மணிக்கொடி  

எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா 

 

“கல்கி” பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல்.

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டிக்கான நூல் மதிப்புரை

கலந்து கொள்பவர் : ஜெயஸ்ரீ சங்கர்.

ஆசிரியர் குறிப்பு:                                                                                            

நாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

jeyashree

பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

jeyaஎழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன. ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள்,  காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள்,  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ,  சத்தியசாயி பாபாவின் வரலாறு  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் “தி போயட் ” இல் தொடர்களாக வந்துள்ளன.

விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, மன்னார்குடி, சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கௌரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆண்டு 2013இல் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பெண் எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு இவருக்கும் ‘விருது’ வழங்கப்பட்டது.

அண்மையில் கம்பன் கழகத்தின் ‘சிவசங்கரி விருது’ம்  கிடைக்கப் பெற்றார்.

மணிக்கொடி சென்னை வானொலியிலும் தொடர்ந்து 10 மாதங்கள் காலம் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

 “மணிக்கொடிநூல் வெளியான ஆண்டு :

முதற் பதிப்பு : டிசம்பர் , 1995

வானதி பதிப்பகம், சென்னை.

இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2013

உரிமை : ஆசிரியைக்கு

பக்கங்கள் : 900

விலை : ரூ.500/-

பதிப்பகத்தார் முகவரி :

சேது அலமி பிரசுரம்

நி -7, அரவிந்த் நரேன் என்கிளேவ்,

8, மாசிலாமணி தெரு,

பாண்டி பஜார், தியாகராய நகர்,

சென்னை – 600 017.

——————————————————————————————————————–

 

 

 

முன்னுரை :

மணிக்கொடிஎன்ற இந்த வரலாற்றுப் புதினம் உருவாகக் காரணம்:  

நமது நாட்டை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்பதற்காக நம் முன்னோர்கள் பட்ட துன்பங்களும், செய்த தியாகங்களும் தக்க ஆதாரங்களுடன் எழுதப்பட்டு அந்தக் காலகட்டத்தை, தேசப் பற்றை காட்டக்கூடிய கண்ணாடியாக, காலம் போட்ட கையெழுத்தென   ‘இந்திய வரலாற்றுச் சுதந்திரம்’ என்ற ரசவாதத்தை மையமாகக் கலந்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் தலையாயப் பொறுப்பு நமது நாட்டின் இளைய சந்ததியினருக்கு என்றென்றும் உண்டு என்பதை எடுத்துக்காட்டி உருவானதே ‘மணிக்கொடியின்’ தலையாய நோக்கமாகும்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் ; எண்ணியார்

  திண்ணிய ராகப் பெறின் “

என்ற வாக்கின்படி அவர்களின் உறுதியும், நம்பிக்கையும், உழைப்புமே அவர்களுக்கு  நாட்டைப்  பெற்றுக் கொடுத்தன. அதே உறுதியும், நம்பிக்கையும், உழைப்பும் ‘ஆசிரியர் .ஜோதிர்லதா கிரிஜா’ அவர்களுக்குள்ளும் இருந்ததை அவருடைய இந்தப் புதினத்தில் பக்கத்துக்குப் பக்கம் நாம் காணலாம்.

“மணிமிடை பவளம்” என்பார்கள். அதைப்போல கதையோடு இணைந்து தேசிய உணர்வும் நிறைந்ததாக  இந்நூல் உள்ளது.  இது வெறும் கதையல்ல…நமது பாரத தேசத்துச் சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாறு.

முன்னோட்டம் :

“கிருஷ்ணா இத பாரு. எனக்கு என்ன வயசு?”

  இதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

  “நான் பிறந்தது 1905-ஆம் வருஷம். அக்டோபர் மாசம், பதினாறாந்தேதி. அன்னிக்குத்தான் வெள்ளைக்காரன் பெங்காலை ரெண்டா உடைச்சான்!” எதைச் சொன்னாலும் முடிந்த அளவுக்கு அதில் சரித்திர நிகழ்ச்சியைக் கலக்காமல் பேசப் பெரியப்பாவுக்குத் தெரியாது.

“இன்னிக்கு என்ன தேதி? டிசம்பர் பதினெட்டு,1985; காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கொண்டாடிண்டிருக்கிற வருஷம், அப்ப எனக்கென்ன வயசு இப்ப? எண்பது முடிஞ்சுடுத்து. இத்தனை வயசுக்கு மேலயும் நான் இந்த உலகத்துல – இன்னும் சொல்லணும்னா – இந்த நாட்டில – நான் வாழணுமா?”

“இந்த நாட்டிலே’ என்கிற இரண்டு சொற்களில் பெரியப்பாவின் ஏமாற்றம் முழுவதும் வெளிப்பட்டது எனலாம். ஆனால் இப்போது தமது இறுதி நாளில் படுகிடையாய்ப் படுத்துக்கொண்டு அவர் சொன்ன அந்த வாக்கியம்”.

“சுதந்திரம் அடையறதுக்காக அந்தக் காலத்துல எத்தனை மனுஷா எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டா?, எப்படி எப்படியெல்லாம் தியாகங்கள் பண்ணினா? என்பதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு சுத்தமாத் தெரியல்லே. ஸ்கூல் பாடத்திலேர்ந்து இண்டியன் ஹிஸ்டரிங்கிற சப்ஜெக்டையே கம்ப்ளீட்டா எடுத்துட்டான். அரையுங்குறையுமா ஏதோ சொல்றான்!”

இப்படியாக , “கதை உருவாக பெரியப்பா ஊன்றிய விதை”.

1995 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தில், மரணப் படுக்கையில் தமது  இறுதி நாட்களைக் கடத்தும் வேளையில் , தனது பெரியப்பா தன்னை அருகில் அழைத்து பரணிலிருந்த1920 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நமது இந்தியா சுதந்திரம் அடையும் வரைக்குமான அவரது   அனுபவங்களை , ரத்தம், சத்தம், சிரிப்பு, வெறுப்பு, சோகம்..காதல், மோகம், பாசம், மோசம், வேஷம்…கோஷம்…!  இப்படி நவரசங்களும் கலந்த டயரி குறிப்புகளை, காலம் விட்டு விட்டு நடந்து சென்ற நிகழ்வுகளை அப்படியே வரலாற்று மதிப்பு மாறாமல் ஒரு நாவலாக மாற்றச் சொன்னார்.

பெரியப்பாவின் கடைசி ஆசையாய் அவரது அன்புக் கட்டளையை பூர்த்தி செய்யும் விதமாக அவரின் டயரிக் குறிப்புகள் அனைத்தும் சேர்ந்து  அப்படியே ஒரு நவரச நாவலாக மாறி மலர்ச்சி அடைந்த விதம் அருமையாக இருக்கிறது.

பாரத மக்களின் ‘ஜெய் ஹிந்த் ‘ என்ற வீரக் கோஷத்தோடு கண்களில் மின்னல் தெறிக்க மிதந்தது ‘சுதந்திர மணிக்கொடி’. இப்பேர்ப்பட்ட ‘மணிக்கொடி’யை வெறும் தலைப்பாக மட்டும் தங்கவிடாமல் உலகத்தைப் பின்னோக்கி நகரச் செய்த புத்தகமாக அமர்க்களமான கதைக்களத்துடன் ஆக்கியுள்ளார். அதற்கு  ஆதார சுருதியாக  ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்து நமது இந்தியா  அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுதலையைப் பெற அனுபவித்த பல இன்னல்களையும், போராட்டங்களையும் களிநடனம் புரிகின்ற இனிய தமிழில் கடின உழைப்பிற்கு பின்னால் உருவாக்கி அதற்கு ‘மணிக்கொடி’ என்று  பெயரிட்டுள்ளார் நூலாசிரியர் ஜோதிர்லதா கிரிஜா.

அவர்களது  இலக்கிய வாகைக்கு இந்த ‘மணிக்கொடி’ நாவல்  ஒரு மணிமகுடமாகும். ‘மணிக்கொடி’ என்று  பெயரிட்டுள்ளார் நூலாசிரியர் ஜோதிர்லதா கிரிஜா. அவர்களது  இலக்கிய வாகைக்கு இந்த ‘மணிக்கொடி’ நாவல்  ஒரு மணிமகுடமாகும்.

சூழ்ந்துள்ள இருளை பழித்துக் கொண்டே இருப்பதை விட, ஒரு சிறு சுடர் விளக்காவது ஏற்றி வைக்க முற்படுவதே உன்னதம் என்பது போல  ஆயிரமாயிரம் தலைமுறைக்குப் பாயிரமாக, ஒரு நல்ல சரித்திர நாவல் வெறும் எழுத்துக்களாலோ சொற்றொடர்களாலோ மட்டும் அமைந்து விடாமல்,பல மலர்களிலிருந்து சேமித்த தேன் துளியை ஒரு தேன்கூட்டில் அடைக்கும்  தேனீயைப் போல மாதக் கணக்கில் பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து தனது விடா முயற்சியும், தேசப்பற்றும் கலந்து உருவாக்கிய சுதந்திர வரலாற்றுச் ‘சுடர்மணி சகாப்தம்’ தான் இந்த ‘மணிக்கொடி’ என்றாலும், அது மிகையாகாது.

மணிக்கொடிஎன்னும் நவரச நாவலின் கதைச் சுருக்கம்:

பெரியப்பாவின் டைரிக் குறிப்புகளே நாவலின் உட்கருவாக உள்ளது.  மற்றும் அம்மா, அப்பா,கொடுத்த சில முக்கியமான விவரங்கள், மற்றும் பெரியப்பா குறிப்பிட்டிருந்த சிலர் கொடுத்த தகவலாலும் மற்றும் ஆதாரங்களுக்காக சில புத்தகங்கள் கொடுத்த தகவல்களாலும் குறிப்புகளை இணைக்கும் உண்மை வரலாற்று நிகழ்ச்சிள் கதைக்குள் எடுத்தாளப் பட்டுள்ளன.

கதையை ஆரம்பிக்கும் போது, பெரியப்பாவின் நாற்காலி நிரந்தரமாய்க் காலியாகிக் காட்சிப் பொருளாய் ஆனதோடு, அதே நாற்காலியில் அவரது டயரிகளை எடுத்து வைத்த போது, அவரது மடியில் வைத்தே நாவலை ஆரம்பித்த உணர்வும் வாசகர்களைத் தொற்றிக் கொள்கிறது.

‘மணிக்கொடி’,  தேசபக்தி நிறைந்த இரண்டு குடும்பங்களைப்  பின்னணியாக அமைத்து எழுதப் பட்ட புதினம்.

தேசபக்தரும், பள்ளிக்கூட ஆசிரியருமான காங்கிரஸ்காரர் ராமசாமி, அவரது மனைவி குஞ்சம்மாள், இவர்களது ஐந்து வயதான மகன் கங்காதரன்,சிறு வயதிலேயே கணவனை இழந்த ராமசாமியின் சகோதரி  விசாலம், என அன்பும், பாசமும் நிறைந்த எளிமையானதொரு  குடும்பத்தை மிகவும் யதார்த்தமாகச் சித்திரித்து அந்தக் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ராமசாமியின் குடும்பத்துள் சென்று அமர்ந்து கொண்டது போன்ற பிரமையை ஏற்படுத்தும் விதமாக எழுதியிருப்பது, அருமையான ஆரம்பம்.

வக்கீல் ராஜாராமன், அவரது மனைவி பாமா, லண்டனில் படித்தபடியே இந்திய தேசபக்த இயக்கத்தில் ரகசியமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  மூத்தமகன் அருணாச்சலம் எனும் அருண், மகள் தேசபக்தை அஞ்சனாதேவி, கல்லூரியில் படிக்கும் இளைய மகள் அமராவதி என்று இவர்கள் குடும்பமும் தேசபக்தி நிறைந்த குடும்பமாக வாசகர்களின் கண்களில் காட்சி விரிவது போன்ற பிரமையுடன்

இரண்டாவது குடும்பத்தை அறிமுகப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கும் விதம் சிறப்பு.

லண்டனில் இருந்து அண்ணன் அருண் அனுப்பிய ‘மதன்லால் திங்ரா’ தூக்கிலிடப் படும் முன்னர் எழுதிய கடைசி வாக்குமூலத்தை எடுத்து வந்த அஞ்சனாதேவி, காங்கிரஸ்காரர் ராமசாமியை சந்தித்து அவரிடம் அதைக்  கொடுத்து, இதை ரகசியமாக அச்சடித்து மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும் என்ற தனது அண்ணனின் கோரிக்கையை முன்வைகிறாள். அதற்குள் திடீரென போலீஸ்காரர் ராமசாமியின் வீட்டை சோதனை போடுவதற்காக நுழைய, அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அஞ்சனாதேவி தன்  கையிலிருந்த காகிதக் கற்றையை அடுப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்கி ‘தேச விரோத நடவடிக்கைக்கான சர்ச் வாரண்ட்’ டுடன் வந்த போலீஸ்காரர்களை ஏமாற்றத்துடன் திரும்ப வைக்கும் காட்சியும், அந்தக் கடிதத்தின் தடயத்தை அழித்ததன் மூலமாக  ராமசாமியைக் காப்பாற்றிய விதமும் தத்ரூபமாக மனதில் பதிக்கும் வண்ணம் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன.

கதை முழுதும் சீரியஸாக கொண்டு செல்லாமல், இந்த போலீஸ் களேபரத்திற்குப்  பிறகு வீட்டில் ராமசாமியின் 5 வயது மகன் கங்காதரன் செய்யும், குறும்புகளும், விளையாட்டுக்களும் ஒரு பாசமுள்ள குடும்பத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற பிரமையை ஏற்படுத்தி ,அத்தோடு குஞ்சம்மாளும் , விசாலமும் வந்த பெண் அஞ்சனா தேவியின் சாதியைப் பற்றிப் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகள் மனம் விட்டுச் சிரிக்கும்படியாக ஹாஸ்யமுடன் எழுதப் பட்டிருக்கிறது.

ராஜாஜாமனின் மகன் அருணின் நண்பனான  இந்திரநாத் பானர்ஜியின் சகோதரனான .நரேந்தரநாத் பானர்ஜி எனும் நரேன்.வக்கீல் ராஜாராமனின் வீட்டிற்கு வந்து, அவரது மகன் அருணைப் பற்றி புதிரான தகவல்களைச் தெரியப் படுத்துவது போல, கதையில் நரேனின் அறிமுகம் விறுவிறுப்பான உரையாடலுடன்  நகருகிறது..நரேன், வங்காளி வகுப்பைச் சேர்ந்தவர். தேசபக்தி இயக்கத்தில் இரண்டு முறை இரண்டு வெள்ளைக் காரர்களை சந்தர்ப்பவசத்தால் கொலை செய்து விட்டு தூக்குக் கைதியாக தலைமறைவாகி, போலீஸால் தேடப் படுபவர்.இதற்கான நிறைய நிகழ்வுகளை இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் பயங்கரவாதிகள் என அழைக்கப்படும் தீவிரவாதிகள் பற்றிய  உண்மை சம்பவங்களோடு இணைத்து கதை புனையப் பட்டிருக்கும் விதம் புதுமை.ஒரு ஆபத்திலிருந்து அமராவதியை தக்க தருணத்தில் காப்பாற்றியவன்.அதைத் தெரிந்து கொண்டதும் ராஜாராமன் நரேனைத் தன் மகனாகவே பாவிக்கிறார்.

அருணாசலத்தைப் பற்றிக் கிடைக்கும் புதிரான தகவல்களை, அவ்வபோது நரேன்,ராஜாஜாமன் வீட்டில் தெரியப் படுத்தி வருகிறான்.பிறகு,ராஜாராமன் வீட்டிலேயே அடைக்கலமாக வந்து மீண்டும் தங்கிக் கொள்கிறான். இளைஞர் இயக்கத்தின் போராட்டத்தைப் பற்றியும், அவர்களது பணத் தேவைகளுக்கு அரசாங்க கஜானாவைத் தேவை இருப்பின் கொள்ளை அடிப்பதுவும், அவசியமானால் கொலை செய்வதும் பற்றி ராஜாராமனுக்கும்,.அஞ்சனாவுக்கும், அமராவதிக்கும்,விளக்கும்போது, அவரைத் தேடி செர்ச் வாரண்ட்டுடன் போலீஸ் வருகிறது. அதையறிந்ததும் ,நரேன் அங்கிருந்து போலீசுக்குத் தெரியாமல் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் அன்று இரவே ஒரு நீண்ட கடிதத்தில் தான் எந்த சந்தர்ப்பத்தினால்  ஆங்கிலயர்கள்  இரண்டு பேரைக் கொலை செய்ய நேர்ந்தது  என்பதையும்  விவரமாக ஒரு காகிதத்தில் எழுதி அதைச் சுருட்டி ராஜாராமனின் அறையில் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகிறான்.

நம் நாட்டுப்  புரட்சி இயக்கத்தினருக்குத்  திருட்டுத்தனமாகக்  கைத்துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் போன்றவற்றை லண்டனிலிருந்து தருவித்து உதவும் இந்தியா ஹவுஸில் வாழும் நம் தேச பக்தர்கள், விநாயக் தாமோதர் சாவர்க்கர், அரவிந்த கோஷ், குதிராம் போஸ், கன்னயாலால் மற்றும் பல புரட்சியாளர்களைப் பற்றி நரேந்திரநாத் பானர்ஜி சொல்லும் தகவல்கள் மனம் பதைக்கச் செய்கின்றன.

வக்கீல் ராஜாராமனின் நண்பர் லண்டனிலிருந்து திரும்பி வரும்போது அவருக்காக  எடுத்து வரப்பட்டு கொடுத்த பொட்டலத்தைச் சுற்றி வந்த பழைய லண்டன் நாளிதழில் தன் மகன் அருணின் புகைப்படத்தோடு அவன் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தியையும் படித்த ராஜாராமன் மனம் கலங்குகிறார். மகள்கள் அஞ்சனாவிடமும், அமராவதியிடமும் மட்டும் தனது சோகத்தை ரகசியமாகப் பகிர்ந்து கொள்கிறார். மனைவி பாமாவுக்குத் தெரியப் படுத்த வேண்டாம், மேலும் மனைவியை சமாதானப் படுத்த, அருண் இன்னும் இரண்டு வருடங்கள் மேல்படிப்பு படித்து விட்டுத் தான்  திரும்புவான் என்றும் தற்போது லண்டனிலிருந்து எந்தக் கடிதப் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்து விடுகிறார். அதற்குள் மீண்டும் நரேன் வந்து இவர்கள் வீட்டில் அடைக்கலமாகத் தங்குகிறான். ரகசிய  புரட்சிக் கும்பலில் ஈடுபட்டிருக்கும் நரேந்திரநாத் பானர்ஜிக்கும், அமராவதிக்கும்  இடையே  மெதுவாகத் காதல் அரும்புகிறது.

அதே நேரத்தில் நரேனுக்கு,ரகசிய புரட்சி இயக்கத்தின் தலைவரிடமிருந்து கல்கத்தா வரச்சொல்லி ‘அழைப்பு வருகிறது. நரேன்  உடனே கல்கத்தா கிளம்பத் தயாராகிறான். அவனது  நீள் பிரிவை எதிர்கொள்ளும் முன்னர்  அமராவதி பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் நரேனை சந்தித்துப் பேசித்  தன்னை இழக்கிறாள். இவ்வாறாக கதை திரும்புகிறது. கல்கத்தா சென்று விட்ட நரேன் அமராவதிக்கு கடிதங்கள் எழுதி தொடர்பில் இருக்கிறான். அமராவதி கர்பவதியாகிறாள்.

இவ்வாறிருக்க , ராஜாராமனின் மனைவி  பாமா ஏதோ படிக்க கதைப் புத்தகத்தை எடுக்கும்போது அதிலிருந்து தற்செயலாக விழுந்த அந்தச் செய்தித்தாளில் தனது மகனின் புகைப்படத்தையும் பார்த்து தன் மகன் அருண் சுட்டுக் கொலை செய்யப பட்டதை அறிந்து கொண்டதும் தாயின் மனம் சிதைந்து பைத்தியமாகி விடுவதால் நிரந்தரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விடுகிறாள்.

சுவாரசியமாகச் செல்லும் கதையில் அஞ்சனாதேவி, ராமசாமியின் மீது அவர் திருமணமானவர் என்று அறிந்தும், ஒத்த கருத்துகள் அவர் மீது அவளுக்கு இருவருக்குமிடையே ஈர்ப்பை உண்டுபண்ண, அதை எடுத்துக் காட்டிய விதத்தையும், அஞ்சனாதேவிக்கு ராமசாமி மீது காதல் அரும்பும் காட்சியும், அதை அவரிடம் மறைமுகமாக சொல்லும்போது, அவருக்கும் அஞ்சனாவைப் பிடித்திருந்தாலும்,ஏகபத்தினி விரதனான அவருக்கு அப்படி ஓர் எண்ணம் வரவே இல்லை.. என்பதை  மிகவும்  நளினமாக கையாளப்பட்டு கதையோடு பிணைக்கப் பட்டிருக்கின்றன..

இதன் நடுவில், அஞ்சனா கார் ஓட்டுவதையும், குஞ்சம்மாள் அஞ்சனாதேவியின் சாதியைப் பற்றி ராமசாமியிடம் கேட்டதால் வீட்டில் ஏற்படும் சண்டைப் பூசலும் காரசாரமான விவாதங்களும் ரசிக்கும் படியாக எழுதி, கதை ஒரே பாதையில் சென்று விடாமல் நவரசங்களும் அங்கங்கே அளவோடு எடுத்தாளப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளியில் நடந்த கூட்டத்தில் திடீரென கலகம் வந்துவிடவே, ராமசாமியும், அஞ்சனாதேவியும் ஓர்  இருட்டு அறையில் ஒளிந்து கொள்ள நேரிடுகிறது. அந்த விஷயம் வெளியில் வேறு விதமாகப் பரவியதால் ராமசாமியின் வீட்டிலும் புகைகிறது. அஞ்சனாதேவி மீது தான் வைத்திருந்த கண்ணியமான நட்பை மனைவி குஞ்சம்மாளுக்குப்  புரிய வைக்க விவேகத்துடன் முயலுகிறார் ராமசாமி.

தன் மனைவி குஞ்சம்மாளுக்கு  இருக்கும் தாழ்வு மனப்பான்மை விலக ராமசாமி அவளுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கிறார். குஞ்சம்மாளை குஞ்சனா தேவியாகச் மாற்றி விடுகிறேன் என்று கேலி செய்கிறார்.  இதற்கிடையில், ஐந்து வருடங்கள் கழித்து குஞ்சம்மாள் மீண்டும் கருத்தரிக்கிறாள். அந்நிலையில் அவளுக்கு தன் கணவனைப் பற்றிய ஒரு மொட்டைக் கடிதம் வருகிறது. அதை எடுத்துக் கொண்டு வக்கீல் ராஜாராமன் வீட்டுக்குச் சென்று கடிதத்தைக் காண்பித்து படிக்கச் சொல்லி, அவரது மகளைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வருகிறாள் குஞ்சம்மாள். இந்த விஷயத்தை ராமசாமியிடம் மறைத்தாலும் தற்செயலாய்க் கண்டுபிடிக்கப்பட்ட பின், குற்ற உணர்வு காரணமாக உடனே ராமசாமியிடம் சொல்லிவிடுகிறாள்.இதே குழப்பத்தில் இரண்டாவதாக கங்காதரன் போலவே ஒரு மகனைப் பெற்றெடுத்த கையோடு இறந்து விடுகிறாள் குஞ்சம்மாள்.

அஞ்சனாவை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் தனது சகோதரி விசாலத்திடம், அதை மறுத்துச் சொல்கிறார் ராமசாமி. நீண்ட நாட்கள் கழிந்து மீண்டும் அஞ்சனா ராமசாமியை நேரில் வந்து சந்தித்து, அமராவதிக்கு நரேன் மூலமாக பெண் குழந்தை பிறந்துள்ளத விஷயத்தையும், அந்தக் குழந்தைக்கு ‘ பவித்ரா’ என்று பெயரிட்டிருப்பதையும் சொல்லி விட்டுப் போக அவர்கள் வீடு தேடி வருகிறாள்.

அப்போது ஆறு வயது மகன் கங்காதரன், தனது பள்ளித் தோழனின் அப்பா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டிருப்பதாகவும், தனக்கு அஞ்சனா மாமியைப் பிடித்திருப்பதாகவும், அப்பாவைக் அவர்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி குழந்தைத் தனமாகச் சொல்லும் போது , வக்கீல் ராஜாராமனின் குடும்பத்தில் சமீபத்தில் நடக்கும் விஷயங்களை கருத்தில் கொண்டு, அதில் தனக்கு உடன்பாடு சிறிதும் இல்லாததால் தனது தம்பி ராமசாமிக்கும், அஞ்சனா தேவிக்கும் முன்னிலையில் குழந்தை கங்காதரனின் முதுகில் ஓங்கி அறைந்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள் விசாலம்.

இதைக் கண்ட ராமசாமி அதிர்ச்சி அடைந்து குழந்தையிடம், குஞ்சம்மாள் மட்டும் தான் அவனுக்கு அம்மா என்றும்,  வேறு யாரும் அவனுக்கு அம்மாவாக முடியாது என்று எடுத்துச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அஞ்சனாதேவி புரிந்து கொண்டு விடை பெற்றுச் செல்கிறாள்.

சென்னைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த  எஸ்.எஸ்.மகாராஜா எனும் கப்பலில்  கைதிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட சிற்றறையில் அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லுமுன், குண்டு வெடிப்பினால் தனது இடது கையை இழந்த நிலையில் நரேந்திரநாத் பானர்ஜி பதினேழு ஆண்டுகள் கழித்து சென்னையைப் பார்ப்பதால் தனக்குத் தெரிந்தவர் யாரேனும் கண்ணில் அகப்பட மாட்டார்களா எனும் ஆவலும், ஏக்கமுமாக குறிப்பாக அமராவதியை நினைத்தபடியே தனது எதிர்பார்ப்பை தனது நண்பரிடம் விவரிக்கும் காட்சியாக ‘மணிக்கொடி’யின் இரண்டாவது  பாகம் ஆரம்பமாகி  உள்ளத்தை நெகிழச் செய்கிறது.

அதே நேரத்தில் கல்லூரி மாணவ மாணவர்களாக கப்பலைச் சுற்றிப் பார்க்க அங்கு வந்திருந்த பவித்ராவும்,கங்காதரனும்  கைதிகளின் சிற்றறையை எட்டிப்பார்க்க, அங்கு ‘இடது கையை இழந்த அடையாளங்களுடன் இருந்த நரேனைக் கண்டதும் பவித்ரா தன்னைத் அவருக்கு அடையாளம் சொல்லித் தனது தாய் அமராவதி தான் என்றும் அவரிடம் பேசும் தருணங்களை தந்தை, மகளின் உணர்வுகளை எழுத்தால் செதுக்கி இருப்பதைக் காண முடிகிறது. உடனே,பவித்ரா அவருக்கு கங்காதரனை  செய்து விட்டு, வீட்டுக்கு தொலைபேசி மூலமாகத் தகவல் சொன்னதும், அடுத்த அரை மணி நேரத்தில் அமராவதியும், ராஜாராமனும், அஞ்சனாதேவியும் நரேனைப் பார்க்க கப்பலுக்குள் இருக்கிறார்கள். அந்த நெருக்கடியான நேரங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லப் பட்டுள்ளது.

ராஜாராமனுக்கு நரேன் எழுதிய பல கடிதங்களில் சுதந்திரப் போராட்டத்தின் பல நிகழ்வுகளை எழுதியிருப்பதாகவும், அந்தக் கடிதங்களை அவரும் அஞ்சனாதேவியும் படிப்பது போலச் சொல்லப்பட்டதால், பல உண்மை வரலாற்று  நிகழ்வுகள், அதன் சாரம் மாறாமல் படிக்கும் போது நாமும் அந்தக் காலத்துக்குள் மனசளவில் பிரவேசிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அதையும் மீறி கதையாசிரியர் தன்னையே அந்தக் காலத்துக்குள் புகுத்தி, ஒவ்வொரு கதா பாத்திரதிற்குள்ளும் புகுந்து கொண்டு பேசுவது போல வசனங்களைத் உயிரோட்டமாக எழுதியிருப்பது அவரது அபாரமான திறமையை எண்ணி வியக்கும்படி செய்கிறது.

கங்காதரன், தான் பவித்ராவோடு கப்பலைப் பார்க்கச் சென்றிருந்த போது, கப்பலுள்  அரசியல் கைதியாக நரேந்திரநாத் பானர்ஜி அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்வதை பார்க்க நேரிட்டதை தனது தந்தை ராமசாமியிடம் விவரிகிறான். பவித்ராவுக்கு தனது தந்தையை அடையாளம் தெரிந்து கொண்டு, உடனே தனது அம்மா அமராவதியையும், தாத்தா ராஜாராமனையும் பெரியம்மா அஞ்சனாதேவியையும் அங்கு வரவழைத்ததைப் பற்றியும் சொல்கிறான். இதைக் கேட்ட ராமசாமியின் சகோதரி விசாலம், கங்காதரனும், பவித்ராவிடம் காதல் வயப்பட்டு விடுவானோ என்ற பயத்தில் பாமர சிந்தனையோடு கங்காதரனை ராஜாராமன் வீட்டுக்கு செல்வதைத் தடுக்கிறாள். அஞ்சனாவைப் பற்றியும், அமராவதியைப் பற்றியும் அவதூறாகப் பேசுகிறாள். ராமசாமிக்கு இதைக் கேட்டதும் கோபம் வருகிறது. இரண்டு நாட்கள் முன்னமே, கங்காதரன் பவித்ராவிடம் தனது காதலைச் சொல்லி மனம் திறக்கிறான். பவித்ராவும் கங்காதரனை நேசிப்பதாகச் சொல்கிறாள். இதை நினைத்த கங்காதரன், தன் அத்தை அவனைச் சரியாகத் தான் கணக்குப் போட்டிருக்கிறாள் என்று பாராட்டி வியக்கிறான்.

கங்காதரனின் தம்பி ரமணி பள்ளி முடிந்து வந்ததும், அவனது பள்ளிக் காம்பவுண்டு சுவற்றில் “வெள்ளைக்காரங்க எல்லாம் கொள்ளைக்காரங்க” என்று யாரோ எழுதியிருந்ததை கண்டு, எழுதியவரைக் கண்டுபிடிக்க போலீஸ் வந்ததாகவும், வெள்ளைக்காரனுக்கு எதிரா ஸ்லோகன்ஸ் எழுதுபவன் யார் என்று தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும், வேறு எந்தப் பள்ளியிலும் சேர விடாமல் செய்து விடுவதாகவும் சொல்லி மிரட்டியதாக ராமசாமியிடம் சொல்லுகிறான். அதைக் கேட்டதும் ராமசாமி, ஆலிவர் ஸ்மித் என்ற ஆங்கில புரொபசர், இந்தியர்களுக்கு இலக்கியமே தெரியாது என்று இழிவாகப் பேசியதும் ராமச்சந்திரன் என்பவருக்கு கோபம் வந்து வாக்குவாதம் எழவும்,புரொபசர் இவனை அடிக்கப் போக, இவனும் புரொபரசரை அடித்து விடுகிறான்.அப்படியே, தனது தாய்நாட்டைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்கு தான் அடித்து விட்டதாகவும், அதே சமயம், குரு ஸ்தானத்தில் இருப்பவரை அடித்து விட்டதற்காக அவரை நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்த கல்கத்தா யூனிவெர்சிட்டியை விட்டே வெளியேறினான், கல்கத்தா ராமச்சந்திரய்யர்.என்று அந்த  நிகழ்வைச் சொல்கிறார்.

அதைக் கேட்டதும் ரமணி, இது போன்ற ஒரு எழுச்சி தான் நாட்டுக்குத் தேவை.. தீவிரவாதத்துல தான் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வரப் போறது…வெள்ளைக்காரன் பின்னால் கெஞ்சிக் கொண்டு போகக் கூடாது என்றும் சொல்கிறான்.  காந்திஜி சொல்வது போல அகிம்சா இயக்கத்தால் நம் நாடு சுதந்திரம் அடையாது என்றும் சொல்கிறான். அதைக் கேட்ட ராமசாமி, காந்திஜியின் சம்பரான் விவகாரம் பற்றிச் சொல்லி, அகிம்சா போராட்டத்திலும் வெற்றி கிட்டும் என்றும், தென் ஆப்பிரிக்காவில் சில போராட்டங்களை நடத்தி வந்த காந்தி அங்கிருக்கும் வெள்ளைக்கார அரசாங்கத்தைப் பணிய வைத்தது போல இங்கும் அவருக்கு மக்களிடத்தில் செல்வாக்கு பெருகிடும் என்ற பயமும் வெள்ளைக்காரனிடத்தில் பயம் இருக்கிறது….என்று அந்த நிகழ்ச்சியை விளக்கிச் சொல்லி மகன் ரமணிக்குப் புரிய வைக்கிறார் என்றார்.

யாரை வேணா, எப்ப வேணா அரெஸ்ட் வாரண்ட் இல்லாமையே கைது செய்து சிறையில் வைக்கலாம் என்ற ஒரு சட்டத்தை ரௌலட் என்கிறவரின் தலைமையில் இங்கிலாந்திலிருந்து வந்ததை எதிர்த்து நாடு முழுக்க கூட்டங்கள் நடந்ததையும், அப்படி கைது பண்ணப் படும் ஆளுக்கு வக்கீல் வெச்சு வாதாடும் உரிமையும் கிடையாது என்ற ரௌலட் சட்டத்துக்கு எதிரா ஒரு சித்தியாகிரகம் செய்து இந்தியா முழுக்கக் கடையடைப்பு நடந்ததையும், அந்த சந்தர்ப்பத்தில் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது…என்று அந்த நிகழ்வை மிகவும் விரிவாகச் சொன்ன ராமசாமியைப் பார்த்து ,…இப்படிப் பட்ட ராட்சசங்கிட்ட அகிம்சையும் அன்பும் எடுபடுமாப்பா …என்று ரமணி கேட்கிறான்.  ஈடுபட்டால் அது காந்தியோட மகிமை தான் என்று சொன்ன ராமசாமி, ஒரு குறிப்பிட்ட தெருவழியா இந்தியன் போகும்போது, அவர்கள் படுத்துக் கொண்டு தனது வயிற்றாலும் காலாலும் தவழ்ந்து தான் செல்லவேண்டும் என்ற சட்டமும் இருந்தது. என்று அவர் சொல்லும்  போதே ரமணியின் இள இரத்தம் கொதித்தது. அவனுக்குள் இருந்த தேசபற்று கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு நாள் ரமணி வீட்டை விட்டு யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் தந்தை ராமசாமிக்கு வங்காளத்தில் இருக்கும் சிட்டகாங் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் செல்லும் வழியில் ரயிலில் பணத்துக்காக சிலரால் அடிக்கப்பட்டு கால் முறிந்த நிலையில் விஜயவாடாவில் இறங்கி அங்கு ஒருவர் வீட்டிலிருந்து ராமசாமிக்குத் தந்தி அனுப்புகிறான். ராமசாமி வந்து ரமணியை கால் முறிந்த நிலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

அந்தமான் சிறையில் நரேந்திரநாத் பானர்ஜி அவரது மற்ற நண்பர்களோடு இருக்கையில் , விநாயக் தாமோதர் சர்வார்க்கர் இருந்த சிறையறை பற்றிய விஷயங்களையும், நிறைய இந்திய அரசியல் கைதிகள் தற்கொலை செய்து கொண்டதையும், நிறைய பேருக்குப் பைத்தியம் பிடித்துள்ள விஷயங்களையும் கண்களில் நீர் நிறைய  படுகின்றனர். அதே சிறையில் நரேந்திரநாத் பானர்ஜி சிறை மேற்பார்வையாளனால்  நடத்தப்பட்ட விதத்தைப் படிக்கும் போது நம் கண்களிலும் நீர் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

வீர வாஞ்சி தனது கர்ப்பவதியான  இளம் மனைவியை வாழ முடியாதவளாக விட்டு விட்டு இறந்து போன அவலத்தை அறிந்த கங்காதரன், சுதந்திரப் போராட்டக் களத்தில் சேரப் போகும் தனக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் தான் காதலித்து மணக்கும் பவித்ராவின் நிலை என்னவாகும் என்றெண்ணித் தன் மனதிலிருந்த காதலை நசுக்கிவிட்டதாகவும், இனி நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருப்போம் என்றும் தன்னை மன்னித்து விடுமாறும் கடிதம் வாயிலாகப் பவித்ராவிடம் தெரியப் படுத்துகிறான்.

பவித்ராவும், காதல் எனும் உணர்வு அப்படியெல்லாம் இலேசில் அழிக்கக்கூடிய உணர்வு இல்லை என்றும்,சுதந்திரப் போர்க்களத்தில் குதித்த பின் ஒருவேளை நம்மிருவருக்கும் தொடர்பு அறவே விட்டுப் போகவும் கூடும் என்றும், அதற்காக என்னைத் தடை செய்ய நீங்கள் யார்? உங்களைக் காதலிப்பது எனது சுதந்திரம் என்று நீண்ட பதிலை கங்காவுக்கு எழுதுகிறாள்.

ராஜாராமனும், அமராவதியும், அஞ்சனாவும், பவித்ராவும், கங்காதரனுடன் அவர்கள் வீட்டில் ஒன்று கூடி சைமன் கமிஷன் பற்றியும், காந்திஜி பற்றியும், நேருஜி, சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் ஆனந்த மோகன் போஸ் பற்றியும் விவரமாகப் பேசி விவாதித்துக் கொண்டிருப்பது நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

இந்நிலையில் பவித்ராவும், அவள் வீட்டில் வேலை பார்க்கும் தங்கம் என்பவளின் வற்புறுத்தலினால் தனது துணைக்கு அவளையும் அழைத்துக் கொண்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு விடுதலை இயக்கத்தில் சேருவதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

கங்காதரனும் இயக்கத்தில் சேருவதற்காக புரட்சிக் கும்பலோடு சேர்ந்து கொண்டு டெல்லி செல்கிறான். அப்போது லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.அவரது தலைமையுரை இந்திய இளைஞர்களுக்கு அகிம்சையின் மகத்துவத்தை வலியுறுத்தியதோடு, வெள்ளைக்காரனுக்கு எதிராக அணி திரண்டு அனைவரும் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.முழுச் சுதந்திரமே காங்கிரஸின் குறிக்கோள் என்கிற அவரது அறைகூவல் பலத்த ஆரவாரத்துடன் ஏற்கப்பட்டது.இம்சை வழியில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் நிலையான பயன்களை அகிசைவழியால் தான் நாம் பெற முடியும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். காந்தியின் மீது சற்றே அவநம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட இளைய நேருவின் கனல் பரந்த பேச்சைக் கேட்டு வேகம் கொண்டனர். அவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் நாளில், ரவி நதித்திடல் நோக்கி மாபெரும் ஊர்வலத்தை நேரு சென்றார். நதிக்கரையில் மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டு, பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என்பதற்கான சூளுறவு அங்கு குழுமியிருந்த மூன்று இலட்சம் மக்களால் மேற்கொண்டு உரைக்கப்பட்டது.மதுவிலக்கு மாநாடும், அந்நியத் துணி மறுப்புப் போராட்டமும் ராஜாஜியின் தலைமையில் நடந்தது.நாடு தழுவிய உப்பு சத்தியாகிரகம் நடந்து முடிந்தது.

கூடிய விரைவில் இந்தியா முழுவதும் பேசப்படப்போகும் ஒரு பெரிய காரியத்தை நாங்கள் செய்யப் போகிறோம் என்று பவித்திரா தனது தாய் அமராவதிக்கு கடிதம் எழுதித் தெரியப்படுத்தினாள். இதனிடையில், மோதிலால் நேரு காலமானார் .பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.இந்து-முஸ்லிம் கலவரத்தில் முடிந்தது, காந்திஜி இந்தப் பிரிவினையில் மனம் கலங்கினார். இது போன்ற எண்ணற்ற வேதனை சம்பவங்களைக் கண்கூடான காட்சியாக கதையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

வீட்டை விட்டு வெளியேறிய கங்காதரனும், பவித்ராவும், துணைக்குச் சென்ற தங்கமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? போராட்டத்தில் என்னவானார்கள்? நரேந்திரநாத் பானர்ஜியின் நிலைமை என்னவாயிற்று…? இவையனைத்தையும் பக்கத்துக்குப் பக்கம் நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்வுகளோடு நீங்களும் அறிந்து கொள்ள ‘மணிக்கொடி’யைத் தேடுங்களேன்.

இத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கதையோடு சேர்த்து வாசகர்களுக்கு கதையைத் தாண்டியும் ‘சுதந்திரம் பெறுவதற்காக நமது முன்னோர்கள் கொண்ட இன்னல்களை இம்மியும் விடாது சொல்லி ‘இந்தியன்’ என்ற உன்னத உணர்வை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த எழுத்தாளர் மேற்கொண்ட பெரும் சமூக சேவை என்றே சொல்லலாம். இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பு இருந்த அத்தனை நிகழ்வுகளையும் தக்க ஆதாரங்களுடன் திரட்டிய வரலாற்றுச் சின்னமாகப் படைத்திருக்கும் இந்தப் புதினத்தை ஒரு இலக்கியக் காவியப் படைப்பாக்கி ஒவ்வொருவரின் வீட்டிலும், பள்ளியிலும் அவசியம் வாசித்துத்   தெரிந்து கொண்டால் மட்டுமே நமது  தாய்நாட்டின் மீது நமக்குப் பற்று உண்டாகும்.

வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்ற நமது இந்தியா தற்போது திரை உலகின்  பிடியில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறது. ‘தேசபக்தி’ என்ற எண்ணமே இல்லாமல், இன்றைய இளைய சமுதாயத்தைத் திரைப்படங்கள் ஆக்கிரமித்து விட்ட வேளையிலும், சுதந்திரம் கிடைத்து ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையிலும், மாணவர்களிடம் தேசப் பற்று மறைந்து கொண்டு வருவது கண்கூடு. இந்த நேரத்தில் இப்பேர்பட்ட சுதந்திரத்தை தங்களுக்கு வாங்கித்தர நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லும் தேசபக்தி நிறைந்த இந்த “மணிக்கொடி” அவர்களின் கண்பட்டு மனதில் பறந்தால் மட்டுமே கண்டிப்பாக நமது தாய்நாடு தப்பிக்கும்.

கதைக்குள் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் சில அலைகள்:

“இண்டியா ஆபீஸ்ல போன வருஷம் ஜூலை மாசம் நடந்த ஒரு விழாவப்ப ‘மதன்லால் திங்ரா’ங்கிற ஒரு இருபத்திரண்டு வயசு மாணவன் சர் கர்ஸான் வில்லிங்கிற வெள்ளைக்கார அதிகாரியைச் சுட்டுக்கொன்ன செய்தியும், அவன் அதற்குத் தண்டனையாத் தூக்கில்  போடப்பட்டபோது அவனுடைய கடைசி வாகுமுலத்தை விவரமாக எழுதி இருந்ததை அப்படியே மொழிபெயர்க்கப் பட்டதாக இருப்பதால், படிக்கும் போதே பல விஷயங்களை நமக்கு விளக்கச் செய்வதோடு ‘மதன்லால் திங்ரா’ கடைசியில் தூக்கில் இடப்படுவதற்கு முன்னதாக உணர்ச்சியுடன் விடுத்த அறிக்கையில் “என் இந்தியத் தாய்க்கு அளிக்க எனது இரத்தத்தைத் தவிர வேறு எந்த விலைஉயர்ந்த பொருளும் என்னிடம் இல்லை” என்று நெஞ்சுரத்துடனும், தைரியத்துடனும் குறிப்பிட்டிருப்பது அவரது தேசபக்தியை நமக்கு உணர்த்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

‘மதன்லால் திங்ரா’வுடைய கடைசி அறிக்கையை ‘தேசபக்தியைக் குறிக்கிற மிகச்சிறந்த சொற்கள்’ அப்படின்னு தம்மையும் மறந்து பாராட்டி இருக்கார். “இங்கிலாந்து மந்திரிசபையில ஃபினான்ஸ் மினிஸ்டரா இருக்கிற லாயிட்ஜார்ஜ்  – என்பதன் மூலம் வெள்ளைக்காரங்கள்ளயும் நல்லவங்க இருக்காங்க, என்ற அபிப்ராயத்தையும் சொல்லியிருந்த விதம் சிறப்பு..

வீர சாவர்க்கர், 1857ஆம் வருஷத்துச் சிப்பாய்க் கலகத்தைப் பத்தி ‘எரிமலை’ங்கிற தலைப்பில ஒரு புத்தகம் எழுதி  இருக்கார்.

அதனோட இங்கிலீஷ் எடிஷன் ஹாலண்ட்ல பப்ளிஷ் ஆனது.” அந்தப் புத்தகந்தான் மதன்லால் திங்ராவுக்கு இன்ஸ்பிரேஷனாம், அதைப் படிச்சுட்டுத்தான்  அவன் தேசபக்தனாயிட்டானாம்.” அந்த வீர சாவர்க்கர், மதன்லால் திங்ராவின் உடலைத் தங்கிட்ட ஒப்படைக்கச் சொல்லி விடுத்த வேண்டுகோளுக்கும் ஆங்கிலேயர்கள் செவிசாய்க்கவில்லை என்பதைப் படிக்கும் போது, படிப்பவரின் மனம் கண்டிப்பாக வருத்தமடையும்.

இந்த விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது அபிப்ராயத்தை அஞ்சனாதேவி தெரிவித்ததும், ராமசாமியும் அவரது நண்பரும் மறுத்துச் சொன்ன போது ,”குடும்பம்கிற  அமைப்பை  ஆணும்பெண்ணும் சேர்ந்து நடத்தற மாதிரிதானே இதுவும்! நாட்டு நடப்பிலயும் ஆணும் பெண்ணும் இணைஞ்சு வேலை செய்யணும். அப்பதான் சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கும். பெண்கள்கூட இந்தப் போராட்டத்துல  பங்கெடுக்க  முன்வர்றான்னா, அது வெள்ளைக்காரனைக் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும். இப்ப மேடம் பிக்காஜி காமா,சர்தார் சிங்க் ராணா இல்லையா? 1907 இலே ஸ்டட்கார்ட் நகரத்துல நடந்த இண்டர்நேஷனல் சோஷலிஸ்ட் காங்கிரஸ் மகாநாட்டுல இவங்க ரெண்டு பேரும் இந்தியாவோட பிரதிநிதிகளாக் கலந்து கொண்டார்கள்.

“இங்கேலீஷ்காரன் கண்ணுல மண்ணைத் தூவற இந்த வேலையை முதல்ல ஆரம்பிச்சு வெச்சது நம்ம பாரதியார் தான். இப்ப அவரை அரவிந்த கோஷ் முதக்கொண்டு ஃ பாலோ பண்ணத் தொடங்கிட்டாங்க பாரும்.  வெறுமனே சந்திப்பு, பேச்சு, எழுத்துன்னு மட்டும் போயிட்டிருந்தா எந்த ஜென்மத்துலேங்க்காணும் இந்தியா சுதந்திரம் அடையிறது? முதல்ல ஜனங்களுக்கு, நாம அடிமைகளா இருக்கோம்கிறது புரிஞ்சு அவங்களுக்கு வெள்ளைக்காரன் மேல தாங்க முடியாத ஆத்திரம் வரணம். அதுக்கு அப்புறந்தான் புரட்சி வெடிக்கும்.

1908 ல திலகர் வேற நாடுகடத்தப்பட்டு இப்ப பர்மா ஜெயிலில் இருந்திட்டிருக்காரு. ஆறு வருஷம் கழிச்சு 1914 ஆம் வருஷம் தான் திரும்பி வரணும். பாவம்..! அம்பத்திரண்டு வயசுல நாடு கடத்தல், என்ன அயோக்கியத்தனம்! பம்பாயில அவரைத் திலக் மகராஜ்னு தான் சொல்லுவாங்களாம். கோர்ட்ல மூச்சு விடாம இருபத்தொரு மணி நேரம் தன கேசைத் தானே வாதாடிப் பேசி இருக்காரே….வெள்ளைக் காரங்க அசந்து போயிட்டாங்களாம்.திலகர் மாதிரி ஒரு பெரிய தலைவர் பர்மா மாண்டலே ஜெயில்ல இருக்குறதுங்கிறது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம்.

பத்திரிகையில நம்ம கருத்துக்களை வெளியிடற சுதந்திரத்தை தடை செய்யற அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துக் கேசரி பத்திரிகையை நடத்திட்டிருந்த திலகர் அதுல எழுதாம இருப்பாரா? நம்ம நாட்டுல வந்து உக்காந்துக்கிட்டு, நம்ம பத்திரிகை சுதந்திரத்துல தலையிட்றதா ? ராமசாமி நண்பர் மனவாளரிடம் பேசும்போது திலகருக்காக கொந்தளித்துப் பேசுவது அந்த இடத்துக்கே நம்மையும் அழைத்துச் சென்று விடுகிறது.

கப்பல் மாலுமிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியா ஹவுஸில் வாழும் நம் நாட்டு தேசபக்த வாலிபர்கள் லண்டனிலிருந்து  கைத்துப்பாக்கிகள் ,  வெடிகுண்டுகள்போன்றவற்றைத் திருட்டுத்தனமாக நம் நாட்டுப் புரட்சி இயக்கத்தினர் அடைய உதவி வருகின்றனர். அவர்கள் மூலம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத நடவடிக்கைகள் வலுத்து வருகின்றன. அயல் நாட்டினருடன் நாங்கள் இடைவிடாத தொடர்பு கொண்டு மிஸஸ் கென்னடி என்கிற வெள்ளைக்காரப் பெண்மணியையும் அவள் மகளையும் சுட்டுக்கொன்ற குதிராம் போஸ் தூக்கில் இடப்பட்டபோது கல்கத்தா நகரம் முழுவதும் அமளி துமளிப்பட்டது. எங்கு பார்த்தாலும் குதிராம் போஸ் பற்றியே மக்கள்பேசினார்கள். கண் கலங்கினார்கள். மனம் கொதித்து வெள்ளைக்காரன் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

“இந்தப்பாரபட்சமானநீதிவழங்கலால்மனக்கசப்புற்றவர்களில் பரீந்திரகுமார் கோஷின் அனுசீலன் சமிதிக்காரர்கள் சிலர். இவ்வாறு பாரபட்சமாக நீதி வழங்கிய ஒரு மாஜிஸ்டிரேட்டைக் கொலை  செய்துவிடவேண்டும்  என்று  இந்த  அமைப்பு முடிவெடுத்தது. அதன்படி,  பிரபுல்லா  சக்கி,  குதிராம்போஸ் எனும் இரண்டு இளைஞர்கள் அந்த மாஜிஸ்டிரேட்டின் ஊரான முசபர்பூருக்குப் போனார்கள். கென்னடி எனும் வெள்ளைக்காரர் தம் மனைவி, மகள் ஆகியோருடன் பயணம் செய்துகொண்டிருந்த கோச்சு வண்டியை அந்த மாஜிஸ்டிரேட்டினுடையது என்று தவறாக எண்ணிவிட்ட இருவரும் அதன் மீது ஒரு குண்டை வீச, அதன் விளைவாக அந்த வெள்ளையரின் மனைவியும் மகளும் மாண்டுபோனார்கள். இரண்டு புரட்சிக்காரர்களும் உடனே அங்கேயே கைது செய்யப்பட்டார்கள். பிரபுல்லா சக்கி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனான். குதிராம் போஸ் தூக்கில் இடப்பட்டான். அவர்களது இரகசிய அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய புரட்சிக்காரர்கள் பிடிபட்டனர். பரீந்திரகுமார் கோஷ், அவர் அண்ணன் அரவிந்தகோஷ் ஆகிய இருவரும்கூடப் பிடிபட்டனர்.

குதிரோம் போஸைப் பிடித்துக் கைது செய்த நந்தலால் எனும் இந்திய சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டான். குதிராம்

போஸைத் தூக்கில் போட்ட பிறகு அவனது நினைவாகப் பள்ளிகள் இரண்டு நாள் விடுமுறையை அனுஷ்டித்தன. எங்கு பார்த்தாலும் அவனது புகைப்படம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு அவை ஆயிரக்கணக்கில் விற்பனை ஆயின! பரீந்திரகோஷின் கும்பலைச் சேர்ந்த நரேந்திரகோசேங் என்பவன்  துரோகியாக  மாறி,  காட்டிக்கொடுத்ததால்தான் வெள்ளைக்காரர்களால் அவர்களது இரகசிய அலுவலகம், கடிதப்  போக்குவரத்து  பற்றிய  தகவல்கள்,  திட்டங்கள் போன்றவற்றை அறிய முடிந்தது. “குதிராம் போஸ், பிரபுல்லா சக்கி ஆகிய இருவரும் கென்னடி குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, கோர்ட்டிலேயே வைத்து பப்ளிக் பிராசிக்யூட்டரும், டெபுடி சூப்பரின்டென்டென்ட் ஆஃப் போலீஸும் சில பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

“தேசபக்தர்களைக் காட்டிக்கொடுத்த நரேந்திர கோசேங்யை கன்னயாலால் தத்தா என்பவனும் சத்தியன் போஸ் என்பவனும் சிறைச்சாலச்   சுற்றுச்   சுவரினுள்ளேயே சுட்டுக்கொன்றுவிட்டார்கள். கன்னயாலால் கூடத் தூக்கிலிடப்பட்டான். மாவீரனாய்க் கருதப்பட்ட அவனது சவ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். என்று நரேந்த்ரநாத் ராஜாராமனிடம் சொல்லும்போது அவர்களின் அராஜகம் மனக்கண் முன்னே காட்சியாய் விரிகிறது.

சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்து வந்த 1857 புரட்சிக்கு முதல் சுதந்திரப் போர் என்று பெயரிட்ட வீர சாவர்க்கர் மீது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட இந்தியர்களைத் தூண்டியது, பயங்கரவாதிகளுக்கு இரகசியமாய்த் துப்பாக்கிகள் அனுப்பியது ஆகிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. நாசிக் கலெக்டர் ஜாக்சனின் கொலைக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனையாக அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டு ஆயுள் முழுதும் அந்தச் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்னும், ஜாலியன் வாலாபாக் படுகொலை, மற்றும் பல போராட்டங்களின் விபரங்களோடு, காங்கிரஸ் பிளவு, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மதச் சண்டைகள் எனவும் பல இயக்கங்களைப் பற்றிய விரிவான தகவலையும் தருகிறார் ஆசிரியர்.

க்விட் இண்டியா மூவ்மெண்ட்ல கலந்து கொண்ட பதினெட்டு வயது நிரம்பிய ஹேமூ காலாணி என்னும் சிந்திப்பையன் பிரிட்டனுக்கு எதிரா நிறைய அறிக்கைகளையும் புத்தகங்களையும் விநியோகித்தும், சுக்கூர் வழியாக ஸ்பெஷல் ட்ரெயின் பிரிட்டிஷ் ஜவாங்கலையும் வெடி மருந்துகளையும் ஏத்திண்டு வரப்போவதாக தனக்குக் கிடைத்த தகவலின்படி அதைத் தடுக்க தண்டவாளத்திலிருந்து ஃபிஷ்ப்ப்ளேட்சை அப்புறப்படுத்தும் போது , தான் கூட உதவிய நண்பர்களைத் தப்பிக்க விட்டு தான் மட்டும் மாட்டிக்கொண்டான். அந்த நண்பர்களின் விலாசங்களைக் கொடுத்துவிட்டு அப்ரூவராக இவன் மாறினால் அவனை விட்டுவிடுவதாக பிரிட்டிஷ்காரன் சொன்னபோதும், “நண்பர்களைக் காட்டிக் கொடுப்பதை விட நான் சாவேன்” என்றவன் 1943, ஜனவரியில் தூக்கில் போடப்பட்டான். அவனை இறுதியாகப் பார்க்க வந்த அவனது அம்மாவுக்கு அவன் கூறிய ஆறுதல், ” அம்மா…ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு பகவத் கீதையில் சொல்லி இருக்குன்னு நீ தானே அடிக்கடி சொல்லுவே..! அதனால நீ அழக்கூடாது ” என்றவனின் நெஞ்சுரமும் தீரமும் அவனது தேசப்பற்றை படிக்கும் போதே, மனம் கலங்குகிறது.

நம்ம திருப்பூர் குமரன் போலவே, வங்காளத்தைச் சேர்ந்த  மாதங்கினின்னு ஒரு வயதான பெண்மணி 1929 இல் தனி ஆளாக கவர்னருக்குக் கறுப்புக் கொடி காண்பித்ததற்க்காக ஆறு மாத காலம் சிறை சென்று திரும்பி, மறுபடியும் நடந்த போராட்டத்தில் 1942இல் போலீசால் சுடப்பட்டு இறந்தார். இறக்கும் நேரத்திலும், இறந்த பின்பும் கூட கையில் பிடித்திருந்த கொடியை விடவே இல்லையாம். இதற்குப் பேரும் வீரம் தானே.

அஸ்ஸாம்ல கனகலதான்னு ஒரு பெண் 1942 செப்டெம்பரில் “வெள்ளையனே வெளியேறு” என்று கோஷமிட்டபடி ஒரு பெண்கள் ஊர்வலத்தைத் தலைமை தாங்கிய படி போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துல தேசியக் கொடியை ஏத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சென்றவர்களை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தவும், “கொடியை ஏத்திவிட்டு சென்று விடுவோம்”என்று அவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் தடுக்கவே, ” உங்களால் எங்க உடம்புகளைத்தான் கொல்ல முடியும், எங்க உணர்வுகளைக் கொல்ல முடியாது” என்று சொல்லியிருக்கிறாள். அந்த வாக்கியம் தான் அவள் பேசிய கடைசி பேச்சாக இருந்தது. அதற்குள் அவள் மேல் குண்டு பாய்ந்து அவள் இறந்து விட்டாள்…இது போன்ற உயிரைப் பணயம் வைத்த வீராங்கனைகளை இந்நூல் அடையாளம் காட்டுகிறது.

அன்னியத்துணிகள் இருந்த டிரக்குக்கு முன்னால் நின்று மறியல் செய்ததற்காக, 1930 இல் சையது பாபு கேணு என்கிற மகாராஷ்டிர வாலிபனை வேண்டுமென்றே வெள்ளைக்கார சார்ஜெண்டு டிரக்கை அவன் மேல் ஏற்றிக் கொன்று விட்டான். இதைப் படிக்கும் போது எத்தனை அராஜகத்துக்கு அவர்கள் பலியானார்கள் என்று திடுக்கிட வைக்கிறது மனம்.

கோதாவரி ஜில்லாவில் அல்லூரி சீதாராமராஜு என்பவர் பழங்குடி மக்களை வைத்துப் படை திரட்டி வெள்ளைக்காரப் போலீசையே பலதரம் அச்சுறுத்தினார். கடைசியில் பழங்குடி மக்களுக்கு வெள்ளைக்காரன் கொடுத்த தொல்லை தாங்க மாட்டாமல் தானாகவே சரணடைந்ததும் அவர்கள் அவரைச் சுட்டுத் தள்ளிவிட்டார்கள்.

இது போல நாடு முழுவதும் எல்லா ராஜாதானிகளிளிருந்தும் சுதந்திரத்திற்காக பொங்கி எழுவது என்பது சாமான்ய விஷயமில்லையே.

இதைப் போன்ற இன்னும் ஏராளமான நிகழ்வுகள், உண்மையை அடிப்படையாகக் கொண்டு தகவல் களஞ்சியமாக ‘மணிக்கொடி’ விளங்குவதால், அந்தப் புதினத்தை முழுவதும் படிப்பதால் மட்டுமே முழுமையை உணர முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.

பட்ட துன்பங்களுக்கும், செய்த போராட்டங்களுக்கும் வெற்றியாக…!

சுதந்திர நாளுக்குரிய கோலாகலத்துடன் தில்லி விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளைக்காரர்கள் நிறைய பேர் ஆங்காங்கு சுறுசுறுப்பாகத் தெருக்களில், கடைகளில், ரெயில்வே நிலையத்தில், விமான தளத்தில் என்று கும்பல் கும்பலாய்க் குடும்பங்களுடன் காணப்பட்டார்கள். இந்தியாவை விட்டுக் கிளம்ப நேர்ந்து விட்டதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம் தான் என்று சோர்ந்த அவர்களின் முகங்களைப் பார்த்து கங்காவும், நரேந்திரநாத் பானர்ஜியும், ரமணியும் நினைத்தார்கள்.

பதினான்காம் நாள் இரவிலிருந்தே மக்கள் தெருக்களில் சாரிசாரியாக நடந்து அமைச்சர்கள் ஊர்வலம் செல்ல இருந்த வீதிகளில் இரு மருங்கிலும் கூடத் தொடங்கினார்கள். இந்திய வரலாற்றில் சிறப்பு மிக்க அத்திருப்பம் அன்றிரவு சரியாக மணி பன்னிரண்டு அடித்ததும் தொடங்கியது. பதினைந்தாம் நாளின் விடியல் நோக்கி உலகம் புறப்படத் தொடங்கிய அந்த இருண்ட நேரத்தில் இந்தியா ஒளி பெற்றது.

சுதந்திர நாளைத் தொடங்கி வைத்த ஜவகர்லால் நேரு பேசலானார்…என்று  அவர் பேசிய அருமையான பேச்சை எழுதிவிட்டு,

மவுண்ட் பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர்- ஜெனரலாக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து மக்களின் ஆரவாரத்துடன், நன்றியுரையாக ராஜேந்திர பிரசாத் கூறியதை ” நாம் அடைந்துள்ள வெற்றிக்கு நம் தியாகங்களும், நாம் பட்ட துன்பங்களும் பெருமளவுக்குக் காரணங்களானாலும் , உலகத்துச் சக்திகளும் நிகழ்ச்சிகளின் போக்கும் நமக்கு உதவியுள்ளன என்பதும் உண்மையாகும். பிரிட்டிஷ் மக்களின் ஜனநாயகக் கோட்பாடுகளுடையவும், வரலாற்று மரபுகளுடையவும் உச்ச நிலையே நமது சுதந்திரத்தில் முடிந்தது ”  என்று பதவியேர்புப் பிரமாணம் முடிந்தபின் அமைச்சர்களின் ஊர்வலம் நடைபெற்றது

என்றும், அதைத் தொடர்ந்து கூட்டம் மெல்லக் கலையவும் கரையவும் தொடங்கினாலும், காந்திஜியைப் பொறுத்தவரை

இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆகஸ்ட் 15 ஒரு துக்க நாள். அவர் கனவு கண்ட ஏக இந்தியா, இந்துக்களும்,முஸ்லிம்களும் இணைந்திருக்க சம்மதிக்காததால் அமையவில்லை. என்றும் பேசிக் கொண்டனர்.

நமது இந்தியா வன்முறையும் அகிம்சையும் சேர்ந்ததால் தான் சுதந்திரம் கிடைத்தது என்னும் கருத்தை வலியுறுத்தி மேலும் பல விஷயங்களை விவாதித்தபடியே கங்காவும், நரேந்திரநாத்தும், ரமணியுடன் பேசிக் கொண்டே ” உலக அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுத்தும் இனிமேல் இங்கே இருப்பது அசிங்கம் என்பதை நம் எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து புரிந்து கொண்டும் கவுரவத்துடன் பிரிட்டன் விலகியது பெரிது தான்…அதில் துளியும் சந்தேகமில்லை என்று கங்காதரன் முடிக்கிறான்.

“சாரே ஜஹாங்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ” என்ற இனிய பாடலுடன் கதையின் நிறைவை நேரில் காண்பது போலவே எழுதி இருக்கிறார்.

‘ஒரு பானைச் சோற்றுக்கு சில பருக்கைகள்’ பதம் என்பது போல, முதல் பகுதியின் முக்கியமான பல நிகழ்வுகள் எழுதப் பட்டிருந்தாலும் அதிலும் ஒரு சிறிய பாகத்தை மட்டும் இங்கே எடுத்து எழுதியுள்ளேன். கதையைப் படித்து முடித்ததும், தேசத்தின் மீது ‘பற்று’ நம்மையும் மீறி பற்றிக் கொள்கிறது. மஹா சமுத்திரம் முன்பு நின்று பார்த்தால் அலைகள் அடித்துப் பெருகி வருவது போல ‘நிகழ்வுகள்’ தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கண்டிப்பாக இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புதினத்தை வாங்கிப் படித்துப் பாதுகாக்கும் ஆவல் உருவானால், அதன்மூலம்  நான் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியும்  வீண் போகவில்லை என்று

முடிவுரை:

மனித மனங்களின் உணர்வுகளையும், நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் போதே நாமும் கதாபாத்திரங்களோடு சேர்ந்து பயணிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திய விதமும், ஆசிரியரின் எழுத்தின் பலம் நாவல் முழுவதும் வியாபித்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.எத்தனை விஷயங்கள்….! எத்தனை விவரங்கள்..! படிக்கப் படிக்க ஆச்சரியம் நெஞ்சம் முழுதும் வியாபிப்பது தான் நிஜம்.

பயங்கரவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. அப்படி சாதிக்க முடிந்தாலும் அது தற்காலிகமானதாகத் தானிருக்கும். நிரந்தரமான வெற்றி, அது காந்தி வழி அகிம்ஸா கொள்கையின் மூலமாகத் தான் பெற முடியும் என்பதை வலியுறுத்தி பல வாக்குவாதங்களை சொல்லியிருந்தாலும், இந்தியா முழுக்க முழுக்க அகிம்சை வழியில்தான் சுதந்திரம் பெற்றது என்று சொல்லிவிட முடியாது. சுதந்திரம் பெரும் போராட்டத்தில் மனிதர்கள் அவ்வபோது இரத்தம் சிந்த வேண்டிய நிர்பந்தமும், உயிர்த் தியாகம் செய்யும்படியான கட்டாயமும் உண்டாகிறது. காந்தியடிகளின் அகிம்சையை பின்பற்றினாலும், தீவிரவாதத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என்பது வலியுறுத்தும்படி கதையின் போக்கு அமைந்துள்ளது. பல வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த நிகழ்வுகளை கதையோடு பின்னியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு மேலும் காரணமாயிருக்கிறது.

ராபர்ட் ப்ராஸ்ட் அவர்களின் ‘இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்’ என்னும் சொற்றொடருக்கேற்ப ஆண்டுகள் பல கடந்து கொண்டிருக்கையில், ஆயுட்காலம் முழுதும் நாட்டுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தியாகசீலர்கள் மீட்டுத் தந்த சுதந்திர இந்தியாவை….அறுபத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட ‘பழைமை’ என்ற எண்ணம் மேலோங்கியபடி வளரும் ‘புதுமைத் தலைமுறையினருக்கு’ இந்தியாவின் அருமையையும் தேசப் பற்றின் பெருமையையும் உணரச் செய்ய மீண்டும் ‘மணிக்கொடி’ புதுப் பொலிவோடு பட்டுடுத்தி 2013இல்  இரண்டாம் பதிப்பாக ‘சேது அலமி பதிப்பகம்’ மூலமாக வெளிவருகிறாள் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உறங்கிக் கிடக்கும் விழிகளும், மனமும், இது போன்ற நல்ல நூல்களால்  தட்டித் திறக்கபடட்டும்.

ஆங்கிலேய ஆட்சியில் அடிமை பட்டுக் கிடந்த இந்திய அரசியல் சூழ்நிலையைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு நடந்த உண்மை வரலாறுகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்து கொள்ளும் ஆவலும்,  முதலில் தமிழ் கூட சிறிதும் அறியாத இளைய தலைமுறையினரும் இருப்பதைக் கருத்தில் கொண்டு ‘மணிக்கொடி’ ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு பிரசுரத்திற்கு தயாரான நிலையில் இருக்கிறது.

எனது சிறிய வேண்டுகோள்:

இந்த வரலாற்று நாவலைப் பற்றிய மதிப்புரை எழுத வேண்டும் என்று நினைத்து, ‘மணிக்கொடி’யைப் முழுதுமாகப்  பல தடவைகள் படித்துப் பார்த்ததும், அத்தனை நிகழ்வுகளையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாலும், என்னால் ஆசிரியை எழுதி இருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு மேற்கோளாகக் கூட சொல்ல முடியவில்லை. அது கடலுக்கு அருகில் நின்று ‘வேடிக்கைப் பார்க்கும்’ மன நிலையை மட்டும் தான் எனக்குள் உண்டுபண்ணுகிறது. புதினம் அவ்வளவு பிரம்மாண்டம். அதைப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும். ஆதலால், ‘மணிக்கொடி’ என்ற இந்திய வரலாற்றுக் களஞ்சியத்தை உங்களுக்கே ‘சொந்தமாக்கிக் கொள்வதே’ உகந்தது என்பது எனது அன்பான வேண்டுகோள்.

அதே சமயம். நமது நாடு சுதந்திரம் அடைந்து, பிறகு இன்று வரையில்  நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கூட வரலாற்றில் இடம் பெறத் தகுதியானவை தான். அதையும் தக்க ஆதாரங்களுடன் “மணிக்கொடி” யின் தொடராக வர வேண்டும் அதையும் ஆசிரியை எழுத முன்வரவேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு எனது  கோரிக்கையை இத்துடன் வைத்து எனது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். ஜெய்ஹிந்த்.

          வந்தே மாதரம்.! வந்தே மாதரம்.!வந்தே மாதரம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *