மு​னைவர் மு.பழனியப்பன்

பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அழகியல் திறனாய்வு பெருவளர்ச்சியுடன் திகழ்ந்தது.  நவீனத்துவ திறனாய்வுகளில் அழகியல் திறனாய்வு முன்னணி வகித்தது, ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அழகியல் திறனாய்வாளர்கள் அழகுணர்வு என்பதே படைப்பின் நோக்கமும் அடிப்படையும் என்று கருதினர். இமானுவல் கான்ட், ஆஸ்கர் வொயில்டு, ஐhன் ரஸ்கின் போன்றோர் அழகியல் சார்ந்து இயங்கிய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் ஆவர்.

பழங்காலத்திலேயே எகிப்து, இந்தியா, ரோம், சீனா போன்ற பல நாடுகளில் அழகுணர்வு என்பது தனித்துவம் மிக்கக் கலைக்கூறாக மக்களால் விரும்பப்பட்டுள்ளது. கட்டிடம், ஓவியம், நாட்டியம் போன்றவற்றில் அழகுணர்வைத் தனித்துவமான நிலையில் அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலக்கியப் படைப்பாளர்களும் அழகுணர்வு வயப்பட்டுப் படைப்புகளைப் படைத்தளித்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் எழுந்த ரசக் கோட்பாடு, நாட்டிய சாஸ்திரம் போன்றன அழகியல் தன்மை உடையனவாகும். தமிழில் தொல்காப்பியத்தில் இடம்பெறும் உவம இயல், செய்யுளியல், மெய்ப்பாட்டியல் போன்றன முழுக்க முழுக்க அழகியல் சார்ந்தன. தொடர்ந்து வந்த தமிழ் இலக்கியங்களில் அழகுணர்வு என்பது போற்றப்பட்டு வந்துள்ளது.

~~அழகியல் திறனாய்வு என்பது இலக்கியத்தை அழகுடையது, அழகற்றது – சுவையுடையது, சுவையற்றது – என்று உணர்த்துவது,  இலக்கியப்படைப்பின் தனித்த பாணி, நாகரீகம், வடிவழகு ஆகியன குறித்து அறிவது, மனிதர்களின் நம்பிக்கை, மகிழ்வு துயரம் ஆகியன எவ்வாறு ஒரு படைப்பில் வெளிப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவது  மனித வாழ்க்கை என்பது அதிக அளவிலான அழகியல் கூறுகளைக் கொண்டது என்பதால் அழகியல் ஆய்விற்கு வளமான வாய்ப்புகள் அமைகின்றன.

அழகியல் ஆய்வு என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத் தன்மையில் உள்ள கலைத்துவத்தை வெளிப்படுத்துவது, ஏன் படைப்பின் சில பகுதிகள் அழகாக உள்ளன, ஏன் சில பகுதிகள் அழகுணர்வற்று உள்ளன என்று உணர்த்துவது, இவற்றோடு படைப்பினுள் பயன்படுத்தப்பட்டுள்ள வலிமையான, மென்மையான கலாச்சாரக் கூறுகளை உற்று நோக்குவது என்ற நிலையில் பல கோணங்களை உடையதாக உள்ளது. பின்வரும் நோக்கங்களை உடையதாகவும் இவ்வாய்வு அமைகின்றது.

•    படைப்புக்கான பின்புலத்தினை அறிவது.
•    இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் எவ்வகை படைப்புச் செயல்பாடு நிகழ்ந்துள்ளது என்று கண்டறிதல்;
•    அழகியல் உணர்வினை ஊட்டக் கூடிய உத்திமுறைகள் எவ்வாறு கையாளப்பெற்றுள்ளன என அறிவது.
•    படைப்பினுள் பொதிந்து வைக்கப் பெற்றுள்ள சமுதாய மதிப்புகள், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள் முதலானவற்றை அறிதல்
•    படைப்;பினோடு தொடர்புடைய பிற கொள்கைகள், மரபுகள் போன்றவற்றை உணர்தல்
•    படைப்பினால்  ஏற்படும் பயனை உணர்த்தல்

போன்ற நோக்கங்களை உடையதாக அழகியல் ஆய்வு அமைகின்றது.

~~உருவமே முதன்மையானது. அதுவே இலக்கியத்திற்குக் கலையழகைத் தரக்கூடியது என்பதும், இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படிச் சொல்லப்பெற்றிருக்கிறது என்பதே பார்க்கப் பட வேண்டும் என்பதும் அழகியல் திறனாய்வின் அடிப்படையாகும். தோற்றத்தின் திரட்சியும், நளினமும் லயமும், முதலில் ரசிக்கப்பட வேண்டும். அதன இனிமையே ஒரு சுகானுபவம் என்று ரசனையை முதன்மைப் படுத்துகிறது இத்திறனாய்வு. பெரும்பாலும் மனப்பதிவு முறையிலேயே இது கூறப்படுகிறது. முக்கியமாக சொல்லிலும் ஓசையிலும் காணக் கூடிய ஒருவித ஒழுங்கமைவு,தொனி, பொருட்சுழற்சி, உணர்ச்சி வடிவங்கள், உவம, உருவகங்கள், ஆர்வத் தூண்டல்கள் முதலியவற்றை ரசனைக்குரிய பகுதிகளாக இது விளக்கவும் வருணிக்கவும் செய்கின்றது,  என்று அழகியல் திறனாய்விற்கு விளக்கம் அளிக்கிறார் தி.சு. நடராஜன்.

“அழகியல் திறனாய்வு என்பது ரசனை முறைத் திறனாய்வாக தமிழ்த்திறனாய்வுப் போக்கில் நிகழ்த்தப் பெற்று வந்துள்ளது. கம்பராமாணயம் பற்றிய ரசனை முறைத்திறனாய்வுகள் தமிழில் குறிக்கத்தக்க இடம்பெறுவனவாகும். ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தம் போன்ற அறிஞர்களின் பெரும் பட்டியல் கம்பராமாயணம் பற்றிய ரசனைமுறைத் திறனாய்வுக்கு உள்ளது. ~~இலக்கிய ரசனைக்குக் கவிதையே இவர்களுக்கு உகந்ததாக இருந்தது. எளிமை,தாளம், லயம், உணர்வு, சொல் இவற்றிற்கெல்லாம் கவிதையே இடம் தருவதாக இவர்களுக்குப்பட்டது. அதிலேயே லயித்துப் போய்ப் பொருள் விளக்கம் (முக்கியமாக பொழிப்புரை) தருவது இவர்கள் வழக்கம்” என்று ரசனை முறைத் திறனாய்வாளர்கள் பற்றிய மதிப்புரையை வழங்குகிறார் தி.சு நடராஜன்.

~~கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரஸிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்துவிடுகிறார்கள்,  என்ற அமைப்பில் ரசனைமுறைத் திறனாய்வுகள் கம்பராமாயணத்திற்கு அமைந்தன.

ஓர் இலக்கியத்தை ரசிப்பது என்ற நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டது அழகியல் திறனாய்வு. ரசனை முறைத் திறனாய்வு என்பது பாராட்டு முறைத் திறனாய்வு வயப்பட்டதாக அமைந்துவிட அதிலிருந்து வேறுபட்டு அமைவது அழகியல் திறனாய்வாகின்றது. கம்பராமாயணம் காப்பியப் படைப்புகளில் மிக முக்கியமானது. அதன் அளவாலும், கவிவளத்தாலும் நிலையான இடத்தைத் தமிழ்க்காப்பியப் பகுதியில் பெற்றிருக்கிறது. குறிப்பாக இதனுள் இடம்பெறும் சுந்தரகாண்டம் என்பது அழகியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டமைகின்றது.

நவீனத்துவ ஆய்வுகள் வாசகனுக்கு முக்கிய இடம் தருகின்றன. வாசகர்களால் சுந்தரகாண்டம் அதிகம் படிக்கப்படுவதாக இன்றளவும் உள்ளது. இதற்கு சமய நம்பிக்கை ஒரு காரணமாக அமைகிறது என்பது ஒருபுறம். என்றாலும் சுந்தர காண்டம் என்பது மற்ற இராமயணப் பகுதிகளைக் காட்டிலும் மக்கள் மத்தியில் குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. உரைநடைவடிவம், அல்லது சுருங்கிய கவிதைவடிவம், கம்பர் தந்த சுந்தரகாண்டம், வால்மீகி தந்த சுந்தர காண்டம் என்று பற்பல நிலைகளில் மக்களிடம் சுந்தரகாண்டம் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் அழகியல் உணர்வு சார்ந்த பின்புலத்துடன் சுந்தர காண்டம் படைக்கப்பட்டிருப்பது ஆகும்.

~~கம்பன் பாடிய ஆறு காண்டங்களுக்குள்ளும் காவியத்துள் ஒரு காவியம் என்றே போற்றப்பெறுவது ஐந்தாவது காண்டமான சுந்தர காணடம் ஓர் அனுபவச் சுரங்கம். அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம். அறிதொறும் அறியாமை கண்டாற்போல அனுபவ எல்லை விரிந்து கொண்டே செல்லும்,  என்ற நிலையில் சிறப்பு வாய்ந்தது சுந்தரகாண்டம்.

~~சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும். அன்றியும் காவிய நாயகனான இராமபிரானது பணிமேற்கொண்டு கடத்தற்கரிய கடலையும் தாவிக் கடந்து புகற்கரிய பகைப்புலமாகிய இலங்கை நகரிற்புக்கு தேடிப் பிராட்டியைக் கணட தன மேலும் செயற்கருஞ்செயல் பல செய்து வென்றியோடு மீண்ட தலையாய தூதனான அநுமனுடைய அறிவும் ஆற்றலும் முயற்சியும் ஊக்கமும் எண்ணித் துணியும் திறமும் உரையாடற்றிறமும்; பிறகுண நலங்களும் ஆகிய பெருமையினை உணர்த்தி நின்றது எனினும அமையும்||  என்று இதற்கு சுந்தர காண்டத்திற்குப் பெயர்க்காரணம் சுட்டப் படுகிறது.

மேற்காட்டிய கருத்துகள் வழியாக சுந்தர காண்டம் அழகியல் சார்ந்தமைவது என்பது தெற்றெனத் தெரிகின்றது. கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தை மட்டும் இக்கட்டுரை அழகியல் நோக்கில் அணுகுகின்றது.

இராமனின் அழகு, சீதையின் அழகு ஆகியன அனுமனால் எடுத்துரைக்கப்படுவதாகக் கம்பர் படைத்துள்ளார். இராமனின் அழகையும், சீதையின் அழகையும் இருபது, இருபது பாடல்களில் வடித்துள்ளார் கம்பர். ஆனால் இவ்விரு அழகுகள் சொல்லப்படும் முறை வேறு வேறு அழகுகளை உடையதாக உள்ளன.

அனுமன் காட்டும் இராமனின் அழகு

hanuman-rama
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்தபின் அவனிடம்

~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.

இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.

இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும் கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான். இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.

திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும். பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.

திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும், பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;. சூரியனின் இளங்கதிர்; போன்று இராமபிரானின் கால்விரல்கள் ஒளிபெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.

திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச்சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை. விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.

திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின, காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது. இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞானநூல்கள் உரைக்கின்றன. அவன் நிலஉலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும். ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?

இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர். இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்; இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.

கணைக்கால்
கணைக்கால் அம்பறாத்தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக்கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.

தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும். அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.

திருவுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது. மகிழம்ப+வை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.

திருமார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது. அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம். இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.

கைத்தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.

கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன. அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள் ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.

திருப்புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது. ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல. திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது. இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.

திருமிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது. திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.

திருமுகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது. எனவே அது பொருந்தாது. அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.

திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும். பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது. இனிய சொற்களைப் பேசாது.

பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம் என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா? அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.

திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.

திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன. இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது. அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள். இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.

திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல், இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில் பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.

திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து, நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது. இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.

நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும் தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான். இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.

இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான். மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன் அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.

மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும். பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர். ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார். இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.  ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராமபக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.    சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபதுபாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை. ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.

சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன். அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான். அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.

குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,  மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.

பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)
என்ற இப்பாடலில் சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது. இப்பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடிதோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.

குலப்பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள். இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது. வானவர் குலத்தையும் வாழ வைத்தாள். இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.

இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.

கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.

சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம்பெற்று தவம்செய்த தவமாம் தையல் என்ற சொல்சேர்க்கை அழகுமிக்கது.

இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.

சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.

தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.

சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.

அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.

இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.

இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.

அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.

இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.

அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.

உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.

இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.

இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.

கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.

பயன் கொண்ட நூல்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கம்பராமாயணம்,சுந்தர காண்டம், (இருபகுதிகள்), இரண்டாம் பதிப்பு 2010
நடராஜன். தி.சு., திறனாய்வுக் கலை, என்சிபிஎச், ஏழாம் பதிப்பு 2010
பழனியப்பன், பழ., சுந்தரகாண்டம் புதிய பார்வை, வானதிபதிப்பகம், 2008
கம்பமலர், அகில இலங்கைக் கம்பன் கழகம், 15 ஆம் ஆண்டுமலர், 1995
ஜெயராசா.சபா.கலாநிதி,, அழகியல், அம்மா வெளியீடு, இணுவில், மருதனா மடம், இலங்கை, 1989

படத்திற்கு நன்றி: http://www.starsai.com/lord-hanuman-garudalwar-murugan-temple/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.