கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா!
பவள சங்கரி
ஜனவரி 20, 2014 திங்கட்கிழமை மாலை தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக கோவை மெடிகல் சென்டர், மருத்துவ மையத்தில் ’தாயகம் கடந்த தமிழ் ’ என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 19ம் நாள், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான, மருத்துவர். நல்ல பழனிசாமி அவர்களின் முயற்சியால், ”தமிழின் வளம் தமிழர் நலம்” என்னும் இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் பண்பாட்டு மையம். ‘எங்கெங்கு காணினும் தமிழனடா’ என்று சொல்லும் அளவிற்கு, உலகம் முழுவதும் பரவி வாழும் நம் தமிழர்களின் ஆழ்ந்த மொழிப்பற்று, எத்தகையச் சூழலிலும், எதுவிதமான நெருக்கடியிலும் உயிர்ப்போடு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உயிர்த் துடிப்பில் உருவானதுதான் இம்மையம். நம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வளமை குறித்து அளவற்ற பெருமிதம் கொள்ளும் அளவிற்கு, நாம் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கு ஒரு செல்வமாக இதனை அளித்துவிட்டுப் போகும் பொறுப்பு எனும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற கருத்தின் ஆணி வேருக்கு உரம் இடும் வகையில், தமிழ் மக்களிடம், தமிழ் ஓர் உலகளாவிய மொழி உலகின் பல பகுதிகளிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும் . அப்படிச் செய்வதால் இயல்பாக தமிழர் மனதில் எழும் பெருமித உணர்வு, தமிழ் மொழியைத் தொடர்ந்து மேன்மைப்படுத்தி காப்பாற்றி வரக்கூடும் என்ற சீரிய ஆக்கப்பூர்வமான, உளவியல் அணுகுமுறையிலான சிந்தனையுடன் 12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்க்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்திச் சிறப்பித்தார்கள். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற திரு மாலன் தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது. “புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது.
“சிறுகதை ஒரு படைப்பாளியின் திறனை எடை போடுவதற்கு உகந்த வடிவம்” என்னும் திரு மாலன், மேலும், சிறுகதைகள் என்பது நீதிக்கதைகள் அல்ல, நீளம் சார்ந்தும் தீர்மானிக்கப்படுவதல்ல, ஒரு கவிதைக்குரிய நேர்த்தியும், வார்த்தை சிக்கனமும், சொற்தேர்வும், நீர்ப்பரவல் போன்ற எடுத்துரைப்பும் அதற்கு இலக்கணங்கள். அவற்றுடன் தொடக்கத்தில் போடும் முடிச்சை கதைசொல்லி எப்படி அவிழ்க்கிறார், எதற்காக, ஏன்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் அடிப்படையில் சிறுகதைகள் அமைய வேண்டும்” என்ற இவருடைய கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டது. அதே போன்று “மொழிபெயர்ப்பிற்கு மூல மொழியை வாங்கிக்கொள்ளும் திறனும், சொந்த மொழியில் அதை வெளிப்படுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியரின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருத்தல் வேண்டும் இக்குறைகளைப் போக்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர இயலும்” என்ற சிந்தனையும் கருத்தில் கொள்ளத்தக்கவை.
தமிழறிஞர் பேராசிரியர் தொ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் மாணவர் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம், காமன்வெல்த் நாடுகளின் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 23 நூல்கள் எழுதியுள்ள சிறந்த பேச்சாளர், ’மொழியாக்கம் ஒரு முடிவற்ற பயணம்’ என்று கூறும் முனைவர் . கா. செல்லப்பன், “ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு மொழிபெயர்ப்பாளனே, ஏனென்றால் அவன் தன் உள்ளொளியை, உலகொளியாக்கும்போது, அக மொழியிலிருந்து புறமொழியில் ஆக்கம் செய்கிறான்” என்ற சுவையான, சிந்திக்கத்தகுந்த கருத்தை முன் வைக்கிறார்.
குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.இலெ. தங்கப்பா அவர்கள், “மொழிபெயர்ப்பையும் இலக்கியப் படைப்பாகவே கருதி மேற்கொண்டு வந்துள்ளேன். எந்த ஒரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நான் என் மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டதும் இல்லை. ஒரு பாவலன் என்ற முறையில் என்னுள் இருக்கும் அழகுணர்வே என் மொழிபெயர்ப்புகட்கு அடிப்படையாக இருந்திருக்கின்றது “ என்கிற சிந்தனைக்குரிய கருத்தையும் முன்வைக்கிறார்.
மொழிபெயர்ப்பிற்காகவும், கவிதைத் தொகுதிக்காகவும் இரு சாகித்ய அகாதெமி பரிசுகள் பெற்றவர், தமிழில் முதல் மொழியாக்க நூல் ‘விவிலியம்’ என்று கூறும், கவிஞர் புவியரசு அவர்கள். மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்களை மிகச் சுவைப்படவே விளக்கியுள்ளார். ”மிகவும் அன்னியமான பழக்க வழக்கங்கள், நமக்குப் பொருந்தாத பழமொழிகள், நாம் கண்டிராத மரம் செடிகொடிகள், ஒரு விசயத்தை அவர்கள் வெளிப்படுத்தும் முறை, அசைச் சொற்கள் போன்றவை தமிழ் மரபில் பொருந்தாமற்போவதால், தமிழில் இறக்கி வைக்க முடியாமல் போகிறது. இதற்காக நட்சத்திரக் குறிபோட்டு பக்கத்தின் கீழே அடிக்குறிப்பு எழுதுவதும் வாசகரைக் காலிடறச் செய்துவிடும்; எரிச்சலை உண்டாக்கிவிடும். இதை வெல்லும் வழி, உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர், குந்தர் கிராஸ் முன் வைத்துள்ளது போல ‘மறுபடைப்பாக்கம்’ ஒன்றுதான் சாத்தியக்கூறான தீர்வு என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழ் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்ட, தமிழில் இல்லாத ஓசையை உச்சரிக்க உருவாக்கப்பட்ட, ஜ, ஷ, ஸ, ஹ, ஷீ (அவை வடமொழி எழுத்துக்கள் இல்லை) போன்ற எழுத்துகளை தேவைப்பட்ட இடத்தில், தவிர்க்க முடியாத இடங்களில் பயன்படுத்துவதில் தவறே இல்லை என்கிறார். குந்தர் கிராஸ் சொன்ன, “எந்த மொழியும் புனிதமானது அன்று; மாறாதது அன்று; மாற்றக்கூடாதது அன்று. உலக நாகரீகங்களின் தாக்கம் ஏற்படும்போது எந்த மொழியும் விரிவடையவே செய்யும். புதியன புகுதலுக்கு வழியடைத்து, மொழியை சின்னச் சிமிழுக்குள் அடக்க முற்பட்டால், அந்த மொழி மெல்லச் சாகும்’ என்று சொன்னது மொழியாக்கத்திற்கு மட்டுமல்லாமல், மொழியின் விரிவாக்கத்திற்கும் உதவும் கருத்து இது என்கிறார்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதினைப் பெற்றவருமான, திரு இந்திரன் அவர்கள், “மரபணுக்களின் சோதனை எப்படி உடம்பின் பரம்பரை குறித்த செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறதோ, அதே போன்றுதான் ஒரு மொழியின் சொற்கள் பற்றிய சோதனை பாரம்பரியமான அந்த பண்பாடு பற்றிய செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது. பண்பாட்டு விழுமியங்களின் ஒரு ஞாபகக் கிடங்காகச் செயல்படுகிற மொழி, நம்மைச் சுற்றியுள்ளவை குறித்த மதிப்பீடுகளை காலத்துக்குக் காலம் கட்டமைக்கிற கருவியாகவும் செயல்படுகிறது. தனக்கென்றிருக்கிற ஒரு மொழியை இழந்துவிட்ட பண்பாடும், தனக்கென்று இருக்கிற ஒரு பண்பாட்டை இழந்துவிட்ட மொழியும் பலகீனமாகி நாளடைவில் இல்லாது போகின்றன.” என்ற கருத்தை உறுதிபட முன் வைக்கிறார்.
இறுதி நாள் நிகழ்வுகளை மிக அழகாகத் தொகுத்து வழங்கிய முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின் மிக யதார்த்தமான பேச்சு நல்ல வரவேற்பைப் பெற்றது. எந்தவிதமான வெளிப்பூச்சும் இல்லாமல் இருக்கும் உண்மை நிலையை அவர் எடுத்துரைத்த விதம், ‘ஆமாங்க ஐயா, எல்லார் வீட்டிலும் இந்த நிலைதானுங்க’ என்று சொல்லும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னைப் பொறுத்தவரை தம் மனைவியும் தமிழ் பேசுபவராக இருப்பதால், குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், 1970 ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரான பேரக் குழந்தைகளின் நிலை பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை என்றது சத்தியமான வார்த்தைகளாகத்தான் பட்டது. குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில் ஆரம்பிக்கும் பிரச்சனை பேசும் மொழி, எழுத்து மொழி என அனைத்திலும் பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணங்களாக அவர் சொன்னது கலப்புத் திருமணம். பெற்றோர் இருவரும் வெவ்வேறு மொழி பேசுபவராக இருந்தால் குழந்தை எந்த மொழியை பின்பற்றப் போகிறதோ அல்லது பொது மொழியான ஆங்கிலமே நிலைத்துவிடுமோ என்ற அவருடைய கவலை நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கான தீர்வு என்று அவரால் ஏதும் சொல்ல முடியாத நிலையே நிதர்சனம்.
அடுத்து பேசிய ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, நம் தமிழ் நாட்டின் மதுரை மாநகரத்து மருமகளான, பேராசிரியர் உல்ரிக்கே நிகோலஸ் அவர்கள் மிக அழகாகத் தமிழ் பேசி சபையோரை வெகு எளிதாகக் கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, தென்கிழக்காசிய ஆய்வுத் துறையின் தலைவரும், இந்தியவியல் துறைப் பேராசிரியருமான இவர், முத்தொள்ளாயிரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணி இலக்கணம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்ந்தவர். தொல்காப்பியத்தின் உவமையியலை, வடமொழி நூலான தண்டியின் அலங்கார சாத்திரத்துடன் ஒப்பாய்வு செய்தவர். மத்திய அரசின் கல்வித் தொகை பெற்ற ஆய்வாளராக, தமிழ்ப் பல்கலைக் கழகங்களிலும், புதுவை தூரக்கிழக்கு பிரஞ்சுப் பள்ளியிலும் பணியாற்ற பெற்ற வாய்ப்பால் தமிழகத்தில் சில காலம் வசித்தவர். ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலில் அறியப்பட்ட இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழி மட்டுமே என்கிறார். இவருடைய ஆதங்கமும் மேற்படிப்பு தமிழ் படிப்பதில் குழந்தைகளுக்கு உள்ள சிக்கல். இவர் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று புரிந்தது.
தாயகத்திற்கப்பால் தமிழ்மொழிக் கல்வி கற்பித்தல்; நோக்கம், முயற்சிகள், அனுபவங்கள் குறித்த கட்டுரையை வழங்கியுள்ள திருமதி வெற்றிச்செல்வி கலிபோர்னியா தமிழ் கழகம் என்று இவர் நிறுவிய அமைப்பின் வழி அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புலம் பெயர்ந்து வசிக்கும் 4000 குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வகுத்து இந்த அமைப்பு தமிழ் கற்பிக்கிறது . இதன் காரணமாக ஒரு தலைமுறைக் குழந்தைகளுடன் தமிழ் மரபு பேணப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாடுகள் மற்றும் 5000 பேர் பங்கு கொண்ட உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழ்க் கல்வி மாநாட்டை 2012ல் நடத்தியவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து “கலைஞர் களஞ்சியம்” என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார். இவர் தங்கள் பள்ளியின் விரைவான வளர்ச்சி பற்றி மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டாலும், அதை மேலும் செம்மையாக நடத்த அவருக்கு உள்ள குறைபாடுகளையும் வெகு நேர்த்தியாக பகிர்ந்துகொண்டார். தங்களுடைய சர்வதேச தமிழ் கல்வி நிலையம், இன்றைய தமிழ் எழுத்தாளர்களிடம் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறுவது:
தமிழ் உரைநடை நூல்கள் , சிறுகதை நூல்கள் மற்றும் மின்னூல்கள்.
புலம்பெயர் மாணவர்களுக்கு உகந்த வகையில் பாடங்களையும், கதைகளையும், படைக்க தமிழ் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.
மாணவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி படிக்கும் வகையில் பாடங்களும், கதைகளும் அமைய வேண்டியது அவசியம்.
புலம்பெயர் மாணவர்கள் வாழும் சூழல் குறித்து எழுத்தாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
எழுத்தாளர்கள் தமிழ் நாட்டுக் கல்வி முறை மற்றும் தமிழ் வகுப்புகள் மற்றும் புலம்பெயர் மாணவர்களின் கல்வி முறை மற்றும் மொழி வகுப்புகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்.
மாணவர்கள் தங்களுடைய வழமையான பாடத்திட்டங்களுடன், அதிகப்படியான திணிப்புகளும் இருப்பதாக நினைப்பதால் அவர்களுக்குரிய புத்தகங்கள், கண்ணைக் கவரும் வகையில் வண்ணமயமாகவும், சுவையான உள்ளீடுகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
சொல்லகராதிகள் எளிமையாக இருக்க வேண்டும் போன்ற பல எதிர்பார்ப்புகளை முன்வைத்தார். இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எழுத்தாளர்களின் கடமை என்பதும் நிதர்சனம்.
சிங்கப்பூரில் தமிழ் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் முனைவர் அ.வீரமணி அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தற்சமயம் ஜப்பானின் இரிட்சுமேய்க்கான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழி ஆர்வமும், கல்வியும் பெற மாணவர்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திய அமைப்பு முக்கிய காரணியாக அமைந்தது. தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். தமிழுக்காக பல ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி பல தொகுப்பு நூல்களையும், பிற எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் தமிழ்க் கல்வி குறித்து, “பன்னாட்டு அறிஞர்கள் கூடும் சிங்கப்பூரில் தமிழ்க் கூட்டங்களில் அறிஞர்களைக் காண்பது அரிது, உலகளாவிய அறிஞர்கள் சிங்கப்பூரில் இருப்பது கூட சில குறிப்பிட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலமாக மட்டுமே அறிய முடிகிறது. இதனால், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி என்பதெல்லாம், எல்லாக் காலங்களிலும் அரசாங்க அரவணைப்பினால்தான் நடந்துள்ளது என்ற எண்ணம் எங்கும் நிலவுவதை உணரலாம். இந்த எண்ணம் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தொடர்பிலான ஆராய்ச்சியை மேற்கொள்வோர் மத்தியிலும் வாழ்கிறது. இந்த மனப்போக்கு ஆங்கில மொழியை அதிகம் கற்றதனால் ஏற்படுகிறதா அல்லது காலனித்துவ ஆட்சியின் தாக்கத்தால் தொடர்ந்து இருக்கிறதா என்று பகுத்தறிய முடியவில்லை. இன்றைய சிங்கப்பூர் அரசின் ஏகாதிபத்திய ஆதிக்கமும் இந்த மன நிலைக்குக் காரணமாகலாம்” என்ற கருத்தின் அடிப்படையில் இருந்தது சிந்திக்கத்தக்கது. மேலும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் ஒன்று , அரசியல் பொருளாதார செல்வாக்கில்லாமல் தனது மொழியைத் தொடர்ந்து வளர்க்க முடியுமா என்ற ஐயம் தொடர்ந்து நிலவவேச் செய்வதாகக் கூறுகிறார். பல குடும்பங்களில் தமிழ் வெறும் பள்ளி மொழியாக மட்டுமே கருதப்படுவதாகவும் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி வளர்ச்சி, வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய திரு அன்பு ஜெயா அவர்கள் மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற்வர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று, இருபது ஆண்டுகளாகச் சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளின் ஹோல்ஸ்வொர்தி கிளைக்கு முதல்வராகவும், தற்போது அப்பள்ளியின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் 15 ஆண்டுகளாக பங்குபற்றி தமிழ்ப்பாடப் புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் பல நடத்தி வருவதுடன் 2012 ஆம் ஆண்டு கலிபோர்னியா தமிழ்க் கல்விக் கழக மாநாட்டில் ஆசிரியர்களுக்கு ஒரு பயிலரங்கும் நடத்தியுள்ளார். தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் பல பயிற்சிகளைத் தன்னுடைய இணையதளத்தில் (www.anbujaya.com) வெளியிட்டு வருகிறார். மதுரைத் திட்டத்தில் பங்கெடுத்து 2000 பக்கங்களுக்கு மேல் தட்டச்சு செய்தும் பிழை திருத்தியும் பணி செய்திருக்கிறார்.
தமிழ்க்கல்விக்கு உள்ள சவால்களாக இவர் குறிப்பிடுவது, “முற்றிலும் வேற்றுமொழிச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தல் என்பது எளிதான செயல் இல்லை. அதற்காகப் பல விதமான சவால்களையும் தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சில சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிகிறது. சில சவால்களுக்கு சரியான தீர்வுகள் கிடைப்பதில்லை”
தமிழ்மொழி தமிழர்களின் அடையாளம் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த முயலாத, சில சமயங்களில் தாங்களே உணராத பெற்றோர்கள்.
தமிழைப் படிப்பதால் என்ன பயன் என்று பொருளாதார நோக்கில் எழும் கேள்வி.
வீட்டில் பிள்ளைகளுடன் எப்போதும் தமிழில் பேசவேண்டியதின் அவசியத்தை உணராது இருத்தல்.
வார இறுதி நாட்களில் பாட்டு, நடனம், விளையாட்டு, நீச்சல் போன்ற பிள்ளைகளின் மற்ற வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
என் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரிந்தால் மட்டும் போதும் என்று கூறும் பெற்றோர்களின் மனப்பாங்கு.
வாரத்தில் இரண்டு மணி நேரம் தமிழ் படித்தாலே பிள்ளைகளுக்குத் தமிழில் முழு திறமையும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
பல்கலைக்கழகத்தில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்க தற்போது வாய்ப்பு இல்லாத சூழ்நிலை.
இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, பெற்றோர்கள் தமிழ் மொழியின் இன்றியமையாமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். வீட்டில் தங்கள் பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசவேண்டும். அவர்களை தமிழ்ப் பள்ளிகளுக்குத் தவறாது அழைத்துவர வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் தங்களால் முடிந்த பங்களிப்பைத் தவறாது செய்தார்களானால் அயல்நாடுகளில் தமிழ்மொழி தலைமுறை தலைமுறைகளாகச் செழித்தோங்கும் என்பது உறுதி, என்கிறார் திரு அன்பு ஜெயா.
சீன வானொலியின் தமிழ்ப்பணி என்னும் தலைப்பில் தம் கருத்துகளை நிறுவியுள்ள சீனப்பெண் செல்வி. சாவோ ஜியாங் சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப்பிரிவின் தலைவர். தமிழ்மீது கொண்ட பற்று காரணமாகத் தன் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டவர். இவர் எழுதியுள்ள ‘சீனாவில் இன்ப உலா’ என்னும் புத்தகம், ஒரு சீனர் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் மொழி புத்தகம் ஆகும். 2013ஆம் ஆண்டு சீனாவின் புகழ் பெற்ற சி.பி. பதிப்பகத்திற்காக, “சீனம் தமிழ் கலைச்சொல் அகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இந்த அகராதியில் சுமார் 27,000 சொற்கள் உள்ளன . தமிழர்கள் சீன மொழியைப் படிப்பதற்கு இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கலைமகளின் தலைமையில் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் சேவையில் பெரும் முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இப்பொழுது சிற்றலை ஒலிபரப்பு, பண்பலை ஒலிபரப்பு மட்டுமல்லாமல், தமிழ் இணையதளம், கைப்பேசி இணையம், தமிழொலி என்னும் இதழ் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.
“தமிழ் மொழி அருமையான மொழி என்பது என் கருத்து. தமிழுக்கு அமுது என்று பெயர் என்பது உண்மைதான்” என்கிறார் கலைமகள். எதிர்காலத்தில் தமிழ் மொழி போல் சீனத் தமிழ் ஒலிபரப்பும் நீண்டு நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நட்புறவுப் பாலத்தை உருவாக்குவது எமது கடமையாகும். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுவதற்கு சீனத் தமிழ் ஒலிபரப்பு பங்காற்றுகிறது என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார் கலைச்செல்வி, முத்தாய்ப்பாக.
தம்முடைய நன்றியுரையில், திரு மாலன் அவர்கள் குறிப்பிட்டது போல, தாயகம் கடந்த தமிழ் என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு, வெற்றுப் பெருமைகள் மட்டுமே பேசாமல், நம் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள், அதன் தீர்வுகள் போன்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்தார்கள் என்பதே சத்தியம். கலந்து கொண்ட அனைவரும் மன நெகிழ்வுடன் விடைபெற்றது கருத்தரங்கக் குழுவினரின் அக்கறையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. இறுதியில் தமிழ் படிக்கும் ஒரு மாணவி படித்து முடித்தவுடன் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பியது அரங்கில் சிறு சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை.