தங்கமும் தங்கமாக மின்னும் விளம்பரங்களும்

1

பவள சங்கரி

தலையங்கம்

ஒரு நகைக்கடை தங்களுடைய விளம்பரம் மூலமாக மக்களைப் பெரிதும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கிராமுக்கு 2014 ரூபாய் கட்டினால் ஐந்தாண்டு கழித்து எத்தனை கிராமுக்கு நாம் பணம் கட்டியிருக்கிறோமோ அத்தனை கிராம் தங்கத்தை அவர்கள் கொடுத்து விடுவார்களாம். 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2810. அந்த விளம்பரத்தில் நடிக்கக்கூடிய பெண்மணி நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்த வைப்பத் திட்டம் முடிவடையப் போகிறது. அதனால் விரைந்து சென்று பணத்தைக் கட்டுங்கள் என்று கூறுகிறார். இன்றைக்கு தங்கத்தின் விலை இருப்பது போன்று ஐந்தாண்டுகள் கழித்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்பொழுது நம்முடைய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையாமல் அப்படியே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சந்தை விலைக்கு இவர்களால் தர முடியுமா என்பது சந்தேகம்தான். இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. தங்கத்தின் விலை ஏறினாலும், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அதிகமானாலும் நட்டத்தின் மடங்கு அதிகமாகவே அல்லவா ஆகும். இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான அரசாணையும் தேதியும் அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இதற்காக அரசாங்கத்தின் கருவூலத்தில் வைப்புநிதியாக எத்தனை கோடி வைத்திருக்கிறார்கள் என்பதையும் வெளியிட்டிருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை. இதனால் நாளை மக்களுக்கு இழப்பு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

சென்ற வருடம் இதுபோல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களையெல்லாம் விளம்பரம் செய்து மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி வசூல் செய்ததால் மக்கள் அவதிப்பட்டதோடு அந்த கோழிகளும் இன்றுவரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தேக்கு மரத் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து மிக அருமையாக விளம்பரம் செய்து அதன் மூலம் மக்கள் பல ஆயிரம் கோடிகளை இழந்ததும் நினைவிருக்கலாம். இப்படி ஒரு தனி நிறுவனம் வெட்ட வெளிச்சமாக விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் போல இதிலும் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும்! கடின உழைப்பால் சம்பாதித்த நம் செல்வத்தை இது போன்ற விளம்பரங்களை நம்பி மோசம் போகாமல் நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தங்கமும் தங்கமாக மின்னும் விளம்பரங்களும்

  1. ஆம்! உண்மை. இதே திட்டத்தை விளக்கி இதில் சேரும்படி திருவையாறு தியாகராஜ சுவாமிகள் ஆராதனையின் போது  நகைக்கடைக்காரர்கள் மக்களிடம் விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிய விதம் மக்கள் உள்ளங்களில் ஆர்வத்தை உண்டு பண்ணியதைக் காணமுடிந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிலர் இதில் சேர்ந்து மாதத் தவணையைக் கொடுத்தார்கள். இது போல பல திட்டங்கள் முந்தைய காலகட்டங்களில் அறிமுகமாகி இருந்த இடம் தெரியாமல் போன நேரத்தில் இந்த திட்டம் என்ன ஆகுமோ? உங்கள் தலையங்கத்தில் குறிப்பிட்டபடி இதைப்பற்றி சிந்தித்தால் மக்கள் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *