அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

2

 

-கவிநயா

 

லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள்.

அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி.
பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி.

உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை.
வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம்.

அவளை நினைக்கும் போதும், பூஜிக்கும் போதும், ஒரு முகமாக அவளை நினைக்க வேண்டும்.  மனம் நிறைந்த அன்பு இருக்க வேண்டும். பக்தி இருக்க வேண்டும். அதல்லாமல், வெளி நோக்கிற்காக மட்டுமே, வெளிப் பகட்டிற்காக மட்டுமே அவளை பக்தி செய்வதாக பாவித்தால், அவளை அறிய முடியாது என்கிறது லலிதா சகஸ்ரநாமம். புற வெளிப்பாடுகள் அவளைப் பொறுத்த வரை அவசியம் இல்லாதவை. புறத்தில் எப்படி இருந்தாலும், மனதில் தூய்மையான பக்தி இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.

சில பேர் எக்கச்சக்கமாக பணத்தைச் செலவழித்து ஆடம்பரமாக ஹோமங்கள் செய்து, தான தருமங்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் மனதில், “எவ்வளவு செய்கிறோம், எவ்வளவு நன்றாகச் செய்கிறோம்” என்ற எண்ணம் வந்து விட்டால், செய்தது அத்தனையும் வியர்த்தமாகி விடும். அதே சமயம், ஒரு சிறிய மலரால் பூசித்தாலும், அன்புடனும், அடக்கத்துடனும் அன்னைக்கு அர்ப்பணித்தால் அதிலேயே அவளுக்கு ப்ரீதி அதிகம் ஏற்படும்.

சிலர் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள். ஆனால் ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்களும் காதுகளும் மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும்; வாய் பேசிக் கொண்டே இருக்கும். “கொஞ்சம் அந்த அடுப்பை அணைச்சுடுங்களேன்…”, என்றும், “கண்ணா, ஃபோன் அடிக்குது பாரு… எடுத்து, அப்புறம் கூப்பிடறேன்னு சொல்லிடேன்…” என்றும் ஸ்லோகத்தோடு சேர்த்தே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐம்புலன்களையும் அடக்கி (அல்லது முயற்சியாவது செய்து), உள்ளத்தை அவளிடம் திருப்பினால்தானே அவளை அடைய முடியும்?

மகாபாரதத்தில் பல உப கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று, ஒரு கீரிப் பிள்ளையின் கதை. நினைவிலிருந்து சொல்கிறேன், கதை ரொம்பச் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது; கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மகாபாரதப் போர் முடிந்த பிறகு தருமன் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்கிறான். அந்தக் காலத்தில் ராஜாக்கள் யாகங்கள் செய்து, அவை முடியும் தருவாயில் அளவில்லாமல் தான தருமங்கள் செய்வார்கள். அப்படி யாகம் முடியும் சமயத்தில், ஒரு கீரிப் பிள்ளை அங்கு வருகிறது.

அந்தக் கீரிப் பிள்ளை, பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. எப்படி என்றால், அதனுடைய ஒரு பக்க மேனி முழுவதும் தங்க மயமாக இருக்கிறது. மற்றொரு புறம் சாதாரணமாக, அதனுடைய நிறத்திலேயே இருக்கிறது. இந்த அதிசயக் கீரிப் பிள்ளையை எல்லோரும் அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தக் கீரிப்பிள்ளை, யாக சாலை முற்றிலும் சுற்றி,  தானம் கொடுக்கையில் சிந்தியிருக்கும் தானியங்களிலும், மாவுகளிலும், மற்ற பொருட்களிலும், தன் உடம்பு முழுக்க படுமாறு புரண்டு எழுந்து வருகிறது. பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டு, ஒரு பெரிஞ் சிரிப்பு சிரிக்கிறது.

இத்தனை நேரம் இதனை வேடிக்கை பார்த்தவர்கள் என்னடா இது, இந்தக் கீரிப் பிள்ளை வித்தியாசமாக இருப்பதோடல்லாமல், மனிதர்களைப் போல சிரிக்க வேறு செய்கிறதே என்று அசந்து போய் விடுகிறார்கள்.

“ஏய், கீரிப் பிள்ளையே! எங்கள் யாக சாலைக்கு வந்தது மட்டுமல்லாமல் ஏன் இப்படி ஏளனமாகச் சிரிக்க வேறு செய்கிறாய்? ஏன் உன் உடல் ஒரு பக்கம் மட்டும் தங்க மயமாக இருக்கிறது?” என்று கேட்கிறார்கள்.

அதற்குப் பதிலாக அந்தக் கீரிப் பிள்ளை அனைவரது ஆச்சர்யத்துக்கும் நடுவில் மனிதர்களைப் போல் பேசவும் ஆரம்பிக்கிறது.

“சிறிது காலம் முன்பு, நான் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்த போது, ஒரு வீட்டில் நடந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள். அந்த வீட்டில், ஒரு பிராமணரும், அவர் மனைவியும், இளம் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழைகள். தினமும் உஞ்சவிருத்தி செய்து, அதில் கிடைப்பதை அன்றன்றைக்கு சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். இப்படி இருக்கையில், ஒரு நாள், சோதனையாக அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கொஞ்சம் சோளம் மட்டுமே கிடைத்தது. அந்தக் குடும்பத் தலைவியும் அந்த சோளத்தை மாவாகத் திரித்து சாப்பிடுவதற்குத் தயார் செய்தாள். அந்த சோள மாவை, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்து கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்.

அந்த சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு ஒரு அதிதி வந்து சேர்ந்தார். நமக்கே இல்லை, இப்போது விருந்தாளி வேறா என்றெல்லாம் சங்கடப் படாமல், வந்தவரை மகிழ்வோடு வரவேற்றார்கள். அவர் மிகவும் பசியோடு வந்திருப்பதை அறிந்து, குடும்பத்தின் தலைவர் தன் பங்கு சோள மாவை அவருக்கு உண்பதற்கு அளித்தார். ஆனால் அதிதியின் பசிக்கு அது போதவில்லை. அதைக் கண்ட குடும்பத் தலைவி தன் பங்கையும் அவருக்கு அளித்தார். அப்படியும் அவர் பசி அடங்கவில்லை. அதன் பின் இளம் பிள்ளையும், பிறகு அவன் மனைவியும், இப்படி எல்லோருமே தங்கள் பங்கை அதிதிக்குக் கொடுத்து விட்டார்கள். அதன் பிறகே அவர் பசி ஒருவாறு தீர்ந்தது.

தங்கள் உணவை அவருக்குத் தந்த போது அவர்களில் யாருமே வேண்டா வெறுப்பாகத் தரவில்லை. அனைவருமே, மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், மனமுவந்தும், தங்கள் பங்கை அவருக்குத் தந்தார்கள். அதன் பிறகு ஒரு தேவ விமானம் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றது. இதை நான் என் கண்களால் பார்த்தேன்”, என்ற கீரிப் பிள்ளை,

“அப்போது அங்கு சிந்திக் கிடந்த சோள மாவில் நான் புரண்ட காரணத்தால் என் ஒரு பக்க உடம்பு முழுவதும் சுவர்ண மயமாகி விட்டது. அது முதல் நானும் இந்த உலகில் நடக்கும் எத்தனையோ யாகங்களுக்குச் சென்று பார்த்து விட்டேன், என் உடம்பின் மறுபாதியைச் சுவர்ணமயமாக்கும் தகுதி இது வரை எவர் செய்த தான தருமங்களுக்கும் இல்லை”, என்றதாம்!

உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, பலன் எதிர்பாராது செய்யும் செயலே சிறந்த பலன் அளிக்கும்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றியும் ஒரு செய்தி சொல்வார்கள். ஒரு முறை அவர் சீடர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். வழியில் சில சிறுவர்கள் ஒரு கல்லை எடுத்து அதை சுவாமியாகப் பாவித்து பூசைகள் செய்து, சிறிய மரக் குச்சிகளால் பல்லக்கு போல செய்து, அதில் அந்த சுவாமியை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தார்களாம். பிறகு பாவனையாகவே தீர்த்தம், பிரசாதம், எல்லாம் கொடுத்தார்களாம். அதனை ஸ்ரீ ராமானுஜரும் மிகுந்த பயபக்தியோடு பெற்றுக் கொண்டாராம். அவரோடு இருந்த சீடர்கள், “இந்தப் பிள்ளைகள் விளையாட்டுக்குச் செய்வதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களே?” என்று கேட்டார்களாம். “அவர்கள் விளையாட்டாகச் செய்தாலும், அவர்கள் பாவனையில் உள்ளார்ந்த அன்பும் பக்தியும் இருக்கிறது. அதனால்தான் ஏற்றுக் கொண்டேன்”, என்று பதிலளித்தாராம்.

இதனையே வாக்தேவதைகளும் லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்கிறார்கள்.

உள்ளன்போடு செய்யும் செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுவே இறைவனை மகிழ்விக்கும். இதற்கு உதாரணமாகப் பலப்பல அடியார்களின் சரித்திரங்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், சபரித் தாயார், இப்படி எத்தனையெத்தனையோ.

அன்பே உருவான அன்னையை உள்ளார்ந்த அன்போடு உள்ளத்துள்ளே வைத்து வழிபட்டு, அவள் அருளைப் பெறுவோம்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

 

படத்துக்கு நன்றி: http://mahasakthipeetam.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

  1. உள்முக வழிபாடு மிக எளிதாக அம்பிகையின் அருளைப் பெற்றுத் தரும். அருமையான கருத்துக்களை அழகுறத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். ‘அங்கொரு கண்ணும், இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை’ என்னும் பழைய பாடலொன்றும் நினைவுக்கு வருகிறது. மனமார்ந்த நன்றி கவிநயா அவர்களே!!.

  2. ஸ்ரீவித்யை உபாசனையின் ஆகம நியமங்களின் ரகசியக் குறிப்புதான் லலிதா சஹஸ்ரநாமம். வித்யை/வித்தைக்கு தேவை எழுத்தும் (அ)  ஒலியும் (அம்) . தேகமே ஸ்ரீசக்கரமென்பது  பாவனோபநிஷத்து.  அத்வைதம். சிவனும் சக்தியும் இணந்து நமக்குள்ளே. கதிரும்நிலவும் சேர்ந்த பெளர்ணமி. இதுவே அந்தர் முகம்.
     மற்றது துவதைம். அவள் தாய் நாம் சேய். அவன் பரமாத்மா நாம் ஆத்மா. உடல் சிவன் உயிர் சக்தி .ஒருவரிலிருந்து மற்றது பிற‌க்கும். கதிர் ஒருபக்கம்  நிலவொருபக்கம் ஆன‌ அமாவாசை. இதுவே பஹிர்முகம். 
    நமக்குள்ளே இறைவனைப் பார்ப்பது ஒன்று. நமக்கு வெளியே இறைவனைப் பார்ப்பது மற்றொன்று. இரண்டு அனுபவங்களை பகிர்ந்தளிக்க  பலத் தொகுப்புகள் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *