வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

பவள சங்கரி

விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!

அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
மகாத்மா காந்தி

சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

வங்கியில் காசோலையைக் கொடுத்து ஞாபகக் குறியையும் பெற்றுக் கொண்டு காத்திருக்கும் வேளையில் இருக்கையின் மறு முனையில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஏனோ ஒரு வாட்டம் தெரிந்தது. இரண்டு வருடமாகக் காதலித்தவரை சமீபத்தில்தான் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மணந்து கொண்டவர். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அவர் அருகில் சென்று நலம் விசாரித்தேன். ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல பதில் வந்தது. கணவரும் மற்றும் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்களா என்று விசாரித்தேன். அதற்கும் ஒற்றை வரியில் பதில் வந்தது. ஏதோ உடல் நலக் கோளாறாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. காரணம் அவர் எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவர். அடுத்தடுத்து எங்கள் இருவரின் ஞாபகக் குறி (டோக்கன்) எண்ணையும் அறிவிக்கவும் இருவரும் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போனவரை நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சனையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவர், என் கண்களை உற்று நோக்கியவாரு ஒரு நிமிடம் யோசித்தவர், வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தார். பின்னாலேயே சென்ற நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன் அவர்கள் திருமணத்திற்கு நானும் என்னால் ஆன முயற்சியை செய்த உரிமையுடன்.

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாதலால் ஆபிசில் வேலை சரியாக பார்க்க முடியவில்லை’.

‘என்ன அப்படிப் பிரச்சனைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.

சற்று தயங்கியவர், மளமளவென கொட்ட ஆரம்பித்துவிட்டார். “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போக மாடேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவது போலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருகிறேன். இதனாலேயே ஆபிசிலும் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை” என்றார்.

‘அவ்வளவுதானா, இன்னும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.

உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றார்.

நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்திலிருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.

சற்று நேரம் அமைதியாக யோசித்தவர், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே.. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான் தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவரிடம் என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்து கொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவரின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது. விட்டுக் கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவர் மனத்திலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவர் மன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவருடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் ஒரு எல்லைக்கோடு அவசியம் தேவைப்படுகிறது. மனிதருக்கு மனிதர் அது வித்தியாசப்படலாம். அதனை உணர்ந்து அந்த எல்லையை மீறாமல் நடந்து கொள்வதே, குடும்பத்தில் நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்தக்கூடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. நாம் உண்மையாக அன்பு செலுத்துபவரிடம் அதிகக் கோபம் காட்டவோ அல்லது வெறுப்பை உமிழவோ இயலாது. கோபத்தினால் ஏற்படும் விவாதமும், விதண்டாவாதமும், அந்த அன்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். நாம் அன்பு செலுத்துபவர் நம்மீது தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்தும்போது, இடையில் ஒரு நொடி அவர் நம்மீது அன்பு மழை பொழிந்த அந்த இனிய தருணங்களை நினைவில் கொண்டுவந்தால் போதும். அந்த சூழலே நொடியில் மாறிவிடும். பின்பு மெல்ல அவர் கோபப்பட்டதன் சூழலைக் கேட்டறிந்து அதற்கான உபாயம் மூலம் நம்மால் முடிந்த அளவிற்கு அதனைத் தீர்க்கப் பார்க்கலாம்.  இந்த  இடத்தில் நமக்கு வேண்டியதெல்லாம் ‘நான்’ என்ற அந்த எண்ணம் மறைந்து நாம் என்ற உணர்வு மேலிடல்தான்.  இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். இந்த உணர்வே அவர்தம் கோபத்தையும், வேகத்தையும் குறைக்க முயலலாம். ஆக, நெருங்கிய உறவோ, நல்ல நட்போ எதுவாயினும் அடிப்படையான அந்த அன்பு பலப்பட வேண்டுமாயின் விட்டுக் கொடுத்தல் என்ற அந்த வேதத்தை கடைபிடிப்பதே சிறந்த யுக்தியாகும்.

படங்களுக்கு நன்றி:

http://inspirational-images.tumblr.com/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

  1. வாழ்க்கையில் வெற்றி பெற மிக முக்கியமானது ‘தான்’ என்ற அகந்தையை ஒழித்து, தன்னலத்தைச் சற்றே ஒதுக்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே. அப்பண்பு இப்போது பெரிதும் குறைந்து வருவதனாலேயே பெரும்பாலான குடும்பங்களில் குழப்பமும், சண்டை சச்சரவுகளும். ‘EGO’ is the only requirement to destroy any relationship, so the bigger person skip the ‘E’ and let it ‘GO’. இப்பொன்மொழியை நாமும் கடைப்பிடிக்கலாம்.

    வாழ்க்கையைப் பண்போடும், அன்போடும் நடத்துவதற்கான வழிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து எங்களுக்கு வழங்கிவரும் கட்டுரையாசிரியர், போற்றுதலுக்குரிய பவளா அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!

  2. விட்டுக்கொடுத்தல் குடும்பத்திற்கு தேவையான மிக முக்கியமான செயல் ஒன்று. அதனை இன்று கட்டுரையில் நல்ல உதாரண்த்துடன் ஆசிரியர் பதித்துள்ளார். பாராட்டுக்கள்.

  3. இன்றைய சூழலில் மிகவும் அவசியமான விஷயம் இது. என் பாட்டி, குடும்பத்தில் ஏதேனும் மனஸ்தாபம் வந்தால் சொல்லும் வார்த்தை, ‘விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போகார்’. இது மந்திரச் சொல் போல் செயல்படுவதால், பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்தாற்போல், மனஸ்தாபங்கள் கட்டுக்குள் வந்து சகஜ நிலை திரும்புவதை நிறையவே அறிந்திருக்கிறேன். அருமையான கட்டுரைத் தொடர். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

  4. பாராட்டும், ஊக்கமும் அளித்து என்னை உற்சாகப்படுத்தியிருக்கும் @மேகலா, @தனுசு மற்றும் @பார்வதி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *