மாதவன் இளங்கோ

 

சிறிது குழப்பமான தலைப்புதான்.

என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!

ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் முறை’ (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.

அது என்ன ‘கிப்ளிங் முறை’ என்று உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது.

Rudyard Kipling – எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர். தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல, எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய ‘IF’ என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே! என்னைப் பொறுத்தவரையில், IF – உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று.

அவரது “The Elephant’s Child” கதையில் வரும் “I KEEP…“ என்கிற கீழ்வரும் கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

I KEEP six honest serving-men

 (They taught me all I knew);

Their names are What and Why and When

 And How and Where and Who.

நாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும்போதும் அல்லது ஒரு திட்டத்தைத் (Project) தொடங்கும்போதும், ‘ஏன்?’, ‘என்ன?’, ‘எப்போது?’, எங்கே?’, ‘எப்படி?’ மற்றும் ‘யார்?’ என்கிற இந்த ஆறு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஆறு கேள்விகளுக்கு விடையளித்தாலே பாதித் தீர்வு கிடைத்ததற்குச் சமம், பாதித் திட்டத்தை முடித்ததற்குச் சமம்.

இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது பாட்டனார் ‘வினைசெயல்வகை’அதிகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று விளக்கிவிட்டார்.

ஆனால், என் மகனுக்கு என்னவோ இவர்கள் இரண்டு பேரையும் விட,   டாய்ச்சி ஓனோ-வைத்தான் நிறைய பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஓனோ, ஆறு கேள்வியெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கேள்வி போதும் – ‘ஏன்?’. ஆனால், அதை விடாமல் ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’ என்று கேட்டுகொண்டே போக வேண்டும் என்றார்.

இதைத்தான் செம்மையாக செய்து கொண்டிருக்கிறான் என் மகன் – ஒனோவை பற்றியெல்லாம் தெரியாமலேயே! நேற்று முழுவதும் ‘ஏன்? ஏன்? ஏன்?’ என்று அவன் கேட்ட கேள்விகளை எண்ணியிருந்தால் நிச்சயமாக எண்ணிக்கை ஐநூற்றைத் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

“ஏன் அலுவலகத்திற்குப் போகிறீர்கள்?” என்பதில் தொடங்கி “ஏன் பாட்டு பாடுகிறீர்கள்?” என்பதில் முடியும் (முடியாது.. நீளும்!). ஏதோ நான் அலுவலகத்துக்குச் செல்வதே பாட்டு பாடுவதற்காகத்தான் என்று தோன்றுமளவிற்கு எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடியும் அந்தக் குழந்தையின் கேள்விகள்.

சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், இப்படி ஏன்-களைப் போட்டுக்கொண்டே செல்லும் போதுதான் ஒரு சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படைக் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நம்மால் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கவே முடியாது.

நான் அலுவலகத்தில் என் அணியினருக்கு அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: “அறிகுறிகள் எல்லாம் மூல காரணங்கள் அல்ல. அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளே காரணங்கள் அல்ல. எனவே காரணங்களைத் தேடுங்கள்!”.

‘ஏன்-கள் மூல காரணங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் சாதனங்கள்!’.

சிறுவர்களுக்கு இருக்கும் இந்தக் ‘கேள்விகேட்டுப் பெறும் திறம்’, அவர்கள் வளரும் போது சிறிது சிறிதாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் அழிந்தே போய்விடுகிறது. இவற்றிற்கான காரணங்களை சற்று அலசுவோம்.

 • குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு , அவர்களை நன்றாகத் திட்டி, அதனைத் அவர்கள் தொடரவிடாவண்ணம் ஒருவித குற்ற உணர்ச்சியையை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறோம்.
 • இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சிறிது வளர்ந்த பிறகு கேட்கும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு உண்மையாக பதிலே தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் அறிவை வளர்த்துக்கொள்ளப் படிப்பதில்லை – அந்தப் பழக்கமே இருப்பதில்லை.
 • ‘கற்றலின் கேட்டல் இனிது’ என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறலாம். ஆனால் யார் பேசுவது? பெரும்பாலான நேரம் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சினிமாவைப் பற்றியோ அல்லது வீடு, மனை விற்றல்-வாங்கல் தொடர்பாகத்தான் பேசுகிறோம்..

அறிவியலும், இலக்கியமும், வரலாறும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களைப் பற்றியுமா பேசுகிறோம்?

“அதையெல்லாம் எதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? இணையம் இருக்கிறதே, விக்கிபீடியா இருக்கிறதே!” என்று ஒரு கேள்வி எழலாம்.

Wikipedia is a great platform. However, It may not be complete. நானும் ஒரு விக்கிப்பீடியன் என்கிற முறையில், இதனைக் கூறமுடியும். நாங்கள் எங்கோ எப்போதோ, படித்தோ கேட்டோ தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதலால் விக்கிபீடியாவில் பதிவு செய்கிறோம். அவற்றை யார் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் செம்மைப்படுத்த முடியும்.

ஆனால், விக்கிபீடியாவைக்கூட இன்று எந்த அளவிற்கு உபயோகிக்கிறோம் என்று தெரியவில்லை.

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்தது மாறி, இப்போது FACEBOOK-இல் பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே நம் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது என்பது ஒரு Painful reality!

இவையனைத்துமே ‘நுனிப்புல் மேய்வது’ போலத்தான். நாம் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது.

வேறு என்னதான் வழி?

ஏடுகளை வாங்கிப் படிக்கலாம்.

ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்து கிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது.

கடந்தமுறை இந்தியாவிற்கு வந்தபோது நண்பர்களைச் சந்திக்கக்கூட  நேரமே போதவில்லை. ஆனால், Landmark-ற்கு இருமுறையும், Higgin Bothams-ற்கு ஒருமுறையும் சென்றேன்.

எனக்கு இதுபோன்ற புத்தகக்கடைகள் – மது அருந்துபவர்களுக்கு TASMAC போன்றது. இதைவிட மோசமான உவமை இருக்கமுடியாது என்று உங்களுக்குத் தோணலாம். இதைக்கூறிய உவமைக்கவிஞர் வேறு யாருமல்ல – என் மனையாளே தான்.

இதற்கான காரணத்தைச் சொன்னால், அவருடைய இந்த உவமை உங்களுக்குச் சரியெனப் படலாம். புத்தகக் கடைகளைக் கண்டாலே என் கைகள் பரபரவென்றும், கால்கள் நடுநடுங்கவும்  ஆரம்பித்துவிடும். உள்ளே சென்றுவிட்டு வந்தால் CARD நன்றாகவே தேய்ந்து போயிருக்கும்.

இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

1. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

2. புத்ர – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

3. நடந்தாய்; வாழி, காவேரி! – தி.ஜானகி ராமன் – சிட்டி (காலச்சுவடு பதிப்பகம்)

4. வாழும் கணங்கள் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

5. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

6. நானும் என் எழுத்தும் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

7. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)

8. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

9. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

10. வாசக பர்வம்  – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

11. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (உயிர்மை பதிப்பகம்)

12. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (விசா பதிப்பகம்)

13. கண்ணீரில்லாமல் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

14. இன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

15. எழுத்தும் வாழ்க்கையும் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

16. தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

17. சுஜாதாவின் நாடகங்கள் – முழுத்தொகுப்பு (உயிர்மை பதிப்பகம்)

18. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

19. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்யபுத்திரன்  (உயிர்மை பதிப்பகம்)

20. பூமித்தாயே – கோ.நம்மாழ்வார் (இயல்வாகை பதிப்பகம்)

21. Famous Chinese Short Stories – Lin Yutang (Classic Library)

22. Great Short Stories – Anton Checkov (Classic Library)

23. By the River Piedra I sat down and Wept – Paulo Coelho (Harper Collins)

24. Sudden flash of a thunder – OSHO (Wisdom Tree)

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே?

இவற்றில் சில நான் ஏற்கனவே படித்தவை. இது தவிர, திரு.அண்ணாகண்ணன் அவர்கள் வேறு மூன்று புத்தகங்கள் அனுப்பி இருந்தார். விமானத்தில் 30 கிலோ எடைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களே கிட்டத்தட்ட இருபது கிலோ தேறும். என்ன செய்வது, இங்கெல்லாம் தமிழ் புத்தகங்களே கிடைப்பதில்லையே!

‘யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற’ வேண்டுமென்பதால் கூறுகிறேன்.  விரைவாய்ச் சென்று புத்தகங்களை வாங்குங்கள்! வாசியுங்கள்! UPSC, CAT, GRE, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள். வாசித்தல் என்பது மனதிற்கினிய விஷயம்.

‘ஏன் என்பதில் தொடங்கி ஏடுகள் வரை’பேசிவிட்டோம்!

வாசி!

வல்லமைக்கு வா…SEE …!

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஏன் முதல் ஏடு வரை…

 1. மிகவும் ரசிக்கும்படியாக இருந்த கட்டுரை. ‘ஏன் என்ற கேள்வி, இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை!!’ என்று டி.எம்.எஸ் குரலில் பாடத் தோன்றியது(மனசுக்குள் தான்). புத்தகக் கடல் ஒன்று பறந்து சென்றிருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன். புத்தக லிஸ்ட் தங்கள் அறிவார்ந்த ரசனையை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.

 2. நல்ல கட்டுரை. வாசிப்பின் மீதான தங்களின் ஆர்வம் மகிழ்வளிப்பதாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

 3. சகோதரி பார்வதி அவர்களுக்கு, மிக்க நன்றி!! 

  எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. இங்கே கேட்டும், பார்த்தும் ரசிக்கலாம்:
  http://www.youtube.com/watch?v=69jRWmXTIlM

 4. கவிஞர். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு, வணக்கமும் நன்றியும்!!! வல்லமையில் தங்களைப் போன்ற ஆசான்களின் வாழ்த்துகளும், கருத்துரையும் காண்பது பேருவகை அளிக்கிறது!!! மிக்க நன்றி ஐயா!!! 

 5. “UPSC, CAT, GRE, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள்.” – சரியாகச் சொன்னாய் இளங்கோ. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

 6. இனிய வணக்கம் மாதவன்….

  முதலில் வாசிக்க தொடங்குகையில்   — இது என்னடா கிப்ளிங் முறை 
  என்று ஆச்சர்த்துடன் படிக்க ஆரம்பித்தேன்…
  அந்த வியப்பை சற்றும் குறைத்துவிடாது முடிவு வரையில் 
  கொண்டு சென்றிருக்கிறீர்கள்…
  ===
  என் போன்று தொழில் செய்யும் நபர்களுக்கான 
  முதல் உற்பத்தி வாசகமே…
  “”ஏன்..எதற்கு…எப்படி”” என்ற வாசகமே…
  ==
  ஒரு பிரச்சனை வருகிறதென்றால் அது ஏன்.. எதற்காக வந்தது.. எந்த மூலமாக 
  உருவாக்கப்பட்டது…எப்படி சமாளிப்பது..
  இவைகள் தான் எங்களுக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்படும்…
  ==
  ‘IF —” கவிதை நான் வாசித்ததில்லை மாதவன்…
  நீங்கள் இங்கே குறிப்பிடும்போது..
  வாசிக்கத் தவறிவிட்டோமே என்ற ஆதங்கம் தோன்றுகிறது…
  ===
  அழகான கிப்ளிங் முறை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல..
  ===
  குழந்தைகள் கேட்கும் கேள்விகள் அவர்களுக்கு அறிவு விரிவாக்க பயன்படுகிறதோ இல்லையோ 
  நமக்கு நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவும் நம் அறிவின் தன்மையை விஸ்தரிப்பு 
  செய்யவும் பயன்படுகிறது என்பது நிதர்சனம்.
  உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்.
  ===
  சிறந்த புத்தகங்கள் இப்போது உங்கள் கையில்…
  வாசிப்போம் பலன் பெறுவோம்…
  நான் இந்த முறை தோழர்.பூமணி. அவர்கள் எழுதிய அஞ்ஞாடி நாவல் வாங்கிவந்தேன்…
  இன்னுமோர் அற்புதம் அந்த நாவல்…
  ===
  சிறந்த கட்டுரை ..
  வாழ்த்துக்கள் நண்பர் மாதவன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *