புத்தக மதிப்புரைப் போட்டி முடிவுகள்!

13

அன்பு நண்பர்களே,

நாம் பல நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘புத்தக மதிப்புரைப்’ போட்டிக்கான முடிவுகளை இதோ நம் உயர்திரு. வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்கள், தம் தேர்ந்த ஞானமும், நிறைந்த அனுபவமும் கொண்டு மிக ஆழ்ந்த பார்வையுடன், பாரபட்சமற்ற முறையில் மிகத் தெளிவாக அளித்துள்ளார்கள். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. போட்டியில் மிக ஆர்வமாகக் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெ.சா. ஐயா கூறியது போன்று அத்துனை இடுகைகளும் தரம் வாய்ந்தவைகள். போட்டி என்பதால் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் வெற்றி வாய்ப்பு சிலருக்கு மட்டும் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை. இதோ வெற்றியாளர்கள் குறித்த அவருடைய மதிப்பீடுகள் :

வெங்கட் சாமிநாதன்

என் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறேன்.

எந்த எழுத்தையும் முதலாவது, இரண்டாவது என்று தேர்வு செய்வது மிகவும் கஷ்டமானது. அது மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில் எழுத்தே, சிறுகதையோ, நாவலோ, கவிதையோ சிருஷ்டிப்பூர்வமானது. அது எழுதுபவனின் தனி உலகம். அதை இன்னொருவன் எதிர்கொள்வது அவனின் தனி உலகம். அது அப்படித்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரை டால்ஸ்டாய் ஒப்புக்கொண்டவரில்லை. இரண்டு பேரும் இரண்டு சிகரங்கள். ஐம்பது அறுபதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு எழுத்தாளர், மாயாவி, கலைமகளில் அக்காலத்தில் நிறைய எழுதியவர், பம்பாய் வாசி, தில்லி வாசியானார். “எங்கே வேணாலும் எந்த கோவில்லேவேணாலும் சத்தியம் செய்யத் தயார். க.நா.சு. எழுதறதெல்லாம் எழுத்தே இல்லை. அவருக்கு இலக்கியமே என்னன்னு தெரியாது” என்று அவர் சொன்னபோது அவர் முகம் சிவந்து கிடந்தது. ”க.நா.சு எழுதுவது அத்தனையும் உடன் கட்டை” என்று கோ.வி.மணிசேகரன் பல பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர் எழுதினார். தி.ஜானகி ராமன் எழுதுவதையோ, லா.ச.ராமாமிர்தம் எழுதுவதையோ ஒப்புக்கொண்டவர் இல்லை மௌனி. புதுமைப்பித்தனிடம் தான் ஏதோ இருக்கற மாதிரி படறது” என்பார் அவர். பாரதி அதி முட்டாள் என்று அவர் காலத்திய புலவர்கள் சொன்னதுண்டு. திராவிடக் கழக மேடைகளில் பாரதி பாப்பான் என்று வசை பாடப்பட்ட போது, “ஐயரை ஒன்னும் சொல்லாதீங்கடா, அவரை விட்டுவிடுங்கப்பா” என்று தான் பாரதி தாசன் சொல்ல முடிந்தது. கோபால கிருஷ்ண பாரதிக்கு ஒழுங்கா தமிழ் எழுதவே தெரியலை” என்று அக்காலத்திய கம்பன் எனப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னார். இதெல்லாம் அவரவருக்கு ஈடுபாடு இருந்த, தெரிந்த துறையில் இன்னொருவர் எழுத்தைப் பற்றி விமர்சித்தது. இந்த விமர்சனங்கள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இன்னும் இது போன்று தொடர்பவை எல்லாம் நிராகரிக்கப்பட்டு விடும். இப்போதைய விஷயத்துக்கு வரலாம்.

எனக்கு முன்னர் போன வருடம் தரப்பட்டது ஒரு வருஷ காலத்துக்கு பலர் எழுதிய சிறுகதைகள். எல்லாம் சிறுகதைகள். அந்த சிறுகதைகளோடு நான் தந்திருந்த தேர்வும் எல்லோருக்கும் முன் பார்வையில் வைக்கப்பட்டவை.

இம்முறை என் முன் வைக்கப்பட்டவை 20 மதிப்புரைகள். பலரால் வித விதமான வேறுபட்ட ரசனை கொண்டவர்களால் தரப்பட்ட மதிப்புரைகள். மதிப்புரைகளும் ஒரே வகைப்பட்ட எழுத்துக்கள் பற்றி அல்ல. பல கவிதைகள் பற்றியவை. கவிதைகள் அல்ல. அவை பற்றிய மதிப்புரைகள். நாவல்கள் சிலவற்றைப் பற்றிய மதிப்புரைகள். சில நடந்த, பலர் அறியாத நடந்த வரலாறு சார்ந்த புனைவுகள். சில இலக்கியம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு பற்றிய மதிப்புரை இப்படி பல ரகங்கள். எல்லாமே யாரோ எழுதியதற்கு இன்னொருவர் எழுதிய மதிப்புரைகள். அந்த மதிப்புரைகளை மதிப்பிடுவது எப்படி?

நமக்குத் தெரியாத ஏதேதோ நாட்டு, மக்களின் உணவு பற்றி, வேறு யார் யாரோ நாட்டவர் எழுதும் ரசனையை மாத்திரம் வைத்துக் கொண்டு யார் ரசனை எழுத்து சிறந்தது என்று எப்படிச் சொல்வது? ஏதும் ஒரு வகைப்பட்டதாக இருக்கவேண்டுமே.

இது மிக சிக்கலான விஷயம். மலையாளத்து எரி சேரியைச் சாப்பிட்டு ஒரு இங்கிலீஷ்காரன் எப்படி இருந்தது என்று சொல்வான். ரஷ்யன் வோட்காவை ஒரு பர்மாக்காரன் சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்வான். பாங்காக் தெருக்களில் கரப்பான் பூச்சியை வறுத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டு ஒரு சைனாக்காரன் அவன் ரசனையைச் சொல்வான். இப்படி 20 பேர் எழுத்தைப் பற்றி இன்னொரு இருபது பேர் எழுதுவதை எப்படி ஒரு சீராக மதிப்பிடுவது? எது முதல் பரிசுக்கு ஏற்றது, எது இரண்டாவது பரிசுக்கு என்று சொல்வது?

ஆக, இந்தக் காரியத்துக்கு ஏதாவது ஜகஜ்ஜாலம் செய்து தான் ஆகவேண்டும். ரொம்பவும் subjective ஆன நாவல், கவிதை, சிறுகதை இவற்றை நான் ஒதுக்கி விட்டேன். ஒதுக்கியதற்கு இன்னொரு காரணம், அந்த subjective ஆன எழுத்துக்கு இன்னொரு வேறுபட்ட ரசனையும் பார்வையும் கொண்ட இன்னொரு subjective அபிப்ராயத்தைப் பற்றி நான் என்ன சொல்லமுடியும்? ஒன்று மிகப் பரவச உணர்வோடு எழுதப்பட்டதும், இது என்னால் ஆகாது, மேரு மலையைப் பற்றி நான் ஒரு சிறு கரடு, நான் என்ன சொல்ல, என்ற தன்னடக்கம் கொண்டதுமாக இருந்தால். அதை மாத்திரம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய. இதையெல்லாம் ஒதுக்கி விட்டேன். பிட்ஸாவையும் நெத்திலி வறுவலையும் ஒப்பிடும் காரியம் என்னால் ஆகாது.

ஆனால் இன்றைய தமிழுக்கு, அது தெரியாத, அது அறியாத வளங்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்துக்கள், எனக்கு மிக முக்கியமானவையாகப்பட்டன. இந்த மாதிரி எழுத்துக்கள் தமிழில் வருவது இல்லையென்றும் சொல்லலாம். அல்லது, மிக மிகக் குறைவு என்றும் சொல்லலாம். அப்படிப்ப்ட்ட எழுத்துக்களின் மீது நம் கவனம் செல்ல வேண்டிய அவசியம் உண்டு. இவை முக்கியமாக, வரலாறு ஆனதால் subjective அல்ல. புற நோக்கில் மதிக்கத் தக்கவை. எனக்கு இவை எழுதப்பட்டுள்ளதும், அவை பற்றி நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதும். எனக்கு மிக சந்தோஷம் தந்தவை. எந்த தரத்தில் எழுதப்பட்டவை என்று தீர்மானிக்கமுடியாத நாவல், கவிதை, சிறு கதை பற்றிய, பக்தி பாவத்தில் புகழ்ந்து எழுதப்பட்டவையும் அல்லது இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கில்லை என்று எழுதப்பட்டவையும் ஒதுக்கி விட்டால், ஒதுக்கத் தான் வேண்டும். மிஞ்சுவது இன்றைய தமிழ் வரவேற்க வேண்டிய சேர்க்கைகள், வளம் ஊட்டுபவை என்று கருதி அவற்றின் மீது நம் கவனத்தை ஈர்க்க எழுதப்பட்ட மதிப்புரைகள் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

இது நான் – என் பார்வை.

VGopalanஇந்தப் பார்வையில் எனக்கு நம்மவர் எல்லாம் மிகவும் ஏதோ பேர் சொல்லி ஒதுக்கி விடும் நாகரத்தினம் அம்மாளை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி ஒரு புத்தகமே வெங்கட கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுத, அதை தமிழுக்கு மொழிபெயர்த்த பத்மா நாராயணன், பின் இதைத் தன் மதிப்புரைக்கு எடுத்துக்கொண்டு இந்த அரிய ஜீவனைப் பற்றிய அரிய புத்தகத்தை நம் கவனத்திற்குக் கொண்டு வந்த தஞ்சை வெ.கோபாலன் எல்லோரும் நம் மரியாதைக்குரியவர்கள். முதல் பரிசுக்கு என் தேர்வு தஞ்சை வெ.கோபாலனின் மதிப்புரைதான். இன்றைய தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விஷயம். அது பெற்ற மகத்தான வரப் பிரசாதங்களைப் பற்றித் தெரியாது. பாமரத்தனமான பிரபலங்களைப் போற்றும், சிலை எழுப்பி வணங்கும் குணம் கொண்டது அது.

அடுத்து இரண்டாவதாக வரும் எனது தேர்வு மா.ராசமாணிக்கனாரின் தமிழ் வரலாற்று, இலக்கிய ஆய்வுகளைப் பற்றி இன்றைய தமிழ் பண்டித உலகம், இலக்கிய உலகம் அறியுமா அறியாதா தெரியாது. அவரது வரலாற்று ஆய்வுகளை அவரது மகனார், இரா. கலைக்கோவனே எழுதிய வரலாற்றின் வரலாறு என்னும் இன்னொரு அரிய புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்கும் தேமொழியின் மதிப்புரை. வரலாறும், இலக்கிய ஆய்வும் இன்றைய தமிழ்ச் சூழலில் படும் பாடு நமக்குத் தெரியும். கலைக்கோவனும் அந்தப் புத்தகத்தை நம் பார்வைக்குக் கொண்டு வந்துள்ள தேமொழியும் நம் மரியாதைக்குரியவர்கள். இரண்டாம் பரிசு தேமொழிக்குரியது என் நோக்கில்.

மூன்றாவதாக, எத்தனை கோடி டாலர் சம்பாதிக்கிறது இந்தத் திருப்பூர் நகரம் என்று நம்மிடம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிகார வர்க்கமும், முதலாளி வர்க்கமும் ஒரு நகரத்தையும் அதன் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் என்ன நாசம் செய்து வைத்திருக்கின்றனர் என்று நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்த்துள்ள ரஞ்சனி நம் மரியாதைக்குரியவர். அவரது மதிப்புரை ரஞ்சனியை மூன்றாம் பரிசுக்கு உரியவராக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.

இவை போக இன்னும் மூன்று சிறப்புப் பரிசுகளும் உண்டு என்று வல்லமை ஆசிரியர் குழு அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த மன சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இல்லையெனில் இன்னும் பாராட்டத் தகுந்த மதிப்புரைகள் அநியாயமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கீழ்க்கண்ட மூன்று மதிப்புரைகள் தான் அத்தகைய சிறப்பு கவனம் பெறுபவை:

எத்தனை பேர் Bridge on the River kwai என்னும் ஒரு மகத்தான திரைப்படத்தை இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களோ, பார்த்து அதன் முக்கியத்துவத்தை அறிவார்களோ தெரியாது. அந்த நினைவுதான் எனக்கு வந்தது ஷண்முகம் எழுதிய சயாம் மரண ரயில் என்னும் வரலாறு சார்ந்த புனைவு. அது பற்றி நமக்குத் தெரியத் தரும் ரிஷான் ஷெரீஃபின் மதிப்புரை.

இரண்டாவது சிங்கப்பூர் மலேசியத் தந்தை தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் பற்றி ஜே.எம்.சாலி எழுதிய புத்தகத்தின் மதிப்புரை தந்துள்ள பாண்டியன். ஜி. இதெல்லாம் நமக்குப் புதிய விஷயங்கள். தெரியாத விஷயங்கள். நாம் அறிய வேண்டியவை.

மூன்றாவது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலில் பிறந்து ஃப்ரெஞ்ச் கற்று அதன் இலக்கிய வரலாற்றை ஃப்ரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகள் அறிந்த சொ.ஞான சம்பந்தன் எழுத, அவர் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதி நம் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்த கலையரசி அவர்களின் மதிப்புரைக்கு மூன்றாவது சிறப்புப்பரிசு தரவேண்டும்.

முன் சொன்னவாறு இவை எனதேயான பார்வையில் பட்டவை. ஏதும் objective ஆன நிலுவை, அளவைக் கருவிகள் என்னிடம் இல்லை. என் ரசனை மாத்திரமே என்னிடம் இருப்பது.

வெங்கட் சாமிநாதன்/2.2.2014

ஆகச் சிறந்த நூலத் தேர்ந்தெடுத்து, தெளிந்த நீரோடை போன்ற தம்முடைய எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்ததோடு, ‘அடடா, நூல் உடனே கிடைத்தால் தேவலாம் போல் உள்ளதே’ என்று ஏக்கம் கொள்ளச் செய்து கொக்கி போட்டு இழுக்குமளவிற்கு தம் வல்லமையை வெளிப்படுத்தி, முதல் பரிசை தட்டிச் சென்றுள்ள திரு தஞ்சை கோபாலன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!

வலிந்துத் திணிக்காமல் தெளிந்துச் செம்மையாக, தம் எளிமையான நடையில், சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் வல்லமையுடன், அருமையானதொரு வரலாற்று நூலை அறிமுகப்படுத்தி, இரண்டாம் பரிசை வென்றுள்ள திருமதி. தேமொழி அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

சீரான நடையில் தித்திக்கும் மொழியில் மூச்சு விடாமல் படிக்கச் செய்ததோடு, திரு ஜோதிஜி அவர்களின் இந்த ஆகச் சிறந்த நூல் எங்கு கிடைக்கும் என்று சிந்திக்கவும் வைத்து, மூன்றாம் பரிசை தட்டிச் சென்றுள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

நச்சென்ற வார்த்தைகளால் சுருக்கென்று நம் உள்ளம் தைக்கும் அளவிற்கு பளிச்சென்று தம் கருத்துக்களை முன் வைக்கும் வல்லமையாளர் திரு ரிஷான் ஷெரீப் அவர்கள் சிறப்புப் பரிசு பெற்றமைக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

மிகச் சரளமான நடையில், பிரெஞ்சிலக்கிய வரலாறு என்னும் நூலை படித்தே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவிற்கு தம் எழுத்துக்களால் நம்மைக் கவர்ந்துள்ள திருமதி.கலையரசி  சிறப்புப்     பரிசை வென்றுள்ளமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

‘சாரங்கபாணி’ என்பார் யார், இவரைப் பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அறிய வேண்டுமே, அதுவும் இப்பொழுதே’, என்று நம்மை, அந்த நூல் கிடைக்குமிடம் தேடித் திரிய வைக்கும் ஆற்றலுடன், தம் கருத்துக்களை மிகச் சுவையுடன் அனைவரையும் கவரும் வகையிலான அற்புதமான நடையுடன், போட்டிக்கு முதன் முதலாகத் தம் மதிப்புரையை வழங்கி, சிறப்புப் பரிசை வென்றுள்ள திரு பாண்டியன். ஜீ அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே. தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

புத்தக மதிப்புரை போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் விவரம் ;

1.சயாம் மரண ரயில் 

2.டாலர் நகரம் 

3.தேவதாசியும் மகானும்


4.வரலாற்றின் வரலாறு 


5.மணிக்கொடி 


6.கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்


7.மழைவில் மனிதர்கள் – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

9.சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ

.சாரங்கபாணி

10 பிரெஞ்சிலக்கிய வரலாறு’ 

12. கொய்த நன்மலர்கள் 

 

13. தன்னாட்சி 

14. சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் 

​15. ​இந்தியப் பெண்மணிகள்

 

​16. ​சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன்

17. ‘டார்வின் படிக்காத குருவி’ 

​18. ​மாதொரு பாகன் – பெருமாள் முருகன் 

​19. ​இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

 

20. பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

 

போட்டி நடத்துவதற்கான மூல காரணமாக இருக்கும் திருமதி மதுமிதா அவர்களின் பதிவை இதோ இங்கே காணலாம். மனமார்ந்த பாராட்டுகள் அன்புத்தோழி மதுமிதா.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “புத்தக மதிப்புரைப் போட்டி முடிவுகள்!

  1. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

  2. போட்டியில் வெற்றி பெற்ற திரு.தஞ்சை வெ. கோபாலன் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்..

    மற்ற பரிசுகளை வென்ற திருமதி.தேமொழி, திருமதி.ரஞ்சனி நாராயணன் ஆகியோருக்கும், சிறப்புப் பரிசுகளை வென்ற திரு.ரிஷான் ஷெரீஃப், திருமதி. கலையரசி திரு. பாண்டியன். ஜி.ஆகியோருக்கும் என் உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  3. முதல் மூன்று பரிசுகளை முறையே வென்றுள்ள திரு.தஞ்சை வெ. கோபாலன் ஐயா அவர்களுக்கும், திருமதி.தேமொழி, மற்றும் திருமதி.ரஞ்சனி நாராயணன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    மேலும் சிறப்புப் பரிசுகளை வென்றுள்ள திரு.ரிஷான் ஷெரீஃப், திருமதி. கலையரசி திரு. பாண்டியன். ஜி.ஆகியோருக்கும் மற்றும் படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  4. அனைவருக்கும் வணக்கம்,
    தமிழில் வெளிவந்துள்ள நல்ல நூல்களைப் பலரும் அறியச் செய்யும் இந்த மதிப்புரை போட்டியை நடத்த முன்வந்த வல்லமை இதழின் ஆசிரியர் அவர்களுக்கும், இதற்கான பரிந்துரையைச் செய்து பரிசுத் தொகையையும் அளிக்க முன்வந்த கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
    என் மதிப்புரையை மூன்றாவது சிறப்புப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் மூத்த விமர்சகர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு என் சிரந் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  
    பரிசு பெற்றவர்களுக்கும் போட்டியில் பங்குக் கொண்டவர்களுக்கும் என் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.  
    வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பார்வதி ராமச்சந்திரனுக்கு என் நன்றி.
    நன்றியுடன்
    ஜி.கலையரசி

  5. புத்தக மதிப்புரை போட்டியில் எனது கட்டுரையும் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப் பட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.

    பரிசு வழங்கும் நோக்குடன் போட்டியை அறிவித்தவருக்கும், அவரது வேண்டுகோளை ஏற்று போட்டியை நடத்திய வல்லமை இதழின் ஆசிரியர் குழுவினருக்கும், நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    வெ.சா. ஐயா அவர்களால் தேர்ந்தெடுக்கப் படுவது தமிழக அளவில் ஒரு சாகித்ய அக்காடமி பரிசு அறிவிக்கப்பட்டு அதில் தேர்வு பெறுவதற்குச்  சமம் என்பதை தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிவர். அவரது பார்வையில் என் கட்டுரையும் வெற்றி பெற்றதால் சிறப்புப் பெறுகிறது.

    பங்கேற்ற எழுத்தாளர்களுக்கும் பரிசுகளை வென்ற எழுத்தாளர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

    வாழ்துகள் வழங்கியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  6. தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால்,  02.02.2014 அன்று முகநூலில் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் பக்கத்தில், அவர், டீக்கடை குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டியில் மூன்று நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றதாகவும் அதன் முடிவுகளையும் அறிவித்திருந்தார். முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமம், எந்தத் தேதியில் இந்தப் போட்டியை அறிவித்தது என்று தெரியவில்லை.

    இணையத்தில் தேடியபோது, அந்தரவெளிகள் குழுமத்தில் 18.08.2010 அன்று மின்னல் வெளியிட்டஇந்த அறிவிப்பு, தென்பட்டது: 

    /அந்தரவெளிகள் குழுமத்தின் முதலாமாண்டு விமர்சனப் போட்டிக்கான புத்தகமாக இந்த ஆண்டு சு.வேணுகோபாலின், “ஒரு துளி துயரம்” எடுத்துக்கொள்ளப்படுகிறது./

    இதில், இந்த ஒரே நூலை மட்டும் விமர்சிக்குமாறு கேட்டுள்ளார்கள்.நுழைவுக் கட்டணமாக ரூ.50 பெற்றுள்ளார்கள்.

    ஒரு வகையில், பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகள். 

    இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் போட்டியில் பங்கேற்குமாறு பல முறைகள் நினைவூட்டி, பலரையும் எழுதத் தூண்டிய வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றிகள்.

    மேலும் சிறந்த போட்டிகளை நடத்த விரும்புவோரை வல்லமை வளர்தமிழ் மையம் வரவேற்கிறது. 

    இணைந்து பணியாற்றுவோம். இன்னும் பல முத்திரைகள் பதிப்போம்.

  7. இந்தப் போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்த திருமதி. மதுமிதா அவர்களுக்கும், சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துள்ள மூத்த விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும், உற்சாகமும், ஊக்கமும் அளித்துப் போட்டியில் பங்கேற்குமாறு பலரையும் தூண்டிய வல்லமை ஆசிரியர் அன்பிற்குரிய பவளாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

    போட்டியில் முதல் பரிசு வென்ற தஞ்சை திரு. கோபாலன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற அருமைத் தோழி திருமதி. தேமொழிக்கும், மூன்றாம் பரிசு வென்ற திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! You people really deserve this!!

    சிறப்புப் பரிசுகளை வென்றுள்ள திரு. ரிஷான் ஷெரீப். திருமதி கலையரசி, திரு. பாண்டியன் ஜீ ஆகியோருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

    Last but not least, போட்டியில் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்!!

    அன்புடன்,
    மேகலா

  8. விமர்சனப் போட்டியில் பரிசு வென்ற எனக்குப் பாராட்டு தெரிவித்த திருமதி பார்வதி ராமச்சந்திரன், திருமதி சுபாஷினி, திரு தமிழ்த்தேனீ, திரு சா.கி.நடராஜன், அன்புச் சகோதரி திருமதி தேமொழி, திருமதி மேகலா ராமமூர்த்தி ஆகியோருக்கும், ஆசிரியர் திருமதி பவள சங்கரி அவர்களுக்கும், ஏனைய அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பன் தஞ்சை வெ.கோபாலன்

  9. வல்லமை தந்த ஊக்கம் !
    அன்பார்ந்த ஆசிரியர் தாங்கட்கு
    தங்கள் அறிவிப்பு மிகுந்த மகிழ்வைத்தருகிறது.இதர்க்கு ஆதாரமாயிருந்த கவிஞர் மதுமிதா அவர்கட்கும் நடுவராயிருந்த திரு வெங்கட் சாமிநாதனுக்கும் பவளசங்கரிக்கும்  நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.போட்டியில் கலந்து கொண்டோருக்கும் தெரிவு செய்யப்பட்டோருக்கும் மகிழ்வைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எழுத்ததூண்டும் மனநிலையை ஏற்படுத்யதிமைக்கு வல்லமை குழுவினருக்கு  நன்றி
    உணர்வுகளை வெளிப்படுத்திய திருவாளர்கள் சரவணகுமார் பார்வதி ராமச்சந்ரன்  ச்சசிதானந்தம் கலையரசி தேமொழி அண்ணாகண்ணன் மேகலா ராம்மூர்த்தி கோபாலன் அத்தனைபேருக்கும் நன்றி
    இனிய..    பாண்டியன்ஜி  ( வில்லவன் கோதை )  –  pandisngee@gmail.com

  10. போட்டியில் முதல் பரிசு வென்ற தஞ்சை திரு. கோபாலன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற  திருமதி. தேமொழிஅவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! 
    சிறப்புப் பரிசுகளை வென்றுள்ள திரு. ரிஷான் ஷெரீப். திருமதி கலையரசி, திரு. பாண்டியன் ஜீ ஆகியோருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

    திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் பாராட்டு என்பதே மிகப்பெரிய விருது.
    அவருக்கும், வல்லமை ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் நன்றிகளும்!

  11. திருமதி ரஞ்சினி நாராயணனுக்கு நன்றி.  இராய செல்லப்பா இல்லாமலா…

  12. வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் சச்சிதானந்தம், பாண்டியன் ஜீ, ரஞ்சனி நாராயணன், இராய செல்லப்பா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். தஞ்சை வெ.கோபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *