சு.ரவி

அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-

ஓர் அபூர்வக் கலவை அம்மா!.

பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான்! தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.

உழைப்புக்கு அஞ்சாத அம்மா!

தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-

தன் நேரத்தை வீணாக்காத அம்மா!

அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த

செயல்வீராங்கனை அம்மா!

எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா!

மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!

வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!

1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!

1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!

தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா!

தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!

நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!

கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!

நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்
“Don’t Touch me; self Help is the Best Help”என்று சொல்லி அசத்திய அம்மா!
“என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!

அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!

அம்மா,
சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-

இன்றைக்கு….?

சு.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “அம்மா

 1. உலகினில் நானும் 
  உதித்திட்ட பின்னே 
  முதலில் பார்த்த 
  அழகு முகம் நீ தானே..
  உன் வாய்மொழிந்த 
  வார்த்தைகள் தானே 
  என் வாய் இன்று 
  வழிமொழிகிறது…
  ====
  அன்னையின் இழப்பு மாபெரும் துக்கம்.
  தியாகத்தின் சொரூபம்..
  உழைப்பின் இமயம்..
  விருந்தோம்பலில் வள்ளல் 
  இப்படி அழகழகாக அடுக்கி இருக்கிறீர்கள் 
  தங்களின் அன்னையைப் பற்றி.
  மனதுக்கு நிறைவாக இருக்கிறது படிப்பதற்கு.
  ===
  வாழ்த்துக்கள் நண்பரே.

 2. மதிப்பிற்குரிய சகோதரர் திரு.மகேந்திரன் சொன்னது போல், மிக நிறைவாக இருக்கிறது தங்கள் தாயைப் பற்றிப் படிப்பதற்கு.  மிக அருமையான உயிரோட்டமுள்ள படமும் வரைந்து அளித்திருக்கிறீர்கள்.  தங்கள் அன்னையின் உயரிய குணநலன்களை விவரித்திருக்கும் விதமும் நெகிழ்வூட்டுவதாக இருந்தது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

 3. beautifully penned and narrated, my dear friend!
  I am sure all the inspirations that you get to write is through the blessings of your dear mother!

  Keep the good work going and let others profit in their quest for knowledge through your write ups!

 4. அம்மா என்றால் அன்பு.அற்புதப் பதிவு.நான் எழுதிய மன்னிப்பாயா அம்மா கதை நினைவுக்கு வருகிறது.எந்த அம்மாவும் மறைவதில்லை .நினைவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் .உங்கள் அம்மாவைப் பெற நீங்களும் ,உங்களை பெற உங்கள் அம்மாவும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.

 5. திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றிப் படிகளில் தம் மக்களை ஏற்றி அழகு பார்ப்பதே ஒவ்வொரு தாய் தந்தைக்கும் பேரானந்தம் அளிப்பதாகும். அவ்வகையில் தங்கள் தாய் பேரானந்தமும் பெருமிதமும் கொள்ளும் வகையில் தங்களை வளர்த்து வெற்றியாளர் ஆக்கி இருக்கிறார். அருமையான தங்களின் பகிர்விற்கு நன்றி திரு.ரவி அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *