Featuredஇலக்கியம்பத்திகள்

உன்மத்தம்: 2

இன்னம்பூரான்

பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.

எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.

உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:

உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…

`அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.

வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.

“…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.

பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.

(தொடரும்)

உசாத்துணை:

http://sirugamaniganesan.blogspot.co.uk/2011/10/sadguru-sri-seshadri-swamigal.html

சித்திரத்துக்கு நன்றி: http://avatharsrisesha.files.wordpress.com/2009/12/ms.jpg

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    சேஷாத்திரி சுவாமிகளின் வரலாறு அற்புதம். அந்த மகான் குறித்த தகவல்களை அழகாகத் தொகுத்தளித்துள்ள இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். தொடர்ந்து இதுபோன்ற அரிய தகவல்களை எங்களுக்கு அறியத் தாருங்கள் ஐயா.

    ..மேகலா

  2. Avatar

    ஆன்மீகத்தின் உயர்நிலையைப் பற்றிய அருமையான தொடரைத் தந்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். சேஷாத்ரி சுவாமிகளின் பெற்றோருக்கு வெகு காலம் வரை குழந்தையில்லாமல் இருந்து, அம்பிகையின் திருமுன் வேண்டிய போது,’நவநீதம் கொடு, ஞானக் கலை உதிக்கும்’ என்று அம்பிகை திருவாய் மலர்ந்தருள, அவ்வாறே நவநீதத்தை(வெண்ணை, கல்கண்டு) அம்பிகைக்கு நிவேதனம் செய்து அருந்தினர் சுவாமிகளின் பெற்றோர். அப்படி அம்பிகையின் அருட்பிரசாதமாகவே பிறந்தார் சுவாமிகள் என்று சுவாமிகளின் வரலாறு சொல்கிறது. ஞானச்செல்வர்களைப் பற்றி அறியத் தந்து கொண்டிருக்கும் திரு.இன்னம்பூரான் அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க