தாய்
சு.ரவி
ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!
அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
தடுக்கிடும் கல்லுமென் தாய்!
முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
தலைப்பால் துடைப்பவள் தாய்
அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
சும்மா இருத்தல் சுகம்!
பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
அன்னவாக னத்தாள் அவள்.
ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
மாயா மனோன்மணி தாய்!
எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
எண்ணப் படுவதும் தாய்.
மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
கோலக் குமிண்சிரிப் பாள்.
ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
நூபுரத்தாள் நெஞ்சே நினை.
அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
அன்பே அவளேன் றறி!
சு.ரவி
///ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!///
அழகான வரிகள். வாழ்த்துக்கள் திரு.ரவி அவர்களே!
அன்னையருக்கு அருமையான
குறட்பாக்கள் படைத்தீர்கள் நண்பரே..
அன்னையைப் போற்றுவோம்.
வாழ்த்துக்கள்.
அற்புதமான குறட்பாக்களால், அன்னையரின் புகழ்பாடி , என்றும் மணம் வீசும் தமிழ் மாலை சூட்டியிருக்கிறீர்கள். அருமையான பகிர்விற்கு நன்றி.
அருமையான குறட்பாக்களால் ‘தாய்’ எனும் அதிகாரம் இயற்றியிருக்கும் திரு. ரவி அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும்!!!