவனர் திரு வையவன் அவர்களின் பேராதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வந்திருக்கும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கே உரிய தனிப்பட்ட பாணியில் விமர்சனங்கள் சுவை கூட்டின. அதன் மூலம் தங்களை  மேலும் செம்மையாக்கிக் கொள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.  ஐக்கியா நிறுவனத்தின் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர், திரு வையவன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையை எழுதியவருக்கு தாம் அறிவித்திருந்தபடி மாதாமாதம், பரிசுத் தொகையை அனுப்பியிருந்தார். அவருடைய முழுமையான ஒத்துழைப்பு நமக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல பிரபல எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் மாதப்பரிசு பெற்ற அனைத்துக் கதைகளையும் பொறுமையாக வாசித்து அதிலிருந்து பரிசுக்குரிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து கதைகளுக்கும் அருமையான விமர்சனமும் கொடுத்து எழுத்தாளர்களை மேலும் ஊக்குவித்திருக்கிறார். அவருக்கும் நம்முடைய நன்றியும்,  மனம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

    ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் இந்த சிறுகதைப் போட்டி பல எழுத்தாளர்களை சிறப்பித்திருக்கிறது. இந்த 2013ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ள சமகால சிறுகதை எழுத்தாளரான, 82 வயதான கனேடிய எழுத்தாளர் அலைஸ் மன்றோ அவர்கள் மனிதரின் நலிவுற்ற நிலைமைகளையும், தலைமுறை வேறுபாடுகளையும்  மையமாகக்கொண்டு எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருடைய கதைகள் அனைத்தும் தெளிவாகவும், உளவியல்பூர்வமான ஆதாரங்களுடன் இருபதனாலேயே இவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் சபை அறிவித்துள்ளது. 1.24 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறப்போகும் அலைஸ் ஏற்கனவே புக்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு சிறுகதையை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வதாகக் கூறும் இவரது  முதல் தொகுப்பான, Dance of the happy shades (1968) வாசகர் கைகளுக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து 15 தொகுதிகள் வெளியாகியுள்ளன. கடைசி தொகுப்பு Dear Life 2012ல் வெளியாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக புனைவுக்கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர் அலைஸ் மன்றோ. அந்த வகையில் நல்ல சிறுகதை இலக்கியங்கள் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு அலைஸ் மன்றோ ஒரு முன்னுதாரணம். தமிழில் நல்ல சிறுகதைகள் நிறைய வரவேண்டும். நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நல்ல சிறுகதைகள் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.  இன்று வெற்றி வாகை சூடி நிற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மென்மேலும் உயர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பனிரெண்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி கூறியுள்ள நுணுக்கமான செய்தியை பகிர்ந்து கொள்வது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தலாம்.

     பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார்  தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார். அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே  சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர்

    வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப்புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது

    புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம். பார்வதி ராமச்சந்திரனின் கதையை இப்படித்தான் சொல்ல விரும்புகிறேன்.

    மாதவன் இளங்கோவின்  கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல்  போய்விடுவதில்லை. ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும் என்று  ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.

    அதே மனிதப்பண்புகள், தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருப்பது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே.

     மணி ராமலிங்கத்தின் கதை தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத்தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயல்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருப்பங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்ல சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது. – அரவிந்த் சச்சிதானந்தனுக்கு வாழ்த்துகள்.

     சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம்.

     மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். மாறுவதே இல்லை.  சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்து.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே.

    அன்புடன்

    பவள சங்கரி

    ஆசிரியர்

    வல்லமை இணைய இதழ்.

    Share