கனம் கோர்ட்டார் அவர்களே! – 17

3

இன்னம்பூரான்


சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.

திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.

அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.

தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.

பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.

இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!

சித்திரத்துக்கு நன்றி:

http://2.bp.blogspot.com/-RVUgUWAEfY4/T6Idc2X4PTI/AAAAAAAAAhc/rhE-vQNOd7A/s1600/medicine.jpg

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கனம் கோர்ட்டார் அவர்களே! – 17

  1. விவரமான செய்திகள், நுட்பமான செய்திகள் அறிய தந்தமைக்கு நன்றிகள் அய்யா.

  2. சர்வதேச (மருந்துக்) கம்பெநிகளின் கோர முகத்தை இந்திய நீதிமன்றம் கிழித்துள்ளது. தங்களது பகிர்விற்கு நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.