இன்னம்பூரான்

கல்விக்கடலின் விசாலம் பெரிது; ஆழம் அதிகம்; அலை ஓசை ஓயாது. திகைத்து ஓடி விடுவது எளிது; அப்படி ஓடினால், அது அறியாமையின், சோம்பலின், அசட்டையின் விளைவே. அக்கடலின் மூலாதாரமோ ஒரு சிறுதுளி தான். தலைக்காவேரி; கங்கோத்ரி, சிறுதுளி பெருவெள்ளம். கல்விக்கடலை கடக்கத் தோணிகள் உண்டு பல. கலங்கரை விளக்குகளும் ஒளி வீசி இருளையும், மருளையும் விலக்கும். தமிழில் விஞ்ஞானத்தை விளக்கும் நூல்கள் சொற்பம். வழக்கறிஞர் பெ.நா. அப்புசாமி அவர்கள் இந்த வகையில் ஒரு முன்னோடி. இடைவிடாமல் 70 வருடங்களுக்கு மேல், பாமர விஞ்ஞானம் படைத்தார்.

‘…படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமை தரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது…’(திரு. இரா. முருகன் இந்தியா டுடே 2001)

படைப்புகளும், படைப்பாளர்களும் வித விதமான மெய்ப்பாடுகளை முன்னிறுத்தினாலும், சராசரி தமிழன் வாழ்நாள் முழுதும் விஞ்ஞானத்தின் அருமையான போக்குவரத்துக்களை எளிதில், ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்கள் அரிது, அரிது. பெ.நா. அ. அவர்களும் மறைந்து விட்டார். மேலும் தேடி அறிந்துகொள்ளும் திறனை, நாம் வளர்த்துக்கொள்ளமுடியும். அதன் துணைகொண்டு அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாரிசுகளின் முன்னேற்றத்தை வசதியாக அமைத்துக்கொள்ள இயலும். இத்தகைய சிந்தனைகள் என்னை ஆட்டிப்படைத்த வண்ணம். அதனால் தான், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், என்றெல்லாம் எழுதிய யத்தனங்கள் விழலுக்கு இறைத்த நீர் என்றாலும், அத்தகைய ஆர்வங்கள் மடிந்து போகவில்லை. சாக்ஷி, இந்த தொடர்.

நேற்று (29 05 2013) லண்டனில் ஒரு மருத்துவ ஆய்வாளர் ராயல் சொஸைட்டி எனப்படும் மையத்தில் ஒரு உரையாற்றினார். இலவசம். க்யூ கட்டாயம். காணொளி பிறகு கிடைக்கும். முதலில் அதனுடைய பூர்விகம் கேளும். வில்லியம் க்ரூன் (1633-1684) என்ற அங்கத்தினரின் நன்கொடை இந்த க்ரூனியன் பிரசங்கத்தை 1738 லிருந்து வருடாவருடம் நடத்த உதவுகிறது.

இவ்வருடம் : ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட் (Professor Frances Ashcroft FRS) நேற்று மாலை 6 30லிருந்து 7 30 வரை அளித்த ‘சிசுவை பாதிக்கும் டயப்பிட்டீஸ்’ என்ற பிரசங்கத்தின் சாராம்சம்:

“… ஒரு பெட்டி சாக்லெட்டை ஒரு பிடி பிடித்தாலும் சரி, கொலைப்பட்டினி போட்டாலும் சரி, நமது மண்ணீரல் (பாங்கிரியாஸ்) தனக்குத்தானே, சுரக்கும் இன்சுலினை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்கும். இந்த இயற்கை வரைமுறை தடுமாறினால், இன்சுலின் சுரப்பதில் தகராறு. சர்க்கரை ஏறும். அது தான் டயபிட்டீஸ். ஒரு நுட்பமான புரத அமைப்பு (ATP-sensitive potassium (KATP) channel) எப்படி இந்த இன்சுலின் ஆளுமையை துல்லியமாகவும், அனாயசமாகவும், தடுமாறாமல் கையாளுகிறது என்பது பற்றிய ஆய்வு விவரங்களை யாவருக்கும் புரியுமாறு, ஆதாரங்களுடன் கூறுவது தான் இந்த பிரசங்கத்தின் முதல் படி. அடுத்தது, மரபு அணு முரண் காரணமாக, பிறந்தவுடன் சில சிசுக்களுக்கு, அபூர்வமாக, இந்த வரைமுறை தடுமாறும் சிக்கல் இருப்பதை கண்டறிந்து, புதிய சிகிச்சை பற்றி விழிப்புணர்ச்சி அளிப்பது. இந்த துறையில் அவர் செய்த ஆய்வுகளின் பயனாக, மருத்துவ உலகத்துக்குக் கிடைத்த புதிய பாதையை பாராட்டி, அவருக்கு இந்த கெளரதை அளிக்கப்பட்டது.

சில உபரி செய்திகள். ராயல் சொஸைட்டியில் நான் முதலில் தேடியது பூகோள சாத்திரம், தீர்க்க ரேகைகள் பற்றி; நோபலை விட அதிகமாக மதிக்கப்படும் கோப்லி என்ற சிறிய ஆனால் பெரிய பரிசு. அது எடுத்துச் சென்ற இடம், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்ற பிரபல அரசியல்வாதி / விஞ்ஞானியின் ‘மின்சாரக்கனவுக்கு’ அளிக்கப்பட்ட கோப்லி மெடல். அது எடுத்து சென்றவிடம், பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட். ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை. இந்தியாவிலேயே சிறந்த விஞ்ஞானக்கூடங்களும், விஞ்ஞானிகளும் உண்டு. ஆனால், விஞ்ஞான விழிப்புணர்ச்சி, மிகக் குறைவு. எது எப்படி இருந்தாலும், வாசகர்களின் விருப்பம் தான் ராஜா. ராணியும் அதுவே.

உசாத்துணை:

http://royalsociety.org/events/2013/croonian-lecture/

Notes Rec. R. Soc. Lond. 1960 15, doi: 10.1098/rsnr.1960.0020, published July 1, 1960:Downloaded from rsnr.royalsocietypublishing.org on May 30, 2013

சித்திரத்துக்கு நன்றி: http://www.york.ac.uk/media/news-and-events/publiclectures/Frances%20Ashcroft.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நீயும், நானும், விஞ்ஞானமும் -1

  1. ///இந்தியாவிலேயே சிறந்த விஞ்ஞானக்கூடங்களும், விஞ்ஞானிகளும் உண்டு. ஆனால், விஞ்ஞான விழிப்புணர்ச்சி, மிகக் குறைவு.///

    பாயிண்ட் மேட் ஐயா 😀 
    …… தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *