தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 30

0

இன்னம்பூரான்


இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.

கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.

அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.

அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.

இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;

இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.

உசாத்துணை:

http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=40390


சித்திரத்துக்கு நன்றி:

http://1.bp.blogspot.com/-vcKSHYj-3lc/TfM1y3C05wI/AAAAAAAAAFg/A-HNd614QXk/s1600/SUPREME+COURT+AND+PRIVACY+RIGHTS.jpg


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *