மேகலா இராமமூர்த்தி

ஐம்பெருங்காப்பியங்களில் கதை அடிப்படையில் காலத்தால் மூத்ததும் காப்பியத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதுமான தலைசிறந்த நூல் ‘சீவக சிந்தாமணி’ ஆகும். சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி இக்காப்பியத்தைச் சமண முனிவரான திருத்தக்க தேவர் தமிழில் இயற்றியுள்ளார். ’சிந்தாமணி’ என்பதற்கு நெஞ்சில் பொதிந்துவைத்துக் காக்கவேண்டிய தேவருலக மணி என்று பொருள் கூறுவர்; அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்னும் பொருளில் இந்நூலுக்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பிய ஆசிரியர் என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்.  இந்நூலின் சிறப்பை நோக்கும்போது இப்பெயர் இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமே என்பதில் சற்றும் ஐயமில்லை.

இக்காப்பியத்தின் தலைவனாகிய ’சீவகனுக்கு’ அவனுடைய தாயாகிய ‘விசயை’ முதன் முதலாக இட்டு விளித்த பெயர் ’சிந்தாமணி’ என்பதே ஆகும். ’சீவகன்’ என்னும் பெயர்  பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றிய ‘சீவ’ என்னும் வாழ்த்துச்சொல் கேட்டு ’கந்துக்கடன்’ என்னும் வணிகன் (சீவகனின் வளர்ப்புத் தந்தை) இட்ட பெயரே என்பது இக்காப்பியம் கூறும் செய்தியாகும்.

மனித வாழ்வின் பண்பாகவும், பயனாகவும் கருதப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் இச்சிந்தாமணிக் காப்பியம் இனிதே எடுத்துரைப்பதனால் இதனை ’முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்றும் கூறுவர்.

சிந்தாமணியை ’விருத்தப்பா’ என்னும் யாப்புநடையில் திருத்தக்க தேவர் அழகுற அமைத்துள்ளார். இவ்விருத்தப்பா சிறந்த ஓசைநயமும், சொல்லழகும் உடையது. செய்யுள் இயற்றுவதிலே ’விருத்தம்’ என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும். அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் தேவரின் பாணியையே (பெரும்பாலும்) பின்பற்றி அதில் வெற்றியும் கண்டன எனலாம்.

இவ்விருத்தப்பாவை தேவருக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர் கம்பரே ஆவார்; அவருடைய கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் படைக்கப்பட்டு இன்றளவும் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் தமிழ்கூறு நல்லுலகில் பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கம்பருக்கு ‘inspiration’ திருத்தக்க தேவரே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? ‘சிந்தாமணிக் கடலில் சிறிது முகந்துகொண்டேன்’ என்று கம்பநாடனே கூறியுள்ளதாக ஒரு செவிவழிச் செய்திகூட உண்டு.

இனி, சீவக சிந்தாமணிக் காப்பியம் குறித்துச் சில செய்திகள் நம் சிந்தனைக்கு…

சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக மொத்தம் 13 இலம்பகங்கள் உள்ளன. இலம்பகம் என்பது அத்தியாயம் என்பதுபோல் காப்பியத்தின் உட்பிரிவைக் குறிப்பதாகும்; இந்நூலில் மொத்தம் 3145 பாடல்கள் உள்ளன.

காப்பியத்தின் முதல் பகுதியாக வருவது ’நாமகள் இலம்பகம்’. இவ்விலம்பகத்தில் ’ஏமாங்கதம்’ என்றழைக்கப்படும் நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் (சீவகனின் தந்தை), விசயை (சீவகனின் தாய்) ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் அழகிய பாடல்கள் வடிவிலே விளக்கப்பட்டுள்ளன.

அரசனாகிய சச்சந்தன் அவனுடைய அமைச்சனான கெடுமதி படைத்த கட்டியங்காரனால் அநியாயமாகக் கொல்லப்பட்டது; கருவுற்றிருந்த அரசமாதேவி ’விசயை’ மயிற்பொறி எனும் வானஊர்தி ஒன்றில் பறந்து சென்று அரண்மனையில் பிறக்கவேண்டிய அரசிளங்குமரனான சீவகனைச் சுடுகாட்டில் ஈன்றது; பின்பு கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தை சீவகனைப் பத்திரமாக எடுத்துச்செல்வதைக் கண்டபின் அவள் துறவறம் பூண்டது எனப் பல துன்பியல் நிகழ்வுகளை வரிசையாகப் பட்டியலிட்டு அவலச்சுவையை நாம் முற்றாகச் சுவைக்குமாறு செய்துவிடுகின்றது இந்நாமகள் இலம்பகம். எனினும் இதில் இடம்பெற்றுள்ள ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் கூறும் பாடல்கள் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைகளாக இனிக்கவே செய்கின்றன; அவற்றிலிருந்து ஒன்று நாம் சுவைக்க:

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென்று இசையால்திசை போயது உண்டே.” (நாமகள் இல: பாடல்: 31)

நன்றாகக் காய்த்த தென்னைநெற்றானது (தேங்காய்) தான் கீழே வீழும்போது கமுகின் உச்சியிலுள்ள தேன்போலும் இனிய நீரையுடைய குலையைக் கீறி, பலாப் பழங்களைப் பிளந்து பின்னர்த் தேமாங்கனிகளைச் சிதறச்செய்து, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் வளம்பொருந்திய நாடு ஏமாங்கதம் என்று இந்நாட்டின் வளம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

நாமகள் இலம்பகத்தை அடுத்து வரும் இலம்பகங்களில் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைத் தன் பல்வேறு திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காப்பிய நாயகன் சீவகன் மணம் செய்துகொள்வது விரிவாகப் பேசப்படுகின்றது. இத்தனைத் திருமணங்களை நாயகன் (அலுக்காமல்!) செய்துகொள்வதாலேயே இந்நூலுக்கு ‘மணநூல்’ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பின்னர்த் தன்னருமைத் தந்தையைக் கொன்று ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிய கொடுங்கோலனான கட்டியங்காரனைத் தன் தாய்மாமன் கோவிந்தனின் துணையோடு போரில் வீழ்த்தித் தன் நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்றான் சீவகன்; நாட்டின் மன்னனாகி நல்லாட்சி புரிகின்றான். நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறுகின்றான்.

image descriptionஇக்காப்பியத்தைப் படிப்போர்க்கு ’ஒரு சமணத் துறவி அறக்கருத்துக்களையும், துறவுநெறியையும் வலியுறுத்திக் காப்பியம் படைப்பதை விடுத்துக் ‘காமச்சுவை’ மிகுந்த ஓர் காப்பியத்தை இயற்றுவானேன்?’ என்ற ஐயம்கூட எழலாம். தேவர் இக்காப்பியத்தை இயற்றியதற்கான காரணமாகச் சொல்லப்படுவது….ஒரு சமயம் திருத்தக்க தேவரிடம் மற்ற புலவர்கள், ’துறவியான உம்மால் துறவறக் கருத்துக்களை மட்டுமே பாட இயலும்; அகப்பொருள்சார் பாடல்களைப் பாட இயலாது’ என்று இகழ்ந்துகூற அதனைப் பொய்யாக்கவே அவர் ‘அகப்பொருள்’ செய்திகள் செறிந்த இக்காப்பியத்தைப் படைத்தார் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள். கவிஞர் என்றானபின் காதலைப் பாடவேண்டிய கட்டாயம் காவியுடை தரித்தவர்க்கும் வந்துவிடுகின்றது பாருங்கள்!

சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது அஃது திருமால் அவதாரக் கதைகளில் ஒன்றான கண்ணன் கதையையே பெரிதும் ஒத்திருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் ’இராச லீலைகள்’ பல நிகழ்த்தினான்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனைத் தொழில்களும் செய்துகொண்டே அவன் உலகப் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்திக் காட்டினான். அதுபோலவே இக்காப்பியத் தலைவன் சீவகனும் பல மகளிரை மணக்கின்றான்; போர் செய்கின்றான்; அரசாளுகின்றான்; மக்களைத் தீங்கின்றிக் காக்கின்றான். இத்துணைச் செயல்களுக்கு மத்தியிலும் அவன் வாழ்வின் நிலையாமையை நன்குணர்ந்தவனாய் ’படநாகம் எப்படித் தன் தோலை உரிக்குமோ’ அதுபோல் உலகப்பற்றை உரித்துவிட்டுத் தன் மனைவியர் எண்மருடனும் துறவு பூணுவதாகவும், தவமியற்றி வீடுபேற்றை அடைவதாகவுமே காப்பியத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய ’முத்தி இலம்பகம்’ பல அரிய அறக்கருத்துக்களை, வாழ்வியல் உண்மைகளை எடுத்தியம்பி மனித மனத்தை பக்குவப்படுத்துகின்றது. ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் கூறும் ஓர் இனிய பாடல்..

உள்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம்
தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதின் தரித்தலை யொழுக்கம் என்பவே.” (முத்தி இல: பாடல்: 2845)

உண்மைப் பொருள் எதுவென உணர்தலே ஞானம் எனப்படும். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சியாகும்; அத்தகைய ஞானத்தையும், தெளிந்த காட்சியையும் ஒருவன் தன் மனத்திலே சிறப்புற நிலைபெறச் செய்வதே ஒழுக்கம் ஆகும் என்கிறார் திருத்தக்க தேவர். ஞானம், காட்சி, ஒழுக்கம் இம்மூன்றினையும் மும்மணிகள் (இரத்தினத்திரயம்) என்பர் சமணர்கள். இப்பாடலின் கருத்தை நோக்கும்போது,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 355) 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. (குறள்: 351)

 

என்ற இரு குறள்கள் நம் நினைவுக்கு வருகின்றன அல்லவா?

இவ்வினிய தமிழ்க் காப்பியத்தைக் கற்று அதன் சுவையில் மனத்தைப் பறிகொடுத்த வெளிநாட்டுத் தமிழறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கிரேக்க மொழியின் மாகாவியங்களான ‘இலியட், ஒடிசி’ ஆகியவற்றிற்கு இணையானது இச்சிந்தாமணிக் காப்பியம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ’தேம்பாவணி’ என்னும் தீந்தமிழ்க் காவியம் படைத்த வீரமாமுனிவர், இக்காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் ’தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்’ என்று வியந்து பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்கும், பத்துப்பாட்டிற்கும் அற்புதமான உரை வரைந்தவரும், தமிழ்ச் சான்றோரால் ’உச்சிமேல் வைத்துப் போற்றப்படுபவருமான’ பெரும்புலவர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு எண்ணரும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் ஒப்பற்ற காப்பியமாம் சீவக சிந்தாமணியை நாமும் படித்தின்புறுவோமே!

படத்திற்கு நன்றி: https://www.nhm.in/shop/978-81-8493-465-6.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிந்தாமணிக் கடலில் ஒரு சிறு பயணம்!

  1. ///செய்யுள் இயற்றுவதிலே ’விருத்தம்’ என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும்///

    புதியதாகத் தெரிந்து கொண்ட தகவல் இது. நன்றி மேகலா.  
    ஏமாங்கதம் என்ற நாடு கற்பனை நாடோ? சீவக சிந்தாமணி தவிர வேறெங்கும் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லையே.  நல்லதொரு கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பளித்தற்கு நன்றி.

    அன்புடன் 
    …..தேமொழி

  2. ’சீவக சிந்தாமணிக் காப்பியம்’ வடமொழி நூல்களான சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி போன்றவற்றின் தழுவலாகத் தமிழில் திருத்தக்க தேவரால் எழுதப்பட்டுள்ளது. ஆகவே இக்கதையின் பாத்திரங்கள், ஊர்ப் பெயர்கள், நாட்டின் பெயர்கள் ஆகியவற்றையும் தமிழ் மரபுக்கேற்ப ஆசிரியர் மாற்றியமைத்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் ‘ஏமாங்கதம்’ என்ற தமிழ்ப் பெயரின் வடமொழி மூலம் என்ன என்று தெரிந்தால்தான் அந்நாடு உண்மையானதா அல்லது கற்பனையான ஒன்றா என்று தெளிவாகச் சொல்லமுடியும். அதுபற்றிய தகவல் ஏதும் இப்போது கிடைக்காததால் தீர்மானமாக ஏதும் சொல்ல இயலவில்லை தேமொழி. கட்டுரையை வாசித்துக் கருத்துரைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *