-பார்வதி ராமச்சந்திரன்

 

தவமாத் தவமிருந்து

தருமராசர் நோம்பிருந்து

பூமிதி தா(ன்) மிதிச்சி

பூச்சட்டி கையேந்தி

பலநாள் பொறுத்திருந்து

பாதகத்தி பெத்த மகெ(மகன்).

பெத்தவ மொகம் பாக்க‌

எப்பத்தா வருவானோ?

 

பொன்னேதுங் கேக்கலையே

பொடவ கூட கேக்கலையே

கண்ணால ஒரு வாட்டி

பாக்கத்தான் துடிக்கிறேனே

பணங்காசு கேக்கலயே

பழய சோறுங் கேக்கலயே

பாவி மவ‌ ஒம் மொகத்த‌

பாக்க நெதம் தவிக்கிறேனே

 

அரக்கஞ்சி நாங் குடுச்சு

அருமயா வளத்தெடுத்தே

பூவடிச்சா நோகுமுன்னு

பொத்திப் பொத்தி பாத்திருந்தே

ஒன்னப் பிரிஞ்சிருக்கும்

ஒரு காலம் வருமின்னு

ஒரு நாளும் நெனக்கலயே

ஒரு பேருஞ் சொல்லலையே

பணங்காசு வந்துப்புட்டா

பழசெல்லா மறந்திருமா

புதுசாக ஒறவு வந்து

புத்தியத்தா கெடுத்திருமா

ஆத்தாவ வேண்டான்னு

அரமனசா நீ நெனச்சிரலாம்

அரும மகெ(ன்) வேண்டான்னு

எ ஆவி கூட நெனக்காதே

 

கண்ணீரு மழ கொட்ட‌

காத்திருக்கே எம் மகனே

புண்ணியமாப் போகுமப்பு

பூ மொகத்தக் காட்டிப்புடு

போக் காலம் வந்து நா

போன தடம் மறயுமுன்ன‌

பூ லோக மகராசா

பெத்த என்ன பாத்துப்புடு.

**

 

சமீபத்தில் ஒரு கிராமத்தில், தன் வாழ்வின் இறுதியை நெருங்கும் ஒரு ஏழைத்தாய், தன் மகன் வந்து பார்ப்பதில்லை என மனம் உருகும் வண்ணம் அழுததைக் கண்டேன். ஆதரவற்ற அன்னையர் எத்தனையோ பேர்… இந்த அன்னையர் தினத்தில் அவ்வாறு ஆதரவற்று இருப்போரைக் கண்டால், ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்வோம் நண்பர்களே!!!!

 

பதிவாசிரியரைப் பற்றி

23 thoughts on “நாம் பெத்த ராசா….

 1. ’பெத்த மனம் பித்து; பிள்ள மனம் கல்லு’ என்பார்கள். அத்தகைய கல் நெஞ்ச மகனுக்காக ஓர் அபலைத்தாய் விடும் கண்ணீர் நெருப்பாய் நம்மைச் சுடுகின்றது. ஆதரவற்ற அன்னையின் அவலக் கதையை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் பார்வதி. சிறந்த கவிதை படைத்தமைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!

 2. உண்மதான். ஒவ்வொரு தெருவிலும் குடிசைமட்டுமல்ல மாடமாளிகைகளிலும் இது போன்ற கண்ணீர் உதிரந்த வண்ணம்.
  கலியின் சீற்றத்திலும் கடல் தாண்டி செல்லும் அந்நிய மோகத்திலும் பணம் புகழ் ஈட்டும் ஆசையிலும் ஈன்றவரை அநாதைகளாக்கும் அசுரத்தனம் வளர்ந்துதான் வருகிறது. பெற்றால் தான் அன்னையா/தந்தையா ? 
  அவள் பெற்றால் தான் நாம் பிள்ளையா? என்றெண்ணி அப்படி அவதியுறும் அனைவருக்கும் நாம் பிள்ளைகளாகி அன்பும் முடிந்த சேவையும் செய்த‌ல் உயர்வான தவம் . வாழிவின் பயன். நம் குழந்தைகள் அவர்களின் பேரன்/பேத்திகளாய்
  விளையாடட்டும்

 3. உருக வைத்த கவிதை.

  நகரம் கிராமம் என்று இல்லாமல் இப்போது நீசமர நிறைந்து விட்ட உண்மையான வேதனை. என்னுடனயே இருக்கும் என் தாயையும் பணி நிமித்தம் 4 மாத்ததுக்கு ஒரு முறை தான் பார்ப்பேன். அப்போதும் அவர் இப்படித்தான் உருகுவார். வா இங்கேயே வந்து தங்கி விடு வெளி நாட்டில் சம்பாதித்தது போதும் என்று சொல்வார்.

  பிள்ளை மனம் கல் என்பற்கு நிறைய உதாரனங்கள் சொல்லலாம். பொதுவில் வீட்டில் உள்ள தாய் தந்தை வயதிம் மூப்பின் காரனமாக அவர்கள் ஏங்குவது காசு பணத்துக்கோ, சோறு துணிக்கோ அல்ல அன்பும் அரவனைப்பும் ஆறுதல் பேச்சும் கிடைக்குமா என்பதை தான் எதிர்பார்ப்பார்கள்.

  பாராட்டுக்கள் பார்வதி. நல்ல கவிதை.

 4. மனதை உருக்கும் கவிதை. நிதர்சனத்தின் நிழல். கண்ணீருக்கும் விலை பேசும் கொடூரங்களுக்கு அம்மாவின் ஆழமான ஆதங்கங்கள் புரிவதில்லை. புரியவும் கூடாது. அவை படித்துப்புரிந்து கொள்ளும் தத்துவங்கள் அல்ல. அனுபவித்து நெகிழ வேண்டிய தெய்வ பிச்சைகள்.

  வணக்கங்களுடன்
  புவனேஷ்

 5. பத்துமாதம் கருசுமந்து 
  உதிரத்தை அமுதாக்கி 
  உனக்கு நான் ஊட்டி வந்தேன்…
  நீ அழுத பொழுதெல்லாம்..
  என் உயிரை வெறுத்திருந்தேன் ..
  நான் அழும் இப்பொழுதில் 
  துடைத்திட கரமில்லையே..
  ==========
  ஒரு தாயின் வேதனையை இங்கே 
  படம்போட்டு காண்பித்துவிட்டீர்கள் சகோதரி.
  மெட்டுபோட்டு படிக்கும் படி 
  அழகான கிராமியப்பாடல்…
  பாடிப் பார்த்தேன்…
  பாடும்பொழுது..
  விழிநீர் வழிந்தோடியது…
  படித்து முடித்ததும் 
  மனம் கனத்துப் போய்விட்டது..
  ===
  அருமையான கிராமியப்பாடல்..
  வாழ்த்துக்கள் சகோதரி…

 6. @திரு.சத்தியமணி அவர்கள்,
  தங்களுடைய  கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றி திரு.சத்தியமணி அவர்களே!!.
   தங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

  @ திரு.தனுசு அவர்கள்,
  தங்களுடைய, ஊக்கமளிக்கும் அருமையான கருத்துரைக்கும், பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  @ திரு.புவனேஷ்வர் அவர்கள்,
  தங்களுடைய கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றி.

  @திரு.மகேந்திரன் அவர்கள்,
  தங்களது நெகிழ்வான கருத்துரைக்கும் அருமையான கவிதைக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

 7. எந்தக் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் ஆற்றல் உங்களின் இந்தக் கவிதைக்கு உண்டு சகோதரி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 8. அன்னையர் தினத்தன்று மண்வாசம் வீசி, மனபாரத்தை ஏற்றிவிட்டு, ஓடையை போல் நகருமொரு அருமையான பாடல்!!  

  பொருத்தமான புகைப்படம். அந்த அன்னையின் அப்பாவித்தனமான முகத்தில் இருக்கும் ஏக்கங்களைப் பாருங்கள்!!!

  வாழ்த்துகள் சகோதரி!!

 9. உருக்கமான கவிதை..வடித்தவிதம் நன்று வாழ்த்துகள் பார்வதி!

 10. பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த, திரு. சச்சிதானந்தம் அவர்கள், திரு.மாதவன் இளங்கோ அவர்கள், திருமதி ஷைலஜா அவர்கள் ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

   

 11. மனதை உருக்கும் கவிதை! உண்மையாகவே மனதை உருக்கியது.  மிக அருமையான படைப்பு. தொடர்ந்து  எழுதவும்!

 12. இதுபோல தா(ய்)மாரு
  எத்தினயோ இருக்காவெ,
  தாயீஒன் வார்த்தயில
  தண்ணிவந்து கண்ணுலதான்…!

  -செண்பக ஜெகதீசன்…

 13. Really good, Thanks for good contribution for this quote on “Mothers Day”.. keep continue………….

 14. When some of the sons were not shown any love towards Mother may not be hard one for a Mother, because she can bear the pain.But in the World any Mother it is with 6 sense or 5  never failed to shower love at their blood at-least. But I seen one Mother who always think and trust on keeping Money and never  shared her love even at his only Son nor at any of her 4 Daughters.”KALLUCKULLUM EERAM UNDU AANAL INTHA MA MANISHI YEN IPPADI IRRUCKINDRAR” God only to say. She is not a stranger she is one living around us.

 15. நல்லதொரு கவிதை… கவிஞரின்  உணர்வலைகள்  கால தேச வர்த்தமானங்களைக் கடந்து படிப்பவர் நெஞ்சிலும் அதிர்வலைகள ஏற்படுத்துவதுதான் கவிதையின் இயல்போ?

  சு.ரவி

 16. @திருமதி.விஜயா ஹரன் அவர்கள்,

  தங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  @திரு.சிவசங்கரமூர்த்தி அவர்கள்,

  தங்கள் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றி.  தாங்கள் கூறுவது உண்மையே. உலகில் அப்படியும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்தப் பிரிவிலும் விதிவிலக்குகள் என இருப்பது வழக்கம் தானே!!. அது போலவே இவர்களும்  என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 

 17. அத்தாக்கள் அல்லாரும் இப்படித் தான் அலறுதுங்க கேகக இங்க யாரிருக்கா
  எப்படித்தான் பெத்த புள்ளெ இப்படி இருக்குதுங்க
  யாரச்சொல்லி யார் அழுவ வளத்த மொற சரியில்லியா
  வளந்த் மொற சரியில்லியா யாரு கிட்டா சொன்னாக்க கேக்குமொ எம்புள்ளே
  மூச்சு முடியக்குள்ள மொகத்த நான் பாப்பேனோ
  பெத்த வயிறு இங்க பேதையாய் அலையுதய்ய்
  யாரு கிட்ட சொல்லி அழ கூறு கெட்டு போனவ நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *