வெ. திவாகர்

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

இது தமிழின் தோற்றத்தைப் பற்றிய பாரதியின் பாட்டு. மகாகவி சுப்பிரமணிய பாரதி முக்காலமும் உணர்ந்த ஒரு சித்தன் என்பதில் அடியேனுக்கு அழிக்கவொண்ணாத எண்ணம் உண்டு. அவன் சொல்படிதான் இப்போதும் தமிழ் எனும் மொழியை உணர்கிறேன். எதிர்காலத்திலும் இந்த எண்ணம் மாறாது. இந்த எண்ணத்துக்கு பாரதிக்கு முன்னமேயே இன்னொன்று ஒரு விதையை என் மூளைக்குள் போட்டுவிட்டது.

சின்ன வயதில் அகத்தியர் என்றொரு படம் பார்த்தேன். அப்போது எனக்கு அது நல்லதொரு படமாகவும் சில நல்ல பாடங்களும் கற்றுத் தந்தது என்பதையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அகத்தியரின் புராணக் கதையை விடுங்கள். அவர்தான் தமிழைச் செம்மைப்படுத்தியவர் என்பதை அப்படம், சில காட்சிகள் மூலம் நமக்கு உணர்த்தும். அப்போது அந்தப் படத்தில் அகத்தியருக்குத் தொல்காப்பியர் என்றொரு சீடர் இருந்ததாகவும் அவர் மூலம் தமிழில் இலக்கணம் வகுத்ததாகவும் கூறுவர்.

இந்தத் தொல்காப்பியம் பற்றிப் பள்ளியில் சரிவரப் படிக்க முடியாத சூழ்நிலை. இதனால் பள்ளியில் தமிழ் சரியாக எனக்குக் கற்பிக்கப்படவில்லை என்று நான் சொல்ல முடியாவிட்டாலும் அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் இலக்கணம் சரியாக எனக்கு ஏறவில்லை என்று சொல்லலாம். தொல்காப்பியம் மட்டுமல்ல, சங்கப் பாடல்கள், காப்பியங்கள் இவை எல்லாமே காலத்தின் போக்கில் கற்றுக் கொண்டவை. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இந்தக் காலத்தில் தமிழ்ப் பள்ளியளவில் கூட கற்றுத் தரமுடியாத சூழ்நிலையில் நம் மொழி இருக்க, அந்த மொழியைச் சான்றோர்கள் மூலம் எப்படிக் கற்றுத் தெளிவது என மாபெரும் கேள்வி நம் முன் எழுவது கூட இயற்கைதான். இதனால் மொழியளவில் நம் பிள்ளைகள் வாழ்க்கை போகிற போக்கிலேயே சந்தர்ப்பம் நேரிடும்போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கற்றுத் தெளிய வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஆனால் இவர்களுக்கு நல்லாசிரியர் வேண்டும், விவரமான தெளிவான தமிழில் அதே சமயம் எளிமையாகக் கற்றுத் தர முடிகின்ற தமிழாசிரியர்கள் வேண்டும். பள்ளி – கல்லூரி நிலை வேறு, பள்ளி நிலையைத் தாண்டிய வாழ்க்கை நிலை வேறல்லவா?

இது போன்ற சமயங்களில்தான் பேராசிரியர் பாண்டியராஜன் போன்றோரின் உதவி கிடைக்கின்றது என்பது மிக மகிழ்ச்சியான செய்தியாகும். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்தவர், தற்சமயம் எளிய விதத்தில் சங்கத் தமிழுக்கும் தொல்காப்பியத்துக்கும் விரிவுரையாகத் தந்து உதவி வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு தொல்காப்பியத்துக்கான விரிவுரையைத் தந்துள்ளார். படித்துப் பயனுற வேண்டியதாகும். https://www.dropbox.com/s/ve5q488dy5yaizx/THOLCON-1B.doc இதோ ஒரு சின்ன தொல்காப்பிய விளக்கம் – உங்களுக்காக அவர் தொகுப்பிலிருந்து யூனிகோட்’இல் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடித்து அந்த அடி இடம்பெறும் அதிகாரம் (எழுத். (எழுத்து), சொல், பொருள்) கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அதிகாரத்தில் அச் சொல் இடம்பெறும் இயலின் சுருக்கப்பெயர் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த இயலில் அச் சொல் இடம்பெறும் நூற்பா எண் கொடுக்கப்படும்.

வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு நூற்பாவின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
எச்சத்து (3)
சாவ என்னும் செய என் எச்சத்து – எழுத். உயி.மயங்:7/1
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே – எழுத் 7/2
செய்து என் எச்சத்து இறந்த காலம் – சொல். வினை:42/1
பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை – பொருள். கற்:5/37
எச்சத்து என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
கிழவோள் செப்பல் கிளவது என்ப – பொருள். கற்:6/43
இதில் ‘என்ப’ எனும் சொல் அடியின் இறுதிச் சொல்லாயினும், அது அந்த நூற்பாவின் இறுதி அடியாக இருப்பதால் அடுத்த அடி கொடுக்கப்படவில்லை.

இலக்கணம் படிப்பது என்பது (என்னைப் போல உள்ள) சாதாரணமானவர்களுக்குக் கஷ்டம்தான். ஆனால் சரியான வகையில் சொல்லிக் கொடுக்கும் படிப்பு கிடைப்பது அரிது. அப்படி கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வோம். பேராசிரியர் பாண்டியராஜா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து மகிழ்கிறோம். அவருடைய தமிழ்ச் சேவைகளுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கடைசி பாரா: ஶ்ரீரங்கம் மோகனரங்கனின் தீபாவளி ‘சரவெடி’

என்ன தேடுகிறாய்?
பட்டாசுப் பொட்டலமா? பைத்தியமே!
புத்தகத்தைத் தேடிப் படி.
படித்ததை நட்புடனே சொல்.
ஆகாத அஞ்ஞான கொல்லிருளுக்கே
அது ஒன்றே அணுகுண்டாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *