Author: இன்னம்பூரான்

  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 18

     

    இன்னம்பூரான்

     

    யாமொன்று நினைக்க…

     

    அக்காலத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.எம்.பதஞ்சலி சாஸ்திரி பற்றி எழுத நினைத்தேன். சதாசிவம் வந்து விட்டார். ஈரோடு மாவட்டம்: கடப்பநல்லூர் கிராமம். விவசாயகுடும்பம். அதில் முதல் பட்டதாரி. கிராமத்திலேயே முதலாக வழக்கறிஞர் சன்னது பெற்றவர். 1996லேயே இளம்வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி; பொதுவாக, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்ந்தவர்களுக்குத் தான் உச்சநீதிமன்றத்துக்கு உயர்வு கிடைப்பது வழக்கம். இவருக்கு டபிள் ப்ரமோஷன். 2007ல் நேராக உச்ச நீதிமன்றம். ஜூலை 19 அன்று உச்சநீதி மன்றத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்கப்போகும் இந்த தமிழ்மகனை வாழ்த்துவோம்.

    இவருடைய முக்கியமான தீர்ப்புகளில் சில: ரத்ன சுருக்கமாக:

    • ஒரு ரிலையன்ஸ் முட்டல் வழக்கில் அவர் கூறியது: இயற்கை வளங்களை அரசு வாரியங்களுக்கு மட்டுமே கொடுப்பது நலம். நம் தேசீய குடியரசில், அவை மக்களுக்கு சொந்தம். அரசு அவர்களுக்காக, அவற்றை பேணவேண்டும்.
    • அநேகருக்கு ஒடிஷாவில் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரியும் அவரது மகன்கள் காரில் வைத்துக் கொளுத்தப்பட்டது நினைவில் இருக்கலாம். அந்த வழக்கில் மஹாத்மா காந்தியின் சர்வமத சம்மதம் இந்தியாவில் பரவவேண்டும் என்ற நம்பிக்கைத் தெரிவித்தார்.
    • மாயாவதி மீது சீபீஐ போட்ட வழக்கு தர்மம் அல்ல என்று புறக்கணித்து விட்டார்.
    • சஞ்சய் தத்துக்கு ஐந்து வருட சிறை தண்டனை கொடுத்ததும் இவரே.
    • பெண்கள்/குழந்தைகள் மீது பலாத்காரம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

    இன்னம்பூரான்

    30 06 2013

    உசாத்துணை:

    http://www.thehindu.com/news/national/justice-sathasivam-first-judge-from-tamil-nadu-to-become-cji/article4863744.ece?homepage=true

     

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 32

     

    இன்னம்பூரான்

     

    வெட்டவெளியில் கரும்புள்ளி: அப்டேட்

     

    Inline image 1

     

    இந்த எஸ்-பாண்ட் ஊழல் நமது புகழ் வாய்ந்த விஞ்ஞானிகளில் சிலரின் பொன்னாசையை அம்பலப்படுத்துகிறது. ஆமாம், சார்! காண்டிராக்டர் தங்கக்காசு தருகிறான். இவர்கள் கூறு போட்டுக்கொண்டார்கள்.

    கதை சுருக்கம்:

    இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (ரூ.2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. குற்றச்சாட்டின் தீவிரத்தின் சூடு தாங்காமல், ஃபெப்ரவரி 2011ல் அரசே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுகிறது, தாங்கொண்ணா தாமதத்திற்கு பிறகு. போனவருடம், சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து, அரசு பிரகடனம் விடுத்தது. முந்திய கட்டுரையில் எழுந்த நான்கு வினாக்களுக்கு விடை தேடுவது தொடர்கிறது. முடிந்தபாடில்லை. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இந்த வெட்டவெளிச்சத்துறையை நன்கு அறிந்திருக்கும் ஜனாப் அப்துல் கலாம் அவர்கள், பொதுநலத்தை முன்னிட்டு, கருத்துக் கூறியிருக்கிறாரா என்று தேடித்தேடிக் களைத்து விட்டேன். அவர் கருத்துக்கூறவில்லையெனின், அதுவே முதல் கேள்வியாகி விடுகிறது.

    அடுத்த கட்டம்:

    ‘சாணோ,முழமோ’ தலைக்கு மேல் நீர் மூழ்கடிக்கிறது என்றால் வாதி-பிரதிவாதிகள் மத்தியஸ்தம் நாடுவார்கள். அது ஆராய்ச்சி மணி நியாயமாகவோ,அல்லது குரங்கின் கை பூமாலையாகவோ அல்லது ருத்திராக்ஷப்பூனையின் தந்திரமாகவோ, அல்லது வேறு எது வைபோகமாகவோ அமையலாம். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் நஷ்டமடைந்த தேவாஸ் மல்டி மீடியா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் மீது மத்தியஸ்தம் கோரி, லண்டனில் உள்ள அகில உலக ‘பஞ்சாயத்திடம்’ (International Court (ICC) of Arbitration in London) முறையிட தீர்மானித்தது. அதற்கு முட்டுக்கட்டை போட விழைந்தது, வெட்டவெளித்துறை. போன மாதம் (மே 2013) இந்திய உச்ச நீதிமன்றம் தேவாஸ் மல்டி மீடியாவின் கோரிக்கைக்கு தடை யாதுமில்லை என்று தீர்ப்பளிக்க, வெட்டவெளித்துறை மருண்டது! ஏன்? இது அடுத்து வரும் கேள்வி. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க விரும்பிய வெட்டவெளித்துறை அதற்காக சட்டத்துறையை அணுகியதும், சட்டத்துறை அதை ஏற்கவில்லை என்பதும் இன்றைய செய்தி. எனினும், அது அரசு வக்கீலாகிய சொலிஸிட்டர் ஜெனெரலிடம் ஆலோசனை கேட்டிருக்கிறது. Everyone is passing on the buck.

    இப்போது கேள்விக்களுக்கு தற்காலிக பதில்:

    சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து…

    அணுகுமுறை சரியாக படவில்லை. அவர்கள் தவறு செய்திருந்தால், தக்கதொரு தண்டனை/ ப்ராஸிக்யூஷன் தான் சரி. இல்லையெனில், இந்த இருண்டுங்கெட்டான் இகழ்ச்சியும் நியாயமில்லை.

    2.பிரதமரின் அலுவலகம் இதை அறியாததா?

    ஆவணங்கள் பேசட்டும். அவற்றை பொதுமன்றத்தில் வைத்தால் தான் உண்மை தெரியும்.

    3. ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஆவணங்கள் இருக்கும். அவற்றை பொதுமன்றத்தில் வைக்கவேண்டும்.

    4.இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன?

    கதை சுருக்கம் நோக்குக.

    இன்னம்பூரான்

    Image Credit: http://sd.keepcalm-o-matic.co.uk/i/keep-calm-and-pass-the-buck-3.png

    Share
  • நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

    இன்னம்பூரான்

    ‘அவர் (கரியமாணிக்கனார்) புகழ் வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் அதற்கெல்லாம் மேலே மிகவும் உயர்ந்தவர்; புருஷோத்தமன்; லட்சியப் பிரஜை; முழுமையான மனிதர். ‘ – ஜவஹர்லால் நேரு.

    உங்களுக்கு சிவக்கொழுந்து சாரைத் தெரியுமோ? தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் பெளதிக பாடம் எடுத்த காலக்கட்டம், நூறு வருடங்களுக்கு முன்னால்: 1911: 9ஆவது வகுப்பு: ஹிந்து உயர்நிலை பள்ளி: ஶ்ரீவில்லிபுத்தூர். தமிழில் பெளதிகத்தையும், பூகோளத்தையும்/ வேதியியலையும்  எளிதில் விளக்கி எனக்கு அதில் ஆர்வமூட்டினார், என்கிறார் ஒரு விஞ்ஞானி. அவரும் சளைத்தவரல்ல. மதிய விருந்துண்ணும் வேளையில், போகிற போக்கில், பாட அட்டவணையில்லாமல், பெளதிகத்தை போதித்து இறவாப் புகழ் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான விஞ்ஞான கட்டுரைகள் எழுதியவர்.

    விஞ்ஞானத்துக்கும் நமக்கும் காத தூரம் என்று நமக்குள் பச்சாதாபப்பட்டுக்கொண்டு மருகி வாடவேண்டிய தேவை ஒன்றுமில்லை. விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானத்தின் மீதும், பொறியியல் மேலாண்மை மீதும், மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஆர்வமும் தீவிரமும் இருந்தது. பிரதமர் நேருவின் தீர்க்கதரிசனமும், கற்றோர்களின் தொண்டும், அன்றைய இளைய சமுதாயத்தின் தீவிர ஆர்வமும் அதற்குத் துணை நின்றன. காரைக்குடியில் இருக்கும் நவீன மின் – ரசாயன பரிசோதனை சாலையில் நடந்த இரும்பு துருப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், அந்த மையத்தின் தலைவர் டாக்டர் பி.பி.டே அவர்கள் அளித்த பேட்டியும் நினைவலையில் உலவி வந்த போது, புனே நகரில், பெளதிகம் சார்ந்த பரிசோதனை மையம் கண் முன் வந்து நின்றது. மாபெரும் கட்டடம். ஒரு குட்டி கலாட்டா. கவின் அழகைப் பாதிக்கிறது என்று இரு மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தனர். காரில் அந்த பக்கம் வந்த ஒருவர் ‘சட்’ என்று இறங்கி ஓடோடி வந்து அரைகுறை ஹிந்தியில் சத்தம் போடுகிறார். மரத்தை வெட்டக் கூடாது என்கிறார். மற்ற அதிகாரிகள் வந்து வினயத்துடன் பிரச்சினையைச் சொன்னவுடன், மலர்ந்த முகத்துடன், ‘ மூன்றாவது மரம் நட்டு விட்டால், அழகு கூடுமே’ என்றார். கணக்குப் புலி; பாவ்லாவோ பாலே நாட்டியத்திலும் ரசனை. அவர் தான் இன்றைய தலைமாந்தன், கரியமாணிக்கனார்.

    இராமனும் கிருஷ்ணனும் இணைந்து விஞ்ஞான சாதனைகள் புரிந்த கதை, இது. அணுக்களுக்குள் புகுந்து விளையாடிய சர். கே.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ராயல் சொஸைட்டியில் அனுமதிக்கப் பரிந்துரை செய்த சர்.சி.வி.ராமனின் பரிசோதனைகளுக்கு உடனிருந்து பல ஆராய்ச்சிகளை செய்த தம்பி கிருஷ்ணனை வானாளவ புகழ்கிறார், அண்ணா. ராமன் எஃப்பெக்ட்’ என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான சாதனை, சொல்லப் போனால், ‘ராமகிருஷ்ண எஃப்பெக்ட்’ தான். ஆனால், தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும், ராமன், ‘இது கிருஷ்ணன் எஃப்பெக்ட்’ என்கிறார். கிருஷ்ணன், ‘இது ராமன் எஃப்பெக்ட் தான்’ என்கிறார்.  பெளதிக சாத்திரத்தின் மற்ற கிளைகளிலும் இவரது கொடி பறந்தது. தற்காலத்தில், ஒளஷதங்கள், வர்ணங்கள், பிளாஸ்டிக், எரிபொருள்கள், நடையுடை யாவற்றிலும் கரியமாணிக்கனாரின் கைவண்ணம் மிளிர்கிறது.

    வத்திராயிருப்பு கிராமத்தில் டிசம்பர் 4, 1898இல் பிறந்த நமது கரியமாணிக்கம் சிவக்கொழுந்து சாரைப் பற்றி சொல்வது,’…அவர் விஞ்ஞானியல்ல. ஆனால். விஞ்ஞானத்தை விளக்குவதில் மன்னன். மகுடிக்கு மயங்கிய அரவம் போல எங்களைக் கட்டிப் போட்டார். பெளதிகமோ, பூகோளமோ, வேதியியலோ, அவரது ஸ்டைலே தனி. அவர் பாடம் மட்டும் நடத்தமாட்டார். பரிசோதனைகளைச் செய்து காட்டுவார். எங்களைச் செய்ய ஊக்குவார். அவரால் தான் நான் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டேன்…’.

    சிவக்கொழுந்து சாருக்கு நெடுஞ்சாண்கிடையாக தாள் பணிந்து வந்தனம் செலுத்தும்

    இன்னம்பூரான்

    சித்திரத்துக்கு நன்றி:

    http://royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=ImageView.tcl&dsqDb=Catalog&dsqImage=EC_1940_12.jpg

    உசாத்துணை:

    http://www.vigyanprasar.gov.in/scientists/KS_Krishnan/KariamanikkamSKrishnan.htm

    Share
  • தன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3…

    இன்னம்பூரான்

    “எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்

    சொன்முறை தொடுப்பது நன்மையாகும்.” (தண்டியலங்காரம்: 2)

    தண்டியலங்காரத்தின் முதன்மை ஸ்தானம் தன்மையணிக்கே. உள்ளது உள்ளபடி. அவ்வாறு அமைந்துள்ள திருமதி. விசாலம் ராமனின் மூன்று தொடர்கட்டுரைகளை படித்த போது பல எண்ணங்கள் மனதில் வந்து போயின. எங்கள் புதுக்கோட்டை சமஸ்தானம், விராலிமலையும், சித்தன்ன வாசலும், குடுமியான் மலையும், ஆதிரங்கன் கோயிலும், திருகோகர்ணமும், பேரையூரும் ஆக ஒரு சிற்ப சாம்ராஜ்யமே. பேரையூரில் ஒரு பெரிய ஜலதரங்கம், நாகநாதசுவாமி கோயில் புஷ்கரணி. தவழும் வாயு தேவன் அபூர்வமாக அங்கு இசைப்பதுண்டு. அது ஒரு நினைவு. வல்லமை இதழின் வாசகர்களை பற்றி யான் அறியேன். கபிலரும், பரணரும் வந்து எழுதினால் கூட, படித்ததைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அத்தனை பரவசம், மவுனத்தின் மீது! அந்த மரபை மீறத் துணியாதே என்று மனம் அடித்துக்கொண்டது. (மனத்தின் ஈசான்ய மூலை,‘இதைப் படித்தாலும் சொல்லமாட்டார்கள்.’ என்று சவால் விட்டது.) இது நிற்க.

    திருமதி. விசாலம் ராமனின் கோர்வையான கட்டுரைத் தொடர், அரிய செய்திகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. அவர் சொல்வது போல இசை பாடும் சிற்பங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றன என்பதை நாம் கண்டறிய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குதிரை சிற்பம் சிதைந்து கிடப்பதாக, படித்ததும் நினைவில் வந்தது. ‘…அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில் இசை, நடனம், நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன…’ என்று அவர் சொல்வதை மனதார ஆமோதிக்கிறேன். முதலிடம் இசைக்கு. ‘ஓம்’ என்று ஒலித்தது உடுக்கு. அந்த ஓசையை அசைத்து இசையாக்கியது மனிதனின் ரசனை. அது இறைவனின் வரம். பாறைக்கும் நாபி உண்டு; ஆத்மா உண்டு; இறையருள் உண்டு. டில்லிவாசியாக இருந்த விசாலத்துக்குத் தெரிந்து இருக்கும், உத்தர சுவாமி மலை மூலவர் சிற்பத்திற்கு உரிய கல்லை தேட காஞ்சி பெரியவர் அளித்த ஆலோசனை பற்றி. விசாலத்தின் கட்டுரையின் நேர்த்தியே, அவர் கூறும் செய்திக்களஞ்சியம். வட இந்தியகோயில்களில் நாமே அபிஷேகம் செய்யலாம் என்பதிலிருந்து ஆகம சாத்திரங்கள் வரை.

    ஒரு கற்பனை: வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவள் கையில் மாசிலா வீணை: சங்கராபரணம். மூங்கில் குழலோதும் மாயக்கூத்தன்: கதனகுதூகலம். உடுக்கொலி: தேவகாந்தாரம். மத்தளத்தில்லானா. பரமாத்வாவும் ஜீவாத்மாவும் சுயநினைவிழந்த ராகமாலிகை நேரம் இது. அற்ப மாந்தர்களாகிய நாம் தள்ளி நிற்கவேண்டும். திருமதி விசாலம் ஓவியங்களை பற்றி மிக குறைவாக எழுதியிருக்கிறார். அவர் நிறைய எழுதவேண்டும், அது பற்றி. அக்காலத்தில் சுவரோவியங்கள் வீடுகளிலும் உண்டு. புதுக்கோட்டையில் நாங்கள் இருந்த வீட்டில் ஒரு மாபெரும் ஶ்ரீராமபட்டாபிஷேக வர்ண ஓவியம். என்ன ஆச்சோ? தஞ்சை பெரியகோவிலில் அம்பாள் சன்னதி விமானத்தில் இருக்கு அதியற்புத ஓவியங்கள் மீது புகை மண்டலம். இதுவா பக்தி?

    ‘ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா’ எல்லாம் நமக்கு புதிய செய்திகள். நன்றி, விசாலம்.

    ‘… வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும்…’ என்கிறார், அவர். அதனால் பேரையூர் ஜலதரங்கம் நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள் இலக்கணத்தில் கலிப்பாவின் துணை உறுப்புகளில் ‘அம்போதரங்கம்’ ஒன்று. நாற்சீரடி இரண்டு அடியால் இரண்டு, நாற்சீரடி ஓரடியால் நான்கு, முச்சீர் ஓரடியால் எட்டு, இரு சீர் ஓரடியாக பதினாறு என்று சொல்லும்போதே, அலை அலையாக என்ற எண்னம் உமக்கு எழுகிறதல்லவா! அந்த நீர்த்தரங்கம் (கடல் அலை) எம்மனதை விட்டு அகலவில்லையே.

    பஜனை: பாபநாசம் சிவன் அவர்களின் விடியற்காலை பஜனையைப் பற்றி என்றோ ஒரு நாள் எழுதினேன். அதை சமீபத்தில் தான் என வலைப்பூவில் பதிவு செய்தேன். ரஷ்யா, ஈரான், பெரு ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் வாசகர்கள். விசாலத்தின் இந்தத் தொடரும் அவ்வாறு விரவி வரவேண்டும். எனக்குப் பிடித்த பஜனை புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் பந்ததி.

    நாதசுரம் என்றவுடன் ஞாபகம் வருவது: புதுக்கோட்டை கீழராஜவீதி, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நடு ராத்திரி ஒரு மணிக்கு வெள்ளப்பெருக்கு எடுத்தோடிய டி.என்.ராஜரத்னம் பிள்ளையவர்கள் வாசிப்பும், ஐம்பது வருடங்கள் கடந்து பாகவதமேளாவுக்காக, நிலவொளி வெள்ளத்தில் நடந்து போகும் போது, காற்றில் வந்த கீதம்: கம்பீர நாட்டை. ‘ஆன்மீக நற்றலை’ விசாலம் சொல்லில்.

    மணியோசை மண்டைக்கு லாஹிரி. மாதாகோயில்களில் மாபெரும் மணி. ஒவ்வொரு மணிக்கும் தனியொரு நாதம். பக்கம் பக்கமாக வரலாறு, இங்கிலாந்தில். அவற்றை தொகுத்து வைத்த சீ.டி. அகப்படவில்லை. போகட்டும். விசாலம் தான் பக்க வாத்தியங்களின் வரலாறு படைத்து விட்டாரே.

    இசை பாடும் தூண்களைப் பற்றி அவர் எழுதிய மூன்றாவது கட்டுரையின் நிறைவை மெச்சத்தான் வேண்டும். அவர் பெருமையுடன் கூறுவது சாலத்தகும்.

    ‘…இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிபாட்டின் போது தாரை தப்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது. ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை…’

    என்கிறார் திருமதி.விசாலம். ஒவ்வொரு சொல்லும் இறையாண்மையின் பிரதிபலிப்பு. பல புது தகவல்களை இவருக்கு கொடுத்து உதவிய,இசை மேதையும் சங்கீத வித்துவானும் ஆன அவரது சகோதரர் திரு வெங்கட் அவர்களுக்கும் வல்லமை வாசகர்கள் சார்பில் (!) நன்றி தெரிவிக்கும்,

    இன்னம்பூரான்

    11 06 2013

    சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/2/2c/Tanjai1000.jpg

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • நீயும், நானும், விஞ்ஞானமும் -2

    இன்னம்பூரான்

    (‘… ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை…’)…

    ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்’

    என்ற மஹாகவியின் சொப்பனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞான சாதனைகளை இன்று காண்கிறோம். ஆலய நிர்மாணத்துக்கான பொறியியல் சூத்திரங்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் உதயம். அதையும் சுட்டி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை இராமானுஜம் மையம் வெளியிட்டது தான் இத்தொடருக்கு ஊக்கம் அளித்த நிகழ்வு. கணக்கு சாத்திரம் கிருஷ்ண பகவான் மாதிரி. எல்லா துறைகளும் அதற்கு கோபிகைகள். அது ஒருபுறமிருக்க, மற்றொரு சிந்தனை.

    மாயை (mysticism) மயக்கியது ஆதிமனிதனை; நம்மையும் தான். அதனுடைய ஈர்ப்பு/ஆகர்ஷணம் ஆழமானது. சிந்தனையின் முதல் பரிமாணம்,‘அதுவோ அல்ல இதுவோ?’ (speculation) என்ற அலைச்சல். விஞ்ஞானத்தின் முதல் படி,‘சோதனை/பரிசோதனை (experimentation). அதனுடைய குறிக்கோள், நிரூபணம் (validation). என்னுடைய இந்த குறும்சிந்தனையை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தேடுபொறிகளில் ‘விஞ்ஞானம்/அறிவியல்’ என்ற சொற்களுக்குப் பதிவுகள் தேடினேன். பல்லாயிரம் கிடைத்தாலும், பெரும்பாலும் திசை மாறியவை. விஞ்ஞான அணுகுமுறையை (scientific temper) அறவே தவிர்த்தவை. ஆம். திருமதி சுபாஷிணி ட்ரம்மெல் கூறியது போல் தமிழில் விஞ்ஞானத்தை பற்றிய விரிவுரைகள் சொற்பம். அவற்றில் விஞ்ஞான அணுகுமுறையை பற்றி ஒன்று கூட தென்படாததால், அதை பற்றிய ஒரு பழங்கதையை கூற துணிவு பூண்டேன்.

    ஐம்பது வருடங்கள் முன்னால், நான் அடிக்கடி செல்லும் சைண்ட் லூயிஸ் நகரத்திற்கு ஆஷ்பி பிரபு (Lord Ashby FRS: Vice Chancellor of Belfast and Cambridge Universities) வந்திருந்தார். அங்குள்ள புகழ்வாய்ந்த வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் ( அதன் ஜன்ம சரித்திரம் ஒரு நன்முத்து.) பெளதிக பேராசிரியர் ஆர்தர் க்ராம்டன் (1927 நோபெல்: electromagnetic radiation) அவர்களின் பாமரகீர்த்தி பாட. அடக்கம், பொறுமை, தன்னிச்சை விலக்கல், திறந்த மனம், விஞ்ஞானத்தின் தார்மீகத்தின் மீது அசையா உறுதி, சாதி மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவது ஆகியவை தான் பேராசிரியர் ஆர்தர் க்ராம்டனின் வாழ்நெறி; அது தான் விஞ்ஞான அணுகுமுறையின் அடித்தளம் என்று அவரை பாராட்டி பேசினார். அந்த பிரசங்கத்தை இருபது வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த பேராசிரியர் மைக்கேலிஸ் (Anthony R. Michaelis) மேற்கூறிய வாழ்நெறியின் மற்றொரு உறைவிடம் ஆஷ்பி பிரபு என்று எழுதி, அவருடைய ‘தன்னுடைய அதிகாரம், ஆளுமை, தலைமை ஆகியவற்றை திணிக்காமல், மற்றவர்களை தன்வசம் படுத்தும் திறன்’ பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தூண் என்றார்.

    ஆம். இன்று விஞ்ஞானம், புலமை, ஆய்வு, கல்வி ஆகிய துறைகளிலும் நிர்வாகம் ( தமிழ்த்தாத்தா வாக்கின் படி ‘கார்வார்’) இன்றியமையாதது. ஆஷ்பி பிரபு தன்னுடைய அபார அனுபவத்தின் பயனாக, சொல்வதை கேட்போம். ஆர்வமிருந்தால் மீண்டும் சந்திப்போம்.

    ‘தற்காலம் பல்கலைகழகங்கள் கோடிக்கணக்காக வரவு செலவு செய்கின்றன. நல்ல நிர்வாகமிருந்தால் தான் அவற்றின் பயன் சமுதாயத்திற்கு கிட்டும். அரசு/தனியார் துறை/ராணுவம் போல் அல்லாமல், இங்கு கொள்கை தீர்மானங்களின் பிறப்பு, விஞ்ஞான பரிசோதனை பலகைகளில், நூலகத்தில், விருந்துண்ணும் வேளைகளில்…‘

    ~ஆஷ்பி பிரபு

    அவற்றுடன் கவனம் ( ஆப்பிள் விழுந்த கதை), கனவு (மரபணு சூத்திரத்தின் சித்திரம்), மாயை (புஷ்பக விமானம்), இதரவிதரம் (மின்விளக்கு) ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.tribuneindia.com/2004/specials/lead4.jpg

     

    உசாத்துணை: http://garfield.library.upenn.edu/michaelis/title328.pdf

    Share
  • நீயும், நானும், விஞ்ஞானமும் -1

    இன்னம்பூரான்

    கல்விக்கடலின் விசாலம் பெரிது; ஆழம் அதிகம்; அலை ஓசை ஓயாது. திகைத்து ஓடி விடுவது எளிது; அப்படி ஓடினால், அது அறியாமையின், சோம்பலின், அசட்டையின் விளைவே. அக்கடலின் மூலாதாரமோ ஒரு சிறுதுளி தான். தலைக்காவேரி; கங்கோத்ரி, சிறுதுளி பெருவெள்ளம். கல்விக்கடலை கடக்கத் தோணிகள் உண்டு பல. கலங்கரை விளக்குகளும் ஒளி வீசி இருளையும், மருளையும் விலக்கும். தமிழில் விஞ்ஞானத்தை விளக்கும் நூல்கள் சொற்பம். வழக்கறிஞர் பெ.நா. அப்புசாமி அவர்கள் இந்த வகையில் ஒரு முன்னோடி. இடைவிடாமல் 70 வருடங்களுக்கு மேல், பாமர விஞ்ஞானம் படைத்தார்.

    ‘…படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமை தரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது…’(திரு. இரா. முருகன் இந்தியா டுடே 2001)

    படைப்புகளும், படைப்பாளர்களும் வித விதமான மெய்ப்பாடுகளை முன்னிறுத்தினாலும், சராசரி தமிழன் வாழ்நாள் முழுதும் விஞ்ஞானத்தின் அருமையான போக்குவரத்துக்களை எளிதில், ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்கள் அரிது, அரிது. பெ.நா. அ. அவர்களும் மறைந்து விட்டார். மேலும் தேடி அறிந்துகொள்ளும் திறனை, நாம் வளர்த்துக்கொள்ளமுடியும். அதன் துணைகொண்டு அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாரிசுகளின் முன்னேற்றத்தை வசதியாக அமைத்துக்கொள்ள இயலும். இத்தகைய சிந்தனைகள் என்னை ஆட்டிப்படைத்த வண்ணம். அதனால் தான், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், என்றெல்லாம் எழுதிய யத்தனங்கள் விழலுக்கு இறைத்த நீர் என்றாலும், அத்தகைய ஆர்வங்கள் மடிந்து போகவில்லை. சாக்ஷி, இந்த தொடர்.

    நேற்று (29 05 2013) லண்டனில் ஒரு மருத்துவ ஆய்வாளர் ராயல் சொஸைட்டி எனப்படும் மையத்தில் ஒரு உரையாற்றினார். இலவசம். க்யூ கட்டாயம். காணொளி பிறகு கிடைக்கும். முதலில் அதனுடைய பூர்விகம் கேளும். வில்லியம் க்ரூன் (1633-1684) என்ற அங்கத்தினரின் நன்கொடை இந்த க்ரூனியன் பிரசங்கத்தை 1738 லிருந்து வருடாவருடம் நடத்த உதவுகிறது.

    இவ்வருடம் : ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட் (Professor Frances Ashcroft FRS) நேற்று மாலை 6 30லிருந்து 7 30 வரை அளித்த ‘சிசுவை பாதிக்கும் டயப்பிட்டீஸ்’ என்ற பிரசங்கத்தின் சாராம்சம்:

    “… ஒரு பெட்டி சாக்லெட்டை ஒரு பிடி பிடித்தாலும் சரி, கொலைப்பட்டினி போட்டாலும் சரி, நமது மண்ணீரல் (பாங்கிரியாஸ்) தனக்குத்தானே, சுரக்கும் இன்சுலினை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்கும். இந்த இயற்கை வரைமுறை தடுமாறினால், இன்சுலின் சுரப்பதில் தகராறு. சர்க்கரை ஏறும். அது தான் டயபிட்டீஸ். ஒரு நுட்பமான புரத அமைப்பு (ATP-sensitive potassium (KATP) channel) எப்படி இந்த இன்சுலின் ஆளுமையை துல்லியமாகவும், அனாயசமாகவும், தடுமாறாமல் கையாளுகிறது என்பது பற்றிய ஆய்வு விவரங்களை யாவருக்கும் புரியுமாறு, ஆதாரங்களுடன் கூறுவது தான் இந்த பிரசங்கத்தின் முதல் படி. அடுத்தது, மரபு அணு முரண் காரணமாக, பிறந்தவுடன் சில சிசுக்களுக்கு, அபூர்வமாக, இந்த வரைமுறை தடுமாறும் சிக்கல் இருப்பதை கண்டறிந்து, புதிய சிகிச்சை பற்றி விழிப்புணர்ச்சி அளிப்பது. இந்த துறையில் அவர் செய்த ஆய்வுகளின் பயனாக, மருத்துவ உலகத்துக்குக் கிடைத்த புதிய பாதையை பாராட்டி, அவருக்கு இந்த கெளரதை அளிக்கப்பட்டது.

    சில உபரி செய்திகள். ராயல் சொஸைட்டியில் நான் முதலில் தேடியது பூகோள சாத்திரம், தீர்க்க ரேகைகள் பற்றி; நோபலை விட அதிகமாக மதிக்கப்படும் கோப்லி என்ற சிறிய ஆனால் பெரிய பரிசு. அது எடுத்துச் சென்ற இடம், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்ற பிரபல அரசியல்வாதி / விஞ்ஞானியின் ‘மின்சாரக்கனவுக்கு’ அளிக்கப்பட்ட கோப்லி மெடல். அது எடுத்து சென்றவிடம், பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட். ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை. இந்தியாவிலேயே சிறந்த விஞ்ஞானக்கூடங்களும், விஞ்ஞானிகளும் உண்டு. ஆனால், விஞ்ஞான விழிப்புணர்ச்சி, மிகக் குறைவு. எது எப்படி இருந்தாலும், வாசகர்களின் விருப்பம் தான் ராஜா. ராணியும் அதுவே.

    உசாத்துணை:

    http://royalsociety.org/events/2013/croonian-lecture/

    Notes Rec. R. Soc. Lond. 1960 15, doi: 10.1098/rsnr.1960.0020, published July 1, 1960:Downloaded from rsnr.royalsocietypublishing.org on May 30, 2013

    சித்திரத்துக்கு நன்றி: http://www.york.ac.uk/media/news-and-events/publiclectures/Frances%20Ashcroft.jpg


    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 31

    இன்னம்பூரான்

    சில நிமிடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் தணிக்கைத்துறையின் தலைவராக (ஸீ.ஏ.ஜி.) திரு. சஷிகாந்த் சர்மா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படப்போவதாக ஹேஷ்யம் வலுத்து வருகிறது. உலக குடியரசுகளில், குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில், இந்தப் பொறுப்பேற்க தகுதி பெற்ற நபரை தேர்வு செய்ய ஜனநாயக மரபுகள் உண்டு. இந்தியா மட்டும் விதி விலக்கு. பிரதமர் செய்யும் தேர்வு மட்டும் செல்லும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக, இந்திய தணிக்கைத்துறையை புறக்கணித்துத்தான், இந்த தேர்வு நடைபெறுகிறது. 150 வருடங்களாக கட்டுக்கோப்புடன் காக்கப்படும் அந்த துறையின் உத்யோகஸ்தர்களின் சுதந்திர/நடுநிலை/அச்சமும் சிபாரிசும் விலக்கிய அணுகுமுறை தான் அதற்குக் காரணம். ஓணான் தான் வேலியை தாங்கும் என்ற மனப்பான்மை மற்றொரு காரணம்.

    எனினும், சில நிமிடங்கள் முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல, இது வரை வெளி இடங்களிலிருந்து உள்புகுந்தத் தலைமையை தணிக்கைத்துறை வசீகரித்து விட்டது, தன் வசம் இழுத்துக்கொண்டது என்பதும் வரலாறு மறக்காத உண்மை. அந்த இதழ் கூறுவதை, அதன் வாசகத்திலேயே, இங்கே:

    ‘…But, given the kind of fierce independence that CAG and his officers from the Indian Audit and Accounts Service have enjoyed all these years, it is tough to see the organisation meekly becoming a silent bystander to government’s misdeeds. In fact, it wouldn’t be surprising if Sharma hogs the limelight as the face of an aggressive and fiercely independent CAG…’

    அதாவது, வரப்போகும் தலைமையும் அவ்வாறு ஆகர்ஷிக்கப்பட்டு, இன்றைய தலைவர் திரு.வினோத் ராய் போல, கடைசியாக தணிக்கைத்துறையிலிருந்து வந்த திரு. அர்தேந்து பக் க்ஷி மாதிரி சுதந்திரமாகத் தொண்டு செய்தால், அது வியப்பைத் தராது.

    ததாஸ்து என்று சொல்லி, நாம் திரு.வினோத் ராய் அவர்களை வாழ்த்தி விடை கொடுப்போம். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆரூடம் பலிக்கட்டும், ஹேஷ்யம் பலித்து விட்டால்.

    இன்னம்பூரான்

    Hindu Update: One hour ago: (8.46 P.M. I.S.D)

    ‘…Defence Secretary Shashi Kant Sharma was on Tuesday named as the new Comptroller and Auditor General of India (CAG). The 1976 Bihar cadre officer will succeed Vinod Rai, who superannuates on Wednesday after five and a half years of eventful tenure as the head of the Constitutional financial watchdog.
    “The President of India has appointed Shashi Kant Sharma, IAS, as the Comptroller and Auditor General of India, in terms of Article 148 (1) of the Constitution of India,” the Finance Ministry said in a statement.
    Mr. Sharma, who holds a masters degree in political science from the University of York, will be taking over charge of the CAG from May 23, 2013, it said. He will be administered the oath of office by President Pranab Mukherjee on Thursday. Like Mr. Rai, Mr. Sharma too has served as Secretary in the Department of Financial Services. The CAG is appointed for a term of six years or till the incumbent attains the age of 65 years, whichever is earlier. CAG audit reports on 2G spectrum and coal block allocations during Rai’s tenure triggered a number of controversies and raised the hackles of the government, besides bringing in the concept of presumptive loss in audit.
    *
    The last sentence is not factually correct. This announcement was unduly delayed, if a robust practice of yesteryears is considered.
    Innamburan
    21 05 13

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 30

    இன்னம்பூரான்


    இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.

    கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.

    அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
    சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.

    அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.

    இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
    அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
    நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
    ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
    குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;

    இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
    வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.

    உசாத்துணை:

    http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=40390


    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-vcKSHYj-3lc/TfM1y3C05wI/AAAAAAAAAFg/A-HNd614QXk/s1600/SUPREME+COURT+AND+PRIVACY+RIGHTS.jpg


    Share
  • உன்மத்தம் : 3

    இன்னம்பூரான்

    எதுவாயினும் காய் பழுக்கக் காலம் தழைக்க வேண்டும். தெய்வசங்கல்பம் அருளிச்செய்தல் கிட்ட வேண்டும். ஒரு மாதகாலமாக, எழுதி வைத்ததை, வாசகர்கள் விரும்பியும், கண்டும் காணாமலும் இருந்தேன். இன்று உத்தரவு பிறந்தது.

    ‘…அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
    அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
    அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
    எப்படிப் பாடினாரோ…’

    ~ சுத்தானந்த பாரதியார் பாடல்: டி.கே. பட்டம்மாள் பாடியது: கர்நாடக தேவகாந்தாரி: இணையதளம்.

    சில நாட்கள் முன்னால் அசரீரியாக ஒரு வாக்கு உலவி வந்தது; எம்மை ஆட்கொண்டது. அது ஒரு நிகழ்வை பற்றியது. ‘ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்’ இணையதளத்தில் பதிவாகிறது.

    ‘… வடமொழியில் பல நூல்கள் இயற்றி ஒப்பற்ற சிவபக்தராக விளங்கியஅப்பைய்யதீக்ஷிதர் அவர்களது சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு ஸ்வாமிகள் 2-6-1930-ல் விஜயம் செய்தார்கள். இந்த ஊர் ஆரணிக்கு அருகில் மூன்று மைல் தூரத்திலுள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர்ச் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக் கொண்டு, 400 வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப்பற்றி பிரஸங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரது அவதார நாளை ஒவ்வொருவருடமும் கொண்டாட வேண்டமென்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள்…’
    என்ற வாக்கியம் ‘ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பிறகு எழுதலாம். மஹான் அப்பய்ய தீக்ஷிதரவர்களின் உன்மத்தத்தை பற்றியும் அவர் அந்த நிலையில் ‘பொருளுணர்ந்ததை’ பற்றி எழுது.’ என்று பணித்தது தெய்வசங்கல்பம். அதை அடுத்து, உடனக்குடன்
    ‘… பொருளுணர்ந்து உனையே அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே…’
    என்ற பாடல் வந்தது திவ்ய சமிக்ஞை. உடனே, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமண்யம் அவர்கள் தீக்ஷிதர்வாள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை என் சேகரத்தில் விழுந்து விழுந்து தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தது என்னமோ காஞ்சி மடத்து இணைய தளத்தில் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்). அது ஒரு மஹாபாக்யம் என்பதில் எனக்கு சம்சயம் இல்லை.

    ‘உன்மத்தத்தின்’ நிரல்நிறை ஒரு சுயம்பு. ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’ என்று துவங்கி, அங்குமிங்குமாக அலைந்து திரிந்து, ‘… உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம்…’ என்று கோடி காட்டிவிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளிடம் தஞ்சம் புகுந்தாலும், அப்பைய தீக்ஷிதரிடம் பசுவின் கன்றைப்போல திரும்பி வருகிறது, ஆக்ஞைகள் பல பிறப்பித்து. இனி ‘தெய்வத்தின் குரல்’:

    ‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’

    “…த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு*.

    அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்

    ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி :*

    என்கிறார். “பரமேஸ்வரா!உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது”என்கிறார்.

    சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது!ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை;சிவாத் பரதரம் நாஸ்தி”என்றால் எப்படி ஸரியாகும்?அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!”இருக்கிறது”என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி”என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்”என்றதாகத் தோன்றுகிறது.

    ‘தரம்’என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.

    சிவனுக்கு ‘மேலே’தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

    அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது:”இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘ பகவத் தர :’என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!

    எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?

    எப்படியா?”இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்”என்று ச்ருதியே சொல்கிறது.

    ‘அபிமர்சனம்’என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே?இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்;தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’என்று ஆக்கிவிடுவான்!

    அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’:’ சிவாத் பரதரம் ‘தான்…”

    ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு’ என்றார் ஆசார்யாள். தீக்ஷிதரவர்கள் ‘கனகபல ரஸம்’ அருந்தி உன்மத்தம் நாடினார் என்று அமரர் டோண்டு சார் எழுதி வைத்தார். அதை சுருக்கி எழுத எனக்கு மனம் வரவில்லை.

    “…ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.”

    நிரல் நிறை உன்மத்தம், பால் ப்ரண்டனை இழுத்துக்கொண்டது போல், நம்மை மறுபடியும் பகவான் ரமணமஹரிஷிகளிடம் இழுத்துச் செல்கிறது, பொருளுணர.

    “…ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்…”

    (முற்றும்?)

    பி.கு. ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அப்பையதீக்ஷிதர் வம்சாவளி. நான் அமெரிக்காவில் சந்தித்த நண்பரொருவரும் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று தெரியவந்தது. மகிழ்வூட்டியது.

    உசாத்துணை:

    1. http://www.kamakoti.org/tamil/3dk293.ht
    2. ‘Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkataramaiah, page 53 -54’ Cited in விக்கிப்பீடியா.
    3. dondu.blogspot.com/2009/07/30072009.html

    சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/appayya-didkhitar.jpg

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 29

    இன்னம்பூரான்

    இந்தத் தொடரை விட்ட குறை எட்டு மாதங்களுக்கு முன், ஒரு வாசகரின் பதிலுக்குக் காத்திருந்ததால். ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லையே! தற்காலத்திய ஆடிட்டர் ஜெனெரல் திரு. விநோத் ராய் அவர்கள் மே மாதம் வேலையிலிருந்து ஓய்வு பெறுவார். புதிய ஆடிட்டர் ஜெனெரல் நியமனம், பிரதமர் கையில். இது தான் முப்பது-நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. தணிக்கைத் துறையிலிருந்து தலைமையை தேர்வு செய்வதில்லை. எல்லாம் ஐ.ஏ.எஸ். தலைகள். திரு. விநோத் ராயும் அங்கிருந்து வந்தவர் தான். ஆனால் பாருங்கள். தணிக்கைத்துறை, தன்னுடைய சீரிய மரபுகள், உகந்த நடைமுறைகள், வைக்கோல் போரில் ஒளித்து வைத்த ஊசியை தேடிப் பிடித்து விடும் திறன், விருப்பு/வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை, அச்சம் தவிர்த்த மனப்பான்மை ஆகியவை மூலம் அவரைப் போன்ற, காலம் சென்ற திரு. சி.ஜி.சோமையா அவர்களைப் போன்ற உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தன்வசம் இழுத்துக்கொண்டது. தற்காலம் ஊடகமெங்கும், உலகளாவிய வகையில் இந்திய தணிக்கைத் துறையின் சாதனைகள் புகழப்படுகின்றன. ஐ.நா. அமைப்புகள் எல்லாவற்றிலும், இத்துறையினர் பேரும், புகழுமாக, பணி செய்கிறார்கள். மத்திய அரசின் அசரீரி வாக்கு ஆகிய அமைச்சரொருவர், ‘ஒருவர் தலைமை’ வேண்டாம். ஒரு ஆடிட் குழு அமைக்கலாமே என்று பட்டம் விட்டுப் பார்த்தார். துரிதமாக, அதை வாபஸ் பெற்றார். மற்றொரு அழகிய பெருமாள் அமைச்சர், ‘அதிகாரிகள் என்ன? நானே ஆடிட்டுக்கு அஞ்சுகிறேன்!’ என்று பூச்சாண்டி காண்பித்து விட்டு, எள்ளல் செய்கிறார்.

    எதற்கும், இங்கு நினைவூட்ட வேண்டியது,  மே 30, 1949 அன்று, அரசியல் சாஸனம் வகுக்கும் அவையில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள், ‘…இந்திய அரசியல் சாசனத்தின் முதல் முக்கிய பதவியாக ஆடிட்டர் ஜெனெரல் பதவியைக் கருதுகிறேன்…நீதிபதிகளின் ஸ்தானத்தை விட இது மேலும் பொறுப்பு மிகுந்த பதவி.. நீதித்துறையை விட இதை முக்கியமாகக் கருதுகிறேன்..‘என்றார், என்பதே. பல சான்றோர்கள் அதை வழி மொழிந்தார்கள். தணிக்கை மட்டுமல்ல; அரசின் வரவு/செலவு விஷயங்களை, ஆதியோடந்தமாக அலச வேண்டியதால், Comptroller and Auditor General என்ற நாமகரணம் தேவை என்றார், திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அதையெல்லாம் முற்றும் புறக்கணித்து விட்டார்கள். அரசு-தணிக்கை மோதலை கண்டு மனம் வருந்தி, ஓய்வு பெற்ற சில தணிக்கை அதிகாரிகள் ஜனாதிபதியிடம், ஒரு மேன்மை குழு மூலம்தான் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். அதில் என்னுடைய கருத்து, அமெரிக்கா/இங்கிலாந்து போல, ஓய்வு பெறும் ஆடிட்டர் ஜெனரலும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே. என்ன செய்யப்போகிறார்களோ! தெரியவில்லை, பாரதமாதாவே! நல்லதே நடக்கட்டும்.

    அடுத்த செய்தி விசித்திரமானது. சில அரசுத் துறைகள், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு போடப்போறோம். ஒப்பந்தம் வரையுமுன், எங்கள் திட்டவட்டத்தைப் பாருங்கள் என்கிறார்கள், ஒரு துறையினர். நாங்கள் டெண்டர் திறகும்போது, வந்து சாட்சி இருங்கள் என்கிறது, மற்றொரு துறை. திரு.கேம்கா என்ற யோக்கியமான ஐ,ஏ.எஸ். அதிகாரியை வறுத்தெடுக்கும் ஹரியானா அரசு, நிலபுலன்கள் மதிப்பை தணிக்கைத்துறையே போடட்டும் என்று சொல்கிறது.  இது ஒரு பகடியாகத்தான் தோன்றுகிறது. என்னுடைய அனுபவத்தில் தணிக்கைத்துறை முன்கூட்டியே அரிதான சில சமயங்களில் அரசை அன்புக் கட்டளையாக எச்சரித்தது உண்டு. ஆனால், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று கோஷமிடுவது ஒரு தகிடுதத்தமே அல்லது பகடியே. வாசகர்களின் விருப்பத்தைப் பொறுத்து, அது பற்றி, விவரமாக அலசி, அடுத்த கட்டுரை அமையலாம். சமைக்கும் முன் ருசி பார்ப்பது எப்படி?

    சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-QuT8xa5bgrc/UNGPnQOl_xI/AAAAAAAAFCY/_0hUWBnS_DY/s400/auditor.jpg

    Share
  • யுகாதி ఉగాది, ಯುಗಾದಿ) गुढीपाडवा

    நவீன பஞ்சாங்க படனம்

    இன்னம்பூரான்

    10/11.04 2013

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு உலக மாந்தர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.

    சுபிக்ஷமாக உங்கள் வாழ்க்கை அமையும். முயற்சியையும், பயிற்சியையும் கை விடேல்’

    குடும்பமும், பரிவாரமும், சுற்றமும், சமுதாயமும் செழித்தோங்கும். மனித நேயமே துணை.

    தனி நபர்களின் முன்னேற்றம், அவர்கள் கையில். ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.

    இறைவனை தொழு. தன் கையே தனக்கு உதவி என்பதை மறக்காதே.

    முதுமையை பழிக்காதே. குழவியை விரட்டாதே. யாரையும் இகழாதே.

    நேசம் ஒரு பிணைப்பு. அன்பு ஒரு பிடிப்பு. கனிவு ஒரு பண்பு.

    ஒரு அசரீரி சொல்ல, கை எழுத, நானும் பஞ்சாங்க படனம் கேட்டுக்கொண்டேன்.

    ஜய விஜயீ பவ!

    அன்றொரு நாள் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தது, ‘விஜய’ வருஷத்தின் விஜயம் போது கண்ணில் தென்பட்டது

    “…உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது…வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்…விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின… இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது. சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங் கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள்…இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண் மனைக் குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள்…”

    சுபம். “ஜய விஜயீபவா!”

    சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilnews.cc/admin/uploads/imagesCAZDWK5U.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 17

    இன்னம்பூரான்


    சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.

    திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.

    அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.

    தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.

    பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.

    இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!

    சித்திரத்துக்கு நன்றி:

    http://2.bp.blogspot.com/-RVUgUWAEfY4/T6Idc2X4PTI/AAAAAAAAAhc/rhE-vQNOd7A/s1600/medicine.jpg

    Share
  • உன்மத்தம்: 2

    இன்னம்பூரான்

    பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.

    எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.

    உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:

    உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
    மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…

    `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.

    வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.

    “…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.

    பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.

    (தொடரும்)

    உசாத்துணை:

    http://sirugamaniganesan.blogspot.co.uk/2011/10/sadguru-sri-seshadri-swamigal.html

    சித்திரத்துக்கு நன்றி: http://avatharsrisesha.files.wordpress.com/2009/12/ms.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 16

     

    இன்னம்பூரான்

    கனம் கோர்ட்டார் அவர்களே ~14

    http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jp

     

    எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!

    என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

    “லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.

    தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.

    இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.

    அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!

    பெரிசு ஆறுமுகம் சேர்வை: 

    ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.

    ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.

    (தொடரும்)

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jpg

    Share
  • உன்மத்தம் :: 1

    இன்னம்பூரான்

    ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’

    ‘பித்தா’ என்ற இந்த தெய்வம் தந்த ‘முதல்நற்றமிழ்’ சொல் என்னை எழுபது வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் வித்யாசாலையில் காலை பிரார்த்தனை இவ்வாறு தொடங்கும்; உரக்கக் கோரஸாக, பல சுவரபேதங்களில் பாடுவோம்; பொருள் அறிந்ததில்லை. பாலு சாரிடம் பெருமானை ‘பித்தன்’ என்று விளிப்பது முறையோ என்று கேட்டேன். சொன்னது அப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தது; மறந்து விட்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கு சென்றபோது, தலைமை ஆசாரியர் ‘பழைய மாணவரா’ என்று கனிவுடன் வினவி, பிரார்த்தனைக்கு அழைத்துச்சென்றார். அதே கோரஸ். நானும் கலந்து கொண்டேன். ஏதோ ஒரு ஈரப்பசை கண்களில். அது நிற்க.

    பெருமான் தனக்கு இட்டுக்கொண்ட விருது, இது. ஆலாலசுந்தரத்துக்கு மந்திரமாக உபதேசிக்கப்பட்டது. சுந்தரர் ஆட்கொள்ளப்பட்டது, திருவெண்ணைநல்லூர் பெருமானால். ‘தாட்பூட் தஞ்சாவூர்’ என்றெல்லாம் அதட்டிவிட்டு, சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி விட்ட மறையோன், திருவெண்ணைநல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டார். பின்னர் தன் கோலம் காட்டி, தரிசனம். சொற்றமிழால் பாடுக என்று ஆணை. திகைத்து நின்ற மாஜி மாப்பிள்ளையிடம் பெருமான் ‘மணப்பந்தலில் என்னை பித்தனோ மறையோன்..’ என்றல்லவா நிந்தித்தாய். ‘பித்தா’ என்றே தொடங்கு என்றார். பதிகம், கோரஸ், மீள் கோரஸ், இன்றைய ‘உன்மத்தம்’ தொடர்… அகரவரிசை அன்பர்கள் முதல் திருமுறையிலேயே திருஞானசம்பந்தர் எருக்கத்தம் புலியூரில்,

    ‘விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ

    பெண்ஆண்அலி ஆகும் பித்தா பிறை சூடி…’

    என்று தோத்திரம் செய்ததை முன் வைப்பர்; எப்படியும் எல்லாரையையும் பைத்தியமாக அடிக்கும் பித்தத்தின் தலைக்காவேரி இறையருள் தான் என்பதையும் பார்ப்போம்.

    முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே. (6.25.7)

    காதல் கொள்வதே பித்துப்பிடித்தாற்போலத்தான். பேரும், உருவும், ஊரும் அவளை மயக்கி, பெற்றோரை மறக்கச்செய்து, மரபு, வாழ்நெறி, அன்றாட நடவடிக்கை, தன்னிச்சை எல்லாம், தலைவனை நினைத்த மாத்திரம் காணாமல் போய்விடுகின்றன. ‘தேவாரம்’ என்ற இணையதளத்தில் கூறியப்படி,

    ‘… இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது… இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க… சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்…’

    பிச்சி ஆனாளே, தலைமகள். அது காதலா? மோகமா? அல்லது பக்தியின் உன்மத்தமா? என்று நீங்களே தன்னுள்ளத்தைக் கேட்டு அறிந்து கொள்ளவும். பித்தனின்’ உன்மத்தத்தின் உத்தமத்தை, அதன் உன்னதத்தை அறிந்தவர்கள் அரிது. உன்மத்தங்கள் தான் எத்தனை வகை? எத்தனை வண்ணம்? அது மனோபாவமா அல்லது மோனமா அல்லது வெறும் மோகமா? வெறும் மோகமென்று ஒன்று உண்டா என்ன? மஹாகவி பாரதியார்’…கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!…’ என்று மன நிறைவுடன் பாடியதில் என்ன குற்றம் கண்டீர், ஐயா? அல்லது கோதா பிராட்டியார் ஶ்ரீரங்கநாதனை மோஹித்ததில் உன்மத்தம் தலைக்கேறவில்லையா? தலபுராணம் என்று அதை ஒதுக்கவா பார்க்கிறீர்கள்? நம் ஶ்ரீரங்கபெளராணிகையை கேட்டால், அவர் செப்புவார்,

     ‘…ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். “என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?”

    “சுவாமி, தங்கள் கருணையே கருணை!”

    ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

    இப்படியும் ஒரு பிச்சியா!

    தற்கால இலக்கியத்தில் தேடுவீர்களானால், இதை படியும்: ‘உமக்கு சிவகாமியின் சபதம் தெரியுமோ? ‘உன்மத்தத்தை’ ‘சித்தபிரமை’ என்கிறார், கல்கி. தன்னுடைய ‘சித்த பிரமை’ தெளிந்த பின், அதை ‘பக்தியின் முதிர்ச்சி’ என்கிறார், ஆயனர் வாயிலாக. கேளும்.

    *

    ‘… ஏகாம்பரநாதரையே என் பதியாக ஏற்றுக் கொண்டேன்!” என்றாள் சிவகாமி. தம் அருமை மகளுக்குச் சித்தப்பிரமை முற்றி விட்டதோ என்று ஆயனர் ஐயமடைந்தார். இன்னும் சிறிது பேசி அவள் தெளிந்த அறிவுடன் இருக்கிறாள் என்பதைக் கண்டார். இது சித்தபிரமை அல்ல பக்தியின் முதிர்ச்சிதான் என்று நிச்சயமடைந்தார்… கோயில் குருக்கள் சுவாமிக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் செய்து தட்டிலே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தட்டில் பழம், புஷ்பம், விபூதி, குங்குமம் ஆகிய பிரஸாதங்களுடனே, ஆயனரின் முன்னேற்பாட்டின்படி, திருமணத்துக்குரிய திருமாங்கல்யமும் இருந்தது. சிவகாமி அந்தத் திருமாங்கல்யத்தையும் புஷ்ப ஹாரத்தையும் பக்தியுடனே பெற்றுத் தன் கழுத்திலே அணிந்து கொண்டாள். பின்னர், நடராஜனாகிய இறைவனுடைய சந்நிதியிலே நின்று சிவகாமி நடனமாடத் தொடங்கினாள். சிறிது நேரம் ஆனந்த பரவசமாக ஆடினாள். பிற்பாடு, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்” என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது, “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.கல்கியின் சிவகாமியின் சபதம் முற்றிற்று’.

    *

    மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக, வள்ளலார்,

    ‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்

    மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி

    மயில் குயிலாச்சுதடி’

    என்றார். ‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது.

    அவன் தான் பிறை சூடிய பித்தன். தோடுடைய செவியன். ஆடிய பாதம். திருவாரூரில் அஜபா நடனம்; திருக்குவளையில் பிரம்மத் தாண்டவம்; நாகையில் பாராவாரதரங்க நடனம்; திருமறைக்காட்டில் ஹம்ச நடனம்; திருவாய்மூரில் கமல நடனம்; திருக்காறாயில் குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடிய காளி தாண்டவம்;

    திருநள்ளாற்றில் உன்மத்த நடனம்.

    உன்மத்தம் தலைக்கேற, ஏற, தொடர் நீளும் போல் இருக்கிறது. உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை மற்றும் பதித்து, கட்டுரை நீண்டுவிட்டதற்கு சால்ஜாப்புக்கூறி, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

     ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட

    ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
    பாதி மதியாடப் பாரண்ட மீதாட

    நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 –(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)

    (தொடரும்)

    உசாத்துணை:

    http://www.thevaaram.org/index.php

    http://sekizhar.blogspot.co.uk/2012/10/blog-post_8305.html

    http://sivamgss.blogspot.co.uk/2012/11/blog-post_15.html

    Share