குடியரசு தின வாழ்த்துகள்!

2

பவள சங்கரி

தலையங்கம்

republic
நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நந்நாளில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தத்தோடு சில வற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் நாடு பொருளாதாரத்தில் வளமிக்க நாடாக உயர்ந்துள்ளது. அங்கு தனி மனித வருமானமும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயில் அதிகமாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரால் முற்றிலும் சிதைந்துபோன ஜப்பான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் நம் நாட்டின் நிலையை எண்ணும்போது அந்த மகிழ்ச்சிக்கான முகாந்திரமே இல்லை. பாரதி கூறிய, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற நிலை வேண்டுமானால் மாறியுள்ளதே தவிர, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இன்னும் நம்மால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு காலம்தான் வளரும் நாடுகள் பட்டியலிலேயே நாம் இருந்து கொண்டிருப்போம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் இந்த குடியரசு ஆட்சி, மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கும், எதிலும் ஊழல். என்ற இன்றைய நிலையைத் தவிர்த்தாலே நம் நாடு வெகு விரைவில் வல்லரசு ஆவது உறுதி. நமது நாட்டில் அறிவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கும்கூட பஞ்சமில்லை என்பது சந்திரனுக்கு அடுத்ததாக செவ்வாய்க் கிரகத்திற்கும் ஆய்வுக்காக விண்கலத்தை அனுப்பியதன் மூலமாக நிரூபித்துவிட்டோம். பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்கள் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். உலகிலேயே, பொருளாதார அடிப்படையில் வலிமை மிக்க நாடான அமெரிக்காவின் வளர்ச்சியில் நம்முடைய இந்தியர்களின் பங்கு மிக அதிகம். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை இனம் கண்டு பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றாலும், ஆட்சியில் இருப்பவர்கள் பொது மக்களுக்காக அன்றி தனிப்பட்ட முறையில் வெகு சிலருக்காகவே சேவை செய்கிறார்கள். இந்த நிலை மாறி மக்கள் இவர்களைத் தட்டிக்கேட்கும் உரிமையைப் பெற வேண்டுமானால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்காக, பணமாகவோ அல்லது , பொருளாகவோ எந்த வகையிலும் இலவசங்களைப் பெறாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப் பெற்றால் அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். இதனால் நாம் நம் கண் முன்னால் நடக்கும் தவறைத் தட்டிக்கேட்டும் உரிமையை இழந்துவிடுகிறோம். இந்த குடியரசு தினத்தில், மக்களுக்காக யார் தங்கள் தன்னலமற்ற சேவையை வழங்குகிறார்களோ, அவர்களைத்தான் வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைப்போம். மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், முழுமையான அமைதி ஆகியவைகள் தொடர்ந்து நிலவிட, தேசபக்தி உணர்வோடு இந்த குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம் .

வாழ்க குடியரசு! வெல்க ஜனநாயகம்! ஜெய்ஹிந்த்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குடியரசு தின வாழ்த்துகள்!

  1. 64 ஆண்டுகள் ஆன இந்திய குடியரசு இனியாவது நேர்மையான, ஊழலற்ற, ஏமாற்று, பொய், பித்தலாட்டம் இவைகளில் ஈடுபடாத நல்ல மனிதர்களால் வழிநடத்தப்படட்டும். எல் ஐ சியில் முந்த்ரா ஊழல் தொடங்கி, போபார்ஸ், 2ஜி, காமன்வெல்த் கேம்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல், விமான பேரம் வரையிலான பல ஊழல்களில் ஈடுபட்ட தேசவிரோதிகள் கரங்களிலிருந்து இந்தியா விடுபடட்டும். 64 வயது ஆன இந்திய குடியரசு இன்னமும் ஜனநாயக நெறிகளைப் பின்பற்றவில்லையென்றால், நம்மை நாமே ஆளும் தகுதி நமக்கு வரவில்லை என்று பொருள். அரசியல் தூய்மையாகட்டும். நேர்மை நிலைத்து நிற்கட்டும். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். தங்கள் தலையங்கத்துக்கும் பாராட்டுக்கள். தஞ்சை வெ.கோபாலன்.

  2. மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *