சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

0

நூலாய்வு !

சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

வில்லவன் கோதை

நூலாசிரியன் ஜே மு சாலி

வெளியீடு
இலக்கியவீதி
52 சௌந்தர்யா குடியிருப்பு- அண்ணா நகர் மேற்கு சென்னை 600101
விலை ரூ 200

sali 02

சிங்கப்பூர் – மலேசியத் தந்தை தமிழவேள் கோ சாரங்கபாணி என்றொரு நூலை சென்னை இலக்கியவீதி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஐம்பதுகளில் பிரபலமான சிறுவர் இதழ் கண்ணன் கண்டெடுத்த ஜெ மு சாலியை அறுபதுகளில் சாரங்கபாணியின் சிங்கப்பூர் தமிழ் முரசு தத்தெடுத்துக்கொண்டது.எவர்க்கும் கிடைப்பதற்கறிய எழுத்துலக வாய்ப்பு சாலிக்கு கிடைத்தது .தொள்ளாயிரத்து முப்பத்தைந்தில் துவங்கப்பட்ட தமிழ் முரசில் முப்பது வருடங்களுக்குப்பிறகு இணைந்த ஜே மு சாலியை தமிழ்முரசு ஒரு பத்திரிக்கையாளனாக்கிற்று.

அவர் எழுதிய இந்த நூல் நாடுகடந்து சிதறிக்கிடந்த ஒரு இனத்தை கோ .சாரங்கபாணி என்ற தனிமனிதன் செப்பனிட்ட சீர்திருத்த வரலாற்றை விரிவாக பேசுகிறது.

தமிழவேள் கோ சாரங்கபாணி என்ற இந்த மனிதர் யார்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிழவர்களைக்கேட்டால் ஜெமினிகணேசனுடன் மிசியம்மாவில் நடித்த நகைச்சுவை நடிகர் சாரங்கபாணியை சுட்டிக்காட்டுவர். இன்றைய இளைய தலைமுறையோ அனேகமாக தோளை உயர்த்தி உதட்டைப்பிதுக்கக்கூடும்.

ஊடகங்களின் எழுச்சிக்குபிறகு நிலவரம் சற்றே மாறியிருக்கிறது. தமிழர்கள் இந்தியாவைத்தாண்டி பல்வேறு தகவல்களை இப்போ தெல்லாம் அறிந்திருக்கிறார்கள் இதற்கு இந்தியாவின் கதவுகள் இப்போது திறந்திருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். .அதேசமயம் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கோட்டையிலிருந்து கோடம்பாக்கம்வரை ஒவ்வொருகணமும் நம்மை கூர்ந்து கவனித்துத்தான் வந்திருக்கிறார்கள் அதற்கு பெற்றதாய் நாட்டின் பெரும்பிணைப்பாய்கூட இருக்கலாம்.

சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றுபட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணிந்திருந்த நேரம். வெள்ளையர் மலாய்காரர் சீனர் யூரேஷியர் ஆகிய கலப்பினத்தாரிடையே தமிழர்கள் சிக்குண்டிருந்த சமயம்.

தமிழ் நாட்டில் திருவாரூரில் பிறந்த விஜயபுரம் கோ சாரங்கபாணி தனது இருபத்தியோராவது வயதில் பிழைப்பைத்தேடி சிங்கப்பூர் வருகிறார் அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரம் இருந்தவர்களுக்கு அக்கரை புல்வெளிகளாக காணப்பட்டது சிங்கப்பூரும் மலேசியாவுந்தான்.

கூலிக்கு ஒரு கடையில் கணக்கு எழுத ஆரம்பித்த சாரங்கபாணி எழுத்துலகில் ஈர்க்கப்பட்டு காலப்போக்கில் முன்னேற்றம் வார இதழில் இணைகிறார்.

அடுத்தடுத்து தமிழ் ஆங்கில ஏடுகளை துவக்கி துவண்டுகிடக்கும் தமிழற்காக தமிழ் முரசொலிக்கிறார்.

‘’ பத்திரிக்கை துவங்கி பெரும் பணம் திரட்டுவது எம் நோக்கமல்ல. உலகச்செய்திகளை உடனுக்குடன் தமிழர்கள் அறிந்து கொள்ளச்செய்வது முதல் நோக்கம். வேலையற்று இருக்கும் ஒருசில தமிழற்காவது வேலை கொடுப்பது இரண்டாவது நோக்கம். ஒருவர் வெளியீடு ஒன்றுக்கு 200 தமிழ் முரசு பிரதிகள் விற்றால் அவருக்கு மாதம் 12 வெள்ளி லாபம் கிடைக்கும் ஏறக்குறைய இவ்வளவுதான்ஒரு முனிசிபல் தொழிலாளின் சம்பளமும் ‘’ என்று தமிழ்முரசின் தோற்றத்தை மாதம் மும்முறையாக வந்த முதல் ஏட்டில் சாரங்கபாணி பேசுகிறார்

சாரங்கபாணியின் சமூக சீர்திருத்தம் அன்னியமண்ணில் சொந்த மக்களிடையே உருவெடுக்கிறது..

இந்திய தேச விடுதலை வேள்வியை தூண்டிவிட பாரதியாரின் எழுத்து பயன்பட்டது. உறக்கத்திலிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பிட தந்தை பெரியாரின் குடியரசு துணைநின்றது..

சிங்கப்பூர் மலேசியத்தீவுகளில் சொல்லொண்ணா துயருடன் சிதறிக்கிடந்த தமிழ் சமுதாயத்தை உசுப்பிவிட சாரங்கபாணியின் தமிழ் முரசு துணைநின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழர்களை திரட்டி மொழிக்கும் மக்களுக்கும் அன்னியமண்ணில் கிடைப்பதற்கறிய அங்கீகாரம் பெற்றுத்தருகிறார் சாரங்கபாணி.

இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவரும் முஸ்லீம் பெருமக்களிற் ஒருசிலர் இன்றும் பாக்கிஸ்தான் கனவுகளில் மிதப்பதை கண்டிருக்கலாம்.

அதற்கு மாறாக சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர்களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெருவோம் என்ற வழியில் செயல்பட்டவர் சாரங்கபாணி. சாதியற்ற தமிழற்கு ஆண்டுதோரும் தைத்திருநாளை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தவர் தமிழவேள் சாரங்கபாணி. இவர் நடத்திய ஒவ்வொரு தமிழ் இன விழாக்களிலும் பிரதமரையும் மந்திரிகளையும் இழுத்துக்கொண்டது இவரது வெற்றிக்கான யுக்தி. தந்தை பெரியாரின் அடியொற்றி அண்ணாவைப்போல் ஆட்சியாளரை அரவணைத்து மக்களுக்கும் மொழிக்குமான காரியங்களை சாதித்துக்கொண்டவர் இந்த தமிழவேள்

256 பக்கங்களில் அரிய நிழற்படங்களுடன் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லாம். சாலியால் எழுதப்பட்டது என்பதைக்காட்டிலும் சாலியால் பல்வேறுதகவல்களை மாலையாக தொடுக்கப்பட்டது என்பதே பொறுத்தமாக இருக்கும்

இது சாரங்கபாணி என்ற தனிமனிதரின் சுய வரலாறல்ல.

சாரங்கபாணி கப்பலேறி சிங்கப்பூர் வந்தார். கடையில் சம்பளத்துக்கு கணக்கெழுதிய சாரங்கபாணி காலப்போக்கில் பத்திரிக்கை தொழிலில் நுழைந்தார். ஒரு சீன மாதை காதலித்து மணந்தார்.ஆறுமக்களைப் பெற்ற.சாரங்கபாணிக்குப்பிறகு அவர் துவக்கிய தமிழ் முரசை அவர் துணைவியார் தொடர்கிறார்

இந்த நூலில் சாரங்கபாணியின் சுய வரலாறு இவ்ளவுதான்

மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி தீவு முழுதும் சிதறிக்கிடந்த தமிழினத்தை மற்ற இனத்தவர்களுக்கிணையாக மாற்றியமைக்க தினம் தினம் அவர் எடுத்த சிரத்தை இந்த புத்தகத்தின் பெரும்பகுதியில் இடம் பிடித்திருக்கிறது. வெள்ளையர் ,மலாய்காரர் ,சீனர் ,யூரேஷியர் என்ற நான்கு வகை இனமக்களைக்கொண்ட ஒரு சமூகத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் உரிய அங்கீகாரத்தை ஆட்சியாளர்களோடு இணக்கமாக பயணித்து பெற்றுத்தந்த்தை இந்த நூல் பெருமளவில் விவரிக்கிறது.

சாரங்கபாணி ஒரு நாத்தீகர் இல்லையென்றாலும் கோவில் குளங்களை சுற்றுபவரும் அல்ல. மொழி இனம் பண்பாடு இவையனைத்திலும் தந்தை பெரியாரின் கருத்துகளையே எதிரொலித்தார்..புலம் பெயர்ந்த தமிழற்கு ஆட்சியாளருடன் இணக்கமாக இருந்து குடியுரிமை பெற்றது, தமிழுக்கு கல்விக்கூடங்களிலும் ஆட்சியிலும் சமமான அங்கீகாரத்தை பெற்றது இவரது சாதனைகள்.தந்தை பெரியாரைப்போல் சரங்கபாணி தமிழர் வாழ்வில் நுழையாத இடமே இல்லை.சாரங்கபாணியின் சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் பேசுகிற இந்த புத்தகம் அதற்கான ஆவணங்களாக நாற்பதாண்டு தமிழ்முரசு தலையங்க எழுத்துகளையே சாட்சியாக்கியிருக்கிறது. இந்த சாதனை சரித்திரத்தில் அவருக்கு தோள்கொடுத்த பல்வேறு பிமுகர்களின் வாக்குமூலங்கள் கூட ஆவணமாகியிருக்கிறது.சாரங்கபாணியின் தமிழ்முரசு தலையங்கங்கள் பிரமிக்கத்தக்கவை. இன்றைய கல்விக்கூடங்களில் இடம் பெறவேண்டியவை. எளிய நடையில் ஏரளமான தகவல்களுடன் எழுதப்பட்ட இந்தநூல் முக்கியமாக படிப்பதற்கு நாவலைப்போன்று சுவாரஸ்யமானது.

உலகளாவிய பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வழியேற்பட்டிருக்கும் இந்த காலங்களில் நம் பக்கத்து தேசங்களான சிங்கப்பூர் மலேசியாவின் கடந்த கால நிகழ்வுகளை நாம் அறிந்திருப்பது நல்லது. அதற்கு சாலியின் நூல் துணை நிற்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.