பட்டினத்தடிகளின் பாடல்கள் – 11ம் பகுதி

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

(அவருடைய அன்னை மறைந்தபோது அவருக்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடியவை.)

ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி. 1.

பத்து மாதங்கள் சுமந்து, அங்கம் தளர்ந்து வருந்திப் பெற்று, ஆண் குழந்தை என்றுணர்ந்து தன் உடல் நோவெல்லாம் மறைந்து மனம் களிப்புற்று, குழந்தையைத் தன்னிரு கரங்களில் ஏந்தித் தாய்ப்பால் அளித்து என்னைப் போற்றி வளர்த்த அந்தத் தாயை இனி நான் எந்தப் பிறவியில் மீண்டும் காண்பேன்.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாட்சுமந்தே
அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழம் மூட்டுவேன். 2.

தனக்கொரு மகவு வேண்டுமென்று பலகாலம் தவமாய்த் தவமிருந்து முன்னூறு நாட்கள் வயிற்றில் சுமந்து, அந்தி, பகலென்று பாராமல் சிவபெருமானை வழிபட்டு, வயிறு முட்டக் குழந்தையைச் சுமந்து பெற்ற தாய்க்கோ நான் அவள் உடலை தீக்கு இரையாக்குவேன்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன். 3.

தூளியிலும், மரத் தொட்டிலிலும், தன் மார்பின் மேலும், தோள்மீதும், கட்டிலிலும் வைத்து என்னை அன்பு செலுத்தி பறவைகள் தன் குஞ்சுகளைத் சிறகுவிரித்துக் காப்பதுபோல் காப்பாற்றி என்னைச் சீராட்டிய அன்னையை விறகுகளை அடுக்கி எப்படி நான் தீ மூட்டுவேன்.

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன். 4.

உடல் வருந்தி என்னைச் சுமந்து பெற்று, என் உடல் வருந்தாமல் என்னைத் தன் கரங்களிலே ஏந்தித் தாய்ப்பால் அருந்தக் கொடுத்து வளர்த்தெடுத்து, காலை மாலை பாராமல் எப்போதும் என்னைக் கீழே விடாமல் கைகளிலே வைத்துக் காப்பாற்றிய என் தாய்க்கோ உடலில் தீ மூட்டுவேன்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிழ்தமே செல்வத் திரவியமே
மானே என அழைத்த வாய்க்கு. 5.

என்னை இனிய தேனே, அமிழ்தே, செல்வமே, திரவியமே, மானே என்று அனை அன்போடு அழைத்த அன்னைக்குப் பெருமைகள் செய்யாமல் அவள் வாய்க்கு நானே வாய்க்கரிசி போடுவதோ.

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு. 6.

சின்னக் குழந்தையாய்த் தரையில் படுத்து கைகால்களை நான் அசைத்து விளையாடியபோது என்னை மெள்ள எடுத்து முகத்தின் மேல் தன் முகம் வைத்து முத்தம் கொடுத்து, என் அருமை மகனே என அழைத்தத் தாயின் வாயில் நான் இப்போது அரிசியிட்டுத் தலைமேல் கொள்ளியையும் வைப்பது எங்ஙனமோ.

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே. 7.

முற்காலத்தில் சிவபெருமான் இட்ட தீ திரிபுரங்களையும் எரித்தது; பின்னர் அனுமன் இட்ட தீ தென் இலங்கையைச் சுட்டெரித்தது; என் உடலில் தாய் வைத்த உயிர்த்தீ இப்போது பற்றி எரிகிறது; நான் இப்போது அவள் உடலுக்கு இடும் தீயும் பற்றி எரியட்டும்.

வேகுதே தீ அதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவி பறவாமல் கோடாட்டி என்னைக்
கருதி வளர்ந்தெடுத்த கை. 8.

வெட்ட வெளியில் என்னை எடுத்துச் சென்றால் வானில் பறக்கும் பறவை தோஷம் எனக்குப் பட்டுவிடும் என்று எச்சரிக்கையோடு என்னை எடுத்து வளர்ந்த அன்னையின் இரு கரங்களும் தீயினால் பற்றி எரிகிறதே, பொடிப்பொடியாய் சாம்பலாய் ஆகின்றதே, அந்தோ என் செய்வேன்.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரங்கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய். 9.

திரு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபனாய் எழுந்தருளியிருக்கும் பரஞ்சோதிச் சுடரே! சதாகாலமும் உன்னையே எண்ணி பூசித்து வணங்கி வரம்பெற்று என்னை இப்பூவுலகில் மகவாகப் பெற்ற என் அன்னை தீயினில் வெந்தாளோ, வெந்து உந்தன் திருவடிகளை அடைந்தாளோ, என்னையும் தன் மகவு என்பதை மறந்தாளோ.

வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம். 10.

உயிரோடும் உயிர்ப்போடும் ஜீவகளையோடும் இருந்தாள் என் தாய், வீதிகளில் சென்று உலாவித் தன் வேலைகளைச் செய்தாள், நேற்று இருந்தாள், இன்றோ தீயில் வெந்து சாம்பரானாள். ஆகையால் அவளுக்குப் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள், என்ன ஏது என்று எண்ணி வருந்தாதீர்கள், உலகமே சிவமயம், அவனன்றி ஓரணுவும் அசையாது.

(இன்னும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *