இல்லுறை தெய்வம்!
-மேகலா இராமமூர்த்தி
(அன்னையர் தினத்திற்காக எழுதப்பட்ட கவிதை)
மண்ணில் பிறந்த மனிதர்க் கெல்லாம்
உண்மையில் உயர்ந்த உறவவள்!
கண்ணின் மணிபோல் குடும்பம் காக்கும்
விளக்காய் என்றும் திகழ்பவள்!
இன்னல்கள் எத்தனை வந்தா லென்ன…
தானே தாங்கும் கொள்கலம்!
தன்னலம் என்ற சொல்லே அறியா(து)
தரணியில் வாழும் நல்லுளம்!
அன்ன தானம் செய்வதி னாலே
வந்திடும் புகழோ கொஞ்சமே!
அன்னையைத் தனமாய்க் காப்பதில் தானே
மகிழ்ந்திடும் உயர்ந்த நெஞ்சமே!
ஊதியம் இல்லை ஓய்வும் இல்லை
அன்னை பணியே அருட்பணி!
ஆதி சக்தியின் வடிவம் அவளே
என்றும் அன்னையின் பதம்பணி!
பொறுமை என்னும் அணியால் வீட்டின்
பெருமை காப்பவள் அன்னையே!
வெறுமையாய்ப் போகும் மானுட வாழ்வும்
அவளின் அன்பு இல்லையேல்!
சொல்லில் விளக்கிடக் கூடுமோ அந்தத்
தூயவள் சேவையை மொத்தமாய்!
இல்லில் உறையும் தெய்வம் அந்தத்
தாயினைப் போற்றுவோம் நித்தமும்!
அருமையாகச் சொன்னீர்கள் மேகலா அவர்களே,
/////சொல்லில் விளக்கிடக் கூடுமோ அந்தத்
தூயவள் சேவையை மொத்தமாய்!
இல்லில் உறையும் தெய்வம் அந்தத்
தாயினைப் போற்றுவோம் நித்தமும்!/////
அன்னையர் தினம் ஒரு நாள் மாத்திரமல்ல. ஒவ்வொரு நாளும் தான். அன்னையின் தியாகத்திற்கு ஈடேது?!!!. தங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்கள்.
இல்லுறை தெய்வம், நம் ஒவ்வொருவரின் இதயமுறை அன்பு தெய்வம் பற்றி மிகவும் இனிமையாகக் கவிதை வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
என்னை நீ தாங்கி
இத்தரணியில் ஒருயிராய்
உலவவிட்ட பேரருளே..
மண்ணில் நானும்
மைந்தனாய் நடமாட
உன் வயிற்றில் பிறந்தது
புண்ணியமே என் சொல்வேன்…
===
அன்னையருக்கு அருமையான
பாடல் படைத்தீர்கள் சகோதரி.
மிக அருமையாக சொன்னீர்கள். உயிர் வாழும் ஒவ்வோர் நாளும் அன்னையர் தினம் தான். இதில் ஐயம் இல்லை. 🙂
//*வெறுமையாய்ப் போகும் மானுட வாழ்வும்
அவளின் அன்பு இல்லையேல்! *//
பொறுமை -பெருமை – வெறுமை
அருமை
அவளும் கருணையின் எல்லையே
கவிதையைப் படித்துத் தங்கள் மேலான கருத்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த அனைத்து நண்பர்கட்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.
இல்லுறை தெய்வம் – தலைப்பும் கவிதையும் அருமை, மேகலா!!!