குடியரசு தினம் என்றால் என்ன?…

1

ஷைலஜா

 

images

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது. மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்? பள்ளியில் ஆசிரியர்களா? வீட்டில் பெற்றோர்களா? சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.

தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி……..இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி….. இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்?

ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள் இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?

நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றே வாழ்ந்தார்கள்.

ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும் பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி அட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம்.

மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப் போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.

ஜெய்ஹிந்த்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குடியரசு தினம் என்றால் என்ன?…

  1. நல்ல நாட்டுப் பற்றுக் கட்டுரை ஷைலஜா, பாராட்டுகள்.

    சுதந்திர நாளுக்கும் குடியரசு தினத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு :

    ஆகஸ்டு 15 தேதிக்கு முன்பு பிரிட்டிஷ் வைஸ்ராய் தலைமையில் காலனி ஆட்சியாக பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரல் கீழ் பிரிட்டன் நாட்டை ஆளுமை செய்தது.  
    ஆகஸ்டு 15 தேதி முதல் பிரிட்டன் ஆட்சிப் பொறுப்பை இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி தெரிந்தெடுத்த பிரதம மந்திரி பண்டிட் நேருவின் கீழ் வந்த இந்திய அமைச்சர்கள் கைவசம் ஓப்புவித்தது.

    1950 இல் குடியரசு பிரகடனத்துக்குப் பிறகு  குடிமக்கள் ஆளும் கட்சி தேர்ந்தெடுத்த ஜனாதிபதி,  ராஜேந்திர பிரசாத், பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆளுங் கட்சி, எதிர்க் கட்சி அமைப்புகளுடன் துவங்கியது.    
     
    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகிய வற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    ‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.