-ஓம் வெ.சுப்பிரமணியன்

ஓம்
”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்துச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்று எண்ணிப் போற்றி வழிபடவேண்டும்.

செய்யும் தொழில் அல்லது தொழிலுக்கு உதவிடும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தி குறித்து தெய்வப் புலவர் திருவள்ளுவர், “ நமக்கு மகிழ்ச்சியளித்து, வாழ்வாதாரம் என்ற இன்பத்தை நல்கிடும் தொழிலைச் செய்யும் போது துன்பங்கள் பல நேரிடலாம். அத்தருணத்தில், அத்துன்பங்களைக் கண்டு மனம் கலங்கிடாமல் தொழில் மீதான பக்தி, மற்றும் துணிவு இவைகளுடன் அத் தொழிலைச் செய்வோமானால், தானாகவே இன்பம் விளையும்.”

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

மிதிலாபுரியில் திருமணம் முடித்து, தங்கள் மனைவியர்கள், தாய்மார்கள், தந்தை தசரதர், சுற்றம்- மற்றும் பரிவாரங்கள் இவர்களுடன் அயோத்தி நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ராம லட்சுமண பரத சத்ருக்கன- சகோதரர்கள். வழியில் அவர்கள் முன் பரசுராமர் தோன்றுகிறார். க்ஷத்திரியர்கள் மீது மிகுந்த விரோதமுள்ளவர் பரசுராமர். பாரத தேசம் முழுவதும் ஆட்சி செய்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் வதம் செய்தவர் அவர். பரசுராமரைக் கண்டவுடன், அவரால் அரச குமாரர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என அஞ்சுகிறார் தசரதர். எனவே, நிலைமை மீறிப்போவதற்கு முன், பரசுராமருக்கு முன்சென்று நின்ற தசரதர், அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார்.ஆனால், பரசுராமரோ,தசரதர் அளித்த மரியாதையைப் புறக்கணித்துவிட்டு ஆணவத்தோடு இவ்வாறு சவால் விடுகிறார்.

“க்ஷத்திரிய குமாரா, முன்னரே சிறிது முறிந்து, பின்னர் இறறுப்போன (பழுதாகிப் போன), சிவனின் ஆயுதமான சிவதனுசுவை முறித்துவிட்டதனால் நீ வலிமையானவன் என்று எண்ண வேண்டாம். அது உன் வீரத்திற்கும் அழகல்ல. இதோ, என் கையில் உள்ள திருமாலின் வில்லை நீ வாங்கி, வளைத்து, நாணேற்று பார்க்கலாம்”

“ஊனவில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்
“மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”

-என பரசுராமர் ராமனுக்கு விடுத்த ஆணவச் சவாலை கம்பர் விளக்குகிறார்.

பரசுராமனின் கூற்றைக் கேட்ட தசரதரோ நடுநடுங்குகிறார். ஆனால், ராமனோ, சிறிதும் அஞ்சாமல், எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், பரசுராமரின் கையிலிருந்த வில்லை நிதானமாக வாங்கி, வணங்கி, பிறகு வளைத்து, நாணேற்றி அந்த வில்லில் அம்பு ஒன்றைப் பொருத்துகிறான். மேலும் பொருத்திய அம்புக்கு இலக்கு எது எனவும் பரசுராமரிடமே வினவுகிறான் ராமன். அதனால் வெட்கமடைந்த பரசுராமர், கர்வம் அழிந்து, தன் தவங்களின் மூலம் பெற்ற அனைத்து பலன்களையும் அந்த அம்புக்கு இலக்காகத் தாரை வார்த்துவிடுகிறார்.

ஓம்
ஜனகரிடம் சிவ தனுசு வந்த கதை.

மிதிலையில் ராமன் முறித்த சிவதனுசுவின் கதை. மிதிலாபுரியில் ராமன் வளைத்து, நாணேற்றி முறித்த சிவ தனுசு, பரசு ராமர் கூறியது போல், முன்னரே சிறிது இற்றுப்போய் முறிந்திருந்ததா? அப்படியென்றால் அந்த முறிவும் பழுதும் எவ்வாறு ஏற்பட்டன? அதற்கான காரணம் என்ன? முறிவும் பழுதும் ஏற்பட்ட அந்த சிவதனுசு கவனியாமல் விடப்பட்டதா ? சீதையை மணம் புரியும் பொருட்டு, ஏற்கனவே சிறிது முறிந்து, பின்னர் பழுதாகிப் போன ஒரு வில்லை வளைத்து முறித்த ராமனின் செயல் ஜனகரை ஏமாற்றும் விதத்தில் அமையப் பெற்றதா? இத்தகைய சந்தேகக் கேள்விகளுக்கு அல்லவா இடம் கொடுத்துவிட்டன அந்தப் பரசுராமரின் ஆணவச் சவால்.

பரசுராமர் கூறியதில் கால் பாகமே உண்மை. சிவதனுசுவின் முழுச் சரித்திரத்தை பரசுராமர் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர் பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததுதான். அந்த நேரத்தில் பல நிகழ்வுகள் நடந்திருந்தன. மேலும், பல க்ஷத்திரியர்களைத் தன் கோடரியாலும்,திருமால் அளித்த அந்த வில்லாயுதத்தாலும் அவர் அழித்ததனால், அவருக்குத் தன் வசமுள்ள ஆயுதங்களே சிறப்பானதாகத் தெரிகின்றன. மட்டுமல்லாமல், ராமன் யார் என்றும் உணர்ந்து கொள்ளாததால் அவருடைய பேச்சிலும் ஆணவம் வெளிப்பட்டது.

பரசுராமர் மறைமுகமாக மேல் கூறிய சந்தேகங்களுக்கும், கூடவே ஆயுத வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், ஆயுத வழிபாட்டால் கிடைக்கப் பெறும் நற்பலன்களையும், தவறும் பட்சத்தில் உண்டாகும் துன்பங்கள் குறித்தும் கம்பர் விரிவாக விளக்குகிறார்.

முன்காலத்தில் விஸ்வகர்மாவினால் இரு மகோன்னத விற்கள் படைக்கப்பட்டன. அவை பிரகாசத்தில் சூரியனைப்போல ஜொலித்துக்கொண்டும், மேகம் போல் வளைந்தும் மேரு மலை போல் உறுதியாகவும், மானிடர்களின் கற்பனைக்கு எட்டாத்தாகவும், வேறு வில் ஆயுதங்களுடன் ஒப்பிடமுடியாததாகவும் இருந்தன.

“ஒருகால் வருகதிர் ஆம் என ஒளி கால்வன உலையா,
வருகார் தவழ் வட மேருவின் வலிசால்வன வையம்
அருகா வினைபுரிவோன் உளன் அவனால் அமைவனதாம்,
இருகார்முகம் உள யாவையும் ஏலாதன மேல் நாள்”

அந்த இரண்டு விற்களில் ஒன்றை உமாபதியான சிவபெருமான் மனம் உகந்து ஏற்றுக்கொள்கிறார். மற்றொரு வில்லை, சக்கரதாரியும், உலகளந்த பெருமாளும் ஆன மஹாவிஷ்ணு முறையாக ஸ்வீகரித்துகொண்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இந்திராதி தேவர்கள், “இரு விற்களுமே வலிமை மிக்கவை. இதில் எந்த வில் அதிக வலிமை மிக்கதாக இருக்கக்கூடும்?” என ஐயங் கொள்கின்றனர். தங்கள் ஐயத்தைப் பிரம்மதேவனிடம் கூறி அதற்கு விடை கேட்கிறார்கள் இந்திராதி தேவர்கள்.

“ஒன்றின உமையாள் கேள்வன் உவந்தனன்- மற்றை
ஒன்றை உலகளந்த நேமி நெடியமால்- நெறியின் கொண்டான்
என்று இது உணர்ந்த விண்ணோர்- இரண்டிலும் வலிமை எய்தும்
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அந்நாள்”

இங்கே ஒரு விஷயத்தைக் கூறியே ஆகவேண்டும். இந்திராதி தேவர்களுக்குத் ’தாங்கள் தேவர்கள்’ என்ற இறுமாப்பு எப்பொழுதும் இருப்பதுண்டு. அதன் விளைவாய் அவர்கள் வீண் சந்தேகங்களைக் கிளப்பி விடுவார்கள். பிறரைச் சங்கடப்படுத்துவார்கள். பிற்பாடு அந்த இறுமாப்பால் தாங்களும் துன்பமடைவார்கள். சந்தேகம் என்பது ஒரு மன நோய். புலன்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சந்தேக நோய் ஏற்படுவது திண்ணம். எனவேதான் வள்ளுவர் பெருமான் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐந்து புலஙளால் உண்டாகும் உணர்ச்சிகளை நாம் முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், வேறு ஒருவர் வந்து தன்னுடைய வலிமையால் அவற்றை நம்மிடமிருந்து அழித்து விடுவார். அதற்குச் சான்று தேவர்களின் தலைவன் இந்திரன்”- என்று கூறுகிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
வார்கோமன் இந்திரனே சாலுங்கரி

தேவர்களின் இந்த வீண் சந்தேகத்தைச் செவிமடுத்த பிரமன், அந்த விற்களில் ஒன்றினாலேயே இறுமாப்புப் பிடித்த தேவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணம் கொள்கிறார். ஒரு நாள் அந்த விற்களைக் காரணமாக்கி, சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் இடையே ஒரு பெரிய போர் வruமாறு தூண்டிவிடுகிறார், பிரம்மன்.

“சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்ன
வேரிஅம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம் தன்னால்
பாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை
மூரி வெஞ்சிலைமேல் இட்டு மொய் அமர் மூட்டிவிட்டான்.”

அரனும், ஹரியும் அவ்விற்களை நாணேற்றிக் கடும்போர் புரிந்தனர். அப்போரின் விளைவால் ஈரேழு உலகங்களும் கலங்கின. அஷ்ட திக்குகள் இடம் பெயர்ந்தன. அந்தப் போரின் ஒரு கட்டத்தில் சிவபெருமானின் வில் சற்று முறிந்தது. அதனால் சிவபெருமான் பெரும் கோபம் கொள்கிறார்.

”இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெகுவர தயீசைகள் பேர வெஙகனல் பொங்க மேன்மேல்
செருமலைகின்ற போழ்திரிபுரம் எரித்த தேவன்
வரிசிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ”

தன் வில் முறிந்ததனால் ஆக்ரோஷமான சிவபெருமான் தன் போர்த்திறனின் தீவிரத்தை அதிகரிக்கிறார். சிவனின் தீவிரமான போரைக் கண்டு நடுங்கிய தேவர்கள், போரின் நடுவே தலையிட்டுப் போரை நிறுத்துகிறார்கள்.

சினம் தணிந்தனர் அரனும் மாலும். சிவபெருமான் தனது வில்லை இந்திரனுக்கும், திருமால் தனது வில்லை ரிசிகன் என்ற முனிவருக்கும் அருளிச் செய்துவிட்டு தம் தம் இடத்திற்கேகினர்.

“மீட்டும் போர் தொடங்கும் வேலை விலக்க வல்லில்
நீட்டினன் தேவர் கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி
காட்டிய கரிய மாலும் கார்முகம் தன்னைப் பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகர்க்கு ஈந்து போனான்.”

திருமாலிடமிருந்து தான் பெற்ற வில்லை அதன் கட்டமைப்பு சீர்கெட்டுக் கலையாமல், அதை நித்தமும் பராமரித்துக் காத்துவந்த ரிசிக முனிவர், அதை ஜமதக்கினி முனிவருkகு வழங்க, பின்னர் ஜமதக்கினி அந்த வில்லை நன்றாகப் பராமரித்துத் தன் மகன் பரசுராமருக்கு அளிக்கிறார் இதைத்தான்,

“இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்குத் தந்த
வரிசிலை இது தொல்தின் வாங்குதி ஆயின் மைந்த

என பரசுராமர் இராமனிடம் ஆணவத்துடன் கூறுகிறார்.

சிவ பெருமானிடமிருந்துபெற்ற வில்லை அது சிறிது முறிந்திருந்ததனால், அலட்சியமாக ஆயுதக் கிடங்கில் கவனிப்பாரின்றி போட்டு விடுகிறான் இந்திரன். அதனால் சிவ தனுசு வேதனை அடைகிறது. மேலும் பழுதாகவும் துவங்குகிறது. தன் வில்லுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை சிவனின் காட்சிக்கும் தெரிகிறது. தன்னுடைய வில்லில் ஏற்பட்ட விரிசலையும், இந்திரனால் விளைந்த பழுதையும், வீரியக் குறைவையும் சீர் செய்யும் பொருட்டு அவ்வில்லை இந்திரனிடமிருந்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் சிவபெருமான்.

அவ்வாறு திரும்ப சிவபெருமானிடம் செல்லும் போது, அந்த சிவதனுசு இந்திரனைப் பார்த்து,” சிவனின் ஆயுதம் என்றும் கருதாமல், என்னை நீ கைவிட்டதற்கு தண்டனையாக தக்க தருணம் வரும்போது நான் உன்னைத் தண்டிப்பேன்” எனச் சாபம் அளித்துவிட்டு சிவபெருமானைச் சென்றடைகிறது. தன்னிடம் வந்து சேர்ந்த அந்த வில்லைச் சரி செய்து அதற்கு மீண்டும் வீரியம் அளிக்கிறர் அரன்.

இந்திராதி தேவர்களுக்கு சிவ தனுசு கொடுத்த சாபம் நிறைவேறும் தருணம் வருகிறது. சிவபெருமானையும், அரனின் மனைவியும், தன் மகளுமான தாட்சாயிணியையும் அவமானம் செய்து அவமரியாதை செய்யும் பொருட்டு, அவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல், யாகம் ஒன்றைச் செய்கிறான் தட்சப் பிரஜாபதி. அந்த யாகத்தில் இந்திராதி தேவர்கள், வேத விற்பன்னர்கள் இன்னும் பலர் கலந்து கொள்கிறார்கள். சிவ பெருமானின் பேச்சினையும் மீறி தட்சன் நடத்தும் யாக சாலைக்குச் சென்ற தாட்சாயிணி, தட்சனால் இகழப்படுகிறாள். இதனால் சினமுற்ற அரன் தன்னுடைய சிவ தனுசுவை எடுத்துக் கொண்டு யாக சாலைக்கு விரைகிறார். அங்கு, தட்சன் நடத்தும் வேள்வியில் பங்கெடுத்த இந்திராதி தேவர்களின் பற்களையும், கரங்களையும் வில்லால் உடைத்தும், அறுத்தும் தள்ளுகிறார் சிவபெருமான். அதனால் அஞ்சிய தேவர்கள் மறைவிடத்தல் ஒளிந்து கொள்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர் தப்புகிறார்கள். பிறகு தட்சனின் வேள்வியை அழித்து சினம் தணிந்த அரன், தேவர்களை மன்னித்து, தன்னுடைய சிவ தனுசை, ஜனகனின் முன்னோரான தேவநாதன் என்னும் மன்னனுக்கு அளித்துவிட்டு கயிலாயத்தை அடைகிறார்.

“இமையவில் வாங்கிய ஈசன் பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய
கமை அறு சினத் தணி. கார்முகம் கொளா,
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே”

“உக்கன பல்லோடு கரங்கள் வீழ்ந்தன,
புக்கனர் வானவர் புகாத சூழல்கள்,
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
முக்கண் எண் தோளவன் முனிவு மாறினான்.”

“தாளுடை வரிசிலை சம்பு உம்பர்தம்,
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இக்,
கோளுடை விடை அனா குலத்துள் தோன்றிய,
வாளுடை உழவன் ஓர்மன்னன் பால் வைத்தான்.”

அரனிடமிருந்து தான் பெற்ற அந்தக் கட்டமைப்புக் கலையாத வில்லை தேவ நாதன் நன்றாகப் பராமரித்து, தன் சந்ததியர்களிடம் கொடுக்க, முடிவில் அந்த சிவ தனுசு ஜனகரிடம் வந்து சேருகிறது. சான்றோர்கள் உரைத்த, “மறவாமை என்னும் கருவி கொண்டு தொழில்களைப் போற்றினால், , செய்வதற்கு அரியவை என்னும் செயல்கள் எதுவுமே இல்லை என்ற நல்மொழியைப் பின்பற்றி ஜனகரும் அந்த சிவ தனுசை சிறப்பாகப் பேணிக் காக்கிறார்.

சிவனின் ஆயுதமான அந்த சிவதனுசை மிக்க மரியாதையுடன், பூஜைகள் செய்து சிறப்பாக கவனித்ததின் பலனாக, தேவநாதன், ‘ஜீவன்முக்தர்’ என அறியப்படும், ஜனகரை வாரிசாக அடைகிறார்.. ஜனகரோ, திருமகளின் அவதாரமான சீதையை மகளாகவும், திருமாலின் அவதாரமான இராமனை மருமகனாகவும் அடையும் பேற்றைப் பெறுகிறார். மாறாக, அந்த சிவ தனுசுவை உதாசீனம் செய்ததின் விளைவாக, தேவர்கள் அந்த சிவதனுசினாலேயே தக்க தண்டனை அடைகிறார்கள்.

….நன்றி:-பெங்களூரு எஸ். கிருஷ்ணமூர்தி- தெய்வதரிசனம் இதழ்.
ஓம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிவதனுசும் விஷ்ணுதனுசும்

  1. அதிகம் அறியப்படாத பல புராணச் செய்திகளைத் தாங்கி நிற்கும் தங்கள் கட்டுரை மிகுந்த பாராட்டிற்குரியது. செய்திகளை மட்டும் கூறிச் செல்லாமல் அதற்குத் தக்க ஆதாரங்களாகக் கம்பராமாயண வரிகளையும் மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் நன்று.
    இதுபோன்று கருத்தாழம் மிக்க பல கட்டுரைகளைத் தாங்கள் படைத்து எங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள் ஐயா. நன்றி!

    இவ்வேளையில் கட்டுரையில் நான் கண்ட ஓர் சிறிய பிழையினைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்திரனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறள்,
    //ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
    வார்கோமன் இந்திரனே சாலுங்கரி// சற்றுப் பிழையானது.

    ”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.” (அதிகாரம்: நீத்தார் பெருமை) என்பதே சரியானது. நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.