உன் திருவடிகள் தேடி……
விசாலம்
கருத்தரித்தாய் என்னை
காத்தருளினாய்
வினாடியும் கண்கொட்டாமல்
நானும் வளர்ந்தேன்
நீயும் மெலிந்தாய்
மசக்கை என்ற பெயரால்
உணவும் குன்றியது
வாந்தியும் எடுத்தாய்
உன் வாழ்க்கையில்
மேடு பள்ளங்கள்
சுற்றிச்சுழலும் கவலைகள்
உடன் என்னைச்சுமந்தாய்.
கால்களும் வீங்க
கீழே அமர தவித்தாய் ,
பிரசவத்தின் சூல் வலிக்கும்
ஈடு கொடுத்தாய் ,
“குவா குவா” சத்தம்
உனக்கு தேனாக இனித்தது.
வலி மறந்தாய்,
எனை அணைத்தாய் .
தந்தாய் எனக்கு ஒரு சிம்மாசனம்
மடியேற்றி அமுதூட்டினாய் .
மலமூத்திரம் புடவை நனைக்க
பொறுத்தாய் புன்னகையுடன்
என்னைக்காணும் போதெல்லாம்
உன் முகத்தாமரை மலர்ந்தது
அன்றிலிருந்து நான் வளர்ந்தேன். .
நலம் கோடி பெற்றேன்
“மாத்ருகடன்” சுமை வளர்ந்தது
அத்தனையும் தீர்ப்பது எப்படி?
என்னை வளர வைத்த உரங்கள்
நீ செய்த தியாகங்கள்
அதற்கு அளவே இல்லையம்மா
உன் திருவடிகளே என் கோயில்
அதைத் தொழுவதே என் வேலை