“இனியவள்” என்னும் இந்தப் பாடலை எழுதியிருக்கும் வல்லமையாளர் ஷைலஜா, சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, அருமையான கவிதாயினியும்கூட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையத்தில் ஒரு போட்டிக்காக இந்தப் பாடலை எழுதிய அவர், அதற்கு இசையமைக்க என்னிடம் கேட்டுக் கொண்டார். போட்டி முடிவுநாள் வந்துவிட்டதால், அன்றே அமர்ந்து இசையமைத்துப் பாடிக் கொடுத்தேன். அன்று தொண்டை சரியாக இல்லாததால் குரல் அவ்வளவாக எடுக்கவில்லை. ஆனால் மறுபடியும் பாடிப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள்!

அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
(கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

யூட்யூப் தொடர்பு:
http://youtu.be/NSGWL0u2UjY

இனியவள்

பாடல்: ஷைலஜா

இசை, குரல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

——————————————————————

 

தேன்சிந்தும் பூமுடித்து

தேவதைப்போல் வந்தவளே

வான்கொட்டும் மழைபோலே

வார்த்தைகளில் நனைப்பவளே

ஏனென்று கேட்காமல்

என்னோடு வந்துவிடு

நான்மட்டும் படிப்பதற்கு

நயனத்தில் கதையெழுது

 

கணைதொடுக்கும் கண்ணாலே

காதல்போர் புரிபவளே

துணையாக நான்வந்தால்

துவண்டுநடை பயில்பவளே

இணையுனக்கு யாருமில்லா

ஈடில்லாப் பேரழகே

அணையுடைத்துப் பெருகுமுன்னே

ஆசைதனைத் தீர்த்திடவா

 

தீட்டுகின்ற ஓவியமாய்

தித்தித்து இருப்பவளே

பாட்டுக்குள் கற்பனையாய்

படிந்தே கிடப்பவளே

கூட்டுக்குள் குடியேறி

குயிலெனவே இசைத்திடுவாய்

வாட்டும் என்தனிமைக்கு

விருந்தாக வாகண்ணே

                                   (தேன்சிந்தும்)

 

—————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.