அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை
நமது இதிகாச புராணங்களின்படி, சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சில குறிப்பிட்ட திதி/நட்சத்திரம் கூடிய தினங்களில் நடந்தேறியுள்ளன. அத்தகைய தினங்களில், இறையருட் பேராற்றல் பூவுலகில் அதிக அளவில் நிலைபெறுகிறதென்று கண்டறிந்துள்ளனர் நம் முன்னோர்கள். (ஒரு வருடத்தில் வரும்) அந்த தினங்களையே நாம் பண்டிகை தினங்களாகக் கொண்டாடுகின்றோம். வருடம் முழுவதும் சிறப்பாக இறைவழிபாடு செய்ய இயலாவிட்டாலும், அந்த குறிப்பிட்ட தினங்களில் செய்வது மிக அதிக அளவில் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பதாலேயே இவ்வாறு செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அத்தகையதொரு திருநாளே ‘அக்ஷய திருதியை’. அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை திதி, அக்ஷய திருதியை. அந்நாளில் நாம் செய்யும் அறங்கள், தொடங்கும் செயல்கள் பன்மடங்காகப் பெருகிப் பலனளிக்கும் என புராணங்கள் கூறுகின்றன. குசேலர், ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் செல்வச் செழிப்பை அடைந்ததும், குபேரன் மஹாலக்ஷ்மியின் அருளால் நவநிதியைப் பெற்றதும், சூரிய பகவான் யுதிஷ்டிரருக்கு அக்ஷய பாத்திரத்தை அருளியதும், அகில உலகுக்கும் அன்னம் அளிக்கும் அன்னபூரணி தேவி திருஅவதாரம் செய்தருளியதும் அக்ஷய திருதியை தினத்தில் தான்.
நலங்களையும் வளங்களையும் பல்கிப் பெருகச் செய்யும் தினம் என்பதால் அன்றைய தினம் லக்ஷ்மி தேவியின் வழிபாட்டுக்கு உகந்த தினமாகக் கூறப்படுகிறது.
பாற்கடலில் உதித்தவளாதலாலும், திருப்பாற்கடலை வாசஸ்தலமாகக் கொண்ட எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் உறைபவளாதலாலும் ‘அலைமகள்’ என்ற திருநாமம் லக்ஷ்மிதேவிக்கு.
‘திரு’ வாகிய செல்வத்திற்கு அதிபதியாதலால், ‘திருமகள்’ என்றும் போற்றப்படுகிறாள் ஸ்ரீலக்ஷ்மிதேவி. செல்வத்துக்கு அதிபதியாக குறிக்கப்படும் ஸ்ரீதேவியானவள், பொருட்செல்வத்துக்கு மாத்திரம் அதிபதியல்ல. அருட்செல்வத்துக்கும் அவளே தலைவி.
நல்ல உடல் நலம், நிறை வாழ்வு, ஆத்மானுபூதி அனைத்தும் அவள் அருளும் பிரசாதங்களே.
ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயத்தில்,
‘கத்யை நமோஸ்து வரஸத்கதி தாயிகாயை’
என்று மஹாலக்ஷ்மி போற்றப்படுகின்றாள். ‘ஸத்கதி’ எனச் சிறப்பிக்கப்படும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்க வல்லவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியே.
ஸ்ரீவைணவத்தில் ‘தாயார்’ என்றே சிறப்பிக்கப்படுகின்றாள் திருமகள். ‘அகலகில்லேன்’ என்று திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக உறைபவளின் கருணைக்கு ஈடேது?!!. திருமகள், திருமாலின் திருமார்பில் உறைவதாகச் சொல்வதும் ஒரு உள்ளர்த்தம் காரணமாகத்தான். யாராவது நம்மிடம் கடுமையாக நடந்து கொண்டால் என்ன கேட்கிறோம்?. ‘நெஞ்சில் ஈவு, இரக்கம் இருக்கிறதா?’ என்று தானே!!. ஆம், இரக்கம், கருணை, அன்பு அனைத்தும் இருக்கும் இடமாக, நெஞ்சத்தைக் குறிப்பது மரபு. ஆகவே இறைவனின் திருமார்பில் கருணையின் ஸ்வரூபமாக உறைகிறாள் அன்னை என்று சொல்கிறோம்.
‘ஸ்ரீ’ என்ற பதம், பொதுவாக, திருமகளையே குறிக்கும்.
திருமகளைக் குறிக்கும் ‘ஸ்ரீ’ என்ற பதத்துக்கு ஆறு விதமான அர்த்தங்கள் உண்டு என்று அருமையாகச் சொல்வார் ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள்.
1. நம்மிடம் இருக்கிற குற்றங்களை நிவர்த்திப்பவள்.
2. பகவானுடைய அனுக்கிரஹத்தை நமக்குக் கிடைக்கப் பண்ணுகிறவள்.
3. நாம் சொல்வதைக் கேட்கிறவள். அதாவது, நாம் நமது குறைகளையெல்லாம் சொன்னால் பொறுமையாகக் கேட்கிறாள். யாராவது கஷ்டத்தையே சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களா?. ஆனால் நம் தாயார் கருணையோடு நம் கஷ்டங்களையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிறாள். அதனால் “இதி ஸ்ரீ:”, ச்ருணோதி” என்று பெயர் அவளுக்கு.
4. பகவானை, நம் கஷ்டங்களையெல்லாம் கேட்கப் பண்ணுகிறவள். நாம் சொல்லும் குறைகளை எம்பெருமானிடத்திலே, ஏகாந்தத்திலே, நம் குறைகளை எடுத்து சொல்கிறாள். அதிலும் நமது குறைகளை கொஞ்சம் அதிகப்படுத்திச் சொல்லி இன்னும் பகவானுக்கு நம்மீது விசேஷ காருண்யம் ஏற்படுவதற்கு தானே இரண்டு மூன்று சேர்த்துக்கொள்வாளாம். அதிலே நாம் சொன்னதைக்காட்டிலும் ரொம்ப அழகாக, அதையே பகவான் திருவுள்ளம் உகக்கும் படியாக, அவன் உடனே ஒடிவந்து உதவி விடும்படியாக அதை மாற்றி, பக்குவமாக சொல்வாளாம். இதனால் ச்ராவயதி இதி ஸ்ரீ: என்றழைக்கப்படுகிறாள்.
5.பகவானான ஸ்ரீமந் நாராயணனை எப்போதும் ஆச்ரயிப்பவள்.
6. நாம் எப்போதும் ஆச்ரயிக்கத் தகுந்தவளாக, நம்மிடத்தில் நெருக்கமாக, தாயாக இருந்து நம்மை ரக்ஷிப்பவள்.
‘ஸ்ரீ’ எனும் பதத்திற்கு ‘மிகச் சிறப்பு வாய்ந்த’ எனும் அர்த்தமும் உண்டு. ஸ்ரீநகரம், ஸ்ரீசக்ரம், ஸ்ரீமான், ஸ்ரீமதி என்றெல்லாம் குறிப்பிடுவது அதனால் தான். அதே நேரத்தில், ‘ஸ்ரீ’ எனும் பதத்திற்கு ‘விஷம்’ என்னும் அர்த்தமும் உண்டு. பொருட்செல்வம் நன்முறையில் பெறப்பட்டு, பயன்படுத்தப்பட்டால் அங்கு லக்ஷ்மி தேவி மகிழ்வடைந்து அருள் செய்கிறாள். இல்லையெனில் அந்தப் பொருளே அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.
ஸ்ரீலக்ஷ்மி தேவி, நல்ல ஆடைகள், ஆபரணங்கள், பொன், வெள்ளி, தெளிந்த நீர், சுத்தமான இல்லம், நற்குணங்கள் நிரம்பிய பெண், நெல் முதலான தானிய வகைகள், இறை விக்ரகங்கள், நறுமணம் மிகுந்த பொருட்கள், மலர்கள், பால், சந்தனம், உப்பு, ஊக்கமுடன் செயல்புரிபவர், புலனடக்கம் உள்ளவர், நல்லியல்பு உடையவர், நல்ல இனிமையான வார்த்தைகள் பேசுபவர், துணிவுள்ளவர் இவர்கள் யாவரிடத்திலும் மிக விரும்பி உறைகிறாள்.
பக்தர்கள் நிந்திக்கப்படும் இடம், பெரியோரை மதிக்காதவர்கள், அடக்கமற்றவர், வேலை அல்லது தொழில் செய்யாமல் பொழுதை வீணடிக்கும் சோம்பேறிகள், ஒழுக்கம் இல்லாதார், மிகுந்த கோபமுள்ளவர், எப்போதும் சோகமாகவே இருப்பவர்கள், ஊக்கமின்மையால் தான் நினைக்கும் அளவுக்குச் செயல்பட முடியாதவர், தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை நன்முறையில் உபசரிக்காதோர், பூமியை நகத்தால் கீறுபவர், துர்க்குணங்கள் நிரம்பியவர், அசுத்தமாக இருக்கும் நபர், அசுத்தமான இல்லம், ஈரக்கால்களுடன் படுத்து உறங்குபவர், வீணாக பிறரைப் பழிப்பவர், தேவையின்றி சிரிப்பவர், வார்த்தைகளையும் பொருட்களையும் விரயம் செய்வோர் இவர்களிடத்தில் திருமகள் வாசம் புரிவதில்லை. அவள் விரும்பாத நடத்தைகள் இவையெல்லாம்.
மேற்கண்டவற்றில் இருந்து நாம் அறிவது யாதெனில், நேர்மறை சக்தியை அதிகரிப்பவை அனைத்தும் திருமகள் உறையும் இடங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே. நேர்மறை சக்தியே நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணம் என்பது கண்கூடு.
நல்ல விஷயங்கள் பேசுவது, சிந்திப்பது, செய்வது எல்லாம் நேர்மறை சக்தி (பாசிடிவ் எனர்ஜி) தரும் விஷயங்கள். அது போல், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வீட்டிலுள்ள பொருள்களை சுத்தமாகப் பராமரித்தல், முறையாகப் பயன்படுத்துதல், பொருள்களை வீணாக்காமல் இருத்தல் ஆகியவை நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நன்மையளித்து, நம்மைச் சுற்றி நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும் செயல்கள்.
நாம் செய்யும் நன்மைகள் அனைத்தும் பல்கிப் பெருகும் தினம் அக்ஷய திருதியை. நல்லன அனைத்திற்கும் ஸ்ரீலக்ஷ்மி, அதிதேவதையாக அறியப்படுவதால், அன்றைய தினம் லக்ஷ்மிக்கு உகந்த செயல்களைச் செய்வது, நம்மைச் சுற்றிலும் நேர்மறை சக்தியை பெருகச் செய்யும் . இதனால் நம் வாழ்வு மகிழ்ச்சிப் பூங்காவாக மாறும்.
இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், இனிமையான வார்த்தைகளைப் பேசுதல், இயன்ற அளவு மற்றவருக்கு உதவுதல் இவையனைத்தும் திருமகள் அருளைப் பெற்றுத் தரும் சாதனங்களே.
ஆனால், இன்று இது தங்கம் வாங்கச் சிறந்த நாளாக மட்டுமே அறியப்படுவது வருந்தத்தக்கது. தங்கத்தில் லக்ஷ்மி தேவி உறைகிறாள் என்பதால் தங்கம் வாங்குவது செல்வத்தைப் பெருகச் செய்யும் என்று ஐதீகம். ஆனால் தங்கம் வாங்கித்தான் ஆக வேண்டுமென்று கட்டாயமில்லை. இயன்றவர்கள் வாங்கலாம். உப்பு, நாம் உண்ணும் உணவிற்கு மிகத் தேவையான பொருள். உப்பிலும் திருமகள் உறைகிறாள். ஆகவே அன்றைய தினம் உப்பு வாங்குவதும் திருமகள் அருளை நிலைக்கச் செய்யும்.
அக்ஷய திருதியை அன்று, காலையிலோ அல்லது மாலையிலோ, லக்ஷ்மி தேவியின் படம் அல்லது ஐந்து முக தீபத்தை, சந்தனம், குங்குமம், மலர்கள் முதலியவற்றால் அலங்கரித்து, இயன்ற துதிகளைச் சொல்லி, பூஜிக்கலாம். பால் பாயசம், தயிர் சாதம் முதலியவை நிவேதனம் செய்ய உகந்தவை. இயலாவிடில், பழங்கள் வைத்தும் நிவேதனம் செய்யலாம். கற்பூரம் காட்டி, அதன் ஜோதியில் ஆத்ம ஸ்வரூபமான ஸ்ரீதேவி தெரிவதாகப் பாவித்து, வணங்கி நமஸ்கரிக்க வேண்டும். பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.
அன்னதானம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது. குறைந்தது பதினோரு நபர்களுக்கேனும் அன்று அன்ன தானம் செய்ய வேண்டும். இயன்ற மற்ற விதமான தான தர்மங்களும் செய்யலாம். நீத்தார் கடன் என்று சொல்லப்படும் பித்ரு வழிபாடு செய்வதற்கும் அக்ஷய திருதியை உகந்த தினம். முக்கியமாக, அக்ஷய திருதியை தினத்தில் நல்ல இனிமையான வார்த்தைகளைப் பேசுதல், நல்ல செயல்களைச் செய்தல் ஆகியவற்றைச் செய்தால், அவை அக்ஷயமாக வளர்ந்து, நம் வாழ்வை மேன்மைப்படுத்திச் சிறப்பிக்கும் என்பது நிச்சயம். அக்ஷய திருதியை தினத்தில் அன்னையை வழிபட்டு, அவள் அருள் பெற்று உயர்வோம்!!
இவ்வளவு அகன்ற, ஆழமான காரணிகளைக் கொண்ட ஒரு தினத்தின் உண்மையான நோக்கத்தை உணராமல், குறுகிய நோக்கத்துடன் ஏதோ தங்கம் வாங்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு தினம் போல் அக்ஷய திருதியை தினத்தை சித்தரிக்கும் வியாபார நிறுவனங்களின் மாய வலையில் வீழாமல் விழிப்புடன் இருப்போம்.
மேலும் உப்பிலும் லட்சுமி இருக்கிறாள் என்பதை நாம் உரக்கச் சொல்ல வேண்டாம் சகோதரி. அப்படிச் சொன்னால் உப்பின் விலையையும் அந்தப் புனிதமான நாளன்று பல மடங்கு விலை ஏற்றி விடுவார்கள்.
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. திரு.சச்சிதானந்தம் அவர்களே!!!.
/////அப்படிச் சொன்னால் உப்பின் விலையையும் அந்தப் புனிதமான நாளன்று பல மடங்கு விலை ஏற்றி விடுவார்கள்.///////
நிஜம் தான். செய்தாலும் செய்வார்கள். மிக்க நன்றி.